இலங்கையில் உயிரிழந்தவர் 7 நாட்களின் பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்த அதிசயம்!!

இலங்கையில்..

கம்பளையில் பிரேத பரிசோதனையின் பின்னர் அடக்கம் செய்யப்பட்ட நபர் 7 நாட்களின் பின்னர் தனது தாய் மற்றும் உறவினர்களுடன் கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கம்பளை பேருந்து நிலையத்தில் மாரடைப்பால் ஒருவர் உயிரிழந்த நிலையில், சடலத்தை ஏற்றுக்கொள்ள எவரும் முன்வராததால் சடலம் இரண்டு மாதங்களாக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், இறந்தவர்களின் உறவினர்கள் ஒரு குழுவை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.உயிரிழந்தவரின் உறவினர்கள் என அடையாளம் காணப்பட்ட தாயும் சகோதரரும் கம்பளை வைத்தியசாலைக்கு வந்து சடலத்தை பிரேத பரிசோதனை செய்தனர்.


சகோதரர் மற்றும் உறவினர்கள் சடலத்தை அடையாளம் கண்டதையடுத்து, கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சடலத்தை விடுவித்ததுடன், குழுவினர் சடலத்தை மேரிவிலவத்த பிரதேசத்திற்கு எடுத்துச் சென்று மத அனுஷ்டானங்களை மேற்கொண்டு 2 நாட்களுக்கு பின்னர் அடக்கம் செய்தனர்.

சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டவர் வீட்டிற்கு வந்துள்ளார். “அம்மா, நான் வீட்டிற்கு வந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார். “நீங்கள் கம்பளையில் இறந்துவிட்டீர்கள் என மக்கள் வருத்தப்பட்டனர். நாங்கள் உங்களை வீட்டிற்கு கொண்டு வந்து அடக்கம் செய்தோம்” என தாயார் குறிப்பிட்டுள்ளார்.

“இல்லை.. அம்மா நான் கம்பளைக்கு போகவில்லை. “நான் நாவலப்பிட்டியில் இருந்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் தாயும், சகோதரனும், உறவினர்களும் இறந்து விட்டதாக நினைத்து புதைத்தவர் தொடர்பில் ஆராய்வதற்காக மரண விசாரணை அதிகாரியை சந்தித்தனர்.

சுமார் எழுபதாயிரம் ரூபா இறுதிச்சடங்கிற்கு செலவானதாக இக்குழுவினர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் சம்பவத்தை விபரித்துள்ளனர். அதற்கமைய, மரண விசாரணை அதிகாரியின் அறிவித்தலின் பேரில் புதைக்கப்பட்ட நபர் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்ததாக கருதப்படும் நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகவும், அதன் பின்னர் திருமணமான தனது மகள்களின் வீடுகளில் தங்கி அந்த வீடுகளுக்கு வெளியில் பல்வேறு வேலைகளை செய்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

எனினும் சமீபகாலமாக நாவலப்பிட்டி பகுதியில் உள்ள தனது மகளின் வீட்டில் தங்கியிருந்த அவர், நாவலப்பிட்டி நகரிலேயே அதிக நேரத்தைக் கழித்ததால், நீண்ட நாட்களாக மகளின் வீட்டுக்குச் செல்லவில்லை என கூறப்படுகின்றது.

வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு!!

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் யானை ஒன்றின் சடலம் இன்று (27.11.2023) மீட்கப்பட்டது.

பன்றிக்கெய்தகுளம் பகுதியில் உள்ள காணியொன்றில் யானையின் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த காணியின் உரிமையாளர் இது தொடர்பில் ஒமந்தை பொலிஸார் மற்றும் கிராம சேவையாளருக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை பார்வையிட்டதுடன், வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியிருந்தனர். குறித்த யானை மூன்று நாட்களிற்கு முன்பாகவே உயிரிழந்திருக்கலாம்என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

டிசம்பர் மாதத்திற்குள் ஐம்பது வீதத்தால் அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை!!

