10 வருடங்களாக தாயை தேடி அலையும் பெண்.. 44 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் தான் எல்லாத்துக்கும் காரணம்!!

ஸ்விட்சர்லாந்தில்..

ஸ்விட்சர்லாந்தில் வாழ்ந்து வரும் பெண் ஒருவர் தனது தாயைத் தேடி இந்தியாவில் அலையும் விஷயமும் இதற்கு பின்னால் உள்ள காரணமும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் பீனா முல்லர். இவருக்கு தற்போது 44 வயதாகிறது. இதனிடையே, கடந்த 1978 ஆம் ஆண்டு, மும்பையில் பிறந்த பீனாவை அனாதை இல்லம் ஒன்றில் அவரது தாய் விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதற்கான காரணம் பற்றி அனாதை இல்லத்தில் கேட்ட போது குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தையை வளர்க்க முடியாமல் அங்கே விட்டு செல்வதாகவும் பீனாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர், குழந்தையாக இருந்த பீனாவை அவரது தாயார் பார்க்க வரவேயில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் அந்த ஆசிரமத்தில் உள்ளவர்கள் அவருக்கு பீனா என பெயரிட்டு வளர்த்தும் வந்துள்ளனர்.

தொடர்ந்து, பீனா முல்லருக்கு ஒரு வயது நெருங்கும் வேளையில், ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த குழந்தையில்லா தம்பதியினர் தத்தெடுத்து தங்களின் நாட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதன் பின்னர், பீனாவை சிறப்பாக வளர்த்து வந்த தம்பதி அவரை நல்ல முறையில் பார்த்துக் கொண்டனர். தனது பள்ளிப் படிப்பு முடிக்கும் வரை தனது பிறப்பு குறித்து எதுவும் தெரியாமல் பீனா வளர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர் தான் தனது பிறப்பு குறித்து பீனாவுக்கும் தெரிய வந்துள்ளது.

இது பற்றி அவரும் வளர்ப்பு பெற்றோரிடம் கேட்க, தான் இந்தியாவின் மும்பையில் பிறந்த ஒரு குழந்தை என்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, தனது நிஜ தாயை பார்க்க வேண்டும் என்றும் ஏங்கி உள்ளார் பீனா. இதற்கு மத்தியில், பீனாவுக்கு திருமணமான நிலையில், இரண்டு குழந்தைகளும் பிறந்துள்ளனர்.

தொடர்ந்து, கடந்த 2012 ஆம் ஆண்டு தனது தாயை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய பீனா, மும்பைக்கு வந்துள்ளார். தனது தாய் பற்றி தத்து கொடுக்கப்பட்ட ஆசிரமத்தில் விசாரித்த போது, அவரது தாய் பெயர் உள்ளிட்ட ஒரு சில விவரங்களை மட்டும் கொடுத்துள்ளனர். இந்த தகவல்களை வைத்துக் கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக மும்பையில் தனது தாயாரை தேடி வருகிறார் பீனா.

ஆனால், இதுவரை தாயார் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி பேசும் பீனா, கடந்த 10 வருடங்களாக மும்பை வருவதும் போவதுமாக இருப்பதாகவும் இங்கே தங்கி இருந்து தனது தாயை தேடுவதுமாக ஓடிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு முறையாவது தனது தாயை பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இங்குள்ள போலீஸ் மற்றும் வழக்கறிஞர்கள் உதவியுடன் தனது தாயை பீனா தொடர்ந்து தேடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

கூடா நட்பு கேடாய் முடியும்… நண்பர்களுடன் மது அருந்திய இளைஞனுக்கு நடந்த பரிதாபம்!!

அரியலூரில்..

அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே மதுஅருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞரை பேட்டால் அடித்துக்கொன்ற நண்பரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் அருகே உள்ள பொய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி. இவரது மகன் விக்னேஷ்(25).

இவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக முயற்சித்து வந்தார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு வீட்டில் இருந்த விக்னேஷுக்கு, தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள் மது அருந்து அழைத்துள்ளனர்.

