வவுனியா மாநகரசபை அரசியல் பழிவாங்கலில் : தொழில் செய்ய இடையூறு : உறுப்பினர் குற்றச்சாட்டு!!

வவுனியா மாநகரசபை நிர்வாகம் தொடர்ச்சியான பழிவாங்கலை மேற்கொண்டு தொழில்செய்வதற்கு இடையூறை ஏற்ப்படுத்துவதாக இலங்கை தொழிலாளர் கட்சியின் வவுனியா மாநகரசபை உறுப்பினர் பாருக் பர்ஸ்சான் குற்றம்சாட்டியுள்ளார்.

வவுனியா மாநகரசபைக்குட்பட்ட மாடு அறுக்கும் மடுவம் தொடர்பாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

கடந்த மூன்று நாட்களாக மடுவத்திற்கான மின்சாரம் வழங்கப்படவில்லை. அரசியல் பழிவாங்கல் அடிப்படையிலேயே இவ்வாறு செய்யப்படுகின்றது. இதனால் எமது தொழில் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுகிழமை அதிகமான வியாபாரம் செய்யக்கூடிய ஒரு நாள். ஆனால் இன்று இறைச்சிக்கடைகள் அனைத்தையும் மூடவேண்டிய அவல நிலைக்கு வந்துள்ளோம்.

மாவட்டத்தில் உள்ள உணவகங்களுக்கும் இறைச்சியினை வழங்கமுடியாத சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதுவரைகாலமும் இப்படியான ஒரு பிரச்சனை வந்ததில்லை. இதனை நம்பி தொழில் செய்யும் பல ஊழியர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எமக்கு சரியான நீதியான தீர்வு வழங்கப்படவேண்டும்.

கடந்த தேர்தலில் எனது வட்டாரத்தில் எனக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்த மாநகரசபை உறுப்பினர்களான லறீப், பாரி ஆகிய இருவரும் இணைந்தே எமது தொழிலை இல்லாமல் செய்யும் நோக்கத்துடன் பலமுறை மடுவத்திற்குள் வந்து எம்மை தொந்தரவு செய்கின்றனர். எனவே மாநகரசபை சரியான ஒரு முடிவினை எனக்கு தரவேண்டும் என்றார்.

வவுனியா மடுவம் சர்ச்சை : சிலர் மக்களுக்காக அல்ல மாடுகளை வெட்டவே சபைக்கு வந்துள்ளனர்!!

வவுனியா தாண்டிக்குளத்தில் உள்ள மாடு அறுக்கும் மடுவம் தொடர்பாக பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும். அங்கு பல பிரச்சனைகள் உள்ளது. இதனை அரசியல் ஆக்குவது பர்ஸ்சான் தலைமையிலான அரசியல் கட்சியே என்று வவுனியா மாநகரசபையின் முதல்வர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா தாண்டிக்குளத்தில் உள்ள மாடு அறுக்கும் மடுவத்தில் தற்போது ஏற்ப்பட்டுள்ள பிரச்சனை தொடர்பாக கருத்து கேட்டபோதே முதல்வர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

மின்சாரசபையால் இதுவரை அனுப்பப்பட்ட பட்டியலுக்கு அமைய திங்கள்கிழமை நிலுவையிலுள்ள மின்கட்டணத்தை செலுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அந்த செயற்பாடுகளை சபையின் நிர்வாக அதிகாரியே செய்கின்றார். இதனை அரசியல் ஆக்குவது பர்ஸ்சான் தலைமையிலான அரசியல் கட்சியே.

தாண்டிக்குளம் மாடு அறுக்கும் மடுவத்தில் அதிகமான மாடுகள் அறுக்கப்படுகின்றது. அவை வெளிமாவட்டங்களுக்கு கொண்டுசெல்லப்படுவதால் எமது மாவட்டத்தில் மாடுகளின் விலை அதிகரித்துள்ளது.

கால்நடைகளுக்கு தட்டுப்பாடும் நிலவுவதுடன் களவாடப்படுகின்றது. அண்மையில் கூட ஓமந்தையில் ஒருவருக்கு சொந்தமான 20 மாடுகள் களவாடப்பட்டுள்ளது. எனவே இவற்றை தடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்.

