வரலாற்றில் மிக மோசமான சரிவை சந்தித்த இலங்கை ரூபாயின் பெறுமதி!!

இலங்கை ரூபாயின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாற்றில் மிக மோசமான வீழ்ச்சியை நேற்று பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கைக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதற்கமைய நேற்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 192.65 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 187.55 ரூபாவாக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ளது. அதன் தாக்கம், ரூபா மற்றும் தங்கத்தின் பெறுமதி மீது அழுத்தம் ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!

முக்கிய எச்சரிக்கை

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் இலங்கையர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு சவால்களை பலர் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதன் ஒன்றாக “Photo Challenge” என்ற சவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

#24hours, #onelove, #myphoto, #womenpower என்ற Hash tagகளும் இதற்கு பயன்படுத்தப்படுகின்றன. அந்த சவாலில் முக்கிய இலக்காக இருப்பது பெண்களின் புகைப்படங்கள் என தெரியவந்துள்ளது.

பேஸ்புக்கில் பதிவாகும் புகைப்படங்களை Hashtag மூலம் ஒரே இடத்தில் இலகுவாக பெற்றுக் கொள்வதற்கு அமெரிக்க நிறுவனம் ஒன்று செயற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு பெறும் பல்வேறு பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி டேட்டிங் மற்றும் வயது வந்தவர்களுக்கு மாத்திரம் உள்ள வலைத்தளங்களுக்கு பயன்படுத்தும் ஆபத்துக்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனால் சவால்களுக்காக புகைப்படங்களை பகிர்வதனை பெண்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது : நோயாளர் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!!

கொரோனா தொற்று..

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பலாலி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10 பேருக்கு மேற்கொண்ட ஆய்வு கூட பரிசோதனையில் மேலும் இருவருக்கும் கொரோனாத் தொற்று இருப்பதாக உறுதி செய்யயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் இருவருக்கு தற்போது வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் மிகவும் அவதானமாக அரசாங்கத்தினது அறிவுரைகளை ஏற்று நடந்து கொள்ள வேண்டும் எனவும் யாழ். போதனா பணிப்பாளர் சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இதேவேளை, இலங்கையில் இது வரையில், 146 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 21 பேர் பூரணமாக குணமடைந்து வீடு சென்றுள்ளனர். மேலும் 126 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா : சுவிஸ் போதகருடன் தொடர்பில் இருந்தவர்கள் என தகவல் : யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து மொத்தமாக 4 பேர் யாழில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிலவரம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவிக்கையில், “இன்று பலாலிப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்ற 20 பேரில் 10 பேருக்கு மேற்கொண்ட ஆய்வுகூட பரிசோதனையில் மேலும் இருவருக்கு ‘கொரோனா’ தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன் இன்று மாலை ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தேன். ஆகவே, இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 10 பேரில் மூவருக்குக் ‘கொரோனா’ தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இவர்கள் அனைவரும் ஒரு கிழமைக்கு மேலாக அப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள். இம்மூவரும் சுவிஸ் மத போதகருடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள். இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் மொத்தமாக இதுவரை 4 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதலாவது தொற்றாளரும் சுவிஸ் மத போதகரை நேரில் சந்தித்து உரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, கொரோனா தொற்று வியாதியானது எந்தவிதமான அறிகுறிகள் இன்றி சிலரிடையே காணப்படலாம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

எனவே, பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். சுகாதார அமைச்சினதும் அரசினதும் அறிவுரைகளை ஏற்று நடந்துகொள்ள வேண்டும்” – என்றார்.

கொரோனா வைரஸ் தொற்று : இலங்கையில் மூன்றாவது நபர் மரணம்!!

கொரோனா வைரஸ்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்து நிலையில் மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார். IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயதான ஒருவரே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் பதிவான 3வது மரணம் இதுவாகும். உயிரிழந்தவர் கொழும்பு – மருதானையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கையில் இது வரையில், 146 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு இருவர் உயிரிழந்திருந்தனர். அத்துடன், 21 பேர் பூரணமாக குணமடைந்து வீடு சென்றுள்ளனர். மேலும் 126 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குடும்பத்தைப் பார்ப்பதற்காக 320 கி.மீ நடக்கிறோம் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

இந்தியாவில், போக்குவரத்து முடக்கத்தால் மக்கள் நடந்து சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இந்தியாவில், கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் வரும் 14ஆம் திகதி முடக்கப்பட்டுள்ளது.