மரக்கறிகள்..

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டில் மரக்கறிகளின் விலை ஐம்பது வீதத்தால் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தற்போதைய விலைகளுடன் ஒப்பிடுகையில், இவ்வாறு எதிர்வரும் மாதம் ஐம்பது வீதத்தால் மரக்கறிகளின் விலை அதிகரிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,காலநிலை மாற்றம் காரணமாக மரக்கறிகளின் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது.

அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் மரக்கறி விலைகள் வழமைக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்!!

யாழில்..

யாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தமிழகத்தின் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர். தலைமன்னார் பகுதியில் நேற்று (26.11.2023) ஞாயிற்றுக்கிழமை இரவு படகு மூலம் புறப்பட்டவர்கள் இவ்வாறு அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக 150,000 ரூபா பணம் படகுக்கு கொடுத்து தாம் இலங்கையில் இருந்து வந்ததாக விசாரணையில் அவர்கள் தெரிவித்துள்ளனர். அகதிகளாக தஞ்சமடைந்த 7 பேரையும் கடற்படையினர் மண்டபம் பகுதிக்கு அழைத்துச் சென்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு தஞ்சம் அடைந்தவர்களில் தாய், தந்தை உள்ளடங்களாக 5 பிள்ளைகளும் அடங்குகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணை இந்திய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

விபத்தில் சிக்கி உயிரிழந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவன் : பெற்றோர் செய்த நெகிழ்ச்சி செயல்!!

கம்பஹாவில்..

கம்பஹா – வெயாங்கொடை பிரதேசத்தில் புகையிரத விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த மகனின் உறுப்புகளை தானம் செய்து 5 உயிர்களை காப்பாற்றிய பெற்றோர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயின்ற வெயாங்கொடை, மாலிகதென்ன பிரதேசத்தினை சேர்ந்த 22 வயதான இசங்க என்ற இளைஞனின் உறுப்புகளே இவ்வாறு தானம் செய்யப்பட்டுள்ளது. இவர் கடந்த 13 ஆம் திகதி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பொலன்னறுவை நோக்கிப்புறப்படும் புகையிரதத்தில் ஏறியுள்ளார்.

இதன்போது தெமட்டகொட மற்றும் களனி புகையிரத நிலையங்களுக்கு அருகில் சென்று கொண்டிருந்த போது புகையிரதத்திலிருந்து இசங்க தவறி விழுந்துள்ளார்.

இந்த விபத்தில் சிக்கிய இசங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூளைச்சாவடைந்துள்ளதாக வைத்தியர்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,வைத்தியர்களின் பரிந்துரைப்படி, கடந்த 15 ஆம் திகதி இசங்கவின் உடல் உறுப்புகளால் 5 பேர் வாழவும், 2 பேர் ஒளி காணும் அதிர்ஷ்டமும் பெற்றுள்ளனர்.

உறுப்பு தானம் செய்யும் வாய்ப்பு கிடைப்பது அரிதான தொண்டு எனவும், பிள்ளையின் தவிப்பிற்காக மனதில் இருந்த பெரும் வலி ஓரளவுக்கு குறைந்துள்ளதாகவும், இசங்கவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஆசிய கிண்ண 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் குழாத்தில் சாருஜன் சண்முகநாதன்!!

சாருஜன் சண்முகநாதன்..

இவ்வாண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண போட்டிகளில் இலங்கை குழாமில் சாருஜன் சண்முகநாதன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.டிசம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண போட்டிக்கான இலங்கை அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிநேத் ஜயவாதன தலைமையிலான இலங்கை குழாமில் சாருஜன் சண்முகநாதன் இடம் பிடித்துள்ளார்.கொழும்பு – கொட்டாஞ்சேனை , புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி மாணவனான சாருஜன் சண்முகநாதன் பாடசாலை மட்ட கிரிக்கெட் தொடர்களில் வெளிப்படுத்திய ஆற்றல் செயல்பாடுகள் காரணமாக 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் முதல் தடவையாக கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கை குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவை ஆதர்ஷ நாயகனாக கொண்டுள்ள சாருஜன், அவரைப் போலவே விக்கெட் காப்பு மற்றும் துடுப்பாட்டம் ஆகிய இரண்டையும் திறம்பட செய்து 2022 ஆம் ஆண்டு பாடசாலைகளுக்கான விருது வழங்கும் விழாவில் சிறந்த விக்கட் காப்பாளராக தெரிவு செய்யப்பட்டார்.

