வவுனியாவை சேர்ந்த மருத்துவருக்கு கிடைத்த பெருமை!!

ஆசிய பசிபிக் பிராந்திய நோய்த்தணிப்பு மருத்துவ இணையத்தினால் (Asia Pacific Hospice and Palliative Care Network) வழங்கப்படும் மதிப்புமிக்க தொழில்வாண்மைப் புலமைப்பரிசில் வவுனியாவைச் சேர்ந்தவரும் தற்போது சுகாதார அமைச்சில் மருத்துவ நிர்வாகப் பயிற்சியில் உள்ளவருமான மருத்துவர் செல்வராசா மதுரகனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

2026ம் ஆண்டு ஜனவரி முதல் இரு ஆண்டுகளுக்கு வழங்கப்படவுள்ள குறித்த திறமை அடிப்படையிலான போட்டித்தன்மைக்குள்ளாக தெரிவுசெய்யப்படுவதுமான குறித்த புலமைப்பரிசில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரிகளில் திறமை அடிப்படையிலும் நேர்முகத்தேர்விலும் தெரிவுசெய்யப்பட்டுள்ள எட்டுப்பேரில் ஒரே இலங்கையராக மருத்துவர் செ.மதுரகன் இடம்பெற்றுள்ளார்.

குறித்த புலமைப்பரிசில் மூலம் கல்வி மேம்பாடு, தலைமைத்துவ மேம்பாட்டுப்பயிற்சிகள், ஆய்வு போன்றவற்றுக்குரிய பல இலட்சம் பெறுமதியான புலமைப்பரிசிலுக்கு அவர் உரித்துடையவராகின்றார்.

வடமாகாணத்தில் நோய்த்தணிப்பு மருத்துவ சேவைகளை முன்னெடுப்பதிலும், ஆரம்பிப்பதிலும் பல அரச மற்றும் தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள இவரது பல ஆய்வுக்கட்டுரைகள் சர்வதேச ஆய்வு மாநாடுகளில் வெளியிடப்பட்டுள்ளன.

நோய்த்தணிப்புச் சேவைகளின் முக்கியத்துவம் பற்றியும், வலி மற்றும் ஏனைய குணங்குறிகளைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும், நோய்களால் ஏற்படுத்தப்படும் நிதிச்சுமைமையக்குறைத்து சமத்துவமான சேவைகள் தனிநபர் வேறுபாடின்றி அனைவருக்கும், வளங்கள் குறைவான பிரதேசங்களுக்கும் பகிரப்படுவதன் முக்கியத்துவம் பற்றியும் இவரது ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறித்த புலமைப்பரிசில் மூலம் இவரது தனிப்பட்ட முன்னேற்றம் மட்டுமன்றி வடமாகாணத்திற்கும், நாட்டுக்கும், நோய்த்தணிப்பு மருத்துவம் தொடர்பான அறிவு மற்றும் ஆய்வு விருத்திக்கான பல கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.

மருத்துவர் செல்வராசா மதுரகன் இந்த ஆண்டு ஜுலை மாதம் பொதுநலவாய மருத்துவ சங்கத்தின் சிறப்பு விருதையும் (Fellowship of Commonwealth Medical Association) பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் செல்வராசா மதுரகனுக்கு வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வவுனியாவில் அமைந்துள்ள Singer காட்சியறையில் தீ விபத்து : பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!!

வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் இலத்திரனியல் காட்சியறை இன்று (25.11.2025) காலை 9.45 மணியளவில் தீப்பரவலுக்கு உள்ளாகி முழுமையாக எரிந்து நாசமாகியது.

காட்சியறையின் மேல் தளத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் தீயே இந்தக் காட்சியறை முழுமையாக எரிந்தமைக்கு காரணம் என கூறப்படுகின்றது.

தீப்பரவல் ஏற்பட்டு சில நிமிடங்களில் மாநகர சபை தீயணைப்பு பிரிவு வருகை தந்து தீயை அணைப்பதற்கு முயற்சித்த போதிலும் அது கட்டுக்கடங்காமல் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் அங்கு குழுமிய பொதுமக்களும் இணைந்து தீயை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுமார் ஒன்றரை மணி நேரமாக முயற்சித்தனர்.

