யாழில் இருந்து இளைஞர்கள் இருவர் கதிர்காமம் நோக்கி சைக்கிள் பயணம்!!

யாழில் இருந்து..

யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் யாழ். முனியப்பர் ஆலயம் முன்றலில் இருந்து கதிர்காமத்தை நோக்கி துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்தனர்.

குறித்த பயணமானது காலை 9 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. யாழ் தொல்புரத்தைச் சேர்ந்த குகநாதன் நிதுசன் (வயது 24) பாஸ்கரன் சுமித்தன் (22) ஆகிய இரண்டு இளைஞர்களுமே இவ்வாறு துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற விடயங்களை எடுத்துக்காட்டும் முகமாகவே இந்த துவிச்சக்கர வண்டி பயணம் அமையவுள்ளதாக குறித்த இளைஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட பயணம் முல்லைத்தீவைச் சென்றடைந்து அங்கிருந்து திருகோணமலைக்கு சென்று, பின்னர் மட்டக்களப்புக்கு சென்று பின்னர் கதிர்காமம் சென்று அங்கிருந்து காலிநோக்கி சென்று பின்னர் யாழ்ப்பாணம் திரும்பவுள்ளனர். இந்த பயணமானது 15 நாட்கள் கொண்ட பயணம் என அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

திடீரென உயிரிழந்த பாடசாலை மாணவன் : நேர்ந்த பெரும் சோகம்!!

முபீத் முஹம்மத் ஷராப்..

புத்தளம் தள வைத்தியசாலையில் திடீர் சுகயீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் சிகிச்சை பலனின்றி நேற்று (04.08.2022) மாலை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புத்தளம் – மன்னார் வீதியில் உள்ள ரகுமத் நகர் எனும் கிராமத்தைச் சேர்ந்த 9 வயதான முபீத் முஹம்மத் ஷராப் எனும் பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் வேப்பமடு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 4 ஆம் தரத்தில் கல்வி கற்ற குறித்த மாணவன், இன்று வியாழக்கிழமை வழமை போல காலை பாடசாலைக்குச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பாடசாலையில் குறித்த மாணவன் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது திடீரென சுகயீனமடைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த மாணவன் ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் உடனடியாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், இன்று மாலை அந்த மாணவன் வீட்டில் இருந்த போது மீண்டும் சுகவீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த மாணவனின் தீடீர் மரணம் புத்தளம் வேப்பமடு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மாணவனின் ஜனாஸா புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. புத்தளம் தலைமையக பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்வரும் இரு தினங்களுக்கான மின்வெட்டு குறித்து இன்று வெளியாகியுள்ள அறிவிப்பு!!

மின்வெட்டு..

எதிர்வரும் இரு தினங்களுக்கான மின் விநியோக துண்டிப்பு தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதேவேளை இன்றைய தினம் ஒரு மணிநேரம் மட்டுமே மின் துண்டிப்பு செய்யப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நேற்றைய தினம் அறிவித்திருந்தது.

நாட்டில் நிலவும் அசாதாரண நிலை காரணமாக ஏற்பட்டுள்ள மழைவீழ்ச்சியினால் மின்னுற்பத்திக்கான நீர்த்தேக்கங்கள் நிறைந்து வழியத் தொடங்கியுள்ளது.

அதன் காரணமாக நீர்த்தேக்கங்கள் மூலமான மின்னுற்பத்தியில் தற்போதைக்கு உற்பத்தித்திறன் சற்று அதிகரித்துள்ளது. அதனை முன்னிட்டு இன்று ஒரு மணிநேரம் மட்டுமே மின் துண்டிப்பு செய்யப்படும் என நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பொலிஸாரின் மனித நேயமிக்க செயல் : குவியும் பாராட்டுக்கள்!!

பொலிஸ்..

வவுனியா தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் எம்.எச்.ஐீ.சி குமார (9405) வவுனியா நகர பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒருலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியினை வீதியிலிருந்து கண்டெடுத்தார்.

அதன் பின்னர் அதில் இருந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து உரிய நபரை அடையாளத்தை உறுதிப்படுத்தியதன் பின்னர் இது தொடர்பில் வவுனியா தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவலை தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து உரியவர் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு குறித்த கையடக்கத் தொலைபேசியானது ஒப்படைக்கப்பட்டது. பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாராட்டுக்களை தெரிவிக்கப்பட்டதுடன்,

தற்காலத்தில் இவ்வாறு நடந்து கொண்ட குறித்த பொலிஸ் சார்ஜன்ட் செய்த செயற்பாடு சமூகத்தில் பலரின் மத்தியில் வரவேட்பினை பெற்றுள்ளதுடன் மனிதநேயம் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

வவுனியாவில் இருவருக்கிடையே மோதலில் காதை கடித்து குதறிய இளைஞன் : ஒருவர் படுகாயம்!!

வீரபுரத்தில்..

வவுனியா வீரபுரம் சின்னத்தம்பனை பகுதியில் இரு தரப்பினருக்கு ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் காதை கடித்து குதறியமையினால் படுகாயமடைந்த நபர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் நேற்று (04.08.2022) இரவு 7.30 மணியளவில் வீதியில் சென்ற சமயத்தில் குறித்த இரு தரப்பினருக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதில் ஒர் இளைஞன் மோதலில் ஈடுபட்ட நபர் ஒருவரின் காதை கடித்து துண்டாக்கியுள்ளார்.

தலையில் வாள்வெட்டு காயம் மற்றும் காது துண்டாக்கப்பட்ட நிலையில் 45 வயதுடைய நபர் ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயர் அதிகாரிக்கு லீவு லெட்டரில் மனைவி பற்றி எழுதிய இளைஞன் : இணையத்தில் வைரலாக கடிதம்!!

உயரதிகாரிக்கு..

அரசு அதிகாரி ஒருவர், தனது உயர் அதிகாரிக்கு விடுப்பு கேட்டு எழுதிய கடிதமும், அதில் இருந்த காரணமும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. அவ்வப்போது, இணையத்தில் ஏதாவது வினோதமான அல்லது பலரையும் சிரிக்க கூடியது தொடர்பான செய்திகளின் வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் இணையத்தில் தோன்றி அதிகம் வைரலாகும்.

உலகின் எந்த மூலையில் ஒரு சம்பவம் நடந்தாலும், அது சற்று வினோதமாக அல்லது வித்தியாசமாக இருக்கும் பட்சத்தில், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பகிரப்படவும் செய்யும். அந்த வகையில், தற்போது அரசு அதிகாரி ஒருவர் தன்னுடைய உயர் அதிகாரிக்கு லீவ் கேட்டு ஹிந்தியில் எழுதிய கடிதம் தொடர்பான புகைப்படம் தான், பலர் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.

கான்பூர் பகுதியை சேர்ந்த அதிகாரி ஒருவர், தனது உயர் அதிகாரிகளுக்கு விடுப்பு கேட்டு கடிதம் ஒன்றை எழுதியதாக கூறப்படுகிறது. மேலும், அவர் எழுதிய கடிதம் ஹிந்தியில் இருந்த நிலையில், அதில் இருந்த காரணத்தில், “சமீபத்தில் நான் எனது மனைவியுடன் தகராறு செய்ததை தொடர்ந்து, குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு அவர் சென்று விட்டார்.

இதனால், நான் அதிகம் வேதனையும் மன அழுத்தமும் அடைந்தேன். நான் எனது மனைவியின் கிராமத்திற்கு சென்று, அவரை சமாதானம் செய்து அழைத்து வர வேண்டும். இதனால், எனது விடுமுறை விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என அந்த நபர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு, 3 நாட்கள் விடுமுறையும் கேட்டுள்ளார்.

தொடர்ந்து, இந்த கடிதத்தை அந்த நபரின் உயர் அதிகாரியும் ஏற்றுக் கொண்டு, விடுமுறை அளிக்க முன் வந்தததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மனைவியுடன் சண்டை ஏற்பட்டதால், அதனை சரி செய்ய விடுமுறை எடுத்தது மட்டுமில்லாமல், காரணத்தையும் அப்படியே விளக்கி அதிகாரி ஒருவர் எழுதிய கடிதம், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

குக்கிராமத்தில் பிறந்து கூலி வேலை செய்து கொண்டே படித்து விடாமுயற்சியால் சாதித்த இளம்பெண்!!

புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது விடாமுயற்சியின் மூலமாக தற்போது டிஎஸ்பியாக பொறுப்பேற்க இருக்கிறார். இதனால் அவரது கிராமமே பெருமையடைந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் பஞ்சாயத்தைச் சேர்ந்த சிறிய கிராமம் கிழக்கு செட்டியாப்பட்டி. இங்கே டீக்கடை நடத்திவரும் வீரமுத்து – வீரம்மாள் தம்பதியரின் மகள் பவானியா. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த பவானியா விவசாய கூலி வேலைக்கும் சென்றுகொண்டெ தனது படிப்பை தொடர்ந்திருக்கிறார்.

குடும்பத்தில் மூன்றாவது மகளான பவானியாவின் மூத்த சகோதரிகளுக்கு திருமணம் முடிந்த நிலையில், தனது கல்விக் கனவினை அவர் கைவிட தயாராக இல்லை. பவானியாவின் கிராமத்துக்கு காலை மற்றும் மாலையில் மட்டுமே பேருந்து வசதி இருக்கிறது. மற்ற நேரங்களில் பேருந்தை பிடிக்க சுமார் 5 கிலோமீட்டர் நடந்து செல்லவேண்டும்.

இப்படியான குக்கிராமத்தில் பிறந்த பவானியா, அருகில் உள்ள ஏ.மாத்தூரில் அமைந்திருக்கும் அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரையில் படித்திருக்கிறார். அதனை தொடர்ந்து, புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் தமிழ் வழியில் கணிதம் படித்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படித்து வந்திருக்கிறார் பவானியா. குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல முடியாத நிலையில் இருந்த அவர், வீட்டில் இருந்தபடியே படித்து க்ரூப் 1 முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்.

அதனை தொடர்ந்து சென்னையில் உள்ள மனிதநேயம் பயிற்சி மையத்தில் சேர்ந்து இலவச பயிற்சி பெற்று வந்துள்ளார் பவானியா. பிறகு கொரோனா தொற்று காரணமாக நேரடி வகுப்புகள் நடக்காததால் ஆன்லைன் வகுப்பில் படித்து, முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் இவர்.

இதன்மூலம் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று டிஎஸ்பியாக பதவியேற்க இருக்கிறார் பவானியா. இருப்பினும் ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதே தனது கனவு என்றும் அதற்காக தொடர்ந்து படிக்க இருப்பதாகவும் கூறுகிறார் பவானியா. இவருக்கு உள்ளூர் மக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தந்தைக்கு ஏற்பட்ட விபத்து : குடும்ப பொறுப்பை கையில் எடுத்த 7 வயது சிறுவன்!!

இந்தியாவில்..

இந்தியாவில் 7 வயது சிறுவன் பள்ளி முடித்தவுடன் குடும்பத்தை காப்பாற்ற உணவு விநியோகம் செய்யும் வேலையை செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் சிறுவன் குறித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

ராகுல் மிட்டல் என்ற நபர் பதிவிட்ட அந்த வீடியோவில், உணவு விநியோகம் செய்ய வந்த 7 வயது சிறுவனிடம் பயனாளி கதையை கேட்கிறார். அப்போது, தனது தந்தை சமீபத்தில் விபத்தில் சிக்கி காலில் காயம் ஏற்பட்டதால், குடும்ப வருமானத்திற்காக இந்த பணியை கையில் எடுத்து செய்வதாக அந்த சிறுவன் கூறுகிறார்.

மேலும், பகலில் பள்ளிக்கு செல்லும் சிறுவன், மாலை வீடு திரும்பியவுடன் 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை உணவு விநியோகம் செய்கிறார். இதனையும் அவரே வீடியோவில் தெரிவிக்கிறார்.

இந்த வீடியோவை பதிவிட்ட ராகுல் மிட்டல், சிறுவனை ஊக்குவிப்பதுடன் தந்தையின் கால் குணமடைய நாம் அனைவரும் சேர்ந்து உதவி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் சிறுவனுக்கு உதவிட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஹலோ ராகுல் தயவு செய்து சிறுவன் குறித்த விவரங்களை எனக்கு அனுப்பவும் என கேட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எடுத்த சபதத்தை நிறைவேற்றிய மும்பை இந்தியன்ஸ் வீரர் : 9 வருஷத்துக்கு அப்பறம் அம்மாவை சந்தித்த மகன்!!

மும்பை இந்தியன்ஸ்..

மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் குமார் கார்த்திகேயா 9 வருடங்கள் கழித்து தனது குடும்பத்தினரை சந்தித்திருக்கிறார். உலக அளவில் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்துள்ளது தொடர் ஐபிஎல். இதன் மூலம் பல திறமைவாய்ந்த இளைஞர்கள் உலக அளவில் பிரபலமாகியிருக்கிறார்கள்.

ஹர்திக் பாண்டியா, பும்ரா என இந்த பட்டியல் நீள்கிறது. இந்நிலையில் இந்த பட்டியலில் இணைந்துள்ளார் குமார் கார்த்திகேயா. சிரமமான சூழ்நிலையில் இருந்து தனது கனவுகளை மட்டுமே மூலதனமாக கொண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் நுழைந்திருக்கிறார் அவர். இதனிடையே அவர் 9 வருடம் மற்றும் 3 மாதங்கள் கழித்து மீண்டும் தனது குடும்பத்தினரை சந்தித்திருக்கிறார். இந்த பிரிவுக்கு காரணமாக அமைந்தது அவர் எடுத்த சபதம் தான்.

மும்பை அணியில் தேர்வாகிய கார்த்திகேயா, 15 வது ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல, ரஞ்சி போட்டியில் மத்திய பிரதேச அணி முதல்முறை கோப்பையை வென்றதிலும் இவருடைய பங்கு அதிகம் இருந்தது.

15 வயது முதல் கிரிக்கெட் விளையாடிவரும், கார்த்திகேயாவின் தந்தை போலீஸ் கான்ஸ்டபிள் ஆவார். குடும்ப சூழ்நிலை காரணமாக கிரிக்கெட் விளையாட அவரது பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனால் வீட்டில் இருந்து வெளியேறிய அவர், வாழ்வில் ஏதாவது சாதித்த பிறகே வீட்டுக்கு திரும்புவதாக சபதம் எடுத்திருக்கிறார். அதன்பிறகு, அவரது திறமையை கண்ட பயிற்சியாளர் பரத்வாஜ் அவருக்கு உதவி செய்திருக்கிறார்.

அவர் மூலமாகவே மத்திய பிரதேச அணிக்காக விளையாடும் வாய்ப்பு கார்த்திகேயாவுக்கு கிடைத்திருக்கிறது. 2 ஆண்டுகளில் 50 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். அதன் காரணமாக அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் மீண்டும் தனது குடும்பத்தினரை தற்போது சந்தித்துள்ளார் கார்த்திகேயா. இதுபற்றி அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” என்னுடைய குடும்பத்தினரையும் அம்மாவையும் 9 ஆண்டுகள் 3 மாதங்கள் கழித்து சந்தித்திருக்கிறேன்.

என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், 9 வருடங்கள் கழித்து தனது அம்மாவை சந்தித்ததாக கார்த்திகேயா தெரிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த தாயின் சடலத்தை மரப் பலகையில் கட்டி பைக்கில் எடுத்து சென்ற மகன்கள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

மத்திய பிரதேசத்தில்..

இறந்த தாயின் உடலை மரப்பலகையில் கட்டி இருசக்கர வாகனத்தில் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு அவரது மகன்கள் எடுத்துச் சென்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இந்த சோகச் சம்பவம் பதிவாகியுள்ளது. அனுப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்மந்திரி யாதவ் என்பவர் நெஞ்சுவலி காரணமாக ஷஹதோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், உடல்நிலை மோசமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த தாயின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதியை மருத்துவமனை நிர்வாகம் செய்து தரவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இறந்த தாயினை மரப்பலகையில் கட்டி சுமந்து இரு மகன்களும் சென்றுள்ளனர்.

மனைவியை எரித்துக்கொன்ற கணவனுக்குக்கு நேர்ந்த பரிதாபம்!!

உத்தரபிரதேசத்தில்..

ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக மனைவியை எரித்துக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. லத்திகா (21), தன்யா பன்சால் (17) ஆகியோர் உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் வசித்து வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பான சம்பவம் 2016-ம் ஆண்டு நடந்தது. மனோஜ் தனது மனைவி அனு பன்சாலை இரு மகள்கள் கண்முன்னே எரித்து கொன்றார். மனோஜ் தற்கொலைக்கு முயன்றார், ஆனால் மகள்கள் தைரியமாக போராடி உண்மையை உலகறியச் செய்து நீதி பெற்றுள்ளனர்.

குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக பரிசோதித்ததும், அது பெண் குழந்தை என்பதால் கணவன் அனுவுடன் சேர்ந்து ஆறு முறை கருக்கலைப்பு செய்ததும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

ஆண் குழந்தை பிறக்காததற்காக தந்தை மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து தாய் கொடூரமான சித்திரவதைகளை எதிர்கொண்டதாக குழந்தைகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர். ஆனால் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக மனோஜ் பொய்யான வாக்குமூலம் அளித்தார்.

சிறுமிகள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் சர்மா கூறுகையில், “ஆறு வருடம், ஒரு மாதம், பதின்மூன்று நாட்கள் காத்திருந்து எங்களுக்கு நீதி கிடைத்தது. ஆறு ஆண்டுகளில், சிறுமிகள் சுமார் 100 முறை தைரியமாக நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர் என்கிறார் சஞ்சய்.

காதலுக்காக இரவு முழுவதும் பெண்கள் கழிவறையில் தங்கிய இளைஞர் செய்த செயல்!!

பெங்களூருவில்..

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு பெரிய எலக்ட்ரானிக் ஷோருமிற்கு அப்துல் முனாஃப் (வயது 27) என்ற இளைஞர் சென்றுள்ளார். அப்போது சரியாக அந்த கடை மூடும் நேரத்தில் உள்ளே நுழைந்த அப்துல், பெண்கள் கழிப்பறைக்குள் நேக்காக புகுந்து ஒளிந்து கொண்டுள்ளார்.

பின்னர் கடையில் உள்ள அனைத்து விளக்குகளை அனைத்த ஊழியர்கள் கடையை மூடிவிட்டு அவரவர் வீட்டிற்கு சென்றனர். கடை மூடப்பட்ட சில மணிநேரத்தில் கழிப்பறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் அந்த கடையில் உள்ள விலையுயர்ந்த 7 மொபைல் போன்களை எடுத்து ஒளித்து வைத்துக்கொண்டு, மீண்டும் அதே பெண்கள் கழிப்பறைக்கு சென்று மறைந்துள்ளார்.

மறுநாள் காலை கடை திறக்கப்பட்டவுடன், யாரும் பார்க்காத நேரத்தில் வாடிக்கையாளருடன் வாடிக்கையாளராக வெளியே வந்துள்ளார். அவர் வரும்போது அவரிடம் இருந்து ஒரு மொபைல் போன் கீழே விழுந்துள்ளது.

இதனை கண்ட ஊழியர் ஒருவர் அந்த மொபைல் போனை எடுத்த போது, அது தனது கடையுடையது என்பதை உணர்ந்தார். பின்னர் சோதனை செய்ததில் கடையில் இருந்த போன்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்த கடைக்காரர், காணாமல் போன மொபைல் போனின் IMEI நம்பரை வைத்து போனை ட்ராக் செய்தனர். அப்போது இந்த திருட்டில் ஈடுபட்ட அப்துல் முனாஃப் என்பது தெரியவந்ததையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், BTM லேஅவுட் பகுதியில் உள்ள ரெஸ்டாரன்ட்டில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்த மங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவரை கவர வேண்டும் என்பதற்காக, அவருக்கு விலை உயர்ந்த மொபைல் போனை பரிசாக கொடுக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார்.

ஆனால் அவரிடம் அதற்கு தேவையான பணம் இல்லாததால், இன்டர்நெட் மூலம் மொபைல் போனை எப்படி திருட வேண்டும் என்று பார்த்துள்ளார். அதன்படி கடந்த ஜூலை 27 ஆம் தேதி பெங்களூரு ஷோரூமில் தனது வித்தைகளை காட்டியுள்ளார்.

இதையடுத்து திருடிய மொபைல்களில் ஒன்று ஷோரூமில் விழ, மீதி ஆறில் 1 தனது காதலிக்கு கொடுத்துள்ளார். மீதி 5 மொபைல் போனில், தானும் ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளது தெரியவந்தது.

கொதித்த கூழ் பாத்திரத்திற்குள் விழுந்த நபர் : நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!!

மதுரையில்..

மதுரை பழங்காநத்தம் பகுதியிலுள்ளது முத்துமாரியம்மன் கோயில். இக்கோயிலில் ஆடிவெள்ளிக்கிழமை யொட்டி 29-ம் தேதி கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு விநியோக்க கோயில் விழா கமிட்டினர் திட்டமிட்டனர்.

இதற்காக அன்று மாலை கோயிலுக்கு எதிரே அகன்ற 6 பாத்திரங்களில் கூழ் காய்ச்சப்பட்டது. இப்பணியை கோயில் விழாக் கமிட்டியைச் சேர்ந்த முத்துக்குமரன் (52) உள்ளிட்டோர் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், 6 பாத்திரங்களிலும் கூழ் கொதித்துக் கொண்டிருந்தது. அப்போது, அருகில் சென்ற முத்துக்குமரன் எதிர்பாராதவிதமாக தடுமாறியபடி ஒரு பாத்திரத்திற்குள் விழுந்தார்.

கொதித்த கூழ் பாத்திரத்தைவிட்டு அவரால் வெளியேற முடியாமல் தவித்தார். அருகில் நின்றவர்கள் அவரை மீட்க முயன்றனர். ஏற்கெனவே கொதிக்கும் கூழ் என்பதால் அவர்களாலும் அருகில் செல்ல முடியவில்லை.

ஒரு கட்டத்தில் அடுப்பில் இருந்த கொதித்த கூழுடன் பாத்திரத்தை கீழே கவிழ்த்தி அவர் மீட்கப்பட்டார். இருப்பினும், அவரது வயிறு உள்ளிட்ட உடல் பாகங்கள் வெந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனாலும், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தது தெரிந்தது. நெஞ்சை பதறவைக்கும் அச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

அருவி அருகே கேமராவுக்கு போஸ் கொடுத்த இளைஞர்க்கு நடந்த பரிதாபம் ; பதறித் துடித்த நண்பர்கள்!!

அருவியில்..

கொடைக்கானல் அருவியில் போட்ட எடுக்கும்போது தவறி விழுந்த மாயமான இளைஞரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் இரண்டு நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாகத் திண்டுக்கல், திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இதனால் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த அஜய் பாண்டியன் என்ற இளைஞர் கீழ்மலை கிராமத்தில் உள்ள பெரும்பறை அருவியில் நண்பர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்ப்பாராத விதமாக கால் தவறி அருவியின் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் கதறியுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மேலும் இளைஞர் அஜய் பாண்டியன் அருவியில் தவறி விழும் காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்!!

கர்நாடகாவில்..

கர்நாடகாவில் இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண் இரயில் மோதி உயிரிழந்ததால், அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பிரீத்தி புட்டசாமி. 22 வயதாகும் இவர், அந்த பகுதி கல்லூரி ஒன்றில் பி.காம் இறுதியாண்டு படித்து வந்தார்.

இவர் அந்த பகுதி இரயில் தண்டவாளத்தை கடந்து கல்லூரிக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில், சம்பவத்தன்று காலை வழக்கம்போல் அந்த பகுதியில் உள்ள இரயில் தண்டவாளத்தை கிடைக்க முயற்சித்துள்ளார். அப்போது அவர் கால் தவறி தண்டவாளத்தில் விழுந்தார்.

அப்போது மைசூருவில் இருந்து ஹாசன் நோக்கி வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் இரயில் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பிரீத்தி உடல் சிதறி பரிதாபமாக பலியானார். பின்னர் சம்பவம் அறிந்து வந்த இரயில்வே காவல்துறையினர், சிதறி கிடந்த மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே ஏற்கனவே அந்த பகுதி இரயில் தண்டவாளத்தின் குறுக்கே மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததால், அந்த பகுதி மக்கள் மற்றும் பிரீத்தி படிக்கும் கல்லூரி மாணவர்கள் அங்கு வந்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் சாலையின் குறுக்கே டயர்களை போட்டு தீ கொளுத்தினர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள், அந்த பகுதி மக்களிடம் விரைவில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில், அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வவுனியாவில் யானை தாக்கி முதியவர் பரிதாபமாக பலி!!

சேமமடு கிராமத்தில்..

வவுனியா, சேமமடு கிராமத்தில் யானை தாக்கி முதியவர் ஒருவர் இன்று (04.08.2022) மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, சேமமடு பகுதியில் வசிக்கும் 68 வயதுடைய முதியவர் ஒருவர் காட்டில் தேன் எடுப்பதற்காகச் சென்றுள்ளார்.

இதன்போது, காடு நோக்கி சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, வீதியின் குறுக்கே நின்ற யானை அவரை தாக்கியுள்ளது. சம்பவ இடத்திலேயே முதியவர் மரமடைந்துள்ளார்.

வீதியால் சென்றவர்கள் அதனை அவதானித்து பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.