நாய் குறுக்கே வந்ததில் நடுரோட்டில் விழுந்த கணவன், மனைவி பேருந்து மோதி பலியான சோகம்!!

மதுரை சிக்கந்தர் சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த கணவன், மனைவி, திடீரென நாய் குறுக்கே வந்ததில் நடுரோட்டில் கீழே விழுந்த நிலையில், பின்னால் வந்துக் கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை ஜீவா நகரைச் சேர்ந்த வெங்கடசுப்பு–பத்மாவதி தம்பதியினர் அலங்காநல்லூர் நோக்கி நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர்.

இவர்களது இருசக்கர வாகனத்தில் காமாட்சி அம்மன் நகர்ப் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென சாலையின் குறுக்கே ஓடிய நாய் மீது வாகனம் மோதி, இருவரும் கீழே விழுந்தனர்.

அந்த நேரத்தில் பின்னால் வந்த அரசுப் பேருந்து இருவர் மீதும் அதிவேகத்தில் மோதியது. இதில் வெங்கடசுப்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவர் உடல் பேருந்து சக்கரத்தில் சிக்கி நசுங்கியது.

மனைவி பத்மாவதி தலையில் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் சிகிச்சைப் பலனின்றி பத்மாவதியும் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் மோதிய நாயும் இறந்தது. இந்த விபத்து குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலைகளில் சுற்றித் திரியும் நாய்கள் மற்றும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தாலும்,

மதுரை மாவட்டத்தில் இந்த நடவடிக்கை சரிவர நடைமுறைப்படப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இந்த பகுதியில் இத்தகைய விபத்துகள் அடிக்கடி நடைபெறுகின்றன என்று கூறுகின்றனர்.

நான்கு மாதத்தில் கசந்த காதல் : மனைவியின் கழுத்தறுத்து கொன்ற கணவன்!!

ஆசைத்தீர காதலித்து, காதலித்தவளையே கல்யாணமும் செய்துக் கொண்ட நிலையில், திருமணமாகி நான்கே மாதத்தில் காதல் கசந்ததால், மனைவியின் கழுத்தை அறுத்து கணவன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகம் அருகே சிலவாடம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்(25). அதே பகுதியைச் சேர்ந்த மதுமிதா(19) எனும் இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அதை மீறி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு மதுராந்தகத்தில் வீடு எடுத்து தங்கி வந்தனர்.

திருமணத்திற்குப் பிறகு, மதுமிதா தொடர்ந்து செல்போனில் யாரோ ஒருவருடன் பேசுவதாக சரணுக்கு சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் மனைவியை பலமுறை கண்டித்தும், மதுமிதா அதையே தொடர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்தேகத்தின் காரணமாக சரண் மனதில் தாங்க முடியாத கோபத்தை வளர்த்துக் கொண்டு, மனைவியை இறுதியாகத் தீர்த்துக்கட்ட முடிவு செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிந்துள்ளது.

சம்பவத்தன்று கோவிலுக்குச் செல்கிறோம் எனக் கூறி மதுமிதாவை ஆனந்தமங்கலம் அருகே உள்ள மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்ற சரண், முன்கூட்டியே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மதுமிதாவின் கழுத்தை அறுத்து படுகொலை செய்து விட்டு விட்டார்.

சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் ஓடிவந்ததைப் பார்த்த சரண் அங்கிருந்து ஓடி தப்பினார். தகவல் பெற்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, சரணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் தொடர்பு தொடர்பான சந்தேகத்தின் காரணமாக நான்கு மாதங்களே ஆன காதல் திருமணம் இப்படியாக கொடூரமாக முடிவடைந்தது மதுராந்தகம் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிப்பு!!

இலங்கையில் இன்றும் தங்கம் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனபடி நேற்று புதன்கிழமை, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 329,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று (20) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். அதன்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 330,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 302,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,813 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

நீதிமன்றத்தில் வைத்து மனைவி மற்றும் உறவினரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற கணவர்!!

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் சித்தாப்பூரை சேர்ந்த சிரஞ்சீவி (29) தனது மனைவி ரோஜா (27) மற்றும் அவருடைய பெற்றோர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவிட்டு கொலை செய்ய முயன்றுள்ளார்.

கணவர் கடந்த 12 ஆண்டுகளாக மனைவியுடன் வாழ்ந்திருந்தாலும், குடிப்பழக்கம் மற்றும் உடலுறவு பிரச்சனைகள் காரணமாக இருவரில் பிரிவு ஏற்பட்டது.