இந் நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்கு விமானப்படை, இராணுவத்தினர் மற்றும் பொலிசாரின் உதவியும் பெறப்பட்டிருந்தது. எனினும் காட்சியறை முழுமையாக தீயில் எரிந்தமையால் பல கோடி ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் நாசமாகியுள்ளன.

இது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவதானமாக இருங்கள் : வடக்கு – கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 25.11. 2025 வரை தொடர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் நாட்கள் இலங்கையினுடைய வானிலையைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியாக கருதப்படுகின்றது.

தற்பொழுது இலங்கைக்கு தெற்காக குறிப்பாக இலங்கையிலிருந்து தென் மேற்காக 62 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படுகின்ற வளிமண்டல மேலெடுக்க சுழற்சியானது தொடர்ந்து மேற்கு திசை நோக்கி நகர்ந்து,

காலியில் இருந்து மேற்கு வடமேற்கு திசையில் அரபிக்கடலில் 161 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டு பின்னர் எதிர்வரும் 26.12.2025 அன்று மீள ஒரு காற்று சுழற்சியாக வலுப்பெற்று கிழக்கு திசை நோக்கி நகரும் என மாதிரிகள் காட்டுகின்றன.

அத்தோடு இந்த காற்று சுழற்சி தொடர்ச்சியாக வலுப்பெற்று இலங்கையின் கிழக்கு மாகாண கரையூடாக வடக்கு நோக்கி நகர்ந்து கிழக்கு மாகாண கரைகளை அண்மைக்கும் பொழுது ஒரு சிறு புயலாக வலுப்பெற்று வடக்கு நோக்கி நகரும் என மாதிரிகள் காட்டுகின்றன.

பொதுவாக அயனப்பிரதேசத்தில் நிகழும் தாழமுக்க நிகழ்வுகள் மேற்குத் திசை நோக்கி நகர்வதே வழமை.

மிக அரிதாகவே அவை கிழக்கு நோக்கி நகரும். அந்த வகையில் இந்த காற்றுச் சுழற்சி மிக முக்கியமான ஒரு வானிலை தோற்றப்பாடாகும்.

இது கிழக்கு நோக்கி நகர்ந்து மீண்டும் இலங்கையின் தென் பகுதியை அண்மிக்கும் போது இலங்கையின் தென் மாகாணம், மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மேல் மாகாணம், ஊவா மாகாணம் என்பனவும்,

பின்னர் இலங்கையின் தெற்குப் பகுதியிலிருந்து வடக்கு நோக்கி நகரும்போது ஊவா, கிழக்கு, மத்திய, வடமேற்கு, வடக்கு மாகாணங்கள் என்பனவும், கனமழை முதல் மிகக் கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக நாளை அதாவது 25 ஆம் திகதியிலிருந்து தென் மாகாணம், மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மேல் மாகாணம்,

ஊவா மாகாணம் என்பனவும் எதிர்வரும் 27.11.2025 இலிருந்து கிழக்கு, வடக்கு, வட மத்திய மாகாணங்களும் பரவலாக கனமழை முதல் மிகக் கனமழை வரை பெறும் வாய்ப்புள்ளது.

அதேவேளை ஏற்கனவே நேற்றைய தினம் இந்தோனேசியாவின் பண்டா ஆச்சே மாநிலத்திற்கு அருகில் தோற்றம் பெற்ற தாழமுக்கம் எதிர்வரும் 26.11.2025 அன்று புயலாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவும் வளிமண்டல நிலைமைகள் மற்றும் ஏனைய புற காரணிகளின் விளைவாக இதன் நகர்வில் பல பின்னடைவுகள் காணப்படுகின்றன.

எதிர்வரும் 25.11.2025 முதல் 29.11.2025 வரை இலங்கைக்கு வானிலை ரீதியாக மிக சவாலான காலப்பகுதியாகும். ஏனெனில் எதிர்வரும் 26.11.2025 அன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு இலங்கைக்கு நெருக்கடியைத் தரக் கூடிய இரண்டு தாழமுக்கங்கள் வங்காள விரிகுடாவில் நிலவும்.

