இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த முதலாவது இலங்கை பெண் என்ற பெருமையை தமிழ்நாடு – திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நளினி பெற்றுள்ளார்.
நளினிக்கு முதன்முறையாக வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அன்னை ஆசிரமம் எம்எம் நடுநிலைப்பள்ளியில் அவர் தனது முதல் வாக்கினைச் செலுத்தியுள்ளார்.
வாக்களித்த பின்னர் கருத்து தெரிவித்துள்ள நளினி, இலங்கைத் தமிழர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை, மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் கண்காணிப்புடன் வைத்திருப்பார்கள்.
அதனால் இங்குள்ள மக்கள் மன உளைச்சலில் காணப்படுகின்றனர். எங்களை இலங்கைத் தமிழர் என்று தெரிவிப்பதை விட, இந்திய வம்சாவளியினர் என்று அதிகாரிகள் அடையாளப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் நளினி இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் கைப்பை லொறியில் சிக்கிய விபத்தில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார். நிட்டம்புவ, வத்துபிட்டிவல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று (19) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 54 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறியில் கைப்பை சிக்கியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் லொறியின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்லதுடன் மேலதிக விசரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை படிப்படியாக நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறுதியான வாகன இறக்குமதியின் போது பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்பட்ட 3 வருடங்களை 7 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களாக அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்தால், புதிய வாகனங்களை விட குறைந்த விலையில் வழங்க முடியும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் வரி வருமானத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.
மொபைல் சண்டையால் வாழைச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 43 வயதுடைய பிறைந்துரைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவராவார். கையடக்கத் தொலைபேசி தொடர்பில் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் பெயரில் உள்ள 97 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிட்காயின் மோசடி தொடர்பிலேயே ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பிட்காயின் மோசடியில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.
வேரியபில் டெக் நிறுவனத்தை நடத்தி வந்த அமித் பரத்வாஜ், அஜய், விவேக் மற்றும் சிம்பி பரத்வாஜ் உள்ளிட்ட ஏஜென்ட்டுகள் மீது டெல்லி மற்றும் மும்பையில் வழக்கு தொடரப்பட்டது.
விசாரணையில் உக்ரைனில் பிட்காயின் Mining Farm அமைக்க ராஜ் குந்த்ரா, 285 பிட்காயின்களை அமித் பரத்வாஜியிடமிருந்து வாங்கியதாக தெரியவந்தது. இன்னும் அந்த பிட்காயின் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவிடம்தான் இருப்பதாக கூறப்படுகிறது.
அதன் மதிப்பு மட்டும் 150 கோடி ரூபாய் என்று அமலாக்க துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த பிட்காயின் மோசடி வழக்கை அமலாக்கப் பிரிவு தீவிரப்படுத்தி இருக்கிறது.
அதன் ஒரு பகுதியாக ராஜ் குந்த்ரா மற்றும் அவரது மனைவி ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான 97 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்க துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் ஷில்பா ஷெட்டி பெயரில் மும்பை ஜுகுவில் இருக்கும் வீடு, புனேயில் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் பங்களா மற்றும் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் ஷேர்களை அமலாக்கப் பிரிவு பறிமுதல் செய்தது.
இந்த நிலையில், பிட்காயின் மோசடி வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் பெயரில் உள்ள 97 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திரைப்பிரபலங்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கட்டாரில் தொழிலுக்கு சென்ற இலங்கை இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
பொல்பித்திகம பிரதேசத்தில் இருந்து புதிய வீடு கட்டும் கனவை நிறைவேற்ற கட்டார் சென்ற இளைஞன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
27 வயதான ஜனக சதுரங்க செனவிரத்ன என்ற இளைஞன் இலத்திரனியல் வேலைக்காக கட்டார் சென்றுள்ளார். கடந்த 12ஆம் திகதி தனது காதலியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென எவ்வித சத்தமும் கேட்டாமல் போனதாக காதலி கூறினார்.
சார்ஜரில் கையடக்க தொலைபேசியை பொருத்திய நிலையில் தொலைபேசியில் பேசியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக நண்பர் ஒருவர் 13ஆம் திகதி அறிவித்துள்ளார்.
