அமெரிக்காவில் பல எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமாக இன்சுலின் மருந்தளித்து கொல்ல முயன்ற குற்றத்திற்காக நர்ஸ் ஒருவருக்கு 380 முதல் 760 ஆண்டுகள் சிறை தனடனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 முதல் 2023 வரையான காலகட்டத்தில் 5 சுகாதார மையத்தில் பணியாற்றியுள்ள இவர் 17 நோயாளிகளின் இறப்புக்கு காரணமாகியுள்ளார் என நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பென்சில்வேனியா பகுதியில் செவிலியராக பணியாற்றி வந்துள்ள 41 வயதான Heather Pressdee என்பவரே மூன்று கொலை வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது 19 கொலை முயற்சி வழக்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரவுப்பணியின் போதே இவர் இந்த கொடூரத்தை நிகழ்த்தி வந்துள்ளார்.
22 நோயாளிகளுக்கு அதிக அளவிலான இன்சுலின் மருந்தை அளித்துள்ளார். பெரும்பாலான நோயாளிகள் அடுத்த சில மணி நேரங்களில் இறந்துள்ளனர். சிலர் தாமதமாக மரணமடைந்துள்ளனர்.
இன்சுலின் அளவு அதிகரித்தால், இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கு வழிவகுக்கும், இதயத் துடிப்பை அதிகரிக்கலாம் மற்றும் மாரடைப்புக்கு கூட வழிவகுக்கும். கடந்த ஆண்டு மே மாதம் இரண்டு நோயாளிகள் மரணம் தொடர்பில் அவர் மீது முதலில் குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் பொலிசார் முன்னெடுத்த விரிவான விசாரணையில் அவரது பகீர் பின்னணி அம்பலமானது. ஒரு நர்ஸாக அவரது நடவடிக்கை தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, நோயாளிகளை அவர் தரக்குறைவாக விமர்சித்தும் வந்துள்ளார். Heather Pressdee போன்று நியூ ஜெர்சி மற்றும் பென்சில்வேனியாவில் 29 நோயாளிகளை இன்சுலின் மருந்தால் கொலை செய்துள்ளார் Charles Cullen என்ற செவிலியர்.
இதய நோயாளிகளுக்கு William Davis என்ற செவிலியர் காற்றை ஊசியால் செலுத்தி 4 நோயாளிகளின் உயிருக்கு உலை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அருகாமையில் வசித்து வந்தவர் 43 வயது கமல்ராஜ் . ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரியாக உள்ள இவருக்கு, 2 மகள்கள் இருந்தனர்.
கடந்த சில நாட்களாக வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கமல்ராஜ் உயிரிழந்தார். இவரது உற்ற நண்பரான ஞானவேல் என்பவர் கமல்ராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார். இருவரும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்கள் என்பதால் இருவரது குடும்பத்திற்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்தது.
இந்நிலையில் நண்பர் கமல்ராஜ் உயிரிழந்த தகவலை அறிந்ததும் திடீரென ஞானவேலுக்கு வலிப்பு ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் இரு குடும்பத்தினரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இருவரது இறுதிச் சடங்குகளும் இன்று நடைபெற உள்ளது. இறப்பிலும் இணைபிரியாத இந்த இருநண்பர்களுக்கும் அப்பகுதியில் வசிப்பவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில் தனது மகன் வாங்கிக் கொடுத்த விசம் கலந்த உணவை சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த தாயும் உயிரிழப்பு.
நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் சுரேஷ், இவரது மகன் பகவதி (20), புதுச்சத்திரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். மேலும் இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் இ-சேவை மையத்தில் பகுதி நேரம் வேலை செய்துள்ளார்.
வேலைக்கு சேர்ந்து முதல் மாதம் சம்பளத்தை பெற்ற பகவதி, கடந்த 30ம் தேதி நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் உணவகத்தில், 7 சிக்கன் ரைஸ் பொட்டலம் வாங்கி கொண்டு, வீட்டில் உள்ள தனது தாயார் நதியா (40),
இதனைத்தொடர்ந்து தேவராயபுரத்தில் வசித்து வரும் தாத்தா சண்முகநாதன் (67) வீட்டிற்கு சென்று அங்கு தாத்தா சண்முகநாதன் மற்றும் குடும்பத்தினருக்கு முதல் மாத சம்பளத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி வந்துள்ளேன் சாப்பிடுங்கள் என்று கொடுத்து உள்ளார்.
இதற்கிடையே மகன் ஆசையாக வாங்கி வந்த சிக்கன் ரைசை சாப்பிட்ட நதியா, சண்முகநாதன் ஆகியோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மீதமுள்ளவர்கள் சிக்கன ரைஸ் சாப்பிட வில்லை.
இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நதியா, சண்முகநாதன் ஆகிய இருவரையும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால், இது தொடர்பாக எந்தவித பரபரப்பும் இல்லாமல் பகவதி இருந்து வந்துள்ளார்.
முன்னதாக சிகிச்சைக்கு வந்த 2 பேரும் வாயில் நுரை தள்ளியபடி வந்ததால் அவர்களுக்கு உணவு ஒவ்வாமையால் பிரச்சினை ஏற்பட்டு இருக்க வாய்ப்பு குறைவு எனவும், சாப்பாட்டில் விஷம் கலந்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் எனவும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கடந்த மே 01.05.24 ம் தேதி ஓட்டலில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் உமா, சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார், இதையடுத்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சீல் வைத்தனர் மேலும் சிக்கன் ரைஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உமா நாமக்கல் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அவர்களும் சிக்கன் ரைஸ் உணவு மாதிரியை எடுத்து, சேலம் உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பினர். இதன் பின்னர் ஓட்டல் உரிமையாளர் ஜீவானந்தம், சிக்கன் ரைஸ் வாங்கி சென்ற பகவதி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கூலித்தொழிலாளி சண்முகநாதன் சிகிச்சை பலன்யின்றி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து உணவு மாதிரியின் பகுப்பாய்வு முடிவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்தது உறுதி செய்யப்பட்டதால் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கி சென்ற பகவதியிடம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.
அப்போது பகவதி திடீரென நான் தான் உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்தேன் என ஒப்புக்கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தியதில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதல் செய்ததில் தன்னுடைய குடும்பத்தினருக்கும், பெண்ணின் குடும்பத்தினருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
இதில் இருந்து தன்னிடம் தாய் நதியா பாசமாக இல்லை என்று தெரிவித்த பகவதி மேலும் ஒரு பெண்ணிடம் உள்ள தவறான பழக்கம், செல் போனில் அபாச படங்களை அடிக்கடி பார்த்தது குறித்து தாய், தாத்தாவும் கண்டித்ததால் அனைவரையும் விஷம் கொடுத்து கொலை செய்ய முடிவு செய்தேன்.
இதற்காக நாமக்கல்லில் உள்ள கடையில் கடந்த 27 ம் தேதியே கலைக்கொல்லிக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி வைத்துக்கொண்டேன்.
பின்னர் 30ம் தேதி வீட்டிற்கு செல்லும் வழியில் நின்று கொண்டு சிக்கன் ரைஸ் உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்தேன் என்றும் இதில் இருவர் மட்டுமே சாப்பிட்டார்கள், மற்றவர்கள் சாப்பிடவில்லை என தெரிவித்தார்.
இதனையடுத்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார் பகவதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த தாய் நதியாவும் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
விட்டிலிகோ என்ற அரிதான நோயால் பாதிக்கப்பட்ட கருப்பு நாய் 2 ஆண்டுகளில் முழுவதும் வெள்ளையாக மாறி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தோல் அதன் இயற்கையான நிறத்தை இழந்து வெளிறிய வெள்ளை நிறமாக மாறும் நிலை விட்டிலிகோ எனப்படும். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அமெரிக்காவின் ஓக்லஹோமா பகுதியை சேர்ந்த ஸ்மித் என்பவர் வளர்த்து வரும் பஸ்டர் என்ற பெயர் கொண்ட அந்த 4 வயது நாய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முழுவதும் கருப்பு நிறத்தில் இருந்துள்ளது.
இந்நிலையில் விட்டிலிகோ பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் நிறம் படிப்படியாக மாறி தற்போது முழுவதும் வெள்ளை நிறமாகி உள்ளது. இந்த வகை அரிய நோயால் சில மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாய் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் காதலியின் வீட்டுக்குச்சென்ற போது கடத்திச்செல்லப்பட்ட இளைஞன் தொடர்பில் வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் அதுல விஜேசிங்கவிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காதலியின் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற இளம் வர்த்தகர் கடந்த 22 ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த இளைஞன் கடத்தப்படுவதற்கு முன்தினம் முன்னாள் முதலமைச்சருக்கு இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் (காதலியின் தந்தை) தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பில் பொலிஸார் அவரிடம் கேள்வி எழுப்பி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் தனது மகளின் பிரச்சினை தொடர்பில் சட்ட ஆலோசனையை பெற்று பொலிஸில் முறைப்பாடு செய்து சம்பவத்தை தீர்த்து வைக்குமாறு தெரிவித்ததாக அதுல விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில், இளைஞனின் காதலி மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டில் உள்ள தனது மனைவியை மீண்டும் நாட்டிற்கு வருமாறு தனது பெண் குழந்தையை துன்புறுத்தி சமூக வலைத்தளங்களில் காணொளி வெளியிட்ட தந்தையை பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பலாங்கொடை – பெட்டிகல பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய தந்தையொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னர் தனது மகளைக் கவனிக்கும் பொறுப்பை, கணவன் மற்றும் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு தாய் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், மனைவியை மீண்டும் நாட்டிற்கு வருமாறு அழைத்து தனது பெண் குழந்தையை துன்புறுத்தி காணொளி வெளியிட்டுள்ளார்.
