இரண்டரை வயது குழந்தை ஆற்றில் விழுந்து உயிரிழப்பு!!

பலாங்கொடை, வேவல்வத்த வெள்ளவள பகுதியில் இரண்டரை வயதுடைய ஆண் குழந்தை ஒன்று ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை, தனது வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்குள்ள சிறிய ஆற்றில் தவறி விழுந்துள்ளது. தவறி விழுந்த குழந்தையை உறவினர்கள் உடனடியாக மீட்டு, பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குழந்தையின் உடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ் கடற்கரையில் அடையாள தெரியாத சடலம் : இந்திய மீனவருடையதா?

யாழ்ப்பாணம் பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

எனினும் கரையொதுங்கிய உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை யாழில் கரையொதுங்கிய உடலம் இந்தியா இராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 6ஆம் திகதி நடுக்கடலில் தவறி விழுந்து மாயமான மீனவர் உடலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தமிழ்நாடு தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கைதான பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை!!

கொழும்பு கோட்டை பொலிஸாரிடம் சரணடைந்த பின்னர் இன்று (24.12.2025) காலை கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கோட்டை காவல்நிலையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தபோது, பொலிஸாருக்கு இடையூறு விளைவித்ததாக இராமநாதன் அர்ச்சுனா மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே இந்த வழக்கில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்றைய வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.

இதனையடுத்து , அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் பிடியாணை பிறப்பித்திருந்தது.

கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த மாணவன்!!

களுத்துறை, பதுரலிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 19 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்தி செல்ல முயற்சித்த மாணவன், ​​கெப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவனும் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த இளைஞனும் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் போது மாணவன் உயிரிழந்துள்ளார் என பதுரலிய பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த மாணவர் பதுரலிய, இலுக்பத, டெல்கிட் வத்த பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் திலான் என்ற 17 வயதுடையவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பதுரலிய பொலிஸ் பிரிவின் கலுகல சந்திக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பதுரலிய பிரதேச செயலகத்திற்கு சொந்தமான கெப் வண்டி, பதுரலியவிலிருந்து அகலவத்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 21 வயதுடைய நவராஜா கசுன் காயமடைந்து மேலதிக சிகிச்சைக்காக நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெப் வண்டியின் சாரதியும் பதுரலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவுறுத்தலொன்றினை விடுத்துள்ளது.

அனர்த்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் தங்கள் வசிப்பிடத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தால், உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் முகவரியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அது குறித்து தங்கள் பாடசாலை அதிபர் அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவிக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி கூறியுள்ளார்.

இந்த நோக்கத்திற்காக 011 2784537 அல்லது 011 2788616 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனர்த்தம் காரணமாக முன்னர் ஒதுக்கப்பட்ட பரீட்சை மையத்தில் ஒரு மாணவர் பரீட்சை எழுத முடியாவிட்டால், அவர்கள் முன்கூட்டியே திணைக்களத்திற்கோ அல்லது பாடசாலை அதிபருக்கோ தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, மாணவரின் புதிய வசிப்பிடம் அல்லது மாவட்டத்திற்கு அருகில், குறிப்பாக பேரிடர் சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாற்று பரீட்சை நிலையத்தினை ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும்.

இந்த ஏற்பாடு தனியார் பரீட்சார்த்திகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேரிடர் சூழ்நிலை காரணமாக விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அல்லது தேசிய அடையாள அட்டைகள் சேதமடைந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ உடனடியாக உதவியை பெறுமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தகைய சந்தர்ப்பங்களில், வலயக்கல்வி அதிகாரி மற்றும் பாடசாலை அதிபரால் சான்றளிக்கப்பட்ட புகைப்படங்களை சமர்ப்பிப்பதன் மூலம் பரீட்சைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மரக்கறி விலையில் பாரிய மாற்றம் : உச்சம் தொட்ட கறிமிளகாய் விலை!!

நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்றைய தினம் ஏனைய மரக்கறிகளை விட, கறிமிளகாயின் விலை அதிகரித்துக் காணப்பட்டது.

இதன்படி, நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் கறிமிளகாய் ஒரு கிலோகிராம் 1,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், நுவரெலியா, தம்புள்ளை மற்றும் கெப்பட்டிபொல ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களில் கறிமிளகாய் ஒரு கிலோகிராம் 1000 முதல் 1,200 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் இன்றைய நிலவரப்படி, கறிமிளகாய் ஒரு கிலோ 1000 முதல் 1,050 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், குடை மிளகாய் ஒரு கிலோ 1,400 முதல் 1,500 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், கோவா ஒரு கிலோ 220 முதல் 250 ரூபாய்க்கும், கரட் ஒரு கிலோ 200 முதல் 230 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 350 முதல் 380 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கணவரை கொன்று கிரைண்டரில் அரைத்த மனைவி!!

