கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய 3 வர்த்தகர்கள்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு கோடி 78 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் குறித்த மூன்று சந்தேக நபர்களும் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் அளுத்கம, யட்டியந்தோட்டை மற்றும் மாவனெல்ல பகுதிகளில் வசிக்கும் மூன்று வணிகர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களின் பொதிகளில் இருந்து 119,000 பிளாட்டினம் வகை சிகரெட்டுகள் அடங்கிய 595 சிகரெட் அட்டைப் பெட்டிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று நபர்களையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது 3 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழில் கொல்லப்பட்ட பிரான்ஸ் இளைஞன் : அம்பாறையில் இருவர் கைது!!

பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞன் வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில் அம்பாறையை சேர்ந்த இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி பகுதியை சேர்ந்த ராஜகுலேந்திரன் பிரிந்தன் (வயது 29) என்ற இளைஞன் கடந்த செவ்வாய்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.

வெளிநாட்டிற்கு தப்பி செல்ல ஆயத்தங்கள்

குறித்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சந்தேக நபர்களை அம்பாறை பகுதியில் வைத்து ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நவீன ரக மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு நபர்களும் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல ஆயத்தங்கள் செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை : மக்களுக்கு எச்சரிக்கை!!

தெற்கு அந்தமான் கடல் பகுதியை அண்மித்துப் உருவாகி வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று முதல் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

30ஆம் திகதி வரை வெள்ளப்பெருக்கு அபாயம்

நீர் நிலைகளில் நீர் மட்டம் மிக அதிகமாக இருப்பதால், திடீர் மழையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று ( 25) முதல் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம் நிலவுவதால், நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிடும் முன் கூட்டிய வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்புகளின் மீது அனைத்து

நீர்த்தேக்கங்களின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும், அந்தப் பகுதிகள் வழியாகப் பயணிக்கும் மக்களும் மிகுந்த கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக 86 குடும்பங்களைச் சேர்ந்த 297 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மேலும் யாழ் மாவட்டத்தில் 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது எனவும், நேற்றைய தினம் 99.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது எனவும் அறிவித்துள்ளது.

அனர்த்த அவசர எச்சரிக்கை : நாட்டின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!!

இலங்கையின் தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச் சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து நாளையதினம் (26.11.2025) ஒன்றாக இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறவுள்ளதாக யாழ்.

பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை எதிர்வரும் 26.11.2025 முதல் 29.11.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அத்துடன் மேற்கு, தெற்கு, மத்திய, சபரகமுவா, ஊவா, வடமத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 26.11.2025 முதல் கிழக்கு தெற்கு, மேற்கு, மத்திய, சபரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களில் காற்று மணிக்கு 50-70 கி.மீ. வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே இலங்கையின் காலநிலை சார் அனர்த்தமொன்றுடன் தொடர்புடைய அனைத்து திணைக்களங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்வரும் 25.11.2025 முதல் 30.11.2025 வரை மிகப் பெரும் மழை, அதிவேக காற்று வீசுகை, வெள்ளப்பெருக்கு தொடர்பில் உடனடி முன்னாயத்த நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் மக்கள் அனைவரும் பேரனர்த்தம் ஒன்றுக்கு தம்மை முழுமையாக தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தாழ்நிலப் பகுதிகள், ஆற்றங்கரைகள் மற்றும் குளங்களின் வான் பாயும் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் இப்பேரனர்த்தத்துக்கான வாய்ப்பு பற்றியும், அதன் சாத்தியமான பாதிப்புக்கள் பற்றியும்,

அவற்றிலிருந்து எம்மைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் அனைத்து மக்களுக்கும் தகவல்களைப் பரிமாற்ற வேண்டும். இதற்காக உரிய திணைக்களங்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல் அவசியம்.

ஆனால் ஊடகங்கள் வழங்கும் தகவல்கள் மக்களைப் பதட்டத்துக்குள்ளாக்காமல் தயார்ப்படுத்துவதற்கேற்ற வகையில் அமைதல் முக்கியமானது.

காலநிலை சார் அனர்த்தங்கள் முன்கூட்டியே எதிர்வு கூறத்தக்கன. நாம் அந்த எதிர்வு கூறல்களையும் உரிய திணைக்களங்களின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றினால் எமக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் எம்மைப் பாதுகாக்கலாம்.

