பெண் உயிரிழப்பு விவகாரம் : பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்!!

பதுளையில்..

பெண்ணொருவர் பொலிஸ் காவலில் இருந்த போது சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பிரதேசத்தில் 41 வயதுடைய பெண்ணொருவர் பொலிஸ் காவலில் இருந்த போது உயிரிழந்தமை தொடர்பில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பொலிஸ் பரிசோதகர், இரண்டு சார்ஜென்ட்கள் மற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் முன்னதாக, பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் இரண்டு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உட்பட மூன்று கான்ஸ்டபிள்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். குறித்த பெண் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனைவியை அழைத்து வாருங்கள் : இலங்கை கணவரின் உருக்கமான கோரிக்கை!!

சவுதி அரேபியாவில்..

சவுதி அரேபியாவில் நிர்க்கதியாகியுள்ள தனது மனைவியை நாட்டுக்கு அழைத்து வர உதவுமாறு நான்கு பிள்ளைகளின் தந்தையான பி.சமில்சிறி நந்த, அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சவுதி அரேபியாவிற்கு தொழிலுக்காக சென்று அங்கு வேலை கிடைக்காத நிலையில் தனது மனைவி அங்கு சிரமப்படுவதாக அவர் தெரிவித்துள்ளாளார்.

இந்நிலையில் அவரை நாட்டுக்கு அழைத்து வருமாறும் கொஹெம்ப, திகன, செல்லகதிர்காம பகுதியில் வசிக்கும் கணவன் கண்ணீருடன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

கடுமையான பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீள்வதற்காக எனது மனைவி கடந்த மாதம் (ஏப்ரல்) கொழும்பில் உள்ள முகவர் நிறுவனமொன்றின் உதவியுடன் சவூதி அரேபியா சென்ற போதும் அங்கு வேலை கிடைக்கவில்லை.

அவர் தற்போது சவுதி அரேபியாவின் முகவர் நிறுவனத்துக்கு சொந்தமான அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அடைக்கப்பட்ட அறையில் சுமார் 10 பெண்கள் இருப்பதாகவும், தம்மை விரைவில் காப்பாற்றுமாறும் மனைவி செய்தி அனுப்பியுள்ளதாக அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

தம்மால் , பிள்ளைகளை தனியே விட்டுவிட்டு வேலைக்கும் செல்ல முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்த கணவர், வெளிநாட்டுக்கு சென்று வீடு கட்ட பணம் அனுப்புவதாக தனது மனைவி கூறி சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் அடைத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் இலங்கைப் பெண்கள்!!

வெளிநாட்டில்..

வெளிநாடுகளில் தொழிலுக்காக செல்லும் இலங்கை பெண்களை அடைத்து வைத்து சித்திவதைக்கு உட்படுத்தப்படும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

செல்ல கதிர்காமம், கொஹோம்பதிகான பகுதியைச் சேர்ந்த எச்.எம்.தில்ருக்ஷி என்ற பெண் சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்று காணாமல் போனதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவர் அனுப்பிய காணொளி ஒன்று ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளது. “ஒரு அறையில் சுமார் 20 முதல் 30 பேர் வரையிலானோரை அடைத்து வைத்துள்ளனர். அவர்களுக்கு சாப்பாடு கூட வழங்கப்படுவதில்லை.

தினமும் அவர்களை சென்று வெவ்வேறு இடங்களில் விற்பனை செய்து 6 முதல் 7 மணி நேரம் வேலை செய்ய வைக்கிறார்கள். பணம் வழங்குவதில்லை. முகவரிடம் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

இலங்கை பெண்களை வரிசையில் வைத்து விற்பனை செய்கின்றார்கள். 19,500 ரூபாய்க்கு இரண்டாம் நிலை பெண்கள் எனவும், 30,000 ரூபாய்க்கு புதியவர்கள் எனவும் மதிப்பிடுகிறார்கள். தயவு செய்து ஏதாவது செய்யுங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர் 4 பிள்ளைகளின் தாயார் என தெரியவருகிறது. தில்ருக்ஷியின் கணவர் சமில்சிறி நந்தா, தனது மனைவியை அழைத்து வர தலையிடுமாறு பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.

விபத்தை தவிர்த்து உயிர்களை காப்பாற்றிய இளைஞன்.. நெகிழ்ந்துபோன பயணிகள்!!

கண்டியில்..

கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்தில் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. உடுதும்புற பாரிய வளைவில் பேருந்தை செலுத்தும் பொழுது சாரதி கதவு திறக்க வெளியே விழுந்துள்ளார்.

சாரதி இல்லாமையால் பேருந்து பள்ளத்தில் வீழச் சென்ற நிலையில் அங்கிருந்த இளைஞன் காப்பாற்றியுள்ளார். குறித்த இளைஞன் உடனடியாக சாரதியின் கதிரையில் குதித்து பிரேக் ஐ அழுத்தி பேருந்தை நிறுத்தியுள்ளார் .

இதன் காரணமாக ஏற்படவிருந்த பாரிய விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், அதிகளவான பயணிகளின் உயிர்களும் காப்பாற்றப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் சாரதியின் கவனயீனத்தால் சிறுமிக்கு நேர்ந்த சோகம்!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் எதிர்பாராத விதமாக நடந்த வாகன விபத்தில் 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம்(27.05.2023) பதிவாகியுள்ளது.

குறித்த சிறுமி பாடசாலை முடித்து மதியம் வீடு வந்த போது அயல் வீட்டுகாரர் விறகுடன் நின்ற தனது லேண் மாஸ்டர் வாகனத்தை பின்னோக்கி எடுக்க முற்பட்டுள்ளார்.

பின்புறம் சிறுமி இருந்ததை அறியாமல் குறித்த நபர் வாகனத்தை பின்னோக்கி செலுத்தியபோது சில்லுக்குள் அகப்பட்டு சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வாகனத்தை செலுத்திய சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கணவர் மீது பாசம் இருக்கலாம் அதுக்காக இப்படியா? திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்!!

பெங்களூருவில்..

கணவர் மீது கொண்ட அன்பின் காரணமாக அவரது பெயரை தனது நெற்றியில் பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார். பொதுவாக கைகள், கால்கள், முதுகு, மார்பு, கழுத்து, மணிக்கட்டு, விரல்கள் போன்ற உடல் பகுதிகளில் தானே பச்சைக் குத்திக்கொள்வர்கள்.

பெங்களூருவில் பெண் ஒருவர் கணவர் மீது கொண்ட அன்பின் காரணமாக அவரது பெயரை தனது நெற்றியில் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கிங் மேக்கர் டாட்டூ ஸ்டூடியோ உள்ளது.

இந்நிலையத்துக்கு கடந்த மார்ச் மாதம் வந்த பெண் ஒருவர் தனது கணவர் சதீஷின் பெயரை தனது நெற்றியில் பச்சையாகக் குத்திக் கொண்டுள்ளார். இதுதொடர்பான வீடியோவை கிங் மேக்கர் டாட்டூ ஸ்டூடியோ இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில், “டாட்டூ பார்லர் ஊழியர் ஒரு பேப்பரில் அந்த பெண்ணின் கணவரின் பெயரான சதீஷ் என்பதை எழுதி இந்த எழுத்து ஓகேவா எனக் கேட்க பெண் சம்மதம் தெரிவிக்கிறார்.

பின்னர் ஊசியை வைத்து பெண்ணுக்கு கணவரின் பெயரான சதீஷ் என்பதை நெற்றியில் டாட்டூவாக பச்சை குத்துகிறார்கள்”. இந்த வீடியோவை அந்த அந்த டாட்டூ பார்லர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், இது தற்போது வைரலாகி வருகிறது.

கணவர் சதீஷின் மீது கொண்ட அன்பின் காரணமாக அவரது பெயரை நெற்றியில் டாட்டூவாக அவர் போட்டுக்கொண்டார் என்று டாட்டூ பார்லர் அதில் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 18ஆம் தேதி வெளியான இந்த வீடியோவுக்கு 2.6 லட்சம் பேர் லைக் போட்டுள்ளனர்.

கணவரின் பெயரை நெற்றியில் பச்சைக் குத்திக் கொண்ட பெண்ணுக்கு பலர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் பலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். கணவர் மீது கொண்ட அன்பை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சிலர் அந்த பெண்ணைத் திட்டி வருகின்றனர்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பயனாளர் ஒருவர் கூறும்போது, இது முட்டாள்தனத்தைத் தவிர வேறில்லை. உண்மையான அன்பை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை, அது உங்கள் அக்கறை, பாசம், முன்னுரிமை, எதுவாக இருந்தாலும் அங்கே இருப்பது, ஆதரவளித்தல், மேம்படுத்துதல், புரிதல் ஆகியவற்றால் உணரப்பட வேண்டும்.என்று தெரிவித்துள்ளார்.

