காலியில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அடகொஹொட – மஹலுதண்ட வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (20) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி மற்றும் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதியும் சைக்கிளின் செலுத்துனரும் காயமடைந்துள்ள நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் ர் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் ஆவார். மேலும் விபத்து தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களுக்கு தவிசாளர் பா.பாலேந்திரன் தலைமையிலான குழுவினர் திடீர் விஜயமொன்றினை முன்னெடுத்திருந்தமையுடன் இறுதி அறிவித்தலையும் விடுத்திருந்தனர்.
நெளுக்குளம் சந்தியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்களுக்கு தவிசாளர் தலைமையில் சென்றிருந்த குழுவினர் உணவகங்களை சோதனைக்குட்படுத்தியிருந்தனர்.
இதன் போது அவற்றில் ஒர் உணவகம் சுகாதார விதிமுறைகளை மீறி காணப்பட்டமை சுகாதார பரிசோதகரினால் உறுதி செய்யப்பட்டிருந்தமையுடன் அவ் உணவகத்திற்கு இறுதி அறிவித்தலும் வழங்கப்பட்டது.
மேலும் வர்த்தக நிலையங்களுக்கு சென்றிருந்த குழுவினர் வியாபார உரிமைப்பத்திரத்தினை சோதனைக்குட்படுத்தியமையுடன் உரிமைப்பத்திரம் இன்றி காணப்பட்ட வியாபார நிலையங்களை உடனடியாக அவற்றினை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவித்தல் வழங்கப்பட்டது.
அத்துடன் மீன் வியாபாரம் மேற்கொண்ட இடத்திற்கு சென்ற குழுவினர் அங்கு கழிவு அகற்றுவதிலுள்ள சிக்கல் தொடர்பிலும் வீதியிலுள்ள பாகங்களை அகற்றுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்தனர். மேலும் இவற்றினை மூன்று தினங்களுக்குள் நிவர்த்தி செய்யாவிடில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்திருந்தனர்.
மேலும் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான திடீர் விஜயங்களின் போது சட்டங்களை மதிக்காமை மற்றும் பிரதேச சபையின் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது உடனடி சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தவிசாளர் பா.பாலேந்திரன் தெரிவித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22.08.2025) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியிருந்தார்.
அவரது பதவிக் காலத்தில் அமெரிக்காவிற்கும் பின்னர் இங்கிலாந்துக்கும் பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில் இங்கிலாந்து பயணத்தின் ஒரு பகுதி தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அரச நிதியில் இருந்து நிதியளிக்கப்பட்டதாகவும், ரூ. 16.9 மில்லியன் செலவாகியதாகவும் பொலிஸார் தெரிவித்த நிலையில் அது தொடர்பிலான விசாரணைக்காகவே அழைக்கப்பட்டிருந்தார்.
விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளராக இருந்த சமன் ஏகநாயக்க மற்றும் ரணிலின் தனிப்பட்ட செயலாளராக இருந்த சாண்ட்ரா பெரோரா ஆகியோரிடம் பொலிஸார் ஏற்கனவே வாக்குமூலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேரள மாநிலத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றால் 9 வயது சிறுமி உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் மேலும் ஒரு 3 மாதக் குழந்தை மற்றும் 40 வயது நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா எனக் கூறும் முதன்மை அமீபிக் மூளைக்காய்ச்சல் என்ற அரிய வகை தொற்று கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.
அவ்வப்போது இதன் பாதிப்பு இருந்துவரும் நிலையில், கேரளத்தில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் ஆகஸ்ட் 4 ம் தேதி 3 மாத குழந்தைக்கு இந்த அமீபா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
அந்த குழந்தைக்கு தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் 40 வயது நபர் ஒருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
ஏற்கனவே ஆகஸ்ட் 14 ம் தேதி தமரசேரி பகுதியைச் சேர்ந்த 4 ம் வகுப்பு மாணவி அனன்யா(9) இந்த அரிய வகை தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் தான் இந்த அமீபா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த குடும்பத்தினர் வேறு கிணற்றைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்த கிணற்றில் குளித்தவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுத்தம் இல்லாத ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக இந்த அமீபா உடலுக்குள் நுழைந்து விடுகிறது. சில நீச்சல் குளங்களிலும் இருக்கலாம் எனத் தெரிகிறது.
