ஆசை காட்டி மோசம் செய்த நபர்: கடத்திச் சென்று நையப்புடைத்த யுவதி!!

மோசடி ..

பிரான்சில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி யுவதியிடம் 1.3 மில்லியன் ரூபா மோசடி செய்த நபரைக் கடத்திச் சென்று அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டில் இளம் பெண் உட்பட நால்வரை கட்டான பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டான நாகொட தேவாலய வீதியில் வசிக்கும் 36 வயதுடைய நபரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

28 வயதுடைய பெண்ணை பிரான்ஸுக்கு வேலைக்கு அனுப்புவதாக உறுதியளித்து அவரிடம் இருந்து 1.3 மில்லியன் ரூபாவை இந்த நபர் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அவர் தனது உறவினர்கள் சிலரிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் ஞாயிற்றுக்கிழமை(27) பணத்தை மீள தருமாறு கோரினர்.எனினும் பணத்தை கொடுக்காது சந்தேக நபர் இழுத்தடித்த நிலையில் அவரை கடத்திச் சென்று தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் சந்தேகநபரின் தாயாருக்கு வீடியோ அழைப்பு மேற்கொண்டு, மகனை தாக்குவதையும் காண்பித்துள்ளனர். இதனையடுத்து மகன் கடத்தப்பட்டமை குறித்து தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கடத்தல் சம்பவம் தொடர்பில் பெண் மற்றும் அவரது குழுவினரை கைது செய்துள்ளனர்.

இலங்கையில் பாடசாலை நேரத்தை மாலை 4 மணி வரை நீட்டிக்க யோசனை முன்வைப்பு!!

பாடசாலை..

பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

காலி பகுதியில் கரையோரங்களை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தின் பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரொசான் ரணசிங்க குறிப்பிட்டார்.

வவுனியாவில் கனடா அனுப்புவதாக கூறி 6 பேரிடம் பண மோசடி செய்த நபர் கைது!!

கனடா அனுப்புவதாக கூறி வவுனியாவில் 6 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை வவுனியா பொலிசார் இன்று (31.08) கைது செய்துள்ளனர்.

வவுனியாவின் பட்டக்காடு, திருநாவற்குளம், தவசிகுளம் மற்றும் மல்லாவி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 நபர்களிடம் கனடா அனுப்புவதாக கூறி யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பணம் பெற்றுள்ளார்.

ஒருவரிடம் இருந்து 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 6 பேரிடம் பணம் பெற்றுள்ளதுடன், பிறிதொருவரிடம் 3 பவுண் சங்கிலி ஒன்றையும் பெற்றுள்ளார். எனினும் கனடா அனுப்பாது மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தனர்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கையில் 22 கிமீ கர்ப்பிணி மனைவியை சுமந்து சென்ற கணவனை விட்டு வேறுவொரு நபருடன் ஓடிய பெண்..!

இலங்கையில்..

இலங்கையில் உள்ள ஒரு பிரதேசத்தில் 22 கிலோமீற்றர்கள் கர்ப்பிணி மனைவியை சுமந்துகொண்டு கணவன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இச்சம்பவம் கடந்த 2021 ஆம் ஆண்டு காலி ஹினிதும பிரதேசத்தில் இடம்பெற்றது.

அனால் இப்போது குறித்த மனைவி கணவனையும் குழந்தையும் பிரிந்து வேறுவொருவருடன் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மனைவிக்கு குழந்தை பிறக்க இருக்கும் அந்த நேரத்தில் அன்பான கணவனாக இருந்த குமார, வெள்ளத்தின் நடுவே தன் கர்ப்பிணி மனைவியை தூக்கியப்படி மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்.

அவரது முயற்சிகள் சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமாகி பலரும் புகழ்ந்தனார்.எஸ். எஸ். குமார இலங்கையின் சமூக ஊடகங்களில் அக்காலத்தின் மிகவும் அன்பான கணவர் என்று எல்லோராலும் பாராட்டப்பட்டார்.

உள்ளூர் சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவ கவனிப்பின் அவசியத்தை அவர்களுக்கு அறிவித்தார், ஆனால் வெள்ளம் காரணமாக ஒரு ஆம்புலன்ஸ் கூட அவர்களின் இடத்திற்குச் செல்ல முடியவில்லை.