மின்சாரம் தாக்கியிருந்தால் கையடக்க தொலைபேசி எரிந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. மரணத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞனின் மரணம் தூதரகம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது, ஆனால் இறப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. உடலை விரைவில் நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் (United Kingdom) கல்வி பயின்று வந்த இந்திய மாணவர்கள் இருவர், சுற்றுலாத்தலம் ஒன்றில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர் கடந்த புதன்கிழமையன்று (17) ஸ்கொட்லாந்திலுள்ள(Scotland) பிரபல சுற்றுலாத்தலமான கேரி (Garry) மற்றும் டம்மல் (Tummel) என்னும் இரு நதிகள் சந்திக்கும் இடத்திலுள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
இதன்போது, Dundee பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுவந்த 22 வயதுடைய சான்ஹக்யா பொலிசெட்டி மற்றும் 27 வயதுடைய ஜிதேந்திரநாத் கருடூரி ஆகிய மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கியுள்ளனர்.
இந்தநிலையில், அவர்களுடைய நண்பர்கள் உடனடியாக அவசர உதவியை அழைத்தும், நீரில் மூழ்கியவர்களை உயிருடன் மீட்கமுடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், உயிரிழந்த இருவருக்கும் இன்று(19) உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ளப்படும் நிலையில், அவர்களுடைய உடல்களை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக கூறப்படுகின்றது.
பிரித்தானியா வர வீசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் போலி ILTS சான்றிதழ் சமர்ப்பிப்பது குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பொன்றில், இலங்கை மக்கள் பலரும் பிரித்தானியாவிற்கு வர வீசா விண்ணப்பம் செய்கிறார்கள். இந்த நிலையில் தெரியாமல் மக்கள் நிறைய பேர் போலி ILTS சான்றிதழை பெறுகிறார்கள். சிலர் தெரிந்தும் வாங்குகிறார்கள்.
இந்த சான்றிதழ் தொடர்பில் பலரும் தவறாக வழிநடத்துகிறார்கள். முதலில் இதனை அதிமுக்கிய எச்சரிக்கையாக கொண்டு எந்த ILTS குறிப்பாக இலங்கையிலிருந்து ILTS சமர்ப்பிப்பதாக இருந்தால் அதனை உள்ளக ரீதியாக அவதானிக்கிறார்கள்.
எனவே நீங்கள் பரீட்சை நிலையத்தில் அமர்ந்து பரீட்சை எழுதி அதற்கான புள்ளிகளை எடுக்கவில்லை என்றால், யாராவது உங்களுக்கு ILTS சென்டரில் தானே முகாமையாளர், தான் அங்கு பெரிய பதவியில் இருக்கிறேன் என கூறினால் தயவு செய்து நம்ப வேண்டாம்.
ஏனெனில் அதனை சரிபார்க்கும் போது அது போலியென உறுதியாகினால் 10 வருடங்கள் தடை விதிக்கப்படும். அதன் பிறகு பிரித்தானியா வர முயற்சித்தால் அது மிகவும் கடினமானதாக இருக்கும். தயவு செய்து இது தொடர்பில் இலங்கை மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இன்றையதினம் 7 மாகாணங்களில் அதிக வெப்பம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண், வடக்கு, வடமத்திய, மேற்கு, சபரகமுவ, கிழக்கு, தெற்கு, வடமேல் மாகாணம் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் ‘எச்சரிக்கை’ அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் வெயிலில் தொடர்ச்சியான செயல்பாடு வெப்ப பக்கவாதம்,வெப்ப பிடிப்புகள் மற்றும் வெப்ப சோர்வு என்பவற்றை ஏற்படுத்தும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும், “மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நுவரெலியா – லவ்வர்ஸ் லீஃப் பகுதியை சேர்ந்த 6 வயதான சிறுவன் ஒருவர் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
குறித்த சிறுவன் தமக்கு காண்பிக்கப்பட்ட சகல உடல் உறுப்புக்களின் பெயர்களையும் சரியாக கூறியதுடன் அதிக உடல் உறுப்புக்களின் பெயர்களைக் கூறி, இந்த சாதனையை படைத்துள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த கலைநேசன் ஹர்சித் என்ற சிறுவனே இந்த சாதனையை படைத்துள்ளார்.
