யாழில் பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!!

யாழில் பட்டம் ஏற்றி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். சுன்னாகம் தெற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ்குமார் கார்த்திகேயன் (வயது 07) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவன் 31ஆம் திகதி பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் அங்கு மயக்கமுற்றுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று (03) மாலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவினால் மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவில் நடந்த வழக்கில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த வெற்றி!!

பிரித்தானியாவில் இலங்கைத் தாய் ஒருவர் தனது புகலிடக் கோரல் வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டில் வெற்றி பெற்றுள்ளார்.

2021ஆம் ஆண்டு அவர் பிரித்தானியாவுக்கு வந்து, தாம் தனது குடும்பத்திற்கு தமிழீழ விடுதலை புலிகளுடன் உள்ள தொடர்புகள் காரணமாக இலங்கையில் கைது செய்யப்படலாம் தெரிவித்தார்.

மேலும், அவரது மோசமான மனநலம் அவரைப் பயணம் செய்யத் தகுதியற்றவராக்குகிறது என்றும் அவர் வாதிட்டார்.

முந்தைய தீர்ப்பாயம் அவரது கூற்றை நிராகரித்தது. அவர் நம்பகமானவர் அல்ல என்றும், அவரது நான்கு மகள்களில் ஒருவருடன் அவர் பயணம் செய்யலாம் என்றும் கூறியது.

ஆனால், மருத்துவ அறிக்கை அவருக்கு கடுமையான மனச்சோர்வு, பதற்றம் மற்றும் தவறான முடிவெடுக்கும் அபாயம் இருப்பதாகக் காட்டியது.

முதல் தீர்ப்பாயம் இந்த ஆதாரத்தை முறையாகக் கருத்தில் கொள்ளவில்லை என்று தீர்ப்பளித்த மேல் நிலை தீர்ப்பாயத்தின் நீதிபதி இந்த வழக்கை மீண்டும் முழுமையாக விசாரிக்க அனுமதித்தார்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்தில் 75 மாணவர்கள் சித்தி!!

புலமைப்பரீட்சை பெறுபேறுகள்நேற்று இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 75 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலான பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு இம்முறை 165 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

அவர்களில் 159 மாணவர்கள் 70 க்கும் அதிகமான புள்ளிகளை பெற்று சிறந்தபெறுபேற்றினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா இறம்பைக்குளம் மகாவித்தியாலத்தில் 76 மாணவர்கள் சித்தி!!

புலமைப்பரீட்சை பெறுபேறுகள்நேற்று இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலயத்தில் 76 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேலான பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் புலமைப்பரீட்சைக்கு இம்முறை 154மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

அவர்களில் 149மாணவர்கள் 70 க்கும் அதிகமான புள்ளிகளை பெற்று சிறந்தபெறுபேற்றினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் புகையிரதத்துடன் மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகத்தை சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று (03) புதன்கிழமை பயணித்த புகையிரதத்துடன், கொடிகாம பகுதியில் மோதி உயிரிழந்துள்ளார்.

தண்டவாளத்தை கடக்க முற்பட்ட வேளையே விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் – முச்சக்கரவண்டி மோதி விபத்து : இருவர் காயம்!!

தம்புத்தேகம – கல்நேவ வீதியில் தலாகொலவெவ பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (02.09.2025) பிற்பகல் 05.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த லொறி ஒன்றை கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்த முச்சக்கர வண்டி : சாரதி வைத்தியசாலையில் அனுமதி!!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரமுனை நூலகத்திற்கு அருகாமையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி ஒன்று கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவமொன்று இன்று புதன்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை மஜீட்புரம் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு விபத்தில் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

புகையிரத்துடன் மோதி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் பாதுகாப்பாற்ற ரயில் கடவையில் சென்றுகொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்த சம்பவம் நேற்று (02.09.2025) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் களுவன்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த, இரண்டு குழந்தைகளின் தந்தையே (வயது 26) உயிரிழந்துள்ளார்.

