வவுனியா கந்தபுரத்தில் ‘மக்களுடன் ஊராட்சி’ வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் நடமாடும் சேவை!!

‘மக்களுடன் ஊராட்சி’ என்ற உயரிய நோக்கத்திற்காக மக்களுக்கான சேவையை மக்களிடம் சென்று வழங்குவதே இந்த நடமாடும் சேவையின் நோக்கமாகும்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசம் என்பது பரந்து விரிந்தது. எனவே எமது சபைக்கு மக்கள் வருகைதந்து சேவையினை பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்களை இலகுபடுத்துவதற்காக ‘மக்களுடன் ஊராட்சி’ திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம் என வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் ஊடக அறிக்கையில்,

முதற்கட்டமாக கந்தபுரம் வட்டாரத்தில் எதிர்வரும் 28,29 ம் திகதிகளில் நடமாடும் சேவையை நடாத்தவுள்ளோம். எதிர்காலத்தில் ஏனைய வட்டாரங்களுக்கும் இந்த நடமாடும் சேவையினை விஸ்தரிக்கவுள்ளோம்.

விளம்பரப்பலகை கட்டணம், சோலைவரி, ஆதனப்பெயர் மாற்றம் ஆலோசனைகள், எல்லைக்கோட்டு சான்றிதழ் சேவை, வியாபார உரிமம், வியாபார வரி, வியாபார பெயர்ப்பதிவு, வழி அனுமதிப்பத்திர ஆலோசனைகள், கட்டட அனுமதி ஆலோசனைகள், கழிவகற்றல் சேவை, வீதி விளக்கு கோரிக்கைகள், ஆயுர்வேத மருத்துவ சேவை,

நூலக நடமாடும் சேவையும் அங்கத்துவ படிவம் வழங்கலும், முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளல், தலைவர் மற்றும் உறுப்பினர்களுடனான சந்திப்பு, 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் பெறல் உள்ளிட்ட மேலும் பல சேவைகளை இதன்போது பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் எதிர்வரும் 28, 29ம் திகதிகளில் கந்தபுரம் வட்டாரத்திற்குட்பட்ட தோணிக்கல் RDS மண்டபத்தில் காலை 9 மணி தொடக்கம் மாலை 3.00 மணி வரையில் நடைபெறும் இந்த சேவையில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு வட்டாரத்திற்குட்பட்ட பொதுமக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!!

வவுனியா- பரசங்குளம், ஏ9 வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது நேற்று (27.07.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலையில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பரசங்குளம் பகுதியில் பயணித்த போது கட்டுப்பாட்டை இழந்து மின்சார கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் குறித்த மோட்டார் சைக்கிள் சாரதியான கிளிநொச்சி, பாரதிபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய ஜெயசீலன் திவாகரன் பலியாகியுள்ளார்.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா வீதிகளை ஆக்கிரமித்த கட்டாக்காலி மாடுகள் : மாநகரசபை எடுத்த நடவடிக்கை!!

வவுனியா மாநகரசபையினால் வீதிகளில் நடமாடித்திரிந்த 60க்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் நேற்று (26.07.2025) இரவு பிடிக்கப்பட்டன.

வவுனியா மாநகர எல்லைக்குட்பட்ட வீதிகளில் இரவு மற்றும் பகல் வேளைகளில் நடமாடும் கால்நடைகளால் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனையடுத்து மாநகரசபைக்குள்ள அதிகாரங்களை கொண்டு மாநகர முதல்வரின் உத்தரவிக்கமைய கால்நடைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளில் பொது போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற 60க்கும் மேற்பட்ட கால்நடைகள் மாநகர சபையினரால் பிடிக்கப்பட்டது.

எனவே கால்நடை உரிமையாளர்கள் தமது கால்நடைகளுக்குரிய அடையாளத்தினை உறுதிப்படுத்தியபின் தண்டப்பணத்தினைச் செலுத்தி அவற்றை மீளப்பெற்றுச்செல்லுமாறு சபையினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

10 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத கால்நடைகள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகரசபை அறிவித்துள்ளது.

வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தக நிலையங்கள் மூடல் : ஒத்துழைப்பு வழங்கிய வர்த்தகர்கள்!!

வவுனியா மாநகர சபைக்குட்பட்ட வர்த்தக நிலையங்களை ஞாயிற்றுக்கிழமைகளில் பூட்டி ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகரசபையினர் விடுத்த கோரிக்கைக்கமைவாக வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை இன்று (27.07.2025) ஞாயிற்றுக்கிழமை பூட்டி தமது ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர்.

வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களுக்கு வாரத்தில் ஒர் நாள் எனினும் விடுமுறை வழங்கி அவர்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக அந்த நாளை கழிப்பதற்கும் அவர்களின் அயராத உழைப்புக்கு ஒர் நாள் ஒய்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கமைவாக,

வவுனியா மாநகர சபையின் கடந்த அமர்வின் போது ஞாயிற்றுக்கிழமைகளில் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களை மூடுவது தொடர்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டன.

அந்தவகையில் வவுனியா மாநகரசபையினரினால் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களை மூடி மாநகரசபைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு ஒலிவாங்கி மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தன.

அதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை (27.07.2025) இன்று வவுனியா மாநகரசபைக்குட்பட்ட அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களாக ஆடையகம், பலசரக்கு பொருட்கள் விற்பனை நிலையம், காட்வெயார், இலத்திரனியல் விற்பனை நிறுவனங்கள், அழகு சாதன நிலையம் போன்ற பலரும் தமது வர்த்தக நிலையங்களை மூடி தமது ஆதரவினை வழங்கியமையினை அவதானிக்க முடிந்தது.

வவுனியா பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி, கொரவப்பொத்தானை வீதி, முதலாம் மற்றும் இரண்டாம்குறுக்குத்தெரு வீதி, பழைய பேரூந்து நிலையம், மில் வீதி, புகையிரத நிலைய வீதி, குருமன்காடு, மன்னார் வீதி போன்ற மாநகரசபைக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களை மூடியிருந்தனர்.

மாநகரசபையின் இச் செயற்பாட்டிற்கு ஊழியர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் தமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலுக்கு சண்டை போடும் நாடுகள்!!

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலை சொந்தம் கொண்டாடுவதில் தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்டுள்ள மோதலால் தென்கிழக்கு ஆசியாவில் பதற்றம் நிலவுகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பகுதியான Preah Vihear-ல் உள்ள தா மோன் தாம் கோயில் மற்றும் 817 கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்தை உரிமை கொள்வதில் நீண்டகாலமாக சிக்கல் நிலவுகிறது.

ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் கம்போடியாவுக்கு சொந்தமானது என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், அதற்கு பாரம்பரிய அந்தஸ்து கோரி யுனெஸ்கோவை கம்போடிய அரசு அணுகியதால் தாய்லாந்தில் போராட்டங்கள் வெடித்தன.

இந்நிலையில், கடந்த மே மாதம் இருநாடுகளுக்கும் இடையே நடந்த மோதலில் கம்போடியா ராணுவ வீரர் கொல்லப்பட்டார். இதனால் தாய்லாந்து உடனான உறவை கம்போடியா முறித்துக் கொண்டது. இருப்பினும் அவ்வப்போது இருநாடுகளும் எல்லையில் மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இரு நாடுகளின் எல்லையோர கிராமங்கள் காலி செய்யப்பட்டு ஏறத்தாழ 40 ஆயிரம் பேர் இடம் மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – காஸா என அடுத்தடுத்த போர்களால் உலகம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், கம்போடியா – தாய்லாந்து இடையிலான பதற்றம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

காணாமல் போன தங்கச் சங்கிலியை மீள ஒப்படைத்த நல்லுள்ளங்கள்!!

