அனுராதபுரத்தில் விபத்தில் சிக்கிய நண்பர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலேன்பிந்துனுவெவ-கெகிராவ பிரதான வீதியில் யக்கல்ல 22வது சந்தி பகுதியில் நேற்று முன்தினம் விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்று வீட்டின் வாயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு இளைஞர்களும் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த இருவரும் கலேன்பிந்துனுவெவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் கலேன்பிந்துனுவெவ மஹரம்பேவ பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஜனக சம்பத் மற்றும் ஹேஷான் இஷார ஆகிய இளைஞர்கள் என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், கலேன்பிந்துனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி நேற்று (06.08.2025)இரவு ஒருவர் பலியாகியுள்ளார். நேற்றயதினம் இரவு பெரியதம்பனை பகுதியில் மோட்டார் சைக்கிளில், பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை வீதியில் நின்ற காட்டு யானை தாக்கியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே சாவடைந்தார். சம்பவத்தில் நட்டாங்கண்டல் பிரதேசத்தை சேர்ந்த ச.உதயராசா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே பரிதாபமாக சாவடைந்துள்ளார்.
அவரது சடலம் பெரிய பண்டிபிரிச்சான் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை பறையநாலன்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
வவுனியாவில் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார். வவுனியா பூனாவ,குடாஹல்மில்லேவா பகுதியில் நேற்று இரவு 7.50 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இறந்தவர் ஜே. விஜேசிங்க என்ற ஓய்வுபெற்ற பொலிஸ் ஆய்வாளர் ஆவார், ஒரு குழந்தையின் தந்தையான அவர் சுமார் 71 வயதுடையவர்.
ஓய்வு பெற்ற பிறகு, புனேவா பகுதியில் ஒரு தோட்டத்தை நடத்தி வந்த அவர், நேற்று இரவு தோட்டத்திற்குச் சென்றபோது காட்டு யானையால் தாக்கப்பட்டார். அவரது உடல் மதவாச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இந்தப் பகுதியில் காட்டு யானைகளின் தாக்குதல்களில் மூன்று அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளதாக கிராம மக்கள் கூறியுள்ளனர், மேலும் காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியாவில் பேருந்தில் எடுத்து வரப்பட்ட சட்டவிரோத மாட்டிறைச்சி தொடர்பில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட மூவருக்கும், மாட்டிறைச்சியினை கிளிநொச்சியிலிருந்து அனுப்பி வைத்தவருக்கும் எதிராகவும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் உரிய பாதுகாப்பு வசதிகள் இன்றி வவுனியாவிற்கு சட்டவிரோதமாக எடுத்து வரப்பட்ட 558.5 கிலோ நிறையுடைய மாட்டிறைச்சி மாநகரசபையால் கடந்த (04.08.2025) அன்று மாலை கையகப்படுத்தப்பட்டமையுடன்,
குறித்த இறைச்சினை ஏற்றிச்செல்ல முற்பட்ட இரு முச்சக்கரவண்டியும் மாநகரசபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இதனுடன் தொடர்புபட்ட மூவர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
விசாரணைகளை முன்னெடுத்த மாநகர சுகாதார பிரிவினர் மாட்டிறச்சியினை பேரூந்தில் எடுத்து வந்தவர், மாட்டிறைச்சியினை ஏற்ற பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியின் சாரதி இருவர் என மூவரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் (05.08.2025) ஆஜர்படுத்தினர்.
இதன் போது மாட்டிறைச்சியினை பேரூந்தில் எடுத்து வந்தரை 14 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைக்குமாறும் முச்சக்கரவண்டி சாரதி இருவரையும் தலா ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் கிளிநொச்சியிலிருந்து மாட்டிறைச்சியினை வழங்கியவருக்கு நீதிமன்ற அழைப்பானை விடுக்கப்பட்டு வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சாஸ்திரிகூழாங்குளம் வட்டாரக் கிளையின் ஒழுங்குபடுத்தலில் வட்டார பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கடந்த 03.08.2025 அன்று சாஸ்திரிகூழாங்குளத்தில் இடம்பெற்றது.
