நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் சாத்தியம்!!

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பிற்பகல் 2 மணிக்குப் பிறகு ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வானிலை மையம் கோரியுள்ளது.

தமிழர் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியின் சவுக்குத் தோட்டத்திலிருந்து இளைஞர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை பிரதேச வாசிகளால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் மீட்கப்பட்ட இடத்தின் அருகில் இருந்து குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிள் அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனையடுத்து மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது, சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் செங்கலடி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞரின் மரணம் கொலையா? தற்கொலையா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

மன்னார் வைத்தியசாலை வளாகத்தில் யாழ். இளைஞன் உயிர்மாய்ப்பு!!

மன்னார் வைத்தியசாலை வளாகத்தில் உயிரிழந்த இளைஞன், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. ஜோன் ஜெத்தா என்ற குறித்த இளைஞன் 32 வயதுடைய திருமணமாகாத நபர் எனவும் கூறப்படுகின்றது.

மேலும், இளைஞனின் சடலம் நீதிபதியின் பார்வைக்காக வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, இளைஞனின் மரணத்திற்கான காரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

மன்னார் – வைத்தியசாலை வளாகத்தில் இளைஞரொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இன்று காலை தூக்கில் தொங்கியவாறு அவருடைய சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மன்னார், வைத்தியசாலையில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும் இளைஞரொருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இளைஞனின் இந்த விபரீத முடிவுக்கு என்ன காரணம் என்பது தொடர்பில் இதுவரையில் தெரியவரவில்லை.

மேலும், நேற்றையதினம் இரவு குறித்த நபர் இவ்வாறு தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

காதலனுடன் ஓட்டமெடுத்த தாய் : தீயில் கருகி பலியான மகன் : இலங்கையை உலுக்கிய சம்பவம்!!

பலாங்கொடை, மஹவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், வீடு முற்றிலுமாக எரிந்து எட்டு வயது சிறுவன் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தந்தை, தாய் மற்றும் தாயின் காதலன் ஆகியோர் நேற்று முன்தினம் (09.08) இரவு கைது செய்யப்பட்டதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் பலத்த தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக 08 திகதி இரவு மனைவி வேறொரு நபருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதுடன், குறித்த பெண்ணின் கணவரும் மனைவியை தேடி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச் சமயத்தில் எட்டு வயது மட்டும் வீட்டில் இருந்துள்ளதுடன் அதிகாலையில் வீடு தீப்பிடித்து எரிந்ததுள்ளது. அதனை பார்த்த அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்ததுடன் அந்த நேரத்தில் கணவரும் வீடு திரும்பியிருந்தார்.

இது தொடர்பாக, இரத்தினபுரி குற்றப் புலனாய்வு அதிகாரிகளும் பலாங்கொடை பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் மனைவிக்கு சிறிது காலமாக திருமணத்திற்கு புறம்பான தொடர்பு இருந்ததும் அதன் காரணமாக தம்பதியினரிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளதுடன் வீடு தீப்பிடித்தது தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பலாங்கொடை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி – அக்கராயன் முறிகண்டி பகுதியில் வாகன விபத்து : பெண் பலி!!

கிளிநொச்சி அக்கராயன் முறிகண்டி பிரதான வீதியின் அமைதி புரத்தித்திற்கு அண்மித்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (10) இடபெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

முறிகண்டி பகுதியில் இருந்து முழங்காவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் எதிரே வந்த கார் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த பெண் 44 வயதுடைய இயக்கச்சி பளை பகுதியை சேர்ந்தவர் ஆவார். விபத்து சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

“Queen of the International Tourism” பட்டத்தை வென்ற இலங்கைப் பெண் நாடு திரும்பினார்!!