இதனால், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டாலும் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டதால் அது இயலவில்லை. இந்நிலையில், இந்தியாவின் வட மாநிலங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்று வருகின்றனர்.

பல கிலோமீட்டர் நடந்து செல்லும் அவர்களுக்க வழி நெடுக்க உணவுகள் தண்ணீர்கள் என்று பல தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் பல்லடத்தில்(திருப்பூர் மாவட்டம்) இருந்து சிதம்பரத்திற்கு ஒரு தம்பதியினர் நடபயணம் துவங்கியுள்ளனர். அவர்கள், சாப்பாடு தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை கட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு நடக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், எங்களுக்கு திருமணமாகி இரண்டு பசங்க இருக்காங்க. எங்களுக்கு சொந்த ஊர் சிதம்பரம்(கடலூர் மாவட்டம்). எங்க அம்மா, அப்பா எல்லாரும் சிதம்பரத்தில் உள்ளனர்.

நாடே முடக்கப்பட்டதால் செலவை சம்மாளிக்க முடியவில்லை. சாப்பாட்டுக்கும் சிரமமாக உள்ளது. அதோடு குடும்ப ஞாபகம் வந்திடிச்சு பிள்ளைகளைப் போய்ப் பார்க்கணும். அதனால கணவருடன் 320 கிலோ மீற்றர் நடந்து செல்கிறோம்.

பல்லடம் காவல்நிலையத்தில் பேசினோம். அவங்க எங்களைப் போக அனுமதித்துக் கடிதம் கொடுத்தாங்க. காலையில் 9 மணிக்குப் பல்லடத்தில் கிளம்பினோம்

மின்வாரியத்தைச் சேர்ந்த அதிகாரிகள் எங்களுக்கு மாஸ்க் கொடுத்தாங்க. அவ்வபோது, சில கிலோமீட்டர்கள் வரை பயணிக்க லாரி உதவி கிடைச்சுச்சு. அங்கங்கே மரநிழலில் உட்கார்ந்து, புளியோதரையைச் சாப்பிட்டுக்குவோம். தண்ணியும் தேவையான அளவு கொண்டு வந்துருக்கோம்.

வாழ்க்கையில் ஒருகிலோமீட்டர் கூட சேர்ந்தாப்புல இதுவரை நடந்ததில்லை. ஆனா, இப்போ 320 கிலோமீட்டர் தூரத்தை இந்தக் கொரோனா பாதிப்புனால நானும் என்னோட கணவரும் நடந்தே கடக்கப்போறோம். எப்படியாவது குடும்பத்தைப் போய்ப் பார்க்கணும்ங்கிற ஆர்வத்துல, நடக்குறது எங்களுக்குக் கஷ்டமாவே தெரியலை” என்று தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இந்திய அரசு போக்குவரத்து முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல் மக்களை அவதிபட வைக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மக்கள் பலர் பணி செய்யும் இடங்களில் உணவு அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தம்பி தங்கைகளை நான் பார்த்துக்கொள்கிறேன் : கொரோனாவால் உயிர் பிரியும் முன் தாய்க்கு சத்தியம் செய்து கொடுத்த மகன்!!

கொரோனாவால்..

அமெரிக்காவில் ஒரு பெண் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிர் பிரியும் முன் அவரது ஆறு பிள்ளைகளில் மூத்த மகன் தம்பி தங்கைகளை கவனித்துக்கொள்வதாக உறுதியளித்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று நடந்தேறியது.

வாஷிங்டனைச் சேர்ந்த Sundee Rutter (42), கணவன் இல்லாமல் தனியே ஆறு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவர். அத்துடன், ஏற்கனவே மார்பக புற்றுநோயை வென்று மீண்டவர் Sundee. இந்நிலையில் Sundeeக்கு உடல் நலக் குறைவு ஏற்பட, அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.

நாளுக்கு நாள் Sundeeயின் உடல் நிலை மோசமாகிக்கொண்டே வர, ஒரு நாள் பிள்ளைகளை அழைத்த மருத்துவர்கள் தாயை வந்து கடைசியாக ஒரு முறை சந்திக்கும்படி கூறியுள்ளனர்.