இதனை அடுத்து, வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற விக்னேஷ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

இந்த நிலையில், மல்லூர் அருகே காட்டு பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் விக்னேஷ் சடலமாகி கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்ப்பழூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் விக்னேஷின் நண்பர்களான, அதே பகுதியை சேர்ந்த தர்மராஜ் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மெலிந்த தேகமும், திக்குவாயும் கொண்ட தர்மராஜை, விக்னேஷ் அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்துள்ளார்.

மேலும், விராட் கோலியின் தீவிர ரசிகரான விக்னேஷ், மது அருந்தியபோது, தர்மராஜுக்கு பிடித்த ரோகித் சர்மா குறித்து அவதுறாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ், தான் வைத்திருந்த பேட்டால் விக்னேஷின் தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார், தர்மராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வட்ஸ்அப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

வட்ஸ்அப்..

வாட்ஸ்அப் பயனர்களுக்கு இணைய பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை தகவலொன்றினை விடுத்துள்ளது.

இதற்கமைய, Clone Whatsapp போன்ற செயலிகளால் பயனர்களின் தரவுகள் திருடப்படுவதாக ESET என்ற இணைய பாதுகாப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பற்ற செயலிகளை உபயோகிப்பதால் பயனர்களின் கைபேசி பாதிக்கப்படுவதாகவும், அனுமதியின்றி பயனர்களின் கைபேசி உரையாடல்கள், புகைப்படங்கள், காணொளிகள் போன்றவை திருடப்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றுமுதல் எரிபொருள் விலைகள் குறைப்பு : வெளியான அதிரடி அறிவிப்பு!!

எரிபொருள் விலை குறைப்பு..

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் இன்றைய தினம் (17.10.2022) அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இந்த விடயத்தை டுவிட்டர் பதிவில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

அதன்படி ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டரொன்றின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 370 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 415 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பானது இன்று இரவு 9 மணி முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஏனைய எரிபொருட்களின் விலைகள் அதேவகையில் பேணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இட்லி ATM மெஷின் அறிமுகம் : இனி நள்ளிரவிலும் இட்லி கிடைக்கும்!!

பெங்களுருவில்..

24 மணி நேரமும் இட்லி கிடைக்கும் வகையில் பெங்களுருவில் இட்லி ஏ.டி.எம் மெஷின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏ.டி.எம் மெஷின் அறிமுகப்படுத்தபின்னர் வாங்கி தொடர்பாக செயல்முறைகளில் அது பெரும் புரட்சி ஏற்படுத்தியது.

தற்போது gpay, phonepe போன்ற செயலிகள் வந்த பின்னர் கூட ஏ.டி.எம் மெஷினின் தேவை இன்னும் குறையவில்லை. இந்த நிலையில் இந்தியாவின் ஐ.டி துறையின் தலைநகரம் என அழைக்கப்படும் பெங்களுருவில் எப்போதுவேண்டுமானாலும் இட்லி கொடுக்கும் ஏ.டி.எம் மெஷின் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது வரை பிரபலமான உணவாக இட்லி இருக்கும் நிலையில், எந்த நேரத்திலும் அதனை பெரும் வகையில் இந்த இட்லி ஏ.டி.எம் மெஷின் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இட்லி ஏ.டி.எம் மெஷினில் பொருத்தப்பட்டுள்ள QR Code- ஐ ஸ்கேன் செய்து அதில் நமக்கு தேவையான இட்லி மற்றும் சட்னியை தேர்வு செய்தால் 2 நிமிடத்தில் சூடான இட்லி சாம்பார் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இட்லி ஏ.டி.எம் மெஷின் 12 நிமிடத்தில் 72 இட்லிகளை சுட்டுத் தருமாறு உருவாக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த ப்ரெஷப் ரோபோட்டிக்ஸ் என்ற நிறுவனம் எந்த நேரத்திலும் இட்லி கிடைக்கும் வகையில் இந்த இட்லி ஏ.டி.எம் மெஷினை உருவாக்கியுள்ளது. பெங்களூரில் இரண்டு இடங்களில் வைக்கப்பட்டுள்ள இட்லி ஏ.டி.எம் மெஷினுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வரவேற்பு நன்றாக இருப்பதால் இந்த சேவையை பெங்களுருவில் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்ள்ளது. இந்த நிலையில், இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை : சிக்கிய குறிப்பு!!