நாட்டின் அனைத்து கடற்றொழிலாளர்களும் நாளை முதல் (25.11.2025) எதிர்வரும் 30.11.2025 வரை எக்காரணம் கொண்டும் கடலுக்கு செல்ல வேண்டாம்.

வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களின் விவசாயிகள் எதிர்வரும் 30.11.2025 வரை உரமிடல் மற்றும் கிருமி, களை நாசினி தெளித்தல் போன்ற எந்த விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம்.

நாட்டில் அபாயகரமான வீதிகள் என அடையாளப்படுத்தப்பட்ட வீதிகளைப் பயன்படுத்த வேண்டாம். எதிர்வரும் 27, 28. 11.2025 கிழக்கு மாகாணத்திற்கு மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் 28, 29ஆம் திகதிகளில் மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எனவே மேற்குறிப்பிட்ட இரண்டு மாகாணங்களினதும், அவற்றில் உள்ளடங்கும் மாவட்டங்களினதும் நிர்வாகங்கள் இது தொடர்பில் போதுமான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வது சிறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் உயிரிழப்பு!!

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நடந்த விபத்தில் ஓட்டமாவடியைச் சேர்ந்த மருத்துவபீட மாணவரொருவர் திங்கட்கிழமை (24) மாலை உயிரிழந்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று திரும்பி வரும் வழியில் குறித்த மாணவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட நான்காம் வருட மாணவரான 23 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேயை விரட்டுவதாக பதின்ம வயது சிறுமியை எரித்த பெண் பூசாரி : இலங்கையில் நடந்த சம்பவம்!!

வெலிமுவபொத்தானை பகுதியில் 16 வயது சிறுமியின் உடலில் பேய் புகுந்துள்ளதாக கூறி சிறுமியின் உடலில் இருந்து பேயை விரட்டுவதற்கு, சிறுமியின் உடலில் தீ மூட்டிய தேவாலய பெண் பூசாரி, கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் தேவாலயத்துக்கு தனது பெற்றோருடன் வந்திருந்த 16 வயது சிறுமியை கரும்பினால் அடித்து, தீப்பந்தத்தால் எரித்ததாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் பூசாரி கைது

சம்பவத்தில் , பலத்த எரி காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பெண் பூசாரி கைது செய்யப்பட்டதாக ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹொரவ்பொத்தானை, வெளிமுவபொத்தானை, கபுகொல்லாவையில் வசிக்கும் 45 வயது திருமணமான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பெண் தனது அறைகளில் ஒன்றில் “சீதா மைனியன்” என்ற பெயரில் ஒரு தேவாலயத்தை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெய்வீக ஆசீர்வாதத்தால் பெண் பூசாரி நோயாளிகளை குணப்படுத்துகிறார் என்ற தகவலின் அடிப்படையில். மதவாச்சி, பிஹிபியகொல்லாவ பகுதியைச் சேர்ந்த பெற்றோர், தங்கள் 16 வயது மகளுக்கு சிகிச்சை பெற கடந்த 23 ஆம் திகதி தேவாலயத்துக்குச் சென்றிருந்தனர்.

16 வயது சிறுமியை பேய் பிடித்திருப்பதாக கூறி, பெண் பூசாரி, சிறுமியின் உடலில் இருந்து பேயை விரட்டும் முயற்சியில், கரும்புகையை மூட்டி, அடித்து, எரிந்த தீப்பந்தத்தால் உடலை எரித்ததாக கூறப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி, சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பெண் பூசாரி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம் : எதிர்வரும் நாட்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை!!

வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று (25) முதல் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென்,ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடனான நிலைமை இன்று (25) முதல் அடுத்த சில நாட்களுக்குள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு அபாயம்

கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ இற்கு மேல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ இற்கு மேல் ஓரளவு கனமழை பெய்யக்கூடும். வடக்கு மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் மணிக்கு சுமார் 40 கி.மீ வேகத்தில் இடைக்கிடையே ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் அறிவுறுத்தியுள்ளது.