மற்றொருவர் ”அது அவர்களின் ஆசை மற்றும் அவர்களின் வாழ்க்கை… அவர்களை நியாயந்தீர்க்காதீர்கள். உங்களுக்கு நிறைய எதிர்மறையான கருத்துக்கள் வந்தாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்” என அவர்களுக்கு ஆதரவளித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர் வீழ்ச்சியை சந்திக்கும் டொலரின் பெறுமதி 400 – 450 ரூபாவிற்கு செல்லுமா? தடை நீக்கப்பட்டால் ஏற்படும் மாற்றம்!!

டொலர்..

கடந்த வாரம் முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருகிறது. அதன்படி இன்றைய தினமும் (26.05.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலையானது 295.63 ரூபாவாகவும், விற்பனை விலையானது 308.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று முன் தினத்திற்கான (24.05.2023) நிலைமையை ஒப்பிடும்போது நேற்று (25.05.2023) மேலும் அதிகரித்திருந்தது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்றைய தினத்திற்கான நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 310.95 ரூபாவாகவும், கொள்வனவு விலை 297.60 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் டொலரின் பெறுமதி அதிவேக வளர்ச்சியை பதிவு செய்திருந்தது, 371 ரூபாவாக அதன் விற்பனை பெறுமதியும், கொள்வனவு பெறுமதி 370 ரூபாவையும் அண்மித்திருந்தது.

இந்தநிலை, இவ்வருடம் பெப்ரவரி மாதம் வரையில் நீடித்திருந்தது. இந்த மாற்றமானது கழுத்தை நெரிக்கும் நெருக்கடியை எதிர்நோக்கியிருந்த மக்களுக்கு ஓரளவேனும் மூச்சுவிடக்கூடிய நிலையை ஏற்படுத்தியிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை மீண்டும் டொலரின் பெறுமதியானது குறையத் தொடங்கியுள்ளது. எனினும் இதன் பலன் எவ்வாறு மக்களுக்கு கிடைக்கிறது கிடைக்கப் போகிறது என்பது விரிவாக ஆராயப்பட வேண்டிய விடயம்.

அண்மையில் இலங்கை ஐக்கிய தொழில் முயற்சியாளர் சங்கத்தின் தலைவி டானியா எஸ்.அபேசிங்க ஊடகங்களுக்கு விடுத்திருந்த அறிக்கையில், டொலர் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதும், அதன் பலாபலன்கள் இன்னும் மக்களுக்கு கிட்டவில்லை.

கடந்த காலங்களில் இலங்கை ரூபாவுக்கு எதிரான டொலரின் பெறுமதியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆயினும் அதற்கேற்ப தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படவில்லை.

மறுபுறத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுப் பொருட்களுக்கான விலையும் குறையவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அதேநேரம் மக்களுக்கு பலனை வழங்கும் வகையில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.

இவர் கூறுகையில், டொலரின் பெறுமதி குறைவடையும் போது பொருட்களின் விலைகளும் நியாயமான முறையில் விதிக்கப்பட வேண்டும். சந்தையில் 75 வீதமான பொருட்கள் நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டவை அல்லது இறக்குமதியை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, வர்த்தக மற்றும் கொள்கை அமுலாக்கல் திணைக்களம், நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் இணைந்து தற்போதைய நாட்களில், ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

டொலரின் பெறுமதி வீழ்ச்சிக்கு அமைய, சந்தையில் அத்தியாவசிய பொருட்கள், பாடசாலை உபகரணங்கள் உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதா என்பது ஆராயப்படுகிறது.

அவ்வாறு விலை குறைவடையாவிட்டால், அது தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய தலையீடுகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியின் பலனை மக்களுக்கு வழங்கும் வகையில் அரசாங்கம் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி வருகிறதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க தற்போது டொலரின் விலையில் பதிவாகும் வீழ்ச்சியானது நிரந்தரமற்ற ஒரு மகிழ்ச்சி எனவும், விரைவில் டொலரின் பெறுமதி மாபெரும் அதிகரிப்பை சந்திக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் பலர் எச்சரிக்கைகள் விடுத்து வருவதையும் மறுக்க முடியாது.

அதன்படி அண்மையில் நாட்டில் கடந்த சில நாட்களாக டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட்டுள்ள போதும், டொலர் ஒன்றின் பெறுமதி 400 – 450 ரூபாவிற்கு செல்லும் சாத்தியம் இருப்பதாக குளோபல் ஸ்ரீலங்கா மன்றத்தின் தலைவர் மஞ்சு நிஷங்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.

