நாடு முழுதும் குறைந்த விலையில் சீனி அமைச்சர் உறுதி!!

இலங்கை சீனி நிறுவனத்தினூடாக குறைந்த விலையில் பாவனையாளர்களுக்கு சீனி வழங்கப்படும் என தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

இலங்கை சீனி நிறுவனத்தின் மொத்த விற்பனை விநியோக மையங்களின் வலையமைப்பு அடுத்த மாதத்திற்குள் 25 மாவட்டங்களில் நிறுவப்பட்டு சீனி குறைந்த விலையில் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

லங்கா சீனி நிறுவனத்தைச் சேர்ந்த பெல்வத்த மற்றும் செவனகல கரும்பு விவசாயிகளுக்கு பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் நெருக்கடி நிலை ஏற்பட்டது.

இந்த நிறுவனங்களின் நிதி நெருக்கடி தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன், நாங்கள் இந்த நிறுவனங்களை கையகப்படுத்தியபோது, பெல்வத்தவில் 3,847 ஊழியர்களும், செவனகலவில் 1,269 ஊழியர்களும் இருந்தனர்.

மேலும் நிலையான சட்டப்பூர்வ கொடுப்பனவுகள் 3,977 மில்லியன் ரூபாவாக இருந்தன. விவசாயிகளுக்கு 609 மில்லியன் ரூபாவும், 510 மில்லியன் ரூபா வழங்குனர்களுக்கும் 1,176 மில்லியன் ரூபா வங்கிக் கடன்கள் உட்பட 6,279 மில்லியன் ரூபா கொடுக்க வேண்டி இருந்தது.

அத்தோடு சுமார் 33,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்ட சீனி மற்றும் சுமார் 5.5 மில்லியன் லீட்டர் எத்தனோல் ஆகிவற்றோடு பொறுப்பேற்றோம். 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், அனைத்து சிரமங்களையும் மீறி, பெல்வத்தையில் 14,201 மெட்ரிக் டன் சீனி உற்பத்தி செய்தோம்.

8,468 மெட்ரிக் டன்களை விற்பனை செய்ததில் 1652 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்தது. அவ்வாறே செவனகலயில் 877 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டினோம். ஜூலை 31 நிலவரப்படி பெல்வத்தை மற்றும் செவனகலை இரண்டிலிருந்தும் 27,292 மெட்ரிக் டன் சீனி மற்றும் 857,185 லீட்டர் எத்தனோல் தற்போது விற்பனைக்கு இருக்கிறது.

இதனால் விவசாயிகள், வழங்குனர்களுக்கு பணம் செலுத்துவதில் இரண்டு மாத தாமதம் ஏற்பட்டதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எதிர்க்கட்சிகள் பெல்வத்தை மற்றும் செவனகலையை அரசாங்க எதிர்ப்பு மையமாக மாற்ற விவசாயிகளை பகடைக் காய்களாக பயன்படுத்துகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் எடுத்த விபரீத முடிவு!!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அந்த மாணவர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கேகாலை பகுதியை சேர்ந்த 24 வயதான ஆசிரி ஷானக என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் சாட்சியமளித்த இறந்த மாணவரின் தந்தை, மகன் தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கு செல்லாமையினால் அது குறித்து வினவிய போது, வாழ்க்கை மிகவும் சலிப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வீட்டில் ஒரு நாய் இருந்தது. என் மகனும் மகளும் அந்த நாயை மிகவும் நேசித்தார்கள். அந்த நாய் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டது.

நாய் இறந்த பிறகு, என் மகன் மிகவும் சோகமாக இருந்தார். பின்னர், கண்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் மகனை அழைத்து செல்ல முன்பதிவு செய்திருந்தேன்.

கடந்த 2 ஆம் திகதி, என் மனைவி, மகன் மற்றும் மகள் என நாங்கள் நான்கு பேரும் வீட்டில் இருந்தோம். காலையில், என் மகன் என்னுடன் சாப்பிட்டார். என் மகனிடம் எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை. அவர் நன்றாக இருந்தார்.

