21 வயது இளம் பெண் எடுத்த விபரீத முடிவு.. கதறித் துடித்த பெற்றோர்!!

சென்னையில்..

சென்னை ஆவடி திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவரது மனைவி சுபா. இவர்களின் மகளான ஸ்வேதா. இவர் சத்யபாமா கல்லூரியில் பி.காம் பட்டபடிப்பை முடித்துவிட்டு பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலைக்கு நேர்முக தேர்வுக்கு சென்று வந்தார்.

இதுவரை எங்கும் வேலை கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் அம்பத்தூரில் உள்ள நிறுவனத்தில் நேர்முக தேர்வுக்கு சென்ற அவர், இதிலும் தேர்வாகாமல் சோர்வாக வீடு திரும்பியுள்ளார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த ஸ்வேதா தாய் சுபாவிடம் போனில் பேசிவிட்டு உறங்குவதாக கூறி அறைக்கு சென்றார். வீட்டிற்கு அவரது பெற்றோர் வந்து பார்த்தபோது மகள் சுவேதா தூக்கில் சடலமாக தொங்கியபடி இருந்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கதறித்துடித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஸ்வேதா பள்ளி அளவில் 12ம் வகுப்பில் முதலிடம் பிடித்தவர் படித்து முடித்து வேலை கிடைக்காமல் இருந்ததால் விரக்தி அடைந்துவிட்டார்.

அவருடைய தங்கை நல்ல நிறுவனத்தில் வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இதனால் வீட்டிற்கு மூத்தவளாக இருந்தும் ஏதும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கமும் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யுவதி அதிரடியாக கைது!!

கட்டுநாயக்கவில்..

கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யப்படாத முகவரகத்தின் ஊடாக கட்டாரில் வீட்டுப் பணிப் பெண்ணாக சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சித்த யுவதியே கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டாரில் 21 வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்களை மட்டுமே வீட்டு சேவைக்கு பரிந்துரைக்க முடியும். ஆனால் மோசடியான முறையில் கட்டாருக்கு செல்ல முயற்சித்த யுவதி மொரட்டுவையில் வசிக்கும் 20 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

நேற்று காலை 10.30 மணியளவில் டோஹா நோக்கிப் புறப்படும் Qatar Airways விமானமான QR-665 இல் ஏறுவதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.இந்த விமானத்தில் பயணிப்பதற்கு தேவையான அனுமதியை முடித்துவிட்டு ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு குடிவரவு கவுண்டருக்கு வந்துள்ளார்.

கத்தாரில் பணிபுரிய விசா பெற்றிருந்தாலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் அந்தப் பணிக்கான பதிவு, அந்நாட்டு வேலைவாய்ப்பு முகவருடன் செய்துகொள்ளப்பட்ட வேலைவாய்ப்பு ஒப்பந்தம், பயிற்சி சான்றிதழ் ஆகியவை இல்லாததால் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், இந்த யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச் வந்ததாகவும் யுவதிக்கு 21,500 ரூபா வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.மேலும், இந்த யுவதி வேலைக்காக புறப்படுவதற்காக விமான நிலையத்தின் புறப்படும் முனையத்திற்குள் பிரவேசித்த போது, ​​இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளிடம் சிக்கவில்லை.

கைது செய்யப்பட்ட யுவதி மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மகளை காதலித்த இளைஞனுக்கு நடு வீதியில் அதிர்ச்சி கொடுத்த தாய்!!

நுவரெலியாவில்..

நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட கினிகத்தேன பிரதேசத்தில் இளைஞன் மீது பெண் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.தனது மகளுடன் காதல் உறவில் ஈடுபட்ட 19 வயதுடைய மாணவனை மகளின் தாயார் கூரிய கத்தரிக்கோலால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் கினிகத்தேனை நகரில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு முன்பாக மாணவிக்கும் அவரது தாயாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலைலேயே தாயாரின் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். கத்தரிக்கோலால் குத்தப்பட்டதில் 13ம் வகுப்பு மாணவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மாணவனை கத்தரிக்கோலால் குத்திய பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பணியாற்றிய இளம் பெண் பலி : கரடி பொம்மையுடன் அடக்கம் செய்யப்பட்ட உடல்!!

