புதன்கிழமைகளில் ரயில் சேவையும் மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு புதன்கிழமையை பொது விடுமுறையாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பின்னரே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேவேளை நாடாளுமன்ற அமர்வுகள் நாளை இடம்பெற மாட்டாது என அறிவிக்கபப்ட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை முன்னிட்டு இதுவரை மின்வெட்டுக்கான வாய்ப்புகள் இல்லை. எதிர்காலத்தில் மின்வெட்டு செய்யப்பட வாய்ப்புள்ளதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் மின்சாரத்தைத் துண்டிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் இதுவரையில் மின்வெட்டு எதுவும் அமல்படுத்தப்படவில்லை என்றாலும் எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது ஒரு மணிநேரம் கூட மின்வெட்டு செய்யாமல் நாம் நிலைமையை நிர்வகித்து வருகிறோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய ஒரு காலம் வரவும் வாய்ப்புள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புக்களை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, மார்ச் 18, 2026 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட விடுமுறையானது அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்திருந்தார்.
அதன்படி அனைத்து அரச பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற சேவைகளும் இந்த விடுமுறை காலப்பகுதியில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவையற்ற பயணங்கள் மற்றும் எரிபொருள் விரயத்தைக் குறைக்கும் நோக்கில், அனைத்து அரச நிகழ்வுகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், தனியார் நிறுவனங்களும் இதேபோன்ற விடுமுறை அல்லது வேலை நேர ஒழுங்கமைப்புகளை பின்பற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுகாதாரத் துறை (வைத்தியசாலைகள்) துறைமுகங்கள் நீர் வழங்கல் சேவை சுங்கத் துறை போன்ற துறைகளுக்கு இந்த விசேட விடுமுறை அறிவிப்பானது பின்வரும் அத்தியாவசிய சேவைகளுக்குப் பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே மேலதிக வகுப்புகள் தொடர்பான குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் புதன்கிழமை விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிறப்பு அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதே நேரத்தில், புதன்கிழமைகளில் கல்வி வகுப்புகளை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறை சேவைகள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை விடுமுறை எனவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் நேற்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார்.
அத்துடன், அது ஞாயிற்றுக்கிழமை மீண்டும் புதுப்பிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், கியூ.ஆர். குறியீடு முறைமையை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டின் எரிபொருள் நுகர்வை 20 வீதத்தினால் குறைக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இலங்கையில் தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக 4,800 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 4,045 மெட்ரிக் தொன் பெட்ரோல் நுகரப்படுகிறது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசைகளை உடனடியாகக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த கியூ.ஆர். முறைமை அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
மார்ச் மாதத்தில் கிடைக்கவுள்ள மற்றும் தற்போது கையிருப்பிலுள்ள எரிபொருளின் அடிப்படையில், எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரம் வரை போதுமான எரிபொருள் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
நாட்டில் கியூ.ஆர். முறைமையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் அளவு, பல்வேறு தொழில்சார் தேவைகளைக் கருத்தில் கொண்டு விரைவில் திருத்தப்படும் என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
தற்போது வழங்கப்பட்டுள்ள எரிபொருள் ஒதுக்கீடு ஒரு ஆரம்ப கட்டமே எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சில துறையினரின் தேவைகள் ஆராயப்பட்டு புதிய சுற்றுநிரூபம் வெளியிடப்படும்.
மருத்துவர்கள் மற்றும் சுகாதார சேவை ஊழியர்கள், விவசாயத் துறையில் ஈடுபடுபவர்கள், வாடகை வாகனங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடும் வாகனங்கள் என்பன இதன்போது கவனத்தில் கொள்ளப்படும்.
உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த ஒதுக்கீட்டு முறை குறித்து அச்சமடைய வேண்டாம். அடுத்த சில நாட்களில் இதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா, ஒமந்தை பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த தாயின் சகோதரரான குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு வவுனியா, ஓமந்தை, பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக அதே இடத்தைச் சேர்ந்த சிறுமியின் தாயின் சசோகதரான 47 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்து பி அறிக்கை மூலம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி வழக்கு தொடரப்பட்டது.
தொடர்ந்து சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
குறித்த வழக்கு அரச சட்டவாதி ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் சந்தேக நபரான வவுனியா ஓமந்தை பகுதியில் வசித்து வந்த 47வயது நபர் இரு குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டார்.
குறித்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக திகதிடப்பட்டிருந்த நிலையில் எதிரியின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு குறித்த தீர்ப்பினை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியது.
நாட்டில் உள்ள அனைத்து தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களும் டீசல் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளதாக பெட்ரோலிய பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அதன் பொதுச்செயலாளர் பந்துல சமன் குமார இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷவும் இதன்போது தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இருப்பினும், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமாரகே, அடுத்த மாத இறுதி வரை நிறுவனத்திடம் டீசல் இருப்பு இருப்பதாக கூறியுள்ளார்.
டீசல் ஆர்டர்களை கட்டுப்படுத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்து, எரிபொருளை தொடர்ந்து வழங்குவதாக லங்கா ஐஓசி நிறுவனம் உறுதியளித்துள்ளது.
அதன்படி, நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை பராமரிக்க லங்கா ஐஓசி மற்றும் அரசாங்கம் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே. ரகு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற சர்வதேச யோகா கூட்டமைப்பின் (International Union Yoga Federation) உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை அணி மிகச்சிறந்த திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்தப் போட்டியில் இரண்டாம் இடத்தை (Runner-up) வென்றுள்ளது.
இலங்கை யோகா கூட்டமைப்பின் சார்பில் பங்கேற்ற வீரர்கள், சர்வதேச தரத்திலான போட்டிகளில் பல தங்க பதக்கங்களை வென்று அசத்தினர்.
இறுதிப் புள்ளிப் பட்டியலின் அடிப்படையில், இலங்கை அணி இரண்டாம் இடத்திற்கான வெற்றிக் கேடயத்தைக் கைப்பற்றி நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது.
இந்த போட்டியில் திருகோணமலையை சேர்ந்த பிராங்க் சந்தோஷி (வயது 7) என்ற சிறுமி தங்கப்பதக்கம் வென்று தனது பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இந்த வெற்றியானது இலங்கையில் யோகா கலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியில் கொக்கரல்ல பகுதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்தில் 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பிக்கப் ரக வாகனமும், எதிரே வந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தின் போது பிக்கப் ரக வாகனத்தில் பயணித்த 13 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன், அந்தச் சிறுமியின் தாயார் மற்றும் மாமா ஆகிய இருவருமே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்தவர்கள் உடனடியாக அப்பகுதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் வருடாந்தம் சுமார் 13 ஆயிரம் பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவதுடன், கடந்த ஆண்டில் மட்டும் இந்நோயினால் 200 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தொற்றுநோய்ப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் துஷானி தம்பேரரா எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த ஆண்டில் மட்டும் 11 ஆயிரத்து 585 பேர் எலிக்காய்ச்சல் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,800 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
குறிப்பாக இரத்தினபுரி, காலி, கேகாலை, மொனராகலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
லெப்டோஸ்பைரா எனும் பக்டீரியாவினால் இந்நோய் ஏற்படுகின்றது. தொற்றுக்குள்ளான எலிகள் மற்றும் ஏனைய பாலூட்டி விலங்குகளின் சிறுநீர் மூலமே இந்தப் பக்டீரியா பரவுகின்றது.
பக்டீரியா பரவியுள்ள நீர்நிலைகள், சதுப்பு நிலங்கள் மற்றும் வயல் நிலங்களில் நடமாடுவது அல்லது வேலை செய்வதன் மூலம் மனிதர்களுக்கு இந்நோய் தொற்றுகின்றது.