பின்னர் நான் சுமார் 8.30 மணிக்கு கேகாலை பொது மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றேன். மனைவி, மகன் மற்றும் மகள் வீட்டில் இருந்தனர். என் மகன் வீட்டின் மேல் மாடியில் ஒரு அறையில் இருந்தார்.

காலை 9.45 மணியளவில், என் மனைவி என்னை தொலைபேசியில் அழைத்து, சீக்கிரம் வீட்டிற்கு வரச் சொன்னார். நான் சீக்கிரம் வீட்டிற்குச் சென்று பார்த்த போது மகன் உயிரிழந்து கிடந்தார்” என தந்தை குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவனின் தந்தை மற்றும் தாயார் தொழில் ரீதியாக மருத்துவர்கள், அவரது ஒரே சகோதரியும் மருத்துவ மாணவியாகும். உயிரிழந்த மாணவன் ஆசிரி ஷானகவின் இறுதிச் சடங்குகள் நேற்று கேகாலை பொது மயானத்தில் நடைபெற்றுள்ளன.

சம்பவம் குறித்து கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“கடவுளிடம் போகப் போறேன்” திடீரென 5வது மாடியில் இருந்து குதித்த இளம்பெண்!!

கடவுளிடம் போகப் போறேன் எனக் கூறி திடீரென இரண்டு குழந்தைகளின் தாய், தனது வீட்டின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஹிமாயத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் அருண்குமார் ஜெயின்.

தொழிலதிபரான இவரிது மனைவி பூஜா ஜெயின். இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ள நிலையில், இவர்கள் குடும்பத்துடன் அடுக்குமாடி குடியிருப்பின் 5வது மாடியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அருண்குமார் ஜெயின் அலுவலகத்திற்கு சென்ற நிலையில் வீட்டில் பூஜா ஜெயின் அவரது பிள்ளைகள் மற்றும் வேலைக்கார பெண் இருந்தனர்.

இந்நிலையில் நீண்ட நேரம் தன்னுடைய அறையில் தனியாக இருந்த பூஜா, மதியம் 2 மணியளவில் அறையில் இருந்து வெளியே வந்தப்படியே, தான் கடவுளிடம் செல்வதாக கூறியபடி 5வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஹைதர் குடாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பூஜாவைப் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பூஜாவின் அறையை சோதனை செய்தனர். அப்போது அவரது அறையில் கடிதம் ஒன்று இருந்தது. அதில் நாம் தொடர்ந்து கடவுளை பற்றி தியானித்து

அவருக்கு நம்மை அர்ப்பணித்தால் நாம் கடவுளிடம் நெருக்கமாகி சொர்க்கத்தை அடைவோம் என்ற சமண குருக்களின் பொன்மொழியை எழுதி வைத்திருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“இந்த ஆண்டு ராக்கி கட்ட நான் இருக்க மாட்டேன் அண்ணா ” கடிதம் எழுதிவிட்டு இளம் பெண் விபரீத முடிவு!!

இந்தியா முழுமைக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக குடும்ப வன்முறைகளுக்குள் சிக்கி தவிக்கும் பெண்களின் துயரம் சொல்லி மாளாது, கடந்த மாதம் தமிழகத்தில் ரிதன்யா உட்பட பல பெண்கள் தொடர்ந்து மரணித்தனர்,

அந்த சோகமே இன்னும் மாறாத சூழலில் நிலையில் நேற்று ஆந்திராவில் 24 வயதான பெண் விரிவுரையாளர் குடும்ப வன்முறையால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீதிவ்யா (24), அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றும் இவருக்கும், ராம் பாபு என்ற நபருக்கும் 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

ஆனால் திருமணமான ஒரே மாதத்தில், தினமும் வீட்டிற்கு குடித்து விட்டு வந்து, ஸ்ரீ திவ்யாவை உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மோசமாக துன்புறுத்தி வந்துள்ளார். அதுமட்டுமின்றி வேறு ஒரு பெண்ணின் முன்பு “இவள் எதுக்கும் லாயக்கில்லை”என பேசி அவமானப்படுத்தி இருக்கிறார்.