மின்னல் தாக்கம்

அதிக மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (25) முதல் 30ஆம் திகதி வரையில் வெள்ளப்பெருக்கு அபாயம் இருப்பதால் முன்கூட்டிய எச்சரிக்கைகளைக் கருத்தில்கொண்டு, மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

உலக சந்தையில் தடுமாறும் தங்கத்தின் விலை : இலங்கையில் விலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!!

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையினால் இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, உலக சந்தையில் தங்கத்தின் விலை $4,150 அதிகரித்துள்ளது.

இதற்கமைய, இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய நிலவரத்துடன் ஒப்பிடும் போது (25) இன்று ரூ.6,000 அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று காலை, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.309,200 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. நேற்று, அதே விலை ரூ.303,600 ஆக இருந்துள்ளது.

இதற்கிடையில், நேற்று ரூ.330,000 ஆக இருந்த “24 கரட்” தங்கத்தின் விலை இன்று ரூ.336,000 ஆக அதிகரித்துள்ளது.

 

எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ள ஆபத்துமிக்க வளிமண்டல குழப்பம் : அவசர கலந்துரையாடல்!!

எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ள அரிதானதும், ஆபத்துமிக்கதுமான வளிமண்டலக்குழப்பம் காரணமாக வடக்கு மாகாணம் கடும் பாதிப்புக்களை எதிர்கொள்ளக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இடர் பாதிப்புக்களைத் தணிப்பது மற்றும் எதிர்கொள்வது தொடர்பான அவசர முன்னாயத்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று (24.11.2025) திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியற்றுறைத் தலைவர் பேராசிரியர் நா.பிரதீபராஜா,தற்போதைய வானிலைச் சூழல் குறித்து விரிவான விளக்கமளித்தார்.

‘இரு காற்றுச்சுழற்சிகள் ஒன்றிணைந்து காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மாறி, இலங்கை ஊடாக நகர்ந்து செல்லும் நிகழ்வானது கடந்த 130 ஆண்டுகளில் இப்போது தான் நிகழ்கின்றது.

இது ஓர் அபூர்வமான மற்றும் ஆபத்தான வானிலை நிகழ்வாகும். இதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் மிகக் கனமழையும், பலத்த காற்றும் வீசக்கூடும்’ என அவர் எச்சரித்தார்.

மேலும், ஏற்கனவே பெய்த மழையால் மண் ஈரமாகியுள்ளதால், பலத்த காற்று வீசும் போது மரங்கள் வேரோடு சாய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும், கடல் நீர்மட்டம் இந்தக் காலப்பகுதியில் உயர்வாக இருக்குமென்பதால் வெள்ள நீர் வடிந்தோட முடியாத சூழல் காணப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து ஐந்து மாவட்டங்களினதும் தற்போதைய நிலவரம் ஆராயப்பட்டது.

யாழ்ப்பாணம்: கடந்த ஒரு வாரகால மழையால் 86 குடும்பங்களைச் சேர்ந்த 297 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்காக ஓர் இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளது என யாழ். மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு: சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மரங்களை அகற்றுவதற்கு மரக் கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்பு போதாத நிலையில் உள்ளமை ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

கிளிநொச்சி: இரணைமடுக் குளம் அதன் கொள்ளளவில் நான்கில் ஒரு பகுதியையே கொண்டுள்ளதால் வெள்ள அபாயம் இல்லை எனவும், நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

வவுனியா மற்றும் மன்னார்: தற்போதைய நிலையில் மிகப் பெரிய இடர்கள் இல்லை எனவும், அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

உயர்தரப்பரீட்சை இடையூறு ஏற்பாடு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இடையூறின்றி நடைபெற்று வருகின்றன.

இடர் நிலைமை ஏற்பட்டால் பரீட்சைத் திணைக்களத்துடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இதன்போது, பரீட்சை நிலையங்கள் இல்லாத பாடசாலைகளையும், பொது மண்டபங்களையும் இடம்பெயரும் மக்களுக்கான இடைத்தங்கல் முகாம்களாகப் பயன்படுத்துமாறு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

வடக்கு மாகாணத்தின் பராமரிப்பிலுள்ள 54 குளங்களில் 52 குளங்களின் நீர்மட்டம் 25 சதவீதத்துக்கும்; குறைவாகவே உள்ளது. 300 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்தால் மட்டுமே வான்பாயும் நிலை ஏற்படும் என மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேநேரம் கடல் நீர்மட்டம் இன்னமும் உயர்வடையாமையர், யாழ். மாவட்டத்தின் 3 தடுப்பணைகளும் திறக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