குறிப்பாக எதிர்வரும் 29.11.2025 அன்று இந்த இரண்டு தாழமுக்க நிகழ்வுகளினதும் மைய அமுக்க அளவும் வெளி வலய அமுக்க அளவும் ஒரே நிலைமையில் காணப்படும் என மாதிரிகள் கட்டுகின்றன.

இந்த மாதிரிகளின் அடிப்படையிலேயே நிகழ்நேர வானிலையும் அமைந்தால் இலங்கை முழுவதற்கும் இது பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தும்.

எதிர்வரும் 25.11.2025 முதல் தெற்கு, மேற்கு, சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாண மக்களும் 27.11.2025 முதல் கிழக்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாண மக்களும் பெருமழை மற்றும் வெள்ளம், வேகமான காற்று வீசுகை தொடர்பில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

அதேவேளை தெற்கு (23,24,25,26,2728 ம் திகதிகள்), மேற்கு ( 23,24,25,26,27,28,29 ம் திகதிகள்), கிழக்கு ( 25,26,27,28,29,30 ம் திகதிகள்) வடக்கு( 26.27.28.29.30 ம் திகதிகள்)

கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சீரற்ற வானிலை : 10 மாவட்டங்களில் 1790 பேர் பாதிப்பு!!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 10 மாவட்டங்களில், 504 குடும்பங்களைச் சேர்ந்த 1,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், சீரற்ற வானிலையால் 193 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், இரண்டு வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் பனிமூட்டமான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐசிசி உலகக் கிண்ணத்துக்கு முன்னர் இலங்கைக்கு வரும் இரண்டு முக்கிய அணிகள்!!

ஐசிசி உலகக் கிண்ண தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, இலங்கை கிரிக்கெட் அணி 2026 ஜனவரியில் ஆறு டி20 சர்வதேசப் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, பாகிஸ்தான் ஜனவரி 8 முதல் 12 வரை மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், அதைத் தொடர்ந்து ஜனவரி 30 முதல் பெப்ரவரி 3 வரை இங்கிலாந்து அணி,மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், இங்கிலாந்து தங்கள் சுற்றுப்பயணத்தின் போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கும்.

பாகிஸ்தான் தொடர் இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலைப் பெறவில்லை என்றாலும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை உறுதிப்படுத்தியுள்ளது, இறுதி ஏற்பாடுகள் முடிந்ததும் பாகிஸ்தானின் வருகை குறித்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் கண்டியில் உள்ள பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஆகியவை டி20 உலகக் கிண்ணத் தயாரிப்பில் உள்ளதால், பெரும்பாலான டி20 போட்டிகள் தம்புள்ளையில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலகக் கிண்ண குழு பி-யில் அவுஸ்திரேலியா, ஸிம்பாப்வே, அயர்லாந்து மற்றும் ஓமன் ஆகியவற்றுடன் இலங்கை இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் போட்டிகள் பெப்ரவரியில் ஆரம்பமாகவுள்ளன. இந்தியா மற்றும் இலங்கை ஆகியன இணைந்து இந்த உலகக்கிண்ணத்தை நடத்துகின்றன.

இலங்கையை உலுக்கிய கோர விபத்து : பேராபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

அண்மையில் கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தினை அடுத்து, அந்தப் பகுதி மிகவும் அபாயகரமானதென அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

மண் சரிவு ஏற்பட்ட இடமும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் ஆபத்தான பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கண்டி மேலதிக மாவட்டச் செயலாளர் திலித் நிஷாந்தா குறிப்பிட்டுள்ளார்.