தம்புள்ளையில்..

தம்புள்ளையில் கடந்த 11 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றன.யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொஸில் நிலையத்தில் பணியாற்றிய நிலையில், விடுமுறைக்காக தம்புள்ளைக்கு திரும்பியிருந்தார்.

இந்நிலையில் சகோதரரின் பிள்ளைகளுக்கு பொம்மைகள் வாங்குவதற்காக கடைக்கு சென்ற வேளையில், டிப்பர் வாகனத்துடன் மோதியதில் விபத்துக்குள்ளானார்.சம்பவ இடத்தில் பலத்த காயமடைந்த கான்ஸ்டபிள், தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு 25 வயது.

கான்ஸ்டபிள் மிகவும் விரும்பிய கரடி பொம்மையும் அவரது சடலத்திற்கு அருகிலேயே வைத்திருந்தது பெரும் எண்ணிக்கையிலான மக்களின் கண்ணீரை வரவழைத்த சம்பவம் என அங்கிருந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கரடி பொம்மையுடனும் பொலிஸ் மரியாதையுடனும் அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.பெருந்திரளான பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணி வகுப்புக்கு மத்தியில் பூரண பொலிஸ் மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன.

மன்னாரில் சிறுமி பாலியல் வன்புணர்வு : மூன்று இளைஞர்கள் கைது!!

மன்னாரில்..

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராமம் ஒன்றில் 17 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிய மூவர் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் – பெரிய காமம் பகுதியை சேர்ந்த 23,18,17 வயதுடைய இளைஞர்கள் மூவரே மேற்படி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மூன்று நபர்களும் சிறுமியின் நிர்வாண புகைப்படத்தை வைத்திருந்ததோடு அப்புகைப்படங்களை வைத்து சிறுமியை மிரட்டி வன்புணர்விற்கு உள்ளாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதேவேளை சம்பவத்தின் பிரதான குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் வாகன திருத்தகம் ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடைய நபர் சிறுமியை வன்புணர்விற்கு உள்ளாக்கியதுடன் அவரிடம் இருந்து 2000 ரூபாய் பணத்தையும் வலுக்கட்டாயமாக அபகரித்து சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரின் தாயார் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மன்னார் பொலிஸார் குறித்த சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனையடுத்து மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பில் ஓர் இரவில் நடந்த பெரும் துயரம் : கதறி அழும் பெண்கள்!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு – மாதவனை பகுதியில் மாடுகளை கட்டி வைக்கும் பட்டிக்குள் இருந்த பொருட்கள் எரிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கதறியழுது தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் பண்ணையாளர்களின் மனைவிமார் உள்ளிட்டோர் இன்றைய தினம் (14.10.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எமது கணவன்மாரை மயிலத்தமடு – மாதவனைக்கு அனுப்பிவிட்டு எப்படி நாம் கூலியை வாங்கிக் கொண்டு இருப்பது?கொலை செய்வதற்கான சாத்தியம் நிச்சயமாக இருக்கிறது இரவில் நடந்த சதித்திட்டத்தை பார்க்கும் போது.

வாடிகளை தீ வைத்து இப்படியான பிரச்சினைகளை ஏன் உருவாக்குகின்றீர்கள்?நாம் போராட வரவில்லை, இனக்கலவரத்தை ஏற்படுத்த வரவில்லை, மயிலத்தமடு மேய்ச்சல் தரையை தருமாறு கேட்கவே போராடுகிறோம். இதற்கான தீர்வு கிடைக்காவிட்டால் எமக்கான தீர்வு வரும் வரை நாம் போராடிக் கொண்டே இருப்போம் என தெரிவித்து கதறியழுதுள்ளனர்.