தற்போது கொழும்பு, கண்டி உள்ளிட்ட நகர்ப்புறங்களில் முறையற்ற விதத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால், எலிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நகர்ப்புறங்களிலும் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளது.
பொதுவாக 20 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்பட்டாலும், அண்மைக்காலமாகச் சிறுவர்களும் இத்தொற்றுக்கு உள்ளாவது அவதானிக்கப்பட்டுள்ளது.
சிறுபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலும், பெரும்போக அறுவடைப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலும் விவசாயிகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். வயல் நிலங்கள் மற்றும் கால்வாய்களில் இறங்குவோர் உரிய சசுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.” – என்றார்.
மட்டக்களப்பு – காத்தான்குடி கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ. பி அழக கோன் தெரிவித்தார்.
குறித்த மர்மப் பொருள் நேற்று மாலை கரையொதுங்கியுள்ளது. சுமார் 25 அடி நீளமும், 4 ஆடி உயரமும் கொண்ட இந்த மர்மப்பொருள் ரெஜிபோர்மினால் காணப்படுகிறது.
இந்நிலையில் கப்பல் தரைதட்டும்போது அதன் பாதுகாப்பிற்கு பயன்படும் தடுப்பு ஆணையாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த மர்ம பொருளை மக்கள் சென்று பார்வையிட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த மர்மப்பொருள் தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
போதைப்பொருள் விற்று மனைவியின் பெயரில் ஜா-எல, வெலிகம்பிட்டிய பகுதியில் கொள்வனவு செய்யப்பட்ட 400 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று மாடி வீட்டை 7 நாட்களுக்கு தடை செய்வதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நேற்று (13) நடவடிக்கை எடுத்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் நெருங்கிய சகாவும், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ‘பட்டுவத்த சாமர’ என்ற மனோஜ் சுரங்க என்பவரின் மவியின் சொகுசு வீடே முடக்கப்பட்டுள்ளது.
மூன்று சந்தர்ப்பங்களில் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு
படுவத்த சாமர என்பவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் இந்த வீட்டை கொள்வனவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வௌியானதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டை இரண்டு மாதங்களுக்கு முன்பு மற்றொரு தரப்பினர் வாடகைக்கு எடுத்து முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அங்கு தங்கியிருந்த 9 முதியவர்களும் 4 தாதியர்களும் நேற்று அவ்விடத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
படுவத்த சாமரவின் மனைவியான சதுரிக்கா வீரசூரிய இதற்கு முன்னர் இந்த வீட்டில் வசித்து வந்த நிலையில், மூன்று சந்தர்ப்பங்களில் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இறுதியாக கடந்த 7ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சொத்து தொடர்பாக மேல் நீதிமன்றில் விடயங்களை அறிக்கையிட்டு, அதன் பின்னர் தடை உத்தரவை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பல மாவட்டங்களில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை கடும் வெப்பமான வானிலை நீடிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன் காரணமாக, கடும் வெயிலுக்கு மத்தியில் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பாடசாலை விளையாட்டு வீரர்களுக்கு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டில் நிலவும் இடைப் பருவக்காற்று காலநிலை காரணமாக, கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் நாட்டின் பல பகுதிகளில் தற்போது கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது.
இதன் விளைவாக மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலையானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தை எட்டியுள்ளது.
வெப்பச் சுட்டெண்ணின்படி, இந்த மதிப்பானது 45 இற்கும் அதிகமானது என்பதோடு, இது ‘அதிக அவதானம்’ செலுத்த வேண்டிய மட்டமாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5020 டொலர் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 80.61 அமெரிக்க டொலர்களாக விற்பனையாகிறது.
அந்த வகையில் பார்க்கும் போது வெள்ளியின் விலையும் சுமார் 4 சதவீதம் வரை சரிந்துள்ளதாக தெரியவருகிறது.
