இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய மேலும் 10 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தவகையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு நோயாளர்கள் முழுமையாகாகக் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, இதுவரை 16 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாகக் குணமடைந்துள்ளனர். இதேவேளை, நாட்டில் இதுவரை 132 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ள நிலையில், அதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 111 கொரோனா நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், நாட்டின் பல வைத்தியசாலைகளில் 173 பேர் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வவுனியா பம்பைமடு, பெரியகாடு இராணுவ முகாம் மற்றும் வேலன்குளம் விமானப்படை முகாம் என்பவற்றில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 310 விமான பயணிகள் இன்று காலை விடுவிக்கப்பட்டனர். வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
வவுனியா பம்பைமடு பெரியகாடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமிற்கு கடந்த 16 ஆம் திகதி 120 விமான பயணிகள் கொண்டுவரப்பட்டிருந்தனர்.
இத்தாலி, தென்கொரியா, பிரித்தானியா, பிரான்ஸ் நாட்டவர்கள் குறித்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டிருந்ததுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கபட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த பயணிகளில் வெளிநாட்டவர் 04 பேர் உள்ளடங்களாக 104 விமான பயணிகளுக்கு கொரோனோ தொற்று இல்லாதநிலையில் அவர்களை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, கண்டி, வவுனியா, புத்தளம், சிலாபம், மாத்தளை உள்ளிட்ட அவர்களது வதிவிடங்களுக்கு 07 பேரூந்துகளில் இராணுவத்தினரால் அழைத்து சென்று விடப்பட்டனர்.
அத்துடன், வவுனியா வேலன்குளம் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 16 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்ட 206 பேர் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் 10 பேருந்துகளில் அவர்களது இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் 2020 ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படவுள்ளது. கல்வி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
எனவே பெறுபேறுகள் வெளியிடப்படுவதில் எவ்வித தாமதங்களும் இருக்காது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கொழும்பு IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 64 வயதுடையவர் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்த இரண்டாவது நபர் இவராகும். மேலும் 6 பேர் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர் உயரிழந்தார்.
இதேவேளை இலங்கையில் இதுவரை 122 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 11 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா (கோவிட் -19) வைரஸை கட்டுப்படுத்த ஜப்பான் கண்டுபிடித்துள்ள ஹெவிகன் என்ற மருந்து நாளைய தினம் இலங்கையை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெவிகன் என்ற இந்த மருந்தை இறக்குமதி செய்ய வரையறுக்கப்பட்ட அரச மருந்து கூட்டுத்தாபனம் தீர்மானித்திருந்ததுடன் முதல் கட்டமாக 5 ஆயிரம் மாத்திரைகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.
நாளைய தினம் இந்த மருந்து இலங்கையை வந்தடையும் என அரச மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் மருத்துவர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இதற்கான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் மேலும் பல பகுதிகளை முழுமையாக முடக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான நபர்கள் பல்வேறு பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுடன் பழகியவர்களை கண்டுபிடிப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கையாக Lockdown செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
அந்தந்த பகுதியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், முப்படையினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளனர்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
உலகத்தையே தினம் தினம் பலியெடுத்து வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அபிவிருத்தி அடைந்த மேற்குலக நாடுகள் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸிற்கு இலக்காகிய முதல் நோயாளியைக் கண்டுபிடித்ததும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
வைரஸின் தாக்கம் தொடர்பில் தொடர்ந்தும் மக்களிடையே விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, அனைத்தையும் முடக்கியதோடு மக்களுக்கு நிவாரணங்களையும் வழங்கியது. இதுவரையில் ஒருவர் மட்டும் உயிரிழந்த நிலையில் சிலரைக் குணப்படுத்தியது.
