அனுராதபுரத்தில் முன்னணி பாடசாலை ஆசிரியர் ஒருவர் கணித ஆய்வகத்தில் 12 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, அனுராதபுர பொலிஸ் தலைமையகத்தின் பாடசாலை மற்றும் மகளிர் பணியகத்தால் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவரை அனுராதபுர தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய, அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
திரப்பன அத்துங்கமையில் வசிக்கும் திருமணமான ஆசிரியர் ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 12 வயது சிறுவனின் பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர்.
சந்தேகநபரான ஆசிரியர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் ரஞ்சித் ராஜகருணா, தனது கட்சிக்காரர் மீதான குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, எந்தவொரு பிணை நிபந்தனைகளின் அடிப்படையிலும் அவரை விடுவிக்குமாறு வழக்கறிஞர் நீதிமன்றத்தைக் கோரினார். எனினும் முன்வைக்கப்பட்ட தகவல்களை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் சந்தேக நபரை 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
தனது 2 வயது குழந்தையை, மகள் என்றும் பாராமல் தண்ணீர் தொட்டிக்குள் வீசி கொடூரமாக கொன்ற தந்தையைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கோட்டையூரைச் சேர்ந்தவர் பாண்டி செல்வம் (25). இவரது மனைவி வனிதா (24). இருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகும் நிலையில், பார்கவி என்ற பெண் குழந்தை இருந்தது.
பாண்டி செல்வம், கப்பலூர் சிட்கோவில் தனியாருக்கு சொந்தமான ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலைபார்த்து வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தம்பதியருக்கிடையே தகராறு ஏற்பட்ட நிலையில்,
கணவரை பிரிந்த வனிதா, கப்பலூரில் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. குழந்தை அவருடன் இருந்து வந்த நிலையில் பாண்டி செல்வம் வேலைக்கு வரும்போது குழந்தையை பார்த்துச் சென்று வந்துள்ளார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு காலையில் குழந்தையை அழைத்துக் கொண்டு பாண்டி செல்வம் சென்றார். தான் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே செல்போனில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதை பார்த்த குழந்தை பார்கவி அழுதுள்ளது. குடும்ப தகராறில் ஆத்திரத்தில் இருந்த பாண்டி செல்வம், அழுத குழந்தையை அடித்து அருகே இருந்த தண்ணீர் தொட்டிக்குள் வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது குழந்தை பார்கவி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்தது. உடனே பாண்டி செல்வம், குழந்தையின் உடலை சாக்கு மூட்டையில் கட்டினார்.
பின்னர் ஆலையில் உள்ள ஒரு எந்திரத்தின் அடியில் மறைத்து வைத்துள்ளார். பின்னர் எதுவும் தெரியாதது போல் பாண்டிச்செல்வம், திருமங்கலம் காவல் நிலையத்துக்கு சென்று குழந்தையை காணவில்லை என புகாரளித்தார்.
இந்நிலையில் ஆலையில் பணியாற்றும் ஒருவர் நேற்று எந்திரத்தை இயக்க முயன்ற போது, அருகே அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. உடனடியாக இது குறித்து திருமங்கலம் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அப்பகுதியில் சோதனை செய்தபோது எந்திரத்தின் ஒரு பகுதியில் ரசாயன மூட்டைக்குள் குழந்தையின் உடல் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து மீட்டனர்.
இது குறித்து பாண்டி செல்வத்திடம் போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில் தனது குழந்தையை கொலை செய்ததை பாண்டி செல்வம் ஒப்புக் கொண்டார். இதையடுத்து பாண்டி செல்வத்தை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் மிகக் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அங்கு பஸ்தார், பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களில் பல நதிகள் நிரம்பி வழிகின்றன. அதே நேரத்தில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநில அரசு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பஸ்தார் மாவட்டத்தில் கங்கர் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய கால்வாயை ஒரு கார் கடக்க முயற்சித்த போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காருடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் அந்த தம்பதியினர், 2 மகள்களுடன் பலியாகினர்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த காரில் பயணித்தது தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. அதன்படி இறந்தவர்கள் ராஜேஷ்குமார் (வயது 43), அவரது மனைவி பவித்ரா(40), அவர்களது 2 மகள்கள் சவுஜன்யா (7) மற்றும் சவுமியா (4)
இதில் ராஜேஷ்குமார், ராய்ப்பூரில் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வந்தார். அவர் குடும்பத்தினருடன் பஸ்தாருக்கு காரில் சுற்றுலா சென்றிருந்தார். நேற்று முன்தினம் கால்வாயில் வெள்ளத்தை கடக்க முயன்றபோது அவர்களது காரை வெள்ளம் இழுத்துச்சென்றது.