ரோஜா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனக்கு பாதுகாப்பாக இருப்பதற்காக பெற்றோர் வீட்டிற்கு சென்றார் மற்றும் விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

சிரஞ்சீவி கோர்ட்டில் சமரச பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றி தாக்க முயன்றதனால், அங்கு இருந்த வக்கீல்கள் மற்றும் ஊழியர்கள் தடுத்து நிறுத்தி, பின்னர் போலீசார் கைது செய்தனர்.

சம்பவத்தின் பின்னர் சிரஞ்சீவி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கார் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதி 3 இளைஞர்கள் பரிதாபமாக பலி!!

நவல்பூர் காரை கூட்ரோடு பகுதியில் அமைந்த புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் வேகமாக வந்த கார் பைக் மீது நேருக்கு நேர் மோதியது. கர்நாடக மணிலா பதிவெண் கொண்ட கார் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்தது.

இந்த விபத்தில் பைக்கில் சென்ற தினேஷ் (20), சாஜன் (26), பாலமுருகன் (19) மூவரும் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூவரையும் வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ராணிப்பேட்டை போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்த கார்!!

வவுனியா நொச்சிமோட்டை ஆற்றுக்குள் வீழ்ந்து கார் ஒன்று இன்று (20.11.2025) விபத்திற்குள்ளாகியது. குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்…

இன்று மாலை வவுனியாவில் இருந்து யாழ் திசைநோக்கி சென்றுகொண்டிருந்த கார் நொச்சிமோட்டை பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் வீழ்ந்தது.

குறித்த விபத்தில் காரை ஓட்டிச்சென்ற சாரதி சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். குறித்த விபத்தினால் அங்கு பொருத்தப்பட்டுள்ள நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குழாயில் வெடிப்பு ஏற்ப்பட்டுள்ளதுடன் நீர் வெளியேறி வருகின்றது.

இதேவேளை வவுனியாவில் கடந்த சிலநாட்களாக மழையுடனான காலநிலை காணப்படுவதால் சாரதிகள் தமது வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற பாரதி முன்பள்ளியின் கலைவிழா 2025!!

வவுனியா பாரதி முன்பள்ளியின் கலை விழாவானது பாடசாலையின் அதிபர் ஜெயராஜா சந்திரா தலைமையில் வவுனியா மாநகர கலாசார மண்டபத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

மங்கவிளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானதுடன் வரவேற்புரை, தலைமையுரை, அதிதிகள் உரையுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மாத்தறை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் விஜயரகுநாதன் ஸ்ரீவிசாகன்,

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் அருட்சகோதரி ஜெனிற்றா சியாமினி செபஸ்ரியாம்பிள்ளை, வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் நந்தசேனா சத்தியதேவி, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஆரம்பபிரிவு உப அதிபர் புஸ்பகுமார் மாலதி,

கௌரவ விருந்தினர்களாக வைரவப்புளியங்குளம் கிராம சேவையாளர் ஜெகதீபன் நிரஷஞ்சனா, மாவட்ட செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் சிவராஜா பிரிந்திகா, பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் இராசலிங்கம் இளம்சிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமையுடன் முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் , நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் முதன்முறையான வாகனங்களை அதிவேகமாக சார்ஜ் செய்யும் வசதி!!

வவுனியா மாவட்டத்தில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் அவற்றுக்குத் தேவையான அதிவேக சார்ஜ் சேவைகளைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக PRO AUTO PARK நிறுவனம் அதிவேக சார்ச் செய்யும் இயந்திரத்தினை நிறுவியுள்ளது.

படிப்படியாக மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற அதேவேளை அவற்றுக்கான சார்ஜ் நிலையங்கள் இன்மையினால் வவுனியா மாவட்ட மக்கள் மற்றும் ஏனைய பிரதேசங்களிலிருந்து வவுனியா மாவட்டத்திற்கு வருகை தருபவர்களும் வவுனியா ஊடாக வேறு மாவட்டங்களுக்கு பயணிப்பவர்களுக்கும் வாகனத்தினை அதிவேகமாக சார்ஜ் செய்யும் கேள்வியும் அதிகரித்துள்ளது.

இதனால் வவுனியா மாவட்டத்தில் வரவேற்பு இடத்தினை அண்மித்த பகுதியான ஏ9 வீதி, மூன்று முறிப்பு பகுதியில் ( வன்னி இரானுவ முகாம் முன்பாக) அமைத்துள்ள PRO AUTO PARK தமது நிறுவனத்திற்கு முன்பாக அதிவேகமாக வாகனத்திற்கு சார்ஜ் மேற்கொள்ளும் வசதியினை கொண்ட தன்னியக்க இயந்திரத்தினை நிறுவியுள்ளனர்.

