சதொசவில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதி : மக்களுக்கு விசேட தகவல்!!

சதொசவில் அத்தியாவசிய பொருட்கள்

இருபது வகையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியினை 3998 ரூபாவிற்கு சதொச விற்பனை நிலையங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

இவ் அத்தியாவசிய பொதியில் சுபிரி சம்பா அரிசி 10 கிலோ கிராம், தலா ஒரு கிலோ சீனி, பருப்பு, இடியப்பமா, 500 கிராம் நெத்தலி, 400 கிராம் நூடில்ஸ் பக்கட், 400 கிராம் உப்பு பக்கட், 330 மில்லி லீற்றர் தேங்காய் பால் பக்கட்டுகள் இரண்டு, தலா 100 கிராம் மிளகாய் தூள்,

மஞ்சள் தூள் உள்ளிட்ட பலசரக்குகள், 100 கிராம் எஸ்.டி.சி. தேயிலை பக்கட், 80 கிராம் சவர்காரகட்டியொன்று, சதொச சந்துன் சவர்க்காரகட்டி, 90 கிராம் சோயா மீட்ஸ் பக்கட், ஆடை சலவை செய்யும் சவர்க்காரம், பப்படம், 10 முகக்கவசங்கள் உள்ளிட்ட 20 பொருட்கள் உள்ளடங்குவதாக அவர் கூறியுள்ளார்.

குறித்த பொதியை 3998 ரூபாவிற்கு நுகர்வோருக்கு விநியோகிக்குமாறு சகல சதொச விற்பனை நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகளின் அடிப்படையில் இதன் பெறுமதி 6221 ரூபா, 5834 ரூபா மற்றும் 5771 ரூபாவாகும்.

எனினும் சதொச ஊடாக இதனை 3998 ரூபாவிற்கு பெற்றுக் கொள்வதன் மூலம் நுகர்வோருக்கு 1750 ரூபா இலாபம் கிடைக்கப் பெறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சதொச விற்பனை நிலையங்கள் அற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் 1998 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்!

உயர்தர மற்றும் புலமைப்பரிசில்..

கொவிட் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை எந்த திகதிகளில் நடத்தப்படும் என்பது தொடர்பான தகவல்களை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன(L.M.T. Dharmasena) வெளியிட்டுள்ளார்.

இதன்படி 2021 ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஜனவரி 22 ஆம் திகதியும் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரையும் நாடளாவிய ரீதியில் நடாத்துவற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான மேலதிக விபரங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கை இரத்தினக்கல்!!

இரத்தினக்கல்..

கடந்த ஆண்டு இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கிலோ எடையுள்ள நீல நிற இரத்திக்கல் உலகின் மிகப்பெரிய சபையர் இரத்தினக்கல் கொத்து என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது சுவிட்ஸர்லாந்தில் வைக்கப்பட்டுள்ள குறித்த இரத்தினக்கல் கொத்து, அதிக லாபத்திற்கு ஏலத்தில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள Gübelin Gem Lab இதனை நட்சத்திர இரத்தினக்கல் என சான்றளித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

இரத்தினபுரி பகுதியில் கடந்த ஆண்டு இந்த இரத்தினக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. 510 கிலோகிராம் அல்லது 2.5 மில்லியன் காரட் எடையுள்ள இந்த கொத்து செரண்டிபிட்டி என்று அழைக்கப்படுகிறது.

வவுனியாவில் திருகோணமலை எண்ணெய் தாங்கிக்கு எதிராக சுவரொட்டிகள்!!

சுவரொட்டிகள்..

”திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தேசிய வளங்களை இந்தியாவிற்கு தாரைவார்க்கின்ற உடன்படிக்கையை சுருட்டிக்கொள்” என்ற வாசகத்தினை தாக்கிய சுவரோட்டிகள் வவுனியா நகரின் பல இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒட்டப்பட்டுள்ள இச் சுவரோட்டியின் கீழ்ப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி என உரிமைகோரப்பட்டுள்ளது.

இவ் சுவரோட்டிகள் கண்டி வீதி , நூலக வீதி , மன்னார் வீதி , ஹோரவப்பொத்தானை வீதி , புகையிரத நிலைய வீதி என வவுனியா நகரின் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் தைப்பூசத்தில் ஏடு தொடக்குதல்!!

