யாழில் இளம் குடும்பப் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் மாதகல் – சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பிரதீபன் நித்தியா என்பவரே நேற்றையதினம் (17-04-2024) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

2 பிள்ளைகளின் தாயான இவர் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கனடாவை அதிரவைத்த பாரிய கொள்ளை சம்பவம்… இலங்கையர் உட்பட 9 பேர் சிக்கினர்!!

 

கனடாவில் கடந்த ஆண்டு 24 மில்லியன் டொலர் பெறுமதியான நகை, நாணயம் கொள்ளைச் சம்பவத்துடன் தமிழர் ஒருவருக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படகின்றது.

ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 17-4-2023 ஆம் திகதி 400 கிலோ கிராம் எடையுடைய தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயம் கொள்ளையிடப்பட்டது.

சுவிஸில் உள்ள சூரிச்சில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட தங்கம் விமான நிலைய களஞ்சியச் சாலையிலிருந்து காணாமல் போனது. இச் சம்பவம் கனடாவை மட்டுமன்றி உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பிரம்டனை சேர்ந்த 35 வயதான பிரசாத் பரமலிங்கம் என்ற தமிழர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 12 பேருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரசாத் பரமலிங்கம் மீது ஆயுத கொள்ளை, கொள்ளைச் சூழ்ச்சித் திட்டத்திற்கு உதவியமை, பங்களிப்பு வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.

65 ஆயுதங்களை கொள்வனவு செய்ய பிரசாத் பரமரலிங்கம் நிதி உதவி வழங்கியதாக அமெரிக்க பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த ஆயுதங்கள் புளொரிடா மற்றும் ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களில் கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சாரதியான 25 வயதான கிங் மெக்லேனே, ஆயுதங்களை கடத்திய வாகனத்தையும் செலுத்தியுள்ளார்.

15 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!!

அம்பலாங்கொட பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் பணம் மற்றும் கைத்தொலைபேசிகளை திருடிய சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பாடசாலை மாணவன் ஒருவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பாடசாலை மாணவனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே பலபிட்டிய நீதவான் ஆர்.டி. ஜனக இந்த உத்தரவை நேற்றையதினம் (18-04-2024) வழங்கியுள்ளார்.

இச்சம்பவத்தில் அம்பலாங்கொடை, கலகொட பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய மாணவனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மாணவனின் தந்தை வெளிநாட்டில் இருப்பதாகவும், தாய்க்குக் கீழ்ப்படியாத மாணவன் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

2 வீடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இந்தக் மாணவனை தமது பொறுப்பில் எடுத்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

திருடப்பட்ட 2 கையடக்கத் தொலைபேசிகளும் மாணவனின் வசம் காணப்பட்ட போதிலும் 800 ரூபா மாத்திரமே காணப்பட்டது. குறித்த மாணவனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​திருடப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை அவரது சகோதரிக்கு ஸ்ரீபாதா தரிசனம் செய்ய கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

2 வீடுகளில் இருந்தும் 121,000 ரூபா பணத்தையும், 1 இலட்சம் ரூபா பெறுமதியான 2 கையடக்கத் தொலைபேசிகளையும் மாணவன் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

அந்த 2 ஸ்மார்ட்போன்களையும் தான் ஆசையாக திருடிச் சென்றதாக அந்த மாணவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். திருடப்பட்ட பணத்தை அந்த மாணவன் உண்மையில் செலவு செய்தாரா? அல்லது வேறு இடத்தில் மறைத்து வைத்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இப்படியும் சில பெளத்த துறவிகள் : குவியும் பாராட்டுக்கள்!!

இலங்கையில் உள்ள பகுதியொன்றில் சாலையோரமாக மக்காச்சோளம் விற்று அன்றாட வாழ்க்கையை நடாத்திவந்த எழை தமிழ் குடும்பம் ஒன்று பெளத்த பிக்கு ஒருவர் அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கிய சம்பவம் ஒன்று மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தாண்டு தினத்தன்று Gangasiripura Dhammaloka Thero என்ற இளம் பெளத்த துறவியே இந்த நெகிழ்ச்சியான செயலை மேற்கொண்டுள்ளார்.

மேலும் இந்த நற்செயலை மேற்கொண்ட பெளத்த பிக்குக்கு முகநூலில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

தமிழர் பகுதியில் சிறுவனின் உயிரைப் பறித்த ஊஞ்சல் கயிறு!!

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பகுதியில் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகிச் சுற்றியதில் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 8 வயதுடைய மர்சூன் அஷ்பாக் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் தனியாக ஆடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், ஊஞ்சல் கயிறானது சிறுவனின் கழுத்தில் இறுகியதாகவும், அச்சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் யாரும் இல்லாததால் சிறுவன் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் ஜனாஸாவை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் நேற்று இரவு சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று பார்வையிட்டார். விசாரணைகளின் பின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

யாழில் 15 வயதான மாணவர் மாரடைப்பால் மரணம் : அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

யாழ் இந்துக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதான மாணவன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குறித்த மாணவர் நேற்று முன்தினம்(16) உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றது.

