கனமழை காராணமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. நாடு முழுவதும் பெய்துவரும் கன மழையால் முல்லைத்தீவு மாவட்டம் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையால் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் ஆலய செயற்பாடுகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முல்லைத்தீவு மாவட்டம் முழுவதுமாக நான்காவது நாட்களை கடந்தும் மின்சாரம், தொலைபேசிகளுக்கான இணைப்பு சில பிரதேசங்களில் வழங்கப்படாதுள்ளதுடன் , வழங்கப்பட்ட பிரதேசங்களிலும் ஒழுங்கான முறையில் இதுவரை சீர்செய்யப்படவில்லை.
அத்திய அவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது இருளில் மூழ்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு நாயாற்று பாலம் தொடர்ச்சியாக பெய்த மழையினால் கீழிறங்கியதில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
அண்மைய சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதனால் கடல் நீர்மட்டமானது உயர்வடைந்த நிலையில் முல்லைத்தீவு கொக்குளாய் திருகோணமலை பிரதான வீதியான செம்மலை பகுதியில் உள்ள நாயாற்றுபாலம் முற்றாக கீழிறங்கியுள்ளது.
முற்றாக தடை
இதனால் கொக்குளாய், கொக்குதொடுவாய், கர்நாட்டுக்கேணி திருகோணமலை பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் உலங்குவானூர்தியை அவசரமாகத் தரையிறக்கப்பட்ட முற்பட்ட போது உயிரிழந்த விமானி தொடர்பில் இலங்கை விமானப்படை விசேட குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் (30.11.2025) சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் – 212 ரக உலங்குவானூர்தி ஒன்று வென்னப்புவ லுணுவில பாலத்திற்கு அருகில் இருந்தவர்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கிக் கொண்டிருந்தபோது, அது அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதன்போது, உலங்குவானூர்தி அருகில் உள்ள ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவத்தின்போது விமானிகள் இருவர் உட்பட 5 விமானப்படை உறுப்பினர்கள் உலங்குவானூர்தியில் இருந்துள்ளனர்.
பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து அவர்களை உடனடியாக மீட்டு மாரவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், பிரதான விமானி விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதான, 3,000 மணித்தியாலங்களுக்கும் மேல் விமானப் பயண அனுபவத்தைக் கொண்ட அனுபவம் வாய்ந்த விமானி என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் மேலும் நான்கு விமானப்படை அதிகாரிகள் காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திடீரென உயிரிழந்த இந்த விமானி குறித்து சமூக ஊடகங்களில் பல உருக்கமான குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்த பதிவில் , “ஒரு இளம் மகனின் அன்பான தந்தையான நிர்மல், நேற்று டித்வா சூறாவளியால் அகால மரணமடைந்த இலங்கையர்களின் வரிசையில் இணைந்தார். விலைமதிப்பற்ற இலங்கை விமானியாக நாட்டின் இதயங்களில் அழியாத நினைவை விட்டுச் சென்றார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும் அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிணற்று நீரைக் குடிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குட கூறியுள்ளார்.
வயிற்றுப்போக்கு போன்ற நிலைமைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், முடிந்தவரை கொதிக்க வைத்த தண்ணீரைக் குடிக்குமாறும் அவர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் சிறு குழந்தைகளுக்கும் கொதிக்க வைத்த தண்ணீரை மட்டுமே குடிக்கக் கொடுக்க வேண்டும் என அவர் கூறினார்.
தற்போதைய பேரிடர் சூழ்நிலையில் வீடுகளைச் சுற்றி நுளம்புகள் பெருகும் இடங்கள் இருக்கலாம் என்பதால், அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
இல்லையெனில், டெங்கு மற்றும் சிக்குன்யா நோய்கள் பரவும் அபாயம் அதிகம் என்று சமில் முத்துக்குட மேலும் தெரிவித்துள்ளனர்.
கனமழை காரணமாக வவுனியாவின் செட்டிகுளம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து, கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) மதவாச்சி – மன்னார் வீதியில் உள்ள செட்டிகுளம் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய காரையும் அதில் இருந்தவர்களையும் கடற்படையினர் மீட்டனர்.
