வவுனியாவில் உடைந்து விழுந்த உயர் அழுத்த மின்கம்பம் : மயிரிழையில் தப்பிய ஊழியர்!!

மின்கம்பம்..

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் புதிதாக நிறுவப்பட்ட உயர் அழுத்த மின்கம்பம் உடைந்து விழுந்த நிலையில், மின்கம்பத்தில் ஏறி நின்று வேலை செய்த ஊழியர் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று நேற்று (15.10) இடம்பெற்றுள்ளது.

வவுனியா, வேப்பங்குளம், 7 ஆம் ஒழுங்கையில் அதி உயர் மின்னழுத்த மின்கம்பங்கள் நிறுவும் நடவடிக்கை மின்சார சபையால் முன்னெடுக்கப்பட்டது.

மூன்று மின்கம்பங்களை புதிதாக நிறுவி அதன் ஊடாக மின் இணைப்பு வயர்களை இணைத்துக் கொண்டிருந்த போது மின்கம்பம் ஒன்று உடைந்து விழுந்துள்ளது.

மின்கம்பம் உடைந்து விழுத்த போது குறித்த கம்பத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர் உயர் அழுத்த மின் கம்பத்தின் அருகில் இருந்த உயரக் கட்டிடத்தில் குதித்து மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இதேவேளை, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த மின்கம்பம் சரியான முறையில் கம்பிகள் உள்ளீடு செய்து தரமானதாக அமைக்கப்படாமையே அது உடைந்து விழுந்தமைக்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதுடன்,

இதனால் புதிதாக நிறுவப்பட்டுள்ள உயர் அழுத்த மின்கம்பங்கள் தொடர்பில் தாம் அச்சத்துடனேயே வாழ வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் சகோதரியுடன் சேர்ந்து பிறந்தநாளில் உயிரிழந்த இலங்கை தமிழ் இளைஞன்!!

கனடாவில்..

கனடாவில் இலங்கை தமிழர்களான இரண்டு உடன்பிறப்புகள் உயிரிழந்த சம்பவத்தில் தங்களுக்கு நீதி வேண்டும் என குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர்.

ரொறன்ரோவோவின் Markham நகரில் கடந்த புதன்கிழமை ட்ரக் வண்டி ஒன்றும் கார் ஒன்றும் மோதி நடந்த விபத்தில் பதீரனா புவேந்திரன் (21) என்பவரும் சகோதரி நெலுக்சனா புவேந்திரன் (23) என்பவரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இவர்களின் தாய் ஸ்ரீரதி சண்முகநாதன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மரணம் தங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக ஸ்ரீரதியின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பதீரனா மாமா சுவின் பூபாலசிங்கம் கூறுகையில், எங்கள் குடும்பத்திற்கு தெரியும் இது எதையும் மாற்றப்போவதில்லை என்று. ஆனால், வேறு எந்த குழந்தைகளுக்கும் இது நடக்காமல் இருக்க, எங்களுக்கு நீதி வேண்டும்.

ஸ்ரீரதிக்கு நினைவு திரும்பியவுடன் தன் பிள்ளைகள் எங்கே என்று தான் எங்களிடம் கேட்பார், நான் அவளிடம், ‘இதுதான் நடந்தது’ என்று சொல்ல வேண்டும், அவர் இறுதிச் சடங்கிற்கு வர முடியுமா என்று இனி தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஸ்ரீரதி எழுந்திருப்பதற்காக நான் காத்திருக்கிறேன் என கூறினார்.

பதீரனா தனது பிறந்தநாளில் உயிரிழந்தது தான் பெருஞ்சேகம். பதீரனா மற்றும் நெலுக்சனா ஆகியோரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை பூபாலசிங்கம் செய்து வருகிறார்.

46 வயதான டிரக் ஓட்டுனருக்கு எந்தவொரு காயமும் ஏற்படாத நிலையில் சம்பவ இடத்திலேயே இருந்திருக்கிறார்.சனிக்கிழமை வரையில் சம்பவம் தொடர்பில் எந்தவொரு வழக்கும் அவர் மீது பதியப்படவில்லை.

4 குழந்தைகள் உட்பட 9 பேரை பலி கொண்ட பயங்கர விபத்து!!

விபத்து..

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசி கரே தாலுக்காவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 69 இல் இன்று அதிகாலை சுற்றுலா பயணிகள் உடன் வந்து கொண்டிருந்தது டிடி வாகனம் ஒன்று அரசு பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 4 குழந்தைகள் உள்பட 9 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூரு நகரில் இருந்து தர்மஸ்தலா கோவில் சென்று கோவில் தரிசனம் முடித்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்த போது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. டிடி வாகனத்தில் 14 பேர் இருந்த நிலையில் 9 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

மீதமுள்ள 5 பேர் பலத்த காயங்களுடன் ஹாசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக ஹாசன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 வயதுச் சிறுமிக்கு எமனான தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கோழிக்கோட்டில்..

கோழிக்கோடு அருகே தாய் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் மூன்று வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். வெள்ளிக்கிழமை காலை கொடுவள்ளி அருகே ஈங்கப்புழாவைச் சேர்ந்த நசீர் மற்றும் நெல்லம்கண்டியைச் சேர்ந்த லுப்னா பெபினி ஆகியோரின் மகள் மரியம் நசீர் (3) என்ற சிறுமி விபத்தில் சிக்கி பலியானார்.

வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது கார் மோதியது. குழந்தையின் தாய் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக சிறுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும், அங்கு சிறுமி உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு நொடியில் கொலைகாரனாக மாறிய கணவன்.. துடித்து உயிரை விட்ட மனைவி!!

தமிழகத்தில்..

கிளியனூர் அருகே கணவர் மனைவி பிரச்சினையில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவனை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குடி பழக்கம், போதை பழக்கங்கள், குடும்ப உறவில் இருந்து தடம் மாறும் பாதை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

பல ஆண்டு கால வாழ்க்கையை உணர்வும், உடலுமாக பகிர்ந்து கொண்ட துணையை ஒரு நொடி கோபத்தால் கொலை செய்துவிட்டு பல பேர் அவர்களது வாழ்க்கையையும் தொலைத்து விட்டு குடும்பத்தையும் கேள்வி குறியாக்கி விடுகின்றனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் மனைவியை குத்தி கொலை செய்துள்ள கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்ட வானூர் கிளியனூர் அருகே உள்ள தைலாபுரம் கருடகம்ப வீதியைச் சேர்ந்த சிவகேசு மகன் சங்கர் (42). இவர் கூலி தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி (40).

இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவனுக்கும் மனைவிக்கும் இன்று காலை ஏற்பட்ட தகராறில், சங்கர் கத்தியால் மனைவி பாக்கியலட்சுமியின் வலது பக்க தலையில் கொடூரமாக வெட்டியுள்ளார். இதில் பாக்கியலட்சுமி நிலைகுலைந்து கிழே விழுந்தார்.

உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பாக்கியலட்சுமி யை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாக்கியலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் சங்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சங்கர் குடித்து விட்டு வருவதால் ஏற்பட்ட பிரச்சினையா அல்லது ஏதேனும் தகாத உறவால் ஏற்பட்ட பிரச்சினையால் கொலை சம்பவம் நடந்ததா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கணவர் மனைவி பிரச்சினையில் மனைவியை கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் டாக்டர். அப்துல்கலாம் பிறந்ததினத்தை முன்னிட்டு மரநடுகை!!

ஓமந்தை மத்திய கல்லூரியில்..

அப்துல்கலாம் பசுமை உலகத்திட்டத்தின் ஊடாக, டாக்டர் A. P. J அப்துல்கலாம் அவர்களின் 91 வது பிறந்ததினத்தை முன்னிட்டு சர்வதேச ஐக்கிய கலாம்(IUKF) அறக்கட்டளையின் மரநடுகை விழாவானது திரு.M.சபேசன் (IUKF வடமாகாண பணிப்பாளர்) தலைமையில் கடந்த 14.10.2022  அன்று ஓமந்தை மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில்  பிரதம விருந்தினராக திரு. மயில்வாகனம் ஜெயரூபன் (பிரதி கல்விப் பணிப்பாளர் வவுனியா வடக்கு) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. செல்லத்துரை பவேந்திரன் (அதிபர் ஓமந்தை மத்திய கல்லூரி) அவர்களும் மற்றும் IUKF துறைசார் விருந்தினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மேற்படி நிகழ்வில்  நூற்றுக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் ஆசிரியர்கள் மற்றும்  மாணவர்களுடன் இணைந்து சர்வதேச ஐக்கிய கலாம்(IUKF) அறக்கட்டளையின் உறுப்பினர்களால்  நாட்டி வைக்கப்பட்டன.

பெற்றோர் வீதி போடும் தொழிலாளர்கள்.. மகள் இந்திய அணியின் கேப்டன் : விடாமுயற்சியால் வறுமையை வீழ்த்திய பெண்!!

ஜார்கண்டில்..

17 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய மகளிர் கால்பந்து அணியினை வழிநடத்தி வருகிறார் அஸ்தம் ஓரான். இந்த இடத்திற்கு வர இவர் கடந்துவந்த சோதனைகள் ஏராளம்.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கும்லா எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர் அஸ்தம். இந்த கிராமத்தை சேர்ந்த ஹீரலால் ஓரான் மற்றும் தாரா தேவி தம்பதிக்கு மூன்றாவது மகளாக பிறந்த அஸ்தம், தனது விடா முயற்சின் மூலமாக இன்று 17 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய மகளிர் கால்பந்து அணியினை கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.

மிகவும் எளிமையான குடும்பத்தை சேர்ந்த அஸ்தமின் பெற்றோர் விவசாய கூலி வேலை செய்துவருகின்றனர். அஸ்தமிற்கு 4 சகோதரிகளும் ஒரு சகோதரரும் உள்ளார். 17 வயதுக்கு உட்பட்டோருக்கான FIFA உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் துவங்கியுள்ளன. இந்த தொடரில் இந்தியாவின் கேப்டனாக விளையாடி வருகிறார் அஸ்தம்.

முதல் போட்டியில் வல்லமை வாய்ந்த அமெரிக்க அணியை எதிர்த்து இந்தியா விளையாடியது. இதில் அமெரிக்க அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் போட்டியில் மொரோக்கா அணியை எதிர்த்து களம்காண்கிறது இந்தியா.

17 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய மகளிர் கால்பந்து அணியின் கேப்டனாக அஸ்தம் விளையாடிவரும் இந்நிலையில், அவருடைய கிராமத்திற்கு முதன்முதலாக சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் அஸ்தமின் பெற்றோர்களும் 250 ரூபாய் ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

விடாமுயற்சியால் வறுமையான பின்புலத்தில் இருந்து இத்தனை பெரிய உயரத்திற்கு உயர்ந்த அஸ்தமை உள்ளூர் மக்கள் பாராட்டிவருவதோடு, அவருடைய குடும்பத்தினருக்கு டிவி மற்றும் இன்வெட்டரை அன்பு பரிசாக வழங்கியுள்ளனர் கிராம மக்கள்.

சிறுவயதில் இருந்தே கால்பந்து மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அஸ்தம், பல போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றிருக்கிறார். ஹசாரிபாக்கில் உள்ள அரசு நடத்தும் கால்பந்து அகாடமியில் தனது கிராமத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் என்ற பெருமையை பெற்றவர் அஸ்தம்.

அஸ்தம் ஓரானின் வெற்றி, அவரது சிறிய கிராமத்தை அதிகாரிகள் கவனிக்கும்படியும் செய்திருக்கிறது. கும்லா மாவட்ட நிர்வாகம் கொரடோல்லியில் கால்பந்து மைதானம் கட்ட ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்கீழ் கும்லா கிராமத்தில் சாலை அமைக்கும் பணிகளும் துவங்கப்பட்டுள்ளன.

படிக்கவில்லை என திட்டிய அப்பா… வீட்டைவிட்டு ஓடிப்போன மகன்.. ஒன்றரை வருடம் கழித்து நடந்த அதிசயம்!!

திருவாரூரில்..

திருவாரூர் அருகே இளவங்கார்குடி பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவர் விறகு வியாபாரம் செய்துவருகிறார். இவருடைய மகன் மாதேஷ் அருகில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். அறிவழகன் தனது மகனை சரியாக படிக்கவில்லை என அவ்வப்போது கண்டித்து வந்திருக்கிறார்.

இதனிடையே, படிக்கவில்லை என அப்பா திட்டியதால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டை விட்டே வெளியேறியிருக்கிறார் மாதேஷ். இதனால் அதிர்ச்சியடைந்த அறிவழகன் தனது மகனை தேடியலைந்திருக்கிறார். ஆனால் அவரால் மாதேஷை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து, திருவாரூர் காவல்நிலையத்தில் மாதேஷின் பெற்றோர் மகனை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தனர். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரிகள் பல்வேறு வகையில், மாதேஷை தேடிவந்தனர். ஆனால், பலன் கிடைக்கவில்லை.

இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவழகன் தனது வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது மாதேஷுக்கு புது ஆதார் கார்டு வந்திருக்கிறது. இதனால் குழம்பிப்போன அறிவழகன் காவல்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து சொல்லியிருக்கிறார்.

இதனால் பரபரப்பான அதிகாரிகள் இதுகுறித்த விசாரணையில் இறங்கினர். அதன் பலனாக மாதேஷ், மும்பையில் இருப்பது தெரியவந்திருக்கிறது. அங்கே, மண்டபங்களை அலங்கரிக்கும் பணியில் மாதேஷ் ஈடுபட்டு வந்திருக்கிறார். புது ஆதார் கார்டு வேண்டி மாதேஷ் விண்ணப்பிக்க, அவருக்கு ஏற்கனவே ஆதார் இருந்ததால் உண்மையான முகவரிக்கு கார்டு வந்திருக்கிறது.

இதனையடுத்து அறிவழகனை அழைத்துக்கொண்டு போலீசார் மும்பை சென்றிருக்கின்றனர். மும்பையில் காவல்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து தனது மகனை கண்டுபிடித்திருக்கிறார் அறிவழகன்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு தனது மகனை கண்ட அறிவழகன் கண்கலங்கியபடி அவரை கட்டியணைத்து தனது ஏக்கத்தை வெளிப்படுத்தினார். இதனை கண்ட அதிகாரிகளும் நெகிழ்ந்து போயிருக்கின்றனர். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டை விட்டு ஓடிப்போன மகனை மிகுந்த முயற்சிக்கு பிறகு தந்தை கண்டுபிடித்த நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

சென்னை ரயில் நிலையத்தில் மாணவி கொலை : அதிர்ச்சியில் தந்தைக்கு நடந்த சோகம்!!

சென்னையில்..

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாணிக்கம் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் மாணிக்கம் (வயது 47), ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

இவர்களது மகள் சத்தியப்பிரியா (20) தியாகராயநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் மதியம் பரங்கிமலை ரெயில்நிலையத்துக்கு வந்து அங்கிருந்து மின்சார ரெயில் மூலம் தியாகராயநகர் செல்வது வழக்கம்.

இவரது வீட்டிற்கு எ திரே ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டரது மகன் சதீஷ்(23), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது, இருவரும் காதலித்து வந்த நிலையில் இந்த விவகாரம் வீட்டிற்கு தெரியவரவே சத்யாவின் வீட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

காரணம் சதீஷ் படித்துவிட்டு வேலைக்கு எதுவும் செல்லாமல் ஊர்சுற்றித்திரிந்துள்ளார், இதனால் சத்யா, சதீஷை விட்டு விலகத்தொடங்கியுள்ளார். இருப்பினும் சதீஷ் தொடர்ந்து சத்யாவை பின்தொடர்ந்து வந்துள்ளார், சம்பவ தினத்தன்றும் இருவருக்கும் ரயில்நிலையத்தில் வைத்து வாக்குவாதம் நடந்துள்ளது.

ஒருகட்டத்தில் கடும்கோபமடைந்த சதீஷ், பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயிலின் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். இதில் ரயிலில் சிக்கி சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து சதீஷ் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். தலைமறைவான குற்றவாளியைப் பிடிக்க ரெயில்வே போலீசார் சார்பில் டிஎஸ்பி தலைமையில் 4 தனிப்படைகளும், பரங்கிமலை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த கொலையாளி சதீஷை போலீசார் இன்று கைது செய்தனர். இதற்கிடையே மகள் உயிரிழந்த துக்கத்தில் அவரது தந்தை மாணிக்கம் மாரைடைப்பால் இன்று காலை உயிரிழந்தார்.

உருகி உருகி காதலித்தோம்… மாணவியை ரயில்முன் தள்ளி கொன்ற காதலன் வாக்குமூலம்!!

சென்னையில்..

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் வரும்போது தண்டவாளத்தில் தள்ளி கொலை செய்த வழக்கில், காதலன் சதீஷ் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

வியாழக்கிழமை மதியம் மாணவி சத்யாவை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற சதீஷை இன்று (வெள்ளிக்கிழமை) காலை கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றித் திரிந்த நிலையில் பொலிசார் கைது செய்தனர்.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் சதீஷ் இந்த சம்பவம் குறித்து பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சதீஷும் சத்யாவும் கடந்த 5 வருடங்களாக உருகி உருகி காதலித்து வந்ததாகவும், பெற்றோரின் எதிர்ப்பால் சத்யா தனது காதலை முறித்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

சத்யா தினமும் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வருவார் என்பதை நன்கு அறிந்த சதீஷ், நேற்று தங்கள் காதல் விவகாரம் குறித்து சத்யாவிடம் பேசுவதற்காக சென்றுள்ளார்.

ஆனால், சத்யா சதீஷை தவிர்த்துள்ளார். அப்போது, கட்டாயப்படுத்தி பேச முயற்சித்தபோது ஏற்பட்ட தகராறில் சத்யாவை ரயில் முன் தள்ளிவிட்டதாக ஒப்புக்கொண்டார்.

மேலும், அவரை தள்ளிவிட்டு தானும் ரயில் முன் பயந்து தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டதாகவும், ஆனால் அருகில் இருந்த பயணிகள் தன்னை பிடிக்க வந்ததால் அங்கிருந்து ஓடி தப்பிவிட்டதாக தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

வவுனியாவில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து : ஒருவர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா தவசிகுளம் பகுதியில் இன்று (15.10.2022) காலை 10.30 மணியளவில் கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தவசிகுளம் பகுதியூடாக பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியினை விட்டு கீழ் இறங்கி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பேரூந்து – துவிச்சக்கர வண்டி மோதி விபத்து : ஒருவர் பலி!!

விபத்து..

வவுனியா, வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் இ.போ.சபை பேரூந்தும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் இன்று (15.10) மாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து மாலை 5.30 இற்கு மன்னார் நோக்கி புறப்பட்ட இ.போ.சபை பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியூடாக,

குடியிருப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் வைத்தியசாலை வீதியில் இருந்து குடியிருப்பு நோக்கி திரும்பிய துவிசக்கரவண்டி பேரூந்தின் பின்பக்க ரயர் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். மரணமடைந்தவர் வவுனியா, வெளிக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தையா தவராசா (வயது 65) என்பவராவார்.

விபத்தையடுத்து இ.போ.சபை சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் வவுனியா பேபக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் அனுமதிப்பத்திரமின்றி மாடுகளை ஏற்றிச்சென்ற ஒருவர் கைது : 11 மாடுகள் மீட்பு!!

11 மாடுகள் மீட்பு..

வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பகுதியில் உரிய அனுமதிப்பத்திரங்கள் மாடுகளை வாகனத்தில் ஏற்றிச்சென்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஒமந்தை பகுதியிலிருந்து சம்மாந்துறை நோக்கி இன்று (14.10.2022) காலை மாடுகளை ஏற்றிசென்ற வாகனம் ஒன்றை வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி தலைமையிலான பொலிஸ் குழுவினர் நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து சோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது அனுமதிப்பத்திரமின்றி 11 மாடுகளை ஏற்றி செல்லப்படுகின்றமை கண்டறியப்பட்டதுடன் குறித்த வாகனத்தின் சாரதியை கைது செய்த பொலிசார் மாடுகளையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

காதல் தொல்லையால் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு : வெளியான சிசிடிவி காட்சிகள்!!

கன்னியாகுமரியில்..

குளச்சல் அருகே இரண்டு குழந்தைகளின் தாய் மினி பஸ் டிரைவர்கள் கொடுத்த லவ் டார்ச்சரால் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போது அவரிடம் டிரைவர்கள் அத்துமீறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அடுத்த காரியவிளை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி சஜிலா சுங்கான்கடை பகுதியில் உள்ள முத்து நீரோ என்ற தனியார் மருத்துவமனையில் பார்மசிஸ்டாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை பணி முடிந்து இவர் வீட்டிற்கு வந்து நான்கு பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டின் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண்ணின் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து அவர் எழுதிய நான்கு பக்க கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அதில் மினி பஸ் டிரைவர் துரோகம் செய்துவிட்டதாகவும், குழந்தைகள் குறித்து ஒழுக்கமாகவும் எழுதப்பட்டிருந்தது. இந்த நிலையில் சஜிலாவின் தற்கொலைக்கு மினி பஸ் டிரைவர்கள் கொடுத்த லவ் டார்ச்சர்தான் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியும் போலீசார் அவர்களை கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

தற்போது இந்த சம்பவத்திற்கு திருப்புமுனையாக, பணி முடிந்து வீடு திரும்பும் சகிலாவை மினிவஸ் டிரைவர் சிவில் மற்றும் அவரது நண்பர் இருவருமாக சேர்ந்து திங்கள்நகர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் விரட்டி விரட்டி தடுத்து நிறுத்தி அத்துமீறி லவ் டார்ச்சர் கொடுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே குளச்சல் போலீசார் மினிபஸ் டிரைவர் சிபின் மீது தற்கொலைக்கு தூண்டியது பெண்ணை பொது இடத்தில் மானபங்கம் செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.

மேலும் மினிபஸ் டிரைவர் சிபின் உடன் கள்ள தொடர்பில் இருந்த இன்னொரு பெண் மூலம் தான் சஜிலாவின் மொபைல் எண் மினிபஸ் டிரைவர் சிபின் வாங்கி தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

சாப்பிடுவதில் தகராறு.. பாட்டியை கொலை செய்த பேரன்.. 6 ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி?

பெங்களூருவில்..

கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு நகரில் உள்ள கேங்கிரி சாட்டிலைட் டவுனில் வசித்து வந்தவர் 50 வயதான சசிலேகா. இவருக்கு சஞ்சய் வாசுதேவ் ராவ் என்ற 27 வயது மகன் உள்ளார். சசிலேகாவின் கணவர் உயிருடன் இல்லாத நிலையில், சசிலேகாவின் தாயான 70 வயது ஷாந்தகுமாரியும் மகள் மற்றும் பேரனுடன் வசித்து வந்துள்ளார்.

ஷாந்தகுமாரி நம்பிக்கைகள் ,சடங்கு ஆச்சாரங்களில் தீவிர பற்று கொண்டவராக இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் முறையாக சடங்குகள் பழக்க வழக்கங்களை பின்பற்றுவதில்லை என மகள் மற்றும் பேரனை அடிக்கடி கடிந்து கொள்வாராம்.

அதேபோல், வெளியே சென்றுவந்தால் குளித்துவிட்டு தான் வீட்டுக்குள் வர வேண்டும், வெளி உணவுகளை வாங்கி சாப்பிடக்கூடாது என பல ரூல்ஸ்களை பாட்டி விதித்துவந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்து பேரன் மற்றும் பாட்டிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், சம்பவ தினமான 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று பேரன் சஞ்சய் வீட்டிற்கு கோபி மஞ்சூரியன் வாங்கி வந்துள்ளார். இது பாட்டிக்கு பிடிக்காமல் பேரனை கண்டித்து திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் பாட்டியை ஆத்திரத்தில் அடித்து கொலை செய்துள்ளார். அப்போது அவரது தாய் சசிலேகா, சஞ்சய்யின் நண்பர் நந்தேஷும் உடன் இருந்துள்ளனர்.

