இந்தியாவில் முதல் 10 நாடுகளுக்குள் இடம்பிடித்த இலங்கை!!

இந்தியா செல்லும் வெளிநாட்டு பயணிகளில், கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் 10 மூல நாடுகளில் இலங்கை, அமெரிக்கா, பங்களாதேஷ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகியவை அடங்குவதாக இந்திய அரசாங்க தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பான கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வ பதிலில் இந்திய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தரவைப் பகிர்ந்ததாக PTI செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டிற்கான FTA புள்ளிவிவரங்கள் 9.95 மில்லியனாகப் பதிவாகியுள்ளன. ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் கூற்றுப்படி, சர்வதேச சுற்றுலா வருகை இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் வெளிநாட்டு குடிமக்களின் வருகை. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் FTA-களுக்கான முதல் பத்து மூல சந்தைகள் பற்றிய விவரங்களும் அமைச்சரிடம் கேட்கப்பட்டன.

அதற்கமைய கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-2024) FTA-களுக்கான முதல் 10 மூல நாடுகளின் அட்டவணைப்படுத்தப்பட்ட தரவைப் அமைச்சர் பகிர்ந்தார்.

அதன்படி கடந்த ஐந்தாண்டு காலத்தில் இந்தியாவில் FTA-களுக்கான முதல் 10 நாடுகள் அமெரிக்கா, பங்களாதேஷ், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா, மலேசியா, இலங்கை, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஆகும்.

2020 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், இந்தியாவில் FTA-களுக்கான முதல் மூல சந்தையாக பங்களாதேஷ் இருந்தது. அதே நேரத்தில் 2021, 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது.

இந்தியாவில் FTA-களுக்கான முதல் ஐந்து மூல நாடுகளில் இடம்பிடித்த மற்ற மூன்று நாடுகள் – இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகும்.

இலங்கையில் வீதிகளில் கைவிடப்பட்ட நிலையில் 300 சிறுவர்கள்!!

ஒரு மாதத்திற்குள் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்ட மற்றும் வீதிகளில் கைவிடப்பட்ட 300 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 26 சிறுவர்கள் கொழும்பு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும்,

அவர்களின் பராமரிப்பையும், பாதுகாப்பையும் உறுதி செய்யக்கூடிய பாதுகாவலர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடம் குறித்த சிறுவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் குறித்த சிறுவர்களின் பாடசாலை கல்விச் செயல்பாடுகளை முறையாகப் பராமரிக்கவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசாங்கம் பொறுப்பேற்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சிறுவர்களை வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இவ்வாறான நடவடிக்கைகளைத் தடுக்க சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் கவனம் ஈர்த்த நீர் கண்காட்சி!!

வரலாற்று சிறப்பு வாய்ந்த யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலய திருவிழாவை முன்னிட்டு ‘நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி’ எனும் தொனிப் பொருளில் வடக்கின் நிலத்தடி நீர் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த நீர்வளக் கண்காட்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீர்வள சபை, நீர்ப்பாசண திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, யாழ் மாநகர சபை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம்,

யாழ் இந்துக்கல்லூரி மற்றும் பல தன்னார்வலர் அமைப்புகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின் இரண்டாவது நீர்வளக் கண்காட்சி

வெள்ளிக்கிழமை (15) மாலை நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (24) வரை இடம்பெறவுள்ளது.

தண்ணீர் இல்லாமல் போனால் என்னவாகும்?

இந்நிலையில் நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் பல்வேறு ஆற்றுகை நிகழ்வுகளும், கலந்துரையாடல்களும் தினமும் மாலை வேளையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நேற்றையதினம் (18) மாலை செம்முகம் ஆற்றுகைக் குழுவின் “தண்ணீரின் கதை” நாடக ஆற்றுகை இடம்பெற்றது.

இதன்போது நிலத்தடி நீரை மட்டும் நம்பியிருக்கும் யாழ்ப்பாணத்தில் எதிர்காலத்தில் தண்ணீர் இல்லாமல் போனால் என்னவாகும் என்பதனை சித்தரிக்கும் வகையில் நாடகம் உயிர்ப்புள்ளதாக இருந்தது.

நீர்வளக் கண்காட்சியின் ஐந்தாம் நாளான இன்று (19) ஆற்றுகை நிகழ்வாக பாடல் நிகழ்வுகளும், “கேணி: நீர் மரபுரிமைக் கட்டுமானங்களைக் காக்க வேண்டிச் சில முன்வைப்புகள்” என்கிற தலைப்பில் யாழ்.

பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், ஆய்வாளருமான அகிலன் பாக்கியநாதன் அவர்களின் கருத்துரையும் உரையாடலும் இடம்பெறும்.

நிலத்தடி நீரும் எமது பிரதேச நிலக்கட்டமைப்பு மற்றும் வழுக்கையாறு திட்ட மாதிரிகளின் கண்காட்சிகள், விஞ்ஞான விளக்கங்கள், ஆய்வு முடிவுகள், விளையாட்டுகள்,

புதிர்ப்போட்டிகளில் பங்கேற்கும் சிறார்களுக்கான ஏராளமான பரிசுப் பொருட்களுடன் நிலத்தடி நீரை பக்குவமாக பாதுகாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக இது அமைந்துள்ளது.

 

கைரேகை வருகை முறையை ஏற்க முடியாதவர்கள் வேறு இடங்களில் வேலை தேடலாம் : நளிந்த ஜயதிஸ்ஸ!!

மேலதிக நேரக் கொடுப்பனவு போதுமானதாக இல்லை அல்லது கைரேகை வருகை முறையை ஏற்க முடியாதவர்கள் வேறு இடங்களில் வேலை தேடலாம் என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அஞ்சல் சேவையில் மேலதிக நேரக் கொடுப்பனவு கட்டமைப்பிலோ அல்லது கைரேகை வருகை முறையிலோ மேலும் மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது என்று மீண்டும் உறுதிப்படுத்தினார்.

ஏப்ரல் மாத மேலதிக நேரக் கொடுப்பனவு ஜனவரி 2027 முதல் பொருந்தக்கூடிய அடிப்படை வேதனத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது என்றும், ஏப்ரல் 2025 அல்லது ஜனவரி 2026 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சம்பள உயர்வுகளின் அடிப்படையில் அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.

தற்போதைய நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக, திறைசேரியால் சில மேலதிக நேரக் கொடுப்பனவு சூத்திரங்களை ஏற்க முடியவில்லை, இதன் விளைவாக சில ஊழியர்கள் கணக்கிடப்பட்ட தொகையில் நான்கில் மூன்று பங்கு (3/4) மற்றும் மற்றவர்கள் ஆறில் ஐந்து (5/6) பெறுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

சுமார் 23,000 அஞ்சல் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 2027 இன் முழு அடிப்படை வேதனத்தின் அடிப்படையில் 5/6 ஊதிய மாதிரி ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

அஞ்சல் துறையின் நிர்வாக அலுவலகங்களில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள கைரேகை அடிப்படையிலான வருகை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் அவர் குறிப்பிட்டார். மத்திய அஞ்சல் பரிமாற்றத்தில் உள்ள ஒரு சிறிய குழு ஊழியர்கள் மட்டுமே இணங்க மறுத்துள்ளதாகவும் இந்த நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அமைச்சர் கூறினார்.

திறைசேரி நிதியைப் பயன்படுத்தி வேதனத்தையும், மேலதிக நேரக் கொடுப்பனவையும் அதிகரித்துள்ளோம். இந்த அதிகரிப்புகள் இருந்தபோதிலும், ஒரு ஊழியர் கைரேகை முறையைப் பயன்படுத்த மறுத்தால், அதை நாங்கள் அனுமதிக்க முடியாது என்று அவர் கூறினார்.

இதனால் மேலதிக நேரக் கொடுப்பனவுகளில் மேலும் அதிகரிப்பு இல்லை மற்றும் கைரேகை முறையை நீக்குவதில்லை என்ற தீர்மானத்துக்கு இணங்கும் அஞ்சல் ஊழியர்கள் பணியில் இருப்பார்கள் எனவும் ஏற்க முடியாதவர்கள் வேறு இடங்களில் வேலை தேடலாம் என்று அவர் கூறினார்.

இரண்டையும் முழுமையாக ஏற்றுக்கொண்ட பின்னரே நாங்கள் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடத் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நடுவானில் தீப்பற்றிய விமானம் : நூலிழையில் தப்பிய பயணிகள்!!