அன்று மாலையில் கால்வாயில் நீர்மட்டம் குறைந்தபிறகு 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது சடலங்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள பாரண்டப்பள்ளி கிராமத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
வடக்கு மாகாண ஆளுநரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் , பிரதி அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோரின் தலைமையில், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வவுனியா மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை (26.08.2025) இடம்பெற்றது.
மாவட்டச் செயலரின் வரவேற்புரையை தொடர்ந்து, பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தனது ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.
காணி வழங்கல் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு அது தொடர்பில் ஆராயப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதனையடுத்து, பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதிக்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், ரிசாட் பதியுதீன், ம.ஜெகதீஸ்வரன், கே.காதர் மஸ்தான், து.ரவிகரன், ஐ.முத்து மொஹமட் ஆகியோரும்,
தவிசாளர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், மாவட்டச் செயலக நிர்வாக அலுவலர்கள், பொலிஸார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இலங்கை சாரணர் சங்கத்தின் வவுனியா மாவட்ட கிளையின் சாரணர் அணித்தலைவர்களுக்கான 03 நாள் வதிவிட தலைமைத்துவ பயிற்சி பாசறை வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் 22.08.2025 (வெள்ளிக்கிழமை) தொடக்கம் 24.08.2025 (ஞாயிற்றுக்கிழமை) வரை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
மாவட்ட ஆணையாளர் தலைமையில் இடம்பெற்ற தலைமைத்துவப் பயிற்சியில் வவுனியா மாவட்டத்திலுள்ள 14 பாடசாலைகளிலிருந்து 169 சாரணர் மாணவர்கள் பங்குபற்றியுள்ளதுடன் வவுனியா மாவட்ட சாரணர் சங்கத்தினர், உதவி மாவட்ட ஆணையாளர்கள், சாரணர் பொறுப்பாசிரியர்களும் பங்குபற்றியிருந்தனர்.
சாரணர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் தலைமைத்துவம், வன்முறையற்ற தொடர்பாடல், தொழில் வழிகாட்டல், ஆளுமை வழிகாட்டல் போன்ற பல்வேறு திறன்களை மேம்படுத்துகின்றன.
கொழும்பு – திருகோணமலை பிரதான வீதியில் தம்புள்ளை, போஹோரன் வெவ பகுதியில் ஐந்து வாகனங்கள் மோதி கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கொழும்பிலிருந்து தம்புள்ளை நோக்கிச் சென்ற மூன்று வாகனங்கள் எதிர் திசையில் சென்ற லொறி மற்றும் கார் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காலி, வக்வெல்ல பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்து முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று புதன்கிழமை (27) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த தந்தையும் மகனும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கூடிய கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று (26.08) உத்தரவிட்டார்.
அத்துடன் சந்தேக நபருக்கு 20,000 ரூபாய் நீதிமன்றக் கட்டணமும் செலுத்த வேண்டும் என்றும், அந்தத் தொகையை செலுத்தத் தவறினால், அவருக்கு மேலும் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அதேநேரம் பாதிக்கப்பட்டவருக்கு 300,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறும், அந்தத் தொகையை அவர் செலுத்தத் தவறினால், அவருக்கு மேலும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி மேலும் உத்தரவிட்டார். வெல்லம்பிட்டி கல்முல்ல பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமியாக இருந்த பாதிக்கப்பட்டவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் மார்கம பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்ததாகவும், பாடசாலை முடிந்ததும் வேலை தேடி புறக்கோட்டைக்குச் சென்ற போது,
சந்தேக நபர் 2012 மார்ச் 4 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாள் ஒன்றில் கடுவலை வெலிவிட்ட பகுதியில் உள்ள ஒரு உறவினரின் வீட்டிற்கு பாதிக்கப்பட்ட சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பன்னிபிட்டிய பிரதேசத்தில் சிறுத்தையின் பற்கள் மற்றும் நகங்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் திங்கட்கிழமை (25) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கச்சத்தீவை ஒருபோதும் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்கமாட்டோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனை கூறினார்.
“கச்சத்தீவை மீட்டு தமிழக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு பிரதமர் மோடி தீர்வை வழங்க வேண்டும்” என, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், நடிகர் விஜய் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் விஜித ஹேரத் பதில் அளித்தார்.
தற்போது தென்னிந்தியாவில் தேர்தல் காலம் ஏற்பட்டுள்ளதால், தமது அரசியல் தேவைகளுக்காக ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துக்களை கூறிவருவதாக அவர் கூறினார்.