சுத்தமில்லாத தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவும்போதுகூட மூக்கின் வழியாக நுழைந்து விடலாம். நரம்புகள் வழியாக மூளைக்குள் நுழைந்து மூளையின் திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூக்கிலிருந்து சளி வெளியேறுதல், கழுத்து இறுக்கம், குழப்பமான நிலை, வலிப்பு, மயக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
இந்த அமீபா நன்னீரில் மட்டுமே உயிர் வாழ்கிறது, உப்புநீரில் வாழ்வதில்லை. அசுத்தமான நீரை குடிக்கும்போது பரவாது. குளிக்கும்போது அதாவது மூக்கின் வழியாக மட்டுமே பரவுகிறது.
இந்தியாவில் 1971ல் முதல்முதலாக கண்டறியப்பட்ட நிலையில் க 2016ல் கேரளத்தில் முதல் பாதிப்பு அறியப்பட்டது. 2016 முதல் 2023 வரை 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் கடந்த ஆண்டில் மட்டும் 36 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 9 பேர் உயிரிழந்தனர். நடப்பாண்டை பொறுத்தவரை இத்துடன் 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல மெடிக்கல் கடை உரிமையாளர் ஞானம் அவர்களின் மனைவி ஜீவா மாமல்லபுரத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா பாட்டிற்கு உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்த போது, திடீரென மராப்டைப்பு ஏற்பட்டு நடமாடிக்கொண்டே மயங்கி விழுந்தார்.
அங்கு உள்ளவர்கள் அவர்களுக்கு முதலுதவி அளித்தும் கண் முழிக்காததால், உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பாதியிலே மரணம் அடைந்ததால், திருமண நிகழ்ச்சியில் சோகதத்தை ஏற்படுத்தியது.
நடமாடிக்கொண்டே இருக்கும் போது பெண் ஒருவர் மரணம் அடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து அங்கு இருந்தவர்கள் பதிவு செய்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறிது நொடிகள் மகிழ்ச்சியாக நடனமாடும் ஜீவா அடுத்த சில நொடிகளில், தலை சுற்றுவதை போல் தலையில் கை வைத்து விட்டு, அப்படியே மேடையில் மயங்கி விழுந்தார்.
இதுகுறித்து அங்கிருந்தவர்கள் பாடகர் வேல்முருகன் அங்கிருந்து அனைவரையும் மகிழ்ச்சியாக பாடலுக்கு நடனம் ஆடும்படி அழைத்தார்.
இதுகுறித்து மருத்துவர்கள் நடனம் போன்ற அதிக உடல் உழைப்பு தேவைப்படும் செயல்களில் ஈடுபடும்போது, இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் தேவை ஆகியவை அதிகமாகிறது.
உடல் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஏற்கனவே இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு அதிகப்படியான அழுத்தம் இதயத்தை கடுமையாக பாதித்து, திடீரென மயக்கமடையச் செய்து உயிரிழப்புக்கு வழிவகுக்கும்.
இதனால் நடனம் ஆடுபவர்களுக்கு மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழலாம் என தெரிவிக்கின்றனர்.
ஹைபர்ட்ரோபிக் கார்டியோமயோபதி என்ற பாதிப்பு இருப்பவர்களுக்கு இதயத்தின் ரத்தப் பம்பிங் திறன் குறைந்து, திடீரென மயக்கம் மற்றும் மாரடைப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகர், இந்திரா காந்தி சாலையில் வசித்து வந்தவர் ராஜா. 40 வயதான இவர் விவசாயியாக பணிபுரிந்து வருகிறார். எம்.எஸ்சி. பட்டதாரியான இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார்.
12 வயது குமரகுரு என்ற மகனும், 7 வயது தன்யாஶ்ரீ என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுகன்யா கணவரிடம் கோபித்துக்கொண்டு பண்ருட்டியை அடுத்த மேல்மாம்பட்டில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
நேற்று ராஜா தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். பிற்பகல் 2 மணிக்கு ராஜா தனது மனைவி சுகன்யா மற்றும் உறவினர்கள் சிலருக்கு வாட்ஸ் அப்பில் உருக்கமான ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பி இருந்தார்.
அதில் அவர் நான் படித்த முட்டாள். நான் உங்களிடம் இருந்து பிரிகிறேன். எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள், பைத்தியக்காரத்தனமான ஒரு முடிவை எடுக்கிறேன்.