இதனால் மனமுடைந்த அந்த பெண் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். தனது தற்கொலை கடிதத்தில் “என்னால் இந்த உடல் மற்றும் மன ரீதியான கொடுமைகளை இனிமேல் பொறுத்துக்கொள்ள முடியாது,

எனது மரணத்திற்கு என் கணவரும் அவன் வீட்டரும்தான் காரணம். அண்ணா.. என்னால் இந்தமுறை உன்னோடு ராக்கி கொண்டாட முடியாது” என எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார். 24 -வயதே ஆன விரிவுரையாளர் குடும்ப வன்முறையால் இருந்திருப்பது அப்பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடனால் ஒரே வீட்டில் பறிபோன நான்கு உயிர்கள் : பிஞ்சுக் குழந்தைகளை இழந்து கதறும் தாய்!!

நாமக்கல் மாவட்டம், மங்களபுரம் அடுத்த வேப்பங் கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதான கோவிந்தராஜ்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 25 வயதான பாரதி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணமாகி கோவிந்தராஜ் மற்றும் பாரதி தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் நான்கு பிள்ளைகள் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு உணவருந்தி விட்டு பாரதி தனது மகனுடன் அறைக்குள் சென்று உறங்கியுள்ளார்,கோவிந்தராஜ் மற்றும் அவரது மூன்று மகள்கள் ஹாலில் படுத்து உறங்கியுள்ளனர்.

அதிகாலை மூன்று மணி அளவில் கோவிந்தராஜ் அவரது மனைவி மற்றும் மகன் உறங்கிக்கொண்டிருந்த அறையை வெளிப்புறமாக பூட்டி விட்டு உறங்கி கொண்டிருந்த மூன்று மகள்களையும் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் தானும் வீட்டில் ஏற்கனவே வாங்கி மறைத்து வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மகள்களின் அலறல் சத்தம் கேட்டு பாரதி கதவை திறக்க முயற்சித்துள்ளார், பின்னர் கதவு பூட்டு போட்டிருப்பதை அறிந்து அவரும் கூச்சலிட்ட நிலையில் அப்பகுதியில் வீடுகள் தொலைவில் அமைந்திருப்பதால் யாருக்கும் கேட்காமல் இருந்துள்ளது.

பின்னர் அருகில் இருந்தவர்களை போன் செய்து வரவழைத்து கதவை திறந்து பார்த்தபோது மகள்களும் கணவர் கோவிந்தராஜும் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் முதற்கட்ட விசாரணையில் கோவிந்தராஜ் ஆழ்துளை கிணறு தோண்டும் தொழில் மேலாளராக இருந்துவந்ததும்,

வீடு கட்ட மற்றும் தொழில் முன்னேற்றம் அடைய கோவிந்தராஜ் 20 லட்சம் கடன் வாங்கி அதை திரும்ப கொடுக்க முடியாமல் தவித்துள்ளார்.

இதன் காரணமாகவே பிரக்திஷா ஸ்ரீ(10), ரித்திகா ஸ்ரீ(7),தேவா ஸ்ரீ(6) என்ற தனது மூன்று பெண் குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

புது வீடு கட்டி இரண்டு வருடங்களான நிலையில் தற்போது பெற்ற மூன்று பெண் குழந்தைகளை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் சகோதரியின் மகள்களைக் காப்பாற்ற தன் உயிரைவிட்ட இலங்கைத் தமிழர்!!

இங்கிலாந்து நாட்டில் வேல்ஸில், தன் சகோதரியின் மகள்களைக் காப்பாற்றுவதற்காக அருவி ஒன்றிற்குள் குதித்த இலங்கைத் தமிழர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிள்ளைகளை மீட்டுக் கரை சேர்த்த நிலையில், தான் தண்ணீருக்குள் சிக்கிக்கொண்டுள்ளார்.மறுநாள் அவரது உயிரற்ற உடலை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

2023ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி, வேல்ஸிலுள்ள Swanseaயில் வாழ்ந்துவந்த மோகன் என்னும் மோகனநீதன் முருகானந்தராஜா (27), தன் உறவினர்களுடன் Brecon Beacons என்னுமிடத்துக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளார்.

இந்தநிலையில், அவரது குடும்பத்தினர் பலர் அங்குள்ள அருவியில் விளையாடிக்கொண்டிருக்க, சிறிது நேரத்தில் அவரது சகோதரியின மகள்கள் இருவர் தண்ணீரில் தத்தளித்த நிலையில் அவர்களைக் காப்பாற்ற தண்ணீருக்குள் இறங்கியுள்ளார்.

தன் சகோதரி மகள்கள் இருவரையும் தண்ணீரில் தத்தளித்த மற்ற உறவினர்களையும் மீட்டு கரை சேர்த்த மோகன், தானே தண்ணீரில் சிக்கிக்கொண்டுள்ளார். மாயமான மோகனை மீட்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில் மறுநாள் மீட்புக் குழுவினர் அவரை சடலமாக மீட்டுள்ளனர்.

உடலில் 26 தொலைபேசிகள் : பலியான 20 வயது இளம்பெண்!!

பிரேசிலில் 20 வயது பெண் ஒருவர், 26 கைப்பேசிகளை உடலில் மறைத்து வைத்திருந்த நிலையில், பேருந்தில் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பேருந்தில் பயணித்தபோது மூச்சுவிடுவதில் சிரமப்பட்ட அந்தப் பெண் தரையில் விழுந்து கிடந்துள்ளார். பேருந்தில் இருந்தவர்கள் இது குறித்து அவசர வைத்திய சேவைக்கு தகவல் அளித்துள்ளனர்.

ஆனால், வைத்தியக் குழுவினர் வந்து பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

பரிசோதனையின்போது, அவரது உடலில் 26 கைப்பேசிகள் கட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசிகளால் ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர்.

மேலும், அவரது சூட்கேஸில் பல மதுபான போத்தல் மற்றும் கைப்பேசிகள் இருப்பதும் கண்டறியப்பட்டது. பரானா சிவில் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த பெண்ணின் மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்துவதற்காக தடயவியல் அறிக்கைகளுக்காக காத்திருக்கின்றனர். கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் பிரேசிலின் கூட்டாட்சி வருவாய் சேவைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சேவலை கொன்ற தாய் சுட்டுக்கொலை : தவிக்கும் வாயில்லா ஜீவன்கள்!!

சேவல் ஒன்றை கடித்துக் கொன்ற ஒரு பெண் நாயை, கோழி உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம், மொனராகலை படல்கும்புர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலிகத்தென்ன பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம் பெற்றுள்ளது.

கொல்லப்பட்ட வீட்டின் அருகே காணப்பட்ட பெண் நாய்க்கு, 4 குட்டிகள் உள்ள நிலையில், சேவலை அந்த நாய் பிடித்து, அதைக் கொன்று குட்டிகளுக்கு எடுத்துச் சென்றுள்ளது.

சந்தேக நபர் சேவலை காணாமல் அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதலின் போது கொல்லப்பட்ட சே​வல் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் கோபமடைந்த கூலித்தொழிலாளியான 42 வயதான நபர், வீட்டுக்குள் சென்று, துப்பாக்கியை எடுத்து வந்து, பெண் நாயை சுட்டுக் கொன்றுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பொலிஸூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொல்லப்பட்ட பெண் நாயின் உடல் படல்கும்புர கால்நடை மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதில் பெண் நாயின் உடலில் மூன்று சன்னங்கள் காணப்பட்டன.

நாயைக் கொன்ற நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையுல் அவரைக் கைது செய்ய படல்கும்புர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் திசாநாயக்க விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

காதல் திருமணத்திற்கு தடை விதித்த கிராமம்!!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் குடும்பத்தினர் சம்மதிக்காவிட்டால் காதல் திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் கடந்த மாதம் 31-ம் திகதி சண்டிகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மனக்பூர் ஷெரீஃப் கிராமத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து கிராம பஞ்சாயத்து நிர்வாகிளில் ஒருவரான தல்வீர் சிங் கூறுகையில், இது தண்டனை அல்ல. எங்களது பாரம்பரிய மரபு மற்றும் மதிப்புகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை இது. நாங்கள் காதல் திருமணம் அல்லது சட்டத்துக்கு எதிரானவர்கள் அல்ல.

அதை எங்கள் பஞ்சாயத்தில் நாங்கள் அனுமதிக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். தங்கள் கிராமம் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் தான் இந்த தடை பொருந்தும் என மனக்பூர் ஷெரீஃப் கிராமத்தினர் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தினரின் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கு கிராம மக்கள் அடைக்கலம் கொடுத்தால், அவர்களுக்கும் தண்டனை வழங்கப்படும் என இந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

அண்மையில் அந்த கிராமத்தை சேர்ந்த 26 வயதான தாவீந்தரும், 24 வயதான பேபியும் காதல் திருமணம் செய்து கொண்டது இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் முழு சுதந்திரம் சட்டப்பூர்வமான திருமண வயதை எட்டிய ஒவ்வொருக்கும் உள்ள அடிப்படை உரிமையாகும். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு, காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளை பாதுகாக்க வேண்டும்.

இந்த தீர்மானம் ஏதோ தலிபானின் கட்டளை போல உள்ளது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாட்டியாலா தொகுதியின் எம்.பி தரம்வீரா காந்தி கூறியுள்ளார். அதேவேளை இக் காதல் திருமண தடை தீர்மானத்துக்கு பெரும்பாலான கிராம மக்கள், இளைஞர்கள் மத்தியில் ஆதரவு உள்ளதாகவும் கூறப்படுகின்றது,.

வவுனியாவில் 67 இலட்சம் பெறுமதியான நகைகளை திருடிய நபர் கைது!!

வவுனியாவில்(Vavuniya) இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் நேற்றையதினம்(4) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, சோயா வீதியில் உள்ள வீடு ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

முறைப்பாடு

குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டில் வசித்து வந்தவர்கள் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தனர்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது வவுனிய, ஓமந்தை, புதியவேலர் சின்னக்குளம் பகுதியில் வசிக்கும் 33 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலதிக விசாரணை

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தாலிக்கொடி, சங்கிலி, காப்பு, மோதிரம் உள்ளிட்ட 66 இலட்சத்து 33 ஆயிரத்து 800 ரூபாய் பெறுமதியான 25 அரைப் பவுண் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

ஹோட்டலில் பிரைட் ரைஸ் கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

அனுராதபுரத்தில் மனித பாவனைக்கு எதிரான முறையில் செயற்பட்ட ஹோட்டல் ஒன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கெக்கிராவ பகுதியிலுள்ள பிரபலமான உணவகத்தில் இருந்து கொள்வனவு செய்த பிரைட் ரைஸில் இரண்டு அடி நீள நூல் இருந்ததற்காக பாதிக்கப்பட்டவர் செய்ய முறைப்பாடுக்கு அமைய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கெக்கிராவ பொது சுகாதார ஆய்வாளர்கள் உணவை ஆய்வு செய்து, கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் ஹோட்டலுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

கெக்கிராவ மருத்துவமனைக்கு எதிராக அமைந்துள்ள உணவகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு, கலேவெல பகுதியில் வசிக்கும் சுகாதார சேவை அதிகாரி ஒருவர், தனது மகளுடன் உணவகத்தில் பிரைட் ரைஸ் கொள்வனவு செய்துள்ளனர்.