விளக்கமறியல் உத்தரவு
தற்போது பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தை குணமடைந்த பின்னர் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், தாயார் வரும் வரை சிறுமி காப்பகத்தில் வைக்கப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு – ஏறாவூர் செங்கலடி பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றின் பின்னால் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஏறாவூர் செங்கலடி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த மரணம் படுகொலையா அல்லது வேறு காரணமா என ஏறாவூர் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
யூடியூப்பில் ஒரு மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களால் பாராட்டப்பட்ட “ஆத்தங்கரை ஓரத்தில ” பாடலுக்கு Norway International Tamil Film Festival பெருமையுடன் பிரபாலினிக்கு சிறந்த இசை காணொளிக்கான விருதை வழங்கியிருக்கிறது.
“ஆத்தங்கரை ஓரத்தில ” கிராமத்து குத்து பாட்டு” இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன் எழுதி, இசையமைத்து, பாடி, நடித்து, தயாரித்த பாடல் இது.
பிரபாலினி, ஈழத்து மெல்லிசை மன்னர் M.P. Paramesh மற்றும் சங்கீத பூஷனம் Sivamalini Paramesh தம்பதிகளின் மூத்த மகளாவார்.
இலங்கையின் 1968களில் முதல் தமிழிசைத்தட்டை தனது காதலிக்காக “உனக்குத்தெரியுமா நான் உன்னை நினைப்பது” என்று எழுதி, இசையமைத்து, பாடி, தயாரித்து வெளியிட்ட பெருமைக்குரிய எமது பெருமைக்குரிய மூத்த கலைஞர் ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி.பரமேஷ் மகள் தான் இந்த பிரபாலினி பிரபாகரன்.
அவரது அம்மா அப்பா வழியில் இலங்கையின் முதல் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா வெளியிட காதலர் தினத்தில் களத்தில் குதித்த “ஆத்தங்கரை ஓரத்தில ” பாடல் மாபெரும் வெற்றியை கிடைக்க பெற்றுள்ளது.
பிரபாலினி பிரபாகரன் வெளியிட்ட Queen cobra என்ற ஆடியோ ஆல்பம் தொகுப்பில் இருந்து வெளியான வீடியோ ஆல்பம் இது. முழுக்க முழுக்க இலங்கையில் படமாக்கப்பட்டது.
ஒரு ஈழத்தமிழ் மகள் எழுதி, இசையமைத்து, பாடி, தயாரித்து, நடித்த பாடலும் இதுவாக மட்டுமே இருக்கிறது என்பதும் இந்தப்பாடலின் அடுத்த பெரும் சாதனை தான். இந்தப்பாடலை முழுமையாக இலங்கையிலேயே படமாகடகியுள்ளனமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
குருநாகல், வாரியப்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 34 வயதுடைய உயிரியல் பாட ஆசிரியரே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (03.05.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த ஆசிரியருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வாரியப்பொல பாடசாலையொன்றில் கடமைகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியரே விபத்தில் சிக்கியுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானியாவில் 2024 ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற ஒப்பனை மற்றும் அழகு கலை விருதுகளை இலங்கைப் பெண்ணான அஞ்சலி ராஜசிக வென்றுள்ளார்.
பிரித்தானியாவில் நடைபெற்ற The English Hair and Beauty Awards, Chapter 3இன் ஆண்டின் சிறந்த அழகுக்கலைஞராக Anjalee Laser Beauty and Spa நிறுவனத்தை நடத்தி வரும் அஞ்சலி ராஜசிக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 21, 2024 ஞாயிற்றுக்கிழமை தி மெர்க்யூர் பெட்ஃபோர்ட் சென்டர் ஹோட்டலில் நடந்த விழாவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
கடந்த 19 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் இருந்து லூடன் நகருக்குச் சென்ற அஞ்சலி, தனது கணவர் மற்றும் மகனின் உதவியுடன் தொழிலை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பு மிக்க விருதை வெல்வது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். ஏனெனில் இது ஒப்பனை மற்றும் அழகு கலை நிபுணர்களின் திறமை மற்றும் கடின உழைப்பை அங்கீகரிக்கிறமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் இருதய ஆண்டவர் ஆலயத்தில் உள்ள மாதா சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது, நேற்று (03.05.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
இதன்போது, வழிபாட்டிற்கு சென்ற பக்தர்கள் சிலர் மாதாவின் சிலையை தொட்டு வழிபட்ட வேளையில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை அவதானித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, இது தொடர்பில் அறிந்த மக்கள் ஆலயத்துக்கு படையெடுத்து வருவதுடன் மாதாவின் கண்களில் கண்ணீர் வருவதை பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபரை மாணவர்களின் பெற்றோர்கள் பல்லக்கில் சுமந்து சென்ற நிகழ்வு ஒன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்குளம் ஆரம்பப் பாடசாலையின் அதிபரின் பணி ஓய்வு நாளை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் நிகழ்வுகள் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிபரை பல்லக்கில் சுமந்து சென்று கெளரவித்துள்ளனர்.