குறித்த ரயில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அவ்வேளை வாகன சாரதியான இந்த நபர் களுவன்கேணி பிரதேசத்திலிருந்து செங்கலடி நகரத்துக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளையிலேயே ரயிலில் மோதி படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதனையடுத்து, காயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கான பயண உதவியாக, ரயில் சாரதி, ரயிலை பின்னோக்கிச் செலுத்தி, ஏறாவூர் ரயில் நிலையத்தில் விபத்துக்குள்ளானவரை ஒப்படைத்துள்ளார். எனினும், அங்கு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று அவதானித்ததோடு, வைத்தியசாலைக்குச் சென்று சடலத்தை பாவையிட்ட பின்னர் மரண விசாரணைகளை மேற்கொண்டார்.

ஏறாவூர் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டில் 1400க்கும் மேற்பட்ட ரயில் கடவைகள் இருந்தும் கிட்டத்தட்ட 400 கடவைகளே பாதுகாப்பற்றதாக காணப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற கோர விபத்து : உடல் நசுங்கி இருவர் பலி!!

மத்திய அதிவேக வீதியில் 91ஆவது கிலோமீட்டர் தூண் அருகில் நடந்த வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இன்று (03) அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோதுமை மா ஏற்றி வந்த லொறியொன்றும் பவுசர் வாகனமொன்றும் மோதிக்கொண்டதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்தில் லொறி சாரதி, உதவியாளர் ஆகிய இருவருமே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லொறியின் அடிப் பகுதியில் உடல் நசுங்கி உதவியாளர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

தூக்க கலக்த்தால் வீதியை விட்டு விலகிய லொறி : ஸ்தலத்தில் ஓட்டுநர் பலி!!

மணல் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று ரன்ன நகருக்கு அருகில், வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லொறியின் ஓட்டுநர் உயிரிழந்ததாக ஹூங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்காலை – ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. புத்தலயிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த லொறியொன்றே இவ்வாறு புதன்கிழமை (03) காலை விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.

லொறியை நீண்ட நேரம் செலுத்திய நிலையில் ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தால் இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர் அக்குறுகொட, சுல்தானா கொட பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய மஹகமகே இந்திக என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மருத்துவமனையில் பிறந்த சிசுவை கடித்து குதறிய எலிகள் : அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவின், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு அரச மருத்துவமனையில் பிறந்த சிசுவை, எலிகள் கடித்துக் குதறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தநிலையில் குறித்த மருத்துவமனையில் பிறந்த 2 சிசுக்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தன.

மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தபோது அந்த குழந்தைகளின் கை விரல்கள் மற்றும் காதுகளை அங்குச் சுற்றித்திரிந்த எலிகள் கடித்துக் குதறியுள்ளன.

இதனால் குழந்தைகளின் கை விரல்கள் மற்றும் காதுகளில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது காயத்திற்குள்ளான குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த பெண் மருத்துவர்!!

இரத்தினபுரியில் தனியார் பயணிகள் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் அதிலிருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் வீதியில் விழுந்து படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவரே 13 நாட்கள் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். பெல்மடுல்ல, கனேகம பகுதியைச் சேர்ந்த 32 வயதான மதுபாஷினி என்பவரே உயிரிழந்துள்ளதாக பெல்மடுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் ஒரு குழந்தையின் தாய் எனவும் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் 19 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்து நடந்த உடனேயே சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள், பெண் மருத்துவரை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர்.

சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று தனது பணி நேரத்தை முடித்துவிட்டு இரத்தினபுரியிலிருந்து மாத்தறை நோக்கி சென்ற பயணிகள் பேருந்தில் ஏறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்து பெல்மடுல்லவை அடைந்ததும், பேருந்தில் இருந்து இறங்குவதற்காக முன் கதவிற்கு நடந்து சென்ற போது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஆபத்தான நிபா வைரஸ் பரவும் அபாயம் : உயிரிழப்புகள் ஏற்படலாம் என அச்சம்!!

வௌவால்களின் இயக்க முறைகளை கண்காணிப்பதற்கு வௌவால்களுக்கு ஜிபிஎஸ் பொருத்துவதற்கான ஆராய்ச்சித் திட்டத்தை கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை ஆரம்பித்துள்ளது.

மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய வைரஸ் நோய்களை பரப்பும் வௌவால்களின் அபாயத்தை மதிப்பிடுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முதல் முறையாக நடத்தப்படும் இந்த ஆராய்ச்சியில் ஜெர்மனியில் உள்ள ரொபர்ட் கோச் நிறுவனமும் பங்கேற்கிறது. மேலும் இலங்கை விஞ்ஞானிகள் குழு வௌவால்களை ஆய்வு செய்து வருகிறது.