பிள்ளைகள் வர, Sundee ஒரு கண்ணாடி அறைக்குள் இருக்க, வெளியே இருந்து பார்த்துக்கொண்டிருந்த பிள்ளைகள் வாக்கி டாக்கி மூலம் தாயிடம் விடை பெற்றுக்கொண்டனர்.

அப்போது Sundeeயின் மூத்த மகனான Ross-Rutter (20), தான் அம்மாவை மிகவும் நேசிப்பதாகவும், தம்பி தங்கைகள் குறித்து கவலைப்படவேண்டாம் என்றும், தான் அவர்களைப் பார்த்துக்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

தாயின் உயிர் பிரியும்போது, அவர் பக்கத்தில் இல்லாததுதான் பெரிய வருத்தம் என்கிறார் Ross-Rutter.

தன்னை செல்லமாக வளர்த்த பாட்டிக்கு வீடியோ அழைப்பில் இறுதிச்சடங்கு செய்த பேரன் : மனதை உருக்கிய சம்பவம்!!

மனதை உருக்கிய சம்பவம்

தமிழகத்தில் தன்னை செல்லமாக வளர்த்த பாட்டியின் இறுதிச்சடங்கில் நேரில் பங்கேற்க முடியாத பேரன் வீடியோ அழைப்பில் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் மனதை உருக்கியுள்ளது.

மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த 103 வயதான சிவனம்மாள் என்ற மூதாட்டி மதுரை விளாங்குடியிலுள்ள தனது மகனின் வீட்டில் வசித்து வந்தார்.

மறைந்த அவரது மற்றொரு மகனின் மகனான உதவி இயக்குநர் கார்த்திக் என்பவரை சிறுவயதில் இருந்தே வளர்த்துள்ளார். தற்போது கார்த்திக் சென்னையில் பணியாற்றி வரும் நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட சிவனம்மாள் உயிரிழந்தார்.

ஊரடங்கு காரணமாக சென்னையில் முடங்கியுள்ள அவரது பேரன் கார்த்திக் தான் அவரது தந்தை ஸ்தானத்தில் இருந்து மூத்த பேரன் செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய வேண்டியது முறை.

ஆனால் அவர் பங்கேற்க முடியாத காரணத்தால் காணொளி மூலமாக இறுதிச் சடங்குகளை செய்தார். மதுரையிலும் ஊரடங்கு பின்பற்றப்படுவதால் இறந்தவருக்கு மாலை வாங்குவதற்கு 3 மணி நேரம் அலைந்து திரிந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

இதோடு கொரோனா பீதி காரணமாக குடும்பத்தார் மட்டுமே பங்கேற்று 3 மணி நேரத்தில் மூதாட்டியின் சடலத்தை எரியூட்டி அவரது இறுதி பயணத்தை நிறைவு செய்துள்ளனர்.

கொரோனாவால் முடக்கம் : பசி தாங்காமல் கால்நடைகள் போல் புற்களை தின்ற சிறார்கள்!!

பசி தாங்காமல்..

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் 21 நாள் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ள நிலையில், பசிக்கு புற்களை தின்ற சிறார்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் 21 நாட்கள் நாடு மொத்தம் முடக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளை மட்டும் விடுத்து எஞ்சிய அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆளும் மோடி அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில், இந்த தினக்கூலி தொழிலாளர்கள் மத்தியில் பசியும் ஏழ்மையும் பெருகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் முஷார் சமூகத்தை சேர்ந்த சில சிறார்கள் பல நாட்கள் பசியாக இருந்த காரணத்தால் akri எனப்படும் ஒருவகை புல்லை உப்பு சேர்த்து உணவாக சாப்பிட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அந்த பகுதியில் உள்ள பத்து குடும்பங்களை சேர்ந்த சிறார்கள் கால்நடைகளுக்கு அளிக்கப்படும் புல்லை உணவாக ஊண்ட சம்பவம் நாடு முழுவதும் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் வாரணாசி நகர நிர்வாக அதிகாரிகள் குறித்த குடும்பங்களை அணுகி உணவுக்கான ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் 21 நாட்களுக்கும் சேர்த்து அந்த 10 குடும்பங்களுக்கு 15 கிலோ உணவுப் பொருட்களை மட்டுமே வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமெரிக்காவில் சுமார் 2 லட்சம் பேர் இறக்கலாம் என அச்சம்!!

அமெரிக்காவில்..