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் காணாமல் போன காலணி வியாபாரி ராகுல், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி ரூபி மற்றும் அவரது காதலன் கௌரவ் சேர்ந்து இந்த கொலையை செய்தது விசாரணையில் அம்பலமானது. நவம்பர் 18 முதல் காணாமல் போனதாக நாடகமாடிய ரூபி, 20-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாரும் அளித்திருந்தார்.

27 நாட்களுக்குப் பிறகு வடிகாலில் பாலிதீனில் சுற்றப்பட்ட சிதைந்த உடல் மீட்கப்பட்டபோது வழக்கு திருப்பம் கண்டது.

கை மீது ‘ராகுல்’ என பச்சை குத்தப்பட்டிருந்ததன் மூலம் அடையாளம் உறுதி செய்யப்பட்டது. வீட்டில் இருந்த இரும்புக் கம்பி, ரத்தக் கறைகள் மற்றும் அக்கம்பக்கத்தினரின் தகவல்கள் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தின.

காதல் உறவை கணவன் கண்டுபிடித்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராகுல் கொல்லப்பட்டதாக ரூபியும் கௌரவமும் ஒப்புக்கொண்டனர்.

இரும்புக் கம்பியால் தாக்கி கொன்ற பின், உடலை கிரைண்டரில் துண்டுகளாக்கி பல இடங்களில் வீசியுள்ளனர். இந்த கொடூரத்திற்கு உதவிய அபிஷேக் உட்பட மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி!!

கொழும்பு – கொள்ளுப்பிட்டி லிபர்டி பிளாஸாவுக்கு அருகில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (22.12.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், தீ பரவலில் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறிருப்பினும் தீ பரவலின் போது எந்தவித உயிர் சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மனைவியின் உயிரைக் காப்பாற்ற கணவன் செய்த வீர செயல் : இலங்கையில் நடந்த சம்பவம்!!

கணவர் ஒருவர் முதலையுடன் சண்டையிட்டு மனைவியின் உயிரை காப்பாற்றிய சம்பவம் ஜா-எலா, போதிராஜாராம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஜா-எலா, போதிராஜாராம பகுதியில் வசிக்கும் ஒரு பெண் ஒருவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாய் சாலையில் பாத்திரங்களைக் கழுவும்போது எதிர்பாராத விதமாக முதலையால் பிடிக்கப்பட்டுள்ளார்.

அந்த நேரத்தில் உடனடியாகச் செயல்பட்ட அவரது கணவர், தனது உயிருக்கு ஆபத்தை மீறி முதலைகளுடன் போராடி தனது மனைவியின் உயிரைக் காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மனைவியை உயிரை காப்பாற்ற தனது உயிரை துச்சமாக எண்ணி செயற்பட்ட குறித்த நபரின் இந்த துணிச்சலான செயல் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது.

யாழில் சேற்றில் புதையுண்டு பரிதாபமாக பலியான இளைஞன்!!

யாழ்ப்பாணம், புத்தூர் கிழக்குப் பகுதியில் உள்ள கடல்நீரேரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் சேற்றில் புதையுண்டு உயிரிழந்துள்ளார். ஆவரங்கால் பகுதியை சேர்ந்த கமலநாதன் சாரூஜன் (வயது 25) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கடல்நீரேரியில் ​நேற்று (22.12.2025) மீன் முடித்துக்கொண்டிருந்த இளைஞன் திடீரென சேற்றில் புதைந்து காணாமல் போயுள்ளார்.

அதனை அவதானித்தவர்கள் கடல்நீரேரியில் இறங்கி இளைஞனை தேடிய நிலையில், நீண்ட போராட்டத்தின் பின் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக அச்சுவேலி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

தொடருந்து பயணிகளுக்கு நற்செய்தி : யாழ் தேவி சேவை வழமைக்கு திரும்பியது!!

புனரமைப்புப் பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வடக்கு மார்க்கத்தின் தொடருந்து சேவைகள் தற்போது முழுமையாக மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான ‘யாழ் தேவி’ தொடருந்து சேவை நாளை (புதன்கிழமை) முதல் வழமை போல் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து காலை 6:40 க்குப் புறப்படும் தொடருந்து, பிற்பகல் 2:32 க்குக் காங்கேசன்துறை நிலையத்தைச் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மறுமார்க்கமாக, காங்கேசன்துறையிலிருந்து காலை 10:30 க்குப் புறப்படும் தொடருந்து, மாலை 6:54 க்குக் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும் என தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

வவுனியாவில் கிரவல் அகழ்விற்கு எதிராக மக்கள் போராட்டம்!!

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடைசெய்ய கோரி பொதுமக்களால் நேற்று (22.12.2025) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் போராட்டத்தை ஆரம்பித்த மக்கள் அங்கிருந்து 3 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள செட்டிகுளம் பிரதேச செயலகம் வரை பேரணியாக சென்று அங்கு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பொதுமக்கள், கிரவல் அகழ்வால் எமது கிராமமே குன்றும் குழியுமாக உள்ளது. எனவே கிராம மக்களின் விருப்பத்திற்கு மாறாக கிரவல் அகழ்விற்கான அனுமதியை வழங்குவதை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.

