கண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் பெண் குழந்தை ஆகியோரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் யஹலதென்ன பகுதியில் உள்ள அவர்களது வீட்டி இன்று இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் 52 வயதுடைய அரசியல்வாதி எனவும் அவரது 44 வயதுடைய மனைவி மற்றும் 17 வயதுடைய மகள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். மேலும் அவரது மனைவி மற்றும் மகளின் உடல்கள் வீட்டின் அறைகளில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு, பொரளை மயான சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து காரணமாக 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஒரு பவுசர் பல வாகனங்கள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. பவுசரின் பிரேக் கட்டமைப்பு செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது மோதியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குருணாகல் பிங்கிரிய – வீரபொகுன பகுதியில் ஒரு தம்பதியினர் கடன் சுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வீடு காணிகள் அடமானத்தில் வைத்து கடன் பெற்ற நிலையில் அவை ஏலத்தில் விடப்பட்டுள்ளன.
உறவினர்கள், நண்பர்களிடம் பெற்ற கடனையும் அடைக்க முடியாமல் போயுள்ளது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் தம்பதியினர் விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
வீரபொகுன-இஹல கொங்கந்தவைச் சேர்ந்த சுசந்த சிசிர குமார (42) என்ற கணவன் மற்றும் நிர்மலா சாந்திலதா தமயந்தி (40) என்ற மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து விஷமருந்தி உயிரை மாய்த்துள்ளனர்.
பிரேத பரிசோதனையின் போது, இருவரும் ஏற்கனவே உயிரை மாய்க்க முயன்றதாகவும், அவர்களின் சகோதரி கடனில் ஒரு பகுதியை அடைத்து அவர்களை ஆபத்திலிருந்து விடுவித்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பிங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய பெண் வர்த்தகர் திலினி பிரியமாலியை பொலிஸார் மீண்டும் கைது செய்துள்ளனர். ஹோமாகம நீதிமன்றத்தில் ஒரு உத்தியோகத்தரின் பணிகளைத் தடுப்பதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஹோமாகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஹோமாகம நீதவான், பொலிஸாருக்கு முன்னதாகவே உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், திலினி பிரியமாலியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
திலினி பிரியமாலி இன்று காலை ஹோமாகம பொலிஸார் மத்தியில் நேரில் வந்தபோது, அவர்கள் உடனடியாக கைது செய்ததாக பொலிஸார் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
தொடர்ந்து, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாரியளவில் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி ஏற்கனவே திலினி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு, பொரளை, கனத்த சந்தி பகுதியில் இன்று திங்கட்கிழமை (28) காலை வாகன விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாரம் தூக்கியின் பிரேக்குகள் சரியாக செயல்படாமையினால் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பல மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரைணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மாத்தளையில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பலாபத்வல பகுதியிலுள்ள ஒரு வீட்டில் இரு தரப்பினரிடையே நேற்று ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறையாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மாத்தளை, பலாபத்வல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நான்கு பேர் கொண்ட இளைஞர்கள் வீடொன்றுக்கு சென்ற நிலையில், அந்த வீட்டுக்காரர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வீட்டில் இருந்த ஒருவர் அருகிலுள்ள கூர்மையான ஆயுதத்தால் ஒருவரின் கழுத்தில் தாக்கியதுடன், மற்றொரு நபரை வெட்டி காயப்படுத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பின் புறநகர் பகுதிகளான கொஸ்கம, அலுபோதல மற்றும் நிசல உயன பகுதிகளில் உள்ள வீடுகள் மீது மர்மமான முறையில் கல் தாக்குதல் நடத்தப்படுவதால் மக்கள் அச்சத்தில் வாழ்வதாக தெரியவந்துள்ளது.
சுமார் மூன்று மாதங்களாக இந்த கல் தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் இரவில் மட்டுமே நடந்த இந்த தாக்குதல்கள், தற்போது பகலிலும் நடப்பதாக அந்தப் பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக பல வீடுகளின் கூரைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மேலும் தங்கள் வீடுகளில் வசிக்கக் கூட அச்சமாக உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கொஸ்கம பொலிஸாருக்கு தகவல் அளித்த பிறகு, அதன் அதிகாரிகள் அவ்வப்போது இங்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலை காரணமாக சிலர் அப்பகுதியை விட்டு வெளியேற விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.
