யாழில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (09.12.2025) உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அநுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை(9) அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் வந்துகொண்டிருந்தார்.
இதன்போது செம்மணிப் பகுதியில் வந்துகொண்டிருக்கும்போது பேருந்தின் மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயற்சித்துள்ளார்.
இதன்போது பேருந்து செம்மணி வளைவில் திரும்பும்போது கீழே விழுந்து மயக்கமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
அம்பாறை – மகாஓயா வீதியில் சமகிபுர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (09.12.2025) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாறை நோக்கிப் பயணித்த லொறி ஒன்று வீதியில் இருந்த இரண்டு காட்டு யானைகளில் ஒரு யானை மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் லொறியின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி – பியதிகம பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (09.12.2025) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காலியிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காரின் சாரதி காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நிவாரண பொருட்களை கொண்டு சென்ற கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் நேற்று (09) இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய திருமணம் முடித்து சில மாதங்களான இளைஞர் உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது.
திருகோணமலை – ஜமாலியாவில் அமைந்துள்ள தனது பெற்றோரின் வீட்டிலிருந்து, கிண்ணியாவிலுள்ள தனது மனைவியின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது, இராணுவ வாகனம் ஒன்று மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
பேரிடருக்கு மத்தியில் டிசம்பர் மாதத்தின் முதல் ஏழு நாட்களில் 43,329 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், சுற்றுலாப் பயணிகளின் வருகை முந்தைய ஆண்டை விட 2.14 மில்லியன் சுற்றுலாப் பயணிகளைப் பதிவு செய்து, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 16.3வீத அதிகரிப்பை காட்டியுள்ளது.
டிசம்பர் முதல் வாரத்தில் இலங்கையின் சுற்றுலாவிற்காக இந்தியா மிகப் பாரிய பங்களிப்பை வகித்துள்ளது. இதில் 8,890 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
ரஷ்யா 4,735, ஜெர்மனி 4,399, இங்கிலாந்து 3,053, சீனா 2,571 என்ற எண்ணிக்கையில் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அவுஸ்திரேலியா, போலந்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
டிசம்பர் மாதத்தில் 344,309 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு மையம் எதிர்பார்த்துள்ளது.
பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீள கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு 1893 மில்லியன் ரூபா நிதி உதவி கிடைத்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து இலங்கையர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மூலம் இந்த நிதி கிடைத்துள்ளதாக, அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இதனை தெரிவித்துள்ளார்.
காப்புறுதி நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சரின் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தித்வா புயலினால் சேதமடைந்த வர்த்தகங்கள் மற்றும் சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான திட்டத்தை தயாரிப்பது குறித்து இதன்போது ஆராயப்பட்டது.
அனர்த்த நிலையால் சேதமடைந்த வர்த்தகங்கள், சொத்துக்கள் மற்றும் உயிர்களுக்கு உடனடி இழப்பீடு வழங்குவதற்கான பொறிமுறையை அனைத்து காப்புறுதி நிறுவனங்களும் ஏற்கனவே ஆரம்பித்துள்ளன.
இந்த திட்டத்தின்படி,சொத்துக்களுக்கு ஏற்பட்ட சிறிய சேதங்களுக்கு உடனடி இழப்பீடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்களுக்கு ஏற்பட்ட பாரிய சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான தகவல்களைச் சேகரித்த பின்னர் இழப்பீடு வழங்கவும், முதற்கட்டாக ஒரு தொகையை வழங்கவும் காப்புறுதி நிறுவனங்கள் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளன.
மெதகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பக்கினிகஹவெல 14 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி தனது தந்தை தந்தை , தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
குறித்த சிறுமி 10 ஆம் வகுப்பில் கல்வி கற்று வருவதுடன் திங்கட்கிழமை (08) அன்று ஆடைகளை தைப்பதற்கு நகரத்திற்கு சென்று, வீட்டிற்கு தாமதமாக வந்ததற்காக அவளுடைய தந்தை திட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுமி விஷம் அருந்தியுள்ளதுடன் பின்னர், மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (09) அன்று உயிரிழந்துள்ளார்.
மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை புதன்கிழமை (10) அன்று மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது கரியப்பா மடிவாளா மற்றும் 19 வயது கவிதா, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெற்றோரால் முடிவு செய்யப்பட்ட கூட்டுத் திருமணத்துக்கான தயாரிப்பில் இருந்தனர்.
வருகிற 20-ந் தேதி இருவரின் குடும்பங்களின் கூட்டுத் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கு முன்னதாக, ‘போட்டோ சூட்’ செய்ய இருவரும் முடிவு செய்தனர்; குடும்பத்தினரும் அதற்கு சம்மதித்தனர்.