சம்பவத்தில் அனலைதீவைப் பிறப்பிடமாகவும், அரியாலை, யாழ்ப்பாணத்தை வாழ்விடமாகவும் கொண்ட கிருபானந்தன் கிரிசிகன் எனும் மாணவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் வீட்டில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் மாணவனின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

நாட்டில் 2 மணிக்கு பின் இடியுடன் கூடிய கனமழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது

அந்தவகையில், மேல், சப்ரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

உயிரிழந்த நபருடன் வங்கியில் கடன் வாங்க சென்ற பெண் : அதிர்ந்துபோன அதிகாரிகள்!!

பிரேசிலில் சக்கர நாற்காலியில் இறந்து கிடந்த நபருக்கு கடன் வாங்க வங்கிக்குச் சென்ற பெண்ணைக் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

கைதான் பெண் எரிக்கா வியரா நுவினிஸ் (Erika Vieira Nunes) 68 வயது ஆடவரை வங்கிக்கு அழைத்து வந்தார். சக்கர நாற்காலில் அழைத்துசெல்லப்பட்ட நபரின் பெயரில் கடன் கேட்டதும் வங்கி ஊழியர்களுக்குச் சந்தேகம் எழுந்தது.

இதனையடுத்து அவர்கள் உடனடியாக அவசரச் சேவைகள் பிரிவிற்கு அழைப்பு விடுத்தனர். வங்கியில் பதிவுசெய்யப்பட்ட காணொளியில் நுவினிஸ் அந்த ஆடவரைப் பிடிக்காத நேரத்தில் அவரது தலை பின்னால் சாய்வது தெரிந்தது.

“உங்களுக்குக் கேட்கிறதா? நீங்கள் கையெழுத்திட வேண்டும்,” என்று நுவினிஸ் அந்த நபரிடம் பேசுவது காணொளியில் பதிவானது. “அவர் எதுவும் பேசமாட்டார்.. அவர் அப்படித்தான்,” என்று நுவினிஸ் கூறினார்.

அவசரப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் வங்கிக்கு வந்த நிலையில் சக்கர நாற்காலியில் இருந்தவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். நுவினிஸ் அந்த ஆடவரின் பெயரில் சுமார் 3,250 டாலர் கடன் வாங்க முயன்றதாக கூறப்படும் நிலையில் நுவினிஸ் கைது செய்யப்பட்டார்.

இரண்டு இலட்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை!!

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 184,950 ரூபாவாக பதிவாகியுள்ளது. நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் கடந்த சில நாட்களாக இரண்டு இலட்சத்தை நெருங்கி வந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 25,220 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 201,750 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,120 ரூபாவாகவும் , 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 184,950 ரூபாவாகவும் காணப்படுகிறது. மேலும் 21 கரட் 1 கிராம் தங்கம் 22,070 ரூபாவாகவும் , 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 176,550 ரூபாவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டிற்கு பணிக்கு சென்று இலங்கை திரும்பிய வைத்தியருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெறுமதியான வீடுகளை மூடிவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் வீடுகளுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்து அல்லது வாடகைத் தளத்திற்குக் கொடுக்கும் மோசடி நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொரளை அல்விட்டிகல மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரசாஞ்சலி ரத்நாயக்க என்ற வைத்தியர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் பணிக்கு சென்றுள்ளார்.

பணி முடிந்து இலங்கை திரும்பிய போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வேறு தம்பதிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் அவர் பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ருவான் டி சொய்சா நேற்று சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளார்.

அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ சில்வா தெரிவித்துள்ளார்.

10 நாட்களில் திருமணம்… இளம் பெண்ணுக்கு எமனான உளவு இயந்திரம்!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி  சே.பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர்  21 வயது காயத்ரி.  இன்னும் 10 நாட்களில் காயத்ரிக்கு திருமணம். இதனையடுத்து  தனது வருங்கால  கணவருடன் இருசக்கர வாகனத்தில் பக்கத்து ஊருக்கு சென்றிருந்தார். வீடு திரும்பும் போது   எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் காயத்ரி டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். வருங்கால கணவர் கண்முன்னே இக்கோர சம்பவம் அரங்கேறியது.

ஆங்காங்கே சிறிய காயங்களுடன் வருங்காலக் கணவர் தப்பித்து விட்டார்.  இச்சம்பவம்  குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறை  காயத்ரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.

இந்த விபத்து குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் ஓட்டுநரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். 10 நாட்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

குளத்தில் மூழ்கிய அண்ணன்… காப்பாற்ற சென்ற தம்பியும் பலியான சோகம்!!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில்  நந்தீஸ்வரர் மங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர்  ராமமூர்த்தி. இவரது மனைவி சாந்தலட்சுமி. இவர்களுக்கு  திலிப்ராஜ் (16), தினேஷ் (14) என 2 மகன்கள்.  இவரது மனைவி சாந்தாலட்சுமி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார்.