மூதூர் பொழுதுப் போக்கு பூங்காவில் காணாமல் போன 4 கிராம் தங்க கைச் சங்கிலி உரியவரிடம் நேற்று(25) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தம்பலகாமத்தைச் சேர்ந்த புதிய தம்பதியினர் மூதூர் பொழுதுப் போக்குவக்கு வந்திருந்த சமயம் அவர்களுடைய தங்க கைச் சங்கிலி காணாமல் போயிருந்தது. இது தொடர்பாக மூதூர் பிரதேச சபையில் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மூதூர் பொழுது போக்கு பூங்காவில் நேற்று காலை உடற்பயிற்சியில் ஈடுபட்ட சிலர் தங்கக் சங்கிலியை கண்டெடுத்து மூதூர் பிரதேச சபையில் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து மூதூர் பிரதேச சபையின் தவிசாளர், உதவித் தவிசாளர் முன்னிலையில் தங்கச் சங்கிலியை கண்டெடுத்த நபர்கள் உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மனைவியை மிரட்ட 8 மாத குழந்தையை தலைகீழாக வீதியில் தூக்கிச் சென்ற கணவன்!!

நாடு முழுவதும் சமீப காலங்களாக வரதட்சணை கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், வரதட்சணைக் கேட்டு தன்னுடைய மனைவியை மிரட்டுவதற்காக,

தன்னுடைய 8 மாத குழந்தையை தலைகீழாக ரோட்டில் கணவன் தூக்கிச் சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், போலீசார் குழந்தையைத் தலைகீழாக தூக்கிச் சென்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சு. இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

இதற்கிடையில் தனது மனைவியிடம் வரதட்சணையாக பணம் மற்றும் கார் வேண்டும் என்று கேட்டு சஞ்சு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

சஞ்சுவின் குடும்பத்தினரும், சஞ்சுவின் மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், வரதட்சணை கேட்டு தனது மனைவியை மிரட்டுவதற்காக, பிறந்து 8 மாதங்களே ஆன தனது குழந்தையை தலைகீழாக பிடித்து தூக்கியபடி சஞ்சு ரோட்டில் நடந்து சென்றுள்ளார்.

இதனை பார்த்த ஊர்மக்கள் இது குறித்து கேட்டபோது, தனக்கு பணம் வேண்டும் என்றும், இதை வீடியோ எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் சஞ்சு கூறியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலான நிலையில், போலீசார் சஞ்சு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதே சமயம், சஞ்சுவின் குழந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தையின் இடுப்பு எலும்பு இடம் பெயர்ந்துள்ளதாகவும் சஞ்சுவின் மனைவி தெரிவித்துள்ளார்.

செருப்பு போடும் போது 12 வது மாடியிலிருந்து தவறி விழுந்து பலியான 3 வயதுச் சிறுமி!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டம் நாலசோபரா கிழக்கில் உள்ள ஒரு உயரமான குடியிருப்பு அமைந்துள்ளது.

இந்தக் குடியிருப்பில் 3 வயது சிறுமி, 12வது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் தற்போது பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை 22ம் தேதி இரவு 8.20 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பும் போது தாயார் சிறுமிக்கு காலணிகள் அணிவித்துள்ளார். அப்போது அவளை காலணி பெட்டியில் நிற்க வைத்துள்ளார்.

ஆனால் அந்த பெட்டியின் பின்புறம் திறந்திருந்ததால், சிறுமி சமநிலையை இழந்து நேராக 12வது மாடியிலிருந்து கீழே விழுந்துவிட்டதாக தெரிகிறது.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது ஒரு விபத்துச் சம்பவம் என்றும், யாரையும் குற்றவாளியாக கருதவில்லை என்றும் சிறுமியின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிகழ்வு, உயர கட்டிடங்களில் சிறுவர் பாதுகாப்பு குறித்து சிந்திக்க வைக்கும் முக்கியமான நினைவூட்டலாக கருதப்படுகிறது.

கோர விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 5 பேர் காயம்!!