கிரீஸில் இருந்து ஜெர்மனி சென்ற போயிங் 757 விமானம் நடுவானில் தீப்பற்றியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் விமானம் அவசரமாக இத்தாலிக்கு திருப்பிவிடப்பட்டதுடன், பயணிகள் பாதுகாப்பாக தரை இறங்கப்படதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 16ஆம் திகதி கிரீஸ் நாட்டின் கோர்புவிலிருந்து ஜெர்மனிக்கு செல்லும் போயிங் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென தீப்பற்றியுள்ளது.

விமானத்தில் 273 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்ததாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

விமானம் புறப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பின்னர் இந்த சம்பவம் நடந்த நிலையில், இத்தாலியின் பிரிண்டிசி நகரில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு!!

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்தநிலையில், தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (19.08) சற்று குறைவடைந்துள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது இன்று 1,006,015 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,490 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 283,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,540 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 260,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,060 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 248,450 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடன் அட்டைகளின் பாவனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கையில் புதிய செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 10,934 அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

புதிய அட்டைகள் சேர்க்கப்பட்டதன் மூலம், ஜூன் மாத இறுதியில் நாட்டில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 2,075,744 ஆக அதிகரித்துள்ளது.

மே மாத இறுதியில் இது 2,064,810 ஆக இருந்தது, இது 0.52 வீத அதிகரிப்பாகும். இதற்கிடையில், இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை, 3.36 வீதம் அதிகரித்துள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

இ.போ.ச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : ஒருவர் படுகாயம்!!

நானுஓயா பெரகும்புர வீதியில் செவ்வாய்க்கிழமை (19) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பெரகும்புர பகுதியில் இருந்து நானுஓயா நோக்கி சென்று கொண்டிருந்த இ.போ.ச பேருந்தும் நானுஓயாவிலிருந்து பெரகும்புர நோக்கி எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் எடின்புரோ பகுதியின் தோட்ட முகாமையாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இ.போ.ச பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன நானுஓயா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தோழிகளுடன் குளிக்க சென்றதில் விபரீதம்… ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழப்பு!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், விடுமுறை நாள் என்பதால் தங்களது தோழிகளுடன் சேர்ந்து ஒன்றாக குளிக்க சென்ற போது ஏரியில் மூழ்கி 2 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கீழ்மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (41). இவரது மகள் சாரு நேத்ரா (13). காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் நேத்ரா 8ம் வகுப்பு படித்து வந்தார்.

நேத்ராவின் வீட்டிற்கு திருவிழாவில் உறவினர்கள் குடும்பத்துடன் வந்திருந்த நிலையில், சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த பி.சி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி நீலாஸ்ரீயும் (17) வந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை நீலாஸ்ரீ, சாரு நேத்ரா மற்றும் நேத்ராவின் தோழிகள் என 5 பேர் ஒன்றாக சேர்ந்து, குளிப்பதற்காக கீழ்மத்தூர் அருகேயுள்ள செட்டியார் வட்டம் ஏரிக்கு சென்றுள்ளனர்.

மாணவிகள் அனைவரும் குளித்துக் கொண்டிருந்த போது, நேத்ராவும், நீலாஸ்ரீயும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து உயிருக்கு போராடிய படியே கூச்சலிட்டனர். இதனை பார்த்ததும் உடன் வந்த தோழிகள் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். அதற்குள் இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.

மாணவிகளின் கூச்சல் கேட்டு அங்கு விரைந்து சென்ற அக்கம்பக்கத்தினர், உடனடியாக ஏரிக்குள் இறங்கி 2 மாணவிகளையும் தேடினர்.

சிறிது நேரத்தில் நீலாஸ்யும், சாரு நேத்ராவின் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

12வது மாடியிலிருந்து குதித்து பெண் மருத்துவர் விபரீத முடிவு!!

சமீப காலங்களாக தமிழகத்தில் திருமணமான புதுமண தம்பதியர் தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணிக்கையும், விவாகரத்து பெறும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் திருமணமான மூன்று மாதங்களிலேயே சென்னை பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 12வது மாடியில் இருந்து கீழே குதித்து பெண் மருத்துவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதீஸ்வரி (30). மருத்துவரான இவர் சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்தபடியே மீனம்பாக்கத்தில் உள்ள சி.ஜி.எச்., மத்திய அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இவருக்கும் ராமநாதபுரத்தை சேர்ந்த ஐ.டி., ஊழியரான யுதிஸ்வரன் (34) என்பவருக்கும் இடையே கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணமான மூன்று மாதங்களிலேயே இருவருக்கும் கருத்துவேறுபாடு எழுந்த காரணமாக யுதிஸ்வரன், மனைவியை பிரிந்து சொந்த ஊருக்கே சென்று வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தொடர் விடுமுறை என்பதால் பெருங்களத்தூர் 12 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தனது சகோதரி முத்துலட்சுமி வீட்டிற்கு சென்ற ஜோதீஸ்வரி, அன்று மாலை வீட்டிற்கு புறப்படுகையில், லிப்டில் இருந்து கீழே இறங்காமல் மொட்டை மாடிக்கு சென்று,