உலக தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை விட அதிகரித்துள்ளது.

நேற்றிரவு 11 மணி வரை அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக 3 ஆயிரத்து 305 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் சுமார் 2 லட்சம் பேர் வரை உயிரிழக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 4 ஆயிரத்து 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 592 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது.

நியூயோர்க்கில் மாத்திரம் கொரோனா காரணமாக ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 75 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

உலக சுகாதார நெருக்கடி மாத்திரமல்லாது பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் பரவும் புதிய கேந்திர நிலையமாக அமெரிக்கா மாறியுள்ளது.

கொழும்பில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிப்பு!!

கொரோனா நோயாளர்கள்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்று நோயாளர்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவானோர் உள்ளதாக சுகாதார துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொற்று நோய் பிரிவினால் இன்றைய தினம் வெளியிடப்பட்ட தினசரி அறிக்கைக்கமைய கொழும்பு மாவட்டத்திலேயே அதிக அளவிலான கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.கொழும்பில் பதிவாகிய நோயாளர்களின் எண்ணிக்கை 32 ஆகும்.

புத்தளத்தில் 25 பேரும், களுத்துறையில் 24 பேரும் கம்பஹாவில் 11 பேரும் கண்டியில் 4 பேரும் இரத்தினபுரியில் 3 பேரும், குருநாகலில் ஒருவரும், காலியில் ஒருவரும், கேகாலையில் ஒருவரும், மட்டக்களப்பில் ஒருவரும், பதுளையில் ஒருவரும், யாழ்ப்பாணத்தில் இருவரும் மாத்தறையில் ஒருவரும் பதிவாகியுள்ளனர்.

நாடு முழுவதும் 146 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்கள் 34 பேரும் அதற்குள் உள்ளடங்குகின்றனர். 173 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை இரண்டு உயிரிழப்புக்கள் சம்பவித்துள்ளன.

திருகோணமலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!!

திருகோணமலையில்

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் உள்ள 5ஆம் கட்டைப்பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தனிமைப்படுத்தப்பட்டனர் என்று கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் தெரிவித்தார்.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞரொருவர் காய்ச்சல் இருமல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில நேற்று(31) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கொவிட் 19 நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் என்றும் இதனையடுத்து குறித்த இளைஞனின் குடும்பம் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

19 வயது இளைஞர் உயிரிழப்பு : கொரோனா தொற்றியது தெரியாமலே இறந்த பரிதாபம்!!

19 வயது இளைஞர்

ஆரோக்கியமான இளைஞரொருவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது இறந்த பின்னரே தெரியவந்துள்ளதாகவும், முன்னரே கண்டறியப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் எனவும் இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு இத்தாலியின் நிரேடோ நகரை சேர்ந்த 19 வயதான லுகா டி. நிக்கோலா கடந்த 24ஆம் திகதி வடக்கு லண்டனில் உள்ள மிடில்செக்ஸ் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

அந்த இளைஞன் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இருமல் மற்றும் காய்ச்சல் இருந்துள்ளதுடன் அவருக்கு சளி இருக்கவில்லை என இத்தாலிய பத்திரிக்கை லா ரிப்பப்ளிகா தெரிவித்துள்ளது.

இது குறித்து மிடில்செக்ஸ் மருத்துமனையில் செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில், 19 வயதான இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தது சோகமானது. இறந்த பின்னர் பரிசோதித்த போதே அவருக்கு கொரோனா தொற்றியுள்ளது கண்டறியப்பட்டது.

இந்த இளைஞன் சிகிச்சைக்காக இத்தாலிக்கு திரும்பி இருந்தால், நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும் என நிரேடோ நகர துணை மேயர் மரியா ஏஞ்சலா லெலி குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 2வது கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு : 146 நோயாளிகளாக அதிகரிப்பு!!

யாழ்ப்பாணத்தில் 2வது கொரோனா நோயாளி

கொரோனா நோயாளர்கள் மேலும் மூவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், குருணாகலை, மருதானை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது. யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்ட நபர் மத போதகர் என்றும் அவர் பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் அடையாளம் காணப்பட்டதாகவும் தெரியவருகிறது.