அநுராதபுரம் – குருணாகல் பிரதான வீதியில் 2ஆவது மைல்கல் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (25.07) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ் மற்றும் கெப் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது கெப் வாகனத்தின் சாரதியும் பஸ்ஸில் பயணித்த நால்வரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் பாடசாலை மாணவர்கள் இருவரும் ஆசிரியை ஒருவரும் காயப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பிறந்த குழந்தை!!

மும்பை நோக்கி புறப்பட்ட ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு திடீர் பிரச வலி ஏற்பட்டு வானில் பறந்து கொண்டிருந்த விமானத்திலேயே குழந்தையை பெற்றெடுத்தார்.

ஓமன் தலைநகரான மஸ்கட்டில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்,

கடந்த திங்கள் அதிகாலை 3.15 மணியளவில் வானில் பறந்து கொண்டிருந்தபோது, தாய்லாந்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.

வழக்கமாகக் கேபினில் கிடைக்கும் வசதிகள் இவற்றுக்கு போதுமானதல்ல என்றாலும், விமான ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு, விமானக் கேபினில் ஒரு தனியறையை தயார் செய்தனர். மேலும், விமானி மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் அனுப்பினார்.

இந்த நேரத்தில் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த மருத்துவ துறையைச் சேர்ந்த தாதி ஒருவர் முன்வந்து, விமான ஊழியர்களின் உதவியுடன் கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பாதுகாப்பான முறையில் பிரசவம் பார்த்துள்ளார். இதில் அப்பெண்ணுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதைப்பார்த்த பயணிகள் அனைவரும் ஆரவாரம் செய்தனர்.

இந்தநிலையில் விமானம் மும்பையில் தரையிறங்கிய உடன் தாய், குழந்தை இருவரும் அங்கு தயாராக இருந்த நோய்காவு வண்டியில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

தாய், சேய்க்கு தேவையான உதவிகளை செய்ய தாய்லாந்து தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அதிகாலையில் பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்ணின் பொம்மை!!

சீதுவ பொலிஸ் பிரிவின் ராஜபக்ஷபுர பகுதியில் இன்று (26.07.2025) அதிகாலை 29 வயதுடைய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், ராஜபக்ஷபுர பகுதியில் இன்று அதிகாலை விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் விடுதிகள் ஆய்வு செய்யப்பட்டன. அந்த நேரத்தில், ஒரு விடுதி அறையில் இருந்த ஒரு பெண், ஒரு பொம்மையை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறியபோது, பொலிஸ் அதிகாரிகளால் சந்தேகிக்கப்பட்டார்.

அந்த சந்தேகத்தின் அடிப்படையில், அந்தப் பெண்ணின் வசம் இருந்த பொம்மையை ஆய்வு செய்தபோது, பொம்மைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் ஐஸ் மற்றும் கேரள கஞ்சாவை கண்டுபிடிக்க முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் போதைப்பொருள் சோதனைக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருப்பதை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவ யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சிறப்பு நடவடிக்கையின் போது, 19 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இளைஞன் கழுத்து நெரித்து கொலை : பொலிஸ் வலையில் சிக்கிய நால்வர்!!

இளைஞன் ஒருவனை கழுத்து நெரித்து கொலை செய்து சடலத்தை ஹோமாகம மாற்று வீதியில் வீசிச் சென்ற சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் நேற்று (25) இரவு நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் ஜூலை 10 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞனே கொலைசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர்கள் நால்வரும் கொழும்பு மாதம்பிட்டி மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பிரதேசங்களில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 18 மற்றும் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர். கொலை செய்யப்பட்ட இளைஞனின் கார் கேகாலை – மாவனெல்லை பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தாலியில் நெடுங்சாலையில் விழுந்த விமானம்!!

