ஒமிக்ரோன் வைரஸ் திரிபின் தீவிரத்தை பொதுமக்கள் உணர்ந்து பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஏ.முணசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் ஒமிக்ரோன் கோவிட் திரிபு இலங்கையிலும் பரவுவதனை தடுக்க நாட்டை முடக்குவது தீர்வாக அமையாது. இந்த வைரஸ் திரிபின் தீவிரத்தை பொதுமக்கள் உணர்ந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக எதிர்வரும் பண்டிகை காலங்களில் இந்த நிலைமை தொடர்பில் மிக அவதானம் கொள்ள வேண்டும் என அவர் தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் கடந்த ஒன்பது வருடங்களின் பின்னர் மலேரியா நோயுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். காலி – நெலுவ பிரதேசத்தில் குறித்த நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உகண்டாவில் பணியாற்றிய அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சந்திம சிரிதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, கடந்த 27 ஆம் திகதி அவசர சுகயீனம் காரணமாக அவர், உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்போது, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் மலேரியாவினால் பீடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.
இலங்கையில் கடந்த 2012 ஆம் ஆண்டில் இறுதியாக மலேரியா நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார். அதன்பின்னர், மூன்று வருட காலப்பகுதியில் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட எவரும் அடையாளம் காணப்படாததால், இலங்கை மலேரியா நோயற்ற நாடாக 2016 ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா, மன்னார் வீதியில் பயணித்த தனியார் பேரூந்து ஒன்றும் கார் ஒன்றும் வீதியை மறித்து முரண்பட்டமையால் அவ் வீதியூடான போக்குவரத்து சுமார் அரை மணிநேரம் பாதிப்படைந்தது.
இன்று (02.12) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து மன்னார் வீதி வழியாக சென்ற கார் ஒன்று வேப்பங்குளம் பகுதியில் வீதியின் பால திருத்த வேலை இடம்பெறும் நிலையில் ஒரு பகுதியில் செல்ல அனுமதிக்கப்பட்ட வீதி ஊடாக செல்ல முற்பட்ட போது,
மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி வந்த தனியார் பேரூந்தும் அவ் ஒரு வழி பதையின் ஊடாக செல்ல முற்பட்டது. இதனால் இரண்டு வாகனங்களும் செல்ல முடியாமையால் ஒருவரையொருவர் வாகனத்தை பின்நோக்கி செல்லுமாறு கூறினார்.
இருவரும் தத்தமது வாகனத்தை பின்நோக்கி எடுக்க மறுத்த நிலையில் இரு பகுதியினருக்கும் முரண்பாடு ஏற்பட்டது. முரண்பாட்டையடுத்து இருவரும் ஒரு வழி பாதையை வழிமறித்து தத்தமது வாகனத்தை நிறுத்தி வந்திருந்தமையால் அவ் வீதி ஊடாக போக்குவரத்து சுமார் அரை மணிநேரம் பாதிப்படைந்திருந்தது.
இதனையடுத்து அவ் வீதி வழியாக செல்ல முடியாமையால் மக்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்தினர். போக்குவரத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து வாகனங்களை அகற்றியதுடன், போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதற்கமைய தற்போது பாதுகாப்பிற்காக பெண்கள் ஹெல்மட் பயன்படுத்த பழகியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஹெல்மட் பயன்படுத்திய நிலையில் சமையலில் ஈடுபடும் பெண்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதற்கமைய பலப்பிட்டிய வத்துகெதர பிரதேச வீடு ஒன்றில் பெண்ணொருவர் ஹெல்மட் பயன்படுத்தும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
வவுனியா, வேரகம அரச ஊழியர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தில் உள்ள வீடொன்றில் நேற்று எரிவாயு அடுப்பொன்று வெடித்துள்ளதாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த வீட்டில் இருந்த பெண் சமையல் செய்து விட்டு எரிவாயு அடுப்பினை நிறுத்தி வைத்ததன் பின்னர் திடீரென தீப்பிடித்து வெடித்துள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட அந்த பெண் மேலும் சேதங்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக சமையல் எரிவாயு கொள்கலனில் இருந்து ரெகுலேட்டரை அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் வவுனியா – இரட்டைபெரியகுளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
15 வயதிற்குட்பட்டவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதை தடுத்த நாடாக இலங்கை சுகாதார நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி இ.ராகுலன் தெரிவித்துள்ளார்.
