காதல் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம்.. தாலிகட்டும் நேரத்தில் தடுத்து நிறுத்திய மனைவி!!

கடலூரில்..

கடலூர் மாவட்டம் மயிலாடுதுறையில் காதல் கணவர், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருந்த நிலையில், தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை, மனைவி தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் 30 வயதான ராம்குமார். திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சபிதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார்.

கருத்து வேறுபாடு காரணமாகக் கணவன் மனைவி இருவரும் தனித்தனியாக வாழ்ந்தனர். இதனிடையே சபிதாவுக்கு தெரியாமல், மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ராம்குமார் மோசடியாக விவகாரத்து பெற்றதாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து திருவெண்காடு கோயிலில் ராம்குமார் தன்னுடன் பணியாற்றும் சக பெண் காவலரை, உறவினர்களின் முன்னிலையில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். இதுபற்றி தகவலறிந்த சபிதா, தனது குடும்பத்தினருடன் கோயிலுக்குச் சென்று திருமணத்தைத் தடுத்து நிறுத்தினார்.

வழியின்றி தவிக்கும் பிள்ளைகள்.. கடன் தொல்லையால் கணவன், மனைவி இருவரும் எடுத்த விபரீத முடிவு!!

அம்பத்தூரில்..

அம்பத்தூர் லெனின் நகரில் வசித்து வருபவர் பகத்சிங். இவர் எஸ்ஐ.ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் 45 வ் வயது முருகேசன்.இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இவருடைய மனைவி 30வயது ஜெயந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுடன் முருகேசன் தம்பி ராம்குமார், தங்கை பவானி. இவர்கள் கூட்டுகுடும்பமாக வசித்து வந்தனர்.

முருகேசன், ஆன்லைன் வர்த்தகம் மற்றும் ஷேர் மார்க்கெட்டில் பணி செய்து வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கும் இதில் தொடர் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. இவரின் செலவுகளுக்காக தம்பி ராம்குமார், தங்கை பவானி அனைவரிடமும் கடன் பெற்று சமாளித்து வந்தார்.

கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஆன்லைன் வர்த்தகத்தில் மீண்டும் நஷ்டம் ஏற்பட்டதால், முருகேசனுக்கு மீண்டும் கடன் ஏற்பட்டது.இதனை ஈடுகட்ட தம்பியிடம் 3 சவரனும், தங்கையிடம் 5 சவரனும், நண்பர்களிடமும் கடன் வாங்கினார்.

அடுத்தடுத்த தொடர் நஷ்டம் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கியது இவைகளால் முருகேசன் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். அத்துடன் கடன் கொடுத்தவர்கள், பணத்தை தரும்படி நெருக்க தொடங்கினர்.

மனைவியிடம் கூறி அவ்வப்போது வருத்தப்பட்டு கொண்டிருந்தார். இருவரும் அடிக்கடி தனியே ஏதோ ரகசியம் பேசினர். அவர்களின் வீடு அமைந்துள்ள செங்குன்றம் அடுத்த எல்லையம்மன் பேட்டைக்கு சென்று வருவதாக கூறி கணவன் மனைவி இருவரும் கிளம்பினர்.

வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பகத்சிங் முருகேசனுக்கு போன் செய்தார். போனை எடுக்காததால் அவரின் வீட்டிற்கு அருகில் இருப்பவருக்கு போன் செய்து விசாரித்தார். பக்கத்து வீட்டுக்காரர் வரும் போது பார்த்தது தான்.

அதன் பிறகு கதவு திறக்கப்படவே இல்லை எனக் கூறியதும் முருகேசன் அதிர்ச்சியடைந்தார். பகத்சிங், உடனடியாக செங்குன்றத்துக்கு சென்று நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

அப்போது, கணவன், மனைவி தனித்தனியாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பேருந்து கட்டணங்கள் சடுதியாக குறைப்பு… வெளியான தகவல்!!

இலங்கையில்..

