பிரபல நடிகைக்கு 102 கோடி அபராதம்!!

தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக நடிகை ரன்யா ராவுக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அவருக்கு ரூ.102.55 கோடி அபராதம் விதித்துள்ளது.

மார்ச் 3 ம் தேதி துபாயிலிருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் வழியாக 14.2 கிலோ தங்கத்தை சட்டவிரோதமாக கொண்டு வந்ததாக அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், அவருடன் மூன்று பேர் மீதும் மொத்தம் ரூ.270 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

அபராதம் செலுத்தப்படாவிட்டால், அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தப்படாவிட்டால், ரன்யா ராவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம் எனக் கூறியுள்ளது.

வவுனியாவில் ஏழு வருடங்களின் பின்னர் திறந்துவைக்கப்பட்ட பொருளாதார மத்தியநிலையம்!!

வவுனியாவில் கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பொருளாதார மத்தியநிலையம் 7 வருடங்களின் பின்னர் இன்று(03.09.2025) மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கடந்த 2018ஆம் ஆண்டு வவுனியா மதவுவைத்தகுளத்தில் 293மில்லியன் ரூபாய் செலவில் விசேட பொருளாதார மத்தியநிலையம் அமைக்கப்பட்டது.

அதனை ஓமந்தையில் அமைப்பதா அல்லது தாண்டிக்குளத்தில் அமைப்பதா என்று அரசியல்வாதிகளுக்கிடையில் ஏற்ப்பட்ட இழுபறிகளுக்கு மத்தியில் மதவுவைத்தகுளத்தில் அது அமைக்கப்பட்டது.

எனினும் அமைக்கப்பட்டு ஏழு வருடங்கள் கடந்த நிலையிலும் பல்வேறு காரணங்களால் அது இயங்க முடியாத சூழல் ஏற்ப்பட்டதுடன் அதன் கட்டுமானத்திலும் பழுதுகள் ஏற்ப்பட்டது.

இந்தநிலையில் குறித்த நிலையத்தில் மீண்டும் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்றையதினம் மக்கள் பாவனைக்காக அது கையளிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருளாதார மத்தியநிலையத்தில் 50கடைகள் அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளதுடன், முதற்கட்டமாக 35 கடைகள் வவுனியா மொத்தவியாபாரசந்தை வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஒரு கடை சதொச நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன், பிரதி அமைச்சர்களான எம்.ஜெயவர்த்தன, உபாலி சமரசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன்,செ.திலகநாதன் ஆகியோரால் நாடாவெட்டி திறந்துவைக்கப்பட்டது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று!!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றிரவு வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெற்றது. நாடு முழுவதும் 2,787 மையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது.

இதேவேளை, இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து ஏழாயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்று ஆகும்.

வெப்பமான காலநிலை தொடரும் : வளிமண்டலவியல் திணைக்களம்!!

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. நேற்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை, இன்று புதன்கிழமை (03.09.2025) வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில்,வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் அவதானத்துடன் செயற்பாடுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இப்பகுதிகளின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், வெளிப்புறங்களில் வேலை செய்பவர்கள் இலகுவான ஆடைகளை அணியுமாறும், நிழலான பகுதிகளில் ஓய்வெடுத்தல் மற்றும் போதியளவு நீரை அருந்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் கிளீன் சிறீலங்கா திட்டம் முன்னெடுப்பு!!

தூய்மை இலங்கை (Clean Sri Lanka) திட்டத்துடன் இணைந்ததாக நேற்று (01.09.2025) முதல் 04 வரை அரச நிறுவனங்களின் தூய்மைப்படுத்தும் செயிரி வாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டச் செயலகத்தை சுத்தம் செய்யும் பணி காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை நடைபெற்றது. வவுனியா மாவட்டச் செயலாளர் பி.ஏ.சரத் சந்ர மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளர் என். கமலதாசன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள அனைத்துப் பிரிவுகளும் தூய்மையான இலங்கைத் திட்டத்துடன் இணைந்து நடைபெற்ற இந்த தூய்மைப்படுத்தும் பணியில் இணைந்தன.

