வவுனியா மாநகரசபையின் தாண்டிக்குளம் வட்டாரத்திற்கான நடமாடும் சேவை!!

வவுனியா மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட தாண்டிக்குளம் வட்டாரத்திற்கான நடமாடும் சேவை திருநாவற்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று (12.08.2025) காலை இடம்பெற்றது.

மாநகரசபையினால் வழங்கப்படுகின்ற அனைத்து சேவைகளையும் மக்களின் பிரதேசங்களுக்கே சென்று நேரடியாக வழங்கும் நோக்கில் குறித்த நடமாடும் சேவை ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

இதன்போது இவ்வாண்டிற்கான ஆதன வரி அறவீடுகள் மற்றும் நிலுவை அறவீடுகள், நகர சபைக்கு சொந்தமான வீதி திருத்த வேலைகள், வீதி விளக்குகள்திருத்தம், சேதனப் பசளை விற்பனை, கழிவகற்றும் சேவைகள்,

மற்றும் மீள் சுழற்சிக்கான கழிவுப்பொருள் கொள்வனவு, வீதி எல்லைக்கோட்டு சான்றிதழ் வழங்குதல், ஆதன பெயர் மாற்று சேவைகள் உள்ளடங்கலாக பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன் சபையின் 2026ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட தயாரிப்பிற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்மொழிவுகளும் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த சேவையில் பெருமளவான வட்டாரமக்கள் கலந்துகொண்டு பயனடைந்திருந்தனர்.

நிகழ்வில் வவுனியா மாநகரசபையின் முதல்வர் சு.காண்டீபன், துணை முதல்வர் ப.கார்த்தீபன், மாநகர ஆணையாளர் வாகீசன், மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொது மக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையில் அரசியல்வாதி ஒருவர் சுட்டுக்கொலை!!

மீகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொட்டுவ உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம், இன்று(12.08.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் 46 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாந்த முதுன்கொட்டுவ, மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, காரில் வந்த கும்பல் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

மேலும், அவரது சடலம், ஹோமாகம மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், நிலத் தகராறுகள் தொடர்பாக சாந்த தொம்கொடுவ பலமுறை பொலிஸ் முறைப்பாடு அளித்துள்ளமை தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த மனைவியின் உடலை பைக்கில் கட்டி சொந்த ஊருக்கு கொண்டு சென்ற இளைஞன்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூரில் வசித்து வருபவர் அமித் யாதவ் இவர் நேற்று முன்தினம் தனது மனைவி கியார்ஸியுடன் சொந்த ஊரான மபி மாநிலம் கரன்பூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

தியோலாபரில் கனரக வாகனம் பைக் மீது மோதியதில் கியார்ஸி உயிரிழந்தார். இந்த விபத்தில் அமித் காயமடைந்தார்.அப்போது உடலை எடுத்து செல்ல வாகன ஓட்டிகளிடம் அமித் உதவி கேட்டிருந்தார். அவருக்கு யாருமே உதவ முன்வரவில்லை.

இதனால் தனது பைக்கில் மனைவியின் உடலை கட்டி எடுத்து சென்றுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாக்பூர்-சியோனி நெடுஞ்சாலையில் நடந்த விபத்து குறித்து மகாராஷ்டிரா போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த இடத்தில் போலீசார் சென்று பார்த்த போது வாகனத்தையோ உடலையோ காணவில்லை. நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இறுதியாக நாக்பூரில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள ஒரு பகுதியில் பைக்கை போலீசார் நிறுத்தினர். பெண்ணின் உடலை கைப்பற்றி நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆற்றில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழந்த சோகம்!!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஆற்றில் குளிப்பதற்காக இறங்கிய 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவாரூர் மாவட்டம் வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பா.ஜெயக்குமார் (30), ர.ஹரி ஹரன் (30), சே.மணிகண்டன் (30), அ.மணிவேல் (28). இவர்கள் 4 பேரும் நன்னிலத்தை அடுத்த புத்தாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

நான்கு பேரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததில், 4 பேரையும் தண்ணீர் இழுத்துச் சென்றது.

இதில் அனைவரும் தண்ணீரில் தத்தளித்த நிலையில், இவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆற்றில் இறங்கி காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் அவர்களது முயற்சி பலனளிக்காமல் 4 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்த நன்னிலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு சென்று 4 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் உயிரிழந்த மணிகண்டன், அய்யம்பேட்டை அருகே உள்ள மானந்தங்குடி ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். ஹரிஹரனுக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். மற்ற இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சருமத்தை வெண்மையாக்க கிறீம்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!!

