ஆசியாவை கதிகலங்க வைத்த பேரழிவுகள் : அச்சமூட்டும் பாபா வங்காவின் கணிப்புக்கள்!!

அண்மைய நாட்களாக இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் பதிவாகி வரும் காலநிலை மாற்றங்கள் எவரும் எதிர்பார்க்காத அளவு பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளன.

இயற்கையின் கோர தாண்டவத்தில் மனித, சொத்து மற்றும் பொருளாதார சேதத்தை குறித்த நாடுகள் கடுமையாக எதிர்நோக்கியுள்ளன.

இந்நிலையில், பாபா வங்கா, உலகில் நடக்கப்போகும் பேரழிவுகள் குறித்து மேற்கொண்டுள்ள கணிப்புக்கள் பேசுபொருளாகியுள்ளதுடன் அவரின் கணிப்பின் படி தான் அனைத்தும் நடக்கின்றனவா என அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா பார்வையற்ற பெண்ணொருவர், எதிர்காலம் குறித்து பல நிகழ்வுகளை கணித்துள்ளதாகவும் அவரின் கணிப்புக்களில் ஆசியாவுக்கு பேரழிவு ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, அவர் மேற்கொண்ட பல நிகழ்வுகள் அதேபோல நடக்காவிடினும் அதற்கு ஒத்த அல்லது தொடர்புடைய சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையே அவரின் கணிப்புக்களை ஆராய தூண்டுகின்றது.

அந்தவகையில், 1996 ஆம் ஆண்டு உயிர்நீத்த பார்வையற்ற பெண்ணொருவர் 2025ஆம் ஆண்டில் ஏற்பட போகும் பேரழிவுகளை கணித்தார் என கேட்கும் போது நமக்கு அவநம்பிக்கை ஏற்படும் அதேவேளை, சந்தேகத்தையும் எழுப்புகின்றது.

எனவே, அவரின் கணிப்பை ஆராயும் போது, குறித்த பெண், 2025ஆம் ஆண்டு ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு ஒரு மோசமான அழிவு ஏற்படும் என கணித்துள்ளார்.

அதன்படி, ஆசியாவில் ஒரு பெரிய இயற்கை பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளது, அதைத் தொடர்ந்து ஒரு பாரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது, அதைத் தொடர்ந்து சுனாமி வரக்கூடும் அபாயம் உள்ளது என அவரின் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையில், ஆசிய நாடான ஜப்பானில் ஒரு வாரத்திற்கு முன்னர் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியது. இதன்போது, கிட்டத்தட்ட 90,000 பேர் வெளியேற்றப்பட்டதுடன் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு நில அதிர்வு அபாயம் அதிகமாக இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டது.

அதேவேளை, குறித்த நிலநடுக்கத்தின் போது குறைந்தது 23–33 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு செய்திகளில் கூறப்பட்டன. அதேசமயம், இலங்கை மற்றுமு் இந்தியாவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திய டிட்வா புயலும் பதிவாகியிருந்தது.

இலங்கை காலநிலை வரலாற்றிலேயே சுனாமிக்கு பிறகு மிகப் பாரிய பொருளாதார சேதத்தை ஏற்படுத்திய ஒரு அனர்த்தமாக இது பதிவு செய்யப்பட்டது.

2004 ஏற்பட்ட சுனாமியை விடவும் அதிகமான பொருளாதார சேதத்தை ஏற்படுத்தி நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு மீட்பு பணிக்கு கூட சிரமங்களை ஏற்படுத்திய ஒரு பேரழிவு இந்த டிட்வா புயல்.

இத்தகைய, அனர்த்தங்கள் பதிவாகியிருக்கும் நிலையிலேயே பாபா வங்கா ஆசியாவுக்கு பேரழிவு ஏற்படும் என கணித்திருந்ததாக கூறப்படும் செய்தி பேசுபொருளாகியுள்ளது.

அத்துடன், மேலும், அவர் 5079 ஆம் ஆண்டு வரை நடக்க போகும் என மேற்கொண்டுள்ள கணிப்புக்கள் குறித்து கேள்வி எழுப்பப்படுவதுடன் சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் ஆராயப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் வரைபடத்திலிருந்து காணாமல் போன கிராமம் மீண்டும் கண்டுபிடிப்பு!!

இலங்கை வரைபடத்தில் இருந்து காணாமல் போனதாக பேசப்பட்டு வந்த, பதுளை மாவட்டத்தில் ஊவா பரணகம பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த மஸ்பன்ன கிராமத்தின் ஒரு பகுதி தற்போது மீண்டும் தென்பட்டுள்ளது.

