தொட்டிலில் விளையாடிய போது கழுத்தில் சேலை இறுக்கி 8ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!!

சேலையில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த போது, கழுத்தில் சேலை இறுக்கி 8ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த கோவர்த்தனகிரி, காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி மீனா. இவர்களுக்கு 13 வயதில் 8ம் வகுப்பு படித்து வரும் ஹரிஹரன் எனும் மகன் இருந்தார்.

சமீபத்தில் மீனாவின் உறவினரான ஆந்திராவைச் சேர்ந்த நந்தினி என்பவர் பிரசவத்திற்காக சதீஷ் வீட்டில் தங்கியிருந்தார். அந்த குழந்தைக்காக வீட்டின் மாடியில் உள்ள படுக்கை அறையில்,

சேலையைக் கொண்டு தொட்டில் ஒன்று கட்டப்பட்டிருந்தது. நந்தினி சொந்த ஊருக்குச் சென்ற பிறகும், அந்தத் தொட்டிலைக் கழட்டாமல் இருந்தனர். ஹரிஹரன் அந்தத் தொட்டிலில் விளையாடுவது வழக்கம்.

இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை, ஹரிஹரனை பள்ளியில் இருந்து ஆட்டோவில் அழைத்து வந்து, வீட்டில் விட்டுவிட்டு தந்தை சதீஷ் சவாரிக்குச் சென்று விட்டார். தாய் மீனா மற்றும் சகோதரி பவ்யஸ்ரீ ஆகியோர் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்ததால், ஹரிஹரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தான்.

வழக்கம் போல், ஹரிஹரன் மாடியில் உள்ள சேலையால் கட்டிய தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தான். விளையாட்டின் போது, எதிர்பாராத விதமாகத் தொட்டில் முறுக்கிக் கொண்டு ஹரிஹரனின் கழுத்தை இறுக்கியது.

இதில் ஹரிஹரனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கித் தொங்கியுள்ளார். வீட்டிற்குத் திரும்பி வந்த தாய் மீனா, மகன் தொட்டிலில் கழுத்தை இறுக்கிய நிலையில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக ஹரிஹரனை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஹரிஹரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொட்டிலில் விளையாடிய போது ஏற்பட்ட இந்த எதிர்பாராத விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் 160 ஆண்டுகளின் பின் கண்டுபிடிக்கப்பட்ட தவளை!!

 

இலங்கையில் சுமார் 160 ஆண்டுகளாக அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இனம் சிவனொளிபாதமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

அதற்கு ஸ்டெல்லாவின் நட்சத்திர தவளை என பெயரிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் கூறினார்.

இன்றிரவு வரை பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள செம்மஞ்சள் எச்சரிக்கை!!

நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கங்களுக்கான செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (22) பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட எச்சரிக்கை இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேற்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைக்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

24ஆம் திகதி முதல் புதிய நடைமுறை : வங்கி அட்டை வைத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி!!

இலங்கையில் பேருந்து கட்டணங்களை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் புதிய நடைமுறை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வாய்ப்பு நாளை மறுதினம் (24.11.2025) முதல் பயணிகளுக்கு கிடைக்கவுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழிநுட்ப வழிகாட்டுதலின் கீழ், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் குறித்த திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

இதன்படி குறித்த திட்டமானது மாக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து மையத்தில் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தகவலின்படி, இந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் சுமார் 20 வழித்தடங்கள் உள்ளடக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் 3 முக்கிய மாகாணங்களுக்கு இடையேயான வழித்தடங்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது.

காலி, மாத்தறை மற்றும் பதுளை நோக்கிச் செல்லும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் இந்த டிஜிட்டல் கட்டண முறையை அனுபவிக்கும் முதல் குழுவினராக இருப்பார்கள்.

இந்தத் திட்டத்திற்காக, ஐந்து முன்னணி அரச மற்றும் தனியார் வங்கிகள் ஏற்கனவே தமது ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் பரீட்சை மண்டபத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சி செயல்!!

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவன் ஒருவன் பாம்பு தீண்டிய நிலையில் மருத்துவ கண்காணிப்பில் பரீட்சை எழுதிய பின்னர் மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில் நேற்றையதினம்(21) இராசயனவியல் பரீட்சை இடம்பெற்றது. பரீட்சைக்கு சென்ற துஸ்யந்தன் சாத்வீகன் என்ற மாணவன் பாடசாலைக்குள் சென்ற போது பாம்பு தீண்டியதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் மாணவன் அதனைப் பொருட்படுத்தாது பரீட்சை மண்டபத்தில் இருந்த போது குருதிப் பெருக்கு ஏற்பட்ட நிலையில் பரீட்சை மேற்பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக நோயாளர் காவுவண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவசர சிகிச்சையின் பின்னர் நோயாளர் காவுவண்டியில் மீண்டும் பாடசாலை கொண்டு செல்லப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் பரீட்சை எழுதியுள்ளார்.