அதன்படி, வெள்ளத்தில் சிக்கிய கார் கடற்படை அனர்த்த வாகனம் மூலம் பாதுகாப்பாக அகற்றப்பட்டது.
யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் வாள் வெட்டு சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பதிவாகியுள்ளது. வாள்வெட்டிற்கு இலக்கானவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாமன் மற்றும் மருமகனுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டாக மாறியுள்ளதாகவும், மாமன் மருமகன் மீது வாளால் வெட்டியதில் மருமகன் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயத்திற்கு உள்ளானவர் வடமராட்சி துன்னாலையை வேம்படி பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், இதேவேளை தாக்குதல் நடத்தியவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 3 பேரை இலங்கை விமானப்படையினர் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இன்று (30.11.2025) காலை மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் மீட்புப் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான பெல்-212 ஹெலிக்கொப்டர் புறப்பட்டுச் சென்றது.\
சூறாவளி தீவை விட்டு நகர்ந்துள்ள நிலையில் அதன் நேரடி விளைவுகள் குறைந்துவிட்டாலும், மறைமுக விளைவுகள் இன்னும் இருப்பதாக வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் சாத்தியம் இருப்பதாக அவர் எச்சரித்தார்.
மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், கனமழை குறைந்திருந்தாலும், பேரிடர் நிலைமை இன்னும் முழுமையாகக் குறையவில்லை. எனவே, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்கள் தற்போதைக்கு தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு கருணாநாயக்க வலியுறுத்தினார்.
சூறாவளி காரணமாக ஏற்பட்ட மின் இணைப்புகளுக்கு ஏற்பட்ட சேதம் இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியான புதுப்பிப்புகளை வழங்கும் வரை பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் அவர் மேலும் அறிவுறுத்தினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் கிணறுகளில் இருந்து தண்ணீரை முறையாக சுத்திகரிக்கும் வரை குடிப்பதைத் தவிர்க்குமாறும், அவ்வாறு செய்யத் தவறினால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், இலங்கையின் மீதான மறைமுக தாக்கம் தொடர்ந்து வருவதால், தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
எனவே, மீனவர்கள் மற்றும் கடற்படையினர் இன்று கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் அறிவுறுத்தினார். இந்த மறைமுக விளைவுகள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் தீவை விட்டு விலகிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், அதன் பிறகு நாடு முழுவதும் சாதாரண வானிலை நிலவும் என்றும் அவர் கூறினார்.
கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஹோமாகம – மாகம்மன மகா வித்தியாலயத்தின் பொறுப்பாசிரியை புபுது மஹேஷிகா பண்டார இன்று (29.11.2025) ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்துள்ளார்.
கொத்மலை பம்போடாவில் ஆசிரியை மற்றும் அவரது மகன் வசித்து வந்த வீடு உட்பட மேலும் 5 வீடுகள் உள்ளன. ஆசிரியை தனது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஆசிரியை புபுது மஹேஷிகாவின் உடல் சில நிமிடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மகனை இன்னும் காணவில்லை என கூறப்படுகின்றது.
இலங்கையில் இயற்கையின் கோர தாண்வத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், காணாமல்போனோர் எண்னைக்கையும் அதிகரித்து வருகின்றமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் இருந்து சென்ற பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவேளை அந்த பேருந்தில் இருந்த 69பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்த பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிகொண்டது.