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீநாகவாணி ராஜா மற்றும் பொதுச் செயலாளர் இந்திரநாத் பெரேரா ஆகியோர் அந்த சிறுவனின் சாதனையை உறுதி செய்து அவருக்கான சான்றிதழை வழங்கியுள்ளனர்.
இந்த நிகழ்வு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த்குமாரின் முன்னிலையில் இடம்பெற்றுள்ளதுடன் அவர் அந்த சிறுவனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் குறித்த சிறுவனின் சாதனையை பாராட்டி பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
ஹெட்டிபொல பிரதேசத்தில்13 வயது சிறுமி மர்மமான முறையில் கர்ப்பமான சம்பவம் வைத்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் வைத்தியர்கள் மற்றும் பொலிஸார் நேற்று விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பல நாட்களாக வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட சிறுமி குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் அவர் இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தப்பட்ட போதிலும், அது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. சிறுமி நிரபராதி என அவரது பெற்றோர் பொலிஸாரிடம் பலமுறை கூறியுள்ளனர்.
சிறுமி குளியாப்பிட்டிய சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமிக்கு உடல் ரீதியான எந்தவொரு தொடுகையிலும் ஈடுபட்டமைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சையின் போது பெண் ஒருவர் உயிரிழந்தமைக்கு வைத்தியர்களின் தவறே காரணம் என உயிரிழந்த பெண்ணின் சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (18.4.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பெண்ணின் சகோதரர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். கிளிநொச்சி பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் பாக்கியசெல்வி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கிளிநொச்சி பல்லவராஜன் கட்டு பகுதியை சேர்ந்த 44 வயதுடைய சுரேஷ்குமார் பாக்கிய செல்வி எனும் எனது சகோதரிக்கு கடந்த 08ஆம் திகதி போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் அரச மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் உயிரிழந்த பெண்ணின் சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐஸ்க்ரீம்னா பிடிக்காதவங்க யாருமே இல்ல… சின்னஞ்சிறு குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அதிலும் கொளுத்தும் வெயிலில் ஐஸ்க்ரீம் உருக உருக வழியாமல் சாப்பிடும் ருசியே தனி தான்.
ஆனால் உணவே விஷமாகி வரும் இந்த காலகட்டத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டதால் இரட்டைக்குழந்தைகளை ஒரே நேரத்தில் பறிகொடுத்த தாய் கதறும் காட்சி நெஞ்சை உறைய வைக்கிறது.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாநிலம் பெடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசன்னா. இவரது மனைவி பூஜா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் திரிசூல்-த்ரிஷா என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்தனர்.
தற்போது கோடை காலம் என்பதால் வாகனத்தில் வைத்து ஐஸ்கிரீம் விற்பனை செய்வது வழக்கமாகிவிட்டது. அதேபோல் பூஜா தனது இரட்டைக் குழந்தைகளுக்கு வாகனத்தில் தங்கள் ஊருக்கு கொண்டு வந்த ஐஸ்கிரீமை வாங்கி கொடுத்துள்ளார்.
அதை சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே இரட்டைக் குழந்தைகளுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. மேலும், ஐஸ்கிரீம் சாப்பிட்ட பூஜாவுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து 2 குழந்தைகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தைகள் உயிரிழந்தனர்.
பூஜாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் அந்த ஊரில் பலர் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டாலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
எனவே, இரட்டைக் குழந்தைகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹோசதுர்கா தாலுகாவில் உள்ள மட்டோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஷா(26). இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் ஆஷாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
பேக்கரியில் வேலை செய்து வந்த ஆஷாவை பெற்றோர் வீட்டிற்கே அனுப்பி விடுமாறு அவரது மாமியார் டார்ச்சர் செய்துள்ளார். ஆஷாவின் கணவரும், அவரது குடும்பத்தினரும் அன்றாடம் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இதனால் அவர், மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை வீட்டின் கழிவறையில் தூக்கிட்டு ஆஷா தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக தகவல் அறிந்த ஸ்ரீராம்புரா காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று ஆஷாவின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதன் பின் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இல்லை என்று கொடுமைப்படுத்தியால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் நேஹா ஹிரேமத் என்ற மாணவி ஃபயாஸ் என்ற சக மாணவனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள பிவிபி கல்லூரி வளாகத்தில் நேஹா ஹிரேமத் என்ற மாணவி ஃபயாஸ் என்ற சக மாணவனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது காதலை ஏற்காததால் ஆத்திரமடைந்த மாணவன் அந்த மாணவியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த மாணவி நேஹா ஹிரேமத், BVB கல்லூரியில் MCA படித்து வந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ஃபயாஸ் நேஹாவின் முன்னாள் வகுப்பு தோழர் ஆவார். இவர் சவடத்தி தாலுகாவில் உள்ள முனவல்லியைச் சேர்ந்தவர்.