பாதிப்புக்குள்ளான கட்டடத்தின் சட்டபூர்வமான தன்மை குறித்து ஆராயப்படும் என்றும், அந்தப் பகுதியைச் சுற்றி இன்னும் பல ஆபத்தான பாறைகள் உள்ளன என்றும், இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விபத்தின் போது கொங்ரீட் தளத்திற்குள் சிக்கியிருந்தவர்களை காப்பாற்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் உள்ள பஹல கடுகண்ணாவ கணேதென்ன பகுதியில் நேற்று முன்தினம் வீடு மற்றும் உணவகத்தின் மீது ஒரு பெரிய பாறை மற்றும் மண் மேடு சரிந்து விழுந்ததில், விரிவுரையாளர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்த நான்கு பேர் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலைமை மோசமடைந்தமையினால் கேகாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களில் உணவகத்தில் பணிபுரிந்த மூன்று பேரும், உணவு பெற வந்த மூன்று பேரும் அடங்குவர். உணவக உரிமையாளரின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சமையல்காரர்,

உணவு பெற வேனில் வந்த இரண்டு பேர் மற்றும் காரில் வந்த ஒரு நபர் ஆகியோர் உயிரிழந்தவர்களில் அடங்குவதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று முன்தினம் காலை 9.00 மணியளவில் நிகழ்ந்தது. ஒரு சில நிமிடங்களில் அந்த இடமே தரைமட்டமானதாக தெரிவிக்கப்படுகிறது. முப்படையினருடன் அந்தப் பகுதி மக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கடும் மழையிலும் இடிபாடுகளில் சிக்கிய இறந்தவர்களின் உடல்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கும் நடவடிக்கை இரவு 7.30 மணி வரை 10 மணி நேரம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் இறுதிச் சடங்கு செலவுகளுக்கு 100,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், மீதமுள்ள தொகை பின்னர் வழங்கப்படும் என்றும் கேகாலை மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

மக்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் அவசர அறிவிப்பு!!

மோசடியான வியாபாரங்களில் அகப்பட்டு பணத்தை இழக்காதீர்கள் என இலங்கை மத்திய வங்கி அவசர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் போலி வணிக முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக வங்கியின் அதிகாரப்பூர்வ சின்னத்தை தவறாகப் பயன்படுத்தும் மோசடி நபர்கள் மற்றும் குழுக்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இது தொடர்பான தெளிவூட்டலில் மேலும், விழிப்பாக இருக்கவும்! இலங்கை மத்திய வங்கியின் இலட்சிணையை தவறாகப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பல ஏமாற்றுபேர்வழிகள் மோசடியான வியாபாரங்களை இந்நாட்களில் நடாத்திவருகின்றனர்.

இந்த வியாபாரங்கள் எவற்றுடனும் இலங்கை மத்திய வங்கிக்கு தொடா்பு இல்லை. இத்தகைய மோசடியான வியாபாரங்களுக்கு அகப்பட்டு உங்களுடைய எஞ்சியுள்ள பணத்தை இழக்காதீா்கள்.

இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரமளிக்கப்பட்ட நிதியியல் நிறுவனங்கள் தொடர்பான தகவல்களுக்கு இந்த இணைப்பைப் பார்க்கவும் – https://www.cbsl.gov.lk/ta/அங்கீகாரமளிக்கப்பட்ட-நிறுவனங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கட்டாயமாக்கப்படவுள்ள நடைமுறை!!

பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், போக்குவரத்தின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளன. எதிர்காலத்தில் அதனை குறைத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைத் எமது அரசாங்கம் முன்னெடுக்கும்.

அத்துடன், பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளுக்கான வழிகாட்டல் நெறிமுறைகளை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்குள்ள ஒரே தீர்வு பயணிகளைப் பலப்படுத்துவதாகும். ஒரு பெண்ணுக்கோ அல்லது ஒரு பிள்ளைக்கோ யாராவது பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்தால், அதைக் கண்டும் காணாதது போல் இருக்காமல் அதற்கு எதிராகச் செயல்படும் மனிதர்கள் தேவை.

ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் சரி. ஆனால் என்ன நடந்திருக்கிறது என்றால், எமது பேருந்துத் துறையில் உள்ள சில மோசமான நிலைமைகள் காரணமாக மக்கள் பயப்படுகிறார்கள் இன்னொருவருக்காக முன்வருவதற்கு.

