சவுதியிலிருந்து இலங்கை செல்லவிருந்த தன்னுடை மகளுக்கு விமானத்தில் தந்தை கொடுத்த இன்ப அதிர்ச்சி புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, சவுதி அரேபியாவிலிருந்து, இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு வந்துள்ளது.
அப்போது இதே விமானத்தில் Ms. Hajer என்ற சிறுமி பயணித்ததாக கூறப்படுகிறது. அப்போது விமானத்தின் உள்ளே வந்த சிறுமிக்கு, அங்கிருந்த விமான பணியாளர்கள் கேக், பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள் போன்றவற்றை வைத்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
தன்னுடைய மகளின் பிறந்தநாள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அவரின் தந்தை இதை விமான நிறுவனத்திடம் கூறியதாகவும், அதன் பின்னர் இதை விமான பணியாளர்கள் செய்ததாக கூறப்படுகிறது.
உலககெங்கிலும் சமூக வலைத்தளங்களான வட்சப், இன்ஸ்டக்கிராம் மற்றும் பேஸ்புக் பாவனையில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாவனையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களிலிருந்து படங்கள் டவுன்லோட் செய்தல் மற்றும் குரல் பதிவு தரவிக்கம் செய்தல் என்பன முற்றாக செயலிழந்துள்ளன. இதனால் புகைப்படங்களை பார்வையிடமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள சமூக வலைத்தள பாவனையாளர்கள் இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்பட்டுள்ள கோளாறு விரைவில் சீர் செய்யப்படும் என சமூக வலைத்தள நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் முன்னோடி பயிற்சிக் கருத்தரங்கு வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் நேற்று (03.07.2019) இடம்பெற்றது.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் பிரதிப்பணிப்பாளர் வீ.கனகசுந்தரம் நெறியாள்கையில்இடம்பெற்ற இக் கருத்தரங்கில் 2019ம் ஆண்டு 2ம் பிரிவுக்கான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியலாளர், கணணி வன்பொருள் திருத்துநர், கணிணி பட வரைஞர், தையல், மின்னியலாளர், அழகுக் கலை மற்றும் சிகையலங்காரம், காய்சி இணைப்பவர், அலுமினியம் பொருத்துநர் போன்ற பல்வேறு பயிற்சி நெறிகளில் ( NVQ-3, NVQ-4 ) பயிலவுள்ள மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றிருந்தனர்.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையினால் அனைத்து பயிற்சி நெறிகளும் இலவசமாக கற்பிக்கப்படுவதுடன் தூர தேசங்களிலிருந்து கற்கை நெறியினை தொடருகின்ற மாணவர்களுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் யுத்த கால சொத்தழிவுகளுக்கான இழப்பீடு வழங்குதல் என்பவற்றுக்கான பயனாளிகள் தெரிவு நடவடிக்கை நேற்று (03.07.2019) இடம்பெற்றது.
புனர்வாழ்வு அதிகாரசபையின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, யுத்த காலத்தின் போது ஏற்பட்ட சொத்தழிவுக்காக விண்ணப்பித்தவர்களுக்கான மதிப்பீட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், சுயதொழில் முயற்சியாளருக்கான கடன் வழங்குவதற்காக பயனாளிகளை தெரிவு செய்வதற்கான நேர்முகத்தேர்வும் இடம்பெற்றது. இதில், தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் மற்றும் கடன்கள் என்பன விரைவில் வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் புனர்வாழ்வு அதிகாரசபையின் பணிப்பாளர் திஸநாயக, வவுனியா உதவி பிரதேச செயலாளர், வங்கி உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் நேற்றுமுதல் பொதுமக்கள் தினத்தில் புதிய சீருடை ஆண், பெண் இருபாலாருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்திலுள்ள சகல திணைக்களத்திலுள்ள உத்தியோகத்தர்களும் கட்டாயம் இச்சீருடையை பொதுமக்கள் தினத்தில் (புதன்கிழமைகளில்) அணிந்துவரவேண்டும் என்று அரசாங்க அதிபரினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அரசகரும மொழி கொள்கையை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசகரும மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தும் வாரம் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் பொதுமக்கள்தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராஜா நெறியாள்கையின் கீழ் வவுனியா பிரதேச செயலகத்தில் தேசிய மொழிகள் தின விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (03.07) இடம்பெற்றது.