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறைந்தபட்ச கட்டணம் 30 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் மற்றும் பிற கட்டண திருத்தம் தொடர்பில் நாளை அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அனைத்து விதமான எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முச்சக்கரவண்டி கட்டணங்களில் ஏற்படும் மாற்றம்.. இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் முடிவு!!

முச்சக்கரவண்டி..

எரிபொருள் விலை குறைப்பின் எதிரொலியாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

இந்த விடயத்தை அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்க தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி முதல் மற்றும் இரண்டாவது கிலோமீட்டர்களுக்கு கட்டணத்தைக் குறைக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இன்று முதல் முதலாவது கிலோமீட்டருக்கு 100 ரூபாவும், இரண்டாவது கிலோமீற்றருக்கு 80 ரூபாவும் என கட்டணம் அறவிடப்படவுள்ளது.

இதற்கு முன்னதாக முச்சக்கரவண்டி கட்டணமானது முதலாவது கிலோமீட்டருக்கு 120 ரூபாவாகவும், இரண்டாவது கிலோமீற்றருக்கு 100 ரூபாவாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தலைமன்னாருக்கு நியமனம் பெற்றுச் சென்ற ஒரு சிங்களப் பெண் மருத்துவரின் கதை!!

தலைமன்னாரில்..

தலைமன்னாருக்கு நியமனம் பெற்று சென்ற சிங்களப் பெண்ணான மருத்துவர் பாக்யா வீரவர்தன அவர்கள் கடந்துச் சென்ற பாதை மற்றும் தமிழ் மக்கள் அவர் மீது வைத்த மதிப்பை பற்றி அவரே தெரிவித்த ஒரு கதை.

மருத்துவர் பாக்யா வீரவர்தன நியமனம் பெற்று தனது சொந்த ஊரை விட்டு 328 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தலைமன்னாருக்கு அப்பா மற்றும் அப்பாவுடன் சென்றார்.

நடப்பட்ட இடத்தில் பூக்கும் (Bloom where you are planted) கோட்பாட்டுடன் வாழும் தலைமன்னார் என்றதும் ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை; மொழித் தடை மாத்திரமே அவருக்கு இருந்துள்ளது.

தலைமனனாருக்கு செல்வதற்கு முன் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்ய எனக்கு இருந்தது இரண்டே நாட்கள் மட்டுமே அவருக்கு இருந்துள்ளது. அப்பாவுடன் முழு நகரத்தையும் ஒரு சுற்று சுற்றி சமைக்கும் பாத்திரங்கள், கரண்டி, முட்கரண்டி, வாளி, தட்டு முட்டு சாமான்கள் என அனைத்தையும் வாங்கியது தலைமன்னார் என்றதும் எத்தியோபியாக்கு போவதுபோல் இருந்ததால்தான்.

ஒரு லாரி கொள்ளக்கூடிய சாமான்களை காரில் நிறைத்துக் கொண்டு விடியற்காலை 3:00 மணிக்கு புறப்படும் பொழுது ‘ பேசாம ஜேபுரவில் (ஜயவர்தனபுர வைத்தியசாலை) சேர்ந்து கொள்ளாமல், என்ன மண்ணாங்கட்டிக்கு தலைமன்னாருக்கு போகணும்’ என்று தோன்றாமல் இல்லை.

ஆனால் இதுதான் எனக்கு உரிய இடம், எனக்கு விதிக்கப்பட்ட இடம் என்று மனதைத் தேற்றிக் கொண்டு, ஒருவித போராட்ட மனதுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த எனக்கு பாதையின் இருபுறமும் தெரிந்த பனைமரங்கள் ஒரு விசித்திரமான உணர்வைத் தந்தன.

வேலையில் சேர்ந்த முதல்நாள் ஒரு வித்தியாசமான உணர்வு என்னை ஆட்கொண்டது. எல்லோரும் என்னை வேற்றுகிரகவாசி போல் பார்த்தார்கள். தொடர்ந்து பெற்றோரை அங்கு வைத்துக் கொள்ள முடியாததால் மூன்று நாட்கள் ஓட்டலில் தங்கியிருந்துவிட்டு மருத்துவமனை விடுதிக்கு இடம் பெயர்ந்தேன்.