சீர்குலைந்த நிலையிலுள்ள பொருளாதாரம் சற்று முன்னேறிக் காணப்படுவதாகவும், அதனை மீட்டெடுத்து சுதந்திரமாக இலங்கைக்கு வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்வது ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே டொலரின் பெறுமதி உயரும் நிலைமை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் பொருளாதாரம் சிதைந்த நிலையில் தற்போது டொலர் ஒன்றின் விலை 300 ரூபாவாக காணப்படுவதாகவும், அது மீளும் போது டொலரின் பெறுமதி அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாடு சென்ற இரண்டு இளம் இலங்கைப் பெண்கள் பரிதாபமாக பலி!!

அபுதாபியில்..

அபுதாபியின் பனியாஸ் நகரில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவருடன் தீயில் சிக்கிய மேலும் ஐந்து பேரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர்காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு சுற்றுலா விசாவில் பணிக்காக அபுதாபி சென்ற இளம் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, மலேசியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணிபுரிந்த இலங்கைப் பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் மலேசியாவிலுள்ள உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக தகவல்கள் கிடைக்கப்பெறுவதாக பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

42 வயதுடைய திருமணமான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

இலங்கையில் இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை!!

தங்கம்..

மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை உச்சத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் இன்று மீண்டும் தங்கவிலை அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் 5,605 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.44,840 ஆகவும் விற்பனையாகிறது.

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ஒரு கிராம் 4,591 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.136 குறைந்து ஒரு சவரன் ரூ. 36,728 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

QR முறைமையில் எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிப்பு!!

எரிபொருள்..

வாகனங்களுக்கு QR முறைமையின் கீழ் வழங்கப்படுகின்ற எரிபொருள் ஒதுக்கீடு மேலும் அதிகரிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் எரிபொருள் விலை மீளாய்வின் பின்னர், இந்த அதிகரிப்பு அமுலாக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக பிரிவுகளின் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி திடீர் மரணம்!!

Dr. சாரங்கன்..

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் போதனா வைத்திய சாலையில் மனநல சிகிச்சை பிரிவில் கடமை ஆற்றிய Dr. சாரங்கன் அவர்கள் திடீர் சுகவீனமடைந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் இன்றைய தினம் (25-05-2023) உயிரிழந்துள்ளார்.

குறித்த தகவலை முகநூலில் வட மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி பதிவிட்டுள்ளார்.

16 மாணவிகள் துஷ்பிரயோகம் : ஆசிரியர் தொடர்பில் நீதிமன்றம் இன்று விடுத்த உத்தரவு!!

களுத்துறையில்..

களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கினார் எனக் கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று (26) களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுமார் 16 பாடசாலை மாணவிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் களுத்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்புப் பணியகத்தால் கடந்த 11ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆசிரியரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

களுத்துறை வடக்கு – காலி வீதியில் தனியார் வகுப்புகளை நடத்தும் சந்தேகநபரான ஆசிரியர், மாணவிகளைத் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கணவரின் மடிக்கணினியைப் பரிசோதித்த போது அதில் மாணவிகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் காணொளிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டதாக ஆசிரியரின் மனைவி சம்பந்தப்பட்ட மாணவிகளில் சிலரின் பெற்றோருக்கு அறிவித்திருந்தார்.

இதையடுத்து, பெற்றோர்கள் மூலமாக களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, சந்தேகநபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டிருந்தார்.

என்னை ஏமாத்திட்டா.. இரவில் காதலியின் வீட்டிற்கு சென்று இளைஞன் செய்த கொடூரம்!!

மத்திய பிரதேசத்தில்..

மத்திய பிரதேசத்தில் உள்ள பெர்ச்சா என்ற இடத்தில் காதலர் ஒருவர் தனது காதலியின் தந்தையை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள பெர்ச்சா என்ற இடத்தில் நேற்று இளைஞர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சிறுமி ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த செயலை செய்தவர் உயிரிழந்த நபரின் பெண்ணின் காதலன் சுபாஷ் என்பது தெரியவந்தது.

சுபாஷ் வீட்டின் முதல் மாடிக்கு நள்ளிரவு ஏணி மூலம் நுழைந்து, வீட்டில் இருந்த சிறுமி ஷிவானி, சகோதரர் ராஜ் மற்றும் அவரது தந்தையை நோக்கி துப்பாக்கியால் சுட்டது தெரியவந்தது.