ஓணம் கொண்டாட்டத்தில் நடனமாடியவர் மயங்கி விழுந்து மரணம் கேரளாவில் சோக சம்பவம்……!!

கேரளாவில் சட்டமன்ற ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர் ஜூனேஷ் அப்துல்லா. இவர் கேரள சட்டமன்ற நூலகத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் மாநில சட்டமன்றத்தில் ஓணம் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக மேடை நடனம் இடம்பெற்றிருந்தது.

இதில் 45 வயதான ஜூனேஷ் அப்துல்லாவும் ஒருவராக சேர்ந்து நடனமாடினார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் உடனடியாக பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இது சக ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உயிரிழந்த ஜூனேஷ் நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததாக அறியப்பட்டது.

இலங்கையின் பிரபல ராப் பாடகர் மீண்டும் கைது!!

சில நாட்களுக்கு முன்பு போலி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரபல ராப் (Rep) பாடகர் மதுவா எனப்படும் மாதவ பிரசாத், மீண்டும் வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மூன்று ஜெலிக்னைட் குச்சிகள், 5 டெட்டனேட்டர்கள் மற்றும் 3.5 கிலோ அம்மோனியா நைட்ரேட் இருந்ததாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கடந்த 25ஆம் திகதி போலி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டு, கெஸ்பேவ நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் கஹதுடுவ பொலிஸ் குற்றப் புலனாய்வுதப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பிடிபன, கலஹேன பகுதியிலுள்ள வீடொன்றின் பின்னால் சந்தேக நபர் வெடி பொருட்களை புதைத்து வைத்திருந்தமை தெரிய வந்துள்ளது.

கணவனை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கொலை செய்த மர்ம நபர்!!

அனுராதபுரம், இராஜாங்கனை பொலிஸ் பிரிவின் அங்கமுவ பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலை சம்பவம் நேற்று இரவு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் யாய 08, அங்கமுவ பகுதியை சேர்ந்த 49 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

கணவனுடனான குடும்பத் தகராறு காரணமாக, அந்தப் பெண் தனது மூத்த மகன் மற்றும் மகளுடன் சுமார் 08 மாதங்களாக தாயின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கணவர் தனது இளைய மகனுடன் நேற்று திருமண விழாவில் கலந்து கொள்ள மூத்த மகனை அழைத்துச் சென்றுள்ளார்.

மேலும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த பெண் நேற்று இரவு அவரது தாயின் வீட்டின் முன் யாரோ ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொல்லப்பட்ட பெண்ணின் சடலம் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேக நபர்களைக் கைது செய்ய இராஜாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சூரியனின் தென்திசை நோக்கிய இயக்கம் : மாறும் காலநிலை!!

 

சூரியனின் தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, பல பகுதிகளில் வெப்பமாக இருக்கும் அதேநேரம் நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் வருடம் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இந்நிலையில் சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கிணங்க இன்று (02.09) பிற்பகல் 12:10 மணி அளவில் பத்தலங்குண்டுவ, மதவாச்சி, ஹொரவப்பொத்தான மற்றும் கிண்ணியா பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (2) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நிலச்சரிவில் கிராமமே தரைமட்டம் : 1000 பேர் பலி : ஒருவர் மட்டும் உயிர் பிழைத்த அதிசயம்!!

சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் வசித்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அக்கிராமத்தில் ஒரே ஒருவர் மாத்திரமே உயிர்தப்பி உள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

சூடானில் அல் புர்ஹான் தலைமையிலான இராணுவத்திற்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்எஸ்எப் துணை இராணுவ படைக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவுகிறது.

ஒரே ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார்

2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி முதல் இரு தரப்பினர் இடையே கடும் யுத்தம் இடம்பெற்று வருகிறது. இந்த யுத்தத்தில் அப்பாவி மக்கள் உள்பட இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மோதலை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளுக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. உள்நாட்டு போரால் கோடிக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து உள்ளனர்.

இந் நிலையில், சூடான் விடுதலை இயக்கம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மர்ரா மலையில் உள்ள டார்பர் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த பகுதியில் திடீரென பாரிய நிலச்சரிவும் ஏற்பட்டது.