சாஸ்திரிகூழாங்குளம் சிவன் கோவிலில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின் தவிசாளர், உறுப்பினர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் அனைவரும் மேளதாள வாத்திய இசை வரவேற்புடன் விழா மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். தொடர்ந்து அங்கு கௌரவிப்பு நிகழ்வு விமர்சையாக இடம்பெற்றது.
இதன்போது நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களும் கெளரவிக்கப்பட்டார்.
தொடர்ந்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன், உறுப்பினர்களான மகாதேவா ரவீந்திரன், திருமதி.பத்திமா கெபிரியல், திருமதி.தர்சினி கேதீஸ்வரன் ஆகியோரும் நிகழ்வில் கெளரவிக்கப்பட்டிருந்தனர்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள், வட்டார பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மக்கள் எனப்பலரும் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் தஞ்சம் புகுந்து அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஈழத்தமிழ் பெண்ணொருவர் அந்நாட்டில் சட்டத்தரணியாகி உள்ளார்.
இந்தியாவில் குடியுரிமை கூட பெறாத ஃபர்ஷானா என்ற இந்த பெண்ணின் இந்த சாதனை ஈழத்தமிழர்கள் மட்டுமின்றி உலக தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தென்னிந்திய திரைப்பட நடிகர் சூர்யாவின் அகரம் ஃபௌன்டேசன் வழங்கிய நிதியுதவியின் கீழ் இந்த பெண் தனது கடின உழைப்பு மற்றும் முயற்சியால் பட்டப்படிப்பு முடித்து சட்டத்தரணி ஆகியுள்ளார்.
இது தொடர்பில் குறித்த பெண் தெரிவிக்கையில்,”1980களில் எனது பாட்டி உள்ளிட்ட என் குடும்பத்தினர் இந்தியாவிற்கு வந்து விட்டார்கள். நான் இராமேஸ்வரத்தில் தான் பிறந்தேன்.
சில நாட்களின் பின்னர், கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள முகாம் ஒன்றிற்கு எங்களை அழைத்து சென்றார்கள். பாடசாலை படிப்பை முடித்த பின்னர், குடியுரிமை இல்லாததால் பட்டபடிப்பு படிப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை.
இருப்பினும், அகரம் ஃபௌன்டேசன் வழங்கிய நிதியுதவியின் மூலம் படித்து பட்டம் பெற்று சட்டத்தரணியாகியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உள்நாட்டு போர் நடந்த காலப்பகுதியில் நாட்டை விட்டு பல இலங்கை தமிழர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர்.
இலங்கையின் ஜனாதிபதிகளில் சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மிகவும் மாறுபட்ட ஒரு தலைவராக மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவரின் செயற்பாடுகளில் இருந்து மாறுபட்டு, மக்களை கவர்ந்த ஒருவராக செயற்படுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஜனாதிபதியின் செயற்பாட்டினை அடுத்து இந்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
எளிமையான ஜனாதிபதி
சித் ரூ-2025 கலை நிகழ்ச்சி நேற்று கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது விருது வழங்கும் போது மாற்று திறனாளி ஒருவருடன் புகைப்படம் எடுக்கும் போது, அரச தலைவர் என்ற நிலையை கடந்து, முட்டிக்காலில் அமர்ந்திருந்து திறமையாளரை மகிழ்வித்துள்ளார்.