இலங்கையில் வௌவாலில் நிபா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக இந்த ஆராய்ச்சி தொடங்கப்பட்டது. இந்த கொடிய நோய்க்கிருமி அண்டை நாடான இந்தியா மற்றும் பங்களாதேஷில் நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளது.

இறப்பு விகிதம் சுமார் 75 சதவீம் என ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தில் முன்னாள் முனைவர் பட்டப் படிப்பை மேற்கொண்ட சஹான் சிறிவர்தன,

இலங்கை வௌவால்களில் உள்ள நிபா வைரஸ் மாறுபாடு இந்தியாவின் கேரளாவில் பரவும் நிபா வைரஸைப் போலவே மரபணு ரீதியாக ஒத்திருப்பதைக் கண்டறிந்துள்ளார்.

இந்த வைரஸ் இலங்கையை அடைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ச்சிக் குழு மேலும் ஆராய்ந்து வருகிறது. முந்தைய ஆராய்ச்சிகள், வௌவால்கள் ஒரே இரவில் 60 கிலோ மீற்றர் வரை பறக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன.

மேலும் சில வௌவால்கள் தொடர்ந்து 200 கிலோ மீற்றருக்கு மேல் பயணித்து, தங்கள் பாதையில் உள்ள மற்ற வௌவால் கூட்டங்களைப் பார்வையிட முடியும்.

இந்த வௌவால்கள் எங்கு செல்கின்றன, எவ்வளவு தூரம் பயணிக்கின்றன என்பதை கண்டறிந்து, நோய் எவ்வாறு பரவக்கூடும் என்பதை கணிப்பது முக்கியம் என கொழும்பு பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவை வழிநடத்தும் பேராசிரியர் இனோகா சி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலவரப்படும் இலங்கையில் நிபா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான நோயாளிகள் அடையாளம் காணப்படவில்லை.

எனினும் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று அர்த்தமல்ல ராபர்ட் கோச்சில் இந்த திட்டத்தை வழிநடத்தும் புகழ்பெற்ற பேராசிரியர் ஆண்ட்ரியாஸ் நிட்சே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை!!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்தவாரம் தங்க விலை நாளுக்கு நாள் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இந்த வார தொடக்கத்தில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 280,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று (02) 2000 ரூபாயால் அதிகரித்து, 282,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (03) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 284,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 264,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 35,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

ஜனாதிபதியின் ஆபத்தான கடல் பயணம் : சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கச்சத்தீவு விஜயம்!!

ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்கவின் கச்சத்தீவு விஜயம் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கச்சத்தீவிற்கு படகில் பயணம் செய்தபோது உயிர் காப்பு அங்கி அணியாது பயணம் செய்திருந்தார். ஜனாதிபதி மட்டுமன்றி அமைச்சர்களும் உயிர்காப்பு அங்கிகளை அணியாது படகில் பயணம் செய்திருந்தனர்.

ஒரு நாட்டின் தலைவர் மக்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் எனவும் உயிர் காப்பு அங்கி அணியாது பயணம் செய்வது ஆபத்தானது எனவும் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக செயற்பட்டிருந்த ஊடகவியலாளர் உவிந்து குருகுலசூரிய இது தொடர்பில் தனது முகநூலில் கடும் விமர்சனத்தை வெளியிட்டிருந்தார்.

ஜனாதிபதி படகில் பயணித்தபோது உயிர் காப்பு அங்கி அணியாது பயணம் செய்தது சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும்போது ஹெல்மெட் அணியாதது, வாகனத்தில் பயணம் செய்யும்போது இருக்கை பட்டி அணியாதது போன்றே படகில் பயணிக்கும் போது உயிர் காப்பு அங்கி அணியாது பயணம் செய்வதும் சட்டவிரோதமானது எனவும் அது கட்டாயமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா பிரதமர் இவ்வாறு உயிர் காப்பு அங்கி அணியாது பயணித்தமைக்காக 250 டொலர் அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

2017 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பிரதமர் மெல்கம் டர்ன்புல் சிட்னி துறைமுகப் பகுதி கடலில் உயிர்காப்பு அங்கி அணியாமல் பயணித்ததனால் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமாரதுசாநாயக்க, அமைச்சர்களான ராமலிங்கம் சந்திரசேகரன், ஆனந்த விஜயபால மற்றும் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரால் புத்திக லியனகே ஆகியோர் ஜனாதிபதியுடன் இந்த பயணத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி இவ்வாறு உயிர் காப்பு அங்கி அணியாமல் பயணம் செய்தது குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சர்வதேச ஊடக மற்றும் மூலோபாய தொடர்பாடல் பணிப்பாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் அனுரத்த லொகுவாரச்சி தனது முகநூலில் விளக்கம் அளித்துள்ளார்.