அதனுள் நூல் ஒன்றினை கவனித்த அதிகாரி அது தொடர்பில் உணவக ஊழியர்களிடம் தெரிவித்தார். எனினும் ஊழியர்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து கெக்கிராவ தலைமை பொது சுகாதார ஆய்வாளர் அருணா ரணசிங்கவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், ஹோட்டலில் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது குறித்த உணவில் சுமார் இரண்டு அடி நீளமுள்ள ஒரு நூலை கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது குறித்த ஹோட்டலுக்கு எட்டாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உணவைப் பெற்ற சுகாதாரப் பணியாளர், நூலை அதனுடன் சேர்த்து சாப்பிட்டிருந்தால், அது வயிறு வழியாகவும் குடலிலும் சென்றிருக்கும் என்றும், அறுவை சிகிச்சை கூட தேவைப்பட்டிருக்கும் என்றும் கூறினார்.

வவுனியாவில் 558.5 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றல் : மூவர் மீது விசாரணை!!

வவுனியாவில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 558.5கிலோ நிறையுடைய மாட்டிறைச்சி மாநகரசபையால் நேற்றையதினம் (04.08.2025) மாலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த இறைச்சினை ஏற்றிச்செல்ல முற்பட்ட இரு முச்சக்கரவண்டியும் மாநகரசபையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இதனுடன் தொடர்புபட்ட மூவர் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், கிளிநொச்சியில் இருந்து நேற்று மாலை வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் உரிய பாதுகாப்பு வசதிகள் இன்றி பெருந்தொகை மாட்டிறைச்சி கொண்டுவரப்பட்டுள்ளது. அவை வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வைத்து பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு மீண்டும் முச்சக்கரவண்டியில் ஏற்றிச்செல்லப்படவிருந்தது.

சம்பவம் தொடர்பாக வவுனியா மாநகரசபை முதல்வருக்கு பொதுமக்களால் முறைப்பாடு வழங்கப்பட்டதையடுத்து மாநகர முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் உத்தரவிக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற மாநகரசபையின் துணை முதல்வர் ப.கார்த்தீபன் மற்றும் சபை உறுப்பினர் அருணன், பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் குறித்த செயற்பாட்டை தடுத்து நிறுத்தியதுடன் குறித்த இறைச்சியினை கைப்பற்றினர்.

மீட்கப்பட்ட இறைச்சியின் நிறை சுமார்558.5 கிலோ என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இறைச்சி சுகாதார பரிசோதகரின் மேற்பார்வையில் எடைபார்க்கப்பட்டு மாநகரசபையினரினால் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதுடன் இறைச்சினை ஏற்ற பயன்படுத்தப்பட்ட இரு முச்சக்கரவண்டிகளும் மாநகரசபையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மேலும் இதனுடன் தொடர்புடைய மூவர் மீது மாநகர சுகாதாரப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மாநகரசபையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி பரிதாபமாக பலி!!

ஹம்பாந்தோட்டையில் காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி பலி ஹம்பாந்தோட்டை சினுக்குகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 7 வயது சிறுமி ஒருவர் பலியானார்.

உயிரிழந்தவர் பாடசாலையில் 2 ஆம் வகுப்பில் கல்வி கற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் யானை தாக்குதலில் படுகாயமடைந்த அவரது தந்தையும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 6.00 மணியளவில் சிறுமி தனது தந்தையுடன் விவசாய நிலத்திற்கு சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பாடசாலை விடுமுறை என்பதால், சிறுமி தனது தந்தைக்கு விவசாய நடவடிக்கைகளில் உதவி செய்து கொண்டிருந்தபோது, காட்டு யானை இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

முல்லைத்தீவில் துயரத்தை ஏற்படுத்திய மரணம் : நடந்தது என்ன?

