வவுனியாவை வந்தடைந்த மடு மாதாவின் திருச்சொரூப பவனி!!

மடு தேவாலய மாதாவுக்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு மாதாவின் திருச்சொரூபம் மறைமாவட்ட பங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படும் திருப்பயணம் இன்று (23.01.2024) வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தினை வந்தடைந்தது.

1924ஆம் ஆண்டு கொழும்பு ஆயரும் அவருடன் இணைந்து இந்தியாவிலிருந்து வந்த ஆயரும் மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்ட தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு 25ஆவது ஆண்டு யூபிலியை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட பாதுகாவலியாம் மடு அன்னையின் திருச்சொரூபம் மன்னார் மறைமாவட்ட பங்கு தளங்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழமையான நிகழ்வாகும்.

இதற்கமைய இந்த ஆண்டும் மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்டு 100ஆவது ஆண்டு யூபிலியை முன்னிட்டு மடு அன்னையின் திருச்சொரூபம் மடுவிலிருந்து மன்னார் , வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் மறை மாவட்டங்களின் பங்குத் தளங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

அந்த வகையிலேயே மடு மாதாவின் திருச்சொரூபம் இன்று (23.01.2024) வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தினை வந்தடைந்தது. குறித்த பவனியினை வரவேற்கும் முகமாக வரவேற்பு நடனம், பட்டாசுகள் , பேனர்கள், ஒளி அமைப்புக்கள் என பல்வேறு விதங்களின் பவனிக்கு வரவேற்பளிக்கப்பட்டது. இன்றைய திருச்சொரூப பவனியில் நுற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் 7 ஆண்டுகளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்!!

வவுனியா ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக 2529 வது நாட்களாக சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டம் ஆரம்பித்து 7வருடங்கள் நிறைவுற்ற நிலையில் (2529 ஆவது நாள்) இன்று (23.01.2024) மதியம் 12 மணியளவில் அவர்கள் சுழற்சி முறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக உள்ள கொட்டகையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எங்கே எங்கே எமது உறவுகள் எங்கே? வேண்டும் வேண்டும் எமது உறவுகள் வேண்டும், உறவுகளை மீட்க சர்வதேசம் வேண்டும் போன்ற கோசங்களை எழுப்பியவாறும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளைத் தாங்கியவாறு கதறி அழுது போராட்ட களத்தில் தமது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 30 நிமிடங்களாக இடம்பெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் 30க்கு மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் தனியார் – இ.போ.ச பேரூந்து சாரதி, நடத்துனர்களுக்கிடையே மோதல் : நால்வர் வைத்தியசாலையில்!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (23.01.2024) அதிகாலை இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சாரதி நடத்துனருக்கும், தனியார் பேரூந்து சாரதி, நடத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பேரூந்து தரிந்து நின்றுள்ளது.

இதன் போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தும் வருகை தந்து புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக தரிந்து நின்றுள்ளது.

இதன் போது இரு பேரூந்தின் ஊழியர்களுக்கிடையே நேரசூசி தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன் இ.போ.ச பேரூந்தின் லைட் உடைக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இ.போ.ச, தனியார் பேரூந்து ஆகிய இரு பேரூந்தின் நடத்துனர், சாரதி என நால்வரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் இரு பேரூந்தினையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றமையுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!!

கட்டுநாயக்க நோக்கி பயணத்துக் கொண்டிருந்த நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பேலியகொடை இடமாறலில் பல வாகனங்கள் நேற்று(22.01.2024) பணம் செலுத்தும் கருமபீடத்திற்கு அருகில் வரிசையில் நின்றுள்ளன.

இதன்போது பின்னால் வந்த கெப் ரக வண்டியொன்று அந்த கார்களுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் போது கார்கள் பலத்த சேதமடைந்துள்ளதுடன்,யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இரு பேரூந்துகள் மோதி கோர விபத்து!!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை – குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இரண்டு பேருந்துகள் அல்லைப்பிட்டியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலரும் படு காயமடைந்துள்ளதாகவும் அம்புலன்ஸ் வண்டிகள் அப்பகுதிக்கு செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து சம்பந்தமான முழுமையான விபரம் விரைவில்..

எலி கடித்ததால் பெரும் அவதி : மன உளைச்சலுக்கு ஆளான பெண் எடுத்த விபரீத முடிவு!!

தூத்துக்குடியில்..

எலி கடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு குணமடையாமல் அவதிப்பட்டு வந்த செவிலியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி திருச்செந்தர் சாலையில் உள்ள மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.