வைஷாலி..

கென்யாவைச் சேர்ந்த மருத்துவர் அபிநந்தனுகும் வைஷாலிக்கு கடந்த ஆண்டு திருமண நிச்சயம் நடந்துள்ளது. படிப்பை முடித்ததும் தொகுப்பாளினியாக பணியாற்றிய வைஷாலி.

அதன் பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். பிரபல இந்தி நடிகை வைஷாலி தக்கர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் வைஷாலி தக்கர். 29 வயதான இவர் கடந்த ஒரு வருடமாக இந்தூரில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வைஷாலி தனது குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அவரது வீட்டிற்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வைஷாலியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட செல்போனில் தற்கொலை குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் இந்த தற்கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!!

கவனயீர்ப்பு போராட்டம்..

வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலை கண்டித்து பிரதேச செயலக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையுடன் கவனயீர்ப்பு போராட்டமொன்றையும் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா பிரதேச செயலக வாயிலின் முன்பாக (17.10.2022) காலை 11.30 மணி தொடக்கம் 12.30 மணி வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கந்தபுரம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை (12.10.2022) காலை இடம்பெற்ற சமூர்த்தி கொடுப்பனவு தொடர்பான கூட்டத்தின் போது,

அங்கு சென்ற பொதுமகனொருவர் தனது சமூர்த்தி முத்திரை வெட்டப்பட்டமை தொடர்பில் குறித்த பிரிவு சமூர்த்தி உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையுடன் இறுதியில் சமூர்த்தி உத்தியாகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவத்தில் காயமடைந்த கந்தபுரம் பிரிவு சமூர்த்தி உத்தியோகத்தர் சிவஞானசிங்கம் கபிலன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதல் மேற்கொண்ட பொதுமகனை வவுனியா பண்டாரிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சமூர்த்தி உத்தியோகத்தர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு நீதியான தீர்வு கோரியும் வவுனியா பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கம் மற்றும் பிரதேச செயலகத்தினர் ஆகியோரின் தலைமையில்,

பிரதேச செயலக வாயிலின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையுடன் காலை 11.30 மணி தொடக்கம் 12.30 மணி வரை பணிப்புறக்கணிப்பிலும் பிரதேச செயலக ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டடிருந்தவர்கள் எமது உத்தியோகத்தர்களை நேர்மையாகவும் சரியாகவும் கடமையாற்றுவதற்கு இடையூறு ஏற்படுத்தாதீர்கள், அரச அதிகாரிகளின் மீதான தாக்குதலை வன்மையான கண்டிக்கின்றோம்,

அரசாங்க சுற்றுநிருபத்திற்கினங்க பணிபுரிவதற்கு இடமளியுங்கள் போன்ற வாசகங்கள் தாங்கிய பாதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியாவில் குளவி கொட்டுக்கு இலக்காகி : 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதி!!

குளவி கொட்டு..

வவுனியா போகஸ்வெவ மகா வித்தியாலய பாடசாலையில் இன்று (17.10.2022) காலை 8 மணியளவில் குளவி கொட்டு தாக்குதலுக்குள்ளாகி 32 மாணவர்களும் 8 ஆசிரியர்களும் வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்.

வவுனியா தெற்கு சிங்கள கோட்ட பிரிவுக்குட்பட்ட போகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் காலைப் பிராத்தனையின் போது காற்றின் வேகம் காரணமாக மரம் ஒன்றில் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் மீது தாக்கியுள்ளது.