அண்மையில் பேரிடரினால் மூழ்கிப் போன மஸ்பன்ன கிராமம் சர்வதேச ரீதியில் பேசும் பொருளாக மாறியிருந்தது.

தற்போது அங்கு மறுசீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில், கிராமத்தில் புதைந்த வீடுகள், பேருந்துகள் மற்றும் கிராமத்தின் முக்கிய இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 26ஆம் திகதி மதியம் மஸ்பன்ன நகரில் பேருந்து நிலையத்திற்கு மேல் ஒரு பெரிய மண் மேடு சரிந்து விழுந்தது.

பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல பேருந்துகள் மீது மண்மேடு சரிந்தது. தெய்வாதீனமாக அந்த நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளிலும், பேருந்து நிலையத்திலும் எவரும் இருக்கவில்லை.

மேலும் பல நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக மஸ்பன்ன கிராம மக்கள் தங்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்திருந்தனர்.

இரவு வேளையில் மண் மேடுகள் படிப்படியாக இடிந்து வீழ்ந்து கொண்டிருந்த நிலையில், அந்தப் பகுதியிலுள்ள நாயொன்று அனர்த்தம் தொடர்பில் எச்சரித்து பலரை காப்பாற்றியது.

சூட்டி என்ற பெயர் கொண்ட நாய், உரிமையாளரை எச்சரித்த நிலையில், அவரினால் பலர் காப்பாற்றப்பட்டிருந்தனர். இது குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அந்தப் பகுதி மக்கள் அவசரமாக வெளியேறி நிலையில் பாரிய மண்மேடு வீழ்ந்து கிராமம் மூழ்கிப் போனது. எனினும் அந்த இடம் தெரியாமல் மறைந்து போயின.

அன்றிலிருந்து, மஸ்பன்ன நகரம் இலங்கையின் வரைபடத்திலிருந்து மறைந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசு அதிகாரிகளின் உதவியுடன், மஸ்பன்ன கிராமம் இப்போது மீளெழுந்து வருகிறது.

தற்போது பேருந்து நிலையத்தில் புதையுண்ட பேருந்துகள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு வருகின்றன.

மலேசியாவிலிருந்து வந்த சிறிய விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கம்!!

மலேசியாவில் இருந்து வந்த சிறிய ரக விமானம் ஒன்று , யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்று 15ஆம் திகதி திங்கட்கிழமை தரையிறங்கியுள்ளது.

மலேசியாவின் ஜோகூர் பாரு செனாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்த அந்த விமானத்திற்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. குறித்த விமானம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படவுள்ளது.

குறித்த விமானம் இந்த ஆண்டு தரையிறங்கிய சிறிய ரக மூன்றாவது சர்வதேச விமானம் எனவும் , பிராந்திய விமான இணைப்புகளை வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும்,

இலங்கையின் வடபகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெற்கு அதிவேக வீதியில் விபத்து : வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐந்து பேர் காயம்!!

தெற்கு அதிவேக வீதியில் அங்குனுகொலபெலெஸ்ஸ – தஹஅமுன பிரதேசத்தில் 168 கிலொமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நால்வர் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (15) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எல்லவிலிருந்து மிரிஸ்ஸ நோக்கி நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த வேன் ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் வேனின் சாரதியும் பின்னால் பயணித்த நான்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் காயமடைந்துள்ளனர். ஈரான் நாட்டைச் சேர்ந்த நான்கு சுற்றுலாப் பயணிகளே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேன் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஏலத்தில் 18 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மதீச பத்திரன : ஐ.பி.எல் வரலாற்றில் 3வது வீரர் என்ற பெருமை!!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனாவுக்கு இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ஒரு புதிய ஒப்பந்தம் கிடைத்தது.

தனது அடிப்படை விலையை 2 கோடி ரூபாயாக நிர்ணயித்திருந்த மதீஷா பத்திரனா, அபுதாபியில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 மினி ஏலத்தில் 18 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு விற்கப்பட்டார்.

ஐபிஎல் 2026 ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி மதீஷா பத்திரனாவை விடுவித்தது.

வித்தியாசமான பந்துவீச்சு பாணியைக் கொண்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளரான பத்திரனா, சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) சீருடையை அணிந்து, 2022 இந்தியன் பிரீமியர் லீக்கில் அறிமுகமானார்.

அதேவேளை மதீஷா பத்திரனாவை வாங்க சென்னை – கொல்கத்தா இடையே கடும் போட்டி நிலவியது. இதனால் இவரது விலை எகிறி கொண்டே சென்றது. இறுதியில் ரூ.18 கோடிக்கு அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கியது.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 3-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

IPL ஏலத்தில் 2 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட வனிந்து ஹசரங்க!!

