வவுனியாவில் மரணித்த இளைஞனுக்கு நீதி கேட்டு ஏ9 வீதியை மறித்து போராட்டம் : நிலமையை கட்டுப்படுத்த களமிறங்கிய விசேட அதிரடிப்படையும், இராணுவமும்!!

ஏ9 வீதி..

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மரணித்த இளைஞனுக்கு நீதி கேட்டு ஏ9 வீதியை மறித்து போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மரணித்த முச்சக்கரவண்டி சாரதியான இளைஞனின் உறவினர்கள், நண்பர்கள் இணைந்து (01.01) இரவு 10.30 மணியளவில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வவுனியா, ஏ9 வீதி தாண்டிக்குளத்தில் பிக்கப் ரக வாகனமும், முச்சக்கர வண்டியும் மோதியதில் வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த ரஜீபன் (வயது 32) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

விபத்துக்குள்ளாகிய வாகனத்தை ஏற்றவிடாது வாகனத்தை முற்றுகையிட்டும், ஏ9 வீதியை மறித்தும் மரணித்த இளைஞரின் உறவினர்கள், நண்பர்கள் இரவு 10 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏ9 வீதியூடான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

பொலிசாரால் நிலமையை கட்டுப்படுத்த முடியாமல் போக சம்பவ இடத்திற்கு விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டனர். ஏ9 வீதியை மறித்து போராடியவர்களை அகற்றிய விசேட அதிரடிப்படையினர் குழப்பம் விளைவித்ததாக பலரை கைது செய்து எச்சரிக்கையின் பின் அங்கிருந்து வெளியேற்றினர்.

அத்துடன், நிலமையை கட்டுப்படுத்த இராணுவத்தினரும் அவ்விடத்திற்கு பிரசன்னமாகியிருந்தனர். மக்களது போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிசார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து நடவடிக்கை எடுத்ததையடுத்து அப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதுடன், முறுகல் நிலை தீவிரமடைந்தது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கு.திலீபன் , மரணித்த இளைஞனுக்கு நீதி கிடைக்கும்,

சரியான முறையில் விசாரணை இடம்பெறும் என குறித்த இளைஞனின் தாயார் மற்றும் உறவினர்களுக்கு வாக்குறுதி அளித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை போராட்டத்தை கைவிடுமாறு கோரினார்.

இரவு 11.50 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டதையடுத்து விபத்துக்குள்ளாகிய வாகனம் பொலிசாரால் எடுத்து செல்லப்பட்டது. விபத்து தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் பிக்கப் ரக வாகனம் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி கோர விபத்து : சம்பவ இடத்தில் குழப்பநிலை!!

விபத்து..

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பிக்கப் ரக வாகனமும், முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இன்று (01.01) இரவு 7.40 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பிக்கப் ரக வாகனமும்,

நொச்சிமோட்டைப் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி வந்த முச்சக்கரவண்டியும் தாண்டிக்குளம் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தையடுத்து முச்சக்கரவண்டி தடம்புரண்டு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், பிக்கப் வாகனம் கட்டுப்பாட்டையிழந்து அருகில் இருந்த மரத்துடனும் மோதியுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியான வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 32 வயதான ரஜீபன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த போக்குவரத்து பொலிசார் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போது அப் பகுதிக்கு வந்த இளைஞர்களுக்கும், பிக்கப் வாகன சாரதி மற்றும் அதில் பயணித்தவருக்குமிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டு குழப்ப நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.பீ.மானவடு தலைமையில் மேலதிக பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததுடன், நிலமைகளை கட்டுப்படுத்தினர்.

பிக்கப் வாகன சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதில் பயணித்தவரும் பொலிசாரால் அழைத்து செல்லப்பட்டுள்ளார். விபத்து குறித்து வவுனியா பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியாவில் சற்றுமுன் கப்ரக வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதுண்டு விபத்து : ஒருவர் பலி!!

விபத்து..