சருமத்தை வெண்மையாக்கும் பொருட்கள் பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என்று தேசிய மருத்துவமனையின் நிபுணர் கே.டி.சி. பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சருமத்தை வெண்மையாக்கும் பொருட்களில் பெரும்பாலும் பாதரசம், ஹைட்ரோகுவினோன் மற்றும் பிற கன உலோகங்கள் உள்ளன.

அவற்றினால் உடலின் மிகப்பெரிய உறுப்பான சருமத்திற்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து சிறுவர்கள் மற்றும் இளம் தாய்மார்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய விஷக் கட்டுப்பாட்டு வாரத்துடன் இணைந்து சுகாதார மற்றும் மருத்துவ மேம்பாட்டுப் பணியகத்தில் “நாம் வெள்ளையாக இருக்க வேண்டுமா?

நாம் நோய்வாய்ப்பட வேண்டுமா?” என்ற தலைப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மருத்துவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நமது சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் அதிகப்படியான முகப்பரு, தோல் மெலிந்து இரத்த நாளங்களின் தோற்றம்,

தோல் இறுக்கம், தேவையற்ற முடி வளர்ச்சி, நிறமாற்றம், சிறுநீரக பிரச்சினைகள், புற்றுநோய் மற்றும் மனநல பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர் கூறியுள்ளார்.

அத்தகைய அழகுசாதனப் பொருட்களில் பாதரசம் இருப்பதால், அவை சருமத்தில் மெலனின் நிறமியைக் குறைக்கின்றன. மெலனின் குறைவது சூரியனின் கதிர்களால் சேதத்தை ஏற்படுத்தும்.

இந்த விடயத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம். தங்கள் தோட்டத்தில் இருந்து கிடைக்கும் கற்றாழை,

வெள்ளை சந்தனம் மற்றும் வெந்தயத்தை இயற்கையாகவே தங்கள் சருமத்தைப் பாதுகாக்கப் பயன்படுத்துவது இரசாயன அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதை விட சிறந்தது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இளம் தாய்க்கு நேர்ந்த கொடுமை : நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!!

இருபத்தி ஐந்து வயதான இளம் தாயொருவருக்கு பாலியல் சீண்டல்கள் செய்த குற்றச்சாட்டில் 70 வயதான வயோதிப மருத்துவர் ஒருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (11) அநுராதபுர உயர்நீதிமன்றத்தில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள தனியார் சிகிச்சை நிலையமொன்றில் கருப்பைப் பையினுள் பொருத்தப்பட்டிருந்த கருத்தடை சாதனமொன்றை

அகற்றுவதற்காக குறித்த மருத்துவரிடம் வந்த இளம் தாயொருவரிடம் அந்த மருத்துவர் தவறாக நடந்து கொண்டு பாலியல் சீண்டல்கள் செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனையடுத்து குறித்த மருத்துவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளனின் மூலம் குறித்த மருத்துவர் பாலியல் சீண்டல்கள் செய்த விவகாரம் நீதிமன்றத்தில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து நேற்றைய தினம் வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அந்த மருத்துவருக்கு பதினைந்து வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஐந்து லட்சம் ரூபா இழப்பீடு செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் கூடுதலாக மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுரம் திசாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான மருத்துவர் ஒருவருக்கே மேற்கண்டவாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விண்கல் மழை இன்று!!

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய விண்கல் மழை இன்று (12) நள்ளிரவு முதல் வானில் தென்படும் என விண்வெளி விஞ்ஞானியும் பொறியியல் விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்தார்.

பெர்சீட் விண்மீன் தொகுப்பில் இந்த விண்கல் மழை ஏற்படுவதால் இது பெர்சீட் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாளை அதிகாலை 5 மணியளவில் வடக்கு திசையில் இந்த விண்கல் மழை சிறப்பாகக் காணப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இந்த விண்கல் மழையின் சிறப்பு, ஒரு மணி நேரத்தில் சுமார் 100 விண்கற்களைக் காணலாம் என்பதாகும். இது மிகப்பெரிய எண்ணிக்கையாகும், ஏனெனில் சில விண்கல் மழைகளில் மட்டுமே இத்தகைய அளவு விண்கற்களைக் காண முடியும்.

பெர்சீட் விண்மீன் கூட்டம் நள்ளிரவில் அடிவானத்திற்கு மேலே தோன்றத் தொடங்கி, அதிகாலை வரை மேல்நோக்கி நகரும்.

இந்த விண்கல் மழையைப் பார்க்க சிறந்த நேரம் அதிகாலை 5 மணியளவாகும். அப்போது வடக்கே பார்த்தால், ஒரு மணி நேரத்தில் சுமார் 100 விண்கற்களைக் காணலாம் என்றும் அவர் கூறினார்.