இன்று சனிக்கிழமை (22) இடம்பெறும் பரீட்சைக்கும் அவர் நோயாளர் காவுவண்டி மூலம் பரீட்சை நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுவார் என தெரிவிக்கப்பட்டது.

யாழில் காய்ச்சல் ஏற்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

யாழில் வயிற்றுவலியுடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று (21.11.2025) காலை இடம்பெற்றுள்ளது.

கைதடி மத்தி, கைதடி பகுதியைச் சேர்ந்த சுந்தரம் விக்கினேஸ்வரன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு கடந்த 18ஆம் திகதி வயிறு வீக்கத்துடன் வயிற்று வலியும், காய்ச்சலும் ஏற்பட்டது.

இந்நிலையில் 19ஆம் திகதி அதிகாலை தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.00 மணியளவில் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் நேற்றையதினம் (21.11.2025) உயிரிழந்துள்ளார். மார்ட்டின் வீதி, யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாக டொரிங்கடன் மாலினி யோகராசா (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், இவரது குடும்பம் இத்தாலியில் நிரந்தரமாக வசித்து வருகின்றது.

இந்நிலையில் இவர் இடையிடையே யாழ்ப்பாணம் வந்து செல்வது வழமை. அந்தவகையில் கடந்த 20ஆம் திகதி காலை மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் சிறிது நேரத்தின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கடுகண்ணாவ மண்சரிவு : பெண் ஒருவர் உயிருடன் மீட்பு!!

கடுகண்ணாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் இருந்து பெண்ணொருவர்,உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏலவே இந்த விபத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். முன்னதாக, பாறைகள் சரிந்து வீழ்ந்ததில் ஒரு வீடு மற்றும் பல வியாபார ஸ்தலங்கள் பாதிப்படைந்தன.

இந்த நிலையில், மேலும் நால்வர் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாக கேகாலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 

19 வயது இளைஞனின் உயிரை பறித்த கார்!!

சிகிரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை – ஹபரண வீதியில் திகம்பதஹ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹபரண நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், அதே திசையில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதேநேரம், பின்னால் வந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் தூக்கி வீசப்பட்டு எதிர் திசையில் வந்த கார் குறித்த நபர் மீது மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் இருவரும் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உட்பட மூவர் பலத்த காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் திகம்பதஹ பகுதியை சேர்ந்த 19 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. விபத்துடன் தொடர்புடைய, காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் சிறுவனுக்கு நேர்ந்த பெரும் துயரம் : கடலட்டைப் பண்ணையில் சம்பவம்!!

யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பரப்பில் இன்று (22) காலை சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் குருநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் நேற்று இரவு, அப்பகுதியில் உள்ள கடலட்டைப் பண்ணையைப் பார்வையிடுவதற்காக கடலுக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இன்று காலை சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் படகிலிருந்து தவறி கடலில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

புகையிரதத்தில் நூடுல்ஸ் சமைத்த பெண் : வீடியோ வைரலானதால் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை!!

ரயில் பயணத்தின்போது எலெக்ட்ரிக் கெட்டில் போன்ற மின் சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற ரயில்வே விதியை மீறி, ஏ.சி. பெட்டியில் பயணித்த பெண் ஒருவர் நூடுல்ஸ் சமைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே நிர்வாகம் தற்போது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ காட்சி வெளியாகிப் பரவலாகப் பகிரப்பட்டது. அந்த வீடியோவில், நடுத்தர வயதுள்ள ஒரு பெண், ரயிலில் ஏ.சி. வகுப்பு பெட்டியில் அமர்ந்திருந்தார்.

அவர், இருக்கைக்கு அருகே உள்ள செல்போன் சார்ஜிங் பாயிண்ட்டில் எலெக்ட்ரிக் கெட்டில் சாதனத்தை இணைத்து, நூடுல்ஸ் சமைக்கத் தொடங்கினார்.

இதனை உடனிருந்த சக பயணி ஒருவர் ரகசியமாக வீடியோ பதிவு செய்துள்ளார். வீடியோவில் அந்தப் பெண் மராத்தி மொழியில், “இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தி நான் இதுவரை 10 பேருக்கு டீ போட்டுக் கொடுத்திருக்கிறேன்” என்று பெருமையாகப் பேசுகிறார்.