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று (01.01.2022) இரவு 7.40 மணியளவில் கப்ரகவாகனமும் முச்சக்கரவண்டியும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

குறித்த விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
வவுனியாவூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப்ரக வாகனமும் எதிர்த்திசையில் வந்த முச்சக்கரவண்டியும்,

தாண்டிக்குளம் இராணுவ சிற்றூண்டிசாலைக்கு அண்மித்த பகுதியில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து சம்பவத்தில் முச்சக்கரவண்டி முற்றும் முழுதாக சேதமடைந்துள்ளதுடன் கப்ரக வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியான 32 வயது மதிக்கத்தக்க ரஜீவன் (வவுனியா முச்சக்கரவண்டி தரிப்பிடம்) என்ற நபரே உயிரிழந்தவராவார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

யாழில் 24 வயது இளைஞனின் மோசமான செயல்!!

யாழில்..

யாழ்.ஏழாலையில் 15 வயதான சிறுமியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து குறித்த 24 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பணவீக்கம் அதிகரிப்பு : தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!!

பணவீக்கம்..

தெற்காசிய பிராந்தியத்திலேயே அதிக பணவீக்கம் பதிவாகியுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது. நாட்டின் பணவீக்க விகிதம் 12.1 ஆக அதிகரித்துள்ளது.

ஆசியப் பிராந்தியத்தில் இலங்கை ஆறாவது அதிக பணவீக்கத்தை கொண்டுள்ளது. சர்வதேச நாடுகளின் பணவீக்க விகிதத்தில் இலங்கை 20ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. Trading Economics இணையத்தளத்தை கோடிட்டு கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த ஒரு மாதகாலத்தில் மரக்கறிகள், உடன்மீன் போன்ற உணவுப்பொருட்கள் மற்றும் எரிபொருள், போக்குவரத்துக்கட்டணம் போன்ற உணவல்லாப்பொருட்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்களில் ஏற்பட்ட அதிகரிப்பே இப்பணவீக்க உயர்விற்குப் பிரதான காரணமாக அமைந்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

-தமிழ்வின்-

மன்னார் மடு பகுதியில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்து : இருவர் காயம்!!

விபத்து..

மன்னார் மடு பகுதியில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் – மதவாச்சி வீதியுடாக முச்சக்கரவண்டி சென்றுகொண்டிருந்த சமயத்தில் மடு பகுதியினை அண்மித்த பகுதியில் முச்சக்கரவண்டியின் எதிர்திசையில் வந்த டிப்பர் வாகனம் முச்சக்கரவண்டியினை முந்திச்செல்ல முற்பட்டது.

இதன் போது முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியினை விட்டு கீழிறங்கி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட இருவர் காயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் புதுவருடத்தை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள்!!

புதுவருடத்தை முன்னிட்டு..

ஆங்கில புதுவருடத்தை முன்னிட்டு வவுனியாவில் அமைந்துள்ள இந்து ஆலயங்களிலும் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. அந்தவகையில் இறம்பைக்குளம் நாகபூசனி அம்மன் ஆலயம் மற்றும் வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயம் என்பவற்றில் ஆலயத்தின் பிரதம குருக்கள் தலைமையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

இதன்போது ஆலயத்திற்கு வருகை தந்த பலரும் புதிய ஆண்டு சிறப்பாக அமைய வேண்டி இறைவனை வழிபட்டதுடன், தமக்குள் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான மக்களுடன் குறித்த வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.

இதேபோன்று வவுனியாவில் அமைந்துள்ள ஏனைய இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களிலும் புதுவருடத்தை வரவேற்று அமைதியான முறையில் வழிபாடுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வைத்தியசாலையில் ”அரசியல் தலையீடுகளை அனுமதிக்கமாட்டோம்” என பாதாதைகள்!!

வவுனியா வைத்தியசாலையில்..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் ‘வைத்தியர்களின் நியமனங்களில் அரசியல் தலையீடுகளை அனுமதிக்க மாட்டோம்’ எனும் பாதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பதாதைகள் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் காணப்படுவதுடன் பாதாதையின் கீழ்ப்பகுதியில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் என உரிமை கோரப்பட்டுள்ளது.