அம்மாவை ஊரில் கொண்டுபோய் விட்டுவிட்டு திரும்பிவந்து என்னுடன் தங்கிவிட விரும்பினார் அப்பா; முடிந்தால் என்னை திரும்ப கூட்டிக்கொண்டு போக. பணியாளர்கள் உடைந்த சிங்களத்தில் தட்டுத்தடுமாறி என்னுடன் பேசத் தொடங்கினார்கள்.

நானும் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் பழகி, மொழித் தடை நீங்கிய போது, நான் அந்த ஊரை நேசிக்க தொடங்கினேன். அந்த அப்பாவி மக்கள் மீது எனக்கு மேலும் மேலும் இரக்கமே தோன்றியது.

கடலுக்குச் சென்று எதையாவது பிடித்துக்கொண்டு வந்து ஒவ்வொரு நாளையும் ஓட்டுவதைத் தவிர அவர்களுக்கு பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்கவில்லை. வாழ்க்கை விசித்திரமானது. அது நம்மை நாம் நினைக்காத இடங்களில் கொண்டு போய் நிறுத்திவிடும்.

அந்த மக்களைப் பார்த்து நான் கொஞ்சம் கொஞ்சமாக என் மனதை தேற்றிக்கொண்டேன். பல்லாண்டு காலம் போரில் அடிபட்ட அவர்கள், சிங்களவர்களை வினோதமாக நோக்கினார்கள். எங்களை நேசிக்கா விட்டாலும், எங்கள் மீது அவர்களுக்கு வெறுப்பு இருக்கவில்லை.

தினம் தினம் வெயிலில் காய்ந்து, மழையில் நனையும் அவர்களின் அவல வாழ்க்கையின் சோகத்தை மேலும் மேலும் அறிந்து கொண்டபோது நான் அவர்களுடன் இன்னும் நெருக்கமாக விரும்பினேன்.

மண்ணெண்ணெய் விளக்கெரியும் பனையோலை குடிசையின் கூரையின் ஓட்டை வழியாக தெரியும் வானத்தைப் பார்த்து சிரிப்பதன்றி அழுவதற்கு அவர்களிடம் கண்ணீர் இருக்கவில்லை.

நான் வாழ்க்கையில் கற்றிருந்த பெரிய பாடம் எப்போதும் பயம் இருந்தால் அதனைக் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பது. எவ்வளவு துயர் வந்தாலும் அதன் மத்தியில் தளராமல் இருப்பது எப்படி என்பதை நான் அங்கு கற்றுக் கொண்டேன்.

நாம் எல்லோரும் மனிதர்கள். நம் மனங்களில் ஏன் இந்த இன வேற்றுமை. நானும் அவர்களில் ஒருத்தி என்று எண்ண முயன்றேன். வெசாக் மாதத்தின் ஆரம்பத்திலேயே வீடு சென்று திரும்பும்போது வெசாக் கூடு செய்வதற்கு சிறு மூங்கில் கிளைகளை வெட்டி எடுத்து வந்தேன்.

எல்லோரும் சேர்ந்து தாமரை வடிவில் மூன்றும், சாய்சதுர வடிவில் பத்தும், பெரிய வெசாக் கூடு ஆறு என மருத்துவமனைக்கு முற்றத்தில் இருந்த வேப்ப மரத்தில் தொங்க விட்ட போது எல்லோருடைய முகங்களிலும் அத்தனை மகிழ்ச்சி.

வெசாக் தினத்தன்று வண்ண வண்ண மின் விளக்குகளை தொங்கவிட்டு அதை பார்க்க முழு ஊரும் சேர்ந்து வந்தபோது எனக்கு ஏற்பட்டது விவரிக்க முடியாத ஒரு உணர்வு.

அங்கு இருந்த இரண்டு வருடங்களும் அதை தொடர்ந்து செய்தேன். வெசாக் தினத்தன்று பணியாளர்கள் அனைவருக்கும் உணவு பொதி கிடைத்ததால் மருத்துவமனை உணவை பார்சல் செய்து ஊரில் உள்ள ஏழை மக்களுக்கு வினியோகிக்க தீர்மானித்ததை இன்று நினைத்தாலும் மகிழ்ச்சி பொங்குகிறது.