அவ்வாறான அரசியல் கருத்துக்களை பொருட்படுத்த வேண்டிய தேவையில்லை எனவும், இராஜதந்திர மட்டத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்த முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கச்சத்தீவை, இந்தியாவுக்கு நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னையில் காதலன் கண் எதிரிலேயே வீட்டின் மாடியில் இருந்து குதித்து காதலி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்,
இந்த விவகாரத்தில் போலீசார் விசாரணையில் அடுத்தடுத்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
சென்னை ராயபுரம் புதுமனை குப்பம் பகுதியை சேர்ந்தவர் தேவேந்தரின் மகள் ஹர்ஷிதா (23). இவர் வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த தர்ஷன் (26) என்ற வாலிபரை காதலித்தார்.
இருவரும் பட்டதாரிகள் மற்றும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில், இணையதளம் மூலமாக அறிமுகமாகி காதலாகி செல்போனில் தொடர்ந்து பேசி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.
ஆரம்பத்தில் காதலுக்கு எதிர்ப்பு இருந்த போதிலும் கடந்த பிப்ரவரி மாதம் இருதரப்பு பெற்றோர்களும் பேசி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
நவம்பர் மாதம் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் தினமும் இருவரும் செல்போனில் பேசிக் கொண்டதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணத்துக்கு தடை ஏற்பட்டது.
இளம்பெண் ஹர்சிதா திருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதில் பல்வேறு நிபந்தனைகளை விதித்ததாக தெரிகிறது. தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று முக்கியமான நிபந்தனை விதித்துள்ளார். இதற்கு தர்ஷன் முடியாது என்று தெரிவித்ததாக தெரிகிறது. இதையொட்டி காதலர்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹர்ஷிதா கடந்த சனிக்கிழமை இரவு காதலன் தர்ஷனை அவரது வேப்பேரி வீட்டில் சந்தித்துள்ளார். உறவினர்கள் முன்னிலையில் இருவரும் சமாதானமாக பேசி உள்ளனர்.
ஆனால் ஹர்ஷிதா தனது நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. தர்ஷனும் அவரது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளார். இந்நிலையில், ஹர்ஷிதா திடீரென்று மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வேப்பேரி உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் ராஜூ ஆகியோர் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினார்கள். தர்ஷன் மீது வழக்குப்பதிவு செய்து, தர்ஷனைக் கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
போலீஸ் விசாரணையில் தர்ஷன் கொடுத்த வாக்குமூலம் வெளியாகி உள்ளது. அதில், “எங்கள் குடும்பம் கெளரவமானது. அப்பா தொழிலதிபர். அண்ணன் ஆடிட்டராக உள்ளார்.
ஹர்ஷிதா மாற்றுத் திறனாளியாக இருந்த போதும் அவரோடு உள்ள காதல் உண்மையானது. அதனால் தான் எனது பெற்றோரிடம் பேசி திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தேன். நிச்சயதார்த்தத்துக்கு பிறகு ஹர்ஷிதாவின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது.
நாங்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் திருமணத்துக்கு பின்னர் தனிக்குடித்தனம் போக வேண்டும் என்றும், எனது பெற்றோரிடம் பேசக் கூடாது என்றும் ஹர்ஷிதா நிபந்தனை விதித்தார்.
நான் கிழித்த கோட்டை தாண்டக் கூடாது என்றார். அவரை பற்றி புகழ்ந்து வாட்ஸ் அப்பில் 1,000 வார்த்தைகளை பதிவிட வேண்டும் என்றார். அவருடைய அனுமதி இல்லாமல் செல்போனில் கூட யாரிடமும் நான் பேசக் கூடாது என்றார்.
ஏற்கனவே அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடைசியில் நின்று போய் உள்ளது. ஹர்ஷிதாவின் செயல்கள் தான் அதற்கு காரணமாக இருந்துள்ளது. இந்த சம்பவத்தை என்னிடம் மறைத்து விட்டார்கள்.
ஹர்ஷிதா, எதற்கெடுத்தாலும் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுவார். சமீபத்தில் தற்கொலை செய்து கொள்ள போவதாக வீட்டை விட்டு சென்று விட்டார். அவரது தாயார் என்னை உதவிக்கு அழைத்தார்.
நான் சமாதானம் பேசி ஹர்ஷிதாவின் தற்கொலை முயற்சியை தடுத்து காப்பாற்றினேன். தற்கொலை மனப்பான்மையுடன் அவர் செயல்பட்டது எனக்கு அச்சத்தை உண்டாக்கியது.
இது குறித்து அவரது பெற்றோரிடமும் பேசினோம். திருமணத்தை நிறுத்துவது என்று இருதரப்பிலும் பேசி முடிவெடுக்கப்பட்டது. இது பற்றி பேசுவதற்காகவே ஹர்ஷிதா எங்கள் வீட்டுக்கு வந்தார்.
ஆனால் பேசிக் கொண்டிருந்த போதே மாடிக்கு ஓடினார். நானும் அவரை பின்தொடர்ந்து துப்பட்டாவை பிடித்து இழுத்து காப்பாற்ற முயற்சித்தேன். இது அவரது உறவினர்களுக்கும் தெரியும்.