கடந்த சில நாட்களாக அவர் நெஹாவை காதலிப்பதாக கூறி அவரை பின் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அவரின் காதலை நேஹா ஏற்கவில்லை என்று தெரிகிறது.
இந்த சூழலில் நேற்று கத்தியுடன் கல்லூரிக்கள் நுழைந்த நேஹாவை சந்திந்த ஃபயாஸ் தனது காதலை ஏற்கும்படி கூறியுள்ளார். ஆனால் அப்போதும் நேஹா அவர் காதலை ஏற்காததால் ஆத்திரமடைந்த ஃபயாஸ், நேஹா கழுத்தில் 7 முறை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டார்.
கல்லூரி வளாகத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. கல்லூரி அதிகாரிகளும் மற்ற மாணவர்களும் நேஹாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் மருத்துவமனையில் நேஹா இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே ஹூப்பள்ளியில் உள்ள வித்யாநகர் போலீசாரின் உதவியுடன் ஃபயாஸை போலீசார் பிடித்தனர். இதுகுறித்து ஹுப்பள்ளி-தர்வாட் காவல் ஆணையர் ரேணுகா சுகுமார் கூறுகையில்,
” மாலை 4.45-5 மணியளவில் பிவிபி கல்லூரியில் எம்சிஏ படிக்கும் மாணவி நேஹாவின் முன்னாள் வகுப்பு தோழன் கத்தியால் தாக்கிய சம்பவம் நடந்தது. அவரும் அந்த கல்லூரியிலே படித்து வந்துள்ளார். அவர் நேஹாவை 6-7 முறை குத்தினார்.
இவர்கள் ஒன்றாக படித்ததால் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்பது நமக்கு தெரியும். விசாரணைக்கு பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும்” என்றார்.
நேஹாவின் தாயார் கீதா ஊடகங்களிடம் கூறுகையில், “நான் அவளை அழைத்துச் செல்ல வந்தேன், அவளுடன் தொலைபேசியில் ஒருமுறை பேசினேன். நாங்கள் பேசிய ஐந்து நிமிடங்களுக்குள் குழப்பம் வெடித்தது, யாரோ அவர் கத்தியால் குத்தப்பட்டதாக கூறப்பட்டது.. நான் அவள் முகத்தைப் பார்க்கவில்லை. இன்னும் என் மகள் இறந்துவிட்டாள் என்று என்னால் நம்ப முடியவில்லை.” என்று கூறினார்.
இதற்கிடையில், நேஹாவின் கொலைக்கு எதிராக ABVP மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் செய்தனர்.வித்யாநகர் காவல் நிலையத்திற்கு வெளியே இந்து ஆதரவு அமைப்புகள் மற்றும் பாஜக ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் கர்நாடக பாஜக தனது அதிகாரபூர்வ சமூக வலைதளக் கணக்கில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதில் ” காங்கிரஸ் ஆட்சியின் நோக்கம் அராஜகம், சட்டம் – ஒழுங்கு என்பது வெறும் கனவு.
ஹூப்ளி பிவிபி கல்லூரி மாணவி நேஹா ஹிரேமத்தை கத்தியால் குத்தி கொன்றான் ஃபயாஸ். இன்னும் எத்தனை அப்பாவி இந்துக்களை உங்களின் திருப்திப்படுத்தும் ஆட்சிக்கு பலி கொடுப்பீர்கள் என்று பதில் சொல்லுங்கள்.” என்று தெரிவித்துள்ளது.