செயலமர்வில் மொழி உரிமை மீறல், மொழியின் தேவை, மொழி ஏன் அவசியம் மொழி சம்பந்தமான விளக்கங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இவ் விழிப்புணர்வு செயலமர்வில் உதவி பிரதேச செயலாளர் பிரியதர்சினி, விமானப்படையினர், பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர்கள், ஊழியர்கள், பொதுமக்கள், சகவாழ்வு சங்க உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட வடக்கை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 19 பதக்கங்களை வென்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அகில இலங்கை ரீதியில் மாத்தறை மாவட்டத்தின் அக்குறஸ்ச பகுதியில், அத்துறுகிரிய பிரதேசசபை மண்டபத்தில் 28, 29, மற்றும் 30.06.2019 ஆம் திகதிகளில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வவுனியா, பதுளை, கண்டி, மாத்தறை, குருநாகல், கம்பொல ஆகிய மாகாணங்களை சேர்ந்த 250 குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கை பிரான்ஸ் ‘சவேட்’ அமைப்பின் ஏற்பாட்டில் தேசிய மற்றும் சர்வதேச குத்துச்சண்டை பயிற்றுனர் மற்றும் இலங்கை பிரான்ஸ் ‘சவேட்’ தேசிய கூட்டமைப்பின் தலைவருமான சி.பூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாணத்தை பிரதிபலித்து வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவரும், வடமாகாண குத்துச்சண்டை (கிக் பொக்சிங்) பயிற்றுவிப்பாளருமான எஸ்.நந்தகுமார் தலைமையில் சென்ற வீரர், வீராங்கனைகள் குத்துச்சண்டையில் கலந்துகொண்டு பதினொரு தங்கப்பதக்கங்களையும், ஐந்து வெள்ளிப் பதக்கங்களையும், மூன்று வெண்கலப் பதக்கங்களையும் வென்று வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அத்துடன் அகில இலங்கை ரீதியில் குத்துச்சண்டையில் (கிக் பொக்சிங்) வடமாகாணம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளதுடன் அதற்கான கேடயத்தை பிரான்ஸ் ‘சவேட்’ தேசிய கூட்டமைப்பின் தலைவர் சி.பூ. பிரசாந் விக்கிரமசிங்க வழங்கி வைக்க வடமாகாண கிக் பொக்சிங் பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமார் பெற்றுக்கொண்டார்.
வவுனியா அகில இலங்கை தமிழ் திருச்சபை கலவன் பாடசாலை, கோவில்குளம் இந்துக்கல்லூரி, பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரி, வவுனியா காமினி மகா வித்தியாலயம், மடுக்கந்த ஸ்ரீசுமன சிங்கள வித்தியாலயம், வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், முல்லைத்தீவு முத்தையன்கட்டு வலதுகரை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் 19 பேர் கலந்துகொண்டு 19 பதக்கங்களை பெற்று வடமாகாணத்திற்கும் அவர்களுடைய பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
ஊழியர்களின் நலன்புரியின் மீது வரி அறவிடுவதனை உடன் நிறுத்துமாறு தெரிவித்து இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
ஏ9 வீதியில் அமைந்துள்ள புட் சிட்டிக்கு முன்பாக நேற்று (03.07.2019) மதியம் 12.30 மணி தொடக்கம் 1.10 மணி வரை குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊழியர் கடன்களுக்கு வரி வேண்டாம், இல்லாமல் ஆக்கப்பட்ட ஓய்வூதியத்தினை மீள வழங்குக, வங்கி ஊழியர்களின் ஒய்வூதிய உரிமையினை உறுதி செய்க, ஒய்வூதியக் கொடுப்பனவு வழுக்களைத் திருத்துக,
ஏற்றுக்கொள்ளக்தக்கதொரு ஒய்வூதியத்தினை தருக, ஊழியர் உணவிற்கும் தேநீருக்கும் வரி வேண்டாம் என்ற பல்வேறு வசனங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்திருந்ததுடன் வரி அறவிடுவதற்கு எதிரான கோசகங்களையும் எழுப்பியிருந்தனர்.
