புகைப்பட மோகத்தால் இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

ஐப்பானில்..

புகைப்பட மோகத்தால் பெண் பாலத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று ஐப்பான் நாட்டில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாலத்தில் இருந்தவாறு கையடக்க தொலைபேசியில் மும்முரமாகப் படங்கள் எடுத்துக்கொண்டிருந்தபோது 40 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

ஷிசுவோகா மாநிலத்தின் ஹிகாஷிசு நகரில் இருக்கும் பாலத்திலிருந்து அந்தப் பெண் விழுந்ததாக அவரின் தந்தை பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார். இச்சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக ஜப்பானிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவரைக் கண்டுபிடித்து மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது அவரின் மரணம் உறுதிசெய்யப்பட்டது. அந்தப் பெண் சீபா (Chiba) மாநிலத்தைச் சேர்ந்தவர். தமது தந்தையைக் காண அவர் ஹிகாஷிசு நகருக்குச் சென்றிருந்தார்.

தந்தையும் மகளும் தந்தையின் நண்பருடன் உணவு சாப்பிடக் காரில் சென்றுகொண்டிருந்ததாக Yomiuri Shimbun செய்தி நிறுவனம் தெரிவித்தது. அவர் மான் ஒன்றைக் காணக் காரிலிருந்து இறங்கியதாக நம்பப்படுகிறது.

இலங்கையில் அதிகரித்து வரும் இணையக் குற்றங்கள் ; எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார்.!!

இலங்கையில்..

இலங்கைக்கு சுற்றுலா விசாவின் மூலம் வருகைத் தந்துள்ள வெளிநாட்டவர்களால் இணையத்தின் ஊடாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் மோசடிகள் தொடர்பில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் அதிகரித்து வரும் இணையக்குற்றங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளனர். தற்போது நிகழ்கின்ற இணையக்குற்றங்களில் வெளிநாட்டவர்களது ஈடுபாடு அதிகரித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ஒன்லைன் மூலமான நிதி மோசடி, தனி நபர்களின் தரவுகளைத் திருடுதல் மற்றும் இணைய வர்த்தக மோசடிகள், போன்ற குற்றங்களில் இலங்கையில் சுமார் 40 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல தூதரகங்களில் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றதாக பொலிஸார்த் தெரிவித்துள்ளனர்.

மேலும், சில வெளிநாட்டு பிரஜைகள் பல்வேறு நாடுகளில் உள்ளவர்களின் கணக்குகளில் இருந்து பல மில்லியன் ரூபாவை இணையத்தின் ஊடாக மோசடி செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எனவே இவ்வாறான குற்றங்களைத் தடுத்து, இந்நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்தினால் சட்டம் ஒன்று இயற்றப்படவேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புற்றுநோயால் உயிரிழந்த இலங்கைத் தமிழர் : மரணத்துக்குமுன் மனைவியிடம் எழுதிக்கொடுத்த வார்த்தைகள்!!

பிரித்தானியாவில்..

புற்றுநோயால் உயிரிழந்த இலங்கைத் தமிழரான பிரபல ஊடகவியலாளர் ஜார்ஜ் அழகையாவுக்கு, நேற்று ஏராளமானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இலங்கையில் பிறந்து, பிரித்தானியாவில் பிபிசி தொலைக்காட்சியில் செய்தி வாசித்துவந்தவர் ஜார்ஜ் அழகையா (67).

அழகையா, 2014ஆம் ஆண்டு குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மீண்டும், மீண்டும் புற்றுநோய் தொல்லை கொடுத்த நிலையிலும், சிகிச்சைக்குப் பின் பணிக்குத் திரும்பிய அழகையாவுக்கு மீண்டும் 2021ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.

ஜூலை மாதம் 24ஆம் திகதி, அன்பிற்குரியவர்கள் சூழ, அழகையாவின் உயிர் அமைதியாகப் பிரிந்தது. நேற்று, ஏராளமான பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் கூடி அழகையாவுக்கு இறுதி பிரியாவிடை கொடுத்தார்கள்.

St Martin-in-the-Fields church என்னும் தேவாலயத்தில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில், கண்ணீர் மல்க, அவர்கள் தங்கள் சக ஊடகவியலாளர், நண்பருக்கு புகழாரம் சூட்டினார்கள்.