அதனால் பேருந்துத் துறையைத் தொழில்முறை நிலைக்குக் கொண்டு வருவது, முச்சக்கரவண்டித் துறையைத் தொழில்முறை நிலைக்குக் கொண்டு வருவது,

செம்மஞ்ஞல் நிறம் சிவப்பு பக்கத்திற்குச் செல்லாமல் பச்சை பக்கத்திற்குக் கொண்டுவர நாங்கள் எடுக்கும் முயற்சி என்று நான் நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தங்க விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் : சர்வதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாபா வங்காவின் தகவல்!!

2026இல் தங்கத்தின் விலையில் எதிர்பாராத ஒரு மாற்றம் ஏற்படும் எனவும் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்படும் எனவும் பாபா வங்கா மேற்கொண்டுள்ள கணிப்பு சர்வதேச ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாபா வங்கா என அழைக்கப்படும் ரையோ தத்சுகி என்ற பார்வையற்ற ஜப்பானிய பெண்ணின் கணிப்புக்கள் பெரிதளவில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த பெண் 2026இல் ஏற்பட போகும் மிக மோசமான பொருளாதார நெருக்கடி தொடர்பில் கணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பாபா வங்காவின் கணிப்பின் படி, 2026 இல் தங்கத்தின் விலைகள் எதிர்பாராத விதமாக மாற்றத்தை எதிர்நோக்கும் என்று அவர் கணித்ததாக குறித்த ஊடகங்கள் கூறுகின்றன.

மேலும், சிலர் தங்கம் அதன் பாதுகாப்பான புகலிட நிலையை இழக்கக்கூடும் என்றும், மற்றவர்கள் அது உயரும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

உதாரணமாக, பண வீழ்ச்சி ஏற்பட்டால் தங்கம் “பயனற்றதாக” மாறும் என்றும் பிற பொருட்களைப் போலவே தங்கமும் சாதாரண ஒரு பொருளாக மாறும் எனவும் பாபா வங்கா கணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, உலக நாணய அமைப்புகளில் சரிவு அல்லது கூர்மையான திருத்தம், வங்கி தோல்விகள் மற்றும் 2026இல் அதிக பணவீக்கம் போன்ற ஒரு கடுமையான நிதி நெருக்கடியும் ஏற்படும் என கூறப்படுகின்றது.

இந்த கணிப்பின் காரணமாக சர்வதேச ரீதியில் கடும் பொருளாதார நெருக்கடி குறித்து கவலைகள் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

நாட்டிற்கு அண்மையில் தாழமுக்கம் வலுவடையும் சாத்தியம் : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டிற்கு அண்மையாக காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் நாளை, 25 ஆம் திகதியளவில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்றைய தினத்திற்கான வானிலை தொடர்பான முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொலிவுட் திரையுலகின் ஜாம்பவான் நடிகர் தர்மேந்திரா காலமானார்!!

பாலிவுட் திரையுலகின் ஜாம்பவானாக திகழ்ந்தவரும், ‘ஹீ-மேன்’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான மூத்த நடிகர் தர்மேந்திரா, தனது 89வது வயதில் இன்று காலமானார். அவரது மறைவு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் திரையுலகில் நடிகர் தர்மேந்திரா, இதய கோளாறு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாள்களாக சிகிச்சையில் இருந்தார்.

இந்த நிலையில், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்ததை பாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் உறுதி செய்துள்ளார்.

89 வயதான தர்மேந்திரா திரைத்துறையில் பல்வேறு சாதனைகளைச் செய்ததுடன் பல உயரிய விருதுகளையும் வென்றவர் .

அதேவேளை , அண்மையில் தர்மேந்திரா உடல்நலக் குறைவால் காலமானதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவிய நிலையில், அவர் நலமுடன் இருப்பதாக அவரது மனைவியும் எம்பியுமான ஹேமமாலினி, அவரது மகள் நடிகை ஈஷா தியோல் தெரிவித்தருந்தனர்.

இந்நிலையில் இன்று நடிகர் தர்மேந்திரா காமனாதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை மக்களின் மனதை வென்ற ஜனாதிபதி அனுர குமாரவின் பிறந்த நாள் இன்று!!

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 57 ஆவது பிறந்தநாள் இன்று (24) ஆகும். சாதாரண நபர் முதல் முதலாக இலங்கையின் பலம்மிக்க 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றார்.

