இந்தக் குற்றச் செயலை மேற்கொண்டால் 5 ஆண்டுகள் சிறை : எச்சரிக்கும் அரசாங்கம்!!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு எதிராக சேறு பூசும் போலி பிரசாரங்களை சிலர் முன்னெடுத்து வருவதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் இந்த நிலைமை அதிகரித்தால் அது சாதாரண விடயமாக மாறிவிடும் என தெரிவித்துள்ளார். அவ்வாறான ஒரு நிலைமைக்கு இடமளிக்கப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் நபர்கள் இந்த சேறு பூசல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தின் கீழ் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் போலி தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்வதற்கு எவருக்கும் அனுமதி கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு போலி தகவல்களை பகிர்வோருக்கு எதிராக தண்டனை விதிக்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பொய்யான பிரசாரங்கள் தொடர்பில் இதுவரையில் 20 முறைப்பாடுகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கையை மீட்டெடுக்க முன்வரும் சர்வதேச நாடுகள்!!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட , இலங்கையை மீட்டெடுக்க பல சர்வதேச நாடுகள் முன்வந்துள்ளன. அதன்படி, நிதி மற்றும் பொருள் ரீதியான நிவாரண உதவிகளை சில நாடுகள் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய, சர்வதேச மனிதாபிமான நட்பின் ஊடாக, நியூசிலாந்து, அவசர மனிதாபிமான நிவாரணத்தை ஆதரித்து, ஒரு மில்லியன் நியூசிலாந்து டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது.

பிரித்தானியாவும் அவசர நிவாரண நிதி உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி, எட்டு இலட்சத்து 90 ஆயிரம் அமெரிக்க டொலர் நிவாரண நிதியை இலங்கைக்கு வழங்குவதாக பிரதித்தானியா அறிவித்துள்ளது.

குறித்த நிதியானது செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான அமைப்பு மற்றும் உள்ளூர் பங்காளிகளுடன் இணைந்து அவசரப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீன அரசாங்கமும் இலங்கைக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

குறித்த நிதியை, சீன செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திடம் வழங்கியதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

மேலும், அனர்த்த நிவாரணப் பணிகளை வலுப்படுத்தும் வகையில், இலங்கையிலுள்ள சீன வர்த்தக சம்மேளனம் மற்றும் வெளிநாட்டுச் சீன சங்கம் ஆகியன இணைந்து நன்கொடை திட்டங்களை ஆரம்பித்துள்ளன.

இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 10 மில்லியன் இலங்கை ரூபாயைத் திரட்டியுள்ளன.

மேலும், இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் இலங்கைக்கு பாரிய உதவிகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள எயிட்ஸ் நோய் தொற்றாளர்கள்!!

வவுனியாவில் இதுவரை 43 பேர் எயிட்ஸ் (எச்ஐவி) நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இளவயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

எயிட்ஸ் நோய் தொடர்பாக நேற்று ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம்1 ஆம் திகதி. உலகம் முழுவதும் கடைப்படிக்கபட்டு வருகின்றது. இம்முறை சவால்களை சமாளித்து புதிய வழிகளில் போராடுதல் எனும் தொனிப்பொருளில் உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.

இலங்கையில் இதுவரை 7168 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில், ஆண்கள் 5544 பேரும் பெண்கள் 1603 பேரும் இடைநிலை பால் நிலையை சேர்ந்த 21 பேரும் இதனுள் அடங்குவர்.

இதுவரை நாட்டில் 1629 பேர் இந்நோயால் இறந்துள்ளனர். எந்தவித தொற்று அறிகுறிகளுமின்றி நோய் தொற்றுடன் 5700 பேர் நடமாடி வருகின்றார்கள்.

வவுனியா மாவட்டத்தில் இதுவரை 43 பேர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 34 பேர் எம்மிடம் மருத்துவ சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். அவர்களில் 21 பேர் ஆண்கள். 13 பேர் பெண்கள் ஆவர்.

2 கர்ப்பிணி தாய்மாரும் உள்ளனர். அவர்களிடம் இருந்து பிள்ளைக்கு தொற்றாத வகையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

13 பேர் இதுவரை மரணத்தை தளுவியுள்ளனர். ஏனைய நோயாளர்களிற்கான சிகிச்சைகள் எம்மால் வழங்கபட்டு வருகிறது. அவர்களிற்கான மருந்துகளை நாம் வழங்கி வருகின்றோம்.