ஜப்பானில் நிலவி வரும் மோசமான காலநிலை காரணமாக ஒரு நகரமே காலி செய்யப்பட்டுள்ளது. மழை காற்று காரணமாக நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ககோஷிமா மாகாணத்தில் உள்ள மூன்று நகரங்களில் வசிக்கும் 8 லட்ச மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அந்நகரைச் சுற்றியுள்ள பகுதியில் சமீபத்திய நாட்களில் அசாதாரண அளவிலான மழை பெய்துள்ளது. ககோஷிமாவில் 275,287 வீடுகளில் 594,943 குடியிருப்பாளர்கள் உள்ளனர்.
கடும் மழையால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், ககோஷிமா மாகாண நகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் அனைவரும், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூன் மாத இறுதியில் இருந்து நாட்டின் தெற்கே உள்ள பிரதான தீவான கியுஷுவில் சுமார் 900 மிமீ (35 அங்குல) மழை பெய்துள்ளதாக மாநில வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கனமழை தொடரும் என வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த யூலை மாதம் நாட்டின் மேற்கு பகுதியில் மோசமான காலநிலையால் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல்வேறு நாடுகளில் இருந்து கனடாவுக்கு சென்று கனேடிய குடியுரிமை பெற்றுக்கொண்ட மக்கள் பலர், கனடா தினத்தையொட்டி கண்ணீர் மல்க குடியுரிமை உறுதிமொழி எடுத்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று கனடா முழுவதும் கனடா தினம் விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், பல்வேறு நாடுகளில் இருந்து கனடாவுக்கு சென்று குடியுரிமை பெற்றுக் கொண்ட 52 ’புதிய கனேடியர்கள்’ தங்கள் வலது கையை உயர்த்தி குடியுரிமை உறுதிமொழி எடுத்துக் கொண்டபோது பலர் கண்களில் தங்களையும் அறியாமல் கண்ணீர் வழிந்ததைக் காண முடிந்தது.
கால்கரி விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட Bivya George, அது வாழ்வில் மறக்க முடியாத ஒரு தருணம் என்கிறார். இந்தியாவிலிருந்து 2015இல் கனடாவுக்கு வந்த Bivyaவின் கணவர் கனடா வந்து 9 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த ஆண்டுதான் தனது கனேடிய குடியுரிமையை பெற்றுக் கொண்டார்.
தானும் இப்போது கனடா குடிமகள் என்பதால், கனடாவை சொந்த நாடு என அழைக்க முடிந்ததில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி. நானும் ஒரு கனேடிய குடிமகள் என அழைக்கப்படும் அந்த விசேஷ தருணத்திற்காக காத்திருந்தேன் என்கிறார் Bivya.
அதேபோல் உருகுவேயிலிருந்து வந்துள்ள Andrea Leites மற்றும் Diego Fernandez, அவர்களது பிள்ளைகளான Diego மற்றும் Camila ஆகியோர் 10 ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்த நிலையில் தற்போதுதான் அவர்களுக்கு கனடா குடியுரிமை கிடைத்துள்ளது. எனது இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது என்கிறார் Camila.
Priyanka Madanஐப் பொருத்தவரையில், அவர் ஐந்தாண்டுகளாக கனடாவில் வசித்து வருகிறார். இங்கு எல்லோரும் எங்களை சொந்த குடும்பம் போல உணர வைக்கிறார்கள் என்கிறார் அவர்.
76 நாட்கள், 3,506 கிலோமீட்டர் என உறை பனியில் நோர்வே நாட்டிலிருந்து கனடாவிற்கு, பயணம் செய்து, ஒரு வயதுகூட நிறைவுபெறாத ஒற்றை பெண் ஆர்க்டிக் நரி சாதித்துள்ளது. இதை நம்ப முடியாத விஞ்ஞானிகள் மிரண்டு போயுள்ளனர்.
நார்வே போலார் இன்ஸ்டிட்டியூட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் சென்ற ஆண்டு மார்ச் மாத இறுதியில், அந்த நரிக்குட்டியின் கழுத்தில் ஜி.பி.எஸ் ட்ரேக்கர் கருவி ஒன்றை கட்டி அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.
தனது பயணத்தைத் தொடங்கிய ஆர்க்டிக் நரி, 21 நாட்களில் 1,512 கிலோ மீட்டர் பயணித்தது. 76 நாட்களுக்குப் பிறகு தனது பயணத்தின் இரண்டாம் பகுதியில் சுமார் 2,000 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து கனடாவின் எல்லெஸ்மியர் தீவை அடைந்தது. நாளொன்றுக்கு சராசரியாக 46 கிலோ மீட்டரைவிடவும் சற்று கூடுதலான தொலைவைக் கடந்த அந்த நரிக்குட்டி, சில நாட்களில் 155 கிலோ மீட்டர் தூரம் வரை கடந்ததுள்ளது.