அதன்படி, பாடசாலைகள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறும், மேலும் இரண்டு இடைவேளைகளை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து பாடசாலை நேரம் ஒரு நாளைக்கு 50 நிமிடங்கள் அதிகரிக்கும் என்பதால், மாணவர்களால் அதைத் தாங்க முடியாது.
எனவே தினமும் காலை 10.10 மணி முதல் காலை 10.30 மணி வரை மற்றும் மதியம் 12.10 மணி முதல் மதியம் 12.20 மணி வரை இரண்டு இடைவேளை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசோக டி சில்வா தெரிவித்தார்.
அதன்படி, காலை 7.40 முதல் 8.30 மணி வரை, காலை 8.30-9.20 மணி வரை, காலை 9.20 -10.10 மணி வரை, காலை 10.30 -11.20 மணி வரை, காலை 11.20 முதல் மதியம் 12.10 மணி வரை மற்றும் மதியம் 12.20 -1.10 மணி வரை, பிற்பகல் 1.10-2.00 மணி வரை என நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் முட்டை விலை குறைந்திருந்தாலும், முட்டை ரொட்டி மற்றும் கொத்து ரொட்டியின் விலை முன்பு போலவே இருப்பதாக நுகர்வோர் கூறுகின்றனர்.
ஒரு முட்டையின் விலை 45 முதல் 50 ரூபாய் வரை இருந்தபோது, ஒரு முட்டை ரொட்டியின் விலையை 125 முதல் 130 ரூபாய் வரை உயர்த்த ஹோட்டல் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால், தற்போது ஒரு முட்டையின் விலை 29 மற்றும் 32 ரூபாய் வரை குறைந்துள்ள போதும், முட்டை ரொட்டி இன்னும் அதே விலையில் விற்கப்படுவதாக சுட்டிகட்டப்பட்டுள்ளது.
இலங்கை புகையிரத சாரதிகள் நாளை நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். லோகோமோட்டிவ் (LOCOMOTIVE) இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.யு. கோந்தசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒழுங்கற்ற சமிஞ்சை கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாததால் குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து தொடருந்துகளும் சேவையில் ஈடுபடாது என்றும் LOCOMOTIVE இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை எதிர்த்துப் போராடுவதற்காக பாடசாலை மட்டத்தில் குழுக்களை நிறுவுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையுடன் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
1080 பாடசாலைகளில் ஏற்கனவே இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு குழுவிலும் பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையன் பிரதிநிதி ஆகியோர் அடங்குவர்.
முயற்சியின் நோக்கம்
25 மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளின் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாவட்டத்தில், திருமணமான 3 ஆண்டுகளில் மகள் உயிரிழந்ததால், வரதட்சணையாக வழங்கப்பட்ட ரூ.50 லட்சம் பணம், 35 சவரன் தங்க நகையை திருப்பிக் கொடுக்கக் கோரி பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது கணவர் சுரேஷ் உடன் ஏற்பட்ட பிரச்னையில் பெற்றோர் வீட்டுக்குச் சென்ற பெண், தனது தந்தையுடன் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே தந்தையும், மகளும் உயிரிழந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த இளம்பெண்ணின் உறவினர்கள், சுரேஷ் வீட்டின் முன் இருவரது சடலங்களையும் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இந்தியாவில் சிறிய எழுத்துப்பிழை காரணமாக 22 நாள் சிறை சென்றவருக்கு 17 வருட துன்பத்திற்கு பிறகு இறுதியாக விடுதலை கிடைத்துள்ளது.