ஆதி விநாயகர் ஆலயத்தில்..

27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப் படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பறுவம்) இருக்கும்.

தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்து வைப்பார்கள். மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள்.

அந்த வகையில் வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் தைப்பூச தினமான (18.01.2022) காலை 8.00 மணிக்கு ஏடுதொடக்குதல் நிகழ்வு தமிழருவி சிவகுமார் தலைமையில் இடம்பெறும் என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் இலங்கையில் ஆபத்து ஏற்படும் அறிகுறிகள் : கடுமையான எச்சரிக்கை!!

கொவிட் அலை..

இலங்கையில் மீண்டும் கொவிட் அலை ஏற்படும் அபாய நிலை உள்ளதாக தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம எச்சரித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போதே தேசிய தொற்றுநோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரு வாரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை, சற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் கொவிட் அலை ஏற்படக்கூடும் என்ற ஐயம் நிலவுகிறது.

நாட்டின் பல பகுதிகளில் ஒமிக்ரோன் திரிபுடனான கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒமைக்ரோன் திரிபானது மிக இலகுவாக பரவக்கூடியது.

அறிகுறிகள் குறைந்துள்ள போதிலும், பெரும்பாலானோருக்கு அந்த திரிபு தொற்றக்கூடும் என தேசிய தொற்று நோய் விஞ்ஞான நிறுவகத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தமிழ் மக்களின் பாரம்பரிய பச்சைப் பெருமாள் நெல்லில் பொங்கல் நிகழ்வு!!

பொங்கல் நிகழ்வு..

வடமாகாண விமல் அணி ஏற்பாட்டில் அமைச்சர் விமல்வீரவன்சவின் திட்டமிடலுக்கு அமைய வவுனியாவில் பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

அமைச்சரின் வன்னி மாவட்ட இணைப்பு செயலாளர் புஸ்பதேவா  வழிகாட்டலில் வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் குறித்த பொங்கல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

இயற்கை பசளை இட்டு விளைவிக்கப்பட்ட தமிழ் மக்களின் பாரம்பரிய பச்சைப் பெருமாள் நெல்லில் இருந்து பெறப்பட்ட அரிசியில் பொங்கல் நடைபெற்றது.

பௌத்த, இந்து, கத்தோலிக்க மத தலைவர்கள் கலந்து கொண்டு பொங்கல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

இதில், நகரசபை தலைவர் இ.கௌதமன், உப நகரபிதா சு.குமாரசாமி, வர்த்தக சங்க செயலாளர் அம்பிகைபாகன், மாவட்ட விவசாய சம்மேளனத் தலைவர் சிறிதரன், வவுனியா பொலிஸ் நிலைய பதில் பொறுபதிகாரி அழகியவண்ண , வடமாகாண விமல் அணி தலைவர் சி.ஜோதிக்குமரன் , விமல் அணி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் பற்றி எரிந்த எரிவாயு அடுப்பு : தவிர்க்கப்பட்ட அனர்த்தம்!!

பற்றியெறிந்த எரிவாயு அடுப்பு..

வவுனியா குடியிருப்பு பகுதியில் வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டு இருந்த போது திடீரென காஸ் அடுப்பு பற்றி எரிந்துள்ளது

வவுனியா, குடியிருப்பு வீதியில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த போது இன்று (14.01.2022) முற்பகல் திடீரென காஸ் அடுப்பின் கீழ் பகுதி பற்றி எரிந்துள்ளது.

இதனையடுத்து வீட்டார் காஸ் சிலிண்டர் பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தடுத்துள்ளனர். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற பொங்கல் நிகழ்வுகள்!!

பொங்கல் நிகழ்வுகள்..

வவுனியாவில் பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. தமிழர்களின் தை திருநாளாம் பொங்கல் தினமான இன்று மக்கள் தங்கள் வீடுகள் வர்த்தக நிலையங்களை அலங்கரித்து புத்தாடை அணிந்து தைப் பொங்கல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயம் , நகர் பகுதியில் அமைந்துள்ள கந்தசுவாமி ஆலயம் உட்பட பல இந்து ஆலயங்களிலும் இன்று (14.01.2022) காலை பொங்கல் பொங்கியதுடன் விசேட பூஜைகள் நடைபெற்றுள்ளன.