கடற்படை மற்றும் விமானப்படையின் உதவி

கடந்த காலங்களில் தீவகப் பகுதிகளில் நோயாளர்களைக் கொண்டு செல்வதில் ஏற்பட்ட சவால்களைச் சுட்டிக்காட்டிய மாகாணச் சுகாதாரப் பணிப்பாளர், கடற்படை மற்றும் விமானப்படையின் உதவியுடன் அவசர மருத்துவச் சேவைகளை உறுதிப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கடல் நீர்மட்டம் உயர்வதற்கு முன்னதாகவே, உள்ளூராட்சி மன்றங்கள் வாய்க்கால்களைத் துப்புரவு செய்து, தேங்கியுள்ள வெள்ள நீரை விரைவாக வெளியேற்ற வேண்டும்.

அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) அவர்களுக்கு ஆளுநர் பணித்தார்.

மீட்புப் பணிகளுக்காக முப்படையினர் தயார் நிலையிலுள்ளதாகத் தெரிவித்தனர். இடர் காலத்தில் பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகங்கள் 24 மணி நேரமும் மக்களுக்கு உதவும் வகையில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் (திட்டமிடல், நிதி), முப்படைப் பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

காதல் தோல்வியால் யாழ் மாணவி விபரீத முடிவு : சோகத்தில் உறவினர்கள்!!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, மூளாய் பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வட்டுக்கோட்டை, மூளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவி அதே பிரதேசத்தில் வசிக்கும் இளைஞனுடன் 2 வருடங்களாக காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகின்றது.

இந் நிலையில், திடீரென ஏற்பட்ட காதல் முறிவு காரணமாக தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துக்கொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மணமகன் கண்ணாடியால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் : உறவினர்கள் ஏமாற்றம்!!

பல்வேறு விடயங்களுக்காக திருமண நின்று போன ஏராளமான சம்பவங்கள் உலகில் இடம்பெற்றுள்ளன. ஆனால் மணமகன் கண்ணாடி அணிந்திருந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய அதிர்ச்சி சம்பவம் ஒன்று இந்தியாவின் நடந்தேறியுள்ளது.

பீகாரில் கண் குறைபாடு உள்ள ஒருவர் தனது குறைபாட்டை மறைத்து திருமணம் செய்ய முயன்றபோது, திருமண மேடையில் அவர் தடுமாறியதை அடுத்து மணப்பெண் அவரது குறையை கண்டுபிடித்து திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் கண்ணில் குறைபாடு இருப்பதை மறைத்த மணமகன், குறைபாட்டை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற தைரியத்தில் கண்ணாடி அணிந்து வந்துள்ளார்.

அப்போது திருமண மேடையில் அவர் தடுமாறியதை அடுத்து மணமகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து மணமகள் மற்றும் அவரது வீட்டார் மணமகனிடம் விசாரித்த போது, தனக்கு கண் குறைபாடு இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து மணமகன் வீட்டார் எவ்வளவோ சமாதானம் செய்தும் மணமகள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.  இந்நிலையில் மணமகனுக்கு ஒரு கண்ணில் பார்வை குறைபாடு இருப்பதை அறிந்த மணமகள், திருமணத்தை நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு வைத்தியரால் நேர்ந்த கதி!!

கொழும்பின் புறநகர் பகுதியான கஹதுடுவ மாவட்ட வைத்தியசாலையில் 26 வயதுடைய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக 40 வயதுடைய வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநோயாளர் பிரிவைச் சேர்ந்த வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட கடந்த 19 ஆம் திகதி தனக்கு ஏற்பட்ட ஒரு நோய்க்காக கஹதுடுவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை சென்றுள்ளார்.

இதன்போது சந்தேக நபரான வைத்தியர், மற்ற நோயாளிகளின் சிகிச்சையை புறக்கணித்து, முறைப்பாட்டாளரான பெண்ணின் மருத்துவ பதிவுகளை பரிசோதித்துள்ளார்.

மேலும் உடல் ரீதியாக அவரை பரிசோதிக்க அறை ஒன்றிக்குக்கு அழைத்துச் சென்ற போது, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாட்டிற்கு குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி, சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 10 பேர் மரணம்!!