அங்கே தனது செருப்பு, கைப்பையை கழற்றி வைத்துவிட்டு, 12வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த பீர்க்கன்காரணை போலீசார்,

ஜோதீஸ்வரியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோகத்தில் முடிந்த சுற்றுலா பெண் உட்பட 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் நண்பர்கள் 12 பேர் ஒன்று சேர்ந்து பெங்களூரில் இருந்து டெம்போ டிராவலர் வண்டியில் இன்ப சுற்றுலாவாக பாண்டிசேரிக்கு வந்துள்ளனர்.

பாண்டிச்சேரியில் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்து விட்டு, ஆனந்தமாக கடற்கரையில் செல்ஃபி புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்து, கடலில் குளிப்பதற்காக இறங்கி ஆட்டம் போட்டனர்.

அந்த பகுதியில் ஆழம் அதிகம் என்றிருந்த எச்சரிக்கை கயிற்றை கவனிக்காமல் அதைத் தாண்டியும் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடலில் குளித்தவர்களில் பெண் என்ஜினியர் உட்பட 5 பேர் திடீரென கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர்.

கர்நாடகாவைச் சேர்ந்த மேகா (29), ஹூப்ளியைச் சேர்ந்த மேத்தி (23), குஜராத்தைச் சேர்ந்த அதிதி (23), ஜீவன் (23), விஜயவாடாவைச் சேர்ந்த பவன்குமார் (25) உட்பட 12 பேர் ஒரு டெம்போ டிராவலர் வாகனத்தில் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த நிலையில் அரியாங்குப்பம் அருகே சின்னவீராம்பட்டினத்தில் உள்ள “ஈடன்” கடற்கரையில் குளித்த போது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.

அலையில் சிக்கிய மேகா, பிரட்சுவால் மேத்தி, பவன்குமார், அதிதி, ஜீவன் ஆகிய 5 பேரும் கூச்சலிட்ட நிலையில் அருகில் நின்ற நண்பர்களும், பொதுமக்களும் காப்பாற்ற முயன்றனர்.

அங்கிருந்த மீனவர்கள் கடலில் இறங்கி மூழ்கிய 5 பேரையும் கடற்கரைக்கு இழுத்து வந்த நிலையில், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் 3 பேர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

மேகா, மேத்தி, பவன்குமார் ஆகிய 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சந்தோஷமாக சுற்றுலா வந்த நிலையில், நண்பர்கள் 3 பேரை பறிகொடுத்த துயரம் சோகத்தில் ஆழ்த்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆங்கிலத்தில் பேசாதே தமிழில் பேசு அம்மா : வைரலாகும் சிறுவன்!!

தாய் ஒருவர் தன் மகனிடம் ஆங்கிலத்தில் பேசியபோது ஆங்கிலத்தில் பேசாதே… தமிழில் பேசு அம்மா என சிறுவன் அழுது அடம்பிடிக்கும் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

சிறுவன் ஒருவனிடம் அவனுடைய தாய் ஆங்கிலத்தில் பேசுகிறார். அது பிடிக்காமல், அந்த சிறுவன் அழுது கொண்டே, ஒழுங்கா பேசுமா என கூறுகிறான். அதற்கு, அழக்கூடாது என ஆங்கிலத்தில் கூறியபடியே, ஒழுங்காக என்றால் எப்படி? என அவர் தமிழில் கேட்கிறார்.

அதற்கும் தமிழில் பேசு அம்மா என கூறி சிறுவன் அடம்பிடிக்கின்றார் பள்ளியில் ஆசிரியர் எப்படி பேசுவார்கள்? தமிழிலா அல்லது ஆங்கிலத்திலா என கேட்க, சிறுவன் யோசித்தபடி ஆங்கிலத்தில் என பதில் கூறுகிறான்.