அது இறந்து விட்டது அல்லது ஏதாவது படகில்தான் எடுத்துச் செல்லப்படுகிறது என நினைத்தோம். இறுதியில் எங்கள் கண்களை எங்களாலேயே நம்ப முடியவில்லை என்று நோர்வே போலார் இன்ஸ்டிட்டியூட்டை சேர்ந்த ஆய்வாளர் இவா பியூக்லேய் தெரிவித்துள்ளார்.
ஆர்க்டிக் குளிர் பகுதியின் மாறுபடும் தீவிரமான வெப்பநிலைகளில் நரிகள் எவ்வாறு வாழ்கின்றன என்பது குறித்த ஆய்வில் அவர் ஈடுபட்டுள்ளார்.கோடைக் காலங்களில் அதிக அளவில் உணவு கிடைக்கும். ஆனால், குளிர் காலங்களில் உணவு கிடைக்காது என்பதால் ஆர்க்டிக் நரிகள் இரை தேடி புலம் பெயரத் தொடங்கும்.
இந்த இளம் பெண் நரிக்குட்டி இதுவரை பதிவு செய்யப்படாத அளவு தூரத்தைக் கடந்துள்ளது. அந்த இளம் குட்டியின் வழக்கத்துக்கும் மீறிய திறமையை இது காட்டுகிறது என்று இவா கூறியுள்ளார்.
இந்தியாவில் புதிதாக திருமணமான தம்பதி உட்பட 6 பேர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது அருகில் இருந்த கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சட்டீஸ்வர் மாநிலத்தை சேர்ந்தவர் ராதேலால் ராம்நரேஷ் பட்டேல் (25). இவருக்கும் மமதா (22) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் புதுமணத்தம்பதி தங்களது உறவினர்களுடன் புனே நகருக்கு வந்தனர். ராம்நரேஷ் மற்றும் அவர் குடும்பத்தார் கட்டிட வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில் அது தொடர்பாக புனேவுக்கு வந்தனர்.
மேலும் அந்த நகரிலேயே செட்டில் ஆகிவிடலாம் என ராம்நரேஷும் அவர் மனைவி மமதாவும் திட்டம் போட்டு வைத்திருந்தனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சிறிய வீட்டில் இரவில் தம்பதி தூங்கி கொண்டிருந்தனர்.
பக்கத்து வீட்டில் மமதாவின் பெற்றோர்களான ஜேட்டுலால் (50) மற்றும் பிரதீஷின் (45) மற்றும் உறவினர்கள் இருவர் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது.
இந்நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் அருகில் உள்ள ஒரு கல்லூரி கட்டிடத்தின் பெரிய சுவர் அப்படியே இடிந்து அவர்கள் வீட்டின் மீது விழுந்தது. இதில் புதுமணத்தம்பதி உள்ளிட்ட 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து சத்தம் கேட்டு அங்கு சென்ற உறவினர்கள் 6 பேரும் சடலங்களாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் கதறி அழுதார்கள். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலங்களை கைப்பற்றிவிட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதாக தொழிலதிபர் மனைவியின் கவனத்தை திசை திருப்பி 7 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியை சேர்ந்தவர் ராதா (65), கோடீஸ்வர தொழிலதிபர் தினேஷ் டால்மியா (70)வின் மனைவியான இவர், கடுமையான மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு மருத்துவர் 10 நாட்களுக்கு பிசியோதெரபி பயிற்சி அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார்.
இதனால் ஏஜென்சி மூலம் 10 நாட்களுக்கு பிசியோதெரபி அளிக்க சவுமியா (27) என்ற செவிலியர் நியமிக்கப்பட்டார். அதன்படி ராதாவுக்கு சவுமியா கடந்த ஒரு வாரமாக வீட்டிற்கு வந்து சிகிச்சை அளித்தார்.
கடந்த 19ம் திகதி சவுமியா வந்து ராதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்தார். அப்போது ராதா அணிந்து இருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கழற்றி பீரோவில் வைத்துள்ளார்.