மக்களுக்கான அரச தலைவர்
கடந்த காலங்களில் எந்தவொரு ஜனாதிபதியும் இவ்வாறான பணிவினை வெளிப்படுத்தி, மக்களுக்கான அரச தலைவர் என்பதை வெளிப்படுத்தவில்லை என பலரும் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்றதொரு நிகழ்வின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் விருது வாங்கிய மாற்றுத்திறனாளி ஒருவர், மிகவும் சிரமப்பட்டு அவரின் காலிற்கு கீழிருந்து விருது பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் 24 வயதான பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் கீழ் இந்திய குடிவரவுத்துறை அதிகாரி ஒருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரி ஒருவரே ஹைதராபாத் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கரில் அமைந்துள்ள நிலையம் ஒன்றில் இளங்கலை இசைப் பட்டம் பயின்று வரும் 24 வயதான இந்த இலங்கை பெண், 2025 ஆகஸ்ட் 3ஆம் திகதி, இலங்கையில் இருந்து விமான நிலையத்துக்கு வந்தபோது, குறித்த அதிகாரி அவரை பின்தொடர்ந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த நேரத்தில் கடமையில் இருந்த அதிகாரி, பயண ஆவணங்களை சரிபார்த்த நேரத்தில் இருந்து தம்மை அவர் பின்தொடர்ந்ததாக இலங்கை பெண், பொலிஸில் முறையிட்டுள்ளார்.
இலங்கைக்கு பணியாற்ற வந்துள்ள ஜெர்மனியை சேர்ந்த பெண் அதிகாரியின் செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.
இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான ஜெர்மனியின் புதிய துணைத் தூதரக குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சாரா ஹெசல்பார்த் கொழும்பில் தனது அதிகாரபூர்வப் பணிகளை முச்சக்கர வண்டி சவாரி மூலம் ஆரம்பித்துள்ளார்.
இலங்கையில் இருப்பது மகிழ்ச்சியான அனுபவம் என தெரிவித்த ஹெசல்பார்த், தனது பயணத்தை உற்சாகத்துடன் ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மனியின் தேசிய நிறங்களால் அலங்கரிக்கப்பட்ட முச்சக்கர வண்டியில் பயணிக்கும் புகைப்படத்தை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் இருப்பதில் மகிழ்ச்சி அடைவதுடன், எனது பயணத்தை தொடங்குவதில் உற்சாகமாக இருக்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களின் விருந்தோம்பல் பற்றியும் அவர் பாராட்டுகளை தெரிவித்தார். இலங்கை மக்களின் விருந்தோம்பல் நம்பமுடியாத அளவுக்கு சிறந்தது.
இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான ஜெர்மன் தூதரகத்தில் துணைத் தூதராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தமை எனக்கு பெரும் பாக்கியம்.
நட்பு மற்றும் கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கும், இவை அனைத்தும் ஒரு முச்சக்கர வண்டி சவாரியுடன் தொடங்குகின்றன!” என அவர் பதிவிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுடன் கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த, அர்த்தமுள்ள திட்டங்களைச் செயல்படுத்தவும், நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் ஊக்கமாக செயல்படவுள்ளதாக ஹெசல்பார்த் தனது உறுதிப்பாட்டை தெரிவித்துள்ளார்.
கடந்த 14 வருடங்களில் வெளிநாடுகளுக்கு வேலைகளுக்கு சென்ற 4794 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்துக்கு அமைவாக இத்தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 3179 ஆண்களும் 1615 பெண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 3242 பேர் இயற்கை மரணம் எய்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு பணியகம் தகவல்
அதோடு கைத்தொழில் மற்றும் நீரில் மூழ்குதல் போன்ற விபத்துகளால் 428 பேரும், வீதி விபத்துக்களால் 446 பேரும் உயிரிழந்துள்ளதுடன், 377 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை 61 இலங்கையர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2010 ஜனவரி முதல் 2024 டிசம்பர் வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் சென்று நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த 72,718 பேர் இலங்கைத் தூதரகங்களுக்குச் சொந்தமான பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியா, குவைத், ஜோர்தான், ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் பாதுகாப்பு இல்லங்களில் அதிகமானோர் தங்கவைக்கப்பட்டு, பின்னர் சொந்த நாடுகளுக்குத் திரும்பியுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகள், வினாத்தாள் விநியோகம், கருத்தரங்குகள்,
விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் ஆகியவற்றுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
விதிகளை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை
விதிகளை மீறுவோர் மீது இலங்கை பரீட்சைகள் திணைக்களம் பரீட்சை சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பரீட்சார்த்திகள் அனைவரும் காலை 8.30 மணிக்குள் பரீட்சை அறைகளுக்குச் செல்ல வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு 231,638 சிங்கள மொழி பரீட்சார்த்திகளும் 76,313 தமிழ் மொழி பரீட்சார்த்திகளுமாக மொத்தம் 307,959 பரீட்சார்த்திகள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்ற உள்ளனர்.