இதில் சிறுமியின் தந்தை ஜாகீர்கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேசமயம், பாதிக்கப்பட்ட சிறுமி ஷிவானி பலத்த காயம் அடைந்து இந்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் அப்பெண்ணின் காதலன் சுபாஷ் அவரின் மூகநூல் பக்கத்தில் காதலியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து என்னை காதலித்து இவள் ஏமாற்றிவிட்டாள். தற்போது அவளால் மறக்க முடியாத ஒரு வலியை அவளுக்குக் கொடுத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மறுபுறம், காலையில் ரயில் தண்டவாளத்தில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது, இது குற்றம் சாட்டப்பட்ட சுபாஷுடையது என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

காதலியின் குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் சுபாஷ் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள காவல் துறையில் பணியமர்த்தப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

அவருடைய தந்தையும் ஒரு போலீஸ்காரர். குற்றம் சாட்டப்பட்டவருக்கு அரசுப் பணியின் போது தந்தை இறந்ததால் கருணை நியமனம் கிடைத்ததும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக எஸ்பி யஷ்பால் சிங் தெரிவித்தார். சம்பவ இடத்தில் இருந்து ஒரு நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

திடீரென்று மயக்கமடைந்து சுருண்டு விழுந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம்!!

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் திடீரென்று சுருண்டு விழுந்து மரணமடைந்த 11 வயது மாணவிக்கு, அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பிரித்தானியாவின் ரோச்டேல் பகுதியை சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவி ஃபலாக் பாபர் என்பவரே பரிதாபமாக மரணமடைந்தவர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், குளியலறையில் திடீரென்று மயக்கமடைந்தவர், சுருண்டு விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் உடற்கூறு ஆய்வு முன்னெடுத்த Catherine McKenna என்பவர், நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார். கொஞ்ச காலமே தங்களுடன் வாழ்ந்தாலும், ஃப்லாக் எங்களுக்கு அருமையான பல நினைவுகளையும் அன்பையும் விட்டுச் சென்றுள்ளார் என அவரது தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அனைவரும் அவளை இதயத்தில் இருந்து நேசித்தோம், அவள் எப்போதும் எங்கள் இதயங்களிலும் எண்ணங்களிலும் என்றென்றும் இருப்பாள் எனவும் தாயார் ஷாஸியா தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது சிறுமி ஃபலாக் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், ராயல் மான்செஸ்டர் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சில முறை வாந்தியெடுக்கவும் பின்னர் நினவு திரும்பாத நிலையில் காணப்பட்டார் என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அவசர அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி, பின்னர் மரணமடைந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான பரிசோதனையில் மூளையில் ஏற்பட்ட காயமே அவர் மரணத்திற்கு காரணமாக அமைந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

சின்னத்திரை இயக்குனரின் மனைவி தற்கொலை.. தவிக்கும் குழந்தைகள்!!

சின்னத்திரையில்..

இல்லத்தரசிகளின் முழு நேர பொழுதுபோக்கே சிரியல்கள். முன்பெல்லாம் சண்டிவியில் மட்டும் தான் சீரியல்கள் ஒளிபரப்பாகும். தற்போது செய்தி தொலைக்காட்சி தொடங்கி பல தனியார் சேனல்கள் சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகின்றன.

அந்த வகையில் சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று வாணி ராணி. இந்த சீரியலை இயக்கியவர் இயக்குநர் ஓ.என். இவர் மிகவும் பிரபலமான சீரியல்களான வாணி ராணி, பாண்டவர் இல்லம், பிரியமான தோழி, செவ்வந்தி போன்ற சீரியல்களை இயக்கியவர்.

குடும்ப கதைகளை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இவரின் சீரியல்கள் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகின்றன. இயக்குநர் ஓ.என். ரத்னம் காதலித்து பல எதிர்ப்புகளையும் மீறி போராடி பெற்றோரின் சம்மதத்துடன் பிரியாவை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2 மகன்கள். இருவருக்குமே பொள்ளாச்சியில் ஒரே கிராமத்தில் வசித்து வந்தவர்கள் தான். தற்போது தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் மகன்கள் இருவரும் பொள்ளாச்சியில் உள்ள தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்று விட்டனர்.