வடக்கு இத்தாலியில் கடந்த 24ஆம் திகயதியன்று, ஒரு இத்தாலிய ஃப்ரீசியா RG ரக விமானம் நெடுஞ்சாலையில் செங்குத்தாக விழுந்துள்ளது. பெரும் தீப்பிழம்புடன் வெடித்துச் சிதறிய திகிலூட்டும் இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் காணொளியில் பதிவு செய்துள்ளனர்.

காணொளியில், விமானம் வான்வழி சாகசங்களை செய்து கொண்டிருந்து விட்டு, திடீரென பிரெசியா நெடுஞ்சாலையில் செங்குத்தாக விழுவது பதிவாகியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் விமானத்தில் இருந்த இருவர் உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் மிலானைச் சேர்ந்த 75 வயது விமானி செர்ஜியோ ரவக்லியா (Sergio Ravaglia) மற்றும் அவரது பயணி, 60 வயது அன்ன மரியா டி ஸ்டெபனோ (Ann Maria De Stefano) என தெரியவந்துள்ளது.

இத்தாலிய செய்தி நிறுவனமான ஜியோர்னாலே டி பிரெசியா (Giornale di Brescia) பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிட்டுள்ளது.

யாழில் 10 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட 62 வயது முதியவர்!!

யாழில் 10 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டமை தொடர்பிலான சந்தேகத்தின் பேரில் வேலணை துறையூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை ஊர்காவற்றுறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் வேலணை துறையூர் பகுதியில் நேற்றைய தினம் (25) இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை (19) அன்று குறித்த சிறுமி துறையூர் கடற்றொழில் சங்கத்திற்கு அயலில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.

கடையின் உரிமையாளரான 62 வயது மதிக்கத்தக்க நபர் குறித்த சிறுமியை கடையின் உள்ளே அழைத்து குளிரூட்டியினுள் இருக்கும் குளிர்பானத்தை எடுக்குமாறு கூறியுள்ளார்.

இதன்போது குறித்த கடையின் உரிமையாளரான சந்தேகநபர் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயார் கடந்த 23ஆம் திகதியன்று தனது பகுதி கிராமசேவகருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து 24ஆம் திகதியன்று வேலணை பிரதேச செயலகத்திலுள்ள சிறுவர் நன்நடத்தை அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் அன்றையதினமே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்ததுடன், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

 

 

பாலூட்டும் போத்தல் அடையாளம் கண்ட பகுதியில் குழந்தையின் என்புத் தொகுதி ஒன்று அகழ்ந்தெடுப்பு!!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியிள் இருந்து குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தல் அடையாளம் காணப்பட்ட பகுதியில் குழந்தையின் என்புத் தொகுதி ஒன்றும் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனச் செய்மதிப் படங்கள் மூலம் சில பகுதிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்து.

அந்தப் பகுதி தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இரண்டு என நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்டு அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 17ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றபோது குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தல் ஒன்றும், வெள்ளை நிற ஆடை ஒன்றும் அடையாளம் காணப்பட்டிருந்தன.

இந்நிலையில், அந்தப் பகுதியில் இருந்து குழந்தையின் என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டு இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

 

கடவுச்சொற்களை பகிர வேண்டாம் : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

இலங்கையில் சைபர் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் கணனி அவசர பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

குறித்த பிரிவின் அறிக்கையின்படி 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 5400க்கும் மேற்பட்ட சைபர் குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. Facebook, WhatsApp, Instagram, Snapchat மற்றும் TikTok போன்ற சமூக ஊடக தளங்களை மையப்படுத்தியே இந்த குற்றங்கள் பதிவாகியுள்ளன.

அதிலும் Facebook உடன் தொடர்புடையதாக 90 வீதக்குற்றங்கள் பதிவாகியுள்ளன.

AI என்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளின் தவறான பயன்பாடும் இந்த குற்றங்களில் அடங்கியுள்ளதாக கணினி அவசர சேவைப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதனை கருத்திற்கொண்டு பயனர்கள் கடவுச்சொற்களை ஒருபோதும் பகிர வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.