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் தங்களது நில மீட்புக் கோரிவரும் நிலையில் அப்பகுதிகளி்ல் பெரும்பான்மை இனத்தவர்களின் அடாவடி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில், நேற்றையதினம் (14.10.2023) மயிலத்தமடு மாதவனை பகுதியில் மாடுகளை கட்டி வைக்கும் பட்டிக்குள் உள்நுழைந்த சிங்கள பேரினவாதிகள் அங்குள்ள பொருட்களை நாசம் செய்து எரித்து விட்டு சென்றுள்ளனர். குறித்த பகுதிக்கு அருகில் உழவு வேலை செய்து கொண்டிருந்த சிங்களவர்கள் மது போதையில் தமது வாடிக்குள் உள்நுழைந்ததாகவும், தமது உடமைகளை களவாடியும் எரித்தும் சென்றதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், தம்மை தாக்கும் விதத்தில் வந்த அந்த கும்பலிடம் இருந்து தாம் தப்பித்து சென்றதாகவும் அவ்வாறு தப்பி ஓடாமல் விட்டால் தமது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.இவ்வாறு பல அச்சுறுத்தலின் மத்தியில் கால்நடைகளை மேய்க்கும் தமக்கு நியாயம் கிடைக்காதா எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புகையிரத்துடன் மோதி இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!!

திருகோணமலையில்..

திருகோணமலை – மட்கோ பகுதியில் தொடருந்துடன் மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாலையூற்று பகுதியில் உள்ள தொடருந்து தண்டவாளத்திற்கு அருகில் இளைஞரொருவர் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் தொடருந்துடன் மோதியதாக தெரியவருகிறது.

இச்சம்பவத்தில் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த அபயரத்னகே தரிந்து அசங்க (வயது 23) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.போதைப்பொருள் பாவனையின் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று விசாரணையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் தோல்வியால் 17 வயது மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

மத்துகமவில்..

மத்துகம பிரதேசத்தில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய பாடசாலை மாணவன் உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படும் நிலையில், மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.காதல் உறவினால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

வீட்டின் பின்புறமுள்ள ரம்புட்டான் மரத்தில் தூக்கிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தூக்கிட்ட மாணவனின் குடும்பத்தினர் மாணவனையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் யசஸ் ஆதித்ய விதான என்ற 17 வயது மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.

கணவருடன் தகராறு.. கோபம் தலைக்கேறிய இளம் மனைவி எடுத்த கொடூர முடிவு!!

நாமக்கல்லில்..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 31). இவரது கணவர் நாகராஜ். இவர்களுக்கு 14 வயது மற்றும் 11 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த 5 வருடங்களாகவே கருது வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து தனித் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதேபோல், சேலம் தாதகாபட்டி பகுதியை சேர்ந்தவர் தமிழழகன் (31) 14 வருடங்களுக்கு முன்பு மேட்டூரைச் சேர்ந்த வினோதினி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக வினோதினி மற்றும் குழந்தைகளை விட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த ஜெயலட்சுமியுடன் மனைவியை பிரிந்து வாழ்ந்த தமிழழகனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அம்மாபேட்டை பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.

இந்த நிலையில், 9ம் வகுப்பு படித்து வரும் ஜெயலட்சுமியின் மூத்த மகள் பள்ளி மாதாந்திர தேர்வில் இரண்டு பாடத்தில் தோல்வியடைந்தது காரணமாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் வீட்டில் தங்களது கைகளில் கிடைத்த பொருட்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாங்கிக்கொண்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஒரு கட்டத்தில் கோவத்தின் உச்சத்துக்கே சென்ற ஜெயலட்சுமி ஆத்திரத்தில் வீட்டில் உடைந்து கிடந்த பீர் பாட்டிலை எடுத்து தன்னைத் தானே கழுத்தில் குத்திக் கிழித்துள்ளார். இதில் ஜெயலட்சுமியின் கழுத்தில் இருந்து ரத்தம் வீடு முழுவதும் சிதறி ரத்த வெள்ளத்தில் அவரது உயிர் பிரிந்துள்ளது.

