மீன் பிடிக்கச் சென்றவர் குழிக்குள் மூழ்கி உயிரிழப்பு!!

செவனகல பகுதியிலுள்ள ஹபுருகல போதிராஜா ஏரியில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது குழியொன்றுக்குள் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் செவனகல பகுதியிலுள்ள மகாகம காலனியைச் சேர்ந்த 42 வயதான நபர் ஆவார்.

சடலம் எம்பிலிப்பிட்டி மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு உணவு வகையாக பார்க்கப்படுகின்றது. இது இயற்கையான வழியில் உடலுக்கு தேவையான வலிமையை அளிக்கும் ஒரு நல்ல உணவாகும்.

அந்த வகையில் நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு எவ்வாறான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது என நாம் இங்கு பார்ப்போம்.

மூளை மற்றும் கண்களுக்கு நன்மை பயக்கும்

நெல்லிக்காய் இயற்கையான வழியில் உடல் வலிமை பெற ஒரு சிறந்த வழியாக கருதப்படுகின்றது. இது மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நெல்லிக்காய் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. தினமும் நெல்லிக்காயை உட்கொள்வதன் மூலம், நீங்கள் வலுவான உடலையும், சிறந்த ஆரோக்கியத்தையும், கூர்மையான மூளையையும் பெறலாம்.

சளி, இருமல் மற்றும் சருமத்திற்கு நன்மை பயக்கும்

நெல்லிக்காயில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. ஒரு நெல்லிக்காய் பழத்தில் 600-700 மி.கி வைட்டமின் சி காணப்படுகிறது.

இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. சளி மற்றும் இருமலுக்கு எதிராக உடலை பாதுகாக்கிறது, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

இது மட்டுமல்லாமல், இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.

இதய ஆரோக்கியத்திற்கு உதவும்

நெல்லிக்காய் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் கொழுப்பைக் குறைக்கவும் செயல்படுகிறது,

இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் இதய நோய்களிலும் இதை உட்கொள்ளலாம்.

செரிமானத்திற்கு உதவும்

நெல்லிக்காய் செரிமான அமைப்புக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகின்றது. இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வயிற்று கோளாறுகளை போக்குவதில் குறிப்பாக நன்மை பயக்கும். இது மட்டுமல்லாமல், இது குடலை சுத்தம் செய்து வயிற்று பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிக்கிறது.

கூந்தல் ஆரோக்கியத்திற்கு நல்லது

குறிப்பாக கருப்பான மற்றும் அடர்த்தியான, நீண்ட கூந்தலை விரும்பும் நபர்கள், தினமும் ஒரு நெல்லிக்காயை உட்கொள்ளலாம். இது கூந்தலின் வேர்களை வலுப்படுத்துகிறது, முடி உதிர்தலைக் குறைக்கிறது மற்றும் பொடுகுத் தொல்லையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. நெல்லிக்காய் எண்ணெய் மற்றும் அதன் நுகர்வு முடியை பளபளப்பாக்குகிறது.

 

முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இருவர் காயம்!!

காலியில் கலேகான – கிந்தொட்ட வீதியில் லந்தெவ சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது இருவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டு யானை மீது மோதி வேன் விபத்து : 6 பேர் காயம்!!

மாத்தறை – மொனராகலை பிரதான வீதியில் தணமல்வில, கித்துல்கொட பிரதேசத்தில் காட்டு யானை மீது மோதி வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தணமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (18.08) காலை 05.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நிட்டம்புவையிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணித்த வேன் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது வேனில் பயணித்த 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, விபத்தில் சிக்கிய காட்டு யானை அருகிலிருந்த காட்டுப் பகுதிக்குள் ஓடிச் சென்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் தணமல்வில பொலிஸார் மற்றும் தணமல்வில வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இயல்புநிலை : சில செயற்ப்பாடுகள் ஸ்தம்பிதம்!!

வடகிழக்கு தழுவிய ரீதியில் இன்று(18.08.2025) கர்த்தால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் பொதுமக்களின் செயற்பாடுகள் இயல்புநிலையில் உள்ளதுடன் சில செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்ததை அவதானிக்க முடிகின்றது.

வடகிழக்கில் அதிகரித்துள்ள இராணுவப் பிரச்சன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன் கட்டில் இடம்பெற்ற சம்பவங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் திங்கட்கிழமை காலை கர்த்தால் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசுகட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்றையதினம் காலை முதல் வவுனியாவில் பொதுமக்கள் இயல்பு வாழ்கையில் ஈடுபட்டுள்ளமையினை அவதானிக்க முடிகின்றது. நகரத்தில் அநேக வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன், சில பூட்டப்பட்டும் இருந்தன.

பாடசாலைகளில் கல்விசெயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றதுடன் மாணவர்களின் வரவு குறைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. வங்கிகள் ஏனைய நிறுவனங்களின் செயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றது.

இதேவேளை கர்த்தால் போராட்டத்திற்கு வவுனியா உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர் சங்கம் தனது முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளதுடன், அவர்களது மொத்த வியாபார சந்தைக்கடைத்தொகுதி முழுமையாக மூடப்பட்டிருந்தது.