இதனால் பிள்ளைகள் இருவரும் கடலூரில் உள்ள ஒயாசிஸ் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் கல்வி பயின்று வந்தனர். கடந்த ஏப்ரல் 12-ம் தேதி கோடை விடுமுறைக்காக சிறுவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டில் இருந்த சிறுவர்கள் இருவரும் இன்று காலை அதே பகுதியில் உள்ள திருக்குளத்தில் குளிப்பதற்காக சென்று உள்ளனர்.

இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அண்ணன் திலிப்ராஜ் ஆழமான நீரில் மூழ்கி தத்தளித்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பி தினேஷ், அண்ணனைக் காப்பாற்றுவதற்காக முயற்சித்துள்ளார். இந்த முயற்சியில் இருவருமே நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கோடை விடுமுறைக்காக, வீட்டிற்கு வந்த சகோதரர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கல்லூரி மாணவி விபத்தில் மரணம்… தகவல் அறிந்து தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்த சோகம்!!

கேரள மாநிலம் கொத்தமங்கலத்தில், சாலை விபத்தில் மகள் உயிரிழந்த செய்தி அறிந்து மனமுடைந்த தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலம் ஆலுவா யுசி கல்லூரி எம்பிஏ படித்து வந்த மாணவி சினேகா (24) கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிராயின்கீழில் நடந்த சாலை விபத்து ஒன்றில் பலத்த காயமடைந்தார்.

உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் சினேகா உயிரிழந்தார்.

மகள் சினேகா உயிரிழந்த தகவல் அறிந்ததும் சினேகாவின் தாயார் காயத்ரி நெல்லிக்குழியில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  மகள் இறந்த செய்தி கேட்டு தாயும் தற்கொலைச் செய்து கொண்டது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இலங்கை சுற்றுலா வந்த வெளிநாட்டவருக்கு கசிப்பு கொடுத்த தென்னிலங்கை நபர்கள் : பரபரப்பு வீடியோ!!

இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு சிங்களவர்கள் கசிப்பு கொடுத்த சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு அண்மைக் காலமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதாக சுற்றுத்துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர் ஒருவருக்கு சிங்களவர்கள் பிளாஸ்டிக் பொத்தலில் கசிப்பு கொடுத்த நிலையில் அதை குறித்த வெளிநாட்டவர் வாங்கி அருந்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நாசாவின் விண்வெளி ஆய்வில் பங்கேற்கும் இலங்கைப் பெண்!!

நாசாவின் (Nasa) விண்வெளி ஆய்வில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் ஒருவர் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தை உருவகப்படுத்திய ஒர் குடியிருப்பில் தங்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இலங்கையரான பியூமி விஜேசேகர (Bhumi Wijesekara) என்ற விஞ்ஞான ஆய்வாளரும் நாசா ஆய்வில் இணைந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மே மாதம் 10ம் திகதி இந்த ஆய்வு ஆரம்பிக்கப்பட உள்ள இந்த விஞ்ஞான ஆய்வில் ஜேசன் லீ, ஸ்டெப்னி நவாரோ, ஸாரீப் அல் ரோமாய்தி மற்றும் பியூமி விஜேசேகர (Bhumi Wijesekara) ஆகிய நான்கு பேர் தன்னார்வ அடிப்படையில் பங்கேற்க உள்ளனர்.

செவ்வாய் கிரகத்தைப் போன்றதொரு கட்டமைப்பிற்குள் இவர்கள் 45 நாட்கள் விண்வெளி ஆய்வாளர்களைப் போன்றே தங்கியிருப்பார்கள் என நாசா அறிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல், தொலைதூரம், தனித்திருத்தல் உள்ளிட்ட விடயங்களை விண்வெளி வீராகள் எவ்வாறு அணுகுகின்றார்கள் என்பது குறித்து ஆராயும் நோக்கில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட உள்ளது.

நிலா, செவ்வாய் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளுக்காக விண்வெளி வீரர்களை அனுப்புவதற்கு முன்னதாக அந்த சூழ்நிலைகளில் விண்வெளி வீரர்களின் நிலைமை குறித்து கண்டறிந்து கொள்வதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.

நிகழ்நிலை தொழில்நுட்பத்தின் ஊடாக இவர்கள் செவ்வாயில் நடப்பது போன்றும் அங்கு வாழ்வதும் போன்றும் உணர்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையைச் சேர்ந்த விஜேசேகர கலாநிதி ஆய்வு விஞ்ஞானி எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நாசா ஆய்வு மையத்தின் கதிர்வீச்சு குறித்த ஆய்வாளராக கடமையாற்றி வருகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றுக்கொண்ட பியூமி விஜேசேகர, பிட்ஸ்பேர்க் கார்னிஜி மெலோன் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார்.

வடக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான வானிலை தொடர்பான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த தகவலை தெரிவித்துள்ளது.

இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் திணைக்களம் (Department of Meteorology) கோரிக்கை விடுத்துள்ளது.

வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) தெரிவித்துள்ளது.

எனவே, மக்கள் நீரேற்றத்துக்கு முன்னுரிமை அளிக்கவும், வெப்பம் தொடர்பான நோய்களைத் தடுக்க நிழலான பகுதிகளில் அடிக்கடி ஓய்வு எடுக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.