பொலன்னறுவை, வெலிகந்த – நாகஸ்தென்ன பகுதியில், நேற்று (5) மாலை, ஆடுகளை மேய்க்கச் சென்ற 8 வயது சிறுவன் கால்வாயில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
வீட்டிலிருந்து “ஆடுகளைப் பார்க்கப் போகிறேன்” என தாயிடம் கூறிவிட்டு சென்ற சிறுவன், வெலிகந்த பகுதியில் உள்ள கால்வாயில் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ். நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் பாய்ந்துள்ளது.
இன்றையதினம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழில் இருந்து கிளிநொச்சிக்கு சென்று, மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து இடம்பெறும்போது காரினுள் மூன்று இளைஞர்கள் இருந்தபோதும் எவரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை. அதன்பின்னர் நீண்ட முயற்சியின் பின்னர் கார் கடலில் இருந்து மீட்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பகுதியில் இளம்பெண் தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில், அவரது கணவனே அடித்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டது அம்பலமாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அடுத்த மேல்முகம் கிராமத்தை சேர்ந்தவர் விசைத்தறி கூலி தொழிலாளியான 44 வயதுடைய கணவன் மற்றும் இவரது மனைவி 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர்.
குடிப்பழக்கம் கொண்ட கணவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன், மனைவியிடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. அடுத்த நாள் வீட்டில் உள்ள அறையில் மனைவி தூக்கில் தொங்கியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த பொலிசார், மனைவியின் சடலத்தை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
தன் மனைவியுடன் தொடர்ந்து தகறாரில் ஈடுபட்டதுடன், வீட்டில் வளர்த்து வந்த பசுமாட்டையும், கன்றையும் விற்று விட்டேன். வீட்டில் மாடு இல்லாதது குறித்து கேட்டு மனைவி என்னுடன் சண்டையிட்டார்.
அப்போது, அவரை தாக்கினேன். அதன்பிறகு, துண்டால் அவரது கழுத்தை நெரித்ததில் அவர் இறந்து விட்டார். அவரை கொலை செய்ததை மறைப்பதற்காக, தூக்கில் தொங்க விட்டேன்.
ஆனால், எப்படியும் பொலிசாரிடம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தால் சரணடைந்து விட்டேன் என அவர் கூறியுள்ளார். இதையடுத்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த பொலிசார், திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
மாத்தளை மாவட்டத்தின் நாவுல பிரதேசத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது.
நண்பர் ஒருவர் மற்றொரு நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான நிரோஷன் மதுசங்க குமாரசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நாவுல, நிகுலா பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்கு கடனாகக் கொடுத்த 75 ஆயிரம் ரூபாயை வசூலிக்கச் சென்றபோது, நிகுலா பகுதியில் இந்தக் கொலை நடந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் ஒரு விவசாயி ஆகும். அவர் தனது நான்கு வயது மகனுடன் சிறிய வீட்டில் தனியாக வசிக்கிறார். அவரது மனைவி வீட்டு வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
தனது மருமகள் அனுப்பிய பணத்தை ஒரு நண்பருக்குக் கொடுத்துவிட்டு, சிறிது காலமாக அது கிடைக்கவில்லை எனவும் அதனால் பகலில் பணத்தை மீள கோர சென்றதாகவும் உயிரிழந்த இளைஞனின் தாயார் தெரிவித்துள்ளார்.