மேலும், 2015 ஆம் ஆண்டு பல்லேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில், முன்னாள் கிரிக்கெட் வீரர் டொனி கிரேவினால் ”லிட்டில் சங்கா” என சாருஜன் சண்முகநாதன் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் “மெய்யான தலைவர்கள் பதாதை” : அரசியல்கைதி கைதால் குழப்பம்!!

மெய்யான தலைவர்கள் என அரசுடன் இணைந்து செயற்ப்பட்ட சிலரது புகைப்படங்கள் தாங்கிய பாதாதைகளை அகற்றமுற்ப்பட்ட அரசியல் கைதி செ.அரவிந்தன் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டதுடன், பொலிஸ் பாதுகாப்புடன் பதாதைகள் மீளவும் வைக்கப்பட்டது.

வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு மிக
அருகாமையில் தபால் நிலையத்திற்கு முன்பாக அரசுடன் இணைந்து செயற்ப்பட்ட சிலரது பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மெய்யான தலைவர்கள் என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள குறித்த பதாதைகளில் விடுதலைப் புலிகளால் இவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததாக வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தது.

குறித்த பதாதைகள் மக்கள் மத்தியில் குழப்பநிலையினை ஏற்ப்படுத்தும் என்ற காரணத்தினால் அரசியல் கைதியும் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவருமான செ.அரவிந்தன் குறித்த பகுதிக்கு சென்று இவற்றை இங்கு யார் வைத்தது இதனை உடனடியாக அகற்றுமாறு தெரிவித்தார்.

இதன்போது அங்கிருந்த இருவர் தாங்களே இதனை வைத்ததாகவும் இப்படி செய்யுமாறு சிலர் பணித்தமையால் இதனை செய்தோம். அதனைவிட வேறு எதுவும் தமக்கு தெரியாது என்று கூறியதுடன், பதாதைகளையும் அகற்றினர்.

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த வவுனியா பொலிசார் பதாதைகளை வைத்தவர்களின் மீது நடவடிக்கையினை எடுக்காமல். அரசியல் கைதியான அரவிந்தனை அச்சுறுத்தி, வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்ப்பட்டது.

அத்துடன் குழப்பநிலை முடிவிற்குவந்ததும் குறித்த பகுதியில் போக்குவரத்து பொலிசார் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதுடன், அவர்களின் பாதுகாப்புடன் அகற்றப்பட்ட பதாதைகள் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டது.

வவுனியா பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்!!

இலங்கையின் வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில், வவுனியா பல்கலைக் கழகத்தில் மாவீரர் நினைவு நாள் இடம்பெற்றுள்ளது.

மாவீரர் நாளான இன்று (27.11.2023) மாலை மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை, பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தினர் மாவீரர் நினைவேந்தலை செய்ய அனுமதிக்கவில்லை. இருப்பினும் மாணவர்கள் பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

ஜப்பானில் இலங்கையர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞன் உயிரிழப்பு!!

ஜப்பானில்..

ஜப்பானில் இரண்டு இலங்கையர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த இளைஞனின் சடலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டுள்ளது. மாத்தறை – தெவிநுவர பிரதேசத்தினை சேர்ந்த இசுரு ஷாலிந்த என்ற 26 வயதுடைய இளைஞனே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.