இவ்வாறான நிலையில் 7 மாத கர்ப்பிணியான மனைவி திடீரென சுகயீனமடைந்துள்ளார். வயிற்றிலுள்ள குழந்தையின் எவ்வித அசைவுகளும் இல்லை என மனைவி குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப சுகாதார அதிகாரியை தொடர்பு கொண்ட போது 5 மணித்தியாலங்களுக்குள் மனைவியை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு குறிப்பிட்டுள்ளனர்.

முழு பிரதேசமும் நீரில் மூழ்கியுள்ளதுடன், பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் மனைவியை வைத்தியசாலைக்கு தூக்கி செல்ல சுரேஷ் முடிவுசெய்தார்.

அதற்கமைய வைத்தியசாலைக்கு மனைவியை தூக்கி சென்று கணவன் சுரேஷ் குமார் அனுமதித்துள்ளார். இதனையடுத்து, மனைவியும் குழந்தையும் ஆபத்தின்றி உயிர் தப்பியதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த மக்கள் சுரேஷ் குமார் வீட்டிற்கு சென்று தொடர்ந்து உதவி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு இருக்கையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, யூடியூப் சேனல் ஒன்று இந்த சம்பவத்தை பின்தொடர்ந்தது.

காதலும் கசக்கும் என்ற வகையில் குழந்தையின் தாய் குழந்தை பிறந்து 9 மாதங்களில் குழந்தையையும் தந்தையையும் விட்டுவிட்டு வேறொரு நபரிடம் சென்று வாழ்ந்து வருகின்றர்.

கண்ணீருடன் தன் கதையைச் சொல்லி இரண்டு வயதுக் குழந்தையைப் பராமரிப்பதில் உள்ள சிரமத்தையும் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதன் மூலம், மனைவிக்காக அதிகம் அர்ப்பணித்த கணவனுக்கு அநீதி இழைக்கப்பட்டது உறுதியானது.

நாட்டை விட்டு தப்பியோடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் மும்பை விமான நிலையத்தில் கைது!!

யாழில்..

யாழில் நீதிமன்ற உத்தரவின் பேரில் விதிக்கப்பட்ட பயணத் தடையையும் மீறி நாட்டை விட்டு தப்பியோடிய சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு மும்பையில் தரையிறங்கிய பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 45 வயதுடைய அவரை, நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதவான்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவர் புறப்படும் முனையத்தின் ஊடாக பதுங்கியிருந்து மும்பை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறியுள்ளார்.குடிவரவு மற்றும் குடியகல்வு வரிசையில் அனுமதிக்காக காத்திருந்த அவுஸ்திரேலிய பெண் ஒருவர், அந்த வழியாக பயணி ஒருவர் தந்தேகத்துக்கிடமான முறையில் செல்வதை அவதானித்தே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அதிகாரிகள் தேடுதல் மேற்கொண்ட போது அவரை கண்டறிய முடியவில்லை. பின்னர், சிசிரிவி பதிவுகளில் இருந்து பயணியை அடையாளம் கண்டு, அவரது கடவுச்சீட்டு மற்றும் விமான சீட்டு அனுமதி போன்ற கணினி மயமாக்கப்பட்ட விவரங்களை ஆய்வு செய்துள்ளனர்.

இதன்போதே அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் பயணத் தடை விதிக்கப்பட்ட நபர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்தநிலையில் விமானம் ஏற்கனவே இந்திய வான்வெளிக்குள் நுழைந்ததால், குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் குறிப்பிட்ட பயணி குறித்து மும்பை விமான நிலையத்தின் செயல்பாட்டு மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்தே அவர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

வீடு புகுந்து கொள்ளையடித்து மின்சார கட்டணம் செலுத்திய திருடர்கள் : இலங்கையில் நடந்த சுவாரஸ்யம்!!

அங்குருவாத்தோட்டயில்..

அங்குருவாத்தோட்ட, குருந்துவத்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து 5.25 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கத்தை கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குருவாத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

உடுவர பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் மற்றும் எகல்ஹேன பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அங்குருவத்தோட்ட, குருந்துவத்தை பகுதியில் உள்ள அந்த வீட்டின் உரிமையாளர்கள் அனுராதபுரம் நோக்கி சென்றுள்ளனர். உரிமையாளர்கள் அன்றைய தினமே வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.​​

அவர்களது வீட்டில் திருடர்கள் புகுந்து தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றதைக் காண முடிந்தது. இதையடுத்து அவர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும் நேற்று கைது செய்தனர். சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது திருடப்பட்ட தங்கத்தை அடகு வைத்து 3,60,000 ரூபா பெற்றுள்ளனர்.