வீடுகளில் சார்ஜ் செய்யும் சமயத்தில் அதிகளவில் நேரம் விரயமாகுவதுடன் மின்சார கட்டணமும் அதிகளவில் செலவாகும். இவ்வியந்திரம் மூலம் வாகனத்திற்கு சார்ஜ் செய்யும் போது நேரமும் , பணமும் சேமிக்கப்படும் என்பதுடன் வாகன பேற்றரியின் ஆயுள் காலமும் நிடித்து நிலைக்கும்

60KW சார்ஜ் தன்மையினை கொண்ட இவ் இயந்திரம் மூலம் 20 தொடக்கம் 30 நிமிடங்களுக்குள் வாகனத்தினை முழுமையாக சார்ஜ் செய்து கொள்ள முடியும் . மேலதிக விபரங்களுக்கு 0777123450 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளவும்.

-இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்-

 

பிரித்தானியாவில் 230000 பவுண்டுகள் மோசடி செய்த இலங்கையருக்கு நேர்ந்த கதி!!

இலங்கையைச் சேர்ந்த சமூக ஊடக இன்ஃப்ளூவென்சர் ஒருவர், பிரித்தானியா பற்றிய தவறான தகவல்களைப் பதிவேற்றும் முகப்புத்தக பக்கங்களை நடத்தி 230,000 பவுண்டுகள் வரை சம்பாதித்ததாக தெரிய வந்துள்ளது.

குறித்த நபரின் முகப்புத்தக பக்கங்களில் புலம்பெயர்ந்தோருக்கு எதிராகவும், இஸ்லாமிய வெறுப்பு சார்ந்த கருத்துக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையைச் சேர்ந்த குறித்த நபர் மற்றும் அவரது மாணவர்கள் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட முகப்புத்தக பக்கங்களை நடத்தி வருகின்றனர்.

அதில் தொழிலாளர் கட்சியை இஸ்லாமிய மக்கள் கைப்பற்றி, நடத்தி வருவதாகவும், லண்டனில் ஆணைய குடியிருப்புகள் அனைத்தும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுவதாகவும் தகவல் பகிரப்படுகிறது.

முகப்புத்தக பக்கங்களை உருவாக்குவதும், அதில் எவ்வாறு சம்பாதிப்பது என்பது தொடர்பில் பயிற்சி அளிக்கும் மையம் ஒன்றைக் குறித்த நபர் நடத்தி வருகிறார்.

பெரும்பாலும் வயதானவர்களை இலக்கு வைக்கவும், அவர்களே புலம்பெயர் மக்களை விரும்புவதில்லை என்றும் தமது மாணாக்கர்களுக்கு அவர் வலியுறுத்துகிறார்.

தமது முகப்புத்தக பக்கங்களில் தென்படும் விளம்பரங்கள் ஊடாக குறித்த நபரும், அவரது மாணவர்களும் பணம் சம்பாதிக்கின்றனர்.

மேலும் இவர்கள், 1.6 மில்லியன் பயனர்களைக் கொண்ட 128 முகப்புத்தக பக்கங்கள் மற்றும் குழுக்களை நடத்தி வருவதாக புலனாய்வு இதழியல் பணியகத்தின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், முகப்புத்தக உள்ளிட்ட சமூக ஊடகத்தில் எவ்வாறு சம்பாதிப்பது தொடர்பில் தாம் ஒரு நிபுணர் என குறிப்பிடும் குறித்த நபர், உலகம் முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் அவரின் ஒரு முகப்புத்தக பக்கத்தில், லண்டன் மேயர் சர் சாதிக் கான் முஸ்லிம்களுக்கு மட்டுமே கிடைக்கும் வகையில் 40,000 கவுன்சில் வீடுகளைக் கட்டுவதாக உறுதியளித்துள்ளார் என பதிவு செய்திருந்தார்.

அதுமட்டுமின்றி, அந்த ஒரு முகப்புத்தக பக்கத்திலிருந்து மட்டும் மாதம் 1000 பவுண்டுகளுக்கு மேல் சம்பாதிப்பதாகக் குறித்த நபர் தெரிவித்துள்ளதுடன்,

புலம்பெயர் விவகாரம் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் உள்ள கருத்துக்களை அதிகமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமது மாணவர்களுக்கு அவர் காணொளி ஒன்றில் அறிவுறுத்துகிறார்.