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான “Miss Tourism Universe” போட்டியில் பங்குபற்றி “Queen of the International Tourism” என்ற பட்டத்தை வென்ற இலங்கையைச் சேர்ந்த ஆதித்யா வெலிவத்த என்ற பெண் இன்று திங்கட்கிழமை (11) மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற “Miss Tourism Universe” போட்டியில் 17 நாடுகளைச் சேர்ந்த 17 அழகிகள் பங்குபற்றியிருந்தனர்.

“Miss Tourism Universe” போட்டியின் இறுதிச் சுற்று ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி பிலிப்பைன்ஸில் உள்ள மணிலா நகரத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஆதித்யா வெலிவத்த என்ற பெண்ணும் பங்குபற்றியிருந்தார்.

ஆதித்யா வெலிவத்த என்ற பெண் “Miss Tourism Universe” போட்டியில் “Queen of the International Tourism” என்ற பட்டத்தை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிலையில், ஆதித்யா வெலிவத்த என்ற பெண் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து இன்றைய தினம் அதிகாலை 12.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

 

 

ஏ -9 வீதி கொடிகாமம் பகுதியில் வாகன விபத்து – ஒருவர் பலி!!

யாழ்ப்பாணம் – கண்டி ஏ9 வீதியில், கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஒருவர் அமர்ந்திருந்தபோது, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது, உயிரிழந்தவர் மிருசுவில் கரம்பஹம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள் தனது வாகனத்தின் மீது மோதுவதைத் தடுக்க டிப்பர் வாகன சாரதி பிரேக் போட்டபோது, அதே திசையில் இருந்து வந்த கூலர் லொரியானது டிப்பர் வாகனத்தின் பின்புறத்தில் மோதியுள்ளது.

அதன் தாக்கத்தில் டிப்பர் வாகனம், நிருத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதோடு, கூலர் லொறி எதிரே வந்த கார் ஒன்றுடன் மோதியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கடுமையாக காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு, டிப்பர் வாகன சாரதி, கூலர் லொரி வாகன சாரதி ,வாகனத்தின் ஓட்டுநர், காரின் சாரதி மற்றும் அவரது மகன் ஆகியோர் காயமடைந்து யாழ். வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஷார்ஜாவில் இறந்த கேரளப் பெண் : இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது!!

கேரள பெண் ஷார்ஜாவில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அவரது கணவர் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம் கேரளாவைச் சேர்ந்த அதுல்யா (29) என்ற திருமணமான பெண் ஷார்ஜாவில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

இதுதொடர்பில் அவரது கணவர் சதீஷ் (40) மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர் வரதட்சணை கொடுமை செய்ததாகவும் புகார் பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் சதீஷ் ஷார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கேரளாவுக்கு திரும்பியுள்ளார்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருமணத்திற்கு சம்மதிக்காத பெற்றோர் : காதலன் காதலி இருவரும் எடுத்த விபரீத முடிவு!!

காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காத நிலையில், காதலன் தற்கொலைச் செய்துக் கொண்டதால் விரக்தியில் அதே தேதியில் காதலியும் தூக்கில் தொங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மனைவி புஷ்பம். இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 11 வருடங்களுக்கு முன்பு செல்லத்துரை உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில் புஷ்பத்தின் 3 மகள்கள் காதலித்து திருமணம் கொண்டனர். இதனால் அவரது கடைசி மகள் வித்யா (23) மற்றும் மனநலம் குன்றிய மாற்றுத்திறனாளி மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

வித்யா அருகில் உள்ள தென்னைநார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த கம்பெனியில் பணியாற்றிய மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த அருணை காதலித்ததாக தெரிகிறது. இவர்களுடைய காதலை பெற்றோரை இழந்த அருணின் உறவினர்கள் ஏற்க மறுத்தனர்.