இவரது மகள் குருவம்மாள் (வயது 32). அவருக்கு திருமணமாகவில்லை. இவர் கொரோனா பாதிப்பின் போது ஒப்பந்த அடிப்படையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தற்காலிக செவிலியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குருவம்மாளை எலி கடித்துள்ளது.

இதனால், உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவர் சரியாக குணமடையாததால் மனமுடைந்த நிலையில் இருந்தார். பின்னர் சொந்த ஊருக்கு வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இருப்பினும், அவர் தொடர்ந்து ஒவ்வாமையால் அவதிப்பட்டார். இதனால் மன வேதனையடைந்த குருவம்மாள் கடந்த 18ம் தேதி வீட்டில் கத்தியால் கழுத்து மற்றும் கைகளை திடீரென அறுத்து கொண்டார்.

இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குருவம்மாள் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து குருவம்மாளின் தாய் வசந்தி (53) அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

வெளிநாடுகளில் இருந்து மரக்கறி இறக்குமதி : அமைச்சர் அறிவிப்பு!!

மரக்கறி..

மரக்கறி விலைகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் வெளிநாடுகளில் இருந்து மரக்கறிகளை இறக்குமதி செய்ய தயார் என வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளருக்கும் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, உணவு பாதுகாப்பு கொள்கைக்குழு இது தொடர்பில் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்த அவர், ஒரு மாதத்திற்குள் காய்கறிகளின் விலை குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மரக்கறிகளை இறக்குமதி செய்தால் தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்க முடியும் என கூறியுள்ளார். இதேவேளை,

கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்திருந்த மரக்கறிகளின் விலைகள் நுவரெலியா மத்திய பொருளாதார நிலையத்தில் சடுதியாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் ரசம் : இப்படியும் இலகுவாக செய்யலாம்!!

உடல் எடையை குறைக்க..

நெல்லிக்காயைப் பயன்படுத்தி ரசம் செய்யலாம் தெரியுமா? நெல்லிக்காய் கண்கள், முடி, தோல், இதயம் மற்றும் செரிமான அமைப்புக்கு பயனளிக்கும் வகையில் இருக்கிறது.

இதில் வைட்டமின் சி இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது. ஆகவே நெல்லிக்காய் வைத்து எப்படி தினசரி சாப்பிடும் உணவில் ரசமாக சேர்த்துக்கொள்ளலாம் என தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் பேஸ்ட் – 1 கப்

மிளகு – 1/2 தேக்கரண்டி

தக்காளி – 1

எண்ணெய் – 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

பூண்டு – 5 பல்

சிவப்பு மிளகாய் – 1 தேக்கரண்டி

சீரகப் பொடி – 1/2 தேக்கரண்டி

உப்பு

கடுகு – 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை

கொத்தமல்லி இலைகள்

இஞ்சி

தண்ணீர் – 2கப்

ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, சிவப்பு மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் மஞ்சள்தூள் சேர்க்கவும். பின் மிக்ஸியில் பூண்டு, சீரகப் பொடி, மிளகு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து அதில் நெல்லிக்காய் பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின்னர் தண்ணீர் சேர்த்து 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும். இறுதியாக கொதித்தவுடன் கொத்தமல்லி இலைகள் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கினால் சூப்பரான நெல்லிக்காய் ரசம் தயார்!

வீதியில் விளையாடிய சிறுவன் : பறந்து சென்ற பந்தை எடுக்க சென்றபோது நேர்ந்த விபரீதம்!!

சென்னையில்..

கிரிக்கெட் விளையாடும்போது நீர் சேமிப்பு தொட்டியில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற ஏழு வயது சிறுவன் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சின்னமலை எல்.டி.ஜி சாலையை சேர்ந்தவர் லூர்து ராஜ் – மோனிஷா தம்பதி.

லூர்து ராஜ் ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், இவர்களுக்கு ஆருண் ராஜ் என்ற வயது சிறுவனும், 2 வயது பெண் பெண் குழந்தையும் உள்ளனர். இதில் 7 வயது ஆருண் ராஜ் என்ற சிறுவன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த சூழலில் நேற்று மாலை சிறுவன் ஆருண் ராஜ் பள்ளியை முடித்து விட்டு வழக்கமாக வீடு திருப்பினார். பிறகு தெருவில் தனது சக நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அந்த பந்தானது அருகே பூட்டி கிடந்த வீட்டின் உள்ளே விழுந்துள்ளது.

இதனால் சிறுவன் பந்தை எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தின் மீது ஏறி காம்பவுண்டுக்குள் குதித்து சென்றுள்ளார். அப்போது பந்து அங்கிருந்த நீர் சேமிப்பு தொட்டியில் கிடந்ததை கண்ட சிறுவன், அதனை எடுக்க முயன்றபோது தவறி உள்ளே விழுந்தார்.