கொரோனா வைரஸைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டுமாயின் அனைத்தையும் முடக்குங்கள் என உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு அவ்வப்போது கூறிவந்தது. எனினும் அபிவிருத்தி அடைந்த பல நாடுகள் அனைத்தையும் முற்றாக முடக்கியதேயில்லை. ஆனால் இலங்கையோ அனைத்தையும் முடக்கியதோடு அவ்வப்போது ஊடரங்குச் சட்டத்தை தளர்த்திய போதிலும் மக்களின் செயல் கண்டு முற்றாக முடக்கியது.
இந்நிலையில் இலங்கையின் சுகாதார சேவை ஆசியாவில் மட்டுமல்ல, உலகிலும் மிகச் சிறந்த ஒன்றாகும் என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.
இலங்கையின் சுகாதார சேவையின் உயர் தரத்தின் காரணம் அது இலவசமாகக் கிடைப்பதே என்று டாக்டர் கெப்ரேயஸ் கூறியிருந்தார். இலங்கையின் அரசியல் தலைமை இலங்கை சுகாதார சேவைக்கு தெளிவான வழிகாட்டுதலை அளிக்கிறது.
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் 2018ம் ஆண்டு கொழும்பில் நடந்த உலக சுகாதார தின கொண்டாட்டத்தில் உரையாற்றினார்.
வைத்தியர் கெப்ரேயஸின் கூற்றுப்படி, முன்னர் குறைந்த வருமானம் கொண்ட நாடாக இருந்த இலங்கை இப்போது நடுத்தர வருமான நாடாக உள்ளது. இந்த சூழ்நிலையில் இலங்கையில் ஒரு சிறந்த சுகாதார சேவை கிடைக்கிறது. அதிக வருமானம் கொண்ட நாடுகளுக்கு கூட இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனத் தெரிவித்தார்.
தென் – கிழக்கு ஆசியாவிற்கான WHO பிராந்திய இயக்குனர் வைத்தியர் பூனம் கேத்ரபால் சிங், சுகாதார அமைச்சுக்கு எல்லா இடங்களிலும் எதிரிகள் இருப்பார்கள், ஏனெனில் இது மருந்துகளின் விலையை குறைத்துள்ளதால் மிகவும் பாராட்டத்தக்கது. புகையிலையை கட்டுப்படுத்த இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் மிகவும் போற்றத்தக்கவை.
“2030 க்குள் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய WHO திட்டமிட்டுள்ளது, ஆனால் இலங்கை ஏற்கனவே அவற்றில் சிலவற்றை அடைந்துள்ளது. தொற்றுநோயற்ற நோய்களைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்ற நாடுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ”என்று டாக்டர் சிங் கூறினார்.
புத்தளத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளியின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மாரவில, நாத்தன்டிய பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளியின் மனைவிக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குறித்த நபர் கடந்த 11ஆம் திகதி சென்னை நோக்கி சென்றுள்ளார். அதற்கு அடுத்த நாள் அவர் இலங்கை வந்துள்ளார். இந்த நபர் சுய தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
சென்னையில் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்துக் கொண்டு வந்தவர், மாரவில பிரதேசத்தில் 100 வீடுகளுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளார்.
அதற்கமைய அந்த நபர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதி செய்யப்பட்டதனை தொடர்ந்து அவர் வசிக்கும் பிரதேசத்தில் 10 வீடுகளில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரனா தொற்றையடுத்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் வவுனியா மாவட்டத்தில் 8 மணிநேரம் தளர்த்தப்பட்ட நிலையில் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களுக்கு வருகை தந்த மக்களின் எண்ணிக்கை கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவில் காணப்பட்டது.
நாட்டில் கொரனா தொற்று தீவிரம் அடைந்ததையடுத்து நாடு பூராகவும் ஊரடங்குச சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வவுனியா உள்ளிட்ட வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் தவிர்ந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் இன்று (30.03.2020) காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுலுக்கு வருகிறது.
இதனையடுத்து அத்தியாவசிப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், மரக்கறிகள் என்பவற்றைக் கொள்வனவு செய்வதற்காகவும் வங்கிகளில் பணம் பெறுவதற்காகவும் மக்கள் நகரிருக்கு வருகை தந்துள்ளதுடன் வங்கிகள், வர்த்த நிலையங்களின் முன்னால் வரிசையில் காணப்படுகின்றனர்.
