நிலைமை மிக மோசம் : தேர்தல் முக்கியமல்ல : மஹிந்த!!

தேர்தல் முக்கியமல்ல..

கொரோனா வைரஸால் இலங்கையின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில் எமக்கு நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமல்ல. கொரோனாவை இல்லாதொழிப்பதே எமது பிரதான நோக்கம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜுன் மாதம் 20ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸின் தாக்கத்தால் இலங்கையின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. உயிரிழப்புகள் 7 மட்டும்தான் பதிவாகியுள்ளன. ஆனால், கொரோனாவால் பாதிப்படைவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இந்தக் கொரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுகாதாரப் பிரிவினர், மருத்துவத்துறையினர், முப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் முழுமூச்சுடன் போராடி வருகின்றனர். இந்தநிலையில், எமக்கு நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமல்ல.

கொரோனாவை இல்லாதொழிப்பதே எமது பிரதான நோக்கம். எனினும், வெகுவிரைவில் நிலைமை சரி வந்தால் ஜுன் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கக்கூடும். நாம் எந்த வேளையிலும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். அதில் வெற்றி பெறுவதிலும் உறுதியாக இருக்கின்றோம்.

நாடாளுமன்ற சட்டத்தை – நாட்டின் அரசமைப்பை மதித்து திகதி குறிப்பிட்டு தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு ஒத்திவைத்துள்ளது. அது பாராட்டத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நாய் ஒன்றுக்கு கொரோனா தொற்று!!

கொரோனா தொற்று..

இலங்கையில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜாஎல சுதுவெல்ல பகுதியில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கியுள்ளது.

இலங்கையில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக பதிவான முதல் சந்தர்ப்பம் இது வென்பது குறிப்பிடத்கத்கது.

குறித்த நாய்க்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் சுகாதார, பாதுகாப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்து பதாதைகள்!!

நன்றி தெரிவித்து பதாதைகள்..

கொரோனா (கோவிட் -19) இலிருந்து எமது தாய்நாட்டு உயிர்களை பாதுகாப்பதற்காக தன்னலமற்ற சேவையினை வழங்கும் சுகாதாரத் துறையினர், முப்படையினர், காவல்துறையினர் மற்றும் ஏனைய துணைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளிலும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நன்றி தெரிவிக்கும் பதாதைகள் வவுனியா புதிய பேருந்து நிலையம், மணிக்கூட்டுச்சந்தி, வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பதாதைகளுக்கு வவுனியா பத்தினியார் மகிழங்குளம் ஓயார் சின்னக்குளம் பகுதி கிராம மக்கள், மகிந்தோதய தொண்டர் படையணி கொரோனா நலன்புரி விழிப்புணர்வு பிரச்சாரக் குழுவினர் உரிமை கோரியுள்ளனர்.

வவுனியாவில் வசந்தகாலத்தை நினைவூட்டும் வீதியோர மரங்கள் பாதுகாக்கப்படுமா?

வீதியோர மரங்கள்..

வவுனியாவில் வசந்தகாலத்தை நினைவூட்டும் வீதியோரம் பூத்துக் குலுங்கும் பல மரங்கள் வீதி அபிவிருத்தியைக் காரணம் காட்டி இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டன. மிகுதியாக நீதிமன்ற வளாகத்திற்க்கு முன்னால் உள்ள மரங்கள் தற்போது பூத்துக் குலுங்குகின்றன.

அழிக்கப்பட்ட மரங்களுக்கு ஈடாக எந்த ஒரு இடத்திலும் மரக்கன்றுகள் நாட்டப்படவும் இல்லை. பஜார் வீதியில் நிழலில் ஒதுங்கி இளைப்பாற ஓரு இடத்தில் கூட மரம் இல்லை. இவ்விடயத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள், நகரசபையினர், சூழலியலாளர்கள் கவனத்திலெடுப்பார்களா?