இந்தியாவின் மெயின்புரி என்ற பகுதியை சேர்ந்த 55 வயதான ராஜவீர் சிங் யாதவ் அதிர்ச்சியூட்டும் அடையாளம் குழப்பம் மற்றும் அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாக 17 வருட நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ராஜவீர் குற்றமற்றவர் என மெயின்புரி நீதிமன்றம் சனிக்கிழமை அறிவித்ததுடன், அவரைக் கைது செய்ய உண்மையில் எண்ணாத காவல்துறை அதிகாரிகளின் “கடும் அலட்சியம்” கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால துன்பத்திற்கு வழிவகுத்ததற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 2008 இல் நக்லா பண்ட் கிராமத்தில் நடந்த மோதல் தொடர்பாக ராஜவீரின் சகோதரர் ராம்வீர் சிங் யாதவை பொலிஸார் தேடி வந்தனர்.
ஆனால், “கும்பல் பட்டியல்” தயாரிக்கப்பட்டபோது, அப்போதைய மெயின்புரி கோட்வாலி எஸ்.எச்.ஓ ஓம்பிரகாஷ், ராம்வீருக்குப் பதிலாக ராஜவீர் சிங் யாதவ் என தவறுதலாக பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து ராஜவீர் 2008 டிசம்பர் 1 அன்று கைது செய்யப்பட்டார். சிறையிலிருந்தபடியே, தான் நிரபராதி என்பதை வலியுறுத்தி ஆக்ராவில் உள்ள சிறப்பு குண்டர் சட்ட நீதிமன்றத்தில் உடனடியாக ஒரு மனு தாக்கல் செய்தார்.
சில வாரங்களுக்குள், டிசம்பர் 22 அன்று, இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ், ராஜவீரின் பெயர் “தவறுதலாக சேர்க்கப்பட்டது” என்று நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார். நீதிமன்றம் உடனடியாக அவரை விடுவிக்க உத்தரவிட்டது.
மேலும், அப்போதைய குண்டர் சட்ட வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி முகமது இக்பால், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்து மெயின்புரி எஸ்.எஸ்.பிக்கு கடிதம் எழுதினார்.
ஆயினும்கூட, இந்த ஒப்புதல் மற்றும் நீதிபதியின் எச்சரிக்கையையும் மீறி, சப்-இன்ஸ்பெக்டர் சிவசாகர் தீட்சித் ராஜவீருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார், இதனால் அவருக்கு எதிரான தவறான வழக்கு தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டது.
இந்த வழக்கு கிட்டத்தட்ட 17 வருடங்கள் இழுக்கப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து விடாமல் போராடி ராஜ்வீர் வெற்றி கண்டுள்ளார். இந்நிலையில், அவரது பெயர் இறுதியாக விடுவிக்கப்பட்ட நிலையில், ராஜவீர் பொறுப்புக்கூறலையும் இழப்பீட்டையும் நாடுகிறார்.
“இதை எனக்குச் செய்த அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். குறைந்தபட்சம், நான் பட்ட துன்பங்களுக்கு எனக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒரு வயது குழந்தை பொம்மை என நினைத்து பாம்பை கடித்துள்ளது. பீகார் மாநிலம் மேற்கு சாம்பரான் மாவட்டத்தின் பங்கட்வா கிராமத்தில் உள்ள தனது வீட்டில், கடந்த வெள்ளிக்கிழமை, ஒரு வயதான கோவிந்தா என்ற குழந்தை விளையாடி கொண்டிருந்தது.
குழந்தையின் பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில், குழந்தை பாட்டியின் கண்காணிப்பில் இருந்துள்ளது. அப்போது 2 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று, குழந்தையின் அருகே ஊர்ந்து வந்துள்ளது.
குழந்தை அதை கண்டுகொள்ளாமல் விளையாடிக்கொண்டிருந்த போது, அது குழந்தையின் கையை சுற்ற ஆரம்பித்துள்ளது. பொம்மை என நினைத்த குழந்தை, பாம்பை பிடித்து கடிக்க தொடங்கியுள்ளது.
பாம்பை கடிப்பதை பார்த்த குழந்தையின் பாட்டி, பதறியடித்து கொண்டு வந்து பார்த்த போது, குழந்தை கடித்ததில், பாம்பு இரண்டு துண்டுகளாகி இறந்து விட்டது. குழந்தையும் உடனே மயங்கி விட்டது.