குறித்த பதாதைகள் வைத்தியசாலை நுழைவாயில்கள் என்பவற்றில் காணப்படுகின்றன.

வவுனியாவில் புதுவருடத்தை வரவேற்று கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேடதிருப்பலி பூஜைகள்!!

புதுவருடம்..

வவுனியாவில் உள்ள ஆலயங்கள் , கிறிஸ்தவ தேவாலயங்களில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி அமைதியான முறையில் புதுவருடத்தை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

அந்தவகையில் வவுனியாவின் பிரதான கிறிஸ்தவ தேவாலயமான இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆலய பங்குதந்தை தலைமையில் காலை விசேட திருப்பலி பூஜைகள் இடம்பெற்று திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு புதுவருடத்தை வரவேற்று சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த மக்கள் புதுவருட வாழ்த்துக்களைப் பரிமாறி கொண்டதுடன் இவ் வருடம் சிறப்பாக அமைய வேண்டி வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான மக்களுடன் குறித்த வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன. தேவாலயத்தின் பாதுகாப்பு கடமையில் இராணுவத்தினரும், பொலிசாரும் ஈடுபட்டிருந்தனர்.

இதேபோன்று வவுனியாவில் அமைந்துள்ள ஏனைய இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களிலும் புதுவருடத்தை வரவேற்று அமைதியான முறையில் வழிபாடுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

4 ஆண்டுகளாக குழந்தை இல்லாத காரணத்தால் இளம் பெண்ணுக்கு அரங்கேறிய கொடுமை!!

கடலூர்..

கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் வினோத்குமார். எலக்ட்ரிசியனான இவருக்கும், குறிஞ்சிப்பாடி வட்டம் கல்குணத்தைச் சேர்ந்த சூர்யா என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

திருமணத்தின் போது 20 சவரன் நகை, இரண்டரை லட்சம் ரூபாய்க்கு சீர்வரிசைப் பொருட்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவை சீதனமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. மேலும், ஆடி மாத சீராக 4 சவரன் தங்கசங்கிலி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வினோத்குமாரின் சகோதரி விந்தியா என்பவர் பண்ருட்டியில் வீடு கட்டுவதற்காக சூர்யாவின் 5 சவரன் நகையை அடமானம் வைத்தார்களாம். இதற்கு, சூர்யா எதிர்ப்புத் தெரிவித்ததால் அன்று முதல் மாமனார் பழனி, மாமியார் ராஜேஸ்வரி,

நாத்தனார் விந்தியா ஆகியோர் சூர்யாவை தொடர்ந்து விமர்சித்து வந்ததோடு, அவருக்கு குழந்தை இல்லாததையும் குறையாக கூறி கொடுமை செய்துள்ளனர்.

குழந்தை இல்லாதததற்காக புள்ளப்பூச்சியினை உயிருடன் வாழைப்பழத்தில் வைத்து சூர்யாவை அப்படியே சாப்பிட வைத்துள்ளனர். இதனால், கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்ற சூர்யா பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீஸார் இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சூர்யாவை மீண்டும் வினோத்குமாருடன் அனுப்பி வைத்தனராம். அப்போது கூடுதலாக 5 சவரன் நகை கேட்டதற்கு 4 சவரன் வழங்கி உள்ளனர்.

ஒரு சவரன் குறைவதாக கூறியும், அவருக்கு குழந்தை இல்லாததை சுட்டிக்காட்டியும் கணவன், மாமியார்- மாமனார் உள்ளிட்ட 4 பேரும் கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகின்றது.