இதனால் பாதிப்படைந்தவர்களில் 12மாணவர்கள் பதவியா பிரதேச வைத்தியசாலையிலும், 8 ஆசிரியர்கள் மற்றும் 12 மாணவர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும், 03 மாணவர்கள் மடுகந்த பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீண்டகாலமாக வன இலாகா மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்தும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை என அப்பிரதேசத்திற்கான பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்திருந்தார்.

வவுனியா மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!!

கலந்துரையாடல்..

வவுனியா மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்புக்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (15.10.2022) நகரசபை மண்டபத்தில் திறந்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

“வளம் மீட்டு நலம் பெறுவோம்” எனும் தொனிப்பொருளில் வவுனியா மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் தடைகளை களைந்து வவுனியா மாவட்டத்தில் விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கோடு திறந்த கலந்துரையாடலாக இடம்பெற்றிருந்தது.

வவுனியா மாவட்ட கமக்கார ஒழுங்கமைப்பு க்களின் சம்மேளனத்தின் தலைவர் செ.சிறிதரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட விவசாய நிலங்களை விடுவித்தல்,

தானிய உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் வவுனியா மாவட்டத்தின் தானிய உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், நீண்ட காலமாக ஆவணங்கள் எதுவுமற்ற நிலையில் காணப்படும் விவசாய காணிகளுக்கான ஆவணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்றவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

குறித்த கலந்துரையாடலில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷார்ட் பதியுதீன், கு.திலீபன், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன்,

நகரசபை உபதவிசாளர் குமாரசாமி, வவுனியா செட்டிகுளம் தவிசாளர் சு.ஜெகதீஸ்வரன், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தக சங்கத்தினர், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

எனது உடலை கணவரிடம் ஒப்படைக்க வேண்டாம் : மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்த தாய்!!

திருச்சியில்..

திருச்சி மாவட்டம் பாலகுறிச்சி அருகே உள்ள பெத்தக்கோன் பட்டியை சேர்ந்தவர் ஜெயபாரதி (வயது 36). இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வீரானந்தம் (42) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 8 வயதில் ஹரி என்ற மகன் உள்ளார். வீரானந்தம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இதனால் ஜெயபாரதி தனது மகனுடன் பொன்னமராவதியில் உள்ள வீட்டு வசதி வாரியக்குடியிருப்பு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது வீடு கடந்த சில தினங்களாக பூட்டியே கிடந்துள்ளது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னமராவதி இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தாயும், மகனும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்களின் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவர் வீரானந்தம், வீட்டு செலவிற்காக ஜெயபாரதிக்கு பணம் அனுப்பாமல் இருந்துள்ளதாக தெரிகிறது.

இதனால் மன விரக்தியில் இருந்த ஜெயபாரதி, மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அதன் பின்னர் போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ஜெயபாரதி எழுதி வைத்த உருக்கமான கடிதத்தை கைப்பற்றினர். அதில், ”எங்கள் முடிவிற்கு யாரும் காரணமில்லை. என் குடும்ப சூழ்நிலை.

எனது உடல்நிலை, எனது மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை தேடிக்கொண்டேன். எனது உடலை எனது தகப்பனாரிடமோ, கணவரிடமோ ஒப்படைக்க வேண்டாம். செத்த பிறகு கூட நான் யாருக்கும் செலவு வைக்க விரும்பவில்லை.

8 வருடமாக எனது கணவர் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை. என் மகனுக்கும் அவர் தந்தையாகவோ, எனக்கு கணவராகவோ அவர் இருந்ததில்லை. என்னுடைய மகனிடம் நீ போய் உங்கப்பாவிடம் இரு என சொன்னேன். ஆனால் அவன் கேட்காமல் என் கூடவே விஷமருந்தி விட்டார்.

இந்த வீட்டில் இருந்து ஒரு குண்டூசிகூட எனது கணவருக்கோ, தகப்பனார் வீட்டிற்கோ போகக்கூடாது” என எழுதி வைத்துளார். தாயும், மகனும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரும்புள்ளிகளை வீடியோ எடுத்து மிரட்டி கோடீஸ்வரியான ஏழைப்பெண் : அரண்மனையில் சொகுசு வாழ்க்கை!!

ஒடிசாவில்..

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பெரும்புள்ளிகளை வளைத்து போட்டு அவர்களை மிரட்டி பல கோடிகளுக்கு அதிபதியான பெண் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒடிசாவின் கலஹண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அர்ச்சனா நாக், இப்போது சொகுசு கார்கள், நான்கு உயர் இன நாய்கள் மற்றும் ஒரு வெள்ளை குதிரையுடன் ஒரு ஆடம்பரமான அரண்மனை வீட்டை வைத்திருக்கிறார்.

ஒடிசா திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஒரு பெண் அளித்த புகாரின்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து, அர்ச்சனா குறித்து விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

ஆரம்பகாலத்தில் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை பார்த்த அர்ச்சனா, பின்னர் பியூட்டி பார்லரில் சேர்ந்ததாகவும் அங்கு ஜெகபந்து சந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்ததாகவும், பியூட்டி பார்லரில் வேலைபார்த்தபோது பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அர்ச்சனாவின் கணவர் ஜெகபந்து, பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்யும் ஷோரூம் நடத்தி வந்தார். இதனால் அரசியல்வாதிகள், பில்டர்கள் மற்றும் தொழிலதிபர்கள் போன்ற பணம் படைத்தவர்களை அவர் நன்கு அறிந்திருந்தார்.

இதன்மூலம் பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களுடன் அர்ச்சனா நட்பாக பழகியதுடன், அவர்களுக்கு பெண்களை சப்ளை செய்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை எடுத்து, பணம் கேட்டு மிரட்டியதாக பொலிசார் தெரிவித்தனர்.

அவர் 18 எம்எல்ஏ.க்களை வளைத்து ஆபாச படம் எடுத்து மிரட்டி 4 ஆண்டில் ரூ.30 கோடிக்கு அதிபதியாகியிருக்கிறார். அதாவது 18 எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட 25 அரசியல் தலைவர்கள் அர்ச்சனாவின் நெட்வொர்க்கில் இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் பிஜேடி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும், பாஜக புவனேஸ்வர் பிரிவுத் தலைவர் பாபு சிங் கூறியிருக்கிறார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை பிஜேடி மறுத்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அர்ச்சனாவிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் விரைவில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த பி.டெக் மாணவியின் டீக்கடை!!

பீகாரில்..

பீகாரை சேர்ந்த பொறியியல் மாணவி ஒருவர் சொந்தமாக டீ கடை ஒன்றை துவங்கியுள்ளார். அந்த கடையின் பெயர் தான் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மாணவர்களிடையே பெரும் தொழிலதிபர்களாக வேண்டும் என்ற கனவு இருந்துவருகிறது.

சிறிய ஐடியாவை மூலதனமாக கொண்டு, தொழிலை துவங்கி அதில், மிகப்பெரும் வெற்றியடைந்த பல நபர்களை சமகாலத்தில் சுட்டிக்காட்ட முடியும். இப்படி, தொழிலுக்கு ஏற்ற இடம், அது சென்றடைய வேண்டிய மக்கள் யார்? என பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு துவங்கப்படும் இத்தகைய நிறுவனங்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகளிலேயே பெரும் வளர்ச்சியை எட்டிப்பிடிக்கின்றன.

இதனாலேயே புதிய தொழில் வாய்ப்புகள் குறித்து, மாணவர்கள் அதிகளவில் ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில் பீகாரை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய டீ கடையை துவங்கியுள்ளார்.

பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் வர்த்திகா சிங். சிறுவயதில் இருந்து சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்த வர்த்திகா தற்போது ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் பிடெக் படித்து வருகிறார்.