உடனே அந்த தாய், அதனால் நானும் ஆங்கிலத்திலேயே பேசுகிறேன் என ஆங்கிலத்தில் கூற, அதற்கு சிறுவனோ நான் சொன்னத கேளு என மழலையாக கூறுகிறான். இந்நிலையில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடியோவை பார்வையிட்டு உள்ளனர்.

தற்போதைய காலகட்டத்தில் தமிழில் பேசுவதை தவிர்த்து ஆங்கிலம் கலந்த தமிழிலேயே பலரும் பேசி வருகின்றனர்.

அலுவலகங்களில்ம் , வெளியேறும் ஏன் வீடுகளிலும் இதே நிலமைதான். இந்நிலையில் தமிழில் தாயை பேசவைக்க சிறுவன் அழுது அடம்பிடிக்கும் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

வயல்வெளியில் ஆடையின்றி கிடந்த சடலத்தால் பரபரப்பு!!

பதுளை, கைலகொட முதியோர் இல்லத்திற்கு அருகிலுள்ள வயல்வெளியில் இன்று (18) காலை மர்மமான முறையில் இறந்த ஒருவரின் சடலம் ஆடையின்றி கண்டெடுக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயலின் உரிமையாளர் வயலுக்கு வந்தபோது குறித்த நபரின் உடலைக் கண்டு, பின்னர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

பதுளை பொலிஸ் அதிகாரிகள் சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். இறந்தவர் சுமார் 65 வயதுடைய ஒருவராக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பதுளை பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விசித்திர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞன் : ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பரபரப்பு!!

போக்குவரத்து சமிஞ்ஞை கம்பத்தில் நபரொருவர் ஏறியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு – ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரே உள்ள போக்குவரத்து சமிக்ஞை கம்பத்தின் மேல் நபரொருவர் இன்று ஏறியுள்ளார்.

போக்குவரத்து சமிஞ்ஞை மேல் ஏறிய நபர் விசித்திரமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதால் ஜனாதிபதியை சந்திப்பதற்கான ஓர் ஆர்ப்பாட்டமாக இருக்கலாம் என்று பேசப்பட்டு வருகின்றது.

எனினும் குறித்த நபர் சமிஞ்ஞை கம்பத்தில் ஏறியதற்கான காரணம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. திடீரென நபரொருவர் சமிஞ்ஞை கம்பத்தின் மேல் ஏறியிருந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போக்குவரத்து சமிஞ்ஞைக் கம்பத்தில் ஏறியிருந்ததால் போக்குவரத்தில் மக்களுக்கு சிரமமும் ஏற்பட்டுள்ளது. கம்பத்தில் ஏறிய நபரை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொரளையில் கடந்த வாரம் நபரொருவர் மின்விளக்குக் கம்பத்தில் ஏறியிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரை பொலிஸார் மின்தூக்கியால் மீட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று திடீரென சமிஞ்ஞை கம்பத்தில் நபரொருவர் ஏறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவில் இரு கார் மோதி கோர விபத்து!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உடையார் கட்டுப்பகுதியில் இன்று (18) காலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு கார்கள் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பயணித்த கார் ஒன்று உடையார் கட்டு பகுதியில் வீதியில் திருப்ப முற்பட்ட போது மற்றொரு காருடன் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் காரில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் மூங்கிலாறு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்ஒண்டு வருகின்றனர்.

இந்த ஆண்டில் இதுவரையில் 257 பேர் நீரில் மூழ்கி மரணம்!!

இந்த ஆண்டில் இதுவரையில் 257 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் 220 ஆண்களும் 37 பெண்களும் உள்ளடங்குவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் துணைக் காவல்துறை அத்தியட்சகர் எப்.யூ.வூட்லர் தெரிவித்துள்ளார்.

நீரில் மூழ்கிய நிலையில் உயிருக்கு போராடிய 69 உள்ளுர் பிரஜைகளும் 33 வெளிநாட்டுப் பிரஜைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் உயிர் காப்புப் பிரிவினர் இவ்வாறு நீரில் மூழ்கியவர்களை மீட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2024ம் ஆண்டில் 135 பெண்கள் உள்ளிட்ட 645 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பரீட்சயமற்ற மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நீராடுவதனை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மது போதை காரணமாக அதிகளவான நீரில் மூழ்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே சுற்றுலாப் பயணங்களின் போது மக்கள் மிகுந்த அவதானத்துடன் நீர்நிலைகளில் நீராட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.