அத்துடன் குறித்த பகுதியில் உள்ள மக்கள் தங்களது வீடுகளிலும் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் அதிசொகுசு பேரூந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து : 12 பேர் படுகாயம்!!

விபத்து..

வவுனியா ஏ9 வீதி பூனாவை பகுதியில் இன்று அதிகாலை அதிசொகுசு பேரூந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பூனாவை பகுதியில் வீதியின் அருகே விபத்துக்குள்ளான டிப்பர் வாகனம் நின்றுள்ளது. டிப்பர் வாகனத்தின் பின்பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேரூந்தொன்று டிப்பருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதுடன் குறித்த விபத்துக்குள்ளான பேரூந்துடன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மற்றுமொரு அதிசொகுசு பேரூந்து மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்துச்சம்பவத்தில் பேரூந்தில் பயணித்த 12 பயணிகள் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்து சுமார் 1 மணிநேரம் வரை ஸ்தம்பித்ததுடன் விபத்துச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பழனி முருகனின் தெய்வீக கிராமிய நிகழ்வும் கலை கலாசார பாரம்பரிய ஊர்வலமும்!!

பழனி முருகன்..

வவுனியா சிதம்பரபுரத்தில் இந்து கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் வவுனியா பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் பழனி முருகனின் தெய்வீக கிராமிய நிகழ்வும் கலை கலாசார பாரம்பரிய ஊர்வலமும் எதிர்வரும் 17 ஆம் திகதி இடம்பெற்றவுள்ளது.

சிதம்பரபுரம் பழனி முருகன் அறநெறி பாடசாலை பகுதியில் மு.ப. 10 மணியளவில் நிகழவுள்ளது. நிகழ்வின் பிரதம அதிதியாக இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. வவுனியா இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரம்மஸ்ரீ.எஸ்.குகனேஸ்வரசர்மா வரவேற்புரை நிகழ்த்தவுள்ளார்.

வவுனியா பிரதேச செயலாளர் திரு.நா.கமலதாசன் தலைமையில் பிரதம அகதிகளாக அரசாங்க அதிபர் திரு.பி.ஏ.சரத்சந்திர , மேலதிக அரசாங்க அதிபர் திரு.தி.திரேஸ்குமார் சிறப்பு அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் பிரியதர்சினி சஜீவன் , உதவி மாவட்ட செயலாளர் திருமதி.ம.சபர்ஜா மற்றும் தமிழ்விருட்சம் திரு.செ.சந்திரகுமார் கண்ணன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் கௌரவ அதிதிகளாக ஆசிக்குளம் கிராம சேவையாளர் ஜனகன் பாலசுப்பிரமணியம் , ஆசிக்குளம் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.தெ.மகேஸ்வரி ,
ஆசிக்குளம் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் குணசேகரம் கோபிதரன், சிதம்பரபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆர்.எம்.திலகரத்ன, ஆசிக்குளம் சுகாதார வைத்திய அதிகாரி புவனேஸ்வரன் நிரோசன் ஆகியோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

இங்கு ஆசிகுளம் பகுதி 06 அறநெறிப் பாடசாலை மாணவர்களைச் சேர்ந்த 150 மாணவர்கள் பங்குபற்றி பாராட்டு மற்றும் உதவிகள் பெறவுள்ளனர் அத்துடன் 15 அறநெறி ஆசிரியர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். இங்கு இந்துப் பண்பாட்டு நிதியத்தின் உதவியும் தொண்டு நிறுவனங்களின் உதவிகளும் செய்யப்படவுள்ளது.

வவுனியா நகரில் துவிச்சக்கரவண்டி திருட்டு : சந்தேகநபர் கைது!!

துவிச்சக்கரவண்டி திருட்டு..

வவுனியா நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா முதலாம் குறுக்குத்தெரு வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி நேற்று முன்தினம் (11.01) காலை 10.44 மணியளவில் இனந்தெரியாத நபரினால் களவாடப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் சி.சி.ரி.வீ காணோளி உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா பொலிஸார் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து களவாடப்பட்ட துவிச்சக்கரவண்டியினையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் மற்றும் துவிச்சக்கரவண்டியினை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குறிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபயவின் அதிரடி : லிட்ரோ காஸ் நிறுவனத்தில் திடீர் மாற்றம்!!