முந்தைய நாட்களில் பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டே, உம்னாபாத் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் போஸ் கொடுத்து போட்டோ எடுத்தனர். அதன்பிறகு, கங்காவதி அருகே சிக்கபெனகல் கிராமம் வழியாக வருகை தரும் போது,
நடுரோட்டில் நின்றிருந்த லாரியுடன் மோட்டார் சைக்கிள் மோதியது. மோட்டார் சைக்கிளில் இருந்து இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கவிதா சம்பவ இடத்திலேயே பலியானார்; கரியப்பா ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
சம்பவத்தை அறிந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். கங்காவதி புறநகர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்தை சென்றடைந்து, இருவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
லாரி டிரைவரைத் தேடும் முயற்சிகள் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணமக்கள் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் பேரிடரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து குறைவான விலையில் மரக்கறிகளை பெற்று, கொழும்பில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அதற்கமைய நுவரெலியாவில் 190 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும் கரட், கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஒரு கிலோ கரட் 2900-3000 ரூபாய் வரையான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நுவரெலியா பொருளாதார மையத்திலிருந்து நேற்று கொழும்புக்கு ஏராளமான மரக்கறிகள் அனுப்பப்பட்டுள்ளன. எனினும் கொழும்பில் அது அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, நுவரெலியா பொருளாதார நிலைய மேலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, ஒரு கிலோ முட்டைக்கோஸ் 150 ரூபா, கரட் 190 ரூபா, லீக்ஸ் 190 ரூபா, முள்ளங்கி 160 ரூபா, பீட்ரூட் 230 ரூபா, உருளைக்கிழங்கு 260 ரூபா, சிவப்பு உருளைக்கிழங்கு 280 ரூபா விலையிலும் கொழும்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதுடன் சீன உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் மரக்கறிகள் உட்பட 73,000 கிலோ காய்கறிகள் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை சிறப்பு பொருளாதார மையத்தில் போஞ்சி விலை கிலோவின் விலை 1,000 ரூபாயை தாண்டியுள்ளது. அதே நேரத்தில் கேரட்டின் விலையில் படிப்படியாக சரிவு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார மையம் தெரிவித்துள்ளது.
மீகொட மற்றும் வெலிசரை பொருளாதார மையங்களிலும் இதேபோன்ற நிலையே காணப்படுகிறது.
விதிவிலக்காக அதிக விலைகளிலிருந்து சில மரக்கறி வகைகள் தளர்ந்து வருகின்றன, மீகொட பொருளாதார மையத்தில், டிசம்பர் 8 அன்று காட்டப்பட்ட மொத்த விலைப் பட்டியல் குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கத்தைக் குறிக்கிறது.
ஒரு கிலோ போஞ்சி 1,100 முதல் 1200 வரை விற்பனையானது, இது விலையில் தொடர்ச்சியான உயர்வை பிரதிபலிக்கிறது. கோவாவின் விலை கிலோ ஒன்று 200 முதல் 250 வரை பதிவாகியுள்ளது. கரட்டின் விலை குறைந்து 200-250 ரூபாயாக ஆக இருந்தது.
இதற்கிடையில், கத்திரிக்காயின் விலை ஒப்பீட்டளவில் நிலையானதாக உள்ளது,
இலங்கையில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மலையத்தில் அதிகளவான உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய மண்சரிவு காரணமாக மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் பதுளையில் நேற்றிரவு மீண்டும் மண்சரிவு ஏற்பட்டமையினால் அந்தப் பகுதி மக்கள் பாதுகாப்பு தேடி தப்பிச் சென்றுள்ளனர்.
எகரிய, மீகொல்ல, மேல் பகுதியில் இன்று அதிகாலையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்தப் பகுதி மக்கள் அதிகாலை 4 மணியளவில், விளையாட்டு மைதானத்தில் ஒன்றுக் கூடியதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களை வெளியேற்றும் முயற்சிகள் இருந்தபோதிலும், பல குடும்பங்கள் அப்பகுதியில் தங்கியிருப்பதாகவும், பாதுகாப்பு மையங்களை அடைய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்ச்சரிவு ஏற்பட்ட போதிலும், அப்பகுதியில் இருந்து எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் கடுமையான மின்னல் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்று கூறப்படுகிறது. மின்னலால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
பேரிடர் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள எந்த பாடசாலைக்கும் சென்று கல்வியை தொடரும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவேவே குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பேரிடர் நிலைமையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு செல்லும்போது சீருடைகள் கட்டாயமாக்கப்படாது என்று கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தளர்வான கொள்கைகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பேரிடர் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள எந்த பாடசாலைக்கும் சென்று கல்வியை தொடரும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ள ஊட்டச்சத்து திட்டமும் 16 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும், மேலும் அதை மேலும் விரிவுபடுத்த முடியுமா என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பேரிடருக்கு பிறகு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு, சபரகமுவ மற்றும் வட-மத்திய மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும் எனவும், இருப்பினும், மூன்று மாகாணங்களைச் சேர்ந்த 147 பாடசாலைகள் திறக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி திருவையாறு பகுதியில் மணலுடன் சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (10.12.2025) பகல் இடம்பெற்றுள்ளது
திருவையாறு பகுதியில் இருந்து இரணைமடு சந்தி நோக்கி மணலுடன் சென்று கொண்ந்த டிப்பர் வாகனம் அதே திசையில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு உயர்தரப்பரீட்சை எழுதும் பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகளில் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
எனவே அருகிலுள்ள வலயக்கல்வி அலுவலகத்திற்கோ அல்லது 1911 என்ற குறுந்தகவல் எண்ணிற்கோ தகவல் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஐந்து மாகாணங்களிலும் சுமார் ஒரு இலட்சம் (101,000) மாணவர்கள் உயர்தரப் பரீட்சை எழுதுகின்றனர்.
இவர்களில் திடீர் பேரழிவு காரணமாக இறந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும், மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தற்போது உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் பலர் பாதுகாப்பு மையங்களில் உள்ளதுடன், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களின் தகவல்களும் உடனடியாகக் கண்டறியப்படும் என்றும், பின்னர் மீதமுள்ள உயர்தரப் பரீட்சை ஜனவரியில் நிச்சயமாக நடைபெறும் என்றும்,
எனவே, திகதி அறிவிக்கப்படும் வரை காத்திருக்காமல், ஜனவரி மாதத்தை இலக்காகக் கொண்டு பரீட்சைக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தனியார் விண்ணப்பதாரர்கள் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த அவர்களின் தகவல் மற்றும் அடையாள எண்ணுடன் 1911 என்ற ஹாட்லைன் எண்ணிற்கு அழைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை நடைபெற்ற திகதிகளில் பரீட்சை எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாகவும், ஆரம்ப மதிப்பீடு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.