உண்மையில் மரங்களே நமது நினைவுச் சின்னங்களாகும். அவை உயிருள்ள சின்னங்கள். நம்மை உயிர்ப்பூட்டும் சின்னங்கள். பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் நடப்பட்ட மரங்களே யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளவை.

உடையார்கட்டு தேறாங்கண்டலிலும் வற்றாப்பளையிலும் குமுழமுனையிலும் ஒட்டுசுட்டானிலும் முழங்காவிலும் ஏக்கர் கணக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் நடப்பட்ட மரங்கள் உள்ளன. பூநகரியில் 500 க்கு மேற்பட்ட வேம்புகள் இன்று பெரும் தோப்பாக வளர்ந்திருக்கின்றன.

நமது சூழலில் ஏராளம் கட்சிகள் உண்டு. ஆயிரக்கணக்கான அரசியல்வாதிகள் உள்ளனர். இவர்களெல்லாம் தங்கள் கட்சியின் அடையாளமாகவும் தங்கள் அடையாளமாகவும் நான்கு மரங்களை நட்டாலே ஊரெல்லாம் தோப்புகளாகும் இழந்த மரங்கள் மீள உயிர்ப்புறும்.

சிலைகள், நினைவுச் சின்னங்களுக்குப் பதிலாக மரங்களை நினைவுச் சின்னங்களாக்கலாம். உயிர்ப்புள்ள நினைவுச் சின்னங்களே மண்ணுக்கு அழகு. அதுவே மண்ணுக்கும் மக்களுக்கும் வளமாகும்.

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தால் வெறிசோடிய நகரம் : பாதுகாப்புக் கடமையில் பொலிசார்!!

ஊரடங்கு சட்டத்தால்..

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தால் வீதிகள், நகரங்கள் வெறிச் சோடிக் காணப்படுவதுடன் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 5.00 மணியில் இருந்து இரவு 8.00 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்த நிலையில் நேற்று (24.04.2020) இரவு 8.00 மணி முதல் திங்கட்கிழமை (27.04.2020) காலை 5.00 மணிவரை ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வவுனியாவில் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதுடன், வீதிகள், நகரம் என்பவற்றில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதுடன், அநாவசியமான முறையில் வீதிகளில் செல்வோரை மறித்து பொலிசார் எச்சரித்து திருப்பி அனுப்புவதையும் அவதானிக்க முடிகிறது.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்!!

கொரோனா..

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருவதுடன், உலக நாடுகளுக்கு பெரும் சவாலாகவும் இருந்து வருகின்றது.

இலங்கையிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகின்றது. இதுவரையில், 420 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று மட்டும் 49 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று அடையாளம் காணப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில்,நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 11 பேர் கொழும்பு பண்டாரநாயக்க பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன், 30 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்த வீரர்கள் எனவும் கூறப்படுகின்றது.

அத்துடன், 5 பேர் வெலிசர முகாமில் இருந்து விடுமுறை பெற்று சென்றவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இறுதியாக கர்ப்பிணிப் பெண் ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளார்.

இவர்கள் அனைவரும் இரத்தினபுரி, குருநாகல்-பொல்கஹாவெல, குருநாகல்-கீனியாபொல, பதுளை-கிராதுருகோட்டை, கண்டி, தம்புள்ளை, மருதானை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் கொரோனா வைரஸ் திடீரென தீவிரம் அடையக் காரணம் என்ன?

கொரோனா வைரஸ்..

இன்று உலகத்திற்கு மிகப்பெரும் தலையிடியைஏற்படுத்திவரும் ஒரேயொரு விடயம் கொரோனா. எங்கு பார்த்தாலும் யாரிடம் கதைத்தாலும், ஊடகங்களை பார்வையிட்டால் என எதிலும் கொரோனா தொடர்பான பேச்சுத்தான்.

இவ்வாறு உலகளவில் பேசுபொருளான கொரோனா உலகளாவியரீதியில் பல இலட்சக் கணக்கானோருக்கு பரவியுள்ள நிலையில், உயிரிழப்புக்கள் 2இலட்சத்தை அண்மித்துக் கொண்டிருக்கின்றது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் மேலைத்தேய அபிவிருத்தி அடைந்த பல நாடுகள் உட்பட 210 நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி இன்றுவரை முடிவிலியாக பரவி வருகின்றது.