திருடப்பட்ட பணத்ததை இருவரும் சமமாக பகிர்ந்து, ஒருவர் தனது வீட்டின் மின் கட்டணத்தையும், அடகு வைத்த தங்கத்தையும் மீட்டுள்ளார்.மற்றொரு நபர் தனது மோட்டார் சைக்கிளின் உதிரி பாகங்களை வாங்கியுள்ளார். இருவரிடமும் இருந்து இரண்டு லட்சம் பணத்தை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

செல்வச் சன்னதியான் ஆலய தேர் திருவிழாவில் குவிந்த பக்தர்கள்!!

ஈழத்தின்..

ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில், இன்றைய தினம் தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.

செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஒகஸ்ட் 16ம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று காலை தேர் திருவிழா இடம்பெற்றதுடன் நாளை (31) காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

சன்னதியானின் அருளைபெற இன்றைறைய நாள் தேர்த் திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையர்கள் பலர் இந்தியாவில் கைது : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரபல நடிகை வரலக்ஷ்மி!!

இலங்கையர்கள்..

நடிகை வரலட்சுமியின் முன்னாள் உதவியாளரான ஆதிலிங்கம் என்பவர் கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.குறித்த குற்றச்செயல் தொடர்பில் இலங்கையை சேர்ந்த 6 பேர் முதலில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் போதைப் பொருள் கடத்தலில் முக்கிய புள்ளியான குணசேகரன் என்பவரும் வரலட்சுமியின் முன்னாள் உதவியாளரான ஆதிலிங்கமும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் போதைப்பொருள் கடத்தலில் கிடைக்கும் பணத்தை ஆதிலிங்கம் திரைதுறையில் முதலீடு செய்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் ஆதிலிங்கம் குறித்து விசாரிக்க நடிகை வரலட்சுமி விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமி இந்த செய்தி தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.’சமீபத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் குறித்து விளக்கமளிக்க நினைக்கிறேன்.

ஆதிலிங்கம் தொடர்பான வழக்கில் எனக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியதாக பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை” என தெரிவித்துள்ளார்.மேலும் குறித்த வழக்கில் இது வரையில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடற்கரையை சுத்தப்படுத்திய வெளிநாட்டு இளைஞர், யுவதிகள்!!

அம்பலாங்கொடையில்..

அம்பலாங்கொடை கடற்கரையை நேற்று (29ஆம் திகதி) காலை சுத்தப்படுத்தும் பணியில் வெளிநாடுகளைச் சேர்ந்த இளைஞர்,யுவதிகள் குழுவொன்று ஈடுபட்டுள்ளது.

அம்பலாங்கொடை பிரதேச செயலகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட கடற்கரையை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டத்தில் கடற்கரையை சுத்தப்படுத்தும் முயற்சியில் வெளிநாட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலை திட்டத்தினை ஏற்பாடு செய்த அம்பலாங்கொடை பிரதேச செயலகத்தின் சில அதிகாரிகள் தவிர பலர் தாமதமாகவே வருகை தந்துள்ளனர்.

அம்பலாங்கொட பொல்வத்த அஷிக சேனவிரத்னவினால் அழைத்து வரப்பட்ட வெளிநாட்டு இளைஞர்கள்,யுவதிகள் குழுவினரே கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் இணைந்துகொண்டுள்ளது.

இலங்கை வந்த விமானத்தில் பெண் ஒருவரின் மோசமான செயல்!!

கட்டாரில்..

கட்டாரில் இருந்து வந்த விமானப் பயணி ஒருவரின் பயணப் பொதிகளை திருடிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட பெண்ணை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 5 நாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட வீட்டு பணிப்பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவர் கட்டாரில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்ற நிலையில் அந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.

பாதிக்கப்பட்ட குறித்த பயணியும் இந்த பெண்ணும் ஒரே விமானத்தில் இலங்கை வந்துள்ளனர்.விமானத்திலேயே குறித்த பயணியின் பயணப் பொதிகளை அந்த திருடிச் சென்றுள்ளார்.

பாதுகாப்பு கமராக்கள் சோதனை செய்யப்பட்டதையடுத்து சந்தேகநபர் சூட்கேஸ்சுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் சந்தேகநபர் 5 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகளை திருடி அடகு வைத்திருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் 4 மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த கொள்ளை!!

யாழில்..

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி பகுதியில் வீடொன்றில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் நேற்று (29.08.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டினை உடைத்து உட்புகுந்த கொள்ளை கும்பல், குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து 11 பவுண் நகை, 3 தொலைபேசி, 2 இலட்சம் ரூபா பணம், ஒரு மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தால் விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்று மிரட்டி விட்டு வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்வாகனத்தில் நால்வரும் தப்பி சென்றுள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.திரைப்படங்களில் இடம்பெறுவதை போன்று குழந்தையை பணயம் வைத்து மனிதாபிமானமற்ற முறையில் இவ்வாறானதொரு கொள்ளை சம்பவம் பதிவாகியுள்ளமை அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

யாழில் சிறுமியுடன் திருமணம் : இளைஞர் பெற்றோருடன் கைது!!

யாழில்..

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் சிறுமியை சிறுமியுடன் குடும்பம் நடத்திய 21 வயதான இளைஞனும் அவரது பெற்றோரும் கைது செய்யப்பட்டு, விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று ந்பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கபப்ட்ட 17 வயதான சிறுமியும் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் ஒன்றரை வருடங்களின் முன்னர் சிறுமிக்கும், இளைஞனுக்கும் காதல் ஏற்பட்டு, இருவரும் இளைஞனின் வீட்டில் ஒன்றாக வாழத் தொடங்கியுள்ளனர்.

எனினும், அண்மையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதை அடுத்து இருவரின் குடும்பத்தினருக்குள்ளும் தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் இந்த இளம் ஜோடி தற்போது பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், சிறுமியின் உறவை தொடர விரும்பவில்லையென்றும், சிறுமியின் குடும்பத்தினர் தொல்லை தருகின்றார்கள் என்றும் இளைஞனும், குடும்பத்தினரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றுள்ளனர்.

இதனையடுத்து பொலிசார், அவர்களின் முறைப்பாட்டை பெற்றுக் கொள்ளாமல் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் அவர்கள் மீது முறைப்பாடு பதிவு செய்து, அவர்களைக் கைது செய்தனர்.

அத்துடன் சிறுமியும் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதான 21 வயதான இளைஞன், தாய், தந்தை ஆகியோர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பாடசாலையில் நீச்சல் தடாகம் இல்லாமலும் சாதித்துக் காட்டிய புங்குடுதீவு மாணவன்!!

புங்குடுதீவில்..

நாட்டில் இன்றைய தினம் நடைபெற்ற வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் 20 வயதுப்பிரிவு ஆண்களுக்கான ப்ரீ ஸ்ரைல் ( free style ) நீச்சல் போட்டியில்,

புங்குடுதீவு மத்திய கல்லூரி மாணவன் இரண்டாம் இடத்தினைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.புங்குடுதீவு மத்திய கல்லூரியில் கல்வி கற்று வரும் பிரபாகரன் சுலக்சன் என்ற மாணவனே இவ்வாறு வெற்றிப்பெற்றுள்ளது.

இம் மாணவனுக்கும் இவரின் திறமையினை நிலைநாட்ட உறுதுணையாகச் செயற்பட்ட உடற்கல்வி பாட ஆசிரியர் சத்தியசீலன் நிசாந்தன் மற்றும் விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர் பிரசாந்த் ஆகியோருக்கும்,

புங்குடுதீவு மக்கள் சார்பாக நன்றிகளை குணாளன் கருணாகரன் என்பவர் முகநூலில் தெரிவித்துள்ளார்.மேலும் குறித்த மாணவனுக்கு முகநூலில் பாராட்டுக்கள் குவித்த வண்ணம் உள்ளன.

இன்று 14 வீதம் பெரிதாகவும் பிரகாசமாகவும் தென்படவுள்ள முழு நிலவு!!

ப்ளூ மூன்..

இன்றைய பூரணை தினத்தின் முழு நிலவு சூப்பர் மூன் மற்றும் ப்ளூ மூன் ஆகியவற்றின் அசாதாரண கலவையாக இருக்கும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நிலவு அதன் சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது நிகழும் முழு நிலவின் விளைவாக, சந்திரன் 14 வீதம் பெரியதாகவும், கடந்த காலத்தில் பார்த்த சில முழு நிலவுகளை விட 30 வீதம் பிரகாசமாகவும் தென்படும் என்று பேராசிரியர் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது சந்திரன் முழுமையாக தென்பட்டால், அது சூப்பர் ப்ளூ மூன் அல்லது சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது.இந்த நிலையில் நாளை (31.08.2023) காலை 7.05 மணிக்கு, சந்திரன் பூமிக்கு மிக அருகில் அதாவது 357,344 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும். ஒரே மாதத்தில் இரண்டு பூரணை நிலவுகள் வரும் போது, இரண்டாவது முழு நிலவு, நீல நிலவு என்று அழைக்கப்படுகிறது.