ஆனால் என்னால் அவரை காப்பாற்ற முடியவில்லை. எங்கள் குடும்பத்தை பிடிக்காத சிலர் போலீசாரிடம் என்னை பற்றி தவறாக தகவல் கொடுத்து விட்டனர்.
ஹர்ஷிதாவின் சாவுக்கு நான் காரணம் இல்லை. இது அவரது பெற்றோருக்கே நன்கு தெரியும். எனவே இறுதியில் உண்மை வெல்லும்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையில் ஹர்ஷிதா தற்கொலை செய்ய மாடிக்கு ஓடியதும், அவரை காப்பாற்ற தர்ஷன் பின்தொடர்ந்து ஓடுவதும், துப்பட்டாவை பிடித்து இழுப்பதும் போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.
தர்ஷனின் குடும்பத்துக்கு எதிரான நபர்கள் அவரது அண்ணன் புகைப்படத்தையும் இணையதளத்தில் தவறாக வெளியிட்டு வைரலாக்கி உள்ளனர்.
ஹரியானா மாநிலத்தில், தோழியின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துக் கொண்டு விட்டு, பல்கலைக்கழக விடுதி அறைக்கு திரும்பிய 3ம் ஆண்டு மாணவி பூமிகா தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம், குருகிராமில், தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பூமிகா (23) பி.டெக் 3ம் ஆண்டு படித்து வந்தார்.
பூமிகா பல்கலைக்கழக விடுதியில் தங்கி இருந்தபடியே தினமும் கல்லூரி வகுப்புகளுக்கு சென்று பயின்று வந்தார். இந்நிலையில் விடுதியில் நேற்று முன் தினம் இரவு மற்றொரு மாணவியின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பூமிகா, அதன்பின்னர் விடுதியில் தனது அறைக்கு திரும்பிய நிலையில், அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூமிகா தனது அறைக்கு சென்று வெகுநேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் பூமிகாவின் அறைக்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது அறை கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த மாணவிகள் இது குறித்து விடுதி காப்பாளரிடம் கூறினர்.
விரைந்து சென்ற விடுதி காப்பாளர், பூமிகாவின் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பூமிகா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் விரைந்து சென்ற போலீசார், பூமிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, பூமிகாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர் விசாவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளுக்காக பல ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்து, பலரிடம் சுமார் 300 மில்லியன் ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குருநாகல் மேலதிக நீதவான் மகேஷனி அமுனுகம உத்தரவிட்டார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக மாணவர்களை அனுப்பும் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் என்று கூறப்படும் அமல் உதயங்க வன்னிநாயக்க என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்படுவதாக கூறி பணம் பெற்ற பல நபர்கள் தொழில் பெறவில்லை என்ற முறைப்பாட்டை தொடர்ந்து, சந்தேக நபர் குருநாகல் பிரிவு மோசடி புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த தம்பதியினர் நேற்று (26) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி தெரிவித்தார்.
கினிகத்தேன, பொல்பிட்டிய – களுகல பகுதியல் உள்ள வீதி சோதனை சாவடியில் வைத்தே தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்கா நகரை சேர்ந்த 25 வயது சந்தேக நபரும், அவரின் 20 வயதான கர்ப்பிணி மனைவியும் தர்கா நகரில் இருந்து நுவரெலியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.
இந்நிலையில் களுகல பகுதியில் உள்ள பொலிஸ் வீதி சோதனை சாவடியில் தம்பதியினர் சோதனைக்குட்படுத்தப்பட்டவேளை, அவர்கள் மறைத்து வைத்திருந்த போதைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 50 கிராம் ஹெரோயின் என்பனவே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. ஈசி கேஸ்மூலம் பணத்தை பெற்ற பின்னர் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் போதைப்பொருளை வைத்துவிட்டு அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சந்தேக நபர் தெரியப்படுத்துவார் என தெரியவந்துள்ளது.
இவர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் விநியோகம் தொடர்பில் பல பொலிஸ் நிலையங்களில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி தடுப்பு காவல் உத்தரவைப் பெற்று, இவர்களிடம் போதைப்பொருள் வாங்கும் நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குருணாகல் குளியாப்பிட்டியில் இன்று காலையில் சம்பவித்த கோர விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்லப்பிட்டி பகுதியில் பாடசாலை வேன் மற்றும் லொறி நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்களில் பாடசாலை வேன் ஓட்டுநரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் 13 பாடசாலை மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை, பெலியத்தை பிரதேசத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பெலியத்தை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (26.08) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெலியத்தை, நிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த இளைஞனின் உறவினர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து கத்தி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.