இவ்வாறு மேலைத்தேய நாடுகள் செய்வதறியாது திணறிக்கொண்டு பாடசாலைகள், மதுபான விடுதிகள், சிகையலங்கார நிலையங்கள், கேளிக்கை விடுதிகள் நாட்டு எல்லைகள் என அனைத்தையும் மூடி, நாளாந்தம் உயிரிழப்புக்களின் எண்ணிக்கைகளை பலநூறாக எண்ணிக்கொண்டிருந்தவேளையில் கொரோனாவை இலங்கையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தது.

வெயில் அதிகம் கொண்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவாது என செய்திகள் வேகமாக பரவிக் கொண்டிருக்கையிலேயே இலங்கையிலும் கொரோனா பரவத் தொடங்கியது. முதலில் மார்ச் மாதம் 11ம் திகதியே கொரோனா தொற்றுக்குள்ளானவர் என இத்தாலி சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக செயற்பட்டவர் ஒருவர் அடையாளப்படுத்தப்பட்டார்.

அன்றுமுதல் அநேகமான நாட்களில் 10க்கும் குறைவாகவேதொற்றாளர்கள் இனம் காணப்பட்ட நிலையில் மார்ச் 30ம் திகதி கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு நடந்தது. இவ் உயிரிழப்பின் பின்னர் மறுநாள் 21 தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டு தொற்றாளர்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிக்கையில் அவ்வப்போது எப்போதாவது உயிரிழப்புக்களும் நடந்தன.

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்தி ஒவ்வோர் மாவட்டத்திலும் சில பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் நிலையமும் அமைக்கப்பட்டு தொற்றாளர்களை தனிமைப்படுத்தி வைத்திய பரிசோதனைகளும் நடந்து வந்தன. கூடுதலானோருக்கு தொற்று இல்லை என்றே சோதனை முடிவுகளும் தெரியப்படுத்தின.

அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை அவசர அவசரமாக தளர்த்தாது தொற்றாளர்களின் எண்ணிக்கையையும் கருத்திற்கொண்டு பல மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கைத் தளர்த்தி அபாய வலயமாக கருதப்பட்ட சில மாவட்டங்களுக்கு மட்டும் ஊரடங்கை நீடித்திருந்தது.

ஆனாலும் ஊரடங்கை தளர்த்திய பல மாவட்டங்களிலும் மக்கள் கொரோனாவுக்கு பயந்தது போல நடந்துகொள்ளவில்லை. சமூக விலகலை கடைப்பிடிக்கத் தவறினர். மேலும் தொற்றுவீதம் அதிகரித்தது.

இந்நிலையிலேயே அபாய வலயங்களாக கருதப்பட்ட சில மாவட்டங்களில் கொழும்பு, கம்பஹா தவிர்ந்த சில மாவட்டங்களில் ஊரடங்கைத் தளர்த்தியது இலங்கை அரசு. ஆனால் மக்களோ வியாபார நிலையங்களில், மருந்தகங்களில், மரக்கறிசந்தைகளில், பொதுப்போக்குவரத்துக்களில், மதுபானக் கடைகளில் என அனைத்து இடங்களில் நெரிசலாகவே கூடினர்.

இதற்கமைய ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள் அன்றே 33தொற்றாளர்கள் இன்ங்காணப்பட்டதோடு கடந்த சில தினங்களில் மட்டும் 100க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட கடந்த 20ம் திகதிவரை ஒரு நாளில் அடையாளம் காணப்பட்ட அதிகூடியதொற்றாளர்களின் எண்ணிக்கை 21ஆக காணப்பட்ட நிலையில், நாடு வழமைக்கு திரும்பி வருகின்றது என்ற எதிர்பார்ப்பில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாளில் மாத்திரம் 33 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

அதற்கு அடுத்த நாள் 6 தொற்றாளர்களும், 22ம் தேதி 20 தொற்றாளர்களும், 23ம் தேதி 38 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். ஆனால் திடீரென இன்று அதாவது 24ம் தினதி 48 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு இலங்கையில் இன்னும் வேகமாக கொரோனா பரவப் போகின்றது என்ற சமிக்ஞையை காட்டி நிற்கின்றது.

