குருணாகல் – புத்தளம் வீதியில் பாதெனிய மற்றும் அவுலேகம ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று புதன்கிழமை (16.07.2025) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று லொறி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் காரில் பயணித்த இருவரும் லொறியின் சாரதியும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னட நடிகை ரன்யா ராவ்வுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னட நடிகையான ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், 14 கிலோ தங்கத்தைத் தனது உடலில் மறைத்துக் கடத்தி வந்த குற்றச்சாட்டிலே குறித்த நடிகை கைது செய்யப்பட்டார்.
இதை அடுத்து அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் கணக்கில் வராத 2.67 கோடி ரூபாய் பணமும் , 2.06 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன.
இதேவேளை, தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரன்யா ராவ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், ரன்யா ராவுக்கு சொந்தமான 34 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை அந்நாட்டு அமுலாக்கத்துறை முடக்கியுள்ளது.
குறித்த தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த ஓராண்டு சிறைத் தண்டனை காலத்தில் ரன்யா ராவுக்கு பிணை வழங்கக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை டிரேட்டன் பகுதியில் கார் ஒன்றும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் நான்கு பேர் காயங்களுக்கு உள்ளாகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (17.07.2025) காலை 8 30 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியாவில் இருந்து கொழும்பு பகுதியை நோக்கி பயணித்த காரும் கொழும்பில் இருந்து நுவரெலியா பகுதியை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி உட்பட நான்கு பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காருக்கு பகுதியளவிலும் முச்சக்கர வண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியின் சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிலியந்தலை- தேசிய பாடசாலையில் கல்விகற்கும் மாணவனொருவன் வெள்ளை வானில் வந்த ஒரு குழுவினரால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தரம் 11 இல் கற்கும் மாணவன், நேற்று (16.07.2025) மாலை 4.00 மணியளவில் மேலதிக வகுப்புக்கு செல்வதற்காக சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பதினைந்து வயது மாணவன் இரத்தினபுரி பகுதியில் வெள்ளை வேனில் இருந்து குதித்து தப்பிச் சென்றுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஹதுடுவ பொலிஸார் வானையும் சிறுவனை கடத்தியதாகக் கூறப்படும் நபர்களையும் கைது செய்வதற்காக விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Insider Monkey என்ற தளம் உலகில் அழகான பெண்கள் கொண்ட 20 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
கொலம்பியா
இந்த பட்டியலில், தென் அமெரிக்க நாடான கொலம்பியா முதலிடம் பிடித்துள்ளது. கொலம்பிய பெண்கள், கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் துடிப்பான ஆளுமைகளுக்காக உலகளவில் போற்றப்படுகிறார்கள்.
சோபியா வெர்கரா மற்றும் கேடலினா சாண்டினோ மொரேனோ போன்றோர் ஈர்க்கக்கூடிய ஆளுமைகளுக்காகப் பாராட்டப்படுகிறார்கள்.
போலந்து
மத்திய ஐரோப்பிய நாடான போலந்து இரண்டாம் இடம் பெற்றுள்ளது. உயர்ந்த கன்ன எலும்புகள் மற்றும் முழுமையான உதடுகள் ஆகியவற்றிற்காக போலந்து பெண்கள் பாராட்டப்படுகிறார்கள்.
கிரீஸ்
தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடான கிரீஸ் மூன்றாவது இடம் பெற்றுள்ளது.
ரஷ்யா
உயரமான உடல் அமைப்பு, வெளிர் தோல் காரணமாக ரஷ்யா பெண்கள் 4வது இடம் பிடித்துள்ளனர்.
செக் குடியரசு
மத்திய ஐரோப்பிய நாடான செக் குடியரசு 5வது இடம் பிடித்துள்ளது. செக் பெண்கள், பெரும்பாலும் சர்வதேச அழகுப் போட்டிகளில் தனித்து நிற்கிறார்கள்.
ஸ்வீடன்
ஸ்காண்டிநேவிய நாடான ஸ்வீடன் இந்த பட்டியலில் 6வது இடம் பிடித்துள்ளது. ஸ்வீடன் பெண்கள் தங்களின் பொன்னிற கூந்தல், நீல நிற கண்கள் மற்றும் நேர்த்தியான உருவங்களுக்கு பெயர் பெற்றவர்கள்.
ஐஸ்லாந்து
நோர்டிக் தீவு நாடான ஐஸ்லாந்து இந்த பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ளது.
அமெரிக்கா
அமெரிக்கா இந்த பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்காவின் கலாச்சாரக் கலவை, அனைத்து இனங்களையும் தோற்றங்களையும் கொண்ட பெண்களை ஒன்றிணைக்கிறது.
பிரேசில்
தென் அமெரிக்கா நாடான பிரேசில், இந்த பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளது.
பூர்வீக, ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பிய பாரம்பரியத்தின் கலவையானது, பிரேசில் பெண்களின் அழகில் ஒரு அற்புதமான பன்முகத்தன்மையை உருவாக்குகிறது.
ஜப்பான்
கிழக்கு ஆசிய நாடான ஜப்பான், இந்த பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது. ஜப்பானிய பெண்கள், வெளிர் தோல், கருப்பு அல்லது பழுப்பு நிற கண்கள் மற்றும் அடர் முடி கொண்டவர்கள்.
இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகர் பதவிக்கு பாத்திமா ஹஸ்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கை வரலாற்றில் இந்த பதவிக்கு நியமிக்கப்படும் முதலாவது முஸ்லிம் பெண் என்ற வரலாற்று சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு – ஏறாவூரைச் சேர்ந்த ஹஸ்னா, இந்த நியமனத்திற்கு முன்னர் இலங்கை அஞ்சல் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிப் போதனாசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
அஞ்சல் திணைக்களம் கடந்த ஆண்டு நடத்திய உதவி அஞ்சல் அத்தியட்சகர்கள் தேர்வில், அஞ்சல் துறையில் சேவையாற்றிய 39 பேர் சித்தியடைந்திருந்தனர்.
அவர்களுள் 12 பேர் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த அடிப்படையில், பாத்திமா ஹஸ்னா, தன் திறமை மற்றும் பணிப்பாட்டின் மூலமாக முன்னோடியாக இந்த உயரிய பொறுப்புக்கு நியமிக்கப்படுவதன் மூலம், முஸ்லிம் பெண்களுக்கான ஊக்கத்தையும் வழிகாட்டுதலையும் உருவாக்கியுள்ளார்.
அதேவேளை அஞ்சல் திணைக்கள வரலாற்றில் இதுவரை முஸ்லிம் பெண்ணொருவரும் இந்த பதவியை வகித்ததில்லை என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளால் கைவிடப்பட்டு முதியோர் காப்பகத்தில் இருந்த போது, இவர்களின் நட்பு காலப்போக்கில் காதலாக மாறிய நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
கேரளா திருச்சூர் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் விஜயராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 79 வயது ஆகிறது. இவருக்கு அதே முதியோர் இல்லத்தில் வசித்து வரும் 75 வயதான சுலோச்சனா உடன் நட்பு ஏற்ப்பட்டுள்ளது.
காதலிக்க வயது தடை இல்லை
இவர்களின் நட்பு காலப்போக்கில் காதலாக மாறிய நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அதற்காக சமூக நீதித்துறையிடம் தங்கள் வாழ்நாள் முழுவதையும் ஒன்றாக கழிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த நிலையில் சமூக நீதித்துறை அவர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற ஏற்பாடு செய்தது.
இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் பலரும் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். முதியோர் இல்லத்தில் நடந்த காதல் திருமணம் காதலிக்க வயது தடை இல்லை என்று எடுத்து காட்டியுள்ளது.
அம்பாந்தோட்டையில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டிருந்த மனித கால் வலஸ்முல்ல பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை, வலஸ்முல்ல, ரம்மல வராப்பிட்டிய ஹல்தொலகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே இவ்வாறு மனித கால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட மனித கால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன 51 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையின் காலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஐந்து பிள்ளைகளின் தந்தையை கொலை செய்து சடலத்தை வீட்டின் பின்புறத்தில் புதைத்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இவர் தினமும் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தந்தையின் குடும்பத்தினர் வலஸ்முல்ல பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் வீட்டின் பின்புறத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் புதைக்கப்பட்டிருந்த மனித கால் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதைக்கப்பட்டுள்ள சடலத்தின் மீதி பாகங்களை மீட்கும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கன்சிகா என்ற மாணவி தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்கள்,
மனித உடலின் உள் உறுப்புகள் பலவற்றின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகவும் குறைந்த நேரத்தில் கூறி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டம் கந்தப்பொல ரிலாமுல்ல தொடக்கப் பள்ளியில் 5ஆம் தரத்தில் இவர் பயின்று வருகிறார்.
குறித்த மாணவி, தனிம வரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களை 24 நொடிகளில் கூறியுள்ளதுடன், மனித உடலின் உள் உறுப்புகள் 168 இன் பெயர்களைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 4 நிமிடங்களில் கூறியுள்ளார்.
ஆப்பிள் (Apple) நிறுவனம், மடிக்கக்கூடிய ஐபோனை (IPHONE) 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேம்சங் (Samsung) உட்பட பல நிறுவனங்கள் தங்கள் மடிக்கக்கூடிய தொலைபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், மடிக்கக்கூடிய ஐபோனுக்கான (IPHONE) எதிர்பார்ப்பு சந்தைகளில் பன்மடங்கு அதிகரித்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விபரங்கள்
அத்துடன் வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம், இந்த சாதனம், iPhone 18 தொடரின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
முதல் தலைமுறை மடிக்கக்கூடிய ஐபோன் 2,000 அமெரிக்க டொலர் முதல் 2,500 அமெரிக்க டொலரிற்கும் மேல் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த மடிக்கக்கூடிய ஐபோனின் முதன்மை திரை 7.9 முதல் 8.3 அங்குலங்கள் வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளையில் உயிருக்கு போராடும் யானை ஒன்றை அந்தப் பகுதி மக்கள் பராமரித்து வருகின்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கண்டலமே அழகி என்று அழைக்கப்படும் காட்டு யானை, அதன் முன் காலில் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டுள்ளதால் மிகுந்த வேதனையில் இருப்பதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறித்த யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் பல மாதங்களாக சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் இதுவரை குணமடையவில்லை.
இந்நிலையில் காயம் அடைந்துள்ள காட்டு யானைக்கு உணவளிக்க வேண்டாம் என்று வனவிலங்கு அதிகாரிகள், அந்தப் பகுதி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். எனினும் துப்பாக்கிச் சூட்டுக் காயம் காரணமாக யானையால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கண்டலம் குளத்திற்கு அருகிலேயே யானை உள்ளதால் அதற்கான உணவினை தேடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, காட்டு யானை இருக்கும் இடத்தில் பல பிரதேசவாசிகள் முடிந்தவரை குறைந்த உணவை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், காட்டு யானையின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளும் நிறுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் அந்தப் பகுதிக்கு சென்ற சுற்றாடல் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் யானையின் நிலைமையை ஆராய்ந்துள்ளனர்.
காட்டு யானையின் உயிரைக் காப்பாற்ற வனவிலங்கு அதிகாரிகள் பல்வேறு சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.
இலங்கையில் யானைகளின் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளதுடன், அது அதிகளவான சுற்றுலா பயணிகளை கவர்ந்தவையாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கல்வி நோக்கங்களுக்காக TikTok சமூக வலைத்தளத்தை டிஜிட்டல் கருவியாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று TikTok சமூக ஊடகத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரிக்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
பொழுதுபோக்குக்கு அப்பால் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதும் இந்த கலந்துரையாடலின் முக்கிய அம்சமாகும்.
டிஜிட்டல் கல்வி பற்றிய அறிவை வழங்க பாடத்திட்டம், ஆராய்ச்சி மற்றும் ஒழுங்குமுறைகளில் தேவையான திருத்தங்களை சேர்ப்பதன் முக்கியத்துவத்தையும்,
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்தி TikTok மூலம் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அதன் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.
கல்வித் துறையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சீர்திருத்தங்களுடன் இத்தகைய ஒத்துழைப்புகளைப் பாராட்டிய பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, டிஜிட்டல்மயமாக்கல் செயல்முறையை விரைவில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை மேலும் வலியுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில் தெற்காசிய TikTok நிறுவனத்தின் அரசு உறவுகள் தலைவர் மற்றும் தெற்காசிய மக்கள் விவகாரத் தலைவர் ஃபெர்டூஸ் அல் மொட்டகின் (Ferdous Al Mottakin), பிரதமரின் மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.
சமூக ஊடகங்கள் மூலம் பெண்ணொருவரிடமிருந்து 4.7 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்த ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
சந்தேக நபர் மருதானையில் வசிக்கும் 43 வயதுடையவர் என்று குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து பரிசுப் பொதியை பெற்றதாக கூறி, சமூக ஊடகங்கள் மூலம் பல்வேறு நபர்களை இணைத்து மோசடி செய்யும் வலையமைப்பில் ஈடுபட்ட ஒரு பெண்ணையும் குற்றப் புலனாய்வுத்துறை கைது செய்துள்ளது.
59 வயதான அந்தப் பெண், கிராண்ட்பாஸ், ஹேனமுல்ல பகுதியை சேர்ந்தவராகும். மோசடி செய்யப்பட்ட பணம் அவருக்கு சொந்தமான கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையை ஆரம்பித்தது.
இதனையடுத்து நாட்டை விட்டு வெளியேறும் நோக்கத்துடன் அவர் நேற்று முன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
முன்கூட்டியே நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு, அவருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்ததால், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் அவரைக் கைது செய்து, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவரது விசாரணையின் போது பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என்றும், அதன்படி, மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளனர் என்றும் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாநகரசபையின் புதிய ஆணையாளர் பொ.வாகீசன் இன்று (17.07.2025) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
வவுனியா நகரசபையாக இருந்து மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதன் ஆணையாளராக இதுவரை வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் செயற்பட்டிருந்தார்.
இந்தநிலையில் புதிய ஆணையாளராக வடமாகாண மகளீர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளராக இதுவரை கடமையாற்றிய பொ.வாகீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமாகாண ஆளுனர் நா.வேதநாயகத்தினால் குறித்த நியமனம் நேற்றயதினம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதிய ஆணையாளர் இன்றையதினம் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
ஆடிப்பிறப்பு விழா நிகழ்வு வவுனியா தர்மலிங்கம் வீதியில் அமைந்துள்ள நவாலியூர் சோமசுந்தரப்புலவர் சிலையடியில் இன்று (17.07.2025) இடம்பெற்றது.
வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் மாநகரசபையின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் சோமசுந்தரபுலவரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, விபுலாநந்தா கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றது., ஆடிப்பிறப்பு தொடர்பான சிறப்புரைகளை கலாசார உத்தியோகத்தர் சி.கஜேந்திரகுமார், மற்றும் ஆசிரியர் வரதன் ஆகியோர் நிகழ்த்தியிருந்தனர்.
நிகழ்வில் மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன், மாநகர ஆணையாளர் வாகீசன், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத் தலைவர் ரவீந்திரன், மாநகரசபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள், பொது அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வவுனியா புகையிரத நிலையத்தில் தொடரூந்தில் மோதுண்டு நேற்று (16.07) இரவு ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்திலேயே குறித்த நபர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
இம் மரணம் தற்கொலையா அல்லது விபத்தா என்ற மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.