இதனால், மனமுடைந்த சூர்யா கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 14 ந்தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து, பண்ருட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர், கோட்டாட்சியர் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடலூர் அனைத்து மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு கூறினார். அதில், சூர்யாவை தற்கொலைக்குத் தூண்டியதாக வினோத்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மாமனார் பழனி, மாமியார் ராஜேஸ்வரிக்கு தலா 7 ஆண்டுகளும், நாத்தனார் விந்தியாவிற்கு இரண்டரை ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும், அனைவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் செல்வபிரியா தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

புகுந்த வீட்டிற்கு வரும் மருமகளை தங்கள் வீட்டு மகளாகப் பார்க்காமல் கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டினால், என்னமாதியான தண்டனை கிடைக்கும் என்பதற்கு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு எச்சரிக்கை மணி.

ஆண் நண்பருடன் சேர்ந்து கொலை செய்த கல்லூரி மாணவி!!

திருவண்ணாமலை..

தொடர்ந்து தொல்லை தொடர்ந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து மாணவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் கேளம்பாக்கம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.

இந்த மாணவி முன்பு வேறொரு தனியார் கல்லூரியில் படித்து வந்தபோது அதே கல்லூரியில் பணிபுரியும், செந்தில் (44) என்பவர் இவருக்கு பழக்கமாகியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் திருமணமானவர். குழந்தை இல்லை. கல்லூரி மாணவியுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்ட செந்தில், பாலியல் தொல்லை கொடுத்ததோடு தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதனை ஏற்காத கல்லூரி மாணவி தனது நண்பர் அருண்பாண்டியனுடன் சேர்ந்து செல்போன் மூலமாக பேசி செந்திலை கேளம்பாக்கம் அருகே வரவழைத்துள்ளார்.

செந்தில் தனியாக வந்த நிலையில், அவரை கழுத்தில் அறுத்து, நெஞ்சில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, கல்லூரி மாணவியையும், அவருடைய நண்பர் அருண்பாண்டியனையும் பிடித்து போலிஸில் ஒப்படைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் சடலத்தைக் கைப்பற்றி கொலை செய்த மாணவி மற்றும் அவரது நண்பரை கைது செய்துள்ளனர். செந்திலின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொல்லை கொடுத்தவரை கத்தியால் குத்தி கொலை செய்த கல்லூரி மாணவியின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போனால் உயிரைவிட்ட மாணவி : கதறும் உறவினர்கள்!!

திண்டுக்கல்..

திண்டுக்கல் மாவட்டம், காசிபாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி முருகேஸ்வரி. இந்த தம்பதிக்குச் சுதா என்ற மகள் இருந்தார்.

இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். சுதா அடிக்கடி வீட்டில் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

நேற்று முன்தினம் சுதா மீண்டும் செல்போன் பயன்படுத்தியுள்ளார். இதைப் பார்த்த பெற்றோர் கண்டித்து விட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர். பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சுதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் பயன்படுத்தியதைப் பெற்றோர்கள் கண்டித்தால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு எப்போது முடிவுக்கு வரும்?

சமையல் எரிவாயு..

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க இன்னும் மூன்று வாரங்கள் தேவைப்படும் என லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய விதிமுறைகளின்படி தற்போது எரிவாயு வெளியிடப்பட்டு வருவதாகவும், தற்போதுள்ள நிலைமையை சீரமைக்க சிறிது காலமாகும் என அவர் கூறியுள்ளார்.

இந்த செயல்முறை தினசரி உற்பத்தி திறனை 50 சதவீதம் குறைத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கமைய நிறுவனங்களுக்கு மீண்டும் எரிவாயு கொண்டு வரப்பட்டமையினாலேயே எட்டு நாட்களாக சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு, நிலவி வந்துள்ளது.

மேலும், பண்டிகைக் காலங்களில் எரிவாயு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், நெருக்கடியை குறைக்க அதிகளவிலான பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, 3,700 மெற்றிக் டன் எரிவாயு ஏற்றிய கப்பல் ஒன்று ஜனவரி 03ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கப்பல் இலங்கை வந்தடைந்த பின்னர் கப்பலில் உள்ள எரிவாயுவில் எத்தில் மெர்காப்டனின் அளவு மற்றும் கலவையை ஆய்வு செய்த பின்னரே அதனை தரையிறக்க அனுமதி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். சோதனையின் பின்னரே தறையிறக்கப்படும் என்பதனால் எரிவாயு தட்டுப்பாடு நீங்க 3 வாரங்களாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புது வருடத்தில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்த அரசாங்கம்!!