அபுதாபியில் தற்போது (16) நடைபெற்றுவரும் 2026 இந்தியன் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க அடிப்படை விலையான 20 மில்லியன் இந்திய ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

இன்று (16) முன்னதாக நடைபெற்ற ஏலத்தில், அவுஸ்திரேலியாவின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரரான கெமரூன் கிரீன், ஐ.பி.எல். ஏல வரலாற்றில் ஒரு சாதனையாக 252 மில்லியன் இந்திய ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியால் வாங்கப்பட்டார்.

கெமரூன் கிரீன், ஐ.பி.எல். ஏல வரலாற்றில் சாதனை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே அவுஸ்திரேலிய வீரருக்காக தீவிர போட்டி நிலவிய போதிலும், ஷாருக் கான் உரிமையாளராக உள்ள KKR அணி, கிரீனைத் தன்வசப்படுத்தியது.

இதன் மூலம், அவர் தனது நாட்டு வீரரான மிட்செல் ஸ்டார்க்கின் (IPL 2024, KKR, 247.5 மில்லியன் இந்திய ரூபாய்) சாதனையை முறியடித்து, ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விலைபோன வெளிநாட்டு வீரர் ஆனார்.

2026ஆம் ஆண்டு நடக்கபோகும் அதிசயம் : தொட்டதெல்லாம் பொன்னாகப் போகும் ராசிகாரர்கள்!!

2026ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் பிறக்க இருக்கிறது. நாமும் மிகவும் ஆவலுடன் அடுத்த ஆண்டை நோக்கி காத்திருக்கின்றோம். ஒவ்வொரு அண்டும் ஒவ்வொருவருக்கும் சில பலன்களை அளிக்கும்.

2026 தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதம் ஒரு அரிய சக்தி வாய்ந்த 5 கிரகங்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியவை சனி பகவானின் சொந்த வீடான மகர ராசியில் இணைகின்றன. இது பஞ்சகிரக என்ற யோகத்தை உருவாக்குகிறது.

யோகம் கிடைக்கும் ராசிகள்

இந்த யோகத்தின் தாக்கமானது ஜனவரி மாதம் நடுப்பகுதியில் 13 முதல் 20ஆம் தேதி வரை சுமார் ஒரு வாரம் இருக்கும். இது பலரின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த இருக்கிறது. குறிப்பாக 4 ராசிகளில் இது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

மேஷம் : பஞ்சகிரக யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் பல நன்மைகளைபெற இருக்கின்றனர். வேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். முக்கிய பொறுப்புகள் உங்களை தேடி வரும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சமுகத்தில் உங்களில் மதிப்பு அந்தஸ்து உயரும்.

ரிஷபம் : ஜனவரி மாதம் நீங்கள் கொடிகட்டி பறப்பீர்கள். பண வரவுகள் அதிகரிக்கும். இதனால் வங்கி இருப்பும் அதிகரிக்கும். நிலம் வாங்குவீர்கள். காய் வாங்கும் யோகமும் இருக்கிறது. குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புள் உள்ளன. தந்தை வழியில் பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்ப்வர்களுக்கு நல்ல செய்தி வரும்.

கன்னி : நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்ப பிரச்சனைகள் தீரும். குழந்தைகளுக்கு வரன் தேடி வரும். அதேபோல் குழந்தைகளிடம் இருந்து நல்ல மகிழ்ச்சியான செய்திகள் வரும். நீங்கள் செய்திருந்த முதலீடுகள் லாபத்தை தரும். வருமானத்திற்கான புதிய வழிகள் உருவாகும். கடன்கள் இருந்தால் தீரும்.

மகரம் : சமூகத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் இருக்கும். அதேபோல் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் அமையும். வீடு வாங்கும் யோகமும் உள்ளது. மொத்தத்தில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு இந்த பஞ்சகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் இருக்கிறது.

இலங்கையில் இளையோரிடம் அதிகரிக்கும் எயிட்ஸ் தொற்று!!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக திர்ச்சித தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 600 இற்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்புத் திட்டம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 6% நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி எயிட்ஸ் பாதிப்பினால் சுமார் 30 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

தொற்று ஏற்பட்டவர்களில் ஆண்களே அதிகம். ஆண் – பெண் விகிதாசாரம் 6:1 எனும் விகிதத்தில் உள்ளது.

மேலும் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 68 ஆண்களும் 3 பெண்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு ஏனையோர் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் எயிட்ஸ் பாதிப்பினை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் பாதிப்பைக் குறைக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

அவுஸ்திரேலிய சிட்னி சம்பவம் : ரியல் ஹீரோவுக்கு குவியும் நன்கொடைகள்!!

