வவுனியாவில் பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் சபை அமர்வுக்கு வந்த உறுப்பினர்!!

பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை அமர்வுக்கு உறுப்பினர் ஒருவர் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் பதிவாகியுள்ளது.

சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு அழைத்து வரப்பட்டிருந்தார்.

கடந்த 11 ஆம் திகதி வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற அமைதியின்மை காரணமாக ஒருவர் மரணமடைந்ததுடன், 5 பொலிஸார் காயமடைந்தனர். பொலிஸாரின் இரு உந்துருளிகள், கப் ரக வாகனம் ஒன்றும் சேதமானது.

இச்சம்பவம் தொடர்பில 7 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின்போது அப்பகுதியில் மக்களுடன் நின்ற தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் வாக்குமூலம் பெறுவற்காக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் கடந்த 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரை எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டநிலையில் அவர் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையின் சபை அமர்வுக்காக நீதிமன்ற அனுமதி பெற்று பொலிஸார் மற்றும் சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் சிறைச்சாலை வாகனத்தில் அமர்வுக்காக அழைத்து வரப்பட்டு அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். அமர்வு முடிந்ததும் மீண்டும் அதே வாகனத்தில் அழைத்துச் சென்று சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

 

வவுனியாவில் டிப்பர் வாகனம் ஏறியதில் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

வவுனியா நெடுங்கேணி துவரங்குளம் பகுதியில் டிப்பர் வாகனம் ஏறியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றயதினம் இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. நேற்றயதினம் இரவு உயிரிழந்த குடும்பஸ்தர் தனது வீட்டின் முன்பாக உள்ள வீதியில் உறங்கிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அந்தபகுதியால் சென்ற டிப்பர் வாகனம் தவறுதலாக அவர்மீது ஏறியுள்ளது. இதனால் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சாவடைந்துள்ளார். சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த திலீபன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே பரிதாபமாக சாவடைந்துள்ளார்.

டிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி அவரது உறவினர் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அழகு முதல் ஆரோக்கியம் வரை தினமும் ஒரு கப் ABC யூஸ்!!

ஆப்பிள் (A), பீட்ரூட் (B), கேரட் (C) ஆகிய மூன்றையும் சேர்த்து தயாரிக்கப்படும் ABC ஜூஸ், ஆரோக்கியம் நிறைந்த ஒரு பானமாகும். இதனை தினமும் ஒரு கப் ABC யூஸ் அருந்துவதால் கிடைக்கும் முக்கியப் பயன்கள்,

வைட்டமின் C நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்த்தொற்றுகளிலிருந்து உடலைப் பாதுகாக்கும்.

உடல் நச்சு நீக்கம்:

இதில் உள்ள பீட்டாலைன்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

எடை குறைப்பு:

குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து காரணமாக, வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

செரிமான ஆரோக்கியம்:

நார்ச்சத்து மற்றும் பெக்டின் போன்ற சத்துக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானப் பிரச்சினைகளைக் குறைக்கும். சருமப் பொலிவு: வைட்டமின் A மற்றும் C போன்ற ஆன்டிஆக்சிடெண்டுகள் இருப்பதால், சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைத் தரும்.

வட் வரி – பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!!

வட்வரி மற்றும் பொருட்களின் விலை குறைப்பை எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு மேற்கொள்ள முடியாது என வீடமைப்பு பிரதியமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “IMFன் கொள்கைகளுக்கு இணங்கி கொண்டுள்ளதால், அதை மீறி செய்ய முடியாது. IMF அவ்வாறு குறைப்பதற்கு அனுமதி அளிக்காது.

நாங்கள் அரசாங்கத்தை எடுப்பதற்கு முன்னர் சர்வதேசத்தில் இலங்கையை வங்குரோத்தான நாடாகவே கருதினர். இலங்கையர்கள் என்றால் ஏலனமாகவே பார்த்தனர்.

அவ்வாறு இருந்த நாட்டை நாம் செலிப்பானதாக மாற்றினோம். அண்மையில் சுற்றுலா செல்வதற்கு உலகில் அழகான தீவாக இலங்கையை அறிவித்துள்ளனர்.

எமது நாட்டின் திரைசேறியை செலிப்பாக்கி 2028ஆம் ஆண்டு IMFஇல் இருந்து நாம் வெளியேறும் காலமாகும். ஆனால் 2027ஆம் ஆண்டு வெளியேறத் திட்டம் தீட்டியுள்ளோம்.

அப்போது வட்வரி மற்றும் பொருட்களின் விலையை குறைப்போம். நாம் படிப்படியாக அரசின் அநாவசிய செலவுகளை குறைத்து வருக்றோம். அதன் மூலம் மக்களுக்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

 

நடுவானில் பயணிகள் விமானத்திற்குள் பதற்றம்!!

மும்பையிலிருந்து கொல்கத்தாவுக்குச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒருவர், மற்றொரு பயணியை தாக்கியுள்ள நிலையில் பயணத்தின் போது பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட குறித்த நபர், விமான பயணத்தின் பின்னர் காணாமல் போயுள்ளதாகவும் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஹுசைன் அகமது மஜும்தார் என்ற பயணி, ஜூலை 31ஆம் திகதி மும்பையிலிருந்து கொல்கத்தா வழியாக சில்ச்சாருக்குப் பயணம் செய்துள்ளார்.

அவர் சில்ச்சாரை அடைய வேண்டியிருந்ததாகவும், ஆனால் அவர் வீடு திரும்பவில்லை என்றும், அதன் பிறகு அவர்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விமானத்தில் ஹுசைன் அகமது மஜும்தார் என்ற பயணியை ஒரு நபர் திடீரென அறைந்து தாக்கியுள்ளார்.

இதன்போது தாக்கப்பட்ட பயணி பீதியில் இருந்ததாகவும் தாக்குதலுக்கு பின்னர் அவருக்கு மூச்சு பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தின் போது விமான பணிப்பெண்கள் குறுக்கிட்டு தகராறை தடுத்துள்ளனர். இச்சம்பவம் பதிவான காணொளியும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

அதேவேளை, சம்பவத்தின் பின்னர் தாக்கப்பட்ட நபர் காணாமல் போயுள்ளதாகவும் தாக்கிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

முல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் தேக்கங்காட்டுப் பகுதியில் திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு வருகை தந்த பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது .

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதுண்ட விபத்தில் ஒருவர் காயமடைந்து புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இளைஞனின் மர்ம மரணத்தால் பரபரப்பு : தீவிரமாகும் விசாரணை!!

ஒஹிய – உடவேரியவத்தை பகுதியில் நபர் ஒருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச கிராம உத்தியோகத்தர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் உடவேரியவத்தையில் உள்ள ஒஹிய விகாரைக்கு அருகில் வசிக்கும் 22 வயது இளைஞர் ஆவார்.

மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் ஹல்துமுல்ல மற்றும் பண்டாரவளை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருளில் மூழ்கும் உலகம் : அரிய கிரகணம் பற்றி உண்மையை விளக்கிய நாசா!!

சமூக வலைதளங்களில், இன்று (02.08.2025) உலகம் 6 நிமிடங்கள் முழுமையான இருளில் மூழ்கும் என பரவும் தகவல் குறித்து நாசா மறுப்பு வெளியிட்டுள்ளது.

இது 100 ஆண்டுகளில் ஒருமுறை ஏற்படும் அரிய நிகழ்வாக சித்தரிக்கப்பட்டாலும், உண்மையில் இது தவறான தகவலாகும் எனவும், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்குப் பின்னணி சூரிய கிரகணமாகும். ஆனால், அடுத்த சூரிய கிரகணம் 2025-ம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி நிகழ இருக்கிறது – இது மிகச் சிறிய கிரகணமாகும்.

இதேவேளை, கடந்த 1991-ம் ஆண்டு பிறகு நிகழவுள்ள மிக நீண்ட சூரிய கிரகணம் 2027 ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த கிரகணம் 6 நிமிடம் 22 வினாடிகள் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது பூமி முழுவதும் இருளில் மூழ்கும் நிகழ்வாக மாறாது.

முக்கியமாக ஸ்பெயின், ஜிப்ரால்டர், மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து, சூடான், சவுதி அரேபியா, ஏமன், சோமாலியா ஆகிய நாடுகளில் மட்டுமே அதனை காண முடியும்.

இந்த கிரகணத்தின் போது முழு இருள் ஏற்படாமல், மாலை நேரத்துக்குச் சமமான மங்கலான வெளிச்சம் தான் இருக்கும் என்றும், இது பாதுகாப்பானதென்றும் நாசா தெரிவித்துள்ளது.

இதனால் சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என விஞ்ஞானிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வவுனியா கோவில்குளம் சிவன் கோவில் அம்பாள் மகோற்சவத்தின் தேர்த்திருவிழா!(படங்கள்,வீடியோ)

வவுனியா ‪கோவில்குளம் ‪அருள்மிகு ஸ்ரீ‪அகிலாண்டேஸ்வரி சமேத‪ அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் ‪அம்பாள் உற்சவத்தின்‪‎   ஒன்பதாம்   நாளான (27.07.2025) ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை  அபிசேகங்கள்‪ மூலஸ்தான பூசை, ‪‎யாகபூசை,கொடிதம்ப பூசையை தொடர்ந்து காலை எட்டுமுப்பது மணியளவில்   வசந்தமண்டப பூசை இடம்பெற்றது.

தொடர்ந்து  அம்பாள் உள்வீதி வலம்வந்து ஒன்பது மணியளவில் தேரில் ஆரோகணித்து ஒன்பதரை மணியளவில்  ஒருபுறம் ஆண்பக்த அடியார்களும்  மறுபுறம்  பெண் பக்த அடியார்களும்   வடம் பிடிக்க  திருவீதியுலா வந்தாள்.

சரியாக காலை பதினோரு மணியளவில் தேர் இருப்பிடத்தை அடைய அதன் பின் அர்ச்சனைகள் இடம்பெற்றன. தொடர்ந்து மதியம் ஒருமணியளவில் பச்சை சாத்தல் உற்சவமும் இடம்பெற்றது .

 

வடக்கு உட்பட பல மாகாணங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று வெள்ளிக்கிழமை கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் இரவு 11.00 மணி வரை அமுலில் உள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, மேற்படி மாகாணங்களிலும் மாவட்டத்திலும் பல இடங்களில் கடும் மின்னல் தாக்கம் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பொதுமக்கள் பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனை வழங்குகின்றது.

திறந்தவெளிகளில் நடமாடுவதை குறைத்துக் கொள்ளவும். மரங்களின் கீழ் ஒருபோதும் நிற்க வேண்டாம்.

இடி முழக்கத்தின் போது நெல்வயல்கள், தேயிலைத் தோட்டங்கள், திறந்த நீர்நிலைகள் போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ளவும்.

இடி முழக்கத்தின் போது கம்பித்தொடர்புள்ள தொலைபேசி மற்றும் மின்னிணைப்பிலுள்ள மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

துவிச்சக்கர வண்டிகள், உழவியந்திரங்கள், படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

விழக்கூடிய மற்றும் விழுந்த மரங்கள், மின்கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும்.

அவசர உதவிகளுக்கு உங்கள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.

ஆசிரியையான மனைவியின் அந்தரங்க காணொளியை மாணவனுக்கு அனுப்பிய கணவன்!!

கொழும்பில் பாடசாலை ஆசிரியை ஒருவரின் அந்தரங்க காணொளியை மாணவர்களுக்கு அனுப்பிய கணவனான சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனது மனைவியான ஆசிரியையுடன் நெருக்கமாக இருந்து அதனை வீடியோ எடுத்து, அவர் படிப்பிக்கும் பாடசாலை மாணவருக்கு வட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பியதாக கூறப்படும் சந்தேக நபரை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு கூடுதல் நீதவான் கசுன் காஞ்சன தசநாயக்க நேற்று உத்தரவிட்டார்.

கொழும்பு மருதானை பகுதியில் உள்ள இளம் ஆசிரியை ஒருவர் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் செய்த முறைப்பாடு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, விசாரணை அதிகாரிகள் சம்பவம் தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பித்ததை அடுத்து சந்தேக நபரை கைது செய்ய உத்தரவிடப்பட்டது.

தகாத படங்களைப் பார்ப்பதற்கு அடிமையானதாக கூறப்படும் சந்தேக நபர், தனது மனைவியுடனான அந்தரங்க உறவை இரகசியமாக வீடியோ எடுத்ததாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டாளரான ஆசிரியைக்கும் சந்தேக நபரான கணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், கணவன் – மனைவிக்கு இடையிலான உறவு தொடர்பான வீடியோவை வட்ஸ்அப் செயலி மூலம் தனக்கு கீழ் படிக்கும் மாணவருக்கு சங்கடப்படுத்தும் நோக்கில் சந்தேக நபர் அனுப்பியதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

சந்தேக நபரான கணவர் மனச்சோர்வு எனப்படும் மருத்துவ நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் மேலும் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தகவல்களை பரிசீலித்த நீதவான், சந்தேக நபரின் கணவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

உயிரை மாய்த்துக் கொண்ட கர்ப்பிணிப் பெண் : சர்ச்சையை கிளப்பிய கடைசி வட்ஸ்அப் மெசேஜ்!!

குடும்ப வன்முறையால் திருச்சூரில் கர்ப்பிணி தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சூரில் 23 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமியாரின் தொடர் துன்புறுத்தலால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்களின் வரிசையில் இந்த சோகமும் இணைந்துள்ளது.

வெல்லங்குளாரில் வசிக்கும் நௌஃபல் என்பவரின் மனைவி ஃபசீலா, தனது கணவர் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

உயிரிழப்பதற்கு முன், தனது தாய் மற்றும் சகோதரிக்கு வாட்ஸ்அப் மூலம் பல செய்திகளை ஃபசீலா அனுப்பியுள்ளார். அதில், தனது கணவர் தன்னை பலமுறை வயிற்றில் உதைத்ததாகவும், தனது கையை உடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது மாமியார் ரம்லாவும் தன்னை தொடர்ந்து துன்புறுத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு செய்தியில், “இல்லையென்றால் அவர்கள் என்னைக் கொன்றுவிடுவார்கள்” என்று தனது தாயிடம் ஃபசீலா உருக்கமாகக் தெரிவித்துள்ளார்.

இந்த செய்திகளின் அடிப்படையில், ஃபசீலாவின் கணவர் நௌஃபல் மற்றும் மாமியார் ரம்லா ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். உயிரை மாய்த்துக் கொள்ள தூண்டியதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஃபசீலாவின் மரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு, கொல்லத்தைச் சேர்ந்த 29 வயதான அதுல்யா சதீஷ் பல வருடங்களாக தனது கணவரின் துன்புறுத்தலை அனுபவித்து வந்த நிலையில், ஷார்ஜாவில் உயிரை மாய்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

மகள் கண் எதிரிலேயே கொடூரம் : நீதிமன்ற வளாகத்தில் மனைவியை குத்திக் கொன்ற கணவர்!!

நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியைக் கணவன் குத்திக் கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் செயின் கபீர் மாவட்டம் பஹ்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (39). லாரி டிரைவராக பணிபுரிந்து வரும் இவருக்கும் லட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு 7 வயதில் மகள் உள்ள நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான சந்தோஷ் குடித்து விட்டு தினமும் மனைவி லட்சுமியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதையடுத்து சந்தோஷைப் பிரிந்து, லட்சுமி தனது மகளுடன் அம்மா வீட்டிற்கு சென்று விட்டு, அங்கிருந்தபடியே விவாகரத்துக் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்நிலையில், விவாகரத்துக் கோரி லட்சுமி தொடர்ந்த வழக்கு நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, லட்சுமி தனது மகளை அழைத்து வந்திருந்தார். சந்தோஷூம் கோர்ட்டிற்கு வந்திருந்த நிலையில் விவாகரத்து வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

திடீரென சந்தோஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகள் கண்முன்னே கோர்ட்டு வளாகத்தில் மனைவி லட்சுமியை சரமாரியாக குத்திவிட்டார்.

இதில் லட்சுமியின் முகம், வயிற்றுப்பகுதியில் கத்திக்கு சரமாரியாக பாய்ந்ததில், ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த கோர்ட்டு ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். உடனடியாக லட்சுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். லட்சுமிக்கு 2 மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதே நேரத்தில் லட்சுமியை குத்திக் கொன்று விட்டு தப்பியோட முயன்ற சந்தோஷைப் பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். சந்தோஷைக் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகனின் பிரிவை தாங்க முடியாமல் பெற்றோர் விஷம் குடித்து பலி!!

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி கந்தசாமியூர் வடக்கு தயிர்பாளையத்தில் வசித்து வருபவர் 53 வயது வேலுச்சாமி. இவருடைய மனைவி தீபா இருவரும் விவசாயத் தொழில் செய்து வருகின்றனர்.

அதே பகுதியில் விசைத்தறி பட்டறையும் வைத்து நடத்தி வந்தனர். இவர்களுடைய மகன் 22 வயது பிரதீப் கோவையில் ஒரு கல்லூரியில் பி.இ. படித்து வந்தார்.

ஏப்ரலில் விடுமுறையில் ஊருக்கு வந்த அவர் தந்தையின் விசைத்தறி பட்டறைக்கு சென்றார். அங்கு மழையால் கூரை ஒழுகுவதை சரி செய்ய சிமெண்ட் ஓட்டின் மீது ஏறினார்.

அப்போது ஓடு உடைந்து மேலே இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிரதீப் ஏப்ரல் 18ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மகன் இறந்தது முதல் வேலுச்சாமியும், தீபாவும் அவர் நினைவாகவே தாங்க முடியாத மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இனி உயிரோடு இருந்து என்ன செய்ய போகிறோம். நாங்களும் செத்து போகிறோம் என்று உறவினர்களிடம் கூறி வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் தீபா தனது உறவினர்களுக்கு வாட்ஸ்-அப்பில் “பிரதீப் குட்டியின் பிரிவை எங்களால் மறக்க முடியாது. நாங்களும் எங்கள் தங்கத்தை தேடி போகிறோம். எங்களின் இந்த முடிவுக்கு நாங்கள் மட்டுமே காரணம்’ என கூறப்பட்டு இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு வேலுச்சாமியும், தீபாவும் விஷம் குடித்த நிலையில் சடலமாக கிடந்தனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடும் புகையிரத்திலிருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி!!

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவர் பால் பண்ணை நடத்தி வருகிறார். இவரின் மனைவி ரோகிணி . இவர் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயதில் குழந்தை உள்ளது. ராஜேஷின் தந்தை சென்னையில் உள்ளார்.

அவரை பார்க்க கணவன்-மனைவி இருவரும் சென்னைக்கு புறப்பட்டனர் குழந்தையை உறவினர்களிடம் விட்டு விட்டு இருவரும் திருவனந்தபுரத்தில் இருந்து கோவை,

சேலம்வழியாக சென்னை செல்லும் திருவனந்தபுரம் விரைவு ரயிலில் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தனர். ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்து நின்றவுடன் சிறிது நேரத்தில் ரயில் புறப்பட்டது. அப்போது ரோகிணி கழிவறைக்கு சென்றார்.