ரயில்வே விதிகளை மீறி, பொதுப் பயணிகளுக்கு மத்தியில் பெண் சமையல் செய்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சமூக வலைதளங்களில் பலரும் அந்தப் பெண் பயணியின் செயலுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதை அடுத்து, மத்திய ரயில்வே நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.

மத்திய ரயில்வே அதிகாரி ஒருவர் இது குறித்துத் தெரிவிக்கும் போது, “இந்த வீடியோவில் இருக்கும் பெண் பயணியைக் கண்டறியும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ரயில்வே சட்டத்தின் பிரிவு 147(1)-இன் கீழ், பொதுச் சொத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக அந்தப் பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.

மேலும், மத்திய ரயில்வே நிர்வாகம் தங்களுடைய ‘எக்ஸ்’ (X) தளத்தில் ஒரு முக்கியப் பதிவை வெளியிட்டுள்ளது. அதில், “ரயில் பயணத்தின் போது எலெக்ட்ரிக் கெட்டில் போன்ற அதிக மின்சாரம் பயன்படுத்தும் சாதனங்களைப் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய செயல்கள், தீ விபத்து உள்ளிட்ட பெரும் ஆபத்துகளை விளைவிக்க வாய்ப்புள்ளது. எனவே, பயணிகள் அனைவரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு மீண்டும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” எனக் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் ரயில்வே சட்டதிட்டங்களைப் பின்பற்றி, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே நிர்வாகத்தின் வேண்டுகோளாக உள்ளது.

விபத்தில் சிக்கி தான் யார் என்பதையே மறந்த நபர்: மீண்டும் விபத்தில் சிக்கியபோது நடந்த அதிசயம்!!

இந்தியாவின் ஹிமாச்சலைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுவன் விபத்தொன்றில் சிக்கி தான் யார் என்பதையே மறந்துபோனான்.

இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் அந்த நபர் ஒரு விபத்தில் சிக்கி தலையில் அடிபட, 45 ஆண்டுகளுக்குப் பின் தான் யார் என்பது அவருக்கு நினைவுக்கு வந்துள்ளது.

ஹிமாச்சலிலுள்ள Naddi என்னும் கிராமத்தைச் சேர்ந்த ரிக்கி என்னும் 16 வயது சிறுவன், 1980ஆம் ஆண்டு, ஹரியானாவிலுள்ள அம்பாலா என்னுமிடத்துக்கு வேலைக்குச் சென்றிருந்தபோது ஒரு பெரிய விபத்தில் சிக்கினான்.

தலையில் பலத்த காயம் ஏற்பட, தான் யார் என்பதே அவனுக்கு மறந்துபோனது.

பின்னர் மும்பைக்குச் சென்று அங்கு ஒரு கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தான் ரிக்கி. அவனுக்கு அவனது பெயர் நினைவில் இல்லாததால், அவனது நண்பர்கள் அவனுக்கு ரவி சௌத்ரி என பெயர் வைத்துள்ளனர்.

தற்போது ரிக்கிக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் மீண்டும் ஒரு விபத்தில் சிக்கியுள்ளார் ரிக்கி.

மீண்டும் ரிக்கிக்கு தலையில் அடிபட்டுள்ளது. ஆனால், அந்த விபத்துக்குப் பிறகு, Sataun என்னும் ஒரு கிராமமும், அங்குள்ள தெருக்களும், ஒரு வீடும், அங்குள்ள மாமரமும் ரிக்கிக்கு கனவில் வரத் துவங்கியுள்ளன.

பின்னர்தான் ரிக்கி அவை கனவல்ல, தனது பழைய நினைவுகள் என்பதை உணர்ந்துகொண்டிருக்கிறார்.

ஆக, Sataun என்னும் கிராமம் எங்குள்ளது என தான் வேலை செய்யும் கல்லூரி மாணவர்கள் உதவியுடன் தேடத் துவங்கியுள்ளார் ரிக்கி.

அப்போது, கூகுள் மேப்பில், ஹிமாச்சலில் Sataun என்னும் ஒரு கிராமம் இருப்பது தெரியவரவே, அங்குள்ள ருத்ர பிரகாஷ் என்பவரை தொடர்புகொண்டு விசாரித்துள்ளார் ரிக்கி.

அப்போது, ரிக்கி 1980ஆம் ஆண்டு காணாமல் போனது குறித்து அறிந்த MK சௌபே என்பவருக்கு ரிக்கி குறித்த செய்தி தெரியவர, அவரது உதவியுடன் தன் கிராமத்தை வந்தடைந்துள்ளார் ரிக்கி.

ரிக்கியை மேளதாளத்துடன் அவரது கிராமத்து மக்கள் வரவேற்க, தன் சகோதரிகளான துர்கா, ராம், சந்தர் மோகன், சந்திரா மணி, கௌசல்யா தேவி, கலா தேவி மற்றும் சுமித்ரா தேவி ஆகியோரை சந்தித்துள்ளார் ரிக்கி.

45 ஆண்டுகளுக்கு முன் கானாமல் போன தங்கள் சகோதரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கூட தெரியாமல் வாழ்ந்துவந்த நிலையில், அவர் உயிருடன் இருக்கிறார், அவர் தன் குடும்பத்துடன் நன்றாக இருக்கிறார் என்பது தெரியவரவே, ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார்கள் அவரது சகோதரிகள்.

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண்சரிவு : பலி எண்ணிக்கை அதிகரிப்பு!!

கடுகண்ணாவ பகுதியில் இன்று காலை மண்மேடு சரிந்து வீழ்ந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் இருந்து ஆணொருவர் மீட்கப்பட்டு மருத்துவனைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

முன்னதாக குறித்த சம்பவத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்தநிலையில், பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

கண்டியின் பஹல கடுகண்ணாவ அருகே உள்ள ஹிங்குல கணேதென்ன பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இடிபாடுகளுக்குள் சிக்கிய மற்றொரு பெண்ணை மீட்புக் குழுக்கள் தற்போது மீட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

பாதுகாப்புப் படையினரும் உள்ளூர்வாசிகளும் ஏற்கனவே அந்த இடத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

இந்த அனர்த்தத்தில், அந்த விற்பனை நிலையத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடுகண்ணாவை நிலச்சரிவில் சுமார் 5 பேர் உள்ளே சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதலாம் இணைப்பு

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக, அந்த வீதி ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, கனேதென்ன பிரதேசத்தில் மலையிலிருந்து பாறைகள் வீழ்ந்துள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட தகவல்கள்

தற்போது நிலவும் ஆபத்தான சூழலைக் கருத்தில் கொண்டு, இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், இயன்றவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் விற்பனை நிலையத்தில் இருந்த சிலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், வீதியின் வாகன போக்குவரத்து ஒரு வழிப்பாதைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது நிலவும் ஆபத்தான சூழலைக் கருத்தில் கொண்டு, இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், இயன்றவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

 

இஸ்ரேலில் மற்றுமொரு இலங்கையர் உயிரிழப்பு!!

இஸ்ரேலில் கட்டுமானத் தொழிலாளியாகப் பணிபுரிந்த மற்றொரு இலங்கையர் உயிரிழந்துள்ளார்.

குருநாகல், கல்கட்டுயாய, கிரிந்தாவ பகுதியைச் சேர்ந்த 33 வயதான சானக எரந்தா என்பவர் இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அதேவேளை கடந்த சில தினங்களின் முன் இஸ்ரேலில் பணிபுரிந்த இலங்கையர் ஒருவர் சூடான் நாட்டவரால் குத்திக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

யாழில் நான்கு பிள்ளைகளின் தந்தை அடித்து கொலை!!

யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை கள்ளுத்தவறணையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை புன்னாலை கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறனை ஒன்றில் கள்ளு அருந்துவதற்கு சென்ற நிலையில் இளைஞர்கள் இருவர் குறித்த குடும்பஸ்தரை தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயமடைந்த குடும்பஸ்தர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 56 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!!

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

அதன்படி, வெள்ளிக்கிழமை இன்று (21) காலை கொழும்பு, செட்டியார் தெரு தங்கச்சந்தையில் ஒரு பவுண் “22 கரட்” தங்கத்தின் விலை ரூ.303,000 ஆக குறைந்துள்ளது.

இதற்கமைய, ஒரு பவுண் “24 கரட்” தங்கத்தின் விலை ரூ.330,000 ஆக குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்க விலை வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளதுடன் இன்றைய (21) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,259,681 ரூபாவாக காணப்படுகின்றது.

இந்த அதிரடி உயர்வுக்கு பல உலகளாவிய காரணங்கள் அடிப்படையாக அமைந்துள்ளதுடன், அமெரிக்காவில் ஏற்பட்ட அரசு முடக்கம், டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தகப் போர், புவிசார் அரசியல் நெருக்கடிகள் உள்ளிட்டவை தங்க விலை மதற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.