குடும்ப வறுமையின் காரணமாக வெளிநாடு சென்ற குறித்த இளைஞன் கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி ஜப்பானில் இலங்கையர்கள் ஏற்பாடு செய்திருந்த கிரிக்கெட் போட்டியைக்காண நண்பர்களுடன் சென்றுள்ளார். இதன்போது இலங்கையை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஷாலிந்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஷாலிந்தா துரதிஷ்டவசமாக நவம்பர் மாதம் 11 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். ஷாலிந்தவின் சடலம் கடந்த 23 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு தெவிநுவரவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இன்று (26.11.2023) பிற்பகல் குடும்ப மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் இருளில் மூழ்கவுள்ள இலங்கை!!

இலங்கையில்..

பராமரிப்பு பணிகள் காரணமாக, நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலையத்தித்தின் மூன்றாவது மின்பிறப்பாக்கி தற்போது செயலிழந்துள்ளது.

இந்த மின்பிறப்பாக்கி எதிர்வரும் 29 ஆம் திகதி தேசிய மின்கட்டமைப்புடன் இணைத்துக் கொள்ளப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், அண்மையில் செயலிழந்த நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்க மேலும் 14 நாட்கள் தேவைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.

இதனால் மீண்டும் அதிக நேர மின்வெட்டு ஏற்படலாம் என அந்த சபை தெரிவித்துள்ளது.

வவுனியா ஈச்சங்குளத்தில் மாவீரர் தின நிகழ்வுகள்!!

வவுனியா ஈச்சங்குளத்தில் மாவீரர் தினநிகழ்வு இன்று (27.11.2023)இடம்பெற்றது. இதன்போது பிரதான ஈகைச் சுடரினை மாவீரர்களான உமாசங்கர் மற்றும் கஜலட்சுமி ஆகியோரின் தாயாரான வள்ளிப்பிள்ளையினால் ஏற்றி வைக்கப்பட்டது.

ஈச்சங்குளம் மாவீரர்துயிலும் இல்லத்தை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளநிலையில் அதற்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் குறித்த மாவீரர்தின நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது ஆயிரணக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.

குறுக்கே வந்த நாயால் உயிரிழந்த இளைஞன் : வீட்டுக்கே சென்று கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட நாய்!!

கர்நாடகவில்..

நாய் குறுக்கே சென்றதால் விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டுக்கே அந்த நாய் சென்று ஆறுதல் தெரிவித்த நிகழ்வு அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே அனைத்து உயிரினங்களுக்கும் அனைத்து உணர்வுகளும் இருக்கும் என பலரும் கூறுவர்.

அதில் முக்கியமாக நாய்களுக்கு மனிதர்களுக்கு இருக்கும் பல உணர்வுகள் இருக்கும். இதனால் தான் பலரது வீடுகளிலும் நாய்களை செல்ல பிராணியாக, தங்களுடன் தூங்கும் அளவுக்கு ஒரு நண்பர் போல் வளர்த்து வருகின்றனர். அதேபோல் உரிமையாளர் கோபத்தில் இருந்தால் அவர்களை சமாதானம் செய்வதும் நாய்கள் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இங்கு ஒரு நாய், தன்னால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டுக்கே சென்று கண்ணீர் மல்க ஆறுதல் தெரிவித்துள்ள நிகழ்வு அனைவர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் தாவணிக்கரை பகுதியை அடுத்துள்ளது ஹோன்னாளி காசினகெரே என்ற கிராமம். இங்கு திப்பெஷ் (21) என்ற இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வந்தார்.