நான் யாருக்கும் கஷ்டத்தையும், பாரத்தையும் கொடுக்க விரும்பவில்லை, நான் எனது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
அவரை தொடர்ந்து 2 குழந்தைகளும், நீங்களும் எங்களை மன்னிச்சுக்குங்க, நாங்களும் எங்க அப்பாவோட சாமிகிட்ட செல்கிறோம் எனக் கூறி இருந்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பதறி அடித்துக்கொண்டு உடனடியாக ராஜாவின் வீ்ட்டுக்கு ஓடிச்சென்று பார்த்தனர். மனைவி சுகன்யாவும் அங்கு வந்தார். அப்போது வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் ஒரே சேலையில் அவரது 2 குழந்தைகளும்,
சுடிதார் துப்பாட்டாவில் ராஜாவும் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதை பார்த்து உறவினர்கள் பார்த்து கதறி அழுதனர்.
கணவர் மற்றும் குழந்தைகளின் உடல்களை பார்த்து சுகன்யாவும் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்த தந்தை, மகன், மகள் ஆகிய 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் ராஜா தனது 2 குழந்தைகளையும் தூக்கிலிட்டு கொன்று தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியா முழுவதும் பல பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் தவணாகெரே மாவட்டத்தில் பெற்றோருடன் வசித்து வந்தவர் 4 வயது சிறுமி கதீரா பானு.
இவர் ஏப்ரல் 24ம் தேதி வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, தெருநாய் தாக்கி அவரது முகம் மற்றும் உடல் பல இடங்களில் கடித்து படுகாயம் ஏற்படுத்தியது.
உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் பெங்களூரு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து 4 மாதங்களாக உயிருக்கு போராடிய நிலையில் இறுதியில் சிகிச்சை பலனின்றி பரிதமமாக உயிரிழந்தார்.
சமீபத்தில் நாய் கடித்து ரேபிஸ் நோய் காரணமாக இறப்பு அதிகரித்து வருவதால், அனைத்து தெருநாய்களையும் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு மாற்ற வேண்டும் எனறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. நாய்களுக்கு கருத்தடை, தடுப்பூசி, மற்றும் கண்காணிப்பு கட்டாயம் எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் வசித்து வருபவர் மொஹிலால். இவரது மனைவி கல்யாணி. இந்த தம்பதியினருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது மூத்த மகள் சிந்துவுக்கு பாலாஜி என்ற இளைஞருடன் திருமணம் நடைபெற்றது.
ஆகஸ்ட் 17ம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்வில் நண்பர்கள், உறவினர்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த வந்திருந்தனர். பின்னர் மாலை நேரம் கல்யாணி தனது மகள் சிந்துவை கணவரிடம் ஒப்படைக்கும் போது திடீரென மயங்கி விழுந்ததாக தெரிகிறது.
மகள் தன்னை விட்டு பிரிவதை தாங்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்டு அழுது கொண்டிருந்த நேரத்தில் திடீரென அவர் மயங்கி சரிந்து கீழே விழுந்து உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கல்யாணி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நட த்தி வருகிறார்.
ரயில் ஓடிக் கொண்டிருக்கையில், திடீரென இளம் பெண் நீதிபதி தேர்வர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து நர்மதா எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவில் நீதிபதி அர்ச்சனா புறப்பட்டு சென்றுள்ளார். 29 வயதாகும் இவர் உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்று வருவதோடு, சிவில் நீதிபதி தேர்வுகளுக்கும் தயாராகி வந்தார்.
அந்தப் பயணத்திற்காக B3 – இடம் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அவரது பையில் ரக்ஷா ஷாபந்தனுக்கான ராக்கி, பரிசுகள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பரிசு பொருட்கள் இருந்தன.
அதே நாள் இரவு 10:16 மணிக்கு தனது அத்தைக்கு தொலைபேசியில் “போபாலுக்கு வந்து விட்டேன்” எனக் கூறினார். அதன் பிறகு அவரை காணவில்லை.
மறுநாள் காலை ரயில் கட்னி தெற்கு நிலையத்தில் காத்திருந்த போது அர்ச்சனா ரயிலில் இருந்து வெளியில் வரவே இல்லை.
அவரது பை மட்டும் பயணம் செய்த இருக்கையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது கடைசி டிஜிட்டல் தடம் நர்மதா ரயில்வே பாலத்திற்கு அருகே செல்போன் பிங் மூலம் கண்டறியப்பட்டது.
இதையடுத்து கட்னி, இடார்சி பகுதிகளில் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. GRP காவல் கண்காணிப்பாளர் “அந்த நாளில் மத விழா நடைபெற்றது. அவளைக் கடத்தியிருப்பது கடினம்.
அதே நேரத்தில், தானாகவே அவர் இறங்கி மற்றொரு இடத்திற்கு சென்றாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது,” எனக் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் அரச்சனாவின் குடும்பத்தினர், சிபிஐ விசாரணையை நாடியுள்ளனர்.
போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். அர்ச்சனா குறித்த தகவலை அளிப்பவர்களுக்கு ₹51,000 சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கைக்குண்டுகளை வைத்திருந்ததாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கிரிபத்கொடை பொலிஸாரல் நடத்தப்பட்ட சோதனையில், T-56 துப்பாக்கியுடன் முச்சக்கர வண்டியில் சென்றபோது சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வவுனியா பிரிவு குற்றத் தடுப்பு பணியக அதிகாரிகள் கடந்த மாதம் 21 ஆம் திகதி கைக்குண்டுகளுடன் மற்றொரு சந்தேக நபரைக் கைது செய்தனர்.
குறித்த சந்தேக நபர் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் கைக்குண்டுகளை வைத்திருந்த மற்றொரு சந்தேக நபரும் அதே நடவடிக்கைகளில் ஈடுபட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்களும் இருப்பதும் தெரியவந்தது.
அதன்படி, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய வவுனியா பகுதிக்குச் சென்றிருந்த போது, அதற்குள் சந்தேக நபர்கள் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 071-8591966 அல்லது 071-8596150 என்ற தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 53 ஆவது மைல்கல் அருகில் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளான கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து நேற்று புதன்கிழமை (20) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஒன்று பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி, தென்மேற்கு ஆராய்ச்சி நிறுவனம் (SwRI) தலைமையிலான குழு, யுரேனஸைச் சுற்றி வரும் முன்னர் அறியப்படாத ஒரு சந்திரனைக் கண்டறிந்துள்ளது,
ஏற்கனவே 28 நிலாக்களை யுரேனஸ் கொண்டுள்ளது. இந்தநிலையில் யுரேனஸ் கிரகத்தை மேலும் ஒரு நிலா சுற்றி வருவதை வெப் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.
இதனால் யுரேனஸ் நிலாக்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. புதிய நிலாவுக்கு நாசா சார்பில் இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.
கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று ரூ.70 விலை குறித்த தண்ணீர் போத்தலை ரூ.200க்கு விற்ற குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் நேற்று (20) ரூ.500,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகள், கடந்த 16 ஆம் திகதி துறைமுக நகரத்தில் உள்ள கடைகளை பரிசோதனை செய்தபோது, சம்பந்தப்பட்ட கடையில் ரூ.70 விலை குறித்த 500 மில்லி லீட்டர் தண்ணீர் போத்தலை ரூ.200க்கு விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச சில்லறை விலை
2025.04.01 அன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி எண்.2430/15 மற்றும் எண்.93 இன் 500 மில்லி லீட்டர் தண்ணீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் பிரிவுகள் 20(5) மற்றும் 68 மற்றும் 2021 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் பிரிவு 60(4A) இன் கீழ் அதிக விலைக்கு விற்பனை செய்தமை குற்றமாகும்.
தனது நண்பியின் நிர்வாண காணொளி காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிரபோவதாக மிரட்டிய குற்றச்சாட்டில், இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், குறித்த இளைஞனை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கூடுதல் நீதவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டார்.
அந்த இளம் பெண், சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் வட்ஸ்அப் மூலம் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாகக் கூறி தன்னை மிரட்டியதாக குறித்த பெண் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த நிலையில் இரு தரப்பு சமர்ப்பிப்புகளை பரிசீலித்த நீதவான், பிணை மனுவை நிராகரித்து, சந்தேக நபரை செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
குருநாகல் நகரிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் கொத்து ரொட்டிக்குள் இருந்து இறந்து கிடந்த புழுவொன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குருநாகல் கொழும்பு வீதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் கடந்த 18ம் திகதி கொத்து ரொட்டியொன்றை உட்கொள்ளச் சென்றிருந்த வாடிக்கையாளர் ஒருவருக்கே இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.
கொத்து ரொட்டியை உட்கொள்ளும் போது அதற்குள் இருந்து இரண்டு அங்குலம் நீளமான புழுவொன்று இறந்த நிலையில் கிடப்பது அவரால் அவதானிக்கப்பட்டுள்ளது.
அது குறித்து ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் வினவியபோது அவர்கள் மௌனம் காத்துள்ளனர்.
இந்நிலையில் குருநாகல் நகரின் உணவகங்கள் தொடர்பில் பொதுசுகாதார பரிசோதகர்கள் உரிய சோதனைகளை மேற்கொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதன் காரணமாகவே இவ்வாறான அசுத்தமான உணவு வகைகள் அங்கு பரிமாறப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.