மரணத்துக்குமுன் மனைவியிடம் எழுதிக்கொடுத்த வார்த்தைகள்
அஞ்சலி நிகழ்ச்சியில், அழகையாவுடன் பணி புரிந்த Sophie (55) என்னும் ஊடகவியளாளர், அழகையா முன்பு எழுதிக்கொடுத்த சில வார்த்தைகளை கூடியிருந்தோர் முன் கண்ணீர் மல்க வாசித்தார்.

அழகையா மரணமடைவதற்கு மூன்று வரங்களுக்கு முன், தன் மனைவியாகிய Frances Robathanஇடம் எழுதிக்கொடுத்த இறுதி வார்த்தைகள் அவை.  “நீங்கள் நேசிக்கும் மக்களிடம், நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் ஏற்கனவே சொல்லவில்லை என்றால், அவர்களிடம் சொல்லுங்கள்.

நீங்கள் சில சமயங்களில் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியவர்களாக உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் ஏற்கனவே அவர்களிடம் சொல்லவில்லை என்றால், அவர்களிடம் சொல்லுங்கள்.

வீட்டிலிருக்கும் படிக்கட்டுகளே, கண்களுக்கு பெரிய மலை போல் தெரியும் நிலை வரும் வரை அவர்களுடன் இருக்க விரும்புவதாக நீங்கள் அவர்களிடம் சொல்ல விரும்பினால், அவர்களிடம் சொல்லுங்கள்.

நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்து உங்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை என்றால், நல்லது, குறைந்தபட்சம் உங்கள் அன்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்ததற்காக சந்தோஷப்படுங்கள்”

1955ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 22ஆம் திகதி, இலங்கைத் தமிழர்களான Donald Alagiah, Therese தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் அழகையா. கொழும்பில் பிறந்து, லண்டனில் வாழ்ந்துவந்த அவருக்கு, Frances Robathan என்னும் மனைவியும், Adam மற்றும் Matthew என்னும் இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

இங்கிலாந்தில் இருந்து பேசுகிறேன்.. மணப்பெண் தேடிய போது இளைஞருக்கு நேர்ந்த துயரம்!!

இங்கிலாந்தில்..

திருமணத்திற்காக மணப்பெண் தேடிய இளைஞரிடம், மணப்பெண் போல நடித்து ரூ.46 லட்சம் ஏமாற்றி மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மூலகுளத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (33).

இவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரின் திருமணத்திற்காக மணப்பெண் வேண்டி, அனைத்து விபரங்களையும் புதுச்சேரியில் உள்ள தனியார் திருமண தகவல் மையத்தில் கொடுத்து வைத்திருந்தார்.

இதன் பின், 2 மாதங்கள் கழித்து இங்கிலாந்தில் இருந்து போன் கால் மூலம் அழைப்பு வந்துள்ளது. அப்போது அதில் பேசிய பெண் ஒருவர், “நான் தமிழக மாவட்டம் கரூரை சேர்ந்தவர். நாங்கள் குடும்பத்துடன் இங்கிலாந்தில் வசித்து வருகிறோம். நான் இங்கு பிரபல நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன்.

எனக்கும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களது விபரங்கள் திருமண தகவல் மையத்திலிருந்து எனக்கு கிடைத்தது” என்று பேசினார். இதனை தொடர்ந்து இருவரும் வாட்ஸ் அப்பிலும் பேசி வந்துள்ளனர்.

பின்பு, தொடர்ந்து பேசிய அந்த பெண் பல்வேறு குடும்ப புகைப்படங்களை அனுப்பியுள்ளார். மேலும், “என்னுடைய மாமா இங்கு கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து பெரிய நிறுவனத்தினை நடத்தி வருகிறார். அதில் நல்ல வருமானம் கிடைக்கும். உங்களுக்கு வேண்டுமானால் சொல்லுங்கள், கற்றுத்தருகிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதன் பிறகு, ராமகிருஷ்ணன் பெயரிலேயே பைனான்ஸ் மற்றும் பிட் மார்ட் ஆகிய நிறுவனங்களில் கணக்கு தொடங்கி முதலீடு செய்ய கூறியுள்ளனர். இதனால், கடந்த மாதத்தில் ரூ.46 லட்சத்தை பல்வேறு தவணைகளில் செலுத்தியுள்ளார்.