தாக்குதலில் பாட்டி எதிர்பாராத விதமாக உயிரிழந்ததால் அதை அப்படி மறைக்க வீட்டின் கூரையில் பாட்டியின் உடலை சிமெண்ட் வைத்து மூடி மறைத்துள்ளனர். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என பாட்டி தனது சொந்த ஊரான சிவமோகாவுக்கு சென்றுவிட்டார் என அக்கம்பக்கத்தினிரடம் சசிலேகா கூறியுள்ளார்.

பின்னர் அடுத்த சில மாதங்களில் சசிலேகாவும், மகன் சஞ்சய்யும் வீட்டை காலி செய்துள்ளனர்.பின்னரை வீட்டை புனரமைப்பு செய்ய வீட்டின் முதலாளி வேலை செய்த போது தான் அழுகிய நிலையில் பாட்டியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதை அடிப்படையாகக் கொண்டு காவல்துறை தடயங்களை திரட்டி விசாரணை நடத்தியதில், முதலில் சஞ்சய்யின் நண்பர் நந்தேஷ் சிக்கினார். பின்னர் நந்தேஷ் அளித்த வாக்குமூலம் மூலம் குற்றச் சம்பவத்தை தெரிந்துகொண்ட காவல்துறை முக்கிய குற்றவாளி சஞ்சய் அவரது தாயாரை தேடிவந்துள்ளது.

காவல்துறையின் நீண்ட முயற்சிக்குப் பின்னர் Know Your Customer தகவலை வைத்து மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூர் பகுதியில் தலைமறைவாக இருந்த சஞ்சய் மற்றும் சசிலேகாவை கைது செய்தனர்.

கொலை செய்த காலத்தில் ஏரோனாட்டிகல் இன்ஜினியரிங் மாணவராக சஞ்சய் இருந்துள்ளார். சிறப்பாக படிக்கும் அவர், தேர்வுகளில் 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் எடுத்துள்ளார். ஆனால் கொலை சம்பவத்திற்கு பின் மாட்டிக்கொள்ளக்கூடாது என வேறு இடத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழத் தொடங்கி தற்போது ஹோட்டலில் வெயிட்டாரக பணியாற்றியுள்ளார்.

அதேபோல், தாய் சசிலேகாவும் வீட்டு பணிப்பெண்ணாக வேலை பார்த்து வாழ்ந்து வந்துள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கொலை குற்றத்தை கண்டுபிடித்த பெங்களூரு காவல்துறை கைதான மூவரையும் சிறையில் அடைத்துள்ளது.

இருந்த ஒரே சொத்தும் கையை விட்டு போகும் நேரத்தில் லொட்டரியில் அடித்த பெரிய அதிர்ஷ்டம்!!

கேரளாவில்..

கேரளாவில் கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பாக வங்கி நோட்டீஸ் அனுப்பிய அடுத்த ஒரு மணி நேரத்தில் நபர் ஒருவருக்கு கூரையை பீய்த்து அதிர்ஷ்டம் கொட்டியுள்ளது.

பூக்குஞ்சு என்பவர் மீன் வியாபாரி ஆவார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வீடு கட்ட வங்கியில் கடன் வாங்கிய நிலையில் கடனை திரும்ப செலுத்த முடியாமல் பண நெருக்கடியில் தவித்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக வங்கி அவருக்கு இருந்த ஒரே சொத்தை பறிமுதல் செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பியது.

இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கலாம் என அவர் யோசித்து கொண்டிருந்த போது பூக்குஞ்சுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய அவர் சகோதரர், பூக்குஞ்சு வாங்கிய லொட்டரி சீட்டிற்கு ரூ. 75 லட்சம் (இலங்கை மதிப்பில் ரூ. 3,33,90,768) பரிசு விழுந்ததாக கூறினார்.

இது அவர் வாங்கிய கடன் தொகையை விட பல மடங்கு அதிக பணமாகும். லொட்டரி டிக்கெட் வாங்குவதை பூக்குஞ்சு வாடிக்கையாக கொண்டிருந்தார்.

அன்றை தினம் 1 மணிக்கு தான் குறித்த லொட்டரி சீட்டை அவர் வாங்கியிருந்தார். என்றாவது நமக்கு அதிர்ஷ்டம் அடித்து பிரச்சனைகள் தீராதா என நினைத்தவருக்கு அவர் விரும்பியது நடந்துள்ளது.