இந்த சூழலில் கடந்த 16-ம் தேதி இரவு வழக்கம்போல் தனது வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் குறுபரவித்லபுரா என்ற கிராமம் அருகே இந்த இளைஞர் வந்து கொண்டிருந்தபோது, திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது.இதனால் அந்த இளைஞர் நாய் மீது மோதிவிடக்கூடாது என்று தனது பைக்கை சற்று திருப்பிய நிலையில், கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் திப்பெஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில், அருகே யாரும் இல்லாத காரணத்தினால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சில மணி நேரம் கழித்து, இந்த விபத்து குறித்து தெரியவரவே, போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து உயிரிழந்த திப்பெஷின் உடல் இறுதி சடங்கிற்காக அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே அனைத்தும் முடிந்த நிலையில், திபேஷின் உடலுக்கு இறுதி சடங்கு முடிக்கப்பட்டது.இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்னர் விபத்திற்கு காரணமான நாய், உயிரிழந்த திபேஷின் வீட்டுக்கு சென்று கண்ணீரோடு அவரது தாய் முன் நின்றது.

மேலும் தனது கால்களை உயர்த்தி, அவரிடம் மன்னிப்பும் கேட்டது. அந்த நாய் குறித்து விசாரிக்கையில், திபேஷின் விபத்திற்கு காரணம் அது என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த நாய்க்கு ஆறுதல் கூறிய, திபேஷின் தாய், அதையும் தனது வீட்டிலேயே தற்போது வளர்த்து வருகிறார். நாய் குறுக்கே சென்றதால் விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டுக்கே அந்த நாய் சென்று ஆறுதல் தெரிவித்த நிகழ்வு அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 குழந்தைகளை தவிக்கவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!!

வேலூரில்..

மன உளைச்சலில் இருந்த தினேஷின் மனைவி மோனிஷா வீட்டில் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.குடியாத்தம் அருகே மூன்று குழந்தைகளின் தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சாமியார் மலை பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்.

மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் ஒரு பெண் குழந்தை இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.அதே பகுதியைச் சேர்ந்த மாலதி என்பவரிடம் சுமார் 10 மாதங்களுக்கு முன் 30 ஆயிரம் ரூபாய் 15 நாட்களுக்கு பத்து ரூபாய் வட்டி என்று வாங்கியுள்ளனர்.

முப்பதாயிரம் ரூபாய் கடனுக்கு மொத்தம் 70 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அதில் 30,000 செலுத்திய பிறகு பாக்கி 40 ஆயிரம் ரூபாய் தர சொல்லி அவதூறாக பேசி மிரட்டி உள்ளார்.இதனால் மன உளைச்சலில் இருந்த தினேஷின் மனைவி மோனிஷா வீட்டில் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மோனிஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மாலதியை கைது செய்ய கோரி தினேஷின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பளம் கேட்ட இளைஞரின் வாயில் செருப்பை திணித்த பெண் தொழிலதிபர்!!

இந்தியாவில்..

இந்திய மாநிலம், குஜராத்தில் சம்பள பாக்கி கேட்ட 21 வயது பட்டியலின இளைஞரின் வாயில் செருப்பை திணித்த உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.குஜராத் மாநிலம் மோர்பியில் வெளிநாடுகளுக்கு டைல்ஸ் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தை பெண் தொழிலதிபரான விபூதி படேல் நடத்தி வருகிறார். ராணிபா இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதற்காக ராணியா என்ற பெயரில் இன்ஸ்டாவில் செயல்பட்டு வருகிறார்.இவரது, டைல்ஸ் நிறுவனத்தில் ஒக்டோபர் 2 -ம் திகதி நிலேஷ் தல்சானியா என்னும் 21 வயது இளைஞர் பணியில் சேர்ந்தார்.

ஆனால், எதுவும் சொல்லாமல் தல்சானியாவை ஒக்டோபர் -18 ம் திகதி பணியில் இருந்து நீக்கியுள்ளனர்.இந்நிலையில், தான் வேலை செய்த 15 நாள்களுக்கான சம்பளத்தை விபூதி படேலுக்கு தால்சானியா போன் செய்து கேட்டுள்ளார். அதற்கு, தான் ஊர் திரும்பியதும் நேரில் வந்து சம்பளத்தை வாங்கிக் கொள்ளுமாறு விபூதி படேல் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, சகோதரர் மெஹுல் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரான பவேஷ் மக்வானா ஆகியோருடன் நிலேஷ் தல்சானியா அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு, டிடி ரபாரி, ராஜ் படேல், ஓம் படேல், பரீக்ஷித் உள்ளிட்டோர் நிலேஷ் தல்சானியாவை தாக்கியுள்ளனர்.