ஆனால், இவருடைய கணக்கில் உள்ள பணத்தை நேரடியாக வேறொரு கணக்கிற்கு மாற்றியுள்ளனர். இவருடைய கணக்கில் பணம் இல்லாததை உணர்ந்த ராமகிருஷ்ணன் ஏமாற்று விட்டோம் என்பதையறிந்து இணைய வழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக ஆய்வாளர்கள் கீர்த்தி மற்றும் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

”ஹிஜாப் அணிய மாட்டேன்…” அமைதிக்கான நோபல் பரிசு வென்ற பெண் சிறையில் உண்ணாவிரதம்.!!

ஈரானில்…

ஈரானில் ஹிஜாப் ஆடை அணிய மறுத்ததால் கைது செய்யப்பட்ட நோபல் பரிசு பெற்ற பெண், தற்போது சிறைக்குள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஈரான் நாட்டை சேர்ந்தவரும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான நர்கஸ் முகமதி (51) என்பவர், ஹிஜாப் ஆடை அணிய மறுத்ததால் கடந்த 6ம் தேதி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதயம் மற்றும் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட நர்கஸ் முகமதி, தனக்கு மருத்துவ உதவி தேவையில்லை என்றும், கடுமையான ஹிஜாப் சட்ட விதிகளுக்கு எதிராகவும் சிறைக்குள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘நோபல் பரிசு பெற்ற நர்கேஸ், சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சிறைக்குள் நோயுற்ற கைதிகளுக்கு மருத்துவ உதவியை மறுத்தல் மற்றும் ஈரான் அரசுக்கு எதிரான கட்டாய ஹிஜாப் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கி உள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.

நர்கஸ் முகமதியின் இருதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு உள்ளது என்றும், அவர் நுரையீரல் அழுத்தத்தால் அவதிப்படுவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா சென்ற 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்.. கதறும் பெற்றோர்!!

சுற்றுலாவில்…

கொண்டாட்டங்களே சிலரது வாழ்க்கையை காலி செய்து விடுகிறது. கொரோனாவுக்கு பிந்தைய வாழ்க்கை பலருக்கும் அதிர்ச்சியை ஒளித்து வைத்துள்ளது. சந்தோஷமாக தோழிகளுடன் பள்ளி சுற்றுலாவுக்கு புறப்பட்டு சென்ற மாணவி, சுற்றுலா சென்ற இடத்தில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த பள்ளி மாணவ, மாணவிகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்கோட்டில் புலப்பட்டாவில் உள்ள எம்என்கேஎம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தவர் ஸ்ரீ சயனா. பள்ளியின் சார்ப்பில், மாணவி ஸ்ரீ சயனா உட்பட, 135 மாணவ, மாணவிகளும், 15 ஆசிரியர்களும் என 150 பேர் கொண்ட குழுவினர் மூன்று பேருந்துகளில் மைசூருக்கு சுற்றுலா கிளம்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு மைசூர் அரண்மனைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போது, ஸ்ரீ சயனாவுக்கு திடீரென உடல்நிலை மிகவும் மோசமானதாக கூறப்படுகிறது. உடனடியாக மாணவி ஸ்ரீ சயனாவை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மாணவி ஸ்ரீ சயனாவை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே மாணவி இறந்து விட்டதாக, பரிசோதனைக்குப் பின்னர் அறிவித்தனர். மாணவி ஸ்ரீ சைனாவின் மறைவையடுத்து, குழுவினர் தங்களது பயணத்தை பாதியில் நிறுத்தி விட்டு, கேரளத்திற்கு திரும்பினார்கள்.

சந்தோஷமாக புறப்பட்ட சுற்றுலா, இப்படி பாதியில் சோகத்தில் மூழ்கடித்தது. கொரோனாவுக்கு பின், இளம்வயதினர் பலரும் மாரடைப்பால் இப்படி மரணமடைவது அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

செயலி மூலம் கொண்டு வரப்பட்ட இதயம்… வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை!!

கேரளாவில்..

கேரளாவில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் ரகுமான். இவருக்கு வயது 38. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவால் கோவை பந்தய சாலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரகுமானின் இதயத்தில் உள்ள வால்வுகளின் இயக்கம் குறைந்து விட்டன எனவும் ரத்த குழாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு இருதயம் செயலிழந்து இறுதி கட்டத்தில் இருப்பதை உறுதி செய்தனர்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரகுமானுக்கு இருதய மாற்று சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என மருத்துவர்கள் கையை விரித்து விட்டனர்.