இதில் சிக்கி, 1000 பேர் பலியாகி இருக்கின்றனர். ஒரே ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளார்.

மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கடும் சேதத்தை சந்தித்துள்ள இப்பகுதியில் சடலங்களை மீட்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் ஐ.நா. சபை மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று சூடான் விடுதலை இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அழைப்பை எடுக்காத காதலி : கோபத்தில் காதலன் செய்த செயல்!!

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நீண்ட நேரமாக அழைத்தும் காதலியின் தொலைபேசியை எடுக்காத்ததால் இளைஞர் செய்த செயல் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

காதலியின் தொலைபேசி பிஸியாகவே இருந்ததால் இளைஞர் ஒருவர் கோபத்தில், காதலியின் கிராமத்திற்கு செல்லும் மின்சார வயர்களை ஒட்டுமொத்தமாக துண்டித்துள்ளார்.

இளைஞர் ஒருவர் கையில் மின் வயரை கட் செய்யும் கருவியுடன் மின் கம்பத்தில் ஏறி மின் வயர்களை ஒவ்வொன்றாக துண்டிக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்!!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் (Grade 5 scholarship exam) பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது.

நாடாளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை இம்முறை 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது.

அந்தவகையில், இந்த வருடம் 23,1638 சிங்கள மொழி விண்ணப்பதாரர்கள் மற்றும் 76,313 தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 30,7959 விண்ணப்பதாரர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி உள்ளனமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிப்பு!!

இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், நேற்று (01) தங்கம் பவுண் ஒன்றிற்கு 6000 ரூபாயால் அதிகரித்திருந்த நிலையில்,

இன்று மீண்டும் 2000 ரூபாயால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில் கடந்த சனிக்கிழமை 274,000 ரூபாயாக இருந்த 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, நேற்று 280,000 ரூபாயாக அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது.

இந்த நிலையில் இன்று (02) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றிற்கு 2000 ரூபாயால் அதிகரித்து, 282,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (02) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 282,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 260,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 35,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

தேங்காய் எடுக்க சென்ற 6வயது சிறுவனுக்கு நடந்த விபரீதம்!!

பொல்பிதிகம, மொரகொல்லகம பகுதியில் நேற்று (31) கிணற்றில் வீழ்ந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்ததாக பொல்பிதிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்பிட்டிய, மொரகொல்லகம பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் வீழ்ந்த தேங்காயை எடுக்கச் சிறுவன் சென்ற போதே கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் நடந்த நேரத்தில் சிறுவனின் தாயும் தந்தையும் வீட்டிலிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

வரலாற்றுச் சாதனை படைத்த தமிழ் மாணவி : குவியும் பாராட்டுக்கள்!!

காலி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் 49 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வரலாற்றில் முதற்தடவையாக சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப்பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.

நேற்று முன்தினம் (30.08.2025) பெண்களிற்கான குத்துச்சண்டைப் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று இவ்வரலாற்றுச் சாதனையைப் புரிந்துள்ளார்.

கடந்த காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் கிடைத்தாலும் தங்கப் பதக்கம் கிடைப்பது இதுவே முதற்தடவையாகும்.

49 ஆவது தேசிய விளையாட்டு விழாவானது காலி மாவட்டத்தில் கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (31) நிறைவடையவுள்ளது.

நேற்று இடம்பெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சசிகுமார் ஜெஸ்மிதா அவரது வெற்றிக்கு பக்கபலமாக இருந்த பயிற்றுவிப்பாளர்

மற்றும் மாவட்ட பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வாரம் முழுவதும் சூரியனின் இயக்கத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!!

சூரியனின் தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, பல பகுதிகளில் வெப்பமாக இருக்கும் அதேநேரம் நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் வருடம் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இந்நிலையில் சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கிணங்க இன்று (31) நண்பகல் 12:10 அளவில் பத்தலங்குண்டுவ, மதவாச்சி, ஹொரவப்பொத்தான மற்றும் கிண்ணியா பகுதிகளுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (31) பல தடவைகள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடமேல் மாகாணம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறித்தியுள்ளது.