மொத்த எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ள போதிலும் 18 பேர் பூரணமாக குணமடைந்து வீடு சென்றுள்ளனர். மேலும் 126 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2ம் உலகப் போ ருக்குப் பின் கொரோனா மிகப் பெரிய சோதனை : ஐ.நா பொதுச் செயலாளர் க வலை!!

கொரோனா

தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலானது இரண்டாம் உலகப் போ ருக்குப் பின்னர் உலகிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகத்திற்கே ஓர் பெரும் தலையிடியாக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் சமூக பொருளாதார தா க்கம் குறித்து ஐ.நா அறிக்கையை வெளியிட்ட போது குட்டெரஸ் பேசினார்.

உலகெங்கிலும் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புக்களின் எண்ணிக்கை இப்போது 860,000 ஐ நெருங்குகிறது, 42,000 இற்கும் அதிகமானோர் இ றந்துள்ளனர். அமெரிக்காவில் இ றந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 3800இற்கும் அதிகமாக உள்ளது. கடந்தாண்டு பிற்பகுதியில் தொடங்கிய சீனாவில் இருந்ததை விட இது அதிகம்.

ஜோன்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்த தரவுகளின்படி, அமெரிக்காவில் 181,000 க்கும் அதிகமானோர் பா திக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸை எ திர்த்துப் போ ராடுவதற்கான நடவடிக்கைகளை அதிகமான அமெரிக்க மாநிலங்கள் க டுமையாக்கியுள்ளதால், நான்கு அமெரிக்கர்களில் மூன்று பேர் இப்போது தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளனர். நிவ்யோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் பொதுச் செயலாளர் உரையாற்றினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய கொடிய கொரோனா வைரஸ் நோய் சமூகங்களை அவற்றின் மையத்தில் , உயிர்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அதிகளவில் பா திக்கின்றது. “ஐக்கிய நாடுகள் சபை உருவானதிலிருந்து நாங்கள் ஒன்றாக எதிர்கொண்ட மிகப்பெரிய சோ தனை கொவிட்- 19 ஆகும்.

இக் கொரோனா வைரஸ் பரவலை அ டக்குவதற்கும் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் உடனடி ஒருங்கிணைந்த சுகாதார நடவடிக்கை எடுத்தல் அவசியம். அபிவிருத்தி அடைந்த நாடுகள் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் உதவ வேண்டும் அல்லது “காட்டுத்தீ போல் பரவும் நோயின் கனவை எதிர்கொள்ள” வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இக் கொரோனா தா க்கத்தின் விளைவாக உலகம் முழுவதும் 25 மில்லியன் பேர் வேலைகளை இழப்பர் என்று ஐ.நா அறிக்கை மதிப்பிடுகிறது. இது உலகளாவிய அந்நிய நேரடி முதலீட்டு பாய்ச்சல்களில் 40% வரை சரிவைச் சந்திக்கும் எனவும் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

சிறைச்சாலை பேருந்து விபத்துக்குள்ளானதில் அறுவர் படுகாயம்!!

சிறைச்சாலை பேருந்து

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்பட்ட நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் ஹக்கல பூங்கா பகுதியில் வைத்து, சிறைச்சாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் அறுவர் காயமடைந்துள்ளனர்.

நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி சென்ற சிறைச்சாலை பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த பேருந்து தம்புரண்டு குடியிருப்யொன்றின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தின்போது கைதிகள் எவரும் பேருந்தில் இருக்கவில்லை எனவும், சிறைச்சாலை பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே பயணித்துள்ளனர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பெண் பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று : கொழும்பு  வெள்ளவத்தையில் சீல் வைக்கப்பட்ட வீடு!!

இலங்கையில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த வீட்டிலிருந்த இருவரை தனிமைப்படுத்தல் நிலையம் அல்லது வைத்தியசாலைக்கு அழைத்து சென்றதன் பின்னர் குறித்த வீடு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்த இருவரும் அண்மையில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த இருவரையும் மருத்துவ குழுவினர் அழைத்து சென்றுள்ளர்.

இதனையடுத்து, வீடு முழுவதும் கிருமி நீக்கம் தெளிக்கப்பட்டு பின்னர் சீல் வைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அந்த வீட்டில் இருந்து அழைத்து செல்லப்பட்ட இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இதனிடையே, மார்ச் 16ம் திகதிக்கு பின்னர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய அனைவரும் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பதிவு செய்யதாவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி, நாளை வரை பதிவு செய்துகொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.