அதுமட்டுமல்லாது ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் நாட்டு மக்களுக்கு நன்மையளிக்கும் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி, இன , மத வேறுபாடின்றி இலங்கையை வளமான நாட்ஃபாக மாற்றுவதில் பல்வேறு வேலை திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.

இலங்கை மக்கள் , தமிழர்கள், சிங்களவர்கள் , முஸ்லீம்கள் என வேறுபாடின்றி அனைவரும் ஒரே நாட்டு மக்கள் என்றும், அனைவரும் என்றுமே சமமானவர்கள் என்றும், ஜனாதிபதி முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டை இருட்டில் தள்ளிய நிலையில், ஜனாதிபதி அனுர குமார, வளமான நாடு எனும் பாதையில் இலங்கையை கொண்டு செல்கின்றார்.

போதை ஒழிப்புகள் மூலம் நாட்டு மக்களுக்கு நல்லதையே எண்ணுகின்ற ஓர் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க , இன்று தனது 57வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் இலங்கை மக்கள் , ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விசா நிராகரிப்பால் உயிரைவிட்ட இந்திய மருத்துவர் : சிதைந்த அமெரிக்க கனவு!!

இந்திய மாநிலம் ஆந்திராவைச் சேர்ந்த பெண் மருத்துவர், அமெரிக்க விசா நிராகரிப்பால் உயிரை மாய்த்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த மருத்துவர் ரோகிணி. 38 வயதான இவர் அமெரிக்காவில் பணியாற்ற விரும்பியுள்ளார். இதற்காக அவர் பணி விசா விண்ணப்பித்து காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவரது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மனமுடைந்த ரோகிணி தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார். அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக கடிதம் எழுதி வைத்திருத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

45 ஆண்டுகள் இணைபிரியாத வாழ்க்கை : கணவன் இறந்த சில மணிநேரத்தில் மனைவியும் உயிர் விட்ட சோகம்!!

விழுப்புரம் அருகே வி.புதூர் கிராமத்தில், 45 ஆண்டுகள் அன்போடு வாழ்ந்த வயதான தம்பதியரின் வாழ்க்கை, கணவன் இறந்த சில மணி நேரங்களிலேயே மனைவியும் உயிரிழந்ததால், அப்பகுதியை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

விவசாயியான வீரண் மற்றும் அன்னக்கிளி தம்பதியினர், சிறந்த அன்பு-அன்னியோன்யத்திற்குப் பெயர்பெற்றவர்கள்.

கிராமத்தில் இளைய தம்பதிகளுக்கே முன்மாதிரி எனப் பாராட்டப்பட்ட இவர்களின் இணை வாழ்க்கை, வயது மூப்பு காரணமாக வீரண் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததும் திடீரென சோகமாக மாறியது.

கணவனை இழந்த துயரத்தை தாங்க முடியாமல் அன்னக்கிளி, அவரது உடல் அருகே அமர்ந்து அழுகையுடன் இருந்தார். தண்ணீர் கூட அருந்தாமல் துணை நிற்கும் வாழ்க்கைத் துணையை மீண்டும் காண முடியாத வேதனை அவரை உடைத்துவிட்டது.

அடுத்த நாள் காலை, வீரண் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்க, துயரத்தில் திளந்த அன்னக்கிளி திடீரென மயங்கி விழுந்தார். பரிசோதித்தபோது, அவரும் உயிரிழந்தது உறவினர்களை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியது.

கணவன் சென்ற சில மணி நேரங்களிலேயே மனைவியும் கணவர் உடல் அருகே உயிர் நீத்த இந்த நிகழ்வு, கிராம மக்கள் அனைவரையும் கலங்க வைத்தது. “வாழ்விலும் இறப்பிலும் கூட ஒருவரை ஒருவர் பிரியவில்லை” என அப்பகுதி மக்கள் கண்கலங்கக் கூறினர்.

இறுதியாக, இந்த அன்பு தம்பதியின் உடல்கள் ஒன்றாக வைத்து நடத்தப்பட்ட இறுதி சடங்கு, அவர்களின் வாழ்நாள் முழுதும் நிலைத்த அன்பின் சாட்சியமாக அனைவரையும் நெகிழச்செய்தது.