இதைத்தொடர்ந்து சிறுவனால் மூச்சு விட முடியாமல் திணறிய நிலையில், சுமார் 6 அடி நீர் சேமிப்பு தொட்டியில் சிக்கிய சிறுவன் ஆருண் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நீ்ண்ட நேரமாகியும் சிறுவன் வராத காரணத்தினால் பயந்துபோன நண்பர்கள், இதுகுறித்து ஆருண் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், உள்ளே சென்று பார்க்கையில் சிறுவன் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி படுத்தினர்.

இதையடுத்து இந்த நிகழ்வு குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பூட்டி இருந்த அந்த வீட்டின் உரிமையாளர் யார்? எனவும் நீர் சேமிப்பு தொட்டியை மூடாமல் விட்டது ஏன்? எனவும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளவத்தையில் பொலிஸாரால் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன்!!

வெள்ளவத்தையில்..

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் பொலிஸார் குழுவொன்று அராஜகமான முறையில் இளைஞன் ஒருவரை தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (21.01.2024) இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தை பசல் பேட்ஸ் வீதிக்கு வந்த பொலிஸார், அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை அகற்றும்படி உரிமையாளரான கோவில் பூசகரிடம் கோரியுள்ளனர்.

இதன்போது முறையற்ற வார்த்தைகளை பொலிஸார் பிரயோகித்துள்ளனர். இதன்போது அங்கு வந்த பூசகரின் மகன் பொலிஸாரிடம் இது தொடர்பில் வினவியமைக்கு, ஆத்திரமடைந்த பொலிஸ் அதிகாரிகள், அந்த இளைஞரை கொடூரமாக தாக்கி முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாத்தறை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்!!

மாத்தறையில்..

மாத்தறை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் தொடர்பில் தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது நண்பரின் கையடக்கத் தொலைபேசி உபகரணக்கடையின் உரிமையாளரின் ஆசனத்தில் கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டிருந்த மிந்திக அளுத்கமகே என்ற 22 வயதுடைய இளைஞன் துரதிஷ்டவசமாக சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த மிந்திக அளுத்கம என்ற இளைஞன் மூன்று சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் இளையவர் எனவும் மூத்த சகோதரர் விமானப்படை அதிகாரி எனவும் மற்றுமொரு சகோதரர் கொரியாவில் பணிபுரிவதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மிந்திக அளுத்கம கொரிய வேலைவாய்ப்பிற்காக இன்னும் சில நாட்களில் கொரியாவிற்கு செல்லவிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உடுகாவ பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மிந்திக தனது நண்பரின் கடைக்கு சென்றிருந்த போதே துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார். கடையின் உரிமையாளரான உயிரிழந்தவரின் நண்பர் தொலைபேசி அழைப்பிற்காக வெளியே வந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கடையின் உரிமையாளர் பிரதேசத்தில் உள்ள மதுபானக் கடையொன்றில் இருந்து 21 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர்கள் தம்மை தாக்கியதாக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக உரிமையாளர் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மனுவைத் தாக்கல் செய்த பின்னர் தனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பல தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், நீதவானின் விசாரணையில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், அவரது உயிருக்கு உள்ள அச்சுறுத்தல்களை கருத்திற்கொண்டு அவரை பொலிஸ் காவலில் வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கொலையாளிகள் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள், இலக்கத் தகடுகளின்றி, தலைக்கவசங்களுடன் மாத்தறையில் சதுப்பு நிலத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கையில் பதற்றம் : அரசியல்வாதி உட்பட ஐவர் சுட்டுக்கொலை!!

தென்னிலங்கையின் பெலியத்தை நகரில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பிரபல அரசியல்வாதியொருவர் உயிரிழந்துள்ளார்.

அபே ஜனபல பக்‌ஷய எனப்படும் கட்சியின் தலைவரான சமன் பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சம்பவ இடத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த பொதுத் தேர்தலின் போது சிங்கள பௌத்த வாக்குகளை குறிவைத்து களமிறங்கிய இக்கட்சி, கடைசியில் ஒரு தேசியப் பட்டியலைப் பெற்றுக் கொண்டது.

சர்ச்சைக்குரிய பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் இக்கட்சியின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.

எனினும் குறித்த தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் சமன் பெரேரா ஆகியோருக்கு இடையில் கடும் சர்ச்சையும் மோதல்களும் ஏற்பட்டிருந்தது.