ஜனாதிபதி உயிர் காப்பு அங்கி அணியாமல் பயணம் செய்தது நியாயமானது என அவர் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு விஜயம் வரலாற்று ரீதியாகவும் குறியீட்டு ரீதியாகவும் முக்கியத்துவமானது எனவும் நாட்டின் இறைமையை பறைசாற்றும் வகையில் இந்த விஜயம் அமைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டிய அதி உச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

உயிர் காப்பு அங்கி அணிய வேண்டியது அவசியமானது என்ற போதிலும் ஜனாதிபதிக்கு போதிய அளவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவு விஜயம் நாட்டின் கௌரவம் தொடர்பான ஒரு செய்தியை வெளிப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டது எனவும் இதனால் தலைவர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில்

சில குறியீட்டு ரீதியான தெரிவுகளையும் மேற்கொள்வதாகவும் கடற் படையினர் மீது ஜனாதிபதிக்கு இருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் அவர் உயிர் காப்பு அங்கி அணியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் இறையாண்மையை பறைசாற்றுவதை முதன்மை நோக்காக கொண்டு இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளில் உலகில் அனேக தலைவர்கள் ஈடுபட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா பதவியில் இருந்த காலத்தில் உயிர் காப்பு அங்கி இல்லாமல் விடுமுறை காலத்தில் படகு செலுத்தி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இவ்வாறு சில சந்தர்ப்பங்களில் உயிர் காப்பு அங்கி அணியாது படகுகளில் பயணம் செய்துள்ளனர் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் சர்வதேச ஊடக மற்றும் மூலோபாய தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் அனுருத்த லொகுஹபுவாரச்சி முகநூலில் பதிவிட்டுள்ளார்.

 

8 வருடங்களாக தலைமறைவான கணவன் : ரீல்ஸ் மூலம் கண்டுபிடித்த மனைவி!!

மனைவியை விட்டு பிரிந்து சென்று கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த கணவனை; இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் மனைவி கண்டுபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டை விட்டு வெளியேறிய கணவர் வேறொரு பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. உத்தரபிரதேச மாநிலம் ஹர்டொய் மாவட்டம் முரார்நகரை சேர்ந்தவர் ஷிலூ. இவருக்கும் ஜிதேந்தர் என்பவருக்கும் கடந்த 2018ல் திருமணமானது.

ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பிணியான மனைவி ஷிலூவை விட்டு விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானார் ஜிதேந்தர்.

பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காத நிலையில், தலைமறைவான ஜிதேந்தர் குறித்து அவரின் தந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி தேடி வந்தனர்.

தீவிர விசாரணைக்குப் பின்னரும் ஜிதேந்தர் சென்ற இடம் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் போலீசார் தேடுதல் பணியை கைவிட்டனர். கணவர் தலைமறைவான நிலையில், தனது தாயார் வீட்டில் வாழ்ந்து வருகிறார் ஷிலூ.

இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் கணவர் ஜிதேந்தரை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் ஷிலூ கண்டுபிடித்துள்ளார்.

ஷிலூ தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துகொண்டிருந்தபோது அதில் தனது கணவர் வேறொரு பெண்ணுடன் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டிருந்ததை கண்டுபிடித்தார்.

உடனடியாக இது குறித்து ஷிலூ போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது, ஜிதேந்தர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வசித்து வருவதும் அங்கு வேறொரு பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, பஞ்சாப் சென்ற உத்தரபிரதேச போலீசார் ஜிதேந்தரை கைது செய்தனர்.

பெண்ணை திருமணம் செய்துவிட்டு அவரை ஏமாற்றி தலைமறைவாகி 2வது திருமணம் செய்தது உள்பட பல்வேறு குற்ற பிரிவுகளில் ஜிதேந்தரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.