பின்னர் உடல் முழுவதும் எண்ணெய் தடவி கை கால்களை மசாஜ் செய்துள்ளார். பிறகு ராதா குளிக்க சென்ற போது வைர நகைகளை திருடிக் கொண்டு சவுமியா மாயமாகிவிட்டார்.
இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பொலிசார் தலைமறைவாக இருந்த சவுமியாவை நேற்றிரவு கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 15 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.குடும்ப வறுமை காரணமாக பணம் தேவைப்பட்டதால் நகைகளை திருடியதாக சவுமியா பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
01.07.2019 திகதியிலிருந்து அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பதிற்கடமைக் கொடுப்பனவு இன்றி பதிற்கடமைகளினை மேற்கொள்வதில்லை என்று வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எமது சகோதர அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கமான அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஜனாதிபதி மற்றும் உரியவர்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இத் தீர்மானம் தொடர்பான தகவல் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் கடந்த (29.06.2019) இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலிற்கு அமைவாக வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கமும் இத் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தீர்மானித்துள்ளது. அதற்கமைவாக அனைத்து அலுவலகங்களுக்கும் இத் தீர்மானம் தொடர்பான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனவே பதிற்கடமைக் கொடுப்பனவு இன்றி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் யாரும் பதிற்கடமைகளில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். அவ்வாறு யாராவது பதிற்கடமையில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தினால் அது தொடர்பில் எமக்கு அறியத் தரவும்.
இது தொடர்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சனைகள் தொடர்பிலும் வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் உரிய நடவடிக்கைகளினையும் பூரண பொறுப்பினையும் ஏற்றுக் கொள்ளும்.
எமக்கான உரிமைகள் உங்கள் ஒத்துழைப்பு இன்றி பெற முடியாது. எனவே அனைவரும் தயவுசெய்து ஒற்றுமையுடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். முறைப்பாடுகள் தொடர்பில் தெரிவிப்பதற்கு தொடர்பு கொள்ளவும்: 077-3760039.
வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் நேற்று மதியம் வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருடிய இரு இளைஞர்களை ஈச்சங்குளம் பொலிசார் சந்தேகத்தில் இன்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பகுதியில் நேற்று மதியம் வீட்டிலுள்ளவர்கள் மாடு மேய்ப்பதற்காக வெளியே சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்து திருடச் சென்றவர்கள் அங்கிருந்து 18பவுண் நகையும் 33ஆயிரம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுவிட்டதாக உரிமையாளரினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் கிளிநொச்சியைச் சேர்ந்த 19வயது, ஈஸ்வரிபுரத்தைச் சேர்ந்த 20வயதுடைய இரு இளைஞர்களையும் இன்று கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
உலகில் பலமான கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் புதிய தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. Henley எனும் கடவுச்சீட்டு தரப்படுத்தல் நிறுவனத்தில் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கை மூலம் தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய ஆய்வுக்கு அமைய ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முதலிடத்தை பிடித்துள்ளன. குறித்த நாடுகள் இரண்டின் கடவுச்சீட்டு வைத்திருக்கும் பிரஜை ஒருவர் விசா இன்றி 189 நாடுகளுக்கு பயணிக்க முடியும். இந்த பட்டியலுக்கமைய தென் கொரியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த கடவுச்சீட்டை வைத்திருப்போர் 187 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும்.
மூன்றாம் இடத்தை டென்மார்க் மூன்றாம் இடத்தை பிடித்துள்ள நிலையில், இத்தாலி, Luxembourg மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் மூன்றாம் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. சுவீடன் மற்றும் ஸ்பெயின் 4ஆம் இடத்தை பிடித்துள்ளது. ஒஸ்ரியா, நெதர்லாந்து மற்றும் சுவிட்ஸ்ர்லாந்து ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.
பிரித்தானியா கடவுச்சீட்டு ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 14 வருடங்களின் பின்னரே பிரித்தானியா கடவுச்சீட்டு இந்த இடத்திற்கு வந்துள்ளது. பிரித்தானியா கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 183 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும் என அந்த அறிக்கையில் வெளியாகியுள்ளது. புதிய தரப்படுத்தலுககு அமைய பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆறாம் இடத்தை பிடித்துள்ளன.
இதேவேளை, வெளியாகிய தரப்படுத்தலுக்கமைய இலங்கை 99ஆம் இடத்தை பிடித்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்போர், விசா இன்றி 44 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது.