நுவரெலியாவில் 77 பேர் பலி – 73 பேர் மாயம்.!!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதுடன், 73 பேர் காணாமல் போயுள்ளனர் என மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 5,729 குடும்பங்களைச் சேர்ந்த 20,649 பேர் இந்த பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2,124 குடும்பங்களைச் சேர்ந்த 8,718 பேர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 79 தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மழை, மண்சரிவு, காற்றழுத்தம் காரணமாக நுவரெலியாவுக்கு செல்லும் அனைத்து முக்கிய வீதிகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.

மேலும் தகவல் தொடர்பு சேவைகள் பெரும்பாலும் செயலிழந்துள்ளதால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மிகுந்த சிரமத்துடன் நடைபெற்று வருவதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொத்மலை மற்றும் வலப்பனை பகுதிகளில் இராணுவத்தினரும், ஏனைய மீட்புப் படையினரும் தீவிரமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் மற்றும் பிற அடிப்படை நிவாரணப் பொருட்கள் வழங்கும் நடவடிக்கைகள் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நுவரெலியாவிலிருந்து ஹட்டன் வழியாக கொழும்பு செல்லும் பிரதான வீதிகள் நேற்று (01) மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையை உலுக்கிய டிட்வா புயல் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை – மண்ணில் புதையுண்ட பலர்!!

சீரற்ற காலநிலையால் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 410 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அனர்த்த நிலை காரணமாக, 336 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தில் அறிக்கை தெரிவிக்கின்றது.

இன்று (02) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விபரம் வெளியாகியுள்ளது. மேலும், மோசமான வானிலையால் 407,594 குடும்பங்களைச் சேர்ந்த 1,466,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிக்கையின்படி, அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதே நேரத்தில், பதுளை மாவட்டத்தில் 83 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 75 பேரும், குருநாகலாவில் 52 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 150 பேரும், நுவரெலியாவைச் சேர்ந்த 62 பேரும், கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 48 பேரும், பதுளையைச் சேர்ந்த 28 பேரும், குருநாகலைச் சேர்ந்த 27 பேரும் தற்போது பேரிடர் காரணமாக காணாமல்போயுள்ளனர்.

பாடசாலைகள் மீள ஆரம்பமாகும் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை திருத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, முன்னர் அறிவிக்கப்பட்ட படி டிசம்பர் 16ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், திகதியில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து இன்றும் (02) ஒரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாகாண மட்டத்திலான பாடசாலைகளை முதலில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, க.பொ.த. உயர்தர பரீட்சை மற்றும் நடைபெறவிருந்த அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வங்காள விரிகுடாவில் ஒரே நேரத்தில் உருவான இரண்டு புயல்கள் : வெளியான காரணம்!!

வங்காள விரிகுடாவில் ஒரே நேரத்தில் இரண்டு சூறாவளிகள் உருவாகுவது புவி வெப்பமடைதலின் விளைவாகும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். உலகிலேயே வேகமாக வெப்பமடையும் வெப்பமண்டல கடலாக இந்தியப் பெருங்கடல் கருதப்படுகின்றது.

டிட்வா சூறாவளி இலங்கையை தாக்கிய அதே நேரத்தில் சென்யார் சூறாவளி இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியாவில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது.

கடல் நீர் வெப்பமடைவதால் இவ்வாறு புயல்கள் ஏற்படுவதாக இந்தியப் பேராசிரியர் பஞ்ச பிரகாஷ் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, புயலின் தாக்கத்தினால் மொனராகலை மாவட்டம் அதிக பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில்,நேற்று மொனராகலை மாவட்டத்தில் 32.6 பாகை செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் மீட்கப்பட்டுள்ள 22 பேரின் சடலங்கள் : பதைபதைக்க வைக்கும் நிலவரம்!!

மினிப்பே – நெலும்கம பகுதியில் இருந்து 22 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

மினிப்பே – நெலுங்கம பகுதியில் மொத்தம் 16 வீடுகள் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 12 வீடுகள் மண்சரிவில் சிக்குண்டுள்ளன. இதன்படி, குறித்த 12 வீடுகளில் இருந்தும் 30 பேர் காணாமல் போயிருந்த நிலையில் தற்போது 22 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த 27ஆம் திகதி குறித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. எனினும், பல இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாத அளவுக்கு அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தன.

குறித்த மண்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்தவர்களில் 22 பேரின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் விநியோகம்!!

வவுனியா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் விநியோகம் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் மாவட்ட செயலாளர் திரு.பி.ஏ.சரத்சந்ர ஆகியோரின் தலைமையில் இன்று (02.12.2025)நடைபெற்றது.

வவுனியா மாவட்டத்தில் 1874 குடும்பங்களைச் சேர்ந்த 6509 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் 43 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்படுள்ளனர். இவர்களிற்கு ஒரு வாரத்திற்கு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ. 2100 வீதம் தேவையான உலர் உணவுப் பொருட்கள் இவ்வாறு விநியோகிக்கப்பட்டன.

டிட்வா புயலால் 6,123 குடும்பங்களைச் சேர்ந்த 20,282 பேர் பாதிக்கப்பட்டனர். வவுனியா, வவுனியா தெற்கு, வெங்கலசெட்டிகுளம் மற்றும் நெடுங்கேணி பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் இந்த உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தணிகாசலத்தின் மகன் வெள்ளத்தில் சிக்கி பலி!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பேருந்தில் இருந்த இளைஞன் காணாமல் போன நிலையில் இன்றைய தினம் (01.2025) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த இருதினங்களிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து அநுராதபுரம் புத்தளம் வீதியில் கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியது.

அதன் போது பேருந்தினுள் சுமார் 60 பேர் வரையில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக பேருந்தில் சிக்கியவர்களை அருகில் இருந் வீடொன்றின் கூரை மீது ஏற்றி பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு, பின்னர் கடற்படையினரின் உதவியுடன் அவர்கள் படகுகளில் ஏற்றப்பட்டு இரு நாட்கள் கடுமையான போராட்டத்தின் மத்தியில் மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த பேருந்தில் பயணித்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் தணிகாசலம் பத்மநிகேதன் (வயது 36) என்ற இளைஞனே காணாமல் போயிருந்தார்.

பேருந்தின் மேற்கூரையில் அமைந்திருப்பவர்கள் தொடர்பில் வெளியான காலணாளி ஒன்றில் பத்மநிகேதன் காணப்படுகிறார்.

அதேவேளை வீட்டின் கூரையில் இருந்த வேளை கூரையின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததாகவும், அதன் போது சிலர் வெள்ளத்தில் விழுந்த நிலையில் அங்கிருந்தவர்களை அவர்களை மீட்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காணாமல் போன இளைஞன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் வவுனியா வடக்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் தணிகாசலத்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

நீடிக்கும் சிவப்பு அறிவிப்பு : அறிகுறிகளை கண்டால் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்!!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீடுகளுக்குச் செல்ல முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வரை, மிகவும் பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள மக்கள் அந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

7 மாவட்டங்களில் உள்ள 70 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல்களும் வெளியேறுவதற்கான சிவப்பு அறிவித்தல்களும் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், அதிக மழை பெய்த அனைத்துப் பகுதிகளிலும் நிலம் நீரால் நிரம்பியுள்ளதால், அடுத்த சில நாட்களிலும் கூட மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல், அல்லது மண்மேடுகள் இடிந்து விழுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலத்திலிருந்து விநோத சத்தங்கள், அல்லது நீர் ஊற்றுகள் தோன்றுதல் மற்றும் மறைதல் போன்ற அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.

கொச்சிக்கடை வீட்டில் வெள்ளத்தில் சிக்கி ஆணும் பெண்ணும் பலி!!

நாட்டைத் தாக்கிய பாரிய பேரழிவின் காரணமாக வெள்ளத்தில் சிக்கி நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கொச்சிக்கடை பகுதியில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கொச்சிக்கடை ஓயா வீதியைச் சேர்ந்த சின்னையா பாக்கியம் என்ற 77 வயது பெண்மணியும், பள்ளியா வீதியைச் சேர்ந்த ஏ.எச். ஸ்ரீ நமன் என்ற 55 வயது ஆணும் உயிரிழந்துள்ளனர்.

கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காரணமாக மகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதேவேளை வயதான பெண் வீட்டினுள் வெள்ளத்தில் அகப்பட்டு உயிரிழந்துளார்.

மற்றைய நபரை கவனித்துக் கொள்ள இருந்த நபர் வெளியே சென்ற வேளையில் தனியாக இருந்த நபர் வெள்ளத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் வெள்ளத்தில் சிக்கி பல கால்நடைகள் உயிரிழப்பு!!

வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பல கால்நடைகள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

தொடர்ச்சியான கனமழையால் குளங்கள் நிரம்பி வழிவந்து, வவுனியாவின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கிய நிலையில், மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட பல கால்நடைகள் வெள்ளத்தில் உயிரிழந்துள்ளன.

இந்நிலையில் பிரதேசத்தைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பாளர்கள், விவசாயிகள், கால்நடைகள் உயிரிழந்ததன் காரணமாக பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

கண்டி மண்சரிவு : 8 பேரின் உடல்கள் மீட்பு : பல சடலங்கள் மண்ணுக்குள்!!

கலஹா தெல்தோட்ட லூல்கந்துர பிரிவு அப்பகொனவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 11 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீதியுள்ள மூன்று சடலங்கள் இன்னும் மீட்கப்படவில்லை. அப் பகுதியிலுள்ள இளைஞர்கள் மற்றும் மக்களாலேயே குறித்த சடலங்கள் மீட்கப்பட்டு, இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடுகளுக்கு செல்ல வேண்டாம் : மக்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவுகளை வழங்கும் வரை, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம் என்று அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து, என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிவித்து, தமது முடிவை வழங்கும் வரை, அதாவது வீடுகளுக்குச் செல்ல முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வரை, மிகவும் பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள மக்கள் அந்த இடங்களுக்குத் திரும்ப வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு கலாநிதி வசந்த சேனாதீர கோரிக்கை விடுத்துள்ளார்.

7 மாவட்டங்களில் உள்ள 70 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல்களும் வெளியேறுவதற்கான சிவப்பு அறிவித்தல்களும் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், அதிக மழை பெய்த அனைத்துப் பகுதிகளிலும் நிலம் நீரால் நிரம்பியுள்ளதால், அடுத்த சில நாட்களிலும் கூட மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல், அல்லது மண்மேடுகள் இடிந்து விழுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வசந்த சேனாதீர சுட்டிக்காட்டினார்.

நிலத்திலிருந்து விநோத சத்தங்கள், அல்லது நீர் ஊற்றுகள் தோன்றுதல் மற்றும் மறைதல் போன்ற அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் உள்ளது.

இலங்கையில் பேரிடர் மீட்புப் பணியில் வெளிநாட்டு சுற்றுலா பயணி : குவியும் பாராட்டுக்கள்!!

இலங்கைக்கு சுற்றுலா வந்த இடத்தில் மக்களோடு மக்களாக இணைந்து பேரிடர் மீட்புப் பணியில் வெளிநாட்டவர் ஈடுபடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நாட்டில் பேரழிவை ஏற்படுத்திவிட்டு சென்ற டிட்வா புயலின் பாதிப்பால் முழு நாடுமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மண்சரிவிலும் வெள்ளத்திலும் , சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் மீட்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளமை கனவத்தை ஈர்த்துள்ள நிலையில், அவர் மீடுப்பு பணியில் ஈடுபடும் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபடும் குறித்த வெளிநாட்டவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

இன்று திங்கட்கிழமை (01) காலை 9:00 மணி வரை 355 பேர் உயிரிழந்துள்ளதோடு, 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

வெள்ளத்தில் சிக்கிய யாழ் பேருந்தில் காணமல் போன இளைஞன் சடலமாக மீட்பு!!

அநுராதபுரம் – புத்தளம் வீதியின் கலாவெவ வெள்ளத்தில் சிக்குண்டவர்களில் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில் அவர் இன்று (01.12.2025) சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், கடந்த 28ஆம் திகதி கலாவெவ வெள்ளத்தில் சிக்குண்டு பேருந்தில் இருந்து மீட்க்கப்பட்ட நிலையில் மீண்டும் காணாமல் போயிருந்தார்.

தனியார் நிறுவனம் ஒன்றின் யாழ்ப்பாண கிளையில் வாடிக்கையாளர் முகாமையாளராக பணிபுரியும் 36 வயதுடைய தணிகாசலம் பத்மநிகேதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தற்போது அவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவால் சிதைந்து போன தமிழ் குடும்பம் : பெற்றோரை இழந்து தவிக்கும் பச்சிளம் பெண் குழந்தை!!

நுவரெலியா புரூக்சைட் சென்ஜோன்ஸ் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் தாய், தந்தை உயிரழந்த நிலையில் இரண்டு வயது பெண் குழந்தை உயிர்பிழைத்த சம்பவம் பதிவாகியுள்ளது.

நுவரெலியா புரூக்சைட் சென்ஜோன்ஸ் தோட்டத்தை சேர்ந்த நிக்கலஸ்ராஜா அவரது மனைவி மற்றும் அவரது குழந்தை ஆகியோர் கடந்ந வியாழக்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் அடித்து செல்லப்பட்டனர்.

இந் நிலையில் அவர்களது இரண்டு வயது மதிக்கதக்க குழந்தை உயிருடன் அருகில் உள்ள தோட்டத்தில் மீட்கப்பட்டது. இந்நிலையில் தாயின் உடல் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டதுடன் தந்தையின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

பெற்றோரை பிரிந்து தவிக்கும் பிஞ்சு குழந்தையுடன் குடும்பம் தவித்துக்கொண்டிருக்கின்றது. குறித்த பெற்றோரின் சடலங்கள் இராகலையில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுண்டிக்குளத்தில் காணாமல் போன கடற்படை வீரர்களின் புகைப்படங்கள் வெளியானது!!

சுண்டிக்குளம் சாலை பகுதியில் தொடுவாய் வெட்டச் சென்ற ஐந்து கடற்படையினர் கடந்த வெள்ளிக் கிழமை காணாமல் போயிருந்தாக தகவல் வெளியாகியிருந்தது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நாடு முழுவதும் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் நாடு முழுவதும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் சுண்டிக்குளம், சாலை பகுதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறுகள் நிரம்பி வழிகின்றது. குறித்த பகுதிகளில் கடற்படை முகாம் உட்பட்ட பல பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டது.

 

வெள்ள நீரை கடலுக்குள் விடும் முயற்சியில் கடந்த வெள்ளிக்கிழமை(28) தொடுவாய் வெட்டுவதற்காக சென்ற சாலை கடற்படை முகாமை சேர்ந்த ஐந்து கடற்படை வீரர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளார்கள்.

காணாமல் போனவர்களை தேடும் பணி நேற்றையதினம்(30) மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மீட்பு நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் இன்று(1) காணாமல் போன கடற்படை வீரர்களை தேடும் பணி ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் அவர்களின் புகைபடங்கள் வெளியாகியுள்ளன.