இதய பாதிப்பால் இறந்த குழந்தை.. சோகத்தில் தாய், தந்தை அடுத்தடுத்து எடுத்த விபரீத முடிவு!!

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் அங்கம்பட்டி அருகே உள்ள குண்டுப்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜலபதி (25). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள தனியார் கல் குவாரியில் லாரி ஓட்டி வந்தார்.

அப்போது, இவருக்கு, கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டம் தெங்கபட்டிணம் அருகே உள்ள கீழ் காட்டுவிளை கிராமத்தை சேர்ந்த சம்ரோபின்சன் என்பவரின் மகள் அபிசால்மியா என்கிற பொறியியல் பட்டதாரி பெண்ணுடன் ஃபேஸ்புக் மூலமாக நட்பு ஏற்படுத்து காதலாக மாறியது.

பெண் வீட்டின் எதிர்ப்பை மீறி அபிசல்மியாவை, ஜலபதி காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 2 ஆண்டுகள் கடந்த நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டால், பல்வேறு இடங்களில் சிகிச்சையளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை இறந்தது. குழந்தை உயிரிழந்ததால், மிகவும் மனஅழுத்துடன் காணப்பட்ட அபிசால்மியா, கடந்த 6-ம் தேதி, தனது கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போச்சம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பர்கூர் டிஎஸ்பி மனோகரன் விசாரணை நடத்தி வந்தார்.

இதில் தற்கொலை செய்வதற்கு முன்பு அபிசால்மியா எழுதிய கடிதத்தில், “என் சாவுக்கு யாருமே காரணமில்லை. முழுக்க முழுக்க நான்தான் காரணம். எல்லாருமே என்னை நல்லா தான் பார்த்துகிட்டாங்க.

ஆனாலும் எனக்கு என் பாப்பாவ பார்க்கணும். அவ கூடவே இருக்கனும்னு தோனுது. என்ன மன்னிசிருங்க. என் சாம்பல என் ஊரு (கன்னியாகுமரி) கடல்ல கரைச்சிடுங்க. அது தான் என் கடைசி ஆசை.

யாருமே எந்த விஷயத்திலயும் என்னை நினைக்க வேண்டாம். அப்படியே மறந்துடுங்க. எந்த சடங்கு, சம்பிரதாயமும் பண்ண வேண்டாம். வந்தேன், போய்ட்டேன், அவ்வளவுதான். என் அண்ணன, அப்பாவ கடைசி வர பாக்காமலேயே போறேன் அது தான் ரொம்ப கஷ்டமா இருக்கு.

இப்படிக்கு அபிசல்மியா” என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அபிசால்மியாவின் சடலத்தை உடற்கூறு ஆய்விற்கு பின், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, கன்னியகுமரியில் உள்ள வீட்டிற்கு எடுத்து சென்று அவர்கள் அடக்கம் செய்தனர்.

இந்நிலையில், தனது குழந்தையும், மனைவி உயிரிழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஜலபதியும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பர்கூர் டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும், ஜலபதி தற்கொலைக்கு முன்பாக எழுதிய உருக்கமாக 4 பக்கத்தில் கடிதம் எழுதி உள்ளார். அதில், “என்னால் என் மனைவி அபியை பிரிந்து இருக்க முடியவில்லை. எனக்கு என்னுடைய அபி, பாப்பாவை பார்க்கனும் போல இருக்கு. அவள் எங்கு சென்றாலோ அங்கு நானும் செல்கிறேன்.