இதனையடுத்து கடந்த ஜூலை 5ம் தேதி வீட்டில் அருண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அன்றிலிருந்து வித்யா மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்நிலையில் வித்யா வீட்டில் சமையல் வேலைகளை முடித்து விட்டு கழிவறைக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் கழிவறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அங்கு கழிவறையில் துப்பட்டாவால் தூக்குப்போட்ட நிலையில் வித்யா தொங்கி கொண்டிருந்தார். உடனடியாக உறவினர்கள் வித்யாவை மீட்டு குளச்சல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார், வித்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதலன் சென்ற மாதம் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாங்காமல், அதே தேதியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பெண் உயிரிழப்பு!!

களுத்துறை, அளுத்கமை, மொரகல்ல கடலில் மூழ்கி வெளிநாட்டுப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (11.08.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஆவார்.சம்பவத்தன்று, வெளிநாட்டுப் பெண் மேலும் சில நபர்களுடன் இணைந்து மொரகல்ல கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.

பின்னர், நீரில் மூழ்கி காணாமல்போன வெளிநாட்டுப் பெண்ணின் சடலம் பெந்தர கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகில் உயர்ந்த வாகன விலையை கொண்ட நாடுகளில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!!

உலக வங்கியின் வாகன விலை நிலை குறியீட்டின்படி, 2021 ஆம் ஆண்டில் வாகனக் கொள்வனவில் உலகின் மூன்றாவது அதிக விலையை கொண்ட நாடாக இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த குறியீடு இலங்கையின் மதிப்பெண்ணை 175 ஆகக் காட்டுகிறது, அதாவது வாகன விலைகள் உலகளாவிய சராசரி அளவுகோலான 100 ஐ விட இலங்கையில் விலை 1.75 மடங்கு அதிகமாகும்.

இலங்கையை முந்திக்கொண்டு சிங்கப்பூர் மற்றும் மாலைத்தீவுகள் மட்டுமே வாகன கொள்வனவில் அதிக விலையை கொண்ட நாடுகளாக தரப்படுத்தப்பட்டுள்ளன.

அதிக இறக்குமதி வரிகள் மற்றும் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் என்பனவே வாகன உரிமையை பெரும்பாலான இலங்கையர்களுக்கு ஆடம்பர பொருளாக மாற்றியுள்ளன.

 

வவுனியா கனகராயன்குளம் பெரியகுளம் கிரவல் குவாரி வவுனியா வடக்கு தவிசாளரினால் முற்றுகை!!

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட கனகராயன்குளம் வடக்கு, பெரியகுளம் பகுதியில் பிரதேசசபையின் அனுமதியின்றி முன்னெடுக்கப்பட்ட கிரவல் குவாரியின் செயற்பாடுகள் வவுனியா வடக்கு பிரதேசபையின் தவிசாளர் திருநாவுக்கரசு கிருஷ்ணவேணியின் நடவடிக்கையினையடுத்து முற்றுகை செய்யப்பட்டதுடன், உடனடியாக மறுஅறிவித்தல் வரை அகழ்வுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் குறித்த கிரவல் குவாரிக்கு தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் திடீர் விஜயமொன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது பிரதேசசபையின் அனுமதியின்றி குவாரியின் செயற்பாடுகள் இடம்பெற்றமையினால் மறுஅறிவித்தல் வரை கிரவல் குவாரியின் செயற்பாட்டை நிறுத்தி வைக்குமாறு தவிசாளர் அதிரடியான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த விஜயத்தின் போது பொலிசாரும் வருகைதந்திருந்ததுடன் தொடர்ச்சியாக அனுமதியின்றி கிரவல் அகழ்வு செயற்பாடு முன்னெடுக்கப்படுமாகவிருந்தால் அவர்கள் மீது சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்படுமென தவிசாளர் மற்றும் பொலிசாரினால் உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

வவுனியாவில் பிள்ளையார் ஆலய வளாகத்தினை இடிக்குமாறு பொலிஸில் முறைப்பாடு : வளாகமும் இடித்தழிப்பு!!