நாளை முதல்..

நாளை முதல் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான வரியை 30 ரூபாவால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சு இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சந்தையில் தற்போது அதிக விலையில் விற்பனை செய்யப்படும் உருளைகிழங்கு, மற்றும் பெரிய வெங்காயம் ஆகியன நாளை முதல் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான வரியை 30 ரூபாவால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வவுனியா செட்டிகுளத்தில் சிறப்பாக இடம்பெற்ற கலை கலாசார பாரம்பரிய பண்பாட்டு ஊர்வலமும் தெய்வீக கிராம நிகழ்வும்!!

செட்டிகுளத்தில்..

செட்டிகுளத்தில் கலை கலாசார பாரம்பரிய பண்பாட்டு ஊர்வலலமும், தெய்வீக கிராம நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பெரியகட்டு, கணேசபுரம், புதுக்குடியேற்ற திட்டப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இன்று (30.12) குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதமரும், புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக்ஸவின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ ராமச்சந்திரகுருக்கள் பாபு சர்மா அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது கலை கலாசார பாரம்பரிய பண்பாட்டு ஊர்வலம் நந்திக் கொடிகளுடன் கணேசபுரம் சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம் வரை இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து கோமாதா பூஜை, மரநடுகை, அறநெறிப் பாடசாலை மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் கலை நிகழ்வுகள் என கலாசார பண்பாட்டு நிகழ்வுகள் பலவும் இடம்பெற்றன. அத்துடன், சைவ சமயத்தின் சிறப்புக்களையும், அதன் மேன்மையையும் வெளிப்படுத்தும் வகையில் குறித்த நிகழ்வுகள் அமைந்திருந்தன.

வவுனிய, செட்டிகுளம் உதவிப் பிரதேச செயலாளர் த.தர்மேந்திரா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கைவல்ய நவநீத ஞானப் பெருமன்றத் தலைவர் சுவாமி கைவல்யானந்தா, சில்மயா மிசனைச் சேர்ந்த பிரமச்சாரி கிருஸ்ண சைதன்யா,

வவுனியா வடக்கு ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் சு.ஜெசந்திரன், செட்டிகுளம் இந்து காலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.கஜேந்திரகுமார், செட்டிகுளம் காலசார அபிவருத்தி உத்தியோகத்தர் கி.சற்சுருவேணு, இந்து மததலைவர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், அறநெறிப் பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நெருக்கடியில் இலங்கை : மற்றொரு ஆட்டத்தை ஆரம்பித்த சீன நிறுவனம்!!

நெருக்கடியில் இலங்கை..

சேதன பசளை இறக்குமதி தொடர்பில் முரண்பாட்டு நிலை உருவாக்கியுள்ள சீன உர நிறுவனம் இலங்கை மீதான அழுத்தங்களை தீவிரப்படுத்தியுள்ளது. நாடு பெரும் பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்நோக்கி வரும் நிலையில், குறித்த சீன நிறுவனம் இலங்கையிடமிருந்து நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே சீனாவின் Seawin Biotech நிறுவனத்திற்கு உர இறக்குமதி குறித்தான முரண்பாட்டை தொடர்ந்து 6.7 மில்லியன் டொலர்களை நட்டஈடாக வழங்கத் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில் தமது நிறுவனத்தின் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தினை ஈடு செய்யும் நோக்கில் இலங்கைக்கு எதிராக சீன நிறுவனம் போர்க்கொடி தூக்கியுள்ளது. இலங்கை தொடர்பில் பல்வேறு சர்வதேச நிறுவனங்களில் முறைப்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக சீன நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு பொருட்களை அனுப்பி வைக்க முன்னதாக அவற்றுக்கான பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு சீன நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலைக்கு கட்டுப்பாடுகள் விதிக்குமாறும் கோரிக்க விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

-தமிழ்வின்-