இந்நிலையில் ஈரோடு பெருந்துறையில் வசித்து வரும் மஞ்சுளா என்ற பெண்,சாலை விபத்தில் அடிபட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அக்டோபர் 4ம் தேதி மூளை சாவு அடைந்தார்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் மஞ்சுளாவின் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன் வந்தனர். செயலி மூலம் மஞ்சுளாவின் இதயம் தானமாக அளிக்கப்பட இருப்பதை அறிந்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சைக்கான உபகரணங்களை எடுத்து கொண்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்தனர்.

அங்கு அரசு மருத்துவர்களின் உதவியோடு மஞ்சுளாவின் இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர். மஞ்சுளாவின் இதயம் மருத்துவ துறை, காவல்துறை, ஆம்புலன்ஸ் பணியாளர்கள் உதவியுடன், 50 நிமிடத்தில் மின்னல் வேக பயணத்தில், பெருந்துறையில் இருந்து கோவை கேஜி மருத்துவமனைக்கு வந்தடைந்தது.

மயக்கவியல் துறை மருத்துவர்கள் உட்பட 60 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்தனர்.இதுகுறித்து இதயற்று அ மாறுவை சிகிச்சை மருத்துவர் அருண் ” தமிழக அரசின் விடியல் செயலியால் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

ஒரே மருத்துவமனையில் இருந்து இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதே கடினம் என்ற நிலையில், வெகுதூர பயணத்தை காவல்துறையும் மருத்துவத்துறையும் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவியதாக தெரிவித்தார்.

ரகுமானுக்கு மறுவாழ்வு தந்த மருத்துவர்களுக்கு ரகுமானின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றிகளை தெரிவித்து கொண்டனர். மேலும் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவர்களுக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

களுத்துறையில் விபத்து : 13 பேர் வைத்தியசாலையில்!!

களுத்துறையில்..

களுத்துறை – நாகொட பகுதியில் இன்று காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 13 பேர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாபலகம பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிய பயணித்த அரச பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.

ஒரே திசையில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென வலது பக்கம் நோக்கி திரும்ப முற்பட்டதில் பேருந்து வீதியை விட்டு விலகி சுவரில் மோதுண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.

15 லட்சம் அரச ஊழியர்களுக்கு 10000 ரூபாய் சம்பள உயர்வு!!

சம்பளம்..

ஜனவரி முதல் 15 லட்சம் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மூலம் குறித்த சம்பள உயர்வு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்ரமசிங்க அறிவித்து பின்னர் அது தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

இதன்மூலம், ஜனவரி முதல் சுமார் 15 லட்சம் அரசு ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள உயர்வு கிடைக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

கருச்சிதைவுக்குப் பின் பிறந்த குழந்தை : தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியப் பெண்ணொருவர் கருச்சிதைவுக்குப் பின் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுக்க, அந்தச் சிறுவன், தாய்க்கு பெரும் அதிர்ச்சி ஒன்றைக் கொடுத்தான். அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் லாரா (Laura Mazza) என்ற பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர் அதை அறியவில்லை.

அவர் தனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதாக எண்ணியுள்ளார். பின்னர் மீண்டும் கர்ப்பம் தரித்த லாரா, ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். தற்போது அந்தச் சிறுவனுக்கு நான்கு வயது ஆகிறது. அவன் பெயர் லூக்கா.

ஒருநாள், லாரா லூக்காவை குளிக்கவைத்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவன், அம்மா, நான் உங்கள் வயிற்றுக்குள் வாழ்ந்தேன், அது உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டிருக்கிறான்.

அதற்கு லாரா, ஆம் லூக்கா, எனக்குத் தெரியும், முன்பு நீ என் வயிற்றுக்குள் வாழ்ந்தாய், இப்போது நாம் அவுஸ்திரேலியாவில் வாழ்கிறோம் என்று கூறியுள்ளார். அதற்கு லூக்கா, அது இல்லை அம்மா, நான் முன்பு ஒரு முறை உங்கள் வயிற்றில் வாழ்ந்தேன். ஆனால், நான் இறந்துவிட்டேன்.