இரு மகள்களைக் கொன்று தந்தை எடுத்த விபரீத முடிவு!!

மனைவி கோபித்துக்கொண்டு தாயார் வீட்டுக்குச் சென்றதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, எலக்ட்ரீசியன் ஒருவர் தனது இரண்டு மகள்களையும் கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆலங்குளம், முடக்கத்தான் பகுதியைச் சேர்ந்தவர் கோபிராஜ் (வயது 40). எலக்ட்ரீசியனான இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், யுவஸ்ரீ (10), கனிஷ்கா (5) என இரண்டு மகள்களும் இருந்தனர். இவர்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

சமீபத்தில் கணவன் – மனைவிக்கு இடையே சிறிய சண்டை ஏற்பட்ட நிலையில், மனவருத்தம் அடைந்த மனைவி காயத்ரி இரண்டு நாட்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு தன் தாயார் வீட்டிற்குச் சென்று விட்டார்.

மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் இருந்த கோபிராஜ், தனது மகள்களுடன் தனியாக இருந்தார். இந்த நிலையில், நேற்று இரவு நீண்ட நேரம் ஆகியும் கோபிராஜின் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருப்பதை அறிந்த அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து கூடல்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் யுவஸ்ரீ மற்றும் கனிஷ்கா இருவரும் சடலமாக கிடந்தனர். அதே அறையில் கோபிராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

மூவரின் உடல்களையும் கைப்பற்றி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மன உளைச்சலில் இருந்த கோபிராஜ், தனது இரண்டு மகள்களையும் ஒயரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அதன் பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடும்பத் தகராறின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி 2 வருடங்களாகியும் குழந்தை இல்லை என அவமதித்த உறவுகள் : இளம்பெண் விபரீத முடிவு!!

தூத்துக்குடி சகாயபுரத்தை சேர்ந்த ஜெமீலா, 10 ஆண்டுகள் காதலித்து 2023 செப்டம்பரில் பெனோவை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு கருக்கலைப்பு நடந்ததையும்,

குழந்தை பிறக்காததையும் காரணம் காட்டி கணவன் வீட்டில் இடையறாத அவமதிப்பு, குற்றச்சாட்டுகள், ஒதுக்கல் ஆகியவற்றை எதிர்கொண்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

கணவர் பெனோ ஆன்லைன் ரம்மியில் இழந்த பணத்தைக் கட்ட ஜெமீலாவின் நகைகள் அடகு வைக்கப்பட்டதும், வேலைக்கு செல்லாமல் இருந்ததும் தகராறு அதிகரித்தது.

மேலும், அவர்கள் வசித்த வீட்டை பெனோவின் தந்தை மற்றொரு மகளுக்கு எழுதித்தந்ததால், வீட்டை காலி செய்யும்படி ஜெமீலாவிடம் வற்புறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவரின் ஆலோசனைப்படி சில நாட்கள் தாய் வீட்டில் தங்கி வந்த ஜெமீலா, கணவன்–குடும்பத்தினரின் தொடர்ந்த மன உளைச்சலைத் தாங்க முடியாமல் அதிகாலை தனது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார்.

சமையலறையில் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், “பெனோவுக்கு நான் முக்கியம் அல்ல… அவர் சகோதரிகள் தான் முதலில். அவர்களிடம் திரும்பப் போனாலும் நிம்மதி கிடையாது…” என்ற வரிகள் அனைவரையும் உருக்கின.

மேலும், தன்னை மன்னித்துவிடுமாறு தாயிடம் கேட்டு, தானும் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்க இயலாத சூழலை அழுகையுடன் வெளிப்படுத்தியிருந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஜெமீலாவின் தாய் அளித்த புகாரின் பேரில்,

கணவர் பெனோ, மாமனார், மாமியார், சகோதரி, மச்சான் உள்ளிட்டோர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. காதலித்து மணந்த இரண்டாண்டுகளுக்குள் இளம்பெண் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டது தூத்துக்குடி முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.