அமெரிக்க டொலரின் பெறுமதி சர்வதேச சந்தையில் வலுவடைந்து வருவது மற்றும் பணவீக்கம் தொடர்பான கவலைகள் தங்கத்தின் விலையில் இந்த சரிவை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கொழும்பு செட்டியார்தெருவின் இன்றைய தினத்திற்கான தகவல்களின் படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 406000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 375500 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த மார்ச் 11 ஆம் திகதி அன்று பூரா ஹடி என்று அழைக்கப்படும் ஆகாஷ் என்பவருக்கும் சீமா என்ற அவரது காதலிக்கும் திருமணம் நடைபெற இருந்தது.
திருமண ஏற்பாடு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்த சூழலில், திருமண மண்டபத்திற்கு வந்த காவல்துறையினர் மணமேடையில் இருந்த மணமகன் ஆகாஷ் கைது செய்து அழைத்து சென்றனர்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண் உடனடியாக காவல்நிலையத்திற்கு விரைந்து, மண்டபத்தில் விருந்தினர்கள் காத்துக்கொண்டுள்ளனர். திருமண சடங்குகள் முடிந்து தாலி கட்டும் வரை அவரை அனுமதியுங்கள். அதன் பின்னர் கைது செய்து கொள்ளுங்கள் என காவல்துறையினரிடம் அழுதபடியே கெஞ்ச துவங்கியுள்ளார்.
ஆனால் காவல்துறையினர் அதற்கு சம்மதிக்கவில்லை. காவல்நிலையத்தில் வைத்தே திருமண உறுதிமொழிகளை மேற்கொள்ள அனுமதி கேட்டுள்ளார். அதற்கு காவல்துறை ஒப்புக்கொள்ளவில்லை. சீமாவும், ஆகாஷும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆகாஷின் கூட்டாளிகளான ராஜம்ஜி தாக்கூர், அபிஷேக் உபாத்யாய், அபிஷேக் மீனா, நீரஜ் காங்கே மற்றும் அமித் ஓஸ்வால் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஆகாஷ் மீது கொலை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ள 31 வழக்குகள் உள்ளது. சட்டவிரோத கும்பல்” என்ற பெயரில் அழைக்கப்படும் இந்தக் கும்பல் 2018 முதல் போபாலில் செயல்பட்டு வருகிறது.
வாஜ்பாய் நகரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்தக் குழுவில் இருந்தனர், அவர்களில் பலர் விசுவாசம் மற்றும் அடையாளத்தின் அடையாளமாக தங்கள் கழுத்தில் “illegal” என்ற வார்த்தையை பச்சை குத்தியுள்ளனர்.
2024 ஆம் ஆண்டில் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷ், 18 மாதங்கள் சிறையில் இருந்த அவர், 4 மாதங்களுக்கு முன்பே ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
26 வயது பூசாரியை கடத்தி ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அடைத்து வைத்து தாக்கி ரூ.8 லட்சம் செலுத்துமாறு மிரட்டினர். பணம் செலுத்தாவிட்டால் என்னுடைய காதலியை துஸ்பிரயோகம் செய்ததாக பொய் புகாரில் சிக்க வைத்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
முதலில் ரூ.50,000 ஆன்லைன் மூலம் செலுத்துமாறும், மீதமுள்ள தொகையை படிப்படியாக செலுத்துமாறும் கூறியுள்ளனர். தனது திருமண செலவிற்காகவே ஆகாஷ் இந்த கடத்தலை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரத்தினபுரி – அயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தூல்கல பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை தூல்கல பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் பெண் ஒருவர் கழுத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடக்கின்றார் என்று அயகம பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், உயிருக்கு போராடிய பெண்ணை மீட்டு அயகம வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த கொலையைச் செய்த சந்தேகநபர்கள் யார்? அல்லது எதற்காக இந்த கொலை செய்யப்பட்டது? என்பது குறித்த எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
தலைமறைவாகியுள்ள சந்தேகநபர்களை கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை அயகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.