எனினும் இது ஒரு பெயர் மாத்திரமே என்றும், சந்திரன் உண்மையில் நீல நிறத்தில் தென்படாது என்றும் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். கிழக்கு வானத்தில் சூரியன் மறைந்த பிறகு இன்று 30ஆம் திகதி மாலை வேளையில் இருந்து முழு நிலவைக் காண முடியும் எனினும் இந்த நிலவைக் காண சிறந்த நேரம் நாளை 31ஆம் திகதி சூரிய உதயத்திற்கு முன்னர் உள்ள காலப்பகுதியாகும்.

இந்த வாய்ப்பை ஒருவர் தவறவிட்டால், அடுத்த சூப்பர் ப்ளூ நிலவுகளுக்காக 2037 ஜனவரி மற்றும் மார்ச் மாத் வரை காத்திருக்க வேண்டும் என்று பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

சாதியால் கொலை செய்யப்பட்ட அக்கா : 4 வருடங்கள் கழித்து பழிவாங்கிய தம்பி!!

கோவையில்..

காதல் திருமணம் செய்த அக்காவை படுகொலை செய்தவரை அப்பெண்ணின் தம்பி கொல்ல முயற்சித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்க ராயன் ஓடை பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் – வர்ஷினி பிரியா தம்பதியினர் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இருவரையும் கனகராஜின் அண்ணன் வினோத் படுகொலை செய்தார். இவருடன் இந்த கொலைக் குற்றத்தில் முக்கிய குற்றவாளியாக இருந்தவர் கந்தவேல்.

இந்த கொலை வழக்கில் சிறைக்கு சென்ற கந்தவேல் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். ஆணவ கொலை சம்பவத்தில் கந்தவேலால் உயிரிழந்த வர்ஷினி பிரியாவிற்கு சச்சின் என்ற ஒரு தம்பி இருந்துள்ளார்.

இவர் கந்தவேல் இருக்கும் அதே அகுதியில் வசித்துவருபவர். காதலித்தவரை கரம் பிடித்தற்காக தனது அக்காவை ஆணவகொலை செய்த கந்தவேலை பழிவாங்க வேண்டும் என்று சச்சின் சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, கந்தவேல் ஸ்ரீரங்க ராயன் ஓடை பகுதியில் நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த பகுதிக்கு வந்த சச்சின் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர், வர்ஷினி பிரியாவை கொன்றதற்காக கந்தவேலிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஒரு கட்டத்தில் தகராறு, கைகலப்பாக முற்றி சச்சின் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கந்தவேலை சரமாறியாக வெட்டத்தொடங்கினார். இதில் கந்தவேலை தலை மற்றும் கை போன்ற இடங்களில் வெட்டிவிட்டு சச்சின் உட்பட நாள்வரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த கந்தவேலை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து சச்சின் அவரது நண்பர்களான திலிப், விபின் பிரசாத் மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நால்வரை கைது செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் அக்காவின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே கந்தவேலை வெட்டியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். பின்னர் நால்வரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மின்சாரம் தாக்கி நிறைமாத கர்ப்பிணி பலியான பரிதாபம்!!

சென்னையில்..

சென்னை எம்.கே.பி நகரில், கர்ப்பிணி பெண், டேங்கில் தண்ணீர் நிரப்புவதற்காக மின் மோட்டார் சுவிட்சை போட முயன்ற போது மின்சாரம் தாக்கி, பலியான சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

சென்னை எம்.கே.பி நகர் 16,வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் சந்தோஷ்குமார். சரக்கு வாகன ஓட்டுநரான இவரது மனைவி இந்துமதி (25). 9 மாத கர்ப்பிணியான இந்துமதி நேற்று, வீட்டில் தண்ணீர் இல்லாததால் டேங்கில் தண்ணீரை நிரப்பி வைப்பதற்ஆக மின் மோட்டார் சுவிட்சினை போட சென்றுள்ளார்.

மின் மோட்டார் சுவிட்சை இந்துமதி தொட்டு இயக்கிய நிலையில், மின் கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே இந்துமதி மயங்கி விழுந்துள்ளார்.

இந்துமதியின் அலறல் சப்தம் கேட்டு, ஓடி வந்த உறவினர்கள், உடனடியாக இந்துமதியை ஸ்டான்லி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அங்கு இந்துமதியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து எம்.கே.பி நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 9 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.