லவ் யூ ஷோ மச் அபி. என்னை எல்லோரும் மன்னித்து விடுங்க அப்பா பிளீஸ் பா. அபியை எங்கு அடக்கம் செய்தார்களோ அங்கு என்னையும் அடக்கம் செய்யுங்கள். இதுதான் என்னுடைய கடைசி ஆசை. எனக்கு எந்த ஒரு சடங்கு செய்ய வேண்டாம். நீங்கள் பார்த்து பத்திரமாய் இருங்கள்.

செம்பா கண்ணுகுட்டியை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். சங்கி நீ நன்றாக இருப்பாய். என்னுடைய அப்பா அம்மா மாதிரி இந்த உலகில் யாருக்கும் அமையாது. என்னுடைய அபி எனக்கு சாமி ஷோ நான் என்னுடைய சாமியிடம் செல்கிறேன். அபி இல்லாத உலகம் எனக்கு வேண்டாம்.

இது என்னுடைய சுயமான முடிவு. அம்மா உன்னிடம் ஒரு பொய் சொல்லிட்டேன். நைட் அபி என்னை கூப்பிட்டா. நீயும் வா நான் பாப்பாவிடம் தான் இருக்கிறேன் என்று. எங்களுக்கு பயமாக இருக்கு என்று. எனக்கு இறப்பதற்கு பயமாய் தான் இருக்கு. அவள் இல்லாத உலகில் எனக்கு மட்டும் என்ன வேலை.

அதனால் தான் இந்த முடிவு. லவ் அண்டு லவ் ஒன்லி. அபிசல்மியா, ஜலபதி, பிரணிதா. திஸ் லவ் ஸ்டோரி என்ட் டுடே” என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் குழந்தை, தாய், தந்தை அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம், போச்சம்பள்ளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கின்னஸ் சாதனை படைத்த பூசணிக்காய்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் பூசணிக்காய் வளர்க்கும் போட்டியில் உலகின் மிகப்பெரிய பூசணிக்காவுக்கு 30,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பூசணிக்காய் வளர்ப்பதில் விவசாயிகளுக்கு இடையே போட்டி நடைபெறுவது வழக்கமாக காணப்படுகிறது.

அந்தவகையில், கலிபோர்னியா மாநிலத்தில் ஹாஃப் மூன் பே (Half Moon Bay) பகுதியில் 50 ஆவது போட்டி நடைபெற்றுள்ளது.இந்த போட்டியில், தங்களுடைய விவசாய நிலங்களில் பூசணிக்காய் வளர்க்கும் பல விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தப்போட்டியில் கலந்து கொண்ட மின்னசோட்டா மாநிலத்தை சேர்ந்த தோட்டக்கலை வல்லுனரும், பயிற்சியாளருமான 43 வயதுடைய டிராவிஸ் கிரெய்கர் என்பவர் மிகப்பெரிய பூசணிக்காய் வளர்த்தமைக்காக போட்டியின் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவருடைய பூசணிக்காயின் எடையானது 1,247 கிலோகிராம் ஆகும் என்பதுடன் இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பூசணிக்காய் வளர்ப்பு உள்ளிட்ட விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

வவுனியா வேப்பங்குளத்தில் பாதசாரிகள் கடவையை கடக்க முயன்ற மாணவனை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி!!

வவுனியா வேப்பங்குளம் 8ம் ஒழுங்கைக்கு அண்மித்த பகுதியில் இன்று (13.10) மதியம் பாதசாரிகள் கடவையினை கடக்க முயன்ற மாணவனை முச்சக்கரவண்டி மோதியதில் மாணவன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாகவுள்ள பாதாசாரிகள் கடவையினை பாடசாலை மாணவன் ஒருவர் கடக்க முயன்ற சமயத்தில் நெளுக்குளம் பகுதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மாணவனை மோதித்தள்ளியது.

இவ் விபத்தில் பாடசாலை மாணவன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான ஆரம்ப கட்ட விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டில் இலங்கைப் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

சவூதயில்..