குறித்த அதிபர் பணியாற்றிய பல சந்தர்ப்பங்களில் வவுனியா மாவட்டத்தில் சிறந்த புலமைப்பரிசில் பெறுபேறுகளை பாடசாலைக்கு பெற்றுக்கொடுக்க உழைத்ததாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலதிக நிதிப் பலன்கள் எதுவும் பெறாமல் கல்லூரி மாணவர்களின் கல்வியை மேம்படுத்த அதிபர் பாடுபட்டதால், ஓய்வு பெறும் நாளில் அதிபரை தோளில் சுமந்ததாக பெற்றோர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
பணத்தை நம்பி வாழும் சமுதாயத்தில், தலைமையாசிரியை சில சந்தர்ப்பங்களில் தன் சம்பளத்தில் ஒரு பகுதியை மாணவர்களின் கல்விக்காக ஒதுக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எதிர்வரும் 6ஆம் திகதி அதிபர் ஓய்வு பெறுவதை முன்னிட்டு பெற்றோர்கள் இந்த கௌரவிப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இரத்ததானம் அல்லது குருதிக் கொடை (Blood Donation) என்பது ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்
அந்த வகையில் “பசியில்லா தேசம் உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் நாளை 05.05.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிமுதல் 11.00 மணிவரை வவுனியா பொது வைத்தியசாலையில் இரத்ததான முகாம் ஒன்று ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது
உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ள இரத்ததான முகாமில் அனைவரது பங்களிப்பினையும் கோரி நிற்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.
முகப்புத்தக விளம்பரத்தினை நம்பி மசாஜ் நிலையமொன்றிற்கு வேலைக்கு வந்த இளம் யுவதி ஒருவர் தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கடந்த (01.05) தொழிலாளர் தினத்தன்று மாத்தறை, தலரம்ப பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
மாத்தறை பகுதியில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் வேலை வாய்ப்பு உள்ளதாக முகப்புத்தகத்தில் காணப்பட்ட விளம்பரத்தினை நம்பி யுவதி மசாஜ் நிலையத்திற்கு வந்த போது மேலாளரால் துன்புறுத்தப்பட்டு தகாதமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி மேலாளருக்கு பயந்து பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை எனவும், முகாமையாளர் அவரை வெளியில் செல்லவிடாமல் அங்கேயே பூட்டி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் தலரம்ப பகுதிக்கு சென்று மசாஜ் மையத்தை சுற்றி வளைத்த பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளனர். இதன்போது மசாஜ் நிலைய உரிமையாளர் போல் நடித்து யுவதியுடன் சென்றவர் உண்மையான உரிமையாளர் இல்லை எனவும் யுவதி அங்கு அடையாளம் காட்டியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் யுவதியின் தலை, கால், கழுத்தில் காயங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில் கடந்த 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை யுவதியை பலமுறை தகாதமுறைக்கு உட்படுத்தி பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுமாறு அடித்து துன்புறுத்தியுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து யுவதியை மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பொலிஸார் அனுமதித்துள்ளனர்.
மேலும், மசாஜ் நிலைய முகாமையாளரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறியிருந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி சந்தேகநபர் பொலிஸ் நிலையத்திற்கு வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகநூல் விளம்பரங்களில் சிக்கி இளைஞர்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் வழக்கு அதிகம் என்பதுடன், பெரியவர்கள் இது தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் பணிப்புரைக்கமைய மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் நிலைய பொறுப்பதிகாரி வருணி போகஹவத்த உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 177,050 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் அண்மையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது. இந்த நிலையில் சடுதியாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
இதன்படி இன்று (03.05.2024) 24 கரட் 1 கிராம் தங்கம் 24,140 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 193,100 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளது. இதேவேளை, 22 கரட் 1 கிராம் தங்கம் 22,130 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 177,050 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் 1 கிராம் தங்கம் 21,130 ரூபாவாகவும், 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 169,000 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.