 

நான் உங்களைத் தேடிக்கொண்டே இருந்தேன். ஆனால் உங்களை என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. நான் கூப்பிட்டால் அது உங்களுக்குக் கேட்கவும் இல்லை. எனக்கு ரொம்ப கவலையாகிவிட்டது. பிறகு நான் ஒரு ஏஞ்சலாக மாறிவிட்டேன். அப்போதும் உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணினேன்.

ஆகவே, நான் மீண்டும் உங்களிடம் வர விரும்பினேன். அதற்குப் பிறகு உங்கள் வயிற்றுக்குள் மீண்டும் வந்துவிட்டேன். இப்போது திரும்பவும் உங்களுக்கு மகனாக பிறந்துவிட்டேன் என்று கூறியிருக்கிறான் லூக்கா.

அவன் சொன்னதைக் கேட்டு தான் அதிர்ந்துபோனதாக தெரிவிக்கும் லாரா, தான் அவனிடம் ஏஞ்சல்கள் குறித்தெல்லாம் பேசியதே கிடையாது. ஆகையால், அவன் கூறியதைக் கேட்டு அழுதுவிட்டேன் என்கிறார். அத்துடன், தனக்கு முன்பு கருச்சிதைவு ஏற்பட்டது கூட இப்போது மகன் சொல்லித்தான் புரியவந்துள்ளது என்கிறார் லாரா.

மனைவியை கத்தியால் குத்தியவருக்கு ஆயுள் தண்டனை விதித்த அமெரிக்க நீதிமன்றம்!!

அமெரிக்காவில்..

மனைவியை கத்தியால் குத்திய இந்தியர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2020-ஆம் ஆண்டில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்த புளோரிடா நீதிமன்றம் பிலிப் மேத்யூ என்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

கேரளாவைச் சேர்ந்த பிலிப் மேத்யூ தனது மனைவி மெரின் ஜாய், மனைவி மெரினுடன் அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து வந்தார். மெரின் புளோரிடாவின் கோரல் ஸ்பிரிங்ஸில் உள்ள ப்ரோவர்ட் ஹெல்த் மருத்துவமனையில் ஜாய் நர்ஸாக பணிபுரிந்தார்.

இவர்களுக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இத்தனை நாட்கள் நடந்தாலும் அவர்களுக்குள் இணக்கம் இல்லை. சண்டைகள் மேலும் மேலும் அதிகரித்தன.

இந்த வரிசையில், மெரின் 28 ஜூலை 2020 அன்று பணியில் சேர்ந்தார். அதற்கு முந்தையநாள் காலை இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் வழக்கம் போல் மெரின் மறுநாள் பணிக்கு சென்று விட்டார்.

பணியை முடித்துக் கொண்டு பாதாள அறையில் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு வந்த மரின் கணவர் மேத்யூ, அவரை தாக்கி சரமாரியாக 17 முறை கத்தியால் குத்தினார். பின்னர் தப்பி ஓட முயன்ற அவர் பொலிசாரிடம் சிக்கினார். வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

விசாரித்தபோது, ​​கொலையை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர் ரிமாண்டிற்கு அனுப்பப்பட்டார். இந்த வழக்கு விசாரணை, நான்கு ஆண்டுகளாக தொடர்ந்தது.

இந்த வழக்கின் முழு விசாரணையின் போது, ​​அவர் நான்கு ஆண்டுகளாக தனது மனைவியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் இருந்தார். இப்போது புளோரிடா நீதிமன்றம் மேத்யூஸ் குற்றவாளி என்று தீர்ப்பளித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

காதலனால் கொல்லப்பட்ட பட்டதாரிப் பெண் : வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்!!

ஹோமாகமவில்..

ஹோமாகம பிரதேசத்தில் வாடகை வீடு ஒன்றில் பட்டதாரி பெண் ஒருவர் அவருடைய பட்டதாரி காதலனால் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விவசாய அமைச்சில் கடமையாற்றிய அசினி துஷார விஜேதுங்க என்ற 31 வயதுடைய பட்டதாரி யுவதியே காதலனால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