மேலும், சாதி பற்றி அவதூறாக பேசி தல்சானியாவின் வாயில் செருப்பை திணித்து இது தான் உனக்கு ஊதியம் என விபூதி படேல் கூறியுள்ளார். அதன்பின், எதுவும் செய்ய முடியாததால் நிலேஷ் தல்சானியா அங்கிருந்து கிளம்பியுள்ளார்.பின்னர், உடன் இருந்தவர்களின் கட்டாயத்தின்படி விபூதி படேல் மீது பேரில் மோர்பி காவல்நிலையத்தில் தல்சானியா புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளோடு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இரவு நேரத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த 24 வயது பெண் மருத்துவர் பரிதாபமாக மரணம்!!

சென்னையில்..

சென்னையில், உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சமீப காலமாக உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது அதிகமாகி கொண்டே வருகிறது.சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அன்விதா(24).

இவர், தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய தந்தை பிரவீன் கண் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.இதில் அன்விதா, நேற்று இரவு 7.30 மணிக்கு நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு, அவர் வார்ம் – அப் செய்து கொண்டிருந்த போது திடீரென மயக்கம் வந்துள்ளது.

அப்போது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மருத்துவர் ஒருவர், மயக்கம் அடைந்த அன்விதாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார். ஆனால், அப்போதும் எந்தவொரு அசைவுமின்றி அன்விதா கிடந்துள்ளார்.இதனால், அதிர்ச்சியடைந்த ஜிம் ஊழியர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அன்விதாவை கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போதே சிகிச்சை பலனின்றி அன்விதா உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற்பயிற்சியின் போது பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொம்மையால் இரண்டாவது முறை கர்ப்பமான இளம்பெண்.. அதிர்ச்சியில் இணையவாசிகள்!!

பிரேசில்லில்..

பொம்மையால் இரண்டாவது முறை கர்ப்பமான இளம்பெண்ணின் கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. மேலைத்தேய நாடுகளில் திருமணம் எனும் பெயரில் மரம், ஆவி, பொம்மை, மற்றும் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

அந்த வகையில், பிரேசில் நாட்டி வசிக்கும் Meirivone Rocha Moraes (37) வயதாகும் இளம்பெண்ணொருவர் நீண்ட நாட்கள் தேடியும் கணவராக ஒரு ஆண் கிடைக்க வில்லை என வறுத்தத்தில் இருந்துள்ளார். இந்த விடயம் குறித்து அவரின் அம்மாவிடம் கூறிய போது குறித்து பெண்ணிற்கு கணவராக அவர் ஒரு பொம்மையை கொடுத்துள்ளார்.

Marcelo என்று அழைக்கப்படும் அந்த பொம்மை தன்னுடைய நிஜ கணவனாக ஏற்றுக் கொண்டு அந்த பொம்மையுடன் குறித்த பெண் வாழ்ந்து வருகிறார்.இந்த நிலையில் பொம்மையுடன் குடும்பம் நடத்தி ஆண் குழந்தையை பெற்றெடுப்பது போன்று அலப்பறை செய்துள்ளார்.

இது ஒரு புறம் இருக்கையில், தற்போது இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருப்பதாக குடும்பத்தார் மற்றும் நண்பர்களை வரவழைத்து பார்ட்டி கொடுத்துள்ளார். மேலும் ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை இருப்பதாகவும் அடுத்து ஒரு பெண் குழந்தையை பெற்றுக் கொள்ள காத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய கணவர் தனக்கு துரோகம் செய்து விட்டதாக ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இணையவாசிகளின் மத்தியில் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றது.