வவுனியா நெளுக்குளம் சந்தியில் வீதியோரத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தின் சுற்றுச்சுவரை இடிக்குமாறு தெரிவித்து வீதி அபிவிருத்தி அதிகார சபையினரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமையுடன் ஆலய வளாகமும் இடித்தழிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையங்களின் பெயர்ப்பலகைகள் , பேருந்து தரிப்பிடம், முச்சக்கரவண்டிகள் தரிப்பிடம் ஆகியன அமைந்துள்ள பகுதியிலேயே இவ் பிள்ளையார் ஆலய வளாகம் காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் குறித்த பிள்ளையார் ஆலய வளாகத்தினை மாத்திரம் அகற்றுமாறு தெரிவித்து நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த நெளுக்குளம் பொலிஸார் குறித்த ஆலய வளாகத்தினை அகற்றுமாறும் இல்லாவிடில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் முறைப்பாட்டிற்கமைய நீதிமன்றில் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்படும் என ஆலய நிர்வாகம் மற்றும் அப்பகுதி மக்களுக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால் பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அச்சத்தினால் ஆலய நிர்வாகத்தினால் ஆலய வளாகம் இடித்தழிக்கப்பட்டது.

நகரில் பல வர்த்தக நிலையங்கள் மற்றும் பல மதஸ்தலங்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் எல்லையினுள் பாரிய கட்டிடங்களை அமைத்துள்ளமையுடன் வாடிகாலையும் ஆக்கிரமித்துள்ளனர்.

இருப்பினும் அவற்றினை அகற்றுவதில் அக்கறை செலுத்தாத வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இப் பிள்ளையார் ஆலய வளாகத்தினை மாத்திரம் அகற்றுவது இந்து சமய மக்களின் மத்தியில் பாரிய அதிர்வலையினை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை : 3065 பேர் பரீட்சைக்கு தகுதி!!

தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை நாடுமுழுவதும் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. அந்தவகையில் வவுனியா வடக்கு வலயத்தில் 503 மாணவர்களும்,

தெற்கு வலயத்தில் 2562 பேரும் என 3065 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றுகின்றனர். அவர்களுக்காக 44 பரீட்சை மத்திய நிலையங்களும்,19 இணைப்புக்காரியாலங்களும் அமைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் புலமைபரிசில் பரீட்சைக்கு சுமார் 3இலட்சத்து 7ஆயிரத்து951 மாணவர்கள் இன்றையதினம் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புகையிரதத்துடன் மோதி வேன் விபத்து!!

களுத்துறையில் அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகில் சீலானந்த வீதியிலுள்ள ரயில் கடவையில் சிறிய வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று சனிக்கிழமை (09.08.2025) இடம்பெற்றுள்ளது. வேனை செலுத்தி சென்ற பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருதானையில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயில் மீதே சிறிய வேன் மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது.

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் 135வது ஆண்டு நடைபவனி!!

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் 135 வது ஆண்டினை கொண்டாடும் முகமாக இன்று (09.08.2025) நடைபெற்ற நடைபவனியால் வவுனியா நகரமே அதிர்ந்தது.

இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி 135 ஆவது ஆண்டினை கொண்டாடி வருகின்றது. இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் இக் கல்லூரியின் இந்நிகழ்வுக்கு வலுச்சேர்க்கும் முகமாக கல்லூரியின் மாணவிகள், பழைய மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மேள தாள வாத்தியங்கள் மற்றும் இசை மழையுடன் நபைவனி ஒன்றை மேற்கொண்டனர்.

பாடசாலை முன்பாக ஆரம்பித்த நடைபவனியானது இரண்டாம் குறுக்குத் தெரு ஊடாக கண்டி வீதியை அடைந்து அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து பசார் வீதி ஊடாகச் சென்று ஹொரவப்பொத்தானை வீதி ஊடாக பாடசாலை முன்றலை சென்றடைந்தது. பல பெற்றோர்கள், பழைய மாணவிகளுக்கு பள்ளிக்கால நினைவுகளை மீள மீட்டுத் தந்த நிகழ்வாக குறித்த நடைபவனி அமைந்திருந்தது.