அதன் பிறகு என்னையும் முந்திக்கொண்டு எஞ்சிய உணவை ஏழைகளுக்குக் கொடுக்க பார்சல் செய்வதில் பணியாளர்கள் முனைப்பாக இருந்தார்கள். வேசாக், பொசொன் காலங்களில் நடத்தப்படும் தான கூடங்கள் (தன்சல்) பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவர்கள் கற்றுக் கொண்டார்கள்.

வெசாக், பொசொன் மற்றும் பேரிடர் காலங்களில் உலர் உணவு பொதிகள் செய்ய முனைப்புடன் எனக்கு உதவினார்கள். அனைத்து சமூக சேவைகளுக்கும் தங்களால் இயன்றளவு உதவினார்கள், பங்குபற்றினார்கள்.

நத்தார் பண்டிகையின்போது முழு மருத்துவமனையும் ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே அலங்கரித்து, கிறிஸ்மஸ் தின விருந்துக்கும், பொங்கல் பண்டிகையின் போது கோலமிட்டு பூஜை செய்து எல்லோரும் சேர்ந்து பொங்கல் உண்ணவும், சரஸ்வதி பூஜை, மடு தேவாலய புனித யாத்திரை என அனைத்துக்குமென நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டோம்.

ஜனவரி முதல் நாளன்று பால் பொங்கி, மேசை நிறைந்த பாற்சோறை கட்டசம்பலுடன் எல்லோரும் சேர்ந்து உண்டோம். அன்று என்னுடன் சேர்ந்து சிங்கள சடங்குகளை செய்ய அவர்கள் தயங்கவில்லை. வந்திருந்த நோயாளிகளுக்கும் பாற்சோறு பரிமாற நாங்கள் மறக்கவில்லை. மருத்துவமனை எனது வீடானது. பணியாளர்கள் எனது உறவினர்கள் ஆனார்கள்.

கோவில் மற்றும் தேவாலயத்திற்கு யார் வந்தாலும் அவர்களை சாதி, மத, இன பேதமின்றி குருமார்கள் ஆசீர்வதித்தார்கள். எங்கிருந்தாலும் ஓடி வந்து எனது பூஜையை முதலில் செய்யுமளவுக்கு அந்த இதயங்கள் எனக்கு நெருக்கமாயின.

எந்த வேறுபாடுமின்றி மடு மாதவினுடைய, அம்மனுடைய அருள் எனக்குக் கிட்டியது. அதுபோல்தான் அங்கு உருவான சில சகோதர உறவுகள். என்னை தங்களது சொந்த சகோதரியைப் போல், மகளைப் போல் அன்பு செலுத்திய, நான் ஊருக்கு புறப்படும்போது எப்படி செல்கிறேன் என்று கவனித்துப் பார்த்துக் கொண்ட, ஊருக்கு செல்ல முடியாமல் போகும்போது மனநிலை சரியில்லாமல், முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு மன அழுத்தம் ஆகியிருக்கும் என்னை அந்த தீவு வாழ்க்கையில் நான் சலிப்புறாமல் இருக்க அனைத்தையும் செய்த அந்த இனிமையான பந்தங்கள் என்றென்றும் என் நினைவேடுகளில் நிறைந்திருக்கும்.

அந்த உறவுகள், நட்புகள் என்றும் தொடரும். என்னையறியாமல் இரண்டு வருடங்களும் 7 மாதங்களும் ஓடி விட்டன. எனது இடமாற்றம் குறித்து அறிந்ததும் எனது பணியிடமாற்றத்தை நிறுத்தக் கோரி ஊர் மக்கள் ஒன்று திரண்டு மனுவில் கையெழுத்திட்டதன் மூலம் எனது கடமையை சரிவர செய்திருக்கிறேன் என்பது எனக்கு நிரூபணமானது.

சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், இறுதியாக மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், கண்ணீர் நிறைந்த விழிகளுடன் இரு கைகளையும் கூப்பி என்னை ஆசீர்வதித்தபோது உடைந்து போனேன்.

சிங்களப் பெண்ணான என்னை இந்த தமிழ், முஸ்லிம் மக்கள் இவ்வளவு நேசித்திருக்கிறார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை. இந்த ஊரில் வைத்தியரின் பணிகளையும் தாண்டி சில தொண்டுகளை செய்யவும், இந்த மக்களுக்கு சிறிதளவாவது நிவாரணம் அளிக்கவும் முடிந்ததையிட்டு நான் என்றும் மகிழ்ச்சியடைவேன்.

அதற்கிடையில் யோகச்சந்திரனுடைய பிள்ளைகளின் மற்றும் வனிதாவின் தலை விதிகளை மாற்ற முடிந்தது விசேடமான விடயங்கள். அந்த முகங்களில் நான் கண்ட எதிர்பார்ப்பு என்றும் என் நினைவில் அழியாது இருக்கும்.

அன்பான வடக்கிலும் தெற்கிலும் வாழும் நாம் அனைவரும் மனிதர்களே என்று எனக்கு சொல்லித்தந்த அந்தப் பனையோலை வேலிகளின் விளிம்பில் உருவான அந்த பந்தம் என்றென்றும் என் இதயத்தில் உயிர்த்திருக்கும். என சிங்கள பெண் மருத்துவர் பாக்யா வீரவர்தன தலைமன்னாரில் உள்ள தமிழ் மக்களின் குணங்கள் பற்றி பதிவிட்டுள்ளார்.

கோர விபத்தில் உயிரிழந்த பிரபல சமூக செயற்பாட்டாளர்!!

அக்கரைப்பற்றில்..

அக்கரைப்பற்று சுவாட் (SWOAD) அமைப்பின் தலைவரும் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற இணையத்தின் (NGOs Consortium) தவிசாளரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான வடிவேல் பரமசிங்கம் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருக்கோவில் தம்பட்டையைச் சேர்ந்த வடிவேல் பரமசிங்கம் கொழும்பு செல்லும் வழியில் செவனப்பிட்டியில் நள்ளிரவு (29 ) இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார்.

வடிவேல் பரமசிங்கம், சமூகங்களுக்கிடையிலான இன நல்லுறவைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றியவர், நல்லுள்ளம் கொண்டவர் ஒரு நண்பனாய், உடன் பிறவா சகோதரனாய், பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களில் அமைப்புக்களில் சமூக பற்றுள்ள மக்கள் தொண்டனாய் செயற்பட்டவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு , மென் சுபாவம் நிறைந்த சிறந்த பண்பாளர், சமூகசிந்தனாவாதி. அமைதியாக அனைவருக்கும் மதிப்பளித்து பேசுபகின்ற நல்ல சுபாவம் கொண்டவர் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அவரது உயிரிழப்பு இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கொடூரமாக பல முறை குத்திக்கொலை செய்யப்பட்ட இளம் பெண்.. தாயார் வழங்கிய வாக்குமூலம்!!

தங்காலையில்..

தங்காலை, வெலியார, நெத்தோல்பிட்டிய பிரதேசத்தில் கொடூரமான முறையில் கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்ட விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் மரணம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தங்காலை – நெடோல்பிட்டிய வெலியாரே பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஆர்.எம். தீபஷிகா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தங்காலை பிரதேச சபையின் வேட்பாளரான ‘டேனி பேபி’ என அழைக்கப்படும் ஜயவர்தன பத்திரனகே சரத் என்பவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் பணிபுரியும் சந்தேகநபரின் தோழி ஒருவருக்கு அரசாங்கத்திடம் இருந்து இலவச உரம் பெற்றுத்தருமாறு கடிதம் வழங்காத காரணத்தினால் குறித்த பெண்ணின் கழுத்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலையின் போது ​​இறந்த பெண்ணின் சித்தி டி.ஜி.தயாவதியும் உடன் இருந்ததாகவும், கொலை தொடர்பில் பொலிஸாரிடம் நேரில் கண்டவற்றினை வாக்குமூலம் வழங்கியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்……,

நானும் எனது மகளும் பேருந்துக்காக சென்றபோது, ​​’டேனி பேபி’ என்பவர் பாதையில் அமர்ந்திருந்தார். அவர் எங்களைப் பார்த்துவிட்டு எங்கள் முன்னால் வந்து உடனடியாக இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து மகளின் கழுத்தில் குத்தினார்.