மேலும், இலங்கையர்கள் மட்டுமல்ல, இந்தியர்களும் பிரித்தானியாவில் குடியிருப்பதை அங்குள்ள மக்கள் விரும்புவதில்லை எனக் காணொளி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ஸ்டார்மர் பதவி விலகுகிறார் என்ற பொய்த்தகவலை முதல் முறையாகக் குறித்த நபர் தமது முகப்புத்தக பக்கம் ஒன்றில் வெளியிட்டிருந்தார்.

ஆனால், புலனாய்வு இதழியல் பணியகம் அவரை நேரடியாகத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட நிலையில், “இது தவறான புரிதல் என்றும், வன்முறையைப் பரப்புவதை நாங்கள் ஊக்குவிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளதுடன், 128 பேஸ்புக் பக்கங்களைத் தாம் நிர்வகிக்கவில்லை” எனவும் பதிலளித்துள்ளார்.

வெளிநாடொன்றில் பல மில்லியன் ரூபாவை அதிர்ஷ்டமாக பெற்ற இலங்கை இளைஞன்!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் அந்நாட்டில் நடந்த லொத்தர் குலுக்கல்லில் ஒரு லட்சம் திர்ஹம்களை வென்றுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர், முதலில் 100 திர்ஹாம் வெற்றி பெற்றிருந்தார். தற்போது பெரிய தொகையான 100,000 திர்ஹாம் வெற்றி பெற்றுள்ளார்.

அடுத்தகட்டமாக 100 மில்லியன் திர்ஹாம் பரிசை நோக்கி தனது கனவுகளைத் துணிச்சலுடன் வளர்க்கும் நடவடிக்கையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

29 வயதான யாசித பிரசன்ன என்ற இளைஞர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட லொத்தசீட்டுக் குலுக்கலில், வெற்றியாளராக பரிசை பெற்றுள்ளார்.

நான் ஒரு நாள் இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பரத்தைப் பார்த்து, பின்னர் UAE லொத்தரில் பதிவு செய்தேன் என இலங்கை இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

நான் நேரடி குலுக்கலைப் பார்க்கவில்லை. எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது, அதை நான் அழுத்தினேன். அதில் நான் 100,000 திர்ஹம்களை வென்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நான் மிகவும் உற்சாகம் அடைந்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்மா மற்றும் அப்பாவோடு இலங்கை செல்லத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நான் ஒரு தொழிலில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளேன்.

அடுத்த முறை, இன்னும் மிக்பெரிய பரிசை வெற்றி பெற எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

100,000 திர்ஹம் என்பது இலங்கையின் தற்போதைய நாணய பெறுமதியின்படி சுமார் 83 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!!

இலங்கையில் நேற்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 327,000 ரூபாயாக விற்பனையாகி வந்தது.

இந் நிலையில், இன்று (19) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 329,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 302,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,838 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் கடும் மின்னல் தாக்கத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையானது இன்று புதன்கிழமை (19) பிற்பகல் 11.30 மணி முதல் அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் கூகுள் பே சேவையை வழங்கும் கொமர்ஷல் வங்கி!!

கொமர்ஷல் வங்கி டிஜிட்டல் கொடுப்பனவுகளில் பிரபலமான கூகுள் மற்றும் விசா ஆகியவற்றுடன் இணைந்து, நாட்டில் முதன்முதலாகத் தனது வடிக்கையாளர்களுக்கு கூகுள் பே சேவையைச் சாத்தியமாக்கியுள்ளது.

கொமர்ஷல் வங்கி கூகுள் பே சேவையைச் செயல்படுத்திய இலங்கையின் ஒரே வங்கி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த உலகத் தரத்திலான மொபைல் கட்டணத் தீர்வு மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முன்னோடி நன்மையினை (first-mover advantage) வழங்கியுள்ளது.

கூகுள் மற்றும் விசா கூட்டாண்மை, விசாவின் நம்பகமான உலகளாவிய கட்டண வலையமைப்பு, மேம்பட்ட டோக்கனீசேஷன் (Tokenization) தொழில்நுட்பம், கூகுளின் பாதுகாப்பான மற்றும் எளிமையான இடைமுகம் ஆகியவற்றை கொமர்ஷல் வங்கியின் வலுவான டிஜிட்டல் வங்கிச் சூழலுடன் தடையின்றி ஒருங்கிணைக்கிறது.

கொமர்ஷல் வங்கியின் விசா டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள், தற்போது தங்கள் அட்டைகளை கூகுள் வாலட்டில் (Google Wallet) இலகுவாகச் சேர்க்கலாம்.

ஒருமுறை கடவுச்சொல் (OTP) அல்லது அழைப்பு மையம் மூலம் சரிபார்த்து, தங்கள் அண்ரோய்ட் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி பாதுகாப்பான, தொடர்பு இல்லாத (contactless) கட்டணங்களைச் செலுத்த முடியும்.

எங்கு வேண்டுமானாலும் கட்டணம்: விசா கார்ட் ஏற்றுக்கொள்ளப்படும் உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் உள்ள NFC-வசதி கொண்ட (NFC-enabled) எந்தவொரு contactless-enabled Point-of-Sale (POS) கருவியிலும் ஸ்மார்ட்போனைத் தட்டுவதன் மூலம் பணம் செலுத்தலாம்.

அட்டை தேவையில்லை: அட்டை வைத்திருப்பவர்கள் இனி தங்கள் உடல் அட்டைகள் (physical cards) அல்லது பணத்தை எடுத்துச் செல்லத் தேவையில்லை.

NFC-வசதி கொண்ட தங்கள் Android ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தித் தொட்டுப் பணம் செலுத்தலாம், இது பாதுகாப்பான மற்றும் எளிதான கட்டண அனுபவத்தை வழங்குகிறது.

கொமர்ஷல் வங்கி இந்த டோக்கனீசேஷன் சேவைக்காக மூன்றாம் தரப்பு சேவை வழங்குநரான IDEMIA உடன் மூலோபாய ரீதியாக இணைந்துள்ளதுடன், விசாவின் டோக்கன் சேவையை (Visa’s Token Service – VTS) பயன்படுத்துகிறது.

இந்தத் தொழில்நுட்பம், உண்மையான 16 இலக்க அட்டை எண்ணுக்குப் பதிலாக ஒரு தனித்துவமான டிஜிட்டல் டோக்கனைப் பயன்படுத்துகிறது.

இதன் மூலம், பயனரின் முக்கியமான தரவுகள் வணிகர்களுடன் பகிரப்படாமல் அல்லது சாதனத்தில் சேமிக்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

இந்தக் கட்டணச் சேவையை அறிமுகப்படுத்த, வங்கியின் கார்ட் சுவிட்ச் விற்பனையாளரான Euronet இன் கட்டண உள்கட்டமைப்பை கொமர்ஷல் வங்கி பயன்படுத்தியுள்ளது. இது நம்பகமான மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனை செயலாக்கத்தை உறுதி செய்கிறது.

கொமர்ஷல் வங்கியின் இந்த நடவடிக்கை, இலங்கையின் டிஜிட்டல் கட்டணச் சந்தையில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

கார் மோதி உழவு இயந்திரத்தில் பயணித்த இருவர் பலி!!

மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.

திம்புலாகல – மஹியங்கனை பிரதான வீதிக்கு, குறுக்கு வீதி ஒன்றிலிருந்து சிறியரக உழவு இயந்திரம் திடீரென ஏறியமையால் , பிரதான வீதியில் இருந்து வந்த கார் , அதனுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது உழவு இயந்திரத்தில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

 

வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்!!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பங்கலாவத்த பகுதியில் வேன் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளாகியது. இந்த விபத்து இன்று புதன்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நுவரெலியாவிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த வேனும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டியில் ஆரம்ப சிகிச்சை வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,

இதனையடுத்து வேனின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக நானுஓயா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அரச வேலைக்கு காத்திருப்போருக்கு முக்கிய தகவல்!!

அரச சேவை, மாகாண அரச சேவை மற்றும் கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டரீதியான சபைகளுக்கு சுமார் 70,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (19.11.2025) நடைபெற்ற பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு மசோதா மீதான குழு அமர்வுகளின் விவாதத்தின் போது அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்களில் பட்டதாரிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய அதிக எண்ணிக்கையிலான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கமைய,12,309 பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அரச சேவைக்குத் தேவையான ஆட்சேர்ப்பு மற்றும் அதன் தொடர்ச்சிக்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான இடைக்கால நடவடிக்கையாக பிரதமரின் செயலாளர் தலைமையில் அரச சேவை ஆட்சேர்ப்பு மறு ஆய்வுக் குழு நிறுவப்பட்டுள்ளது.

அந்த குழு அளிக்கும் பரிந்துரைகளை அமைச்சரவை பரிசீலித்து தேவையான ஆட்சேர்ப்புகளுக்கு அனுமதி வழங்கும் என்றும் சந்தன அபேரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.