கணவன் மனைவி மட்டும் தனியாக சென்னையில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு ரத்னம் – பிரியா தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு , சண்டை ,சச்சரவு ஏற்படுவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இவர்களது மகன்கள் இன்று காலை தான் சென்னை திரும்பினர்.

அவர்களை அழைத்து வருவதற்காக காலையில் ரத்னா பேருந்து நிலையம் சென்ற போது ப்ரியா மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்தார். அவர்கள் வருவதற்குள் வீட்டில் தூக்கிட்டு பிரியா தற்கொலை செய்து கொண்டார்.

மகன்களை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பிய ரத்தினம் மற்றும் அவரது குழந்தைகள் தூக்கில் தொங்கிய பிரியாவை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக மனைவியை இறக்கி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பிரியா உயிரிழந்தார். அவரின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இருவரும் கடும் எதிர்ப்புக்களையும் மீறி திருமணம் செய்து கொண்டவர்கள்.

பிரியா அவர்களின் பெற்றோரிடம் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை எனில் தற்கொலை செய்து கொள்வேன் என அடம்பிடித்து தான் ரத்தினத்தை திருமணம் செய்துகொண்டார்.

அப்படி போராடி கல்யாணம் செய்து கொண்டவர் இன்று சிறு சிறு பிரச்சனைகளுக்காக இப்படி ஒரு முடிவு எடுப்பார் என யாருமே எதிர்பார்க்கவில்லை’ என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பிரியாவின் இந்த தற்கொலை முடிவு சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் மீது தீராத காதல்… இறந்த மனைவிக்கு சிலை வைத்த 70 வயது முதியவர்!!

விருதுநகரில்..

உயிரிழந்த மனைவியின் நினைவாக சிலிக்கான் சிலையை வடிவமைத்து நினைவு தினத்தை அனுசரித்த சிவகாசி தொழிலதிபரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேஷனல் காலனியை சேர்ந்தவர் நாராயணன். 70 வயதாகும் இவர் ஒரு தொழிலதிபர் ஆவார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் இருக்கும் நிலையில், இவரது மனைவி ஈஸ்வரி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் உடல் நல குறைவால் காலமானார்.

மனைவி மீது தீராத அன்பு கொண்டுள்ள நாராயணன், அவர் இறந்த பிறகும் அவரது நினைவாலே இருந்துள்ளார். மேலும் இவரது பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமான நிலையில், இவர் மட்டும் தனிமையில் தனது மனைவி நினைவாக இருந்துள்ளார்.

இந்த சூழலில் தனது மனைவி இறந்த பிறகு அவரது நினைவாக சிலை ஒன்றை செய்ய எண்ணியுள்ளார். மேலும் சிலிக்கான் சிலையை செய்தால் தன்னுடனே வீட்டுக்குள் இருக்கலாம் என்ற எண்ணத்தில் அதனை செய்ய எண்ணியுள்ளார்.

அதன்படி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சிலிக்கான் சிலை செய்ய பெங்களூரு தனியார் நிறுவனத்திடம் ஆர்டர் செய்துள்ளார். தனது மனைவியின் நினைவு உலுக்கு முன்பாகவே அதனை செய்ய கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று அவரது நினைவு நாளை அவரது வீட்டில் சிலையை வைத்து அனுசரித்து நினைவுகூர்ந்தார்.

இந்த சிலை தத்ரூபமாக அவரது மனைவி ஈஸ்வரியின் உண்மையான உருவம் போல இருந்துள்ளது. நினைவு நாளான இன்று அவரது வீட்டில் அமைத்து நாராயணன் நினைவுகூர்ந்தார்.

இந்நிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று சிறப்பு பூஜை செய்து சிலையை வழிபட்டனர். எளிதில் தூக்கிச் செல்லும் வகையிலான அந்த சிலையை, வீட்டின் ஹாலில் உள்ள சோபாவில் வைத்துள்ளார். மேலும் வாசலில் 2 லட்சம் ரூபாய் செலவில் மனைவியின் வெண்கல சிலையையும் வைத்துள்ளார்.

மனைவியின் நினைவு தன்னுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக 9 லட்சம் ரூபாய் செலவில் இந்த சிலையை செய்துள்ளதாகவும், அவர் உயிருடன் இருப்பது போன்ற மன நிறைவு தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், வீட்டில் நடக்கும் அனைத்து விசேஷ நிகழ்ச்சிகளிலும் மனைவி பங்கேற்பது போல் இருக்கிறது என்ற மன நிறைவு ஏற்படுவதாகவும் நாராயணன் தெரிவித்தார்.