அத்துடன் மடுவத்தில் அறுக்கப்படும் ஒருகிலோ மாட்டு இறைச்சிக்காக சபைக்கு 10 ரூபாவே கட்டணமாக செலுத்தப்படுகின்றது. கடந்த 25 வருடங்களாக இந்த தொகையே அறவிடப்படுகின்றது. ஆனால் தேறிய இலாபமாக குறைந்தது கிலோக்கு 800ரூபாயை அவர்கள் பெறுகின்றனர்.

எனவே இவற்றை திருத்தி சபையின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். அந்தவகையில் பர்ஸ்சானின் நடவடிக்கை தொடர்பாக மாநகரசபையின் அடுத்த அமர்வில் கூடி கலந்துரையாடப்பட்டு ஒழுக்காற்று முடிவுகள் எடுக்கப்படும்.

ஒரு மாநகரசபை உறுப்பினர் சபையின் வியாபாரத்தை தன்னுடையது என்று சொல்லி செய்யமுடியாது. சபை உறுப்பினராக சத்தியபிரமாணம் எடுக்கும் முன்னரே அவர் அதனை வேறு ஒருவருக்கு மாற்றிக்கொடுத்திருக்க வேண்டும். எனவே அவர் மக்களுக்காக அல்ல மாடுகளை வெட்டுவதற்காகவே மாநகரசபைக்கு வந்துள்ளாரா என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது என்றார்.

கண்டியில் கோர விபத்து : 3 பேர் பலி : பலர் வைத்தியசாலையில்!!

கண்டி, உடுதும்பர-மீமுரே பகுதியில் வான் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (19.07.2025) இரவு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும், ஆண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மேலும் 3 பேர் தெல்தெனிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் பிரதேச பண்பாட்டு விழாவும் பண்பாட்டு ஊர்திப் பவணியும் – 2025!!

வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் வவுனியா பிரதேச கலாசார பேரவையும் பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு ஊர்திப்பவனியும் பிரதேச பண்பாட்டு விழாவும் -2025 மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

நேற்று வெள்ளிக்கிழமை (18.07.2025) பண்பாட்டுபவனி பிரதேச செயலகம் முன்பாக காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியதுடன் அவற்றில் 40க்கு மேற்பட்ட ஊர்திகள் மற்றும் நடனங்களுடன் நகரை வலம் வந்தமையுடன் அரங்க நிகழ்வுகள் பிற்பகல் 1.00 மணிக்கு வவுனியா மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் இந்நிகழ்வில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், வவுனியா அரச அதிபர் பீ.ஏ.சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் த.முகுந்தன், வவுனியா தெற்கு வலய பிரதி கல்விப் பணப்பாளர் அமல்ராஜ், அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், மதகுருமார், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமயம் சார் அமைப்புக்கள், கிராமிய மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் கலைஞர்களுக்கான கலாநேத்ரா விருது வழங்களும் இடம்பெற்றன. அந்த வகையில் பாஸ்கரன் கதீஷன் (ஊடகத்துறை) , நாகராஜா செந்தூர்ச்செல்வன் (பரதம்) , அல்போன்ஸ் மெலிஸ்ரன் (நாடகம்) , சந்திரசேகர் அனோஜன் (ஓவியம்) , செல்வரத்திணம் சண்முகரத்தினம் (இயல்) , சுந்தரம் சிவயோகராஜா (கட்டுரை) , சிவராசா நாகராசா (அறிவிப்பு) , வல்லிபுரம் கந்தப்பு (மெல்லிசை) , சேனாதிராசா சந்திரகாந்தன் (வாத்திய இசை) , மாசிலாமணி தர்மகுலசிங்கம் (வாத்திய இசை) ஆகிய துறைகளை சேர்ந்த கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் வவுனியாவின் குரல் தெரிவில் தெரிவு செய்யப்பட்ட 18வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 18வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கான வவுனியாவின் குரல் விருதும் வழங்கி வைக்கப்பட்டன.

இப் பண்பாட்டு பவனி ஊர்தியானது பிரதேச செயலக வரலாற்றில் முதன் முறையான அனைத்து கிராம அலுவலர்கள் பிரிவுகளையும் உள்ளடக்கி அவர்களின் கிராமத்தினை பிரதிபடுத்தும் வகையில் அலங்கரிப்படுத்தியமை சிறம்பம்சமாகும்.

தாய் வெளிநாட்டில் : காதலனால் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி!!

15 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்தி அப்புத்தளை பகுதியில் வீடொன்றில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் வியாழக்கிழமை (17.07.2025) இரவு லிந்துல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட மாணவி தலவாக்கலையில் உள்ள தோட்டமொன்றைச் சேர்ந்த 10 ஆம் தரத்தில் கல்வி கற்பவர் ஆவார்.

இந்த மாணவி பேஸ்புக் மூலம் சந்தேக நபரான இளைஞனுடன் காதல் வயப்பட்டுள்ளார். வீட்டை விட்டு வெளியேறி நானுஓயாவில் இளைஞனை சந்தித்து அவனுடன் அப்புத்தளைக்கு ரயிலில் சென்றதாக விசாரணையில் மாணவி தெரிவித்துள்ளார்.

மாணவியின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும், அவர் தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மகளை காணவில்லை என தந்தை லிந்துலை பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டை அடுத்து, மாணவியின் இருப்பிடத்தை கண்டுபிடித்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாணவி மருத்து பரிசோதனைகளுக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரேலில் இலங்கையர்கள் பயணித்த பஸ்ஸில் தீ விபத்து : ஒருவர் காயம்!!

இஸ்ரேலில் விவசாய தொழில் ஈடுபட்டிருந்த இலங்கையர்கள் பயணித்த பஸ் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த பஸ்ஸானது இஸ்ரேலில் உள்ள கிரியேட் மலாக்கி என்ற பகுதியில் வெள்ளிக்கிழமை (18) காலை பயணித்துக்கொண்டிருக்கும் போது பஸ்ஸில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்த பஸ்ஸில் 20 இலங்கையர்கள் பயணித்துள்ள நிலையில் அவர்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

தீ விபத்தின் போது பஸ்ஸில் இருந்த இலங்கையர்கள் ஜன்னல்களை உடைத்து பஸ்ஸிலிருந்து வெளியே குதித்து தங்களது உயிரை காப்பாற்றியுள்ளதாக இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் இந்த தீ விபத்தின் போது ஒரு இலங்கையர் காயமடைந்துள்ள நிலையில் அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என வைத்தியர்கள் கூறியுள்ளதாக இலங்கை தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

குடும்பத்தை காப்பாற்ற வெளிநாடு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!!

பஹ்ரைனில் இருந்து இந்திய திரும்பிய 27 வயது இந்திய இளைஞர், விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருந்த நிலையில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

கேரளாவை சேர்ந்த 27 வயது இந்திய இளைஞர் பஹ்ரைன்-கோழிக்கோடு விமானத்தில் இந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது.

குறித்த இளைஞர் அப்பா, அம்மா மற்றும் 3 தங்கைகள் அடங்கிய குடும்பத்தை காப்பாற்றும் கனவுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பஹ்ரைன் சென்றுள்ளார்.

பஹ்ரைன் சென்றது முதல் தொடர்ச்சியாக காய்ச்சல், சளி உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார் .

ஆனால் நாட்கள் செல்ல செல்ல உடல்நிலை மோசமானதால் சிகிச்சைக்காக தாயகம் திரும்பய நேரத்தில் விமானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். பெரிய கனவுகளுடன் சென்ற அவர் உயிரற்ற உடலாக வீட்டுக்கு வந்தது குடும்பத்தினர் மற்றும் ஊர்மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெளிநாடொன்றில் கை-கால்கள்-குடல்கள் அழுகிய நிலையில் இலங்கை கடற்றொழிலாளர்கள்!!

மடகஸ்கார் சிறையில் இலங்கை கடற்றொழிலாளர்கள் 8 பேர் உணவு -நீர் வழங்கப்படாமல் நோய்க்குள்ளாகி மிக மோசமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவும் ஏனையவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் சிலரின் கை-கால்கள் மட்டுமல்ல, குடல்களும் அழுகிவருவதாக தெரியவந்துள்ளது.

வென்னப்புவவைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் குழு ஒன்று, சர்வதேச கடல் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு 50 நாட்களாக உணவு அல்லது மருத்துவ சிகிச்சை இல்லாமல் அவதிப்படுவதாக இலங்கை சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வென்னப்புவ துறைமுகத்திலிருந்து ஏப்ரல் 5, 2025 CHW 899 என்ற W.P. குமார என்ற பெயரில் பதிவுசெய்யப்பட்ட ‘ருத் பாபா VI’ படகில் புறப்பட்ட தங்கள் குழு, ஜூன் 2 மடகஸ்கார் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எட்டு பேர் கொண்ட தங்கள் மீன்பிடிக் குழுவை மடகஸ்கார் அரசு தடுத்து வைத்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக் கொடியுடன் கூடிய மீன்பிடிக் கப்பலான ரூத் பாபா VI ஐ மடகஸ்கார் கடற்கரையிலிருந்து “பெசலம்பி” பகுதியில் உள்ள செயிண்ட்-ஆண்ட்ரேவின் வடக்கே உள்ள கடல் பகுதியில் 16 டன்களுக்கும் அதிகமான சுறாக்களை சட்டவிரோதமாகப் பிடித்தபோது கைது செய்ததாக மடகஸ்கார் அரச அதிகாரிகள் குறித்த பத்திரிகை வினவிய போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

80 வயது மூதாட்டியின் மரண தண்டனை : பல ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்ட தீர்ப்பு!!

அம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தால் 80 வயது மூதாட்டி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (18.07.2025) இரத்து செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

1993ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் பிரதிவாதிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மோதரப்பிலுவாவில் ஒருவரைக் கொலை செய்ததாக, மேலும் இருவருடன் இணைந்து, சிறிமா எடிரிசூரியா குற்றவாளியாக 1999ஆம் ஆண்டு வழக்கில் குறிப்பிடப்பட்டார்.

இந்த வழக்கு பல ஆண்டுகள் தாமதிக்கப்பட்ட நிலையில் மறுசெய்துவிசாரணைகள் நடைபெற்றன. மேலும் மற்ற சந்தேகநபர்கள் இருவரும் வழக்கின் போது உயிரிழந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் முடிவில், 2023ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக மூதாட்டி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவைப் பரிசீலித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், பிரதிவாதிக்கு எதிராக வழங்கப்பட்ட சாட்சியங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும், அவை தெளிவற்றவையாகவும் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, மரண தண்டனையை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லாததால், மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

விபசாரத்துக்கு மறுத்த காதலியை கொடூரமாக குத்திக் கொன்ற காதலன்!!

நாடு முழுவதும் சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், தனது கணவரை பிரிந்து காதலனுடன் வாழ்ந்து வந்த இளம்பெண் விபசாரத்திற்கு மறுத்ததால், காதலியைக் கத்தியால் குத்தி கொடூரமாக கொலைச் செய்த காதலனைப் போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் கோணசீமா மாவட்டம் மெரகபாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பா (22). இவருக்கும், நெருங்கிய உறவினர் ஒருவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் நிச்சயித்து திருமணமானது.

திருமணமான சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர் புஷ்பா, விஜயவாடாவிற்கு சென்று விட்டார்.

விஜயவாடாவில் தங்கியிருந்த போது, அதே பகுதியில் கார் ஏசி மெக்கானிக்காக பணிபுரியும் ஷேக் ஷாம்(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்த நிலையில், சித்தார்த்த நகரில் உள்ள பி.சவரம் கிராமத்தில் தனியாக வாடகைக்கு ஒரு வீடு எடுத்து, இருவரும் கணவன், மனைவி போல் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் மதுபோதைக்கு ஷாம் அடிமையானதால், பணத்தேவை அதிகரித்ததில், பணம் கேட்டு புஷ்பாவை அடிக்கடி துன்புறுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல் குடிபோதையில் வீட்டிற்கு சென்ற ஷாம், அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், புஷ்பாவை விபச்சாரத்தில் ஈடுபடுமாறும் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த புஷ்பா மறுத்துள்ளார். இதனால் ஷாம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், புஷ்பாவை சரமாரியாக குத்தினார்.

இதில் புஷ்பா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர் ஷாம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புஷ்பாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஷேக் ஷாமை தேடி வருகின்றனர்.

“இருக்கவே பிடிக்கவில்லை” சகோதரிக்கு தகவல் அனுப்பிவிட்டு 17 வயது மாணவி விபரீத முடிவு!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் நாச்சியார்சத்திரம் விவேகானந்தர் தெருவில் வசித்து வருபவர் 17 வயது சிறுமி. அவர் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். இவரது தந்தை உயிரிழந்த நிலையில் மாணவி தனது தாய் மற்றும் அக்காவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், மாணவி அவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இளைஞரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிந்து எதிர்ப்புகள் எழுந்ததால் காதலர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக இருவருமே பேசாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதனால் மன விரக்தியில் இருந்த மாணவி நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அக்கா செல்போனை எடுத்து காதலனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் காதலன் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஐ.டி.யில் இருந்து “அம்மாவை நல்லா பாத்துக்கோ, எனக்கு இருக்கவே பிடிக்கல, செத்துவிடலாம் என்று தோணுது, பையன் குடும்பத்தை சும்மா விடாதீங்க” என அக்காவிற்கு அனுப்பி விட்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கழுத்தளவு தண்ணீரில் மைக் பிடித்து நேரலை செய்த பத்திரிக்கையாளர் வெள்ளத்தில் அடித்துச் சென்ற அதிர்ச்சி!!

பாகிஸ்தானில் கழுத்தளவு தண்ணீரில் மைக் பிடித்து நேரலை செய்த பத்திரிக்கையாளர் வெள்ளத்தில் அடித்துச் சென்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளத்தில் நேரலை செய்த பத்திரிக்கையாளர்

பாகிஸ்தானில் கடந்த ஜூன் 26-ம் திகதி முதல் கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாகாணங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

இந்த வெள்ளத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் 40 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அதோடு, வெள்ளம் சூழ்ந்த இடங்களில் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில், வெள்ளம் காரணமாக ராவல்பிண்டியில் உள்ள சாஹான் அணை உடைந்திருப்பதால் அங்குள்ள பகுதிகள் மூழ்கின.

இந்நிலையில், ராவல்பிண்டியில் பத்திரிகையாளர் ஒருவர் கழுத்தளவு வெள்ளத்தில் இறங்கி மைக்குடன் நேரலை செய்து கொண்டிருந்தார். அவர் வெள்ளத்தில் அடித்துச் சென்று உயிரிழந்துள்ளார்.

தற்போது, இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் பாடசாலை செல்லும் சிறுமிகளிடையே கர்ப்பம் தரிக்கும் எண்ணிக்கை அதிகரிப்பு!!

பாடசாலை செல்லும் சிறுமிகளிடையே கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவது குறித்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கவலை தெரிவித்துள்ளார்.

ஊடக சந்திப்பொன்றில் நேற்று (18.07.2025) உரையாற்றிய அவர், 18 வயதுக்குட்பட்ட இளம் பாடசாலை மாணவிகளிடையே கர்ப்பமாவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதனால் இந்த இளம் பெண்கள் மிகப்பெரிய உடல் மற்றும் உளவியல் சவால்களை எதிர்கொள்கின்றனர். மேலும், அவர்களில் பலர் இளம் வயது கர்ப்பம் காரணமாக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்று அவர் கூறினார்.

மாணவர்களுக்கு முடிவுகளை எடுக்கத் தேவையான அறிவு மற்றும் புரிதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட, பாடசாலைகளில் விரிவான பாலியல் கல்வியை வழங்குவது குறித்து கல்வி அமைச்சுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

பிறக்கும் குழந்தைகளை கைவிடுவதற்கு அல்லது அநாதரவானவர்களாக மாற்றுவதற்கு வழிவகுக்கும் சூழ்நிலைகளைத் தடுப்பது அவசியமாகும்.

இல்லையெனில் அவர்கள் பெற்றோரின் கவனிப்பு இல்லாமல் வளர்ந்து பல்வேறு சமூக குறைபாடுகளை எதிர்கொள்வார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

திட்டமிடப்படாத கர்ப்பத்தின் சுமையும் அதன் விளைவாக ஏற்படும் சமூக களங்கமும் பெரும்பாலும் இளம் பெண்கள் மீது மட்டுமே விழுகின்றன. இதனை நாம் உடைக்க வேண்டும்.

ஒரு குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்க ஒருவர் தயாராக இல்லை என்றால், பாதுகாப்பற்ற முறைகளை நாடுவது அல்லது பிறந்த பிறகு குழந்தையை கைவிடுவது குற்றமாகும்.

எதிர்பாராத கர்ப்பங்களைத் தவிர்க்க, அறிவியல் கருத்தடை முறைகளைப் பின்பற்றவும், பொறுப்பான தேர்வுகளை எடுக்கவும் இளைஞர்கள் முன்வரவேண்டும் எனவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய புலம்பெயர்தல் விதிகளில் மாற்றம் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்!!

எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி முதல் புதிய புலம்பெயர்தல் விதிகளை அறிமுகம் செய்ய உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, திறன்மிகுப் பணியாளர்கள் விசாவில் பிரித்தானியா செல்பவர்களுக்கான (skilled workers) குறைந்தபட்ச வருமான வரம்பு, 38,700 பவுண்டுகளில் இருந்து 41,700 பவுண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது.

மேலும், பிரித்தானியாவில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வருமான வரம்பு உயர்த்தப்படுவதைத் தொடர்ந்து, புதிய விதிகளுக்கு அமைய, 111 வகையான தொழில் வாய்ப்புக்கள் வெளிநாட்டவர்களுக்கு இல்லாமல் போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இனி பிரித்தானியாவில் வெளிநாட்டவர்கள், பராமரிப்பு பணியாளர் (care worker) தொழிலுக்கு அமர்த்தப்பட மாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, குறித்த விதிகள் அனைத்தும் இம்மாதம் 22ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ளன என்று பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன், 2026ஆம் ஆண்டின் இறுதியில், பட்டப்படிப்பு படிக்காதவர்களுக்கான வேலைகள் செய்பவர்கள் முதல் சில பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்துவர முடியாது எனவும் விதிகள் கூறுகின்றன.

மேலும், ஆண்டு இறுதியில் மொழித்தகுதி, ஸ்பான்சர்ஷிப் சான்றிதழ்கள் (CoS), மற்றும் குடும்ப விசா தொடர்பிலும் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த திடீர் முடிவால் பல நாடுகளில் உள்ள பல்வேறுபட்ட மக்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் இல்லாது போகும் அபாயம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் மூவர் அதிரடியாக கைது : காரணம் இதுதான்!!

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரிக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (18.07.2025) இடம்பெற்றுள்ளது.

வவுனியா, பண்டாரிக்குளம் பொலிஸார் கூமாங்குளம் பகுதியில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞன் ஒருவரிடம் இருந்து 3 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ்போதைப் பொருளும், நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்த 31 வயது இளைஞன் ஒருவரிடம் இருந்து 266 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும்,

யாழ்ப்பாணம், நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவரிடம் இருந்து 230 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும் மீட்க்கப்பட்டன.

இதனையடுத்து, குறித்த மூவரையும் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

வவுனியா கூமாங்குளம் வன்முறைச் சம்பவம் : மேலும் 5 பேர் கைது!!

வவுனியா – கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் நேற்றையதினம் (18.07.2025) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் வீதியில் விழுந்து மரணமடைந்திருந்தார்.

இதன்போது அப் பகுதியில் பயணித்த போக்குவரத்து பொலிஸாரே குறித்த மரணத்திற்கு காரணம் என தெரிவித்த ஒரு குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.

மரணம் தொடர்பில் விசாரணை செய்ய சென்ற பொலிஸார் மீது அந்த பகுதியில் குழுமி இருந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 5 பொலிஸார் காயமடைந்ததுடன், பொலிஸாரின் இரு மோட்டர் சைக்கிள்கள் மற்றும் கப் ரக வாகனம் ஒன்றும் சேதமாக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் அரச சொத்துக்களை சேதப்படுத்தியமை, மக்களை ஒன்று கூட்டியமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறை ஏற்படுத்தியமை, இறப்புக்கு காரணமாக இருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் இருவர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளையடுத்து மேலும் 5 பேர் நேற்று (18) கைது செய்யப்பட்டனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.