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கைப் பெண் ஒருவரை, அவர் வேலை செய்த வீட்டின் எஜமானரும் எஜமானியும் இணைந்து உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தில் கொத்தடுவ புதிய நகரைச் சேர்ந்த 45 வயதுடைய நயனா தில்ருக்ஷி என்ற பெண்ணே இந்தச் சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.

சுமார் 7 மாதங்களுக்கு முன்னர் தான் இந்த துரதிஷ்டவசமான சம்பவத்தை எதிர்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.சவூதி அரேபியாவில் உள்ள மருத்துவமனையில் பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததாகவும், பின்னர் சவூதி பொலிஸாரின் தலையீட்டில் தான் தடுப்பு மையத்துக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் கடும் சிரமங்களுக்கு மத்தியில் சுமார் ஒன்றரை மாதங்களாக தடுப்பு முகாமில் வாழ்ந்து வருவதால், தம்மை விரைவில் இலங்கைக்கு அழைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா சிவப்பு அபாய வலயத்தில் : மக்களுக்கு எச்சரிக்கை!!

வவுனியாவில்..

மின்னல் தாக்கக்கூடிய சிவப்பு அபாய வலயத்தில் வவுனியா மாவட்டம் இருப்பதனால் இன்று இரவு 11.30 மணி வரை மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,இடியுடன் கூடிய மழையின் போது பொதுமக்கள் நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும்.

அத்துடன் மின் சாதனங்களைப் பயன்படுத்துவதையும், சைக்கிள்கள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ. அளவிலான மழை பெய்யும் என்றும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதன்போது ஏற்படும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நியூசிலாந்து தேர்தலில் களமிறங்கும் யாழ்ப்பாண தமிழர்!!

நியூசிலாந்தில்..

நியூசிலாந்தில் நாளை நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண தமிழர் ஒருவர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.பொதுத் தேர்தலில் தேசியக் கட்சி தேசிய வேட்பாளர் பட்டியலில் இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பொறியியல் ஆலோசகர் செந்தூரன் அருளானந்தம் போட்டியிடவுள்ளார்.நியூசிலாந்தில் பொதுத் தேர்தல் நாளை சனிக்கிழமை (14.10.2023) நடைபெறவுள்ளது.

வேட்பாளரான செந்தூரன் அருளானந்தம் இங்கிலாந்து, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் பாரிய கட்டுமான திட்டங்களில் ஆலோசகராக பணியாற்றி உள்ளார்.அத்துடன், நியூசிலாந்தில் பல்வேறு சமூகப் பணிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

இவர், யாழ். பரியோவான் (St.John’s College) மற்றும் கொழும்பு றோயல் கல்லூரிகளின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இந்த தேர்தலில் நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பிரதிநிதித்துவபடுத்திய ஆளும் தொழில் கட்சிக்கும் எதிர்க்கட்சியான தேசியக் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்த இரண்டு கட்சிகளுக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என்று அந்நாட்டில் வெளியான கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

குமார் தர்மசேனவை கைது செய்ய உத்தரவு!!

குமார் தர்மசேன..

இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், தற்போதைய சர்வதேச கிரிக்கெட் நடுவருமான குமார் தர்மசேனவே கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

நாரஹென்பிட்டி பொலிஸாருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.நாரஹென்பிட்டி பிரதேசத்தில் தனியாருக்கு சொந்தமான வீடு ஒன்றுக்குள் பிரவேசித்து வீட்டில் வசிப்பவரை ஆயுதங்கள் கொண்டு மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குமார் தர்மசேன நிறுவனம் ஒன்றின் தலைவராக கடமையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தர்மசேன, அவரது மனைவி மற்றும் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட 12 பேரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றின் முகாமைத்துவ பணிப்பாளரினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரகாரம் தர்மசேன உள்ளிட்டவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.குமார் தர்மசேன தற்போது உலகக் கிண்ண போட்டி கடமைகளில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.