டிரம்ப் அறிவிப்பால் தங்கத்தின் விலை சரிவு : மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!!

அமெரிக்கா இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீது வரிகளை விதிக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (11) தெரிவித்த நிலையில் , சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது சரிந்தது.

அமெரிக்காவில் மிகவும் பரவலாக வர்த்தகம் செய்யப்படும் தங்கக் கட்டிகளை வொஷிங்டன் நாடு சார்ந்த இறக்குமதி வரிகளின் கீழ் கொண்டுவரக்கூடும் என்றும்,

இது உலோகத்தின் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை பாதிக்கும் என்றும் அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு கடந்த வெள்ளிக்கிழமை தனது வலைத்தளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் ட்ரம்ப் திங்களன்று தனது சமூக ஊடகப் பதிவில், தங்கத்திற்கு வரி விதிக்கப்படாது என்று பதிவிட்டார். இந்த அறிவிப்பினை உலகளாவிய தங்கச் சந்தைகள் வரவேற்றன.

டிரம்பி இன் இந்த அறிவிப்பு இது மஞ்சள் உலோகம் உலகளாவிய வர்த்தகப் போரில் சிக்கிக் கொள்ளக்கூடும் என்ற பல நாள் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

அதேநேரம் ட்ரம்பின் பதிவிற்குப் பின்னர் நியூயோர்க்கில் திங்கட்கிழமை (11) பிற்பகல் வர்த்தகத்தில் ஸ்பாட் தங்கத்தின் விலை 1.2 சதவீதம் சரிந்து ஒரு அவுன்ஸ் $3,357 ஆக இருந்தது. அமெரிக்க தங்க எதிர்காலம் சுமார் 2.5 சதவீதம் சரிந்து $3,407 ஆக இருந்தது.

இதேவேளை, கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று (12) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 270,000 ரூபாவாக காணப்படுகிறது.

மேலும் 22 கரட் தங்கத்தின் விலையானது 248,000 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

யாழில் கோர விபத்து : பெண் பரிதாபமாக பலி!!

யாழ். தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் இன்று (12.08.2025) விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாள் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது. திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்து பயணித்துக்கொண்டிருந்த வேளை எழுதுமட்டுவாள் பகுதியில் ஏ9 வீதியில் ஏற முற்பட்ட உந்துருளியுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் எழுதுமட்டுவாள் தெற்கு பகுதியைச் சேர்ந்த 55 வயது பெண் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான உந்துருளியும் பலத்த சேதமடைந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திருகோணமலையிலிருந்து, யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பேருந்துடன், எழுதுமட்டுவாள் பகுதியிலிருந்து வந்த உந்துருளி மோதிய விபத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்ததாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

மின்னேரியா – ஹபரணை வீதியில் விபத்து : காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு!!

மின்னேரியா – ஹபரணை வீதியில் பட்டுஓயா பகுதியில் தனியார் பஸ்ஸொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (13) அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பொலன்னறுவை பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் வண்டி ஒன்றுடன் எதிர்த்திசையில் பயணித்த லொறி ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் மின்னேரிய பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை மாவட்ட பெரியாஸ்பத்திரி,ஹபரனை மற்றும் ஹிங்குரன்கொட ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஆறுபேர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த 32 பேரில் 26 பேர் சாதாரண வாட்டுக்களில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டார தகவல் மூலம் தெரியவந்துள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை மின்னேரியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் விஜயவீர தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மட்டக்களப்பு இளைஞன் மர்ம மரணம் : அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிள்!!

மட்டக்களப்பு சவுக்கடி பகுதியின் சவுக்குத் தோட்டத்திலிருந்து இளைஞன் ஒருவரது சடலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று (11.08) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் செங்கலடி கணேச கிராமத்தைச் சேர்ந்தவரும் ஏறாவூர் பகுதியில் தங்க ஆபரண கடையில் ஒன்றில் வேலை செய்து வரும் லக்கி என்றழைக்கப்படும் 34 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டார்.

மட்டக்களப்பு சவுக்கடி பகுதியில் கடற்கரையை அண்மித்ததாக உள்ள சவுக்கு தோட்டப் பகுதியில் இளைஞனின் சடலம் பிரதேச மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞர் பயணித்த மோட்டார்சைக்கிளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சடலமாக அடையாளம் காணப்பட்ட இளைஞன் செங்கலடி பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர் பகுதியிலுள்ள உறவினரது தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் வேலை செய்து வருவதாகவும் ஞாயிற்றுக்கிழமை (10) மாலை வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடிவந்துள்ளனர்.

சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்க நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞனின் மரணம் கொலை, தற்கொலையா எனப்து தெரியவராத நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி சடலமாக மீட்பு!!

வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் இன்று (11.08) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவு மாணவர்களுக்கு காலையில் இருந்து மதியம் 12 மணிவரை வகுப்பு நடைபெற்றுள்ளது.

குறித்த கல்வி நிலையத்தில் உயர்தர வர்த்தகபிரிவு 2025 இல் கல்வி கற்ற குறித்த மாணவி நீண்ட நேரமாகியும் வீடு வந்து சேராமையால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்த மாணவியை தேடியுள்ளனர்.

இதன்போது, குறித்த மாணவியின் புத்தகப்பை, துவிச்சக்கர வண்டி என்பன மாணவி கல்வி பயின்ற தனியார் கல்வி நிலையத்தில் காணப்பட்டதுடன், அக் கல்வி நிலைய வளாகத்தில் இருந்த கிணற்றின் அருகே மாணவியின் செருப்பும் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பெற்றோர் மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினர் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார், மாநகர சபையினர், கிராம அலுவர், கிராம மக்கள், மாணவர்கள் எனப் பலரும் இணைந்து 40 அடி ஆழமான கிணற்றில் தேடுதல் மேற்கொண்டு குறித்த மாணவியை சடலமாக மாலை மீட்டு எடுத்தனர்.

குறித்த சம்பவத்தில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் வவுனியா, கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் உடலம் வவுனியா வைத்தியாசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இலங்கையின் முதற்தர பணக்காரர் வரிசையில் மாற்றம்!!

தற்போதைய நிலையில் இஷார நாணயக்காரவே இலங்கையின் முதற்தர செல்வந்தராக இருப்பதாக கல்ப் நியூஸ் செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையின் முதற்தர செல்வந்தராக இருந்த தம்மிக்க பெரேராவை மீறி இஷார நாணயக்கார முதலிடத்திற்கு வந்துள்ளதாக குறித்த செய்தியின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனியின் உரிமையாளரான இஷார நாணயக்கார, பல்வேறு நாடுகளில் மைக்ரோ கடன் திட்டங்கள், தேயிலை உள்ளிட்ட பல்வேறு வர்த்தகங்களில் முதலீடு செய்துள்ளார்.

அதன் மூலம் தற்போதைக்கு அவர் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்துக்களைக் கொண்டிருப்பதாக கல்ப் செய்திச் சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

யாழில் படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர் : மேலதிக விசாரணையில் பொலிஸார்!!

யாழ்.ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு முதலாம் வட்டார பகுதியில் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த அற்புதராசா அகிலன் என்ற 46 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (10.08.2025) இரவு 8:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபரை பிடிக்க முயன்ற இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்த நிலையில்,

யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்த தாயின் ஆசையை நிறைவேற்ற அரசியல் கைதியின் சகோதரியின் நெகிழ்ச்சியான செயல்!!

அரசியல் கைதியின் சகோதரி ஒருவர் தனது தாயின் இறுதி ஆசையை நிறைவேற்றும் முகமாக சிறார்களுக்கு உணவூட்டிய நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று யாழ்.அராலியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்தீபனின் தாயார் தனது கையினால் தனது மகனுக்கு உணவூட்ட வேண்டும் என்ற அவாவில் இருந்து வந்துள்ளார்.

இருப்பினும் அவரது மகனான பார்த்தீபன் விடுதலையாகாத நிலையில் தாயாரின் இறுதி ஆசையும் நிறைவேறாத நிலையில் இயற்கை எய்தினார்.

பார்த்தீபன் இதுவரை விடுதலையாகாத நிலையில் அவரது தாயாரின் ஆசையை நிறைவேற்றும் முகமாக பார்த்தீபனின் சகோதரி வாஹினி இன்றையதினம் அராலி பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு தனது கரங்களால் உணவூட்டி தாயாரின் இறுதி ஆசையை நிறைவேற்றுவதற்கு முயற்சித்துள்ளார்.

இந்த சம்பவமானது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியையும், அரசியல் கைதிகளின் விடயத்தில் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசினது போலி முகங்களின் மீதான வெறுப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.

 

பெறுமதியான திமிங்கல வாந்தி வைத்திருந்தவர் கைது!!

பெரும் தொகை பெறுமதியான அம்பர் தொகையை (திமிங்கல வாந்தி) வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் திவுலபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திவுலபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திவுலபிட்டிய – நீர்கொழும்பு வீதியில் உள்ள போமுகம்மன பகுதியில் நேற்று (10) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரின் வசம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 200 கிராம் அம்பர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதான சந்தேக நபர் வத்துருகம, கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 44 வயதானவர் என தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக திவுலபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.