நான் அதை தடுக்க முயன்றபோது, என்னையும் குத்த முயற்சித்தார். மகள் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.’டேனி பேபி’ மகளின் கழுத்தையும், தலையையும் முன்னும் பின்னுமாக தள்ளி, வெட்டினார்.

தரையில் விழுந்த மகள் கழுத்தை அறுத்தவுடன் வலியால் துடித்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக்கூட யாரையும் அனுமதிக்காமல், கத்தியை கையில் ஏந்தியபடி டேனி பேபி, அருகில் வந்தவர்களை மிரட்டினார்.

இதனை தொடர்ந்து, தங்காலை பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் இருவர் அந்த இடத்திற்கு வருகை தந்து பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரியின் உதவியுடன் பல பிரயத்தனத்தின் பின்னர் டேனி பேபி என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடற்றொழிலாளரான டேனி பேபி, உரத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளும் கடிதம் கேட்டு விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தரான தீபஷிகா லக்ருவானி விஜேதாசவை பல சந்தர்ப்பங்களில் சந்தித்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த நபர் (26) இரவு இரண்டு சந்தர்ப்பங்களில் பெண் வசிக்கும் நெதொல்பிட்டிய வெலி ஆரை வீட்டுக்குச் சென்று உரம் பெறுவதற்காக கடிதத்தை கோரியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திடீரென உயிரிழந்த தாய்.. காரியம் முடித்த கையோடு மணமேடையில் மகள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

நாகர்கோவிலில்..

மின்சாரம் தாக்கிய தாய் உயிரிழந்த நிலையில், காரியம் முடிந்த உடனே மகளுக்கு திருமணம் செய்துள்ள கண்கலங்க வைத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வசித்து வரும் சண்முகவேல் மற்றும் சாந்தி தம்பதிகள்.

இவர்களுக்கு 3 மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகளுக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கு திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலையில் மணப்பெண்ணின் தாயார் சாந்தி கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்த தருணத்தில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனால் மொத்த திருமண வீடும் சோகத்தில் ஆழ்ந்த நிலையில், சாந்தியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு பின்பு இறுதி காரியம் முடிந்துள்ளது. பின்பு மகளின் திருமணத்தினை எந்த தடங்களும் இல்லாமல் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. தாய் இறந்த துக்கம் தாங்காமல் மணமக்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், உறவினர்கள் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கையில் எரிபொருட்களின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு!!

எரிபொருட்களின் விலை..

லங்கா ஐஓசி நிறுவனமும் இன்று (29.03.2023) இரவு முதல் சிபெட்கோவின் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை விசேட செய்தியாளர் சந்திப்பில் வைத்து எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும். அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.

மேலும் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 465 ரூபாவாகும். ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.

கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி!!

செங்கல்பட்டில்..

செங்கல்பட்டு அருகே 3 மாதத்தில் ஏற்பட்ட கள்ளக்காதலால் கணவரின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அடுத்துள்ளது நெல்வாய்பாளையத்தை சேர்ந்தவர் விவேக் – ஜெகதீஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவருக்கும் ஜெகதீஸ்வரிக்கும் கடந்த சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியதால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை விவேக் தனது வீட்டில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

கணவனின் மரணம் குறித்து ஊருக்குத் தெரிவித்த ஜெகதீஸ்வரி அழுது புலம்பியுள்ளார். விவேக்கின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது தந்தை குப்பன் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஜெகதீஸ்வரியிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் பேசியுள்ளார்.

தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் ஜெகதீஸ்வரி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஏகாம்பரத்தையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மனைவியை அடித்தே கொலை செய்த கணவன்.. போதையில் நடந்த விபரீதம்!!

சென்னையில்..

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் பிரேம்குமார் (37)- கோமதி (35) தம்பதி வசித்து வந்துள்ளனர். திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

பிரேம்குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி குடித்துவிட்டு மதுபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்கதையாகி வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி குடித்துவிட்டு வந்த பிரேம்குமார், வழக்கம்போல் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுத்தக்கொள்ள முடியாத மனைவி கோமதி புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் பிரேம்குமாரை அழைத்து விசாரித்து, இருவரையும் சமாதானப்படுத்தி, பிரேம்குமாரை எச்சரித்து அனுப்பினர். பின்னர் வீட்டிற்குச் சென்ற பிரேம்குமார், கோமதியுடன் மீண்டும் சண்டைபோட்டு அவரை அடித்துள்ளார்.

அப்போது கீழே தள்ளியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமதி மயங்கி கீழே விழுந்தார். பின்னர் பிரேம்குமார் அங்கிருந்து சென்று விட்டார். அப்போது வீட்டிற்கு வந்த கோமதியின் தாய், மகளை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கோமதியின் மூளையில் ரத்தம் உறைந்துள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து நேற்று அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி கோமதி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் கொலை வழக்காக மாற்றி பிரேம்குமாரை கைது செய்தனர்.

வேட்பாளரால் இளம் பெண் குத்திக் கொலை செய்யப்பட்ட பரிதாபம்!!

நெடோல்பிட்டியவில்..

தங்காலை நெடோல்பிட்டிய விவசாய சேவை நிலையத்தின் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் நேற்று உரம் விநியோகிக்கப்படாமை தொடர்பான தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை நெடோல்பிட்டிய வெலியாரே பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஆர்.எம். தீபஷிகா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சமகாலத்தில் விவசாய சேவை நிலையங்களில் விவசாயிகளுக்கு உரங்கள் இலவசமாக வழங்கப்படுவதுடன், நெடோல்பிட்டிய தங்காலை விவசாய சேவை நிலையத்திலும் உரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு நேற்று முன்தினம் விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்கும் போது உரம் கேட்டு குறித்த அதிகாரியுடன் நபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை திட்டி விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை வேலைக்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றபோது, ​​வீட்டின் அருகே காவலில் இருந்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த பெண் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெடோல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான டேனிபேபி என அழைக்கப்படும் ஜயவர்தன பத்திரனகே சரத் என்பவர்,

சந்தேகத்தின் பேரில் தங்காலை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இந்த வருடம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்து போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருட்களின் விலைகள் லீட்டர் ஒன்றுக்கு 120 ரூபா வரையில் குறைக்கப்பட முடியும் என தகவல்!!

எரிபொருள்..

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான எரிபொருள் வகைகளும் லீட்டர் ஒன்றுக்கு 120 ரூபா வரையில் குறைக்கப்பட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமான ஐக்கிய தொழிற்சங்க ஒன்றியத்தின் பேச்சாளர் ஆனந்த பாலித இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். 95 ஒக்டேன் ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் சில்லறை விலை குறைந்தபட்சம் 125 ரூபாவினால் குறைக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மண்ணெண்ணை விலையை லீட்டர் ஒன்றுக்கு 110 ரூபாவினால் குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி எரிபொருட்களின் விலைகள் குறிப்பிடத்தக்களவு குறைக்கப்படும் என முன்னதாக எரிசக்தி அமைச்சர் நாடாளுமன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த குறிப்பிடத்தக்களவு 100 ரூபாவிற்கு அதிகமாகும் என தெரிவித்துள்ளார். எரிபொருட்களின் விலையை குறைப்பதன் மூலம் மின்சாரக் கட்டணங்களையும் நியாயமான அளவில் குறைக்கப்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் கடந்த மாதம் 9 பில்லியன் ரூபா லாபமீட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக எரிபொருள் விலைகளை குறைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உரிய நியமங்களை பின்பற்றி எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டால் நாட்டு மக்களுக்கு மேலும் குறைந்த விலையில் எரிபொருள் வழங்க முடியும் என ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

நண்பர்களுடன் வீட்டிலிருந்து வெளியேறிய 21 வயது இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

வயங்கொடையில்..