எச்.ஐ.வி தினம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வருடம் வருடம் டிசம்பர் முதலாம் திகதி உலக எயிட்ஸ் தடுப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அதனுடைய நோக்கம் எயிட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வை எல்லோர் மட்டத்திலும் ஏற்படுத்துவதும், சிகிச்சை பெறுவது தொடர்பான முன்னேற்றங்களை வருடா வருடம் வெளியிடுவதும் ஆகும்.
வவுனியா மாவட்டத்தின் எயிட்ஸ் நோய் தடுப்பு செயற்திட்டமானது சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. உலகளாவிய ரீதியில் இது வவரையில் 38 மில்லியன் எச்.ஐ.வி நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் 1.7 மில்லியன் நோயாளர்கள் 15 வயதுக்கு குறைந்தவர்கள். இந்த அடிப்படையில், குழந்தைக்கு தொற்று ஏற்படுவதை தடுத்த ஒரு நாடாக 2019 ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
2017 இற்கு பிற்பாடு எந்த விதத்திலும் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் அடையாளம் காணப்படவில்லை. அதனை அடிப்படையாக கொண்டு அந்த சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதனை ஆராய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக வவுனியா மாவட்டமும் காணப்படுகின்றது. வவுனியா மாவட்டம் எயிட்ஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளை கடுமையாக முன்னெடுத்து வருகின்றது.
மக்கள் இந்த நோய் தொடர்பான சரியான புரிதலுடன் செயற்பட வேண்டும். அதன் மூலம் இந்த நோயை நாம் முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் காணித் தகராறு காரணமாக ஏற்பட்ட கைகலப்பில் மூன்று பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்து வவுனியா வைமத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (01.12) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கூமாங்குளம், முருகையா குளத்திற்திற்கு செல்லும் வீதியில் குடும்பம் ஒன்று வசித்து வரும் காணிக்குள் நுழைந்து அடாத்தாக கொட்டகை ஒன்றை போடுவதற்கு சிலர் முயன்றுள்ளனர்.
இதனை குறித்த காணியில் வசித்து வந்தோர் தடுத்து நிறுத்த முற்பட்ட போது வாய்தர்க்கம் ஏற்பட்டதுடன், தடுக்க சென்றவர்கள் மீது அங்கு வந்தவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த தாக்குதலில் தாய், பிள்ளைகள் என மூன்று பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த காணி தொடர்பில் கடந்த சில மாதங்களாக ஒருவர் பிணக்கில் ஈடுபட்டதாகவும், அவருக்கு ஆதரவாக வருகை தந்த சிலர் அத்துமீறி கொட்டகை அமைக்க முயன்றதுடன்,
தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சிதம்பரம் அருகே பிள்ளைமுத்தாபிள்ளைசாவடி பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் ரவிச்சந்திரன் வயது 35 இவருக்கு பல்வேறு இடங்களில் பெ.ண் பார்க்கப்பட்டு வந்ததாகவும் வரன் சரியாக அமையவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் 35 வயது ஆகியும் இதுவரை திருமணம் ஆகவில்லை என மன அ.ழுத்தத்தில் இருந்த ரவிச்சந்திரன் வல்லம்படுகை ரயில் நிலையத்திற்கு இடையில் சிவபுரி அருகில் அந்த வழியாக வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் சிதம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சென்ற ரயில்வே போ.லீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து விசாரணையின்போது திருமணம் ஆகாத வி.ரக்தியில் ரயில் முன் பாய்ந்து த.ற்.கொ.லை செ.ய்ததாக தெரியவந்துள்ளது. வாலிபர் ஒருவர் திருமணமாகாத விரக்தியில் ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புரசைவாக்கம் வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் வினோத் இவருடைய மனைவி ஹேமாவதி வயது 25. இவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
திருமணமான 6 மாதத்தில் இருந்தே கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு கூட காவல் நிலையத்தில் இவர்களுடைய பிரச்சனை தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு சமாதானம் செய்து காவல்துறை அனுப்பியுள்ளனர்.
அதன் பிறகு ஹேமாவதி தன்னுடைய கணவனின் செல்போனை எடுத்து பார்க்கும் போது வினோத்திற்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வினோத் பல பெண்களுடன் வீடியோ காலில் பேசுவதும் அரை நி.ர்வாணத்துடன் வீடியோ கால் செய்வதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் ஹேமாவதி வழுக்கி விழுந்து மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதாக ஹேமாவதியின் அண்ணனுக்கு தொலைபேசி மூலமாக தகவல் கிடைத்துள்ளது.
