பாம்பைக் கழுத்தில் போட்டு காணொளி எடுத்தவருக்கு நேர்ந்த கதி!!

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ பாம்பைக் கழுத்தில் போட்டு காணொளி எடுத்த ஒருவரைப் பாம்பு தீண்டியதால் உயிரிழந்துள்ளார்.

தீபக் மஹாவர் என்ற 42 வயதுடைய பொதுமகன் ஒருவர் பாம்புகளைப் பிடிப்பதில் அனுபவமுள்ளவராவார்.

பர்பத்புரா கிராமத்தில், ஒரு கல்வி நிறுவனத்தில் கொடிய விஷமுள்ள பாம்பு பதுங்கி இருப்பதாகவும், அதைப் பிடிக்குமாறும் தீபக் மஹாவருக்கு அழைப்பு வந்துள்ளது.

இதையடுத்து அங்குச் சென்ற அவர், அந்த விஷப்பாம்பை பிடித்துள்ளார். பின்னர் குறித்த விஷப் பாம்பை அவர் கழுத்தில் போட்டு உந்துருளியில் செல்லும் போது காணொளி எடுத்துள்ளார்.

இந்த நிலையில் விஷப்பாம்பு தீபக் மஹாவரை தீண்டியுள்ளது. பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வீதியால் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம் : கதறும் உறவுகள்!!

உறவினரின் வீட்டுக்கு வீதியால் நடந்து சென்ற சிறுவனைப் பின்னால் வந்த கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மேற்படி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா நெற் ஊடகவியலாளர் பாஸ்கரன் கதீஷனுக்கு ஊடகத்துறைக்கான கலாநேத்ரா விருது!!

நேற்று (18.07.2025) இடம்பெற்ற வவுனியா பிரதேச செயலக கலாசார விழாவில் வவுனியா நெற் இணையத்தின் இளம் ஊடகவியலாளரான பாஸ்கரன் கதீஷன் ஊடகத்துறைக்கான கலாநேத்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

2013 ஆம் ஆண்டு தனது 17 வயதில் வவுனியா நெற் இணையத்தின் ஊடகவியலாளராக இணைந்துகொண்ட பாஸ்கரன் கதீசன் வவுனியா மாவட்டத்தின் துணிச்சல்மிக்க இளம் ஊடகவியலாளராகவும் செய்திகளை நேர்மையாகவும் நடுநிலையாகவும் வெளிகொண்டுவருபவராகவும் தன்னுடைய பணியை திறம்பட செய்துவந்தார்.

இவரது துணிச்சல், நேர்மை, விடாமுயற்சி என்பவற்றின் பலனாக ஓர் சில வருடங்களிலேயே சர்வதேச ஊடகங்கள், தேசிய ஊடகங்கள், தேசிய தொலைக்காட்சிகள், வானொலிகள், தேசிய பத்திரிகைகள் என்பவற்றில் ஊடகவியலாளராக பணியாற்றும் சந்தர்ப்பங்களை பெற்றுக்கொண்டு திறமையாகவும் நடுநிலைமையாகவும் செயற்பட்டு வருகின்றார்.

இவருடைய இந்த 13 வருட ஊடகப் பயணத்தில் பல்வேறு சவால்கள், அச்சுறுத்தல்கள், வழக்குகள் காணப்பட்டபோதும் அவை அனைத்தையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு மாவட்டத்தின் மக்கள் பிரச்சனைகளையும், பிரதேச நிகழ்வுகளையும், இலைமறை காய்களாக இருக்கும் கலைஞர்களின் திறமைகளையும் வெளிக்கொண்டுவரும் துணிச்சல்மிக்க இளம் ஊடகவியலாளராக வலம்வருகின்றார்.

இவரது 13 வருட சேவையை பாராட்டி கெளரவிக்கும் முகமாக வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் வவுனியா பிரதேச கலாசார பேரவையும் பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய கலாசார விழாவில் ஊடகத்துறைக்கான கலாநேத்ரா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இவருக்கு வவுனியா மாவட்டத்தின் பல்வேறு துறைசார்ந்தோர் உட்பட வவுனியா மக்கள் பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துவருகின்றனர்.

வவுனியா நெற் இணையத்தின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய பாஸ்கரன் கதீசனை வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக பாராட்டி வாழ்த்துவதில் நாமும் பெருமைகொள்கின்றோம்.

இன்று இடம்பெற்ற கோரவிபத்து : 10 பேர் காயம்!!

அநுராதபரம் -திறப்பனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (19.07.2025) காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியுடன் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கெக்கிராவையிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த வேனொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின் போது வேனில் பயணித்த 10 பேர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பில் திறப்பனை போக்குவரத்து பொலிஸ் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

கொழும்பில் 21 இந்திய பிரஜைகள் அதிரடியாக கைது!!

கொழும்பு புறநகர் கிருலப்பனை பகுதியில் சட்டவிரோதமாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 இந்தியப் பிரஜைகள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவினரால் அதிரடியாக கைது செய்யபட்டுள்ளனர்.

இந்திய பிரஜைகள் சுற்றுலா விசாவில் இலங்கை வந்ததும், அவர்களது விசா காலம் முடிவடைந்த பின்னரும் கிருலப்பனையில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்து ஆன்லைன் சூதாட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசாரணைப் பிரிவின் இடர் மதிப்பீட்டுப் பிரிவு அதிகாரிகள், தரவு பகுப்பாய்வு மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைதான இந்தியய பிரஜைகள் வெலிசர தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இலங்கையை உலுக்கிய சம்பவம் : கணவனைக் கொன்று வீட்டின் பின்புறத்தில் புதைத்த மனைவி!!

அம்பாந்தோட்டை , வலஸ்முல்ல, ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த ஆணின் சடலம் வலஸ்முல்ல பொலிஸாரால் நேற்று (17) மீட்கப்பட்ட நிலையில் அதுதொடர்பில் பொலிஸார் பகீர் தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன 51 வயதுடைய நபரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வலஸ்முல்ல, ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய நபர் ஒருவர் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல்போயுள்ளதாக வலஸ்முல்ல பொலிஸாருக்கு கடந்த 08 ஆம் திகதி முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

பின்னர், காணாமல்போன நபரின் வீட்டின் பின்புறத்தில் கடந்த புதன்கிழமை (16) மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த மனித கால் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல்போனவர் தினமும் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.

மனைவியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் , கடந்த மே மாதம் 11 ஆம் திகதி தனக்கும் தனது கணவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாகவும் தகராறின் போது தனது கணவனை பொல்லால் தாக்கி கொலை செய்து சடலத்தை வீட்டின் பின்புறத்தில் புதைத்தாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து வீட்டின் பின்புறத்தில் நேற்று (17.07) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த கணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரான மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபரொருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வயலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை : தாயைத் தேடி பொலிஸார் தீவிர விசாரணை!!

குருணாகல், மாவத்தகம, பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வயலில் நேற்று (17) பிற்பகல் பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை விட்டுச் சென்ற தாயை தேடி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் அமைந்துள்ள வயலில் உள்ள மரத்திற்கு அடியில் குழந்தை ஒன்று இருப்பதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்க தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குழந்தையை மீட்டு மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மீட்கப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.

இந்த குழந்தையின் தாய் குழந்தையை வயலில் விட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகித்த பொலிஸார், குழந்தையின் தாயை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து சிசிரிவி கமராக்களையும் சோதனை செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழில் உதவிப் பிரதேச செயலாளர் மரணம் : கணவன் அதிரடியாக கைது!!

சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தீயில் எரிந்து உயிரிழந்த தமிழினியின் கணவரான கிராம சேவையாளர் சதீஸ் கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் தீயில் எரிந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் தமிழினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குறித்த பெண் உயிரிழக்கும் போது ஆறு மாதகர்ப்பிணியாக இருந்த நிலையில், தாய் மற்றும் ஆறு மாத சிசுவை உயிருடன் மீட்கும் பணிகளும் இடம் பெற்ற வேளை சிகிச்சை பயனளிக்காத நிலையில் அவரது மரணம் சம்பவித்தது.

இந்நிலையில் இறந்த தமிழினியின் பெற்றோர் தரப்பில் கணவரான கோப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வரும் சதீஸ் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் கொழும்பில் இருந்து வந்த விசேட பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, படுக்கை அறையில் மெழுகுவர்த்தி எரிந்து தீ விபத்து ஏற்பட்டதாக வைத்தியசாலை முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

குப்பை உணவும் கொடூர துன்புறுத்தலும் : சவுதியில் இலங்கைப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற 51 வயது தம்மிக்கா இலங்கை பெண் ஒருவர் குப்பைத் தொட்டியிலுள்ள உணவை உட்கொள்வதாகவும் தகாத முறைக்கு தான் உட்படுத்தப்பட்டு துன்புறுத்துவதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பிலான கருத்துக்களை கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து, தன்னை காப்பாற்றுமாரு கோரிக்கை விடுத்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

“குருநாகல் திம்புலாகல பகுதியில் இருந்து சவுதிக்கு பணிப் பெண்ணாக சென்ற 51 வயது தம்மிக்கா என்ற பெண் தகாத முறைக்கு உட்படுத்தப்படுவதோடு, மற்றும் பல துன்பங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், குப்பைத் தொட்டியில் போடும் உணவையே தான் உட்கொண்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். குருநாகலில் உள்ள வெளிநாட்டு முகவர் மூலமாக 2024 ஆம் ஆண்டு ஜுலை 03 திகதி சவுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் முதலில் ஒரு வீட்டில் வேலை செய்யும் போது பல துன்புறுத்தல்களுக்கு முகம் கொடுத்து வந்ததாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தான் முகவர் நிலையத்துக்கு வந்த போது வேறு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அங்கும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவம் தெரிவித்துள்ளார்.

இதன்படி தான் உடம்பில் சக்தி இழக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணின் மகள், தனது தாய் இந்த விடயங்களை தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்ததாகவும், இது தொடர்பில் முகவர் நிலையத்திற்கு கதைத்தபோது எட்டு இலட்சம் பணத்தை செலுத்தியபின்னர் கதைக்குமாறும் தெரிவித்ததாக குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், தனது அம்மாவை இலங்கைக்கு அழைத்துவர உதவி செய்யுமாறு ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாணவன் அதிரடியாக கைது : வங்கிக் கணக்கிற்குள் அத்துமீறி நுழைந்து பெருந்தொகை பணம் கொள்ளை!!

இலங்கையில் இணையம் ஊடாக வங்கிக் கணக்கொன்றுக்குள் நுழைந்து 5 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ருஹுணு பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மாணவர் வவுனியாவைச் சேர்ந்த 25 வயதுடையவராகும். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இளைஞனுக்கு எமனான மோட்டார் சைக்கிள் : அதீத வேகத்தால் பறிபோன வாழ்க்கை!!

அரநாயக்க வீதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, தேவதகம நோக்கி செல்லும் வீதியின் வசந்தகம சந்தி அருகில் உள்ள விமோல பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் 22 வயதுடைய இளைஞர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிவேகத்தின் காரணமாக வேகக்கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியைவிட்டு விலகி கால்வாய்க்கு அருகிலுள்ளள மின்கம்பத்தில் மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த அடைந்த இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

 

அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம் : நூலிழையில் உயிர் தப்பிய 191 பயணிகள்!!

நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, இண்டிகோ விமானம் மும்பையில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

இதனால் பயணிகள் அனைவரும் அவதி அடைந்தனர். டில்லியில் இருந்து கோவாவுக்கு நேற்று இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தில் 191 பேர் இருந்தனர்.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து, அவர் விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார்.

பின்னர் விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையத்தில் பத்திரமாக நேற்றிரவு 9.53 மணிக்கு தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பணிகள் 191 பேரும் வெளியேற்றப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை விமான நிறுவனம் செய்து கொடுத்தது.

இண்டிகோ விமானம் புவனேஸ்வரிலிருந்து வடக்கே 100 கடல் மைல் தொலைவில் பறந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக மும்பை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, டில்லி விமான நிலையத்தில் இருந்து கோவா நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.

வேறு வழி இல்லாத நிலையில் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானம் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன்பு தேவையான சோதனைகள் மேற்கொள்ளப்படும். பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி பரிசை வென்ற அதிஸ்டசாலி!!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலையை தேசிய லொத்தர் சபை வழங்கியுள்ளது.

மெகா பவர் 2210 ஆவது சீட்டிழுப்பில், 47 கோடியே 45 லட்சத்து 99 ஆயிரத்து 422 ரூபா சூப்பர் பரிசுடன் கூடிய வெற்றி பெற்ற லொட்டரி சீட்டை, கொக்கரெல்ல பகுதியைச் சேர்ந்த விற்பனை முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலா விற்பனை செய்துள்ளார்.

தேசிய லொத்தர் சபை ஏற்பாடு செய்த விடேச நிகழ்வு ஒன்றில் கொழும்பு மேயர் வ்ராய் கெலி பல்தசாரினால் லொட்டரி பரிசை வென்ற நபருக்குரிய காசோலை உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

துணை மேயர் ஹேமந்த வீரகோன், தேசிய லொத்தர் சபை தலைவர் M.D.C.A. பெரேரா மற்றும் பொது முகாமையாளர் ஏ.எம். ஆரிஃப் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணாக மாறிய அரை நிர்வாணமாக நடமாடிய தாய்லாந்து சுற்றுலாப் பயணி!!

அருகம் குடாவில் ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் மேலாடையின்றி அரை நிர்வாணமாக நடமாடி சர்ச்சையை ஏற்படுத்திய தாய்லாந்து சுற்றுலா பயணி , நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆணிலிருந்து பெண்ணாக மாறியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

சுற்றுலா பயணி ஆணாக பிறந்து முழு பெண்ணாக மாறுவதற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.

சுற்றுலாப் பயணி மேலாடையின்றி இருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தபோது இந்த சம்பவம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

கடந்த 14 ஆம் திகதி சுற்றுலாப் பயணி அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும் தெரிவித்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இந்நிலையில், அவருக்கு ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்களும் ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்படி, அவருக்கு அநாகரீகமாக நடந்து கொண்டமைக்கு இரண்டு வார சிறைத்தண்டனையும், பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தமைக்காக ஒரு மாத சிறைத்தண்டனையும் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

வழக்கு விசாரணைகளின் போது அவரது பாலினத்தை பெண் என நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும், அவரின் கடவுச்சீட்டு புகைப்படம் ஒன்லைனில் பகிரப்பட்டது. அதில் ‘M’ (ஆண்) எனவும், பாலினம் மற்றும் ‘Mr.’ எனவும் குறிப்பிடப்பட்டிருந்தமை திருப்பத்தை ஏற்படுத்தியது.

இலங்கையில், குறிப்பாக பொது ஒழுக்கச் சட்டங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், பாலினம் எவ்வாறு சட்டப்பூர்வமாக விளக்கப்படுகிறது என்பது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது.

அவரது அங்க அடையாளத்திற்கும் உத்தியோகபூர்வ ஆவணங்களுக்கும் இடையில் வேறுபாடு காணப்படுவது, பாலின பன்முகத்தன்மையை முழுமையாகப் பூர்த்தி செய்யாத சட்ட அமைப்புகளில் திருநர்களின் உரிமைகள் மற்றும் அங்கீகாரம் குறித்து பல கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணி அமெரிக்க நாட்டவர் ஒருவருடன் இலங்கைக்கு வந்து 11 முதல் 20 ஆம் திகதி வரை அருகம் குடாவில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் தங்குமிடத்தை முன்பதிவு செய்துள்ளமை தெரியவந்ததுள்ளது.

கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இருவர் காயம்!!

கொழும்பு – மஹரகம நாவின்ன ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று முன்தினம் புதன்கிழமை (16.07) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அழகாய் இருந்ததால் மனைவிக்கு மொட்டையடித்த கணவன் : பெண்ணின் விபரீத முடிவு!!

இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த பெண்ணொருவர், ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஷார்ஜாவில் தனது ஒரு வயது மகளுடன் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் கேரளாவின் கொல்லத்தைச் சேர்ந்த 32 வயது பெண் விபன்சிகா. இவருக்கும் நிதீஷ் என்பவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. பின்னர் இருவரும் ஷார்ஜாவில் குடியேறினர்.

இந்த தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை இருந்துள்ளது. ஆனால் நிதீஷிற்கும், விபின்சிகாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் தனித்தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் விபன்சிகாவும், அவரது ஒரு வயது மகளும் கடந்த 8ஆம் திகதி அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர்.

அப்போது குழந்தை சுவாசம் தடைபட்டு இறந்தது தடய அறிவியல் ஆய்வில் தெரிய வந்தது. மேலும், விபன்சிகா எழுதிய குறிப்பு ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில் மன அழுத்தம் மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் பற்றிய விவரங்கள் இடம் பெற்றிருந்தன.

இதற்கிடையில், விபன்சிகாவின் பெற்றோர் கேரள பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். விபன்சிகாவின் தாய் பல பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அவர் கூறும்போது, திருமணம் முடிந்ததும் வரதட்சணை கேட்டு தொடர்ச்சியாக நிதீஷ் தொல்லை கொடுத்ததாகவும், அவர் அழகாக இருந்ததால் அவரை மொட்டை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மகளின் உடலை கேராளாவுக்கு கொண்டுவர உயிரிழந்த பெண்னின் குடும்பத்தினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூற்பட்டுகின்றது.