இலங்கையில் முதல் 100 கொரோனா தொற்றாளர்கள் 14 நாட்களில் அடையாளம் காணப்பட்டநிலையில், கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்ட பின்னர் ஐந்து நாட்களிலேயே சுமார் 150 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு திடீரென தொற்றாளர்களின் எண்ணிக்கைஅதிகரிப்புக்கு காரணம் என்னவென ஆழமாக பார்த்தோமானால் கடற்படை வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டமையே பிரதான காரணமாக தெரிகின்றது.

எதற்காக கடற்படை வீரர்கள் அதிகமாக தொற்றுக்குஉள்ளானார்கள் எனப் பார்த்தால்… கொரோனா வைரஸ் தொற்றை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் பொலிஸார், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியனவே சுகாதார பிரிவுடன் இணைந்து கடினமாக செயற்பட்டு வருகின்றது.

கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவராக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவே நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், இலங்கையில் தனிமைப்படுத்தல் நிலையங்களை பெரும்பாலும் முப்படையினரே நடத்தி வருகின்றனர். இந்நிலையிலேயே கடற்படை வீர்ர்கள் அதிகமாக தொற்றுக்குள்ளாகி இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மக்களை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்ட பாதுகாப்பு பிரிவினரே தற்போது மேன்மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக மாறிவிடுவார்களோ என்ற அச்ச நிலைமை தற்போது நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

இவ் அச்ச நிலைமையை மாற்றி நாட்டை கொரோனாவில் இருந்து மீட்க அரசு மீண்டும் தொடர் ஊரடங்கை அமுல்ப்படுத்துவதோடு மக்களிடையே மீண்டும் மீண்டும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி தொற்றாளர்களை சமூகத்தில் நடமாட விடாது தனிமைப்படுத்தி தொடர் சோதனைகளை மேற்கொள்ளல் மிகமிக அவசியம்.

எனவே மக்களே வீட்டில் இருங்கள், அத்தியாவசிய தேவை இருப்பினும் வெளியில் செல்வதை தவிருங்கள், சமூக இடைவெளியை அவசியம் கடைப்பிடியுங்கள், என அரசு சொல்வதை அலசியம் செய்யாது பின்பற்றுங்கள்.

கொரோனா வைரஸ் காவியான மனிதர்கள் உங்களைச் சுற்றியும் திரியலாம் என்பதை மறவாதீர்கள். தற்போது கொரோனா வைரஸ் விலங்குகளிலும் காணப்படும் என கூறப்படுகின்றது. எனவே உங்களுக்கு பாதுகாப்பு நீங்கள் தான் என்பதனை ம(ற)றுக்காதீர்கள்.

இலங்கையில் இதுவரையில் 420 பேர் தொற்றுக்குள்ளானதோடு, 7 பேர் உயிரிழந்துள்ளாகிய நிலையில் 109 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் நாட்களில் என்ன தான் நடக்கப்போகின்றதோ என பொறுத்திருந்து உற்றுநோக்குதலைத் தவிர வேறேதும் இல்லை.

-தமிழ்வின்-

இலங்கையில் நோய் தொற்றாளிகளுடன் தொடர்பு பேணாதவர்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம்!!

கொரோனா..

கொரோனா நோய்த் தொற்றாளிகளுடன் தொடர்புகளை பேணாத நபர்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா நோய்த் தொற்றாளிகளின் எண்ணிக்கை கிரமமாக உயர்வடைந்து செல்வதாக மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.