இருப்பினும் தன்னுடைய கனவுகளை நிறைவேற்ற காத்திருக்க முடியாத வர்த்திகா தற்போது தனது சொந்த டீ கடையை துவங்கியுள்ளார். பரிதாபாத்தில் இவர் அமைத்துள்ள கடைக்கு B.Tech Chaiwali எனப் பெயர்சூட்டியுள்ளார். இதனிடையே இவருடைய கடைக்கு மக்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதனிடையே வர்த்திகா சிங் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில், “என் பெயர் வர்த்திகா சிங். நான் பீகாரை சேர்ந்தவள்.

தற்போது பரீதாபாத்தில் பிடெக் படித்துவருகிறேன். என்னுடைய நெடுநாள் கனவான தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. என்னுடைய கடைக்கு B.Tech Chaiwali எனப் பெயர் வைத்திருக்கிறேன்” என்கிறார்.

பரீதாபாத்தின் கிரீன்பீல்டு பகுதியில் வர்த்திகாவின் கடை இருக்கிறது. தினந்தோறும் மாலை 5.30 மணிமுதல் இரவு 9 மணிவரையில் கடையை நடத்திவரும் இவர் சாதாரண டீயை 10 ரூபாய்க்கும், லெமன் டீயை 20 ரூபாய்க்கும் விற்பனை செய்துவருகிறார். இவருடைய முயற்சிக்கு பலரும் பாராட்டும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

பாம்பு கடித்த சிறுவனின் சடலத்தை சுமந்து சென்ற தந்தை.. நெஞ்சை உலுக்கும் சோகம்!!

ஆந்திராவில்..

பாம்பு கடித்து உயிரிழந்த சிறுவனின் சடலத்தை ஆம்புலன்ஸ் வராததால் தந்தையே சுமந்து சென்றுள்ள சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே கீழபுத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் செஞ்சய்யா. இவருக்கு 7 வயதில் மகன் உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுவன் விளையாடிக்கொண்டிருக்கும் போது பாம்பு தீண்டியுள்ளது.

இதனால் சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த தந்தை சிறுவனை பதற்றத்துடன் உடனடியாக மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கே சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மனம் நொந்துபோன தந்தை உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தார். இருப்பினும் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை.

எனவே ஏதேனும் ஆட்டோ கிடைக்கிறதா என்று பார்க்கையில் அதுவும் கிடைக்கவில்லை என்பதால் மனமுடைந்த தந்தை, தனது மகனின் சடலத்தை தோளில் சுமந்தும், பின்னர் இருசக்கர வாகனத்தில் எடுத்தும் சென்றுள்ளார்.

இது தொடர்பான காட்சி வெளியாகி பார்ப்போர் மனதை உருக்கி வருகிறது. பாம்பு கடித்து இறந்து போன சிறுவனின் உடலை தந்தையே சுமந்து சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூப்பறிக்க சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

அரியலூரில்..

அரியலூர் மாவட்டம் கோக்குடி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் லாரன்ஸ். இவரது மகள் ஹெல்வினா சைனி. (வயது 18). இந்த நிலையில் நேற்றைய முன்தினம் பகல் நேரத்தில், தங்களுக்கு சொந்தமான கொல்லையில் பூப்பறிக்க சென்றுள்ளார் சைனி.

பிறகு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், சைனியை, அவரது தந்தை உட்பட உறவினர் அனைவரும் தேடியுள்ளனர். அப்போது அவர்களது கொல்லையின் அருகில் இருந்த ஒரு கிணற்றின் அருகே இளம்பெண்ணின் துப்பட்டா மற்றும் செருப்பு கிடந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இளம்பெண் தவறி விழுந்துவிட்டாரோ என்று எண்ணி கதறி அழுதனர்.

பின்னர் இது குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த அதிகாரிகள் நீண்ட நேரம் தேடினர். பின்னர் தொடர்ந்து நேற்றும் தேடியபோது அந்த கிணறு சுமார் 90 அடி ஆழம் வரை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று மணப்பாறையில் இருந்து நீருக்குள் மூழ்கும் கேமரா கொண்டு வரப்பட்டு கிணற்றுக்குள் விடப்பட்டது. அதைதொடர்ந்து 32 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இளம்பெண்ணின் உடலை மீட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த இளம்பெண்ணும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்ததாகவும், தற்போது அந்த பெண் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால், அந்த பெண் தவறி விழுந்தாரா ? அல்லது தற்கொலையா ? அல்லது கொலையா ? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தாயை கொன்றுவிட்டு பாட்டுக்கேட்டபடி புகைபிடித்த 14 வயது சிறுவன் : விசாரணையின்போது சிரித்துக்கொண்டே பதிலளித்ததால் அதிர்ச்சி!!

ஈரோட்டில்..

தமிழக மாவட்டம் ஈரோட்டில் பெற்ற தாயை கல்லைப் போட்டு கொன்ற சிறுவன் போதைக்கு அடிமையானதாக தெரிய வந்துள்ளது. ஈரோடு மாவட்டம் சுங்கக்காரன் பாளையத்தைச் சேர்ந்த யுவராணி என்ற பெண், அவரது 14 வயது மகன் சஞ்சயால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சரிவர படிக்காததால் விடுதியில் சேர்க்கப்பட்ட சிறுவன் சஞ்சய், தேர்வு விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால், ஒன்லைன் கேம் மற்றும் கஞ்சா போதைக்கு சஞ்சய் அடிமையானதை தாய் யுவராணி கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், இரவு தாய் தூங்கும்போது தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார். அதன் பின்னர் வீட்டில் இருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் சஞ்சய் செல்போனில் பாடல் கேட்டபடி சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அத்துடன் புகைபிடித்தபடி அவர் சென்றதை பார்த்த பொலிஸார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது எந்த பதற்றமும் இல்லாமல் சிரித்துக் கொண்டே சிறுவன் பேசியதைப் பார்த்த பொலிஸார் மிரண்டு போயினர்.

சிறுவன் போதையின் உச்சத்தில் இருந்ததால், போதை தெளிந்தவுடன் அவனிடம் விசாரணை நடத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இலங்கை தமிழ் குடும்பத்தினர் இருவர் உயிரை காவு வாங்கிய விபத்து நடந்தது எப்படி?

கனடாவில்..

கனடாவில் இலங்கை தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கிய நிலையில் காரில் அவர்கள் எவ்வாறு பயணித்தனர் என்பது தொடர்பான விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரொறன்ரோவோவின் Markham நகரில் கடந்த புதன்கிழமை ட்ரக் வண்டி ஒன்றும் கார் ஒன்றும் மோதி நடந்த விபத்தில் பதீரன் புவேந்திரன் (21) என்பவரும் அவரின் சகோதரி நெலுக்சனா புவேந்திரன் (23) என்பவரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இவர்களின் தாய் ஸ்ரீரதி சண்முகநாதன் (52) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரின் உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியதாக உறவினர் துர்கா சர்வேஸ்வரன் கூறினார். கார் மற்றும் ட்ரக் மோதியதில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Acura காரில் தான் இலங்கை தமிழ் குடும்பம் பயணித்துள்ளது. காரை பதீரன் ஓட்டியிருக்கிறார். பதீரன் அருகில் உள்ள இருக்கையில் அவர் சகோதரி நெலுக்சனா அமர்ந்திருந்தார். காரின் பின்பகுதியில் அவர்களின் தாயார் ஸ்ரீரதி உட்கார்ந்திருந்தார் என தெரியவந்துள்ளது.

அப்போது ட்ரக் வாகனத்தின் முன்பகுதி காரின் பக்கவாட்டில் மிக வேகமாக மோதியிருக்கிறது. இதில் தான் காரில் இருந்த பதீரன் புவேந்திரன் மற்றும் அவரின் சகோதரி நெலுக்சனா புவேந்திரன் ஆகியோர் உயிரிழந்திருக்கின்றனர் என தெரியவந்துள்ளது.