முல்லைத்தீவு – புலிமச்சிநாதிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் காணாமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிமச்சநாதிகுளம் பகுதியில் நேற்று சிவபாதம் ஸ்ரீகாந்தன் என்ற 43 வயதான குடும்பஸ்தர் காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல்போன குடும்பஸ்தருடைய மேற்சட்டையும், கைத்தொலைபேசியும் புலிமச்சிநாதிகுளக் கட்டிலிருந்து மீட்கப்பட்டிருந்ததுடன், காணாமல்போன குடும்பஸ்தர் தொடர்பில் பல சந்தேகங்களும் எழுந்துள்ளன.

இதுதொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் குடும்பத்திஅனரிடம் நேரடியாக சென்று கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் , மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று, துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியிருந்தார்.

காணாமல்போனவரை பொலிசார் தேட தயாரான நிலையில் , குறித்த நபர் சடலமாக புலிமச்சினாதி குளத்தில் இனங்காணப்பட்டதாக ஊர்மக்களால் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

குடும்பஸ்தர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்ஒண்டுள்ளனர்.

மற்றுமொரு பாரிய விமான விபத்தில் இருந்து தப்பிய ஏர் இந்தியா விமானம்!!

இந்தியாவின் பெங்களூருவிலிருந்து கொல்கத்தா சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட தனால், மற்றுமோர் பாரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது.

நேற்று (03.08.2025) இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX 2718 விமானம், பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து (KIA) நேற்று இரவு 7.16 மணிக்கு புறப்பட்டது.

எனினும், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் தொழில்நுட்பக் கோளாறை சந்தித்ததாக முறைப்பாடு அளிக்கப்பட்டது.

விமானத்தின் நடுவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்த தகவலுக்குப் பிறகு, தரையிறங்கும்போது ஏற்படும் எந்தவொரு பாதிப்பிற்கும் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு 8.21 மணிக்கு முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் இரவு 9.19 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களும் விமானத்தில் இருந்தனர்.

விமானம் அவசரமாக பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டாலும், இந்தச் சம்பவம் விமானத்துறையில் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளின் முக்கியத்துவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

இந்நிலையில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறுக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முகத்தில் ஸ்ப்ரே அடித்து தங்க நகையை திருட முயற்சித்த பெண்!!

ஹட்டனில் ஒரு பக்கத் தெருவில் உள்ள ஒரு நகைக் கடையில் இருந்து ரூ.275,000 மதிப்புள்ள தங்க மாலையை திருட முயன்ற, பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

நகையை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த பெண், ஹட்டன் பதில் நீதவான் எஸ். பார்த்திபன் முன்னிலையில் கடந்த 01ஆம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்ட போது, குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை ரூ.500,000 சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், நாளையதினம்(05) வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.

இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்ட கொழும்பைச் சேர்ந்த 26 வயதுடைய பெண், ஒரு குழந்தையின் தாய் ஆவார்.

குறித்த பெண், மஸ்கெலியா உப்காட் பகுதியில் சிறிது காலம் வசித்து வந்ததாகவும் தற்போது கொழும்பில் வசித்து வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், அவர் தனது கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1ஆம் திகதி ஹட்டன் வந்த அவர், நகைக்கடை ஒன்றுக்கு நகை வாங்குவதற்காக சென்றுள்ளார்.

பற்றுசீட்டுக்கள்

இதன்போது, பெண்ணின் இடது கை அவரது கைப்பைக்குள் இருப்பதைக் கண்டு உரிமையாளர் சந்தேகமடைந்துள்ளார். அந்தப் பெண் தனது கைப்பையில் இருந்து திரவ போத்தலொன்றை எடுத்து கடை உரிமையாளரின் மீது தெளித்துள்ளார்.

எனினும், கடை உரிமையாளர், குறித்த பெண்ணை கட்டுப்படுத்தி, அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

தனது தந்தையின் சிகிச்சை செலவுக்காகவே இவ்வாறு செய்ததாக பொலிஸாரிடம் நகையை திருடிய பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் நிதி நிறுவனங்களிலிருந்து தங்க நகைகளை அடகு வைத்ததற்கான பல பற்றுசீட்டுக்கள் அவரது பையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.