நோய்த் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களின் மூலம் நோய் பரவுகை சமூகத்தில் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நோய்த் தொற்று பரவுகையிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்பொழுது கொரோனா நோய் தொற்றாளிகளுடன் தொடர்பு பேணாதவர்களுக்கும் நோய்த் தொற்று பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாட்டில் அதிகளவில் சமூகத்தில் நோய்த் தொற்று பரவினால் பாரதூரமான ஓர் அனர்த்த நிலையை எதிர்நோக்க நேரிடலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

-தமிழ்வின்-

வவுனியாவில் முதியவர் சடலமாக மீட்பு!!

முதியவர்..

வவுனியா, பாரதிபுரம் பகுதியில் நீர்பாசன நடவடிக்கைக்காக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (24.04.2020) இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பாரதிபுரம் வீதியில் தற்காலிகமாக வசிக்கும் முதியவர் ஒருவர் வீட்டில் இருந்து இரவு தங்குவதற்காக கற்பகபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது மன்னார் பிரதான வீதிக்கு அண்மித்ததாக பாரதிபுரம் வீதியின் ஓரமாக பேராறு நீர்பாசன நடவடிக்கைக்காக வெட்டப்பட்ட குழி ஒன்றில் துவிச்சக்கர வண்டியுடன் வீழ்ந்து, குழியில் இருந்த நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

இன்று (25.04.2020) காலை வீதியால் சென்றவர்கள் குறித்த குழியில் ஒருவர் வீழ்ந்து இறந்து கிடப்பதை அவதானித்து வவுனியா பொலிசாருக்கு கொடுத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதில் ஜெயபத்ம புலேந்திரன் என்ற 68 வயதுடைய நபரே மரணமடைந்தவராவார்.

பாடசாலைகள், பல்கலைக்கழங்கள் மீள ஆரம்பிக்கப்படுவது தொடர்பில் வெளியான புதிய தகவல்!!

புதிய தகவல்..

கொரோனா வைரஸ் பரவலின் ஆபத்தினை கருத்திற் கொண்டு பாடசாலைகள், பல்கலைக்கழகள் மற்றும் மாணவர்கள் ஒன்று கூடும் இடங்கள் மீண்டும் திறக்கும் திகதிகள் தாமதமாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய 10164 அரசாங்க பாடசாலைகள் மே மாதம் 11ஆம் திகதி திறக்கப்படவிருந்தன. எனினும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு அதனை பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எச்.சித்ரானந்த,

“மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் திகதி மேலும் தாமதமாகுவதற்கே வாய்ப்புகள் உள்ளது. நாட்டின் நிலைமைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்ட போதிலும் உறுதியாக மாற்றம் ஏற்படுமா இல்லையா என்பதனை தற்போதே அறிவிக்க முடியாது.

ஆபத்தான பகுதிகளில் ஊரடங்கு சட்டம் மீண்டும் நீடிக்கப்பட்டால் பாடசாலைகள் மீண்டும் திறப்பதற்கான ஆலோசனைகள் அடங்கிய சுற்றறிக்கை மாகாண அதிகாரிகளுக்கு அனுப்புவதற்கு தாமதமாகலாம்.

எனினும் அதனை தயாரிக்கும் நடவடிக்கை இந்த நாட்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மே மாதம் 4ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிக்கப்படும்.

பல்கலைக்கழகங்களை மீளவும் ஆரம்பிக்கும் திகதி சுகாதார அதிகாரிகள் மற்றும் அரசாங்க ஆலோசனைகளுக்கமைய மாற்றமடையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரிப்பு!!

கொரோனா..

இலங்கையில் இன்று மேலும் நான்கு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 420 அதிகரித்துள்ளது. இலங்கையில் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மாத்திரம் 48 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவதாக பொலிஸார் அறிவிப்பு!!

ஊரடங்குச் சட்டம்..

