மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு!!

மின்சார திருத்தச் சட்டம் திரிபுபடுத்தப்பட்ட முறையில் திருத்தப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்ததாரர்களுக்கு எளிதாக்குவதற்காகவும் திருத்தப்பட்டுள்ளதாகவும் மின்சார பயனர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக மின் கட்டணத்தை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

“இப்போது மின்சார வாரியம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு நிறுவனங்களில் சேர விரும்பாத ஊழியர்கள் வெளியேறுவதற்கான ஒரு அமைப்பு வகுக்கப்பட்டுள்ளது.

இது முடிந்ததும், வெளியேறும் ஒவ்வொரு ஊழியருக்கும் CEB ஐந்து மில்லியன் ரூபாய் வரை ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கும்.

சுமார் ஐந்தாயிரம் ஊழியர்கள் வெளியேறினால், அவர்கள் ஐந்து மில்லியன் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும், அதாவது இரண்டாயிரத்து ஐநூறு மில்லியன் (25 பில்லியன் ரூபாய்).

இந்த அளவு தொகையை ஈடு செய்வதற்கு எதிர்காலத்தில் நுகர்வோரிடமிருந்து மின் கட்டணங்கள் மூலம் இதனை அறவிட திட்டங்கள் இருக்கலாம்.

எனவே, பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஈடுசெய்ய மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என்ற உத்தரவாதத்தை அரசாங்கத்திடம் நாங்கள் கோருகிறோம்.

கடற்கரை பகுதியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!!

களுத்துறை, கட்டுகுருந்த கடற்கரை பகுதியில் இருந்து இன்று சனிக்கிழமை (30) காலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்கரை பகுதியில் சடலம் ஒன்று இருப்பதாக 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

55 முதல் 60 வயது மதிக்கத்தக்க ஆணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் இலங்கைத் தமிழ் தம்பதியரின் மகன் சுட்டுக் கொலை : இருவர் கைது!!

கனடாவில் இலங்கைத் தமிழ் தம்பதியரின் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம் தொடர்பில் 17 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Scarboroughவில் வாழ்ந்துவரும் அமலதாஸ் மரியதாசன், ஜூடின் பாசில் தம்பதியரின் மகன் டானியல் அமலதாஸ். அமலதாஸ் மரியதாசன், ஜூடின் பாசில் தம்பதியர், 1993ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆவர். தம்பதியருக்கு கனடாவில் பிறந்த மகன் டானியல் அமலதாஸ் (19).

கடந்த வியாழக்கிழமை, அதாவது, ஆகத்து மாதம் 21ஆம் திகதி, 2.00 மணியளவில், Scarborough டவுன் சென்றரிலுள்ள ஷாப்பிங் மாலுக்கு எதிரே பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்திருக்கிறார்கள் அமலதாஸ் ஜூடின் தம்பதியர்.

அப்போது திடீரென பொலிசாரும் மருத்துவ உதவிக்குழுவினரும் ஷாப்பிங் மாலுக்கு விரைய, யாருக்கோ ஏதோ பிரச்சினை என்பதை அறிந்துள்ளார்கள் அமலதாஸ் ஜூடின் தம்பதியர்.

ஆனால், அவர்களுக்குத் தெரியாது, அங்கு ஒரு இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதும், அது தங்கள் மகன் டானியல்தான் என்பதும். பின்னர் அவர்கள் வீடு திரும்பிய நிலையில், மகனைக் காணாமல் அவனை மொபைலில் அழைக்க, மகனை தொடர்புகொள்ள முடியவில்லை.

டானியல் வீடு திரும்பவேயில்லை. மாறாக, வீட்டுக்கு பொலிசார்தான் வந்துள்ளார்கள். பொலிசார் துப்பாக்கிச்சூடு குறித்து கூறியபோதுதான் ஷாப்பிங் மாலில் தங்கள் மகன் கொல்லப்பட்டது குறித்து அவர்களுக்குத் தெரியவந்துள்ளது.

டானியலை கொலை செய்ததாக 17 வயது இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளாரக்ள்.

தங்கள் மகனுக்கு எதனால் இப்படி நடந்தது என்று தங்களுக்குத் தெரியவில்லை என்று கூறும் அமலதாஸ் ஜூடின் தம்பதியர் கண்ணீர் விட்டுக் கதறிக்கொண்டிருக்கிறார்கள்.

தான் ஏழு நாட்களாக தூங்கவேயில்லை என்று ஜூடின் கூற, கணவனுக்கும் மனைவிக்கும் கண்களில் கண்ணீர் கொப்புளிக்கிறது.

கனடா பாதுகாப்பான நாடு, எங்கள் பிள்ளைகள் இங்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று நினைத்தோம் என்கிறார் ஜூடின். மகனை இழந்து கதறும் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை!