சிட்னியின் பொண்டாய் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் போது, தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்த நபருக்காக அவுஸ்திரேலியா முழுவதிலும் இருந்து நன்கொடைகள் குவிந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அவருக்காக வழங்கப்பட்ட நன்கொடையின் மொத்தத் தொகை தற்போது 1.1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை (744,000 அமெரிக்க டொலர்கள்) தாண்டியுள்ளது.

மூன்று தசாப்தங்களில் மிக மோசமான துப்பாக்கிச்சூடு

அதேவேளை துப்பாகிதாரியிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்த அஹ்மத்துக்கு ஆதரவாக அமைக்கப்பட்ட ‘GoFundMe’ பிரசாரம், ஒரே நாளில் 1.1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலருக்கும் அதிகமாக நிதி திரட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துப்பாக்கிக் காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் அவர் குணமடைந்து வரும் நிலையில், இந்த நன்கொடை அதிகரித்துள்ளது.

சம்பவம் இடம்பெற்றபோது இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான 43 வயதான அஹ்மத் அல் அஹ்மத், பதுங்கி இருந்து, துப்பாக்கிதாரிகளில் ஒருவரைப் பின்புறமாகத் தாக்கிப் பாய்ந்தார்.

தாக்குதல் நடத்தியவரின் துப்பாக்கியைப் பறித்து, அவரைத் தரையில் தள்ளிய அஹ்மத்தின் செயல், பல உயிர் இழப்புகளைத் தடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய காவல்துறை திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தாக்குதலை 50 வயதுடைய தந்தையும் அவரது 24 வயது மகனும் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த யூத கொண்டாட்டத்தின் போது நிகழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று தசாப்தங்களில் நாட்டில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச்சூடு இது என்று அதிகாரிகள் விவரித்துள்ளனர்.

மூன்றாம் தவணை பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்!!

2025ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் தவணைக்காக தவணைப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் என வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தரம் 6 முதல் தரம் 10 வரையான மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சைகளை நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குறிப்பாக அனைத்துப் பாடசாலை அதிபர்களும் இந்த அறிவுறுத்தலை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களை அடுத்த தரங்களுக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 11 ஆம் தர மாணவர்களுக்கான மூன்றாம் தவணை பரீட்சையை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமான பாடசாலைகள் : விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

டிட்வா சூறாவளியின் பின்னர் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று(16) திறக்கப்பட்டாலும் மீண்டும் பண்டிகையை முன்னிட்டு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று(16) திறக்கப்படும் பாடசாலைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மீண்டும் மூடப்படவுள்ளன. மீண்டும் 29 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதனையடுத்து அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இடைநிறுத்தப்பட்டுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை கருத்திற்கொண்டு இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையை கருத்திற்கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை மீண்டும் பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

அத்துடன், பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்கள் வழக்கமான தமது பாடசாலைக்குச் செல்வது அவசியமில்லை எனவும் தமது வீட்டுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவர்கள் பாடசாலை சீருடை அணிய வேண்டிய அவசியமில்லை, மேலும் இந்தக் காலகட்டத்தில் ஆசிரியர்களும் முறையான உடையை அணிய வேண்டிய அவசியமில்லை.

பாடசாலைகள் மூடப்படுவதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், வழக்கமான பாடசாலைகள் எதுவாக இருந்தாலும், வழக்கமான செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும் வரை, தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசாங்க ஊழியர்களுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு!!

அரசாங்க ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த சுற்றறிக்கை திங்கட்கிழமை (15) அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கையில், டித்வா’ புயல் காரணமாக தமது வதிவிடத்திலிருந்து சேவை நிலையத்திற்கு பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தடைப்பட்டதால் சேவைக்கு சமுகமளிக்க முடியாத உத்தியோகத்தர்கள்,

வீதித் தடைகள் காரணமாக அல்லது அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டமை காரணமாக சேவைக்கு சமுகமளிக்க முடியாத உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு இந்த விசேட விடுமுறை வழங்கப்படுகின்றது.