லிட்ரோ காஸ் நிறுவனத்தில் திடீர் மாற்றம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முத்துராஜவெல – மாபிம லிட்ரோ நிறுவனத்திற்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து லிற்றோ காஸ் நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அதற்கமைய, லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக ரேனுக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கையில் எரிபொருள் பயன்படுத்துவோருக்கு அதிர்ச்சி செய்தி : அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

எரிபொருள்..

இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு ஒளிபரப்பான வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயு கப்பல்கள் 3 துறைமுகத்தில் தரித்து நிற்கின்றது. டொலர் இல்லாமையிலேயே கப்பல்களை வரவழைத்துள்ளோம். எனினும் அதனை பெற்றுக் கொள்வதற்கு டொலர் இல்லாத பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

கடந்த 7, 8 நாட்களாக கப்பல்கள் தரித்து நிற்கின்றது. சீனாவிடம் 300 மில்லியன் டொலர் கடன் பெற்றோம், இந்தியாவிடம் 400 மில்லியன் டொலர் கடன் பெற்றோம், பங்களாதேஷிடம் 250 மில்லியன் டொலர் கடன் பெற்றோம், எனினும் இந்த ஒன்றுமே ஒரு மாதத்திற்கு போதுமான எரிபொருள் பெறுவதற்கு போதுமானதாக இல்லை.

இந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு அபாயத்தைத் தவிர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஜனவரி மாதத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை சந்தையில் வாகனங்களின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் : புதிய விலை பட்டியல் வெளியீடு!!

இலங்கை சந்தையில் வாகனங்களின் பெறுமதி

உள்ளுர் சந்தையில் மோட்டார் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

இணையத்தளங்களில் பதிவாகியுள்ள வாகன விலைகளின் விபரங்களுக்கமைய இரண்டு வருட காலப்பகுதிக்குள் 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக நாட்டிற்கு மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த அளவிற்கு விலைகள் உயர்ந்துள்ளன.

வாகனங்களின் விலை உயர்ந்த நிலையில் வாகன விற்பனைகள் பாரியளவு குறைந்துள்ளதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் அதிக அளவில் விற்பனையாகும் பிரபலமாக வாகனங்களின் புதிய விலைகள் சில வெளியாகியுள்ளது.

அதற்கமைய, 2018 – Vitz – 8.1 மில்லியன் ரூபாய், 2018 – alto japan – 5 மில்லியன் ரூபாய், 2015 – alto india – 3 மில்லியன் ரூபாய், 2017 – Axio – 15 மில்லியன் ரூபாய், 2008 – Axio – 6.4 மில்லியன் ரூபாய், 2014 – Premio – 12.5 மில்லியன் ரூபாய், 2019 – Premio – 19 மில்லியன் ரூபாயில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

இலங்கையர்கள் வீசா இன்றி எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும்? புதிய அறிக்கை வெளியீடு!!

இலங்கையர்கள்..

உலகின் மிக சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியலில் இலங்கைக்கு 102வது இடம் கிடைத்துள்ளது.

2022ஆம் ஆண்டிற்கான உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலை ஹென்லி வெளியிட்டிருந்தது. 111 நாடுகளை உள்ளடக்கிய இந்த பட்டியலில் இலங்கைக்கு 102வது இடம் கிடைத்துள்ளது.

இந்த பட்டியலில் இலங்கை, லெபனான் மற்றும் சூடான் நாடுகளுடன் 102வது இடத்தை பிடித்துள்ளது. அதற்கமைய இலங்கை கடவுசீட்டு வைத்திருப்பவர்கள் 41 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் வழங்கும் தரவுகளின் அடிப்படையில், 2006 ஆம் ஆண்டு முதல் உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலை ஹென்லி வெளியிட்டு வருகின்றது.

அதற்கமைய இந்த பட்டியலில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் கடவுசீட்டுகள் முதலாவது இடத்தை பிடித்துள்ளது. குறித்த நாடுகளின் கடவுசீட்டுகளை கொண்டு 190 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.