கழிவறைக்கு வெளியே உள்ள வாஷ்பேஷினில் முகத்தை கழுவிக்கொண்டிருந்த அவர் வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவே இல்லை. நீண்ட நேரம் ஆகியும் வராததால் ராஜேஷ் அவரை தேடிச்சென்றார்.

அருகில் உள்ள இருக்கைகளுக்கு சென்று தேடிப்பார்த்தும் அவரை பார்க்க முடியவில்லை. ஆனால் ரயில் ரயில் காட்பாடியை நெருங்கிவிட்டது.

சந்தேகம் அடைந்த ராஜேஷ் உடனே காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் காட்பாடி, ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் ரோகிணியை தேடினர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோவில் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.

ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் அங்கு சென்று பிணமாக கிடந்த பெண் அணிந்த உடை மற்றும் அடையாளங்களை வைத்து விசாரணை நடத்தினர்.

அதில் சடலமாக கிடந்தது ரோகிணி என்பதும் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்து கிடந்ததும் தெரியவந்தது. ஆனால் தவறி விழுந்த தண்டவாளத்தில் இருந்து எதிர்திசையில் ரயில்கள் வரும் தண்டவாளத்தில் ரோகிணி உயிரிழந்து கிடந்தார்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு பெண் உயிருக்கு போராடிய நிலையில் எழுந்த மறு பகுதிக்கு சிரமப்பட்டு நடந்து வந்ததாகவும் அதன்பின் முடியாமல் அங்கேயே விழுந்து விட்டதாகவும் கூறினர்.

ரயிலில் இருந்து தவறி விழுந்த அவர் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனைக்கு சென்று விடலாம் என கருதி நடந்து சென்றிருப்பதும், காப்பாற்ற யாரும் வராததால் உயிரிழந்ததும் தெரியவந்தது.

இலங்கையில் IVF முறையில் பிறந்த முதலாவது குழந்தை!!

இலங்கையின் அரச வைத்தியத்துறையில் செயற்கை கருத்தரிப்பு முறையில் (IVF) வெற்றிகரமாக முதலாவது குழந்தை நேற்றையதினம் (31) ராகமவில் உள்ள வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் பிறந்துள்ளது.

இந்த குழந்தை சிசேரியன் மூலம் பிறந்துள்ளது. இந்த சம்பவம் களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் IVF நிலையத்தின் ஒரு வருட கால முயற்சியின் விளைவாக இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பிரசவத்தின் பின்னர் 31 வயதுடைய தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த IVF செயற்கை கருத்தரிப்பு முறை முதன் முதலில் பல்கலைக்கழகத்தின் கருத்தரித்தல் மையத்தில் மேற்கொள்ளப்பட்டது.

அரசாங்கம் நடத்தும் IVF திட்டத்திற்குப் பின்னர் அரசாங்க வைத்தியசாலையில் குழந்தை ஒன்று பிறப்பது இதுவே முதல் முறை ஆகும்.

களனி பல்கலைக்கழகத்தின் ஆலோசகர் மகப்பேறியல் மற்றும் மகளிர் வைத்திய நிபுணர் பேராசிரியர் ரசிக்கா ஹேரத் தலைமையிலான மருத்துவக் குழுவால் சிசேரியன் செய்யப்பட்டுள்ளது.

இந்த சாதனை, அதே பீடத்தைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளரும் கருத்தரித்தல் வைத்தியர் நிபுணர் சுரங்க ஹெட்டிபத்திரண தலைமையிலான மருத்துவக் குழுவால் நடத்தப்பட்ட அரசாங்க கருத்தரித்தல் மையத்தில் நடத்தப்பட்ட முதலாவது வெற்றிகரமான IVF கருத்தரிப்பு என்பதிலும் குறிப்பிடத்தக்கது.