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை எதிர்வரும் திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இன்று அதிகாலை பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு , களுத்துறை , கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கும் கண்டி மாவட்டத்தில் அலவாத்துகொடைபொலிஸ் பிரிவு , கேகாலை மாவட்டம் வராக்காபொல பொலிஸ் பிரிவு மற்றும் அம்பாறை மாவட்டம் அக்கரைபற்று பொலிஸ் பிரிவுகளில் தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் 27.04.2020 திங்கள் காலை ஐந்து மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கு 24.04.2020 இரவு 8 மணி முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் 27.04.2020 திங்கள் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு , களுத்துறை , கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்குள் பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

தளர்ததப்படும் ஊரடங்கு சட்டம் மீள அமுல்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தீவிரம் : இன்று மட்டும் இனங்காணப்பட்ட 48 பேர்!!

கொரோனா தீவிரம்..

இலங்கையில் இதுநாள்வரையில் காணப்பட்ட கொரோனா தொற்றாளார்களை விட இன்று அதிகமானோர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இலங்கை நேரப்படி இரவு 8 மணிவரையிலான கணக்கெடுப்பின் பிரகாரம் 48 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என தொற்று நோயியல்ப் பிரிவினர் தெரிவித்தமையை சுகாதார அமைப்பும் உறுதிசெய்துள்ளது.

இவர்களுள் கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த 11 பேரும், வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் 30 பேரும் உள்ளடங்குவதோடு,

விடுமுறையில் சென்ற கொழும்பு, வெலிசறை, கண்டி, பதுளை மற்றும் இரத்தினபுரியைச் சேர்ந்த 5 கடற்படையினரும்,மேலும் மருதானையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரும்,

சற்றுமுன்னர் கொழும்பு 12 இல் ஒருவருமாக இனங்காணப்பட்டுள்ளனர். குறித்த 48 பேருடன் சேர்த்து, இலங்கையில் இதுவரை 416 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள் : கணவனோ கொரோனாவின் பிடியில் : தவிக்கும் தாய்!!

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்..

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளுக்கு தாயான ஒரு பிரித்தானிய பெண்ணின் கணவர் கொரோனா பாதிப்பிலிருக்க, வருவாயும் இல்லாததால் தவிக்கிறார் அவர்.

இந்த மாத துவக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எசெக்சைச் சேர்ந்த Giovanni Sapia (53), இரண்டு வாரங்களாக மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது இதயம் 25 சதவிகிதம் மட்டுமே செயல்பட்டுவரும் நிலையில், அவரது மனைவி Anna Savchenko (35), தனியாக தனது நான்கு குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டிய சூழலுக்கு உள்ளாகியுள்ளார். வெண்டிலேட்டரில் உள்ள கணவரையும் சந்திக்க முடியாமல் குழந்தைகளுடன் போராடி வருகிறார் அவர்.

இதற்கிடையில், குடும்பத்தில் Giovanni மட்டுமே வேலைக்கு செல்பவர் என்பதால், இப்போது அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமலும் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமலும் திணறி வருகிறார் Anna.

ஆகவே, அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் சேர்ந்து Annaவுக்கு உதவுவதற்காக நன்கொடை வசூலிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியான பெண் : பிறந்த குழந்தை மரணம்!!

கொரோனா நோயாளியான பெண்..

இலங்கையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளியான பெண் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. குறித்த பெண் கொழும்பு மருதானை பகுதியை சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது.

காசல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பிறந்த குழந்தை இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 109 பேர் பூரண சுகமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் 48 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மேலும் 30 கடற்படையினருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா தொற்று..

வெலிசர கடற்படை முகாமிலுள்ள மேலும் முப்பது கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இராணுவ தளபதி சவேந்திர சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜா – எல சுதவெல்ல பிரதேசத்தில் சிலரை தனிமைப்படுத்தலுக்கு அழைத்து சென்ற வெலிசர முகாமிலுள்ள கடற்படை சிப்பாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, ஏனைய கடற்படையினரிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையை தொடர்ந்து 29 சிப்பாய்களுக்கு குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமை நேற்றைய தினம் கண்டறியப்பட்டிருந்தது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் வெலிசர கடற்படை முகாமிலுள்ள கடற்படை சிப்பாய்கள் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.