அப் பேருந்தில் பயணம் செய்த 69 பேர் அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு இடையிலான கலாஓயா பகுதியில் பாதுகாப்பாக கூரையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நொச்சிகாமம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இடர்மிகுந்த சூழலில் புத்தளம் மற்றும் அனுராதபுர மாவட்ட செயலாளர்கள் , விமானப்படை, கடற்படை இராணுவம், பொலிஸார் , அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும் மீட்பு பணியாளர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு பயணிகளை பாதுகாப்பாக மீட்டமைக்கு யாழ்ப்பாண மாவட்ட மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சகல மாவட்ட அரச அதிபர்களுடனான ஜனாதிபதியின் zoom கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தினுடைய வெள்ள நிலவரம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்படி விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் ஜனாதிபதியின் செயலாளர், அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்ட செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
பல்வேறு நெருக்கடிகள், இடர்பாடுகளுக்கு மத்தியிலும் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் என்ற வகையில் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
இறம்பொடை பகுதியில் பாரிய மண்சரிவில் சிக்குண்டு இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுவதோடு, 50 பேர் வரை காயமடைந்துள்ளதாக கொத்மலை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொத்மலை, ரம்பதகம அருகே 27 ஆம் திகதி இரவும் நேற்று (28) அதிகாலையும் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் 50 பேர் அந்த இடத்தில் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்த இடத்திற்குச் செல்வதற்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மன்னார் – மாந்தை, கூராய் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள 40 பேரை மீட்க முடியாதுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அந்த கிராமத்தில் உள்ள 6 வீடுகள் மட்டுமே வெளியில் தெரியும் நிலையில் உள்ளதாகவும் அங்கு சிக்கியுள்ள 40 பேரில் 27 பேரின் நிலை மிக மோசமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் இருந்த நிலையில் அனர்த்த நிலையை கருத்திற் கொண்டு அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட மக்கள், கள்ளியடி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், வெளியேற அறிவுறுத்திய போது 40 பேர் அதனை மறுத்து கிராமத்திலேயே தங்கியதாகவும் அவர்களே தற்போது அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த 40 பேரையும் மீட்க சென்ற இராணுவ அதிகாரிகளின் படகு கிராமத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் திரும்பி வந்துள்ளது.
அதனை தொடர்ந்து, விமான படையினரின் உதவி நாடப்பட்ட போது அப்பகுதியில் அதிக மேக மூட்டம் காரணமாக மீட்புக்கு ஹெலிகொப்டர்களை அனுப்ப முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அப்பகுதியில் நீரின் மட்டம் குறைவடைந்த பின்னர் 40 பேரையும் மீட்கும் பணி ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக மன்னார் அரசாங்க அதிபர் எமது பிராந்திய செய்தியாளருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
மேலும், மன்னார் மாந்தை பகுதியில் வரலாற்றில் இதுவரை பதிவாகாத அளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் ஏற்ப்பட்ட வெள்ளப்பேரிடர் காரணமாக 1118 குடும்பங்களை சேர்ந்த 3598 பேர் இடம்பெயர்ந்த நிலையில் 47இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் 599 குடும்பங்களை சேர்ந்த 1997 பேர்21 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன்,
வவுனியா பிரதேச செயலகபிரிவில் 191 குடும்பங்களை சேர்ந்த 605பேர் 8 முகாம்களிலும், வவுனியா வடக்கில் 172 குடும்பங்களை சேர்ந்த 519 பேர் 10முகாம்களிலும், வவுனியா தெற்கில் 156 குடும்பங்களை சேர்ந்த 477 பேர் 8 முகாம்களிலும், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான சமைத்த உணவுகள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலகம், ஏனைய தனவந்தர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை வெள்ளம் வடியாத தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் அதிகமான மக்கள் தங்களது உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
இதேவேளை அதிக நீர்வரத்து காரணமாக மாவட்டத்தில் உள்ள 83 குளங்களில் சேதம் ஏற்ப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இதேவேளை நேற்று மாலையின் பின்னர் வவுனியாவில் மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளது. இதனால் தடைப்பட்டிருந்த பிரதான வீதிகள் ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
வவுனியா, சாந்தசோலை ஏ9 வீதியில் நீரில் அடித்துச் சென்ற நிலையில் கார் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், அதன் உள்ளே இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக தெரியவருகையில்,
குறித்த சம்பவமானது ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது, ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டுள்ளதை அவதானித்த கிராம மக்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த தகவலினை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இராணுவம் மற்றும் பொலிஸார் கிராம இளைஞர்களுடன் இணைந்து குறித்த காரினை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட காரினை மீடடுள்ளதுடன், காரில் பயணித்த ஆண் மற்றும் பெண் ஒருவர் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை குறித்த வீதியானது சீரற்ற காலநிலையால் வெள்ளநீர் வீதியை மூடி செல்வதன் காரணமாக நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது