இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. அதன்படி, தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (09) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்தநிலையில், இன்றையதினம் (09.07.2025) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 995,559 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,120 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 280,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,200 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 257,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,730 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 245,850 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.
வவுனியா மாவட்ட மட்ட கிராம அலுவலர்களுக்கான முகாமைத்துவப் போட்டியில் முதல் ஐந்து இடங்களுள் நான்கு இடங்களை வவுனியா பிரதேச செயலகத்தினை சேர்ந்த கிராம அலுவலர்கள் பெற்றுள்ளனர்.
அந்த வகையில் வவுனியா பிரதேச செயலகத்தின் கீழுள்ள வெளிக்குளம் கிராம அலுவலர் முதலாவது இடத்தினையும், நொச்சிமோட்டை கிராம அலுவலகர் இரண்டாவது இடத்தினையும், வைரவப்புளியங்களும் கிராம அலுவலகர் மூன்றாவது இடத்தினையும் , ஆறுமுகத்தான் புதுக்குளம் கிராம அலுவலகர் ஜந்தாவது இடத்தினையும் பெற்றுள்ளனர்.
மேற்குறித்த நிலைகளை பெற்றுக்கொண்ட கிராம அலுவலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து கொண்டமையுடன் இப்போட்டியில் தம்மை அர்ப்பணிப்புடன் தயார்ப்படுத்தி பொது மக்களுக்கான சேவையினை சிறப்பாக ஆற்றிவரும் அனைத்து கிராம அலுவலர்களுக்கும் வவுனியா பிரதேச செயலகத்தினரும் தமது பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டுள்ளனர்.
வவுனியா – ஓமந்தைப் பொலிஸார் பொலிஸ் நிலையம் அருகில் உள்ள தனிநபருக்கு சொந்தமான காணியினை ஆக்கிரமித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் பொலிஸ் அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த காணியை பொலிஸார் கையகப்படுத்த முடியாது எனவும் அதற்குள் செல்லக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அத் தீர்மானத்தையும் மீறி பொலிஸார் மீண்டும் காணியினை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வவுனியா பிரதேச செயலகத்தில் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குறித்த காணியை பொலிஸார் கையகப்படுத்த முடியாது எனவும் அதற்குள் செல்லக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த காணிக்குள் ஓமந்தைப் பொலிசார் நுழைவதற்கு தடை விதித்து வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபனால் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தொடருந்து கடவையை கடக்க முயன்ற பாடசாலை பேருந்து மீது தொடருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடருந்து கடவையை கடக்க முயன்ற தனியார் பாடசாலைக்கு சொந்தமான பாடசாலை பேருந்தின் மீது திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தொடருந்து மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
தொடருந்து கடவையை மூடாமல் ஊழியர் தூங்கிவிட்டதால் பேருந்து தண்டவாளத்தை கடந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாகவும், மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடருந்து மோதியதில் பாடசாலை பேருந்து 50 மீட்டர் தொலைவுக்கு தூக்கி வீசப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் டல்லஸ் நகரத்தில், இந்திய குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்த கார் மீது ஒரு லொரி மோதியதில் ஏற்பட்ட தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலேயே பெற்றோர்கள் மற்றும் இரு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில தெரியவருகையில்,
ஐதராபாத் பகுதியில் வசித்து வந்த தேஜஸ்வினி மற்றும் ஸ்ரீ வெங்கட் ஆகியோர் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளும் விடுமுறை செலவிடுவதற்காக அமெரிக்கா சென்றிருந்தனர்.
அவர்கள் அட்லாண்டாவுக்கு சென்று உறவினர்களை சந்தித்துவிட்டு மீண்டும் டல்லஸுக்கு திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில், இந்த பயங்கர விபத்து கிரீன் கவுண்டி பகுதியில் நிகழ்ந்துள்ளது.
ஒரு மினி-ட்ரக் எதிரே வந்த அவர்களது காரில் , நேரடியாக மோதியுள்ளது. கார் தீப்பற்றி எரியத் தொடங்கியதும் உள்ளே இருந்த நால்வரும் வெளியே வர முடியாமல், காருக்குள் கருகி உயிரிழந்துள்ளனர்.
கார் முழுவதுமாக சாம்பலாகி விட்ட நிலையில், பொலிஸார் எஞ்சியுள்ள எலும்புக்கூடுகள் மற்றும் உடலின் பாகங்களை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
DNA மாதிரிகள் மூலம் மரணமடைந்தவர்களை உறுதி செய்த பிறகு, உடல்களை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் இதுபோன்ற மேலும் இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளது. 2024 செப்டம்பர் மாதம், டல்லஸுக்கு அருகே உள்ள அன்னா, டெக்சாஸ் பகுதியில், வேகமாக வந்த லொரி ஒன்று காரை மோதியது.
அந்த காரில் பயணித்த இந்தியர்களான ஆர்யன் ரகுநாத் ஓரம்பட்டி, பாரூக் ஷெய்க், லோகேஷ் பாலசர்லா மற்றும் தர்ஷினி வசுதேவன் ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
2024 ஒகஸ்ட் மாதத்தில், மற்றொரு சம்பவத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியர் மற்றும் அவர்களது மகள், டெக்சாஸில் விபத்தில் உயிரிழந்தனர்.
அந்த விபத்தில், அவர்களின் தீனேஜ் மகன் மட்டுமே உயிர்வாசித்து தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை கந்தளாய் சூரியபுர பிரதேசத்தில் உள்ள சமகிபுர பகுதியில் நேற்று மாலை மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ஒன்று பாலம் இடிந்து விழுந்ததால் குடைசாய்ந்துள்ளது.
இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை, டிப்பருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த டிப்பர் சூரியபுரயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், நிறுவனத்திற்காக மணல் ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வாய்க்காலைக் கடக்க முற்பட்டபோது, பழைய பாலம் எடையைத் தாங்க முடியாமல் இடிந்து விழுந்ததால் டிப்பர் லொறி நிலைதடுமாறி குடைசாய்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து சூரியபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மித்தெனிய பகுதியில், ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி ஐந்து வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (07.07.2025) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மித்தெனிய – பல்லே பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இளைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் வாங்கி வைக்கப்பட்டிருந்த ரம்புட்டானை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளை, ரம்புட்டான் விதை சிறுவனின் தொண்டையில் சிக்கியுள்ளது.
இதனையடுத்து வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக வலஸ்முல்ல வைத்தியசாலைக்கு சிறுவனை அழைத்துச் சென்றுள்ளனர். எனினும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனின் இழப்பையும் அதிர்ச்சியையும் தாங்க முடியாமல் திடீரென நோய்வாய்ப்பட்ட சிறுவனின் தாயார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலை 1.30 மணிக்கு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணியில் இன்று (08.07.2025) அதிகாலை புகையிரதத்தில் மோதுண்டு இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு கறுவப்பங்கேணி, அரோஸ் வீதியை சேர்ந்த எஸ். நிசாந்தன் என்னும் 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
புகையிரத கடவையில் இருந்து தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தவரே இவ்வாறு புகையிரதத்தில் மோதுண்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
சடலத்தினை மோதிய புகையிரதத்தில் கொண்டு சென்று ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி கொழும்பு மகரகம தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கரணவாய் மூத்த விநாயகர் கோவில் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய பாடசாலை மாணவியை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் இரத்தப்புற்று நோய் காரணமாக கொழும்பு மகரகம தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவது தொடர்பான எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய வங்கிக்கும், திறைசேரிக்கும் இடையில் எவ்வித தொடர்பாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு சிறிது சிறிதாக மீட்சிப் பாதையில் செல்வதால், சில வருடங்களின் பின்னர் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதில் இருந்து ஜூன் மாதம் இறுதி வரை கிட்டத்தட்ட 18,000 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இவற்றில், குறித்த காலகட்டத்தில் 13,614 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்த தீர்மானித்திருப்பதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், அவ்வாறான எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்த இலங்கை மத்திய வங்கி திறைசேரிக்கு எந்த ஆலோசனையோ அல்லது பரிந்துரையோ வழங்கவில்லை என்று மத்திய வங்கியின் மூத்த அதிகாரியொருவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த வரி முறை 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியம், இலங்கை குறித்த அதன் சமீபத்திய அறிக்கையில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது. புதிய சொத்து வரியை செயல்படுத்த தேவையான ஆரம்ப நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் தரவு சேகரிப்பில் சிறிது தாமதம் இருந்தாலும், செயல்முறை செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய, சொத்து மதிப்புகளை மதிப்பிடுவதற்கும் வரிகளைக் கணக்கிடுவதற்கும் ஒரு டிஜிட்டல் தரவுத்தளம் உருவாக்கப்பட உள்ளது.
மேலும் 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து தொடர்புடைய தரவுகளும் தயாரிக்கப்பட்டு இறுதி செய்யப்பட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2027 ஆம் ஆண்டில் இந்த புதிய வரியை செயல்படுத்துவதற்கு சொத்து வரி முறைகள் குறித்த ஒரே நேரத்தில் விவாதங்கள் அவசியம் என்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
அவிசாவளை – கேகாலை வீதியில் 69 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (07.07) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டித் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியுடன் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் இருந்த இருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டர் ஃபுரூட் (Avocado) மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகச் சிறந்த பங்கு வகிக்கிறது. அவகேடோ பழம் சாப்பிடும் போது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முதல் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பது வரை, பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
அவகேடா நாம் உண்ணும் போது நம் உடலில் எவ்வாறான நன்மைகளை வழங்குகின்றது என இங்கு பார்ப்போம்.
செரிமானத்திற்கு உதவும் : ஒரு நாளைக்கு சுமார் 25 முதல் 30 கிராம் நார்ச்சத்து தேவைப்படுவதால், இந்த ஒரு உணவு உங்கள் தினசரி தேவையான அளவில் மூன்றில் ஒரு பங்கு முதல் பாதி வரை நார்ச்சத்தை உங்களுக்கு வழங்கும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது செரிமானத்திற்கு இன்றியமையாதது. இந்த பழம் இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது மற்றும் இதய நோய் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் : அவகேடோ பழம் ஆண்களுக்கு வரும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் வெண்ணெய் பழத்தில் உள்ள நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் கலவை இந்த பாதுகாப்பு விளைவுக்கு பங்களிக்கக்கூடும்.
வெண்ணெய் பழத்தை பல வழிகளில் சாப்பிடலாம். உப்பு, மிளகு, அல்லது எலுமிச்சை சாறு பிழிந்து அப்படியே சாப்பிடுங்கள் அல்லது சத்தான காலை உணவாக டோஸ்ட்டில் சேர்த்து சாப்பிடுங்கள்.
சாலடுகள், சாண்ட்விச்கள், முட்டைகளுடன் சேர்த்து சாப்பிடவும் அவகேடோ சிறந்தவை. கிரீம் சுவைக்காக ஸ்மூத்திகளில் அவகேடோவை கலக்கலாம். வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து சாப்பிடலாம்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்னவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (08.07) உத்தரவிட்டுள்ளார்.
வைத்தியர் மகேஷி விஜேரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை வைத்தியர் மகேஷி விஜேரத்னவுடன் கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மருந்துகளை மூன்றாம் தரப்பின் ஊடாக அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி , மருத்துவர் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மொனராகலை – பிபில வீதியில் நன்னபுராவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று திங்கட்கிழமை (07.07.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறி ஒன்னும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில்,
மெதகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எல்ல – வெல்லவாய வீதியில் 03ஆவது மைல்கல் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று செவவ்வாய்க்கிழமை (08.07) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.