அந்த மருந்துகளின் மூலம் ஒருவரது மரணத்தினை தாமதப்படுத்த முடியும். எயிட்ஸ் நோய் பரவுவதற்கான மூன்று காரணங்களில் எச்ஐவி தொற்றுள்ள ஒருவருடன் பாதுகாப்பற்ற வகையில் பாலியல் ரீதியாக தொடர்பு கொள்ளல்,

நோய் தொற்றுள்ள ஒருவரின் குருதியை இன்னுமொருவருக்கு செலுத்துதல், தொற்றுள்ள தாய் ஒருவருக்கு பிறக்கின்ற பிள்ளை ஆகியோருக்கு இந்த நோய் பரவுகிறது.

இலங்கையில் தற்போது குருதி மாற்றங்களின் போது உரிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் கர்ப்பிணி பெண்களிற்கு அவர்களது இணக்கத்துடன் எச்.ஐ.வி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

நாட்டில் 15 வயது தொடக்கம் 25 வயதிற்குட்பட்டவர்களே தொற்றாளர்களாக இருக்கும் நிலை உள்ளது. நோய்தொற்று ஏற்பட்டவர் சாதாரண ஒரு மனிதரை போலவே இருப்பர். அவரது முகத்தை வைத்து நோயை கண்டுபிடிக்க இயலாது.

குருதியினை பரிசோதனை செய்வதன் மூலம் மாத்திரமே அதனை கண்டு பிடிக்க முடியும். எனவே ஒரு தரமாவது பரிசோதனையை மேற்கொண்டால் குறித்த நோய் மற்றவர்களிற்கு தொற்றாமல் தடுக்கலாம்.

வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவில் பொதுமக்கள் தாமாக வந்து பரிசோதனைகளை மேற் கொள்ள முடியும். இங்கு பரிசோதனைகள் மேற்கொள்பவர்களது இரகசியங்கள் பாதுகாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான உதவிக்கரம் நான்காவது விமானம் வந்தடைந்தது!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய நான்காவது விமானம் நாட்டை வந்தடைந்தது.

நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன், மனிதாபிமான உதவி நிவாரணங்கள் அடங்கிய விமானங்களை ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் நோக்கம்

இதன்படி, ஐக்கிய அரபு இராச்சிய விமானப்படைக்கு சொந்தமான C -17 விமானம் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

மீட்பு நடவடிக்கைகளுக்காக விசேட பயிற்சி பெற்ற 53 அபுதாபி சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள், புதையுண்ட இடங்களில் இருந்த மனித உடல்களை தேடும் திறன் கொண்ட மோப்ப நாய்கள் நாய்கள்,

அவற்றைக் கொண்டு செல்லும் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் பல வாகனங்கள் இந்த விமானத்தின் ஊடாக கொண்டு வரப்பட்டுள்ளன.

அவர்களை வரவேற்க இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் அல் அமேரி, வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் குழுவினரும் வருகைதந்திருந்தனர்.

 

இலங்கையில் குறையும் தங்கத்தின் விலை!!

நாட்டில் நேற்று (02) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 340,000 ரூபாய்க்கு விற்பனையாகியிருந்த நிலையில், இன்று (03) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், இன்றைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 338,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 311,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,875 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

பேருந்து நிலையத்தில் தனியாக இருந்த எட்டு வயதுச் சிறுமி மீட்பு!!

கொழும்பு புறநகர் கொட்டாவ நகரின் பிரதான பேருந்து நிலையத்தில் இன்று (03) தனியாக இருந்த எட்டு வயது சிறுவனொருவரை கொட்டாவ பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், பொலிஸ் அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சென்று சோதனையிட்டனர்.

இதன்போது, ​​சிறுவன் நன்றாக உடையணிந்து, காலணிகள் அணிந்திருப்பதைக் கண்டு சிறுவனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, உணவு மற்றும் பானங்களை வழங்கி, அவன் இருக்கும் இடம் குறித்து விசாரித்துள்ளனர்.

எனினும் சிறுவன் சரியாக பதிலளிக்காததால் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25000 ரூபா உதவி!!

நாட்டில் ஏற்ற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி வழங்கப்படவுள்ளது.

அதன்படி பாதிக்கபப்ட்ட மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து 25,000 ரூபாவை வழங்க ஜனாதிபதி அனுர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 

வடக்குக்கு மீண்டும் மழையா? : அடுத்த 48 மணி நேரத்தில் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்!!

எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைபெறும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் நாட்டில், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபத்தன்று மறந்தும் இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!!

திருக்கார்த்திகை தீபம் என்பது இறைவனை ஒளி வடிவமாக வழிபடும் திருநாளாகும். இந்த நாளில் வீடு முழுவதும் விளக்கேற்றி வழிபடுவதால் நன்மைகள் அதிகரிக்கும். இது இறை அருளையும், செல்வ நலன்களையும் பெறுவதற்கான நாளாகும்.

திருக்கார்த்திகை தீபத் திருநாள் சிவ வழிபாட்டிற்கு மட்டுமின்றி, மகாலட்சுமியை வழிபட்டு, அவரின் அருளை முழுவதுமாக பெறுவதற்குரிய சக்தி வாய்ந்த நாளாகும். இதனால் இந்த நாளில் மறந்தும் கூட சில தவறுகளை செய்து விடக் கூடாது.

திருக்கார்த்திகை தீபம் அன்று செய்யக் கூடாத 3 தவறுகள்

திருக்கார்த்திகை தீபத் திருநாள் அன்று எந்த காரணத்திற்காகவும் வீட்டில் விளக்கேற்றாமல் இருளாக இருக்கும் படி செய்யக் கூடாது.

திருக்கார்த்திகை அன்று நீங்கள் வெளியூர் செல்வதாக இருந்தாலோ அல்லது ஆன்மீக பயணம் செல்வதாக இருந்தாலோ கூட பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அல்லது உங்களின் உறவினர் யாரையாவது வீட்டில் இருக்கச் செய்து விளக்கேற்றி வைக்க செய்யலாம்.

அவர்களால் உங்கள் வீட்டில் இருக்க முடியா விட்டாலும், வீட்டு வாசலில் மட்டுமாவது விளக்கேற்றி வைக்கச் சொல்லலாம். பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடா விட்டாலும், வீட்டு நிலைவாசலில் மட்டுமாவது இரண்டு அகல் விளக்குகள் எரியும் படி செய்ய வேண்டும்.

திருக்கார்த்திகை தீபம் அன்று விரதம் இருப்பது சிறப்பு. அப்படி விரதம் இருக்க முடியவில்லை என்றால் சைவமாக சாப்பிட்டு, இறை வழிபாட்டினை மேற்கொள்ளலாம். மறந்தும் கூட இந்த நாளில் அசைவம் சாப்பிடக் கூடாது. அது மிகப் பெரிய பாவமாகும்.

திருக்கார்த்திகை தீபம் அன்று யாரிடமும் கடன் வாங்கக் கூடாது. மளிகைக் கடையிலோ அல்லது வேறு ஏதாவது பொருட்கள் வாங்கினால் கூட பணம் கொடுத்து தான் அந்த பொருளை வாங்க வேண்டுமே தவிர, கடனாக ஒரு போதும் வாங்கக் கூடாது.

திருக்கார்த்திகை திருநாள் என்பது மகாலட்சுமியை வீட்டில் எழுந்தருளச் செய்து, அவளின் அருட்கடாட்சத்தை பெறுவதற்கான நாளாகும். இதனால் மகாலட்சுமி மனம் மகிழும் படியான விஷயங்களை மட்டுமே இந்த நாளில் செய்ய வேண்டும்.

இரண்டு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய் : மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்!!

அனுராதபுரத்தில் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க அனுராதபுரம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உள்ளூர்வாசிகள் மற்றும் உயிர் காப்பாளர் குழுவின் உதவியுடன் தாய் மீட்கப்பட்ட நிலையில் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மொரட்டுவையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான 40 வயதுடைய ஒரு பெண் தனது 4 வயது மற்றும் 8 வயதுடைய குழந்தைகளுடன் செவ்வாய்க்கிழமை (02) காலை அனுராதபுரம் நகரத்திற்கு அருகிலுள்ள மல்வத்து ஓயாவில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

மலத்து ஓயா அருகே நின்ற ஒருவர், குறித்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து உள்ளூர்வாசிகளின் உதவியுடன், பெண்ணை மீட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் உயிர்காப்பாளர் பிரிவு இரண்டு குழந்தைகளையும் தேடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நாவலப்பிட்டி மண்சரிவில் புதையுண்ட 08 சடலங்கள் மீட்பு!!

குருந்துவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி, பரகல கீழ் பிரிவு தோட்டப் பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்த அனர்த்தத்தில், கற்பாறைகள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்த பகுதியில் இருந்து இதுவரையிலும் 08 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினமும் (02) ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் 05 பேரைக் காணவில்லை எனவும், இவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோட்டத்தைச் சேர்ந்த 65 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் லயன் குடியிருப்பைச் சேர்ந்த 13 வீடுகள் முழுமையாக மண்ணில் புதையுண்டுள்ளன.

மீட்கப்பட்ட சடலங்கள் மண்சரிவு ஏற்பட்ட பகுதியின் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த விபத்தின் காரணமாகத் தமது உடமைகள் அனைத்தும் மண்ணில் புதையுண்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, மண்ணில் புதையுண்டவர்களை மீட்பதற்கு இராணுவத்தினரோ அல்லது பொலிஸாரோ குறித்த பகுதிக்கு வரவில்லை எனவும், கடந்த இரண்டு நாட்களாக மக்களே தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பிரதேச செயலகத்தின் ஊடாகச் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கணவர் வெளிநாட்டில், இரு குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு : தீவிரமடையும் தேடுதல்!!

உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க அனுராதபுரம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உள்ளூர்வாசிகள் மற்றும் உயிர் காப்பாளர் குழுவின் உதவியுடன் தாய் மீட்கப்பட்ட நிலையில் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மொரட்டுவையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான 40 வயதுடைய ஒரு பெண் தனது 4 வயது மற்றும் 8 வயதுடைய குழந்தைகளுடன் இன்று (02) காலை அனுராதபுரம் நகரத்திற்கு அருகிலுள்ள மல்வத்து ஓயாவில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

மல்வத்து ஓயா அருகே நின்ற ஒருவர், குறித்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து உள்ளூர்வாசிகளின் உதவியுடன், பெண்ணை மீட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் உயிர்காப்பாளர் பிரிவு இரண்டு குழந்தைகளையும் தேடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தமிழர் பகுதிகளில் எரிபொருளுக்கு நீண்ட வரிசை : வெளியான முக்கிய அறிவிப்பு!!

நாடு சீரடைந்துவரும் நிலையில் தேவையற்ற செயற்கை தட்டுபாடுகளை ஏற்படுத்தவேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேவையற்ற வகையில் பெற்றோலை சேகரிக்கும்போது அது அத்தியாவசிய தேவையாகவுள்ளவர்களின் செயற்பாடுகளை பாதிக்கும் நிலையேற்படும் எனவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போலியாக பரவிவரும் செய்திகளைக் கொண்டு மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளில் நிற்பதை காணமுடிகின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுத்துவதாக சிலர் போலியாக தெரிவித்துவரும் கருத்துகளைக்கொண்டு மட்டக்களப்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகளை காணமுடிகின்றது.

முச்சக்கர வண்டிகளும் மோட்டார் சைக்கிள்களும் அதிகளவில் வரிசையில் நின்று எரிபொருளை பெறுவதன் காரணமாக அவசரத்தேவைக்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருவோர் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேவையான எரிபொருட்கள் கையிருப்பில் உள்ள நிலையில் பொதுமக்கள் எந்த அச்சமும் கொள்ளத்தேவையில்லையென மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டை மீட்டெடுக்க களத்தில் குதித்த மக்கள் : பதுளையில் களமிறங்கிய 826 பேர் கொண்ட குழு!!

இலங்கையின் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பல மாவட்டங்கள் நிர்மூலமாகி உள்ளன. இதில் பதுளை மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்புகளும் அதிரித்துள்ளன.

இந்நிலையில் பதுளை மாவட்டத்தை மீள கட்டியெழுப்பும் நோக்கில் மாத்தறையில் இருந்து குழுவொன்று வருகை தந்துள்ளது. சுமார் 826 பொது மக்கள் ஒன்றுகூடிய பதுளையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

புனரமைப்பு பணிகளுக்கு தேவையான இயந்திரங்களும் உபகரணங்களும் மக்களால் கொண்டு வரப்பட்டுள்ளன.

அகழ்வாராய்ச்சியாளர்கள் குழுவுடன் பேக்கோ லோடர்கள், செயின்சாக்கள், தண்ணீர் பவுசர்கள், சுத்தப்படுத்தும் உபகரணங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

ஏற்கனவே சிவனொலிபாதமலையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் அரச ஊழியர் குழுவொன்று ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

டித்வா புயலின் கோரம் பலரின் : கண்ணீருக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்ட 31 சடலங்கள்!!

கண்டி, உடத்தல, நெலும்மல பகுதியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 13 குடும்பங்களை சேர்ந்த 31 பேரின் இறுதிச்சடங்குகள் நடைபெற்றுள்ளன.

கண்டி, உடத்தல, நெலும்மல பகுதியில் கடந்த 27 ஆம் திகதி பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேர் உயிரிழந்திருந்தனர்.

எதிர்பாராத தருணத்தில், சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மலை உச்சியில் இருந்து ஒரு பெரிய மண் மேடு சரிந்து சிறிய கிராமத்தை முழுமையாக மூடியிருந்தது.

அழகான நெல் வயலின் நடுவில் அமைந்திருந்த இந்த கிராமத்திற்கு மேலே அமைந்திருந்த யஹங்கல மலைத்தொடரும், நக்கிள்ஸ் மலைத்தொடரின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்துள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 31 பேர் சடலங்களாக மீட்கப்பட்டு பலரை தேடும் பணி தொடர்ந்து வருகின்றது.

உயர்தர பரீட்சைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் 2026 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். எனினும், திகதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

அதேநேரம், பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பேரிடர்களால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.