அடக்கு முறை

அத்துடன் சுற்றுச் சூழலையும் வளங்களையும் அழித்து அதற்கு எதிராக குரல் எழுப்பும் மக்களின் மீது அடக்கு முறைகளை பிரயோகிக்க வேண்டாம்.

கிரவல் அகழ்விற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை கைது செய்யாதே. எமது கிராமத்தை காப்பாற்ற அரச அதிகாரிகள் முன்வர வேண்டும் என தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ”இயற்கையை அழிக்காதீர்கள், சட்டவிரோத கிரவல் அகழ்விற்கு தடை விதியுங்கள், எமது கிராமத்தின் வளங்கள் சுரண்டலுக்கு மாத்திரமா’ போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களை எழுப்பியிருந்தனர்.

உரிய நடவடிக்கை

போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் போராட்டக்காரரின் கோரிக்கை தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடியதுடன், அவர்களது மனுவையும் பெற்றுக் கொண்டார்.

அத்துடன் இது தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை அரசாங்கத்தால் எடுக்கப்படும் எனவும் இதன்போது அவர் உறுதியளித்திருந்தார்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர் : அயல்வீட்டில் ஏற்பட்ட மோதல்!!

புத்தளம், மாரவில பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறினால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மாரவில பொலிஸ் பிரிவின் டங்கன்னாவ பகுதியில் நேற்று மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் டங்கன்னாவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராகும்.

அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றம் தொடர்பாக 43 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பிய நாட்டிலிருந்து இலங்கை வந்த தம்பதிக்கு அதிர்ச்சி கொடுத்த மர்மநபர்கள்!!

நெதர்தலாந்தில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்த வயதான தம்பதியிடம் மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த தம்பதியிடமிருந்து 500 டொலர், 500 யூரோ மற்றும் 30,000 இலங்கை ரூபாய் திருடிய குற்றச்சாட்டில் பொலன்னறுவை பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனுராதபுரம் மற்றும் திருகோணமலைக்கு சுற்றுலா சென்றுவிட்டு 18 நெதர்லாந்து நாட்டவர்கள் பொலநறுவையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.

ஹோட்டலில் தங்கியிருந்த 75 முதல் 85 வயதுக்குட்பட்ட வெளிநாட்டு தம்பதியினர், நேற்று முன்தினம் காலை தங்கள் சுற்றுலா வழிகாட்டிக்கு பணம் செலுத்துவதற்காக தங்கள் கைப்பைகளைத் திறந்த போது, ​​

500 டொலர், 500 யூரோ மற்றும் 30,000 இலங்கை ரூபாய் காணாமல் போனதாக கண்டுபிடித்ததாக பொலன்னறுவை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

தங்கள் கைப்பைகளில் இருந்த டொலர்கள் மற்றும் யூரோக்கள் உள்ளிட்ட பணம் காணாமல் போனது தொடர்பாக தங்களுடன் வந்தவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய சக வெளிநாட்டவர்களுடன் மேற்கொண்ட விசாரணையின் போது பணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலன்னறுவை மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க மற்றும் பொலநறுவை பொலிஸ் கண்காணிப்பாளர் பிரகதி அபேசிங்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.

திருட்டு குறித்து முறைப்பாடு செய்தி வெளிநாட்டு தம்பதி முறைப்பாட்டின் நகலுடன் பொலன்னறுவை விட்டு வெளியேறியதாக விசாரணையை நடத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை!!

அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு மற்றும் பாதுகாப்பான புகலிடத்திற்கான தேவை அதிகரிப்பதால் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெள்ளியும் இந்த ஏற்றத்தில் இணைந்து எப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பாட் கோல்ட் XAU ஒரு அவுன்ஸ் 4,391.92 டொலர் ஆக 1.2வீதம் உயர்ந்து 4,391.92 டொலர் ஆகவும், ஸ்பாட் சில்வர் XAG 2.7வீதமாக உயர்ந்து 69.23டொலர் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.

1979 க்குப் பிறகு அதன் மிகப்பெரிய வருடாந்த இலாபத்தை இது அடையத் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளியின் விலை, கடந்த ஆண்டை விட இன்றுவரை 138வீதமாக உயர்ந்துள்ளது. வலுவான முதலீட்டு வரவுகள் மற்றும் தொடர்ச்சியான விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக, தங்கத்தை விட வெள்ளி மிகவும் உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையிலும் எதிர்பாராத அளவு

இதேவேளை, இலங்கையிலும் இன்றையதினம்(23.12.2025) தங்கவிலை எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதால், இலங்கை தங்கச் சந்தையிலும் விலைகள் வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 8,000 ரூபாயால் அதிகரித்து 352,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 325,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்தவகையில் இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 40,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் : வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு!!

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் கொழும்பு, களுத்துறை, பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.