காதலியை கொன்ற பின்னர் வலிநிவாரணி மாத்திரையை குடித்து காதலன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான காதலன் நேற்று (07) பிற்பகல் களுத்துறை, நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது சட்டையில் ரத்தக்கறை இருந்ததால் சந்தேகமடைந்த பொலிஸார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணையில் காதலியை கொலை செய்ததாக சந்தேக நபர் கூறியுள்ளார். அதன்படி, ஹோமாகம நீதிமன்ற வீதியில் உள்ள வாடகை வீட்டில் 31 வயதுடைய பெண் கழுத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொலையுண்ட யுவதி நேற்று மாலை 6 மணி அளவில் சந்தேக நபருடனும் அவரது தாயாருடனும் வாடகை அறைக்கு வந்துள்ளளார்.அதன் பின்னர் , இரவு 7 மணி அளவில் தாய் மாத்திரம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தாயார் சென்ற பின்னரே கொலை இடம்பெற்றதாக கூறப்படுக் நிலையில், தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதமே கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதேவேளை கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 32 வயதுடைய சந்தேக நபர் விவசாய அமைச்சில் பணிபுரியும் பட்டதாரி எனவும் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த 14 வயது சிறுவன்!!

திருகோணமலையில்..

திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு ஆறாம் கட்டை ஐயப்பன் கோயிலில் பூசை உதவியாளராக கடமையாற்றி வந்த 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி இன்று (08.11.2023) உயிரிழந்துள்ளார்.

எதிர்வரும் (17.11.2023) ஆம் திகதி வெள்ளிக்கிழமை மஹர ஜோதி மண்டல பெருவிழா இடம் பெற இருக்கின்ற நிலையில் குறித்த கோயிலில் நிறம் பூசும் வேலைகள் இடம்பெற்று வருகின்றது.

இந் நிலையில் பூசை உதவியாளரான குறித்த சிறுவன் கோயிலுக்கு மேல் மாடிக்குச் சென்று மின் குமிழ்களை பொருத்திக் கொண்டிருக்கின்ற வேளையில் மின்சாரம் தாக்கியதாகவும் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் டயகம பகுதியைச் சேர்ந்த திருச்செல்வன் லுகநாத் (14வயது) எனவும் தெரியவருகிறது.உயிரிழந்த உதவி பூசாரியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் இன்று இடம்பெற்ற கோர விபத்து!!

யாழில்..

யாழ்ப்பாணத்தில் அதிவேகமாக பயணித்த டிப்பர் மற்றும் கன்ரர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்துச் சம்பவம் உரும்பிராய் சந்தியில் இருந்து மருதனார்மடம் செல்லும் வீதியில் உரும்பிராய் சந்திரோதயா (ஞானபண்டிதர்) பாடசாலைக்கு அருகாமையில் இன்று (8) மாலை 03:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சாரதிகள் படுகாயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்துத் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டுள்ளனர்.

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய மாணவியின் மரணம்!!

யாழில்..

யாழ்ப்பாணம் – வடமராட்சி நவிண்டில் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் புற்று நோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் நவிண்டில் பகுதியைச் சேர்ந்த லோகராசா லோசனா வயது 17 என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவி வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி புற்று நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அதன் பின்னர் தற்போது யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த மாணவி நேற்று (7) செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மாணவியின் மரணம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹோட்டலில் ஆசையாக பிரியாணி வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இந்தியாவில்..

ஆசையாக பிரியாணி வாங்கிய அதனை வீட்டுற்கு எடுத்துசென்று சாபிட ஆவலாக திறந்த போது பிரியாணிக்குள் கோழித்தலை இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்தியாவின் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் பகுதியை சேர்ந்தவர் பிரதிபா.சம்பவத்தன்று இவர் முத்தூரில் உள்ள பரோட்டா கடையில் 4 பிரியாணி பார்சல்கள் வாங்கியிருக்கிறார். பிரியாணி பார்சலை எடுத்துகொண்டு குடும்பத்துடன் சாப்பிட வீட்டுக்கு எடுத்து வந்திருக்கிறார்.

வீட்டில் வைத்து பிரியாணி பார்சல்களை பிரித்த போது, அதில் ஒரு பார்சலில் பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்தது. அதனைப்பார்த்து பிரதிபா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பிரியாணிக்குள் கோழி தலை கிடந்தது குறித்து திரூர் நகராட்சியின் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் சம்பந்தப்பட்ட ஹோட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதுடன் ஓட்டலுக்கு சீல் வைத்து மூடினர். இந்நிலையில் பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்த விவகாரத்தில் ஓட்டலை அதிகாரிகள் மூடிய சம்பவம் மலப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.