அரசாங்க உத்தியோகத்தர்கள் தாம் கடமைக்கு சமுகமளிக்க முடியாத காரணத்தைக் குறிப்பிட்டு, பிரதேச செயலாளரால் சான்றுப்படுத்தப்பட்ட தமது பகுதியின் கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன் கூடிய விண்ணப்பத்தை நிறுவனத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

பிரதேச செயலாளரால் சான்றுப்படுத்தப்பட்ட உத்தியோகத்தரின் விண்ணப்பத்தை நிறுவனத் தலைவர் பரிசீலித்து, அதன் சரியான தன்மை குறித்து தனிப்பட்ட ரீதியில் திருப்தியடைந்தால் மட்டுமே,

சேவைக்கு சமுகமளிக்க முடியாத நாட்களின் எண்ணிக்கைக்கான விசேட விடுமுறையை அங்கீகரிப்பதற்காக திணைக்களத் தலைவருக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விசேட விடுமுறை வழங்குதல் நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களுக்கு மாத்திரம் பொருத்தமான வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் இளம் குடும்பஸ்தர் திடீர் உயிரிழப்பு!!

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருகோணமலை இளம் குடும்பஸ்தர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வருடத்திற்கு முன் திருமணம் செய்த நிலையில் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளதாக கூறப்படுவதுடன், குறித்த குடும்பஸ்தர் திருகோணமலையில் வீடியோ கடையை நடாத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் திருகோணமலை அலஸ்தோட்டத்தைச் சேர்ந்த 34 வயதான செல்வநாயகம் சத்தியகுமார் குடும்பஸ்தரே உயிரிழந்தவர் ஆவார் . இந்நிலையில் இளம் குடும்பஸ்தரின் மரணம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரான்ஸில் கோர விபத்து : ஸ்தலத்தில் பலியான ஈழத்தமிழ் இளைஞன்!!

பிரான்ஸில் ஏற்பட்ட கோர விபத்தில் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த ஏழாம் திகதி Seine-et-Marne மாவட்டத்திற்குட்பட்ட Mitry-Moryஇல் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட 21 வயதான சதீஸ்குமார் அபிசன் என்பவரே உயிரிழந்துள்ளார். காலை வேளையில் இலத்திரனியல் உந்துருளியில் பயணித்து கொண்டிருந்து போது, எதிரே வந்த கார் ஒன்று மோதித்தள்ளியுள்ளது.

விபத்தினை ஏற்படுத்திய 30 வயதான சாரதி தப்பிச் சென்றுள்ளார். எனினும் தான் பணியாற்றும் நிறுவன உரிமையாளரிடம் விபத்து தொடர்பில் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய உரிமையாளர் வழங்கிய தகவலுக்கு அமைய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான சாரதிக்கு மேற்கொண்ட இரத்த பரிசோதனையில் 1.5 கிராம் மதுபானம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய சாரதி பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

இரண்டு பிள்ளைகளையும் மல்வத்து ஓயாவில் தள்ளிவிட்டு கொலைசெய்த தாய்க்கு விளக்கமறியல்!!

அநுராதபுரத்தில் டிசம்பர் 02ஆம் திகதி அதிகாலையில் தனது இரண்டு பிள்ளைகளையும் மல்வத்து ஓயாவில் தள்ளிவிட்டு கொலைசெய்த தாயாரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் 40 வயதுடைய தாய் ஒருவர், தனது 04 வயதுடைய மகள் மற்றும் 08 வயதுடைய மகனை மல்வத்து ஓயாவில் தள்ளிவிட்டுள்ளார்.

மல்வத்து ஓயாவில் தள்ளிவிடப்பட்ட இரண்டு பிள்ளைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சில நாட்களின் பின்னர் அவர்களின் சடலங்கள் கரை ஒதுங்கியன.

குடும்பத் தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனையடுத்து சந்தேக நபரான தாயார் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிளியை காப்பாற்ற முயன்று உயிரிழந்த இளைஞன்!!

பெங்களூரு நகரில் செல்லப்பிராணியை காப்பாற்ற முயன்று இளைஞர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ரூ.2.5 மதிப்புள்ள செல்லப்பிராணியான மக்காவ்(Macaw) வகை கிளியை காப்பாற்ற முயன்று பெங்களூருவைச் சேர்ந்த 32 வயது தொழிலதிபர் அருண் குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

செல்லப்பிராணி மக்காவ் வெள்ளிக்கிழமை குமாரின் வீட்டில் இருந்து தப்பிச் சென்று அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது அமர்ந்துள்ளது. உடனடியாக அதை மீட்க வேண்டும் என்று உரிமையாளர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.

அப்போது எஃகு குழாய் ஒன்றை (Steel Pipe) எடுத்துக் கொண்டு மீட்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எஃகு குழாய் ஆனது மின்னழுத்த கம்பியில் பட்டுள்ளது.

அப்போது உயர் மின்சாரம் தாக்கி 32 வயது தொழிலதிபர் அருண் குமார் உயிரிழந்தார் என மூத்த காவல்துறை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.