கடந்த சில தினங்களாக நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 10 பேர் வரை உயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை, ஹம்பாந்தோட்டை மற்றும் கேகாலை மாவட்டங்களில் மரணங்கள் பதிவாகியுள்ளதாக நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 67 பேர் 03 பாதுகாப்பான மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலையால் களுத்துறை, காலி, யாழ்ப்பாணம், பதுளை, கேகாலை, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகும்.

 

வவுனியாவில் தங்கச் சங்கிலியை தொலைத்த பல்கலைக்கழக மாணவி : பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சி செயல்!!

வவுனியா வைத்தியசாலையில் கீழே விழுந்திருந்த ஒன்றரை பவுண் சங்கிலியை எடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உரியவரிடம் ஒப்படைத்துள்ளார். இச்சம்பவம் நேற்று (24.11) இடம்பெற்றுள்ளது.

வவுனியா மருத்துவமனையின் பொலிஸ் காவல் மையத்தில் பணிப்புரிந்து கொண்டிருந்த பொலிஸ் சர்ஜென்ட் (46674) திலகரதன என்ற அதிகாரி வைத்தியசாலையை சுற்றிப்பார்வையிட்டிருந்த போது தரையில் விழுந்திருந்த ஒன்றரை பவுண் தங்கச் சங்கிலியை கண்டெடுத்துள்ளார்.

இதன் பின்னர் அந்த அதிகாரி இது குறித்து செவிலியர் குழுவினருக்கு அறிவித்ததுடன், அந்த தங்கச்சங்கிலியை பொலிஸ் மையத்தில் பாதுகாத்து வைத்திருந்தார்.

இந்நிலையில்,, ஒரு பல்கலைக்கழக மாணவி தன் தாயாருடன் கண்ணீர் மல்க தன்னுடைய தங்கச் சங்கிலி விழுந்து விட்டதாக தேடி வந்த போது,

மருத்துவமனை பொலிஸ் காவல் மைய அதிகாரிகள் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர் அந்த சங்கிலியை மீண்டும் அவருக்கு கையளித்துள்ளனர்.

இதன்போது குறித்த மாணவியின் கண்களில் மகிழ்ச்சி கண்ணீர் வழிந்ததுடன் அந்த பொலிஸ் அதிகாரிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

கனடாவில் வசிக்கும் இலங்கையரின் மோசமான செயல் : உண்மையை அம்பலப்படுத்திய பெண்!!

கனடாவில் இருந்து இலங்கையில் ஒன்லைன் மூலம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ள ஒருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வத்தளை பகுதியில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கனடா வாழ் இலங்கையரின் வர்த்தக நடவடிக்கை அம்பலமாகி உள்ளது.

கடந்த 22 ஆம் திகதி வத்தளை பொலிஸாரால் குறித்த பெண் கைது செய்யப்பட்டார். வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பெண் 25 கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது, ​​அவருக்கு போதைப்பொருளை வழங்கிய மற்றொரு நபர் வத்தளை ஹுனுபிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டார்.

அவர் முச்சக்கர வண்டியில் போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளார். சந்தேக நபரிடம் 115 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கனடாவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தன்னை வழிநடத்துவதாக போதைப்பொருள் கடத்தல்காரர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் வாங்குபவர்கள் கனடாவில் உள்ள நபருக்கு ஒன்லைன் மூலம் பணம் செலுத்துவர்.

அதன் பின்னர் கனடாவில் இருந்து வரும் தகவலுக்கு அமைய உரிய நபர்களுக்கு போதைப்பொருளை வழங்குவதாக சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை வெலிசறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் 7 நாள் பொலிஸில் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோர் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2 இலட்சமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ருக்‌தேவி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இந்த ஆண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு, கடந்த ஆண்டை விட 18% அதிக வருமான இலக்கு வழங்கப்பட்டிருந்தது.

கடந்த வாரத்தில், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் வரலாற்றில் பெறப்பட்ட அதிகபட்ச வருமான இலக்கான 2 ட்ரில்லியன் ரூபாவைத் தாண்டி வருமானம் ஈட்ட முடிந்தது.

இந்த நேரத்தில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2,080 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது என்றார்.