பின்னர் குறித்த கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக அதுரலியே ரத்ன தேரர் நாடாளுமன்றம் சென்றிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை பெலியத்தை நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கட்சியின் தலைவர் சமன் பெரேரா , இனந்தெரியாதவர்களின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த இன்னும் நால்வரும் குறித்த துப்பாக்கிச் சூட்டின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

முதல் இணைப்பு : தென்னிலங்கையில் சற்று முன்னர் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை – பெலியத்தை பகுதியில் இன்று காலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவ இடத்தில் 4 சடலங்கள் காணப்படுவதுடன், ஒருவரின் சடலம் தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8.30 மற்றும் 8.40 க்கு இடையில், பச்சை நிற கெப் வண்டியில் வந்த குழுவொன்று வெள்ளை டிபென்டர் பயணித்த 5 பேரை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு : இலக்கு தவறியதில் பரிதாபமாக பலியான இளைஞன்!!

மாத்தறையில்..

மாத்தறை – தெலிஜ்ஜவில பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், இலக்கு வைக்கப்பட்ட நபர் அல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், “மாத்தறை – மாலிம்படை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலிஜ்ஜவில சந்தியில் நேற்று (20.01.2024) இரவு 08 மணி அளவில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிரிவி கருவியிலும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் தொலைபேசி உபகரணக் கடைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதன்போது குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 22 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தெனிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மிந்திக அளுத்கமகே எனவும், அவர் தனது கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்வதற்காக கடைக்கு வந்துள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட்டதுடன், கடையின் உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மாத்தறை பிரதான நீதவான், அவரை பொலிஸ் காவலில் எடுத்து பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.” என்றார்.

யாழில் கதிரையில் அமர்ந்தவாறு பறிபோன உயிர்!!

யாழில்..

யாழ் – பாசையூர் பகுதியில் வீட்டில் கதிரையில் உட்கார்ந்திருந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் (20.01.2024) உயிரிழந்துள்ளார். இதன்போது பாசையூர் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் யாக்கோலின் குலசிங்கம் (வயது 46) என்ற என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று (20.01.2024) காலை 09.00 மணியளவில் கதிரையில் அமர்ந்திருந்தார். இந்நிலையில் காலை 9.30 மணியளவில் அவரது சகோதரி அவரை எழுப்ப முற்பட்டவேளை அவர் உயிரிழந்து காணப்பட்டார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் சிறுவனுக்கு எமனாகிய ஊஞ்சல்!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் கழுத்தில் ஊஞ்சல் கயிறு சுற்றி இறுகியதில் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இன்றையதினம்(20.01.2024) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது 10 வயதுடைய பிரசாத் தனேஷ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் வீட்டில் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்தில் ஊஞ்சல் கயிறு சுற்றி இறுகியுள்ளது. இதனையடுத்து அவரை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே குறித்த சிறுவன் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்த பகுதி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண் பொலிஸ்.. ஒரு குழந்தைக்கு தந்தையான அதிசயம்!!

இந்தியாவில்..

அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய பெண் ஒருவர், குழந்தை ஒன்றிற்கு தந்தையான ஆச்சரிய நிகழ்வொன்று இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. மஹாராஷ்ட்ராவிலுள்ள Rajegaon என்னும் கிராமத்தில் பிறந்தவர் லலிதா (Lalita Salve) என்ற பெண்.

அவர் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றிவருகிறார். 2013ஆம் ஆண்டு தனது உடலில் வித்தியாசமான மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்ட லலிதா, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அப்போது, அவரது உடலில் Y குரோமோசோம் இருப்பது தெரியவந்தது. அதாவது, பெண்கள் உடலில் இரண்டு X குரோமோசோம்கள் இருக்கும் நிலையில், ஆண்கள் உடலில் X மற்றும் Y குரோமோசோம்கள் இருக்கும். ஆக, தான் ஆண் தன்மை உள்ளவர் என தெரியவரவே, 2018 முதல் 2020 வரை, மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து ஆணாக மாறினார் லலிதா, இப்போது அவர் பெயர் லலித் (Lalit Salve).

2020ஆம் ஆண்டு, சீமா என்ற பெண்ணைத் திருமணமும் செய்துகொண்டார் லலித். இந்நிலையில், பெண்ணாக இருந்து ஆணாக மாறிய லலித், ஒரு குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். திங்கட்கிழமை, அதாவது, ஜனவரி 15ஆம் திகதி, லலித், சீமா தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பெண்ணாகப் பிறந்து ஆணாக மாற நான் பயணித்த பாதை பல சிக்கல்கள் உள்ளதாக இருந்தது. ஆனால், பலர் எனக்கு ஆதரது தந்தார்கள். என் மனைவி சீமா குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என ஆசைப்பட்டாள். தந்தையானதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, எங்கள் குடும்பமும் மகிழ்ச்சியில் திழைக்கிறது என்கிறார் லலித்.