உடனடியாக, அருகே உள்ள மஜௌலியா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு, குழந்தை மேல் சிகிச்சைக்காக பெட்டியா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இது மிகவும் அசாதாரணமானது என கூறிய மருத்துவர், “விஷத்தின் பாதிப்பு சிறிய அளவில் உள்ளதால் குழந்தைக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை. குழந்தை மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து பயணிக்கின்ற அதிசொகுசு சுற்றுலா கப்பலான Cordelia Cruises எதிர்வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 22 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் 2023ஆம் ஆண்டில் 9 முறையும் 2024ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 6 முறையும் இலங்கைக்கு வந்துள்ளது.
அதனையடுத்து, இந்த ஆண்டின் முக்கியமான பயணமாக ஆகஸ்ட் மாதத்தில் இந்த கப்பல் மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சுற்றுலா கப்பல், காலை வேளையில் காங்கேசன் துறைமுகத்திற்கு வருகைதரும். இதில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள், யாழ்ப்பாணம், கோட்டை உள்ளிட்ட முக்கியமான இடங்களை பார்வையிட்டு, அதன் பின்னர் மீண்டும் இந்தியாவை நோக்கி புறப்படவுள்ளனர்.
Cordelia Cruises கப்பல் மிகவும் பிரமாண்டமான மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட சுற்றுலாப் பயணிகள் கப்பலாக காணப்படுகிறது
வவுனியா மாநகரசபையின் கோரிக்கையினை ஏற்று நேற்று ஞாற்றுக்கிழமை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கிய வர்த்தகப்பெருமக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக வவுனியா மாநகரசபையின் முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளதுடன் மாநகரசபைக்குட்பட்ட தாண்டிக்குளம் மாடுவெட்டும் மடுவத்தை மூடுமாறு இதுவரை சபையால் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்.. ஞாயிறு தினமான இன்று மாநகரசபையின் கோரிக்கையினை ஏற்று வவுனியா வர்த்தகர்கள் தங்களுடைய வியாபார நிலையங்களை மூடி பணியாளர்களுக்கு விடுமுறையினை வழங்கியுள்னர்.
எமது கோரிக்கையினை ஏற்று ஒத்துழைப்பு வழங்கிய மாநகரத்தின் வர்த்தகப்பெருமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாநகரசபை சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அதேபோல தனியார் கல்விநிலையங்களும் இன்று மூடப்பட்டு தமது ஒத்துழைப்பினை வழங்கியிருக்கின்றன. எனவே அதுசார்ந்த கல்விச் சமூகத்திற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். இது கல்வி நிலையங்களின் வருமானத்தை வீழ்ச்சியடையச்செய்வதற்கான ஒரு செயற்ப்பாடு அல்ல.
மாறாக மாணவர்களிற்கு அறநெறிக்கல்வியை ஊட்டி அதனுடன் கலை, கலாசாரம் தொடர்பான விடயங்களிலும் அவர்கள் முன்நோக்கிச் செல்லவேண்டும் என்பதற்காகவே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை தற்போது பிரச்சனையாகியுள்ள எமது சபைக்குட்பட்ட மாட்டுத்தொழுவத்தை நாங்கள் ஒருபோதும் மூடவில்லை. அங்கு கடந்த சனிக்கிழமை மின்சாரம் தடைப்பட்டபோதும் சபையின் ஒத்துழைப்புடன் மாடுகள் வெட்டப்பட்டு கடைகளுக்கு இறைச்சி அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் மறுநாள் ஞாயிற்றுகிழமை எந்தவித அறிவித்தலும் இல்லாமல் தொழுவத்தையும் இறைச்சிக்கடைகளையும் அவர்களாக மூடியுள்ளனர். நாங்கள் அதனை மூடுமாறு எந்தவித உத்தியோகபூர்வ உத்தரவையும் இன்றுவரை பிறப்பிக்கவில்லை. என்பதை எமது மாநகர மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இந்த செயற்பாடு மாட்டிறைச்சி தேவையுடைய மக்களை குழப்பும் விதத்திலும் இங்கு ஒரு பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாகவே அவர்களால் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் கிழமைகளில் நடைபெறவுள்ள சபைக்கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படும். அன்றய அமர்வில் எமது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளமுடியாத பல விடயங்களும் வெளிவரும் என்றார்.