
எம்.ஏ.சுமந்திரனால் எதிர்வரும் திங்கள் கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கர்த்தாலுக்கு ஆதரவு வழங்க முடியாதென வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாகசபை தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் குலசேகரம் கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமில் திருடச் சென்ற இளைஞன் ஒருவர், இராணுவத்தினரிடம் சிக்கி, தாக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பியோடும் போது முத்தையன்கட்டு குளத்தில் காணாமல் போனார். பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை கர்த்தால் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசுகட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது

குறித்த கர்த்தாலுக்கு வவுனியா மாவட்ட வர்த்தகர் சங்கம் தமது ஆதரவினை வழங்கவேண்டும் என வர்த்தகர்சங்கத்தின் பிரதிநிதிகளுடன் தமிழரசுக்கட்சியின் செயலாளர் எம்.எ.சுமந்திரன் இருதினங்களுக்கு முன்பாக நேரடியாக சந்தித்து ஆதரவை கோரியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக ஆராய்வதற்க்காக வவுனியா வர்த்தகர்சங்கத்தின் நிர்வாகசபை இன்று கூடியது. இதன்போது அநேகமான நிர்வாகசபை உறுப்பினர்கள் அன்றையதினம் வியாபார நிலையங்களை திறக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதனையடுத்து எதிர்வரும் திங்கள்கிழமை வியாபார செயற்பாடுகள் வழமை போன்று நடைபெறும் என்றும் வவுனியா வர்த்தகர்சங்கம் கர்த்தாலுக்கு ஆதரவு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளதாக அதன் தலைவர் குலசேகரம் கிருஸ்ணமூர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.





