அத்துடன் வவுனியா பொலிஸார், போக்குவரத்து பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் நிலமைகளை கட்டுப்படுத்துவதுடன் வவுனியா நகரசபையினரினால் விழிப்புணர்வு அறிவித்தலும் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் மரக்கறி வியாபாரத்திற்காக வவுனியா மன்னார் வீதியில் காமினி மகா வித்தியாலத்திற்கு முன்பாக நகரசபையினரினால் இடம் ஒதுக்கி வழங்கப்பட்டு நகரப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் வவுனியா பஜார் வீதி, மீன் சந்தை, மரக்கறி சந்தை ஆகிய பகுதிகளுக்காக வீதியூடாக வாகனங்கள் செல்வதற்கும் பொலிஸாரினால் தடை விதிக்கப்பட்டு வீதிகள் மூடப்பட்டு மோட்டார் சைக்கில், துவிச்சக்கரவண்டிகளுக்கு மாத்திரம் அனுமதியளிக்கப்படுகின்றது.
மரக்கறி விற்பனை நிலையங்கள் பரவலாக்கப்பமட்டுள்ளமையால் ஒரு பகுதியில் அதிகளவிலான மக்கள் குவிவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் கொரோனா வைரஸ் தொடர்பிலான விழிப்புணர்வு பதாதைகளும் வர்த்தக நிலையங்கள் முன்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மக்கள் வேகமாக பொருட்களை கொள்வனவு செய்வதினை அவதானிக்க முடிகின்றது.
வவுனியா மாடசாமி கோவில் வீதியில் இன்று (30.03.2020) காலை 10.00 மணியளவில் வீடொன்று முற்றாக எரிந்து தீக்கிரையானதில் பல லட்சம் பெறுமதியான உடமைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
வவுனியா, மாடசாமி கோவில் வீதியில் உள்ள அரைநிரந்தர வீடு ஒன்றில் வசித்து வந்த குடும்பத்தினர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் பொருட்கொள்வனவுக்காக வெளியில் சென்ற நிலையில் வீடு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனை அவதானித்த அயலவர்கள் வீட்டு உரிமையாளருக்கு தெரியப்படுத்தியதுடன் தீயிணை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும், வீட்டில் இருந்த இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. தீ விபத்துக்குரிய காரணம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரஜைகளை சந்தித்தவர்கள் சுயதனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டும் என அரசாங்கம் கோரி வருகின்றது.
எனினும், அதனை பலரும் பொருட்படுத்தாத நிலையில், அதனை சரியாக செய்த தந்தை ஒருவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவிசாவளை – எஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த நிரோஷ் மஞ்சுள, சுற்றுலா பேருந்து ஒன்றின் சாரதியாக கடமையாற்றி வருகின்றார்.
குறித்த நபர் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய கடந்த 24ம் திகதி முதல் சுய தனிமைப்படுத்தலில் இருந்து வருகின்றார்.
நிரோஷ் மஞ்சுள தனக்கு சொந்தமான மற்றுமொரு வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டு வருகின்றார். இந்த நிலையில், தனது மூத்த மகள் சுகயீனமுற்றிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் மகளின் பூதவுடன் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போதிலும், பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான சந்தர்ப்பத்தை கூட நிரோஷ் மஞ்சுள இழந்துள்ளார்.
தனது மகளின் பூதவுடலை எதிர் வீட்டிலிருந்து பார்த்த வண்ணம், தனது மகளின் பூதவுடலுக்கு அவர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவர் தனது சமூகத்தின் நன்மைக்காக தனிமைப்படுத்தலில் இருக்க முடிவு செய்துள்ளார். இதனால் தனது மகளின் வாழ்க்கையின் கடைசி தருணத்தை கூட அவர் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.