தகவலறிந்து வந்த ஹேமாவதியின் அண்ணன் உடனடியாக வீட்டிற்குச் சென்று பார்த்தபோது ஆபத்தான நிலையில் இருந்துள்ளார் ஹேமாவதி. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்துவமனையில் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறவே கீழ்ப்பாக்கம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி ஆர்டிஓ விசாரணைக்கு அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக பேட்டி அளித்த ஹேமாவின் அண்ணன் ஜானகிராமன் கூறுகையில்,
தனது தங்கையை வரதட்சணை கொடுமையால் திருமணமான முதல் தொந்தரவு செய்து வந்ததாகவும், வினோத்திற்கு பல பெண்களிடம் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இதற்கெல்லாம் என் தங்கை உடந்தையாக இல்லை என்ற காரணத்திற்காக நேற்று கழு.த்தை நெரித்து கொன்றதாகவும் தெரிவித்துள்ளார். போலீசாரின் விசாரணையிலும், ஆர்.டி.ஓ. அதிகாரிகளின் விசாரணையின் பிறகுதான் உண்மை என்ன தெரியவரும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வாகனங்களின் விலையை அதிகரிக்க வாகன உற்பத்தியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
வாகன உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறு வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே,வாகன விலை உயர்வானது இலங்கையிலும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சிறிய லொறிகள் போன்ற வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடவத்தை பிரதேசத்தில் எரிவாயு வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த பெண் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
அவர் இதுவரையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர வைத்திய கண்கானிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்.
பேலியகொடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நடத்தி செல்லப்பட்ட உணவகத்திலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
தனது மனைவி எரிவாயு அடுப்பை பற்றவைக்கும் போது தீ பரவியதில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அவரது கணவர் மிலிந்த பிரேமரத்ன, தெரிவித்துள்ளார்.
“கோவிட் தொற்றின் பின்னர் எங்கங்கள் வர்த்தகம் பாரிய வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் பேலியகொடையில் சிறிய உணவகம் ஒன்றை நடத்தினோம். கடந்த 6ஆம் திகதி மனைவி திடீரென அழைப்பேற்படுத்தி உடலில் தீப்பற்றியதாக கூறினார்.
10 நிமிடங்களில் நான் அந்த இடத்திற்கு சென்றேன். மனைவி பாரிய தீக்காயங்களுக்குள்ளாகியிருந்தார். அவரது கை மற்றும் முகம் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தது.
எரிவாயு வெடிப்பு ஏற்பட்டமையினால் உணவகத்தில் இருந்தவர்கள் அங்கிருந்து ஓடியுள்ளனர். சிறு பிள்ளைகள் உள்ளமையினால் அடுப்பில் ஏற்பட்ட தீயை அணைத்து விட்டு அருகில் இருந்த நாட்காலியில் அமர்ந்திருந்தனர்.
மனைவி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிசிக்சை பெற்ற வருகின்றார். 30 வருடங்கள் எரிவாயு அடுப்பில் உணவு தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார். ஒரு நாளும் இவ்வாறான சம்பவம் ஒன்றிற்கு முகம் கொடுத்ததில்லை.
எரிவாயுவின் தரம் குறித்து எனக்கு பாரிய சந்தேகம் ஒன்று உள்ளது. இதனால் பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன். அத்துடன் இந்த பிரச்சினையை விட்டு விட மாட்டேன். மனைவியை பழைய நிலைமைக்கு கொண்டு வருவதற்கு ஒரு நாளும் முடியாது.
அந்த வேதனை எனக்கு எப்போதும் இருக்கும். நாளைய தினம் இன்னும் ஒருவருக்கு அவ்வாறான நிலைமை ஏற்பட கூடாது. நான் இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கும் முறைப்பாடு செய்துள்ளேன்.
எரிவாயு அடுப்பிற்கு தீக்குச்சி பற்ற வைக்கும் போது திடீரென தீப்பற்றியது. ஒரு மாதத்திற்கு முன்னரே ரெகுலேட்டர் கொள்வனவு செய்தோம்.
எரிவாயு தட்டுப்பாடிற்கு மத்தியில் அதிக விலை கொடுத்தே பெற்றோம். இறுதி இந்த நிலைமை ஏற்பட்டு விட்டது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் சம்புக்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றையதினம் (30) மாலை 4. 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் தடியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் நோயாளர் காவுவண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் (01.12) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
இராமையா இராமஜெயம் எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரனைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி கிழக்கு ஜே/163 கிராம சேவகர் பிரிவில் உள்ள இரண்டு வீடுகளில் அண்மையில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி ஒரு வீட்டிலும் 29ஆம் திகதி மற்றைய வீட்டிலும் வெடித்துச் சிதறியுள்ளன. இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒரு வீட்டினரால் இன்று (01) முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாரின் இரண்டு குழுக்கள் குறித்த வீட்டிற்கு சென்று அடுப்பினை பார்வையிட்டு சென்றுள்ளனர்.
சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே எரிவாயு அடுப்பு இவ்வாறு வெடித்துச் சிதறியதாகவும் எனினும் எவருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் சம்பவம் நிகழ்ந்த வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியாவில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும் ஊர்வலமும் மாவட்ட பாலியல் நோய் சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் பாலியல் நோய் சிகிச்சை நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி கே.சந்திரகுமார் தலைமையில் இன்று இடம்பெற்றது.
கலந்துரையாடலின் போது எயிட்ஸ் நோய் பரவுவதன் முறைகள் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டிருந்ததுடன் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டதுடன் நகரில் முச்சக்கரவண்டிகள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் இ.ராகுலன், பிரதிப்பணிப்பாளர், விசேட வைத்திய நிபுனர்கள், வைத்தியர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள், தாதியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர் தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு அறிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வவுனியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக உக்குளாங்குளம் பகுதியில் சில வீடுகளுக்குள்ளும், வீட்டு வளவுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தமையால் அங்கு வசித்து வந்த மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி இருந்தனர்.
குறித்த பகுதியில் வீதி திருந்த வேலையின் போது சரியான வடிகால் கட்டமைப்பை கவனிக்காது வீதி புனரமைக்கப்பட்டமை காரணமாகவே தமது வீடுகளுக்குள் வெள்ளம் வந்துள்ளதாகவும் அப் பகுதி பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச சபை தலைவருக்கு தெரியப்படுத்தி, உடனடியாக குறித்த வெள்ள நீரை வழிந்தோடும் வகையில் வெட்டி அகற்றி விடுமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரியிருந்தனர்.
உடனடியாக ஒருவரை அனுப்பி அதனை செய்வதாக பிரதேச சபை தவிசாளர் உறுதியளித்த போதும் நான்கு நாட்கள் கடந்த போதும், இதுவரை குறித்த வெள்ள நீர் வெளியேற்றப்படாமையால் அம் மக்களின் வீட்டு வளவுக்குள் தொடர்ந்தும் வெள்ள நீர் காணப்படுகின்றது. இது குறித்து பிரதேச சபை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் எஸ்.யோகராசாவை தொடர்பு பெகாண்ட போதும், அவரது தொலைபேசியில் இருந்து பதில் கிடைக்கவில்லை. இதனையடுத்து வவுனியா தெற்கு பிரதேச சபையின் உறுப்பினர் இ.விக்டர்ராஜை தொடர்பு கொண்டு கேட்ட போது,
கன மழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு குறித்து உக்குளாங்குளம், கூமாங்குளம் பகுதியில் இருந்து எமக்கும் முறைப்பாடு கிடைத்தது. நான் உடனடியாக சில பகுதிகளுப்கு சென்று வெள்ள நிலமையை பார்வையிட்டதுடன், தவிசாளரிடம் ஜேசிபி இயந்திரத்தை வழங்குமாறு அல்லது அதனை அனுப்பி நீரை வெளியேற்றுமாறும் கோரியிருந்தேன்.
சில மணித்தியாலத்திற்குள் செய்வதாக தவிசாளர் தெரிவித்த போதும், இதுவரை குறித்த பகுதிக்கு சென்று அவர் பார்வையிடக் கூட இல்லை. நான் சில பகுதிகளில் மக்களின் மண்வெட்டிகளைப் பெற்று நீரை வெளியேற்றி இருந்தேன்.
அவர்களது அவசர நிலையில் உதவாது விட்டமை தவறு எனவும், இது தொடர்பில் சபை அமர்வின் போது சபையின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.