வயங்கொடை – மாலிகதென்ன பிரதேசத்தில் நேற்று மாலை நண்பர்களுடன் நீராடச்சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வயங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயங்கொடை – மாலிகதென்ன பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான மல்ஷானி விக்ரமரத்ன என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த இளைஞன் கிரிக்கெட் விளையாடப்போவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு மேலும் 08 இளைஞர்களுடன் நீராடச் சென்றுள்ளார்.

ஏனைய இளைஞர்கள் நீந்துவதற்காக நீரில் குதித்ததாகவும், பின்னர் குறித்த இளைஞன் தனக்கும் நீந்தத்தெரியும் என தனது சக நண்பர்களிடம் கூறிவிட்டு நீரில் குதித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நீரில் மூழ்கிய இளைஞன் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வட்டுபிட்டியால ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீரில் மூழ்கி மரணம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் சிக்கி அவுஸ்திரேலிய வாழ் தமிழருக்கு நேர்ந்த சோகம்!!

பிலிப்பைன்ஸில்..

பிலிப்பைன்ஸ் நாட்டில் இடம்பெற்ற விமான விபத்தில் அவுஸ்திரேலிய வாழ் தமிழரொருவர் பலியாகியுள்ளார். இந்த விமான விபத்தில் அவுஸ்திரேலிய வாழ் தமிழரான கார்த்தி சந்தானம் என்பவர் உயிரிழந்த நிலையில் அவரது இறுதி நிகழ்வு இன்று அடிலெயிட் நகரில் நடைபெற்றுள்ளது.

பிலிப்பைன்ஸ் தளமாகக்கொண்ட Energy Development Corporation (EDC) நிறுவனத்தில் தொழிநுட்ப ஆலோசகராக இவர் கடமையாற்றியுள்ளார். இவர் நான்கு பேருடன் Bicol சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானி மற்றும் விமானப்பணியாளர்களுடன் இலகுரக விமானத்தில் பயணித்த போது கட்டுப்பாட்டு கோபுரத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விமானம் Mount Mayon எரிமலைப்பகுதியில் விபத்திற்குள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதில் பயணம் செய்த நால்வரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த கார்த்தி சந்தானம் தனது குடும்பத்துடன் அடிலெயிட் நகரில் பல ஆண்டுகள் வாழ்ந்து வரும் நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பில் டிக்டாக் மூலம் காதலியின் தாயை அச்சுறுத்திய 17 வயது இளைஞன் : அதிர்ச்சிக் காரணம்!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியின் தாயாருக்கு சிறுமியின் காதலன் மற்றும் அவரின் நண்பன் இணைந்து வாள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் தொலைபேசி டிக்டாக் மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் காதலன் மற்றும் அவரின் நண்பனை கடந்த சனிக்கிழமை (25-03-2023) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவரும் 17 வயது சிறுமியை அதே தரத்தில் கல்வி கற்றுவரும் 17 வயது சிறுவன் ஒருவன் காதலித்து வந்துள்ளார்.

இதனையறிந்த சிறுமியின் தாயார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து 17 வயதுடைய காதலனும் அவனது நண்பனும் சேர்ந்து வாள், கூரிய ஆயுதத்துடன் படம் எடுத்து அதற்கு வீரம் கொண்ட பாடல்களை பதிவு செய்து கையடக்க தொலைபேசியில் டிக் டாக்கில் பதிவிட்டு சிறுமியின் தாயாரை அச்சுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டையடுத்து சம்பவ தினமான சனிக்கிழமை காலையில் 17 வயதுடைய இருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணையின் பின்னர் வாக்கு மூலம் பதிவு செய்து எச்சரித்து மாலையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.