இந்தோனேஷியாவில் சிறப்பு நடவடிக்கையில் சிக்கிய பெண் இலங்கைக்கு நாடு கடத்தல்!!

குற்ற கும்பல் உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே மற்றும் குழுவினருடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை, இன்று மதியம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் இன்று மாலை சுமார் 5.50 மணியளவில் அவர்கள் நாட்டிற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கெஹல்பத்தர பத்மே மற்றும் கும்பலின் ஏனைய உறுப்பினர்கள் குழு சமீபத்தில் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அந்த கும்பலுடன் பெண்ணும் குழந்தையும் கைது செய்யப்பட்டனர். எனினும் அந்தப் பெண் மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இந்தோனேசிய அதிகாரிகள் அந்தப் பெண்ணை நாட்டிற்கு அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி!!

திருகோணமலை – திருஞானசம்பந்தர் வீதியில் இன்று (30) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சோனகவாடி பகுதியில் இருந்து சிவன்கோவில் பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி வடிகானுக்குள் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருஞானசம்பந்தர் வீதியின் கற்பக பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி இரு பிள்ளைகளின் தந்தை பலி!!

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் சனிக்கிழமை (30) காலை இடம்பெற்றுள்ளது. தங்கநகர் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவரே காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இரவு வயலுக்கு காவலுக்குச் சென்று காலை வீடு திரும்பும் வேளையில் தோட்டம் ஒன்றிக்குள் மறைந்திருந்த யானை தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் தொடர்ச்சியாக யானையின் தாக்குதலினால் பலர் உயிரிழந்து வருவதாகவும் காட்டு யானைகள் ஊருக்குள் உள்நுழைவதை கட்டுப்படுத்த முறையான திட்டங்கள் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

 

மோட்டார் சைக்கிள் விபத்து : வயலுக்குள் விழுந்து சேதம்!!

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையைவிட்டு விலகி அருகிலுள்ள வயலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் மூதூர் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த விபத்துச் சம்பவம் வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர் மூதூர் பகுதியைச் சேர்ந்த யோகநாதன் (வயது 42) என தெரியவருகிறது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தொப்பை கொழுப்பை கடகடவென குறைக்க வேண்டுமா? இந்த சைவ உணவுகள் போதும்!!

புரதம் என்னும் புரோட்டீன் நமது உடலுக்கு மிக அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். குறிப்பாக உடல் வளர்ச்சிக்கும் தசை ஆரோக்கியத்திற்கும் அவசியம். அதோடு, உடல் பருமனை குறைக்க சேர்க்கப்பட வேண்டிய இன்றியமையாத ஊட்டசத்து.

புரோட்டீன் உடல் வளர்ச்சி மற்றும் திசுக்களை பழுதுபார்க்க உதவுகிறது. மேலும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், எடையைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. புரதம் நிறைந்த உணவுகளை, தவறாமல் சேர்த்துக் கொள்வதால் வியக்கத் தக்க பலன்களை பெறலாம்.

புரத உணவுகள்

பீன்ஸ் வகை பருப்புகள்: சோயாபீன்ஸ், கொத்துக்கடலை, ராஜ்மா பீன்ஸ் வகை பருப்புகளில், அதிக அளவிலான புரதம் மட்டுமல்லாது, நார்ச்சத்துக்களும் உள்ளது. எண்ணற்ற பிற சத்துகளும் கிடைக்கும். இது உங்கள் எடை இழப்பு முயற்சிகளுக்கு முக்கியமானது.

ப்ரோக்கோலி: புரதம், மட்டுமல்லாது வைட்டமின் சி,வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து நிறைந்த ப்ரோக்கோலி உங்கள் உட்ல பருமன் குறைய பெரிதும் உதவும். இதனை அளவிற்கு அதிகமாக வேக வைத்தால், ஊட்டசத்துக்கள் முழுமையாக கிடைக்காது.

கினோவா: பசையம் இல்லாத தானியமான கினோவா புரதத்தின் முழுமையான ஆதாரம். குயினோவா ஒரு நாளைக்கு போதுமான புரத தேவையை பூர்த்தி செய்யும். நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

பாதாம்: தினமும் பாதாம் பருப்புகளை உட்கொள்வது உடல் கொழுப்பைக் குறைக்க உதவும். கொழுப்பை எரிக்க உதவும் அமினோ அமிலமான எல்-அர்ஜினைன் இதில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கீரை: வேகவைத்த முட்டையில் உள்ள அளவை ஒத்த புரதம் கீரையில் உள்ளது. அதோடு, பிற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. கலோரிகளும் மிகவும் குறைவு. அளவோடு வேகவைத்த கீரை எண்ணற்ற பலன்களைக் கொடுக்கும்.

பன்னீர்: பாலாடைக்கட்டி அல்லது பன்னீரில் புரதம் அதிகம் உள்ளது. அதோடு, அதில் கலோரிகள் மற்றும் கொழுப்புகளும் மிகக் குறைவு, மேலும் வைட்டமின் பி 12, கால்சியம், பாஸ்பரஸ், ரிபோஃப்ளேவின் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும்.

தமிழர் பகுதியை உலுக்கிய சம்பவம் : தனிமையிலிருந்த தாதிக்கு அதிகாலையில் காத்திருந்த பெரும் அதிர்ச்சி!!

மட்டக்களப்பு ஊறணி பகுதியில் வீடு ஒன்றில் உள்நுழைந்த கொள்ளையன் ஒருவர் வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து கழுத்தில் இருந்த 16 பவுண் தாலிக் கொடியை அறுத்து கொள்ளையடித்து கொண்டு

அங்கிருந்த சைக்கிளை திருடிக் கொண்டு தப்பி ஓடியுள்ளதுடன் வயோதிப பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள ஓவசியர் வீதி சின்ன ஊறணி பகுதியிலுள்ளள வீடு ஒன்றில் தாதியர் உத்தியோகத்தர் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற 65 வயதுடைய வயோதிப பெண்ணும் கணவனும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வழமைபோல அதிகாலை 4.00 மணிக்கு எழுந்து இறைவழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு கதவினை திறந்து ஒருவர் நிற்பதை கண்டு கணவர் என நினைத்து அவரை அழைத்துள்ளார் ஆனால் சத்தம் எதுவும் இல்லை.

இதனையடுத்து அறையின் மின்குமிழை போட்போது அங்கு நின்ற ஒருவர் கத்தி ஒன்றை எடுத்து சத்தம்போடாதே என எச்சரித்து குறித்த வயோதிப பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து கழுத்தில் இருந்த 16 பவுண் தாலிக்கொடியை இழுந்து அறுத்து கொண்டு தப்பி ஓடி உள்ளார்.

குறித்த பெண் சத்தம் போட்டதையடுத்து கணவர் வந்து காயமடைந்த அவரை வைத்தியசாலையில் அனுமதித்தார்.

தப்பி ஓடிய கொள்ளையன் அங்கு நிறுத்தி வைத்திருந்து ஒரு வாரத்துக்கு முன்னர் வாங்கிய புதிய சைக்கிளை திருடிக் கொண்டு தப்பி ஓடியுள்ளதாகவும் அன்றைய தினம் அருகிலுள்ள வீடுகளில் வெளியில் இருந்த தாச்சி,

மோட்டார் சைக்கிள் தலைகவசம் என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கணவனின் கத்திக்குத்தில் மனைவி உயிரிழப்பு!!

காலியில் ஹபராதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அமுகொட்டுவ பிரதேசத்தில் கணவனின் கத்திக்குத்து இலக்காகி மனைவி உயிரிழந்துள்ளதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்குலுகஹ, பிலான பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய மனைவியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மனைவியின் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான கணவரை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஹபராதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் பிரபல பாடகர் கைது!!

இலங்கையின் பிரபல பாடகர் தமித் அசங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறு தொடர்பாக வெல்லவாய பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேகநபர் தமித் அசங்க கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான தமித் வெள்ளவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர்,

ஒரு லட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அனைத்து அரச நிறுவனங்களிலும் கட்டாயமாகும் நடைமுறை!!

நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் கைரேகை இயந்திரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

அரச சேவையின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம், அரச ஊழியர்களின் வருகை மற்றும் புறப்பாடு முறையான அமைப்பின் மூலம் கண்காணிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதேச செயலகங்கள் உட்பட பல அரச நிறுவனங்களில் இந்த கைரேகை இயந்திரங்கள் ஏற்கனவே வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

வருகையை பதிவு செய்யும் போது ஏற்படும் சில முறைகேடுகள் மற்றும் பிழைகளை சீர்செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முறையை அறிமுகப்படுத்துவதன் முக்கிய நோக்கம், அரச ஊழியர்களின் சேவை நேரத்தை முறையாக நிர்வகிப்பதும், அதன் மூலம் பொது சேவையை நெறிப்படுத்துவதும் ஆகும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மின் தடை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

அரசாங்கம் அவசரமான, குழப்பமான மற்றும் திட்டமிடப்படாத மின்சாரத் துறை சீர்திருத்த செயல்முறையை செயல்படுத்துவதாக இலங்கை மின்சார வாரிய பொறியாளர்கள் சங்கம் (CEBEU), குற்றம் சாட்டியுள்ளது.

இந்த செயல்முறையானது நாடு முழுவதுமான மின் தடை, பெருமளவிலான பணிநீக்கங்கள் மற்றும் முழுத் துறையையும் சீர்குலைக்க வழிவகுக்கும் என்று தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.

சட்டத் தேவைகள், நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் மின்சாரத் துறை சீர்திருத்தச் சட்டத்தின் விதிகளைப் புறக்கணித்து, அதிகாரிகள் “மிகவும் எளிமையான முறையில்” பணியாளர் பணி நியமனக் கடிதங்களை வழங்கியுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

“தற்போதைய சீர்திருத்த அதிகாரிகளுக்குள் சரியான பொறுப்புக்கூறல் மற்றும் நடைமுறை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நாட்டின் மிக முக்கியமான துறையாக இருந்தாலும், சிலர் சீர்திருத்த செயல்முறையை இலகுவாக எடுத்துக்கொள்கிறார்கள். இறுதி விளைவு என்னவாக இருக்கும்?” என்று CEBEU இணைச் செயலாளர் பொறியாளர் அமல் அரியரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு, தற்போதைய தன்னார்வ ஓய்வூதியத் திட்டம், ரூ. 5 மில்லியனாக வரையறுக்கப்பட்டுள்ளது, இது “போதுமானதாக இல்லை”, மேலும் இது மிகவும் திறமையான பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் வெளிநாடுகளில் வேலை தேட வழிவகுக்கும் என CEBEU தொழிற்சங்கம் மேலும் எச்சரித்துள்ளது.

அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் வெளியேறினால், துறை சரிந்துவிடும், மின்வெட்டு தவிர்க்க முடியாததாகிவிடும் எனவும் கூறியுள்ளது.

இளம்பெண்ணை அசிட் குடிக்க வைத்து கொன்ற கணவன் குடும்பத்தினர்!!

நாடு முழுவதும் சமீப காலங்களாக வரதட்சணைத் தொடர்பான உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்த அதிர்ச்சியாக உத்தரபிரதேச மாநிலத்தில்,

இளம்பெண்ணை ஆசிட் குடிக்க வைத்து கணவன் குடும்பத்தினர் கொலைச் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் கலா ஹிடா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் குல் பைசா. இவருக்கும் அமொர்கா பகுதியைச் சேர்ந்த பர்வேஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. குல் பைசா தனது கணவர் பர்வேஷ் வீட்டில் வாழ்ந்து வந்தார்.

திருமணத்திற்குப்பின் கூடுதல் வரதட்சணை கேட்டு பர்வேஷ் மற்றும் அவரது பெற்றோர்கள், உறவினர்கள் குல் பைசாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி கூடுதல் வரதட்சணை கேட்டு குல் பைசாவை பர்வேசும் அவரது குடும்பத்தினரும் தாக்கியுள்ளனர்.

அதன் பின்னரும் ஆத்திரம் அடங்காத பர்வேசின் குடும்பத்தினர் வீட்டில் இருந்த ஆசிட்டை குல் பைசாவின் வாயில் ஊற்றி வலுக்கட்டாயமாக குடிக்க வைத்துள்ளனர்.

ஆசிட் குடித்ததில் படுகாயமடைந்த குல் பைசா அலறி துடித்த நிலையில் அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மொராதாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குல் பைசாவுக்கு கடந்த 17 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூரில் ரிதன்யாவின் தற்கொலை ரணமே இன்னும் தீராத நிலையில், அதன் பின்னர் தமிழகத்தில் மட்டுமே 10க்கும் மேற்பட்ட வரதட்சணைத் தொடர்பான தற்கொலைகள் அரங்கேறியுள்ளன.

நேற்று முன் தினம், ஒரு வயது குழந்தையை விட்டு விட்டு, பெங்களூருவில் இளம்பெண் ஒருவர் வரதட்சணைக் காரணமாக தற்கொலைச் செய்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

வவுனியா நெளுக்குளத்தில் சர்வதேச நீதிகோரிய கையெழுத்துப் போராட்டம்!!

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனிதப் புதைகுழிகளிக்கானதும் நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட உபதலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன் தலைமையில் நேற்று(29.08.2025) காலை 8.30 மணிமுதல் 10 மணிவரையில் வவுனியா நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்றது.

தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து சர்வதேச நீதி கோரிய மேற்படி கையெழுத்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் பா.பாலேந்திரன், உறுப்பினர்களான கே.தர்சினி, வீ.ஶ்ரீதரன், குகன் ஆகியோருடன் கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு தமது எழுத்துமூலமான எதிர்ப்பினை தெரிவித்து கோரிக்கையை வலுப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இருந்து வவுனியா சென்ற பேருந்து கோர விபத்து : இருவர் பலி!!

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் இன்று (29.08.2025) அதிகாலை ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், கனரக டிப்பர் ஒன்றும், மோட்டார் சைக்கிளும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கிளிநொச்சி தருமபுரம் பகுதியை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.