இதேவேளை பழைய பேருந்து நிலையம் மற்றும் பசார்வீதியில் உள்ள இஸ்லாமிய வியாபார நிலையங்கள் கர்த்தாலுக்கு ஆதரவினை வழங்கும் வகையில் பூட்டப்பட்டிருந்தது.

இதேவேளை புறநகரப்பகுதிகளான குருமன்காடு, செட்டிகுளம்,நெடுங்கேணி,கனகராயன்குளம்,புளியங்குளம் பகுதிகளில் அனேகமான வர்த்தகநிலையங்கள் திறந்திருந்ததுடன், சிலவர்த்தக நிலையங்கள் கர்த்தாலுக்கு ஆதரவினை தெரிவித்து பூட்டி இருந்தமையினை அவதானிக்க முடிந்தது.

வவுனியா குழுமாட்டுசந்தியில் வாராந்த சந்தை அங்குரார்ப்பணம்!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைகுட்பட்ட முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுட்களுக்கான சந்தை வாய்ப்பை வழங்கும் முகமாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைனால் நேற்று (17.08.2025) வாராந்த சந்தை குழுமாட்டுச் சந்தி – நெளுக்குளம் பகுதியில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் தலைமையில் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இச் சந்தையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச முயற்சியாளர்களின் விவசாயத்துறை, கைத்தொழில் துறைசார் உற்பத்திப்பொருட்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளின் விற்பனைப் பொருட்களையும் இன்றிலிருந்து பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் விற்பனை செய்யமுடியும் எனவும்,

இதனூடாக உற்பத்தியாளர்களின் இடைத்தரகர்களுக்கான செலவீனம் குறைக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் நுகர்வோர்களின் தேவைக்கேற்றவாறு உற்பத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு அவர்கள் தமது பொருளாதாரத்தில் முன்னேற்றமடைவதுடன் ஏனையவர்களுக்கும் வாழ்வாதாரத்தினை திடப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தை தினசரி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை தொடக்கம் மாலை வரை நடைபெறும். எனவே இந்த சந்தர்ப்பத்தை பின்பற்றி பயன்படுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் அறிவித்துள்ளார்.

குறித்த அங்குரார்ப்பண நிகழ்வில் வவுனியா நகரசபையின் முதல்வர், பிரதி முதல்வர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், தெற்கு தமிழ் பிரதேச சபையின் செயலாளர், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உப தவிசாளர், பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி, நெளுக்குளம் கிராம சேவையாளர், சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து : பெண் உட்பட இருவர் பலி : 13 பேர் காயம் : பலரது நிலை கவலைக்கிடம்!!

வவுனியா ஓமந்தை ஏ9 வீதியில் இன்று (17.08.2025) இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தமையுடன் 13 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த இலகுரக வாகனம் வவுனியா ஓமந்தை மாணிக்கர் வளவுப்பகுதியில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்குள்ளாகியது.

விபத்தின் போது குறித்த வாகனத்தில் பெண்கள் சிறுவர்கள் உட்பட 15ற்கும் மேற்ப்பட்டோர் பயணித்துள்ளனர். விபத்தினால் வாகனத்தில் இருந்த அனைவரும் வீதியில் தூக்கிவீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்திருந்தனர்.

மேலும் இலகுரக வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகிய பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கனரக வாகனம் குறித்த பட்டா ரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

இதன்போது வீதியால் பயணித்த பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தில் சம்பவ இடத்திலேயே பெண் உட்பட இருவர் உயிரிழந்தமையுடன் 13 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெண்கள், சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர். உயிரிழந்தவர்கள் முல்லைத்தீவு விசுவமடு பகுதியை சேர்ந்த யாழினி (வயது 33), சுயன் (வயது 30) என்று தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த அனைவரும் ஒரே குடும்பங்களை சேர்ந்த உறவினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்கள் கண்டியில் இடம்பெற்ற மரணவீடு ஒன்றிற்கு சென்று விட்டு மீண்டும் விசுவமடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை படுகாயமடைந்த சிறுவன் ஒருவன் உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்து தொடர்பாக வவுனியா ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

வவுனியாவில் கர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு : 3 பிரதேச சபைத் தலைவர்களும் அறிவிப்பு!

எதிர்வரும் திங்கள்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கர்த்தாலுக்கு தங்களது முழுமையான ஆதரவினை வழங்குவதாக வவுனியா வடக்கு, தமிழ் தெற்கு மற்றும் செட்டிகுளம் பிரதேசசபைகளின் தவிசாளர்கள் அறிவித்துள்ளனர்.

வடகிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரச்சன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன் கட்டில் இடம்பெற்ற சம்பவங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் திங்கட்கிழமை கர்த்தால் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசுகட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது

குறித்த கர்த்தாலுக்கு தமது பூரண ஆதரவினை வழங்குவதாக வவுனியாதெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் பா.பாலேந்திரன், செட்டிகுளம் பிரதேசசபையின் தவிசாளர் தாஜூதீன் முகமது இம்தியாஸ், வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் தி.கிருஸ்ணவேணி, ஆகியோர் தமது முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தங்களது பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர்கள்,மற்றும் ஏனைய தரப்புக்களும் குறித்த கர்த்தாலுக்கான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். நல்லூர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேரூந்தில் தீ!!

யாழ். நல்லூர் ஆலயத்திற்கு வந்தவர்களின் பஸ் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதால் அவ்விடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது.

தென்னிலங்கையில் இருந்து பஸ்ஸில் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவர்கள், நல்லூர் முத்திரை சந்தி பகுதியில், பஸ்ஸை நிறுத்தி விட்டு , நல்லூர் ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.

சாரதி பேருந்தில் இருந்த நிலையிலேயே பஸ் தீப்பற்றி எரிந்துள்ளது. விரைந்து செயற்பட்ட சாரதி தீயினை அணைக்க முற்பட்ட வேளை அது பயனளிக்காத நிலையில், அவ்விடத்தில் நின்றவர்கள், யாழ் .

மாநகர சபையின் தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் பேருந்தில் ஏற்பட்ட தீயினை அணைத்தனர்.

தீயணைப்பு படையினரின் விரைவான செயற்பாட்டினால் , பஸ்ஸினுள் தீ பெருமளவுக்கு பரவாமல் அணைக்கப்பட்டது.

இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து : ஒருவர் பலி : 22 பேர் காயம்!!

மொனராகலை, வெலியாய பகுதியில் தனியார் பஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்து சனிக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது. விபத்தில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சாரதியே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கோர வீதி விபத்தில் பலர் காயம்!!

பாதெனிய – அநுராதபுரம் வீதியில் மஹகல்கடவல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது காரில் பயணித்த பலர் காயமடைந்துள்ள நிலையில் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் சிக்கி கிராம உத்தியோகத்தர் பரிதாபமாக உயிரிழப்பு!!

மாத்தளை, கைக்காவல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை (16) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மாத்தளை – ரத்தொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய கிராம உத்தியோகத்தர் ஒருவர் ஆவார். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்புலன்ஸில் பெண் சுகாதார ஊழியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சக ஊழியர்!!

கண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு பிராந்திய வைத்தியசாலையில், ஆம்புலன்ஸ் சாரதி ஒருவர், ஆம்புலன்ஸில் பெண் சுகாதார ஊழியரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குநரகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

பிராந்திய வைத்தியசாலையில் இருந்து கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இளம் பெண்ணை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸில் பெண் சுகாதார ஊழியர் வந்ததாகவும்,

வைத்தியசாலையில் இருந்து திரும்பி வரும் போது ஓட்டுநர் வெறிச்சோடிய இடத்தில் அவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பெண் சுகாதார ஊழியர் பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை. சாரதியின் அச்சுறுத்தல் காரணமாகவே அவர் முறைப்பாடு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ஏற்கனவே விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குநர் வைத்தியர் சேனக தலகலவை தொடர்பு கொண்டபோது, பெண் சுகாதார ஊழியர் பொலிஸில் நேற்று முறைப்பாடு அளித்துள்ளார்.

முறைப்பாடு குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், அந்தப் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக கம்பளை வைத்திசாலைக்கு அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுவனுக்கு நேர்ந்த துயரம் : சோகத்தில் மூழ்கிய குடும்பம்!!

மதுரங்குளிய, கரிகட்டிய பகுதியில் உள்ள பாடசாலை மாணவர் ஒருவர், மதுரங்குளிய, வெலாசிய கெமுனு ஏரியில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 12 வயது சிறுவன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

வேலாசிய கெமுனு ஏரியில் நீந்துவதற்காக கரிகட்டிய பகுதியில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்குச் சென்ற மாணவன், வழுக்கி விழுந்து ஏரியின் படிகளில் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டான்.

குழந்தை நீரில் மூழ்கி தண்ணீரில் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்ட அவரது அத்தை தண்ணீரில் குதித்து குழந்தையைக் காப்பாற்ற முயன்றார்,

ஆனால் நீந்தத் தெரியாததால் அவரும் நீரில் மூழ்கினர். அத்தையும் குழந்தையும் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தபோது, சம்பவ இடத்தில் இருந்தவர்கள் அலறினர்.

அருகில் இருந்தவர்கள் விரைந்து ஓடி வந்து குழந்தையையும் அத்தையும் மீட்டு புத்தளம் ஆதார மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருப்பினும், குழந்தையை காப்பாற்ற முடியவில்லை, அத்தை ஆபத்தான நிலையில் புத்தளம் ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த தனியார் பேருந்து!!

யாழ்ப்பாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. நல்லூர் – கிட்டுப்பூங்கா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பேருந்தில் தீ பற்றியதைத் தொடர்ந்து யாழ். மாநகர சபையின் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து 18 பேர் பலி : 9 பேர் படுகாயம்!!

வட ஆப்பிரிக்க நாடான அல்ஜிரியாவின் தலைநகர் அல்ஜியர்ஸ். இங்குள்ள ஆற்றில் பயணிகள் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர், நீண்ட நேரம் போராடி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த